10 . அமிழ்தாய் நான் அமிலமாய் நீ..!

4.7
(75)

அமிலம் – 10

வைதேகிக்கோ கண்கள் இரண்டு கொண்டு வந்தது.

தலை சுற்றுவது போல இருந்தது.

ஒரு பக்க செவியிலோ நொய்ங்ங் என்ற சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்க வலித்த கன்னத்தைப் பற்றியவாறு அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள் அவள்.

அடித்து விட்டானா..?

ஆம் தன்னை அடித்திருக்கிறான் என்பதை வெகு தாமதமாகவே உணர்ந்து கொண்டவளுக்கு உடலும் மனமும் கொதித்தது.

உண்மையைக் கூறினால் கோபம் வருகிறது போலவே..

சீற்றத்தோடு அவனை வெறித்துப் பார்த்தவள்,

“இப்போ எதுக்கு என்ன அடிச்சீங்க..? உண்மைய சொன்னா வலிக்குதா..? இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான்.. மரியாதையா உண்மைய ஒத்துக்கோங்க..” என அவள் அழுத்தம் கொடுத்து தன்னுடைய வார்த்தைகளைக் கொட்ட,

“இப்போ நீ வாய மூடலன்னா உன்ன அடிச்சே கொன்னுடுவேன்..” எனக் கர்ஜித்தான் அவன்.

“எவன் கூடவோ ஊர் மேய்ஞ்சு வயித்துல பிள்ளையை வாங்கிட்டு இப்போ என்னோட தலையில இத சுமத்தப் பாக்குறியா..? இந்த சாஷ்வதனப் பார்த்தா எப்படித் தெரியுது..? இளிச்சவாய் மாதிரி தெரியுதாடி..? என்னோட பொறுமைக்கும் ஒரு அளவிருக்கு.. இதுக்கு மேல தேவையில்லாம பேசினா உன்ன கொன்ன புதைச்சுட்டு போயிட்டே இருப்பேன்..” என அவன் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப இவளுக்கோ உடலில் ஒரு விதமான நடுக்கம் சட்டென பரவியது.

கண்களைக் கட்டி நடுக்காட்டில் விட்டதைப் போலத்தான் இருந்தது.

எப்படி நிரூபிப்பது..?

என்னவென்று தன்னை நியாயப்படுத்துவது..?

மனதறிந்து அவள் எந்த தப்பும் செய்யவே இல்லையே.

உள்ளம் உடைந்து சில்லு சில்லாக நொறுங்கிப் போய் விட விண் விண் என்று தெரித்த தலையை தன்னுடைய ஒற்றைக் கரத்தால் அழுத்தி விடத் தொடங்கினாள் அவள்.

இதுவரைக்கும் அவளுடைய பிறந்த வீட்டில் கூட யாருமே அவளை அடித்தது கிடையாது.

அதுவும் இவ்வளவு வேகமாக அறைந்ததும் கிடையாது.

கன்னம் தீப்பற்றிக் கொண்டதைப் போல எரிந்து கொண்டே இருக்க தாங்க முடியாத வலியில் தன்னுடைய கீழ் உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டவளுக்கு இப்படியே இந்தக் காரை விட்டு இறங்கிச் சென்று விடலாமா என்பதைப் போல இருந்தது.

ஆனால் அடுத்த நொடியே ‘நான் எதற்காக செல்ல வேண்டும்.? என்மேல் எந்தத் தவறும் இல்லையே… இவன் மீது தான் ஏதோ தவறு இருக்கின்றது… அப்படி இல்லை என்றால் அந்த இரண்டு நாட்கள் மட்டும் எதற்காக நான் நேரத்திற்கு எழுந்து கொள்ள வேண்டும்..? என்னுடைய உடலில் எதற்கு வலி உண்டாக வேண்டும்..? அவன் மலேசியா சென்ற நாட்களில் இந்த வலியை நான் உணரவே இல்லையே… அப்படி என்றால் இதுக்கெல்லாம் இவன்தானே காரணம்..

சே… எவ்வளவு கீழ்த்தரமான வேலையை தாலி கட்டிய மனைவிக்கு செய்து விட்டு முழு பழியையும் எதற்காக இவன் என்மேல் போட வேண்டும்..?’

குழம்பிப் போனாள் அவள்.

அவனும் கிட்டத்தட்ட உணர்வுகள் தொலைத்து இறுகிப்போய் அமர்ந்திருந்தான்.

வைதேகி எவ்வளவு நல்ல பெண் என நம்பி இருந்தான் அனைத்தும் பொய்யாக அல்லவா போய்விட்டது.

அவள் நான் இல்லாத நாட்களில் தவறு செய்து விட்டு இப்போது உடல் வலித்ததாம் அவள் தூக்கத்தில் இருக்கும்போது நான் ஏதோ செய்து விட்டேனாம் என கொஞ்சம் கூட வெட்கமே இன்றி இப்படி பொய்யை அள்ளிக் கொட்டுகின்றாளே..

சீச்சீ… அருவருத்துப் போனது அவனுக்கு.

இப்படியும் ஒரு பெண்ணா..?

இவளைத்தானா நான் உருகி உருகி காதலித்தேன்..?

இவளுக்காகத்தானா நான்கு மாதங்களில் முடிய வேண்டிய வேலையை மூன்றரை மாதத்திற்குள் மிக சிரமப்பட்டு இரவு பகலாக தூங்காமல் முடித்துவிட்டு வந்தேன்..?

எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கிறேன் சே.! என தன்னையே நொந்து கொண்டிருந்தான் சாஷ்வதன்.

அவனோ அவளை வெறுப்பாக பார்க்க அவளும் அவனைத்தான் அதீத வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்‌.

“உங்களுக்கு நான் வேணும்னா என்கிட்டயே சொல்லி இருக்கலாமே… நான் உங்கள பிடிக்காதுன்னு எப்பயாவது சொல்லி இருக்கேனா..? எதுக்காக இப்படி..? ஏன் எனக்கே தெரியாம என்னத் தொட்டீங்க..?” என அவள் உடைந்த குரலில் மீண்டும் அவனிடம் கேள்வியைத் தொடுக்க அதீத சினத்தை அடக்க முடியாது அவளுடைய கழுத்தை இறுகப்பற்றி நெரித்தவன்,

“போதும்டி உன்னோட நடிப்ப இதோட நிறுத்திடு.. தயவு செஞ்சு என்னை கொலைகாரனா மாத்திடாத.. உன்ன தொடணும்னா ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கு தொட்டுருப்பேன்.. இத்தனை நாள் காத்திருக்கணும்னு எனக்கு என்னடி அவசியம் வந்திச்சு..?” என அவன் கோபத்தில் அவனுடைய கரங்களின் இறுக்கத்தை அவளுடைய கழுத்தில் அதிகரித்துக் கொண்டே போக அவளுக்கோ முகம் முழுவதும் கன்றிச் சிவந்து மூச்சு விடக் கூட முடியாது போனது.

தாமதமாகத்தான் அவளுடைய நிலையை உணர்ந்தவன் பதறி தன்னுடைய கரத்தை விடுவித்துக் கொள்ள வேக வேகமாக ஆக்சிஜனை உள்ளே இழுத்து தன்னை சமப்படுத்த போராடிக் கொண்டிருந்தாள் அவள்.

அவள் சிரமப்படும் நிலையைக் கண்டு சகிக்காதவனாய் மீண்டும் தன்னுடைய கரத்தை கார் ஸ்டேரிங் மீது ஓங்கிக் குத்தினான் அவன்.

“ஆஆஆஆஆ….” என வாய்விட்டுக் கத்தியவனால் தன் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.

“இதோ பார் வைதேகி நாம இத்தோட நம்ம வாழ்க்கையை முடிச்சுக்கலாம்..” என அவன் கூறியதும் விக்கித்துப் போய் அவனைப் பார்த்தாள் வைதேகி.

நெஞ்சம் பதறியது.

வாழ்க்கையை முடித்துக் கொள்வதா..?

எதற்காக முடித்துக் கொள்ள வேண்டும்..?

இந்த குழந்தைக்கு தந்தை அவன் தானே..?

செய்த தப்பை ஒத்துக் கொண்டு மன்னிப்பை யாசிக்க மாட்டானா..?

எந்தக் காரணமும் இன்றி தவறு செய்யாத என்னை வாழ்க்கையை விட்டு விரட்டி அடிக்கப் போகின்றானா..?

என்ன அநியாயம் இது..?

“நீங்க என்ன பேசுறீங்கன்னு புரிஞ்சிதான் பேசுறீங்களா..? நீங்கதானே தப்பு பண்ணி இருக்கீங்க… அத ஒத்துக்கோங்க..” என அவள் மீண்டும் அழுகையோடு கதற,

“ஏய்ய்…. ஏய்… இதுக்கு மேல பேசாத.. இதுக்கு மேல பேசினா நான் மனுசனா இருக்க மாட்டேன்..” என்றிருந்தான் அவன்.

“நான் பேசுவேன்… என் மேல தப்பு இல்ல… சோ நான் பேசத்தான் செய்வேன்..” உதடுகள் துடிக்க எதிர்த்துப் பேசினாள் அவள்.

“ஓஹோ.. இப்ப நீ என்ன சொல்ல வர..?” என்ற அவனுடைய அமைதியான கேள்வியில் அதிகமான அழுத்தம் நிறைந்திருந்தது.

“நீங்கதான் என்ன ஏதோ பண்ணிட்டீங்க..”

“அப்படியா..? அது எப்படி மேடம்..? உங்களுக்கே தெரியாம நான் உங்களை ரேப் பண்ணிட்டேனா..?” என எள்ளலாகக் கேட்டான் அவன்.

“இ.. இருக்கலாம்… மயக்க மருந்து கொடுத்து இருந்தீங்கன்னா எனக்கு எப்படித் தெரியும்..? அது உங்களுக்குத்தான் தெரியும்..” என அவனுக்கு சலிக்காமல் அவளும் பதில் கூற அவனுக்கு உதிரம் கொதித்தது.

“போதும்டி.. உன்னோட கற்பனை வளம் ரொம்ப அருமையா இருக்கு.. முடிஞ்சா ஏதாவது கதை எழுதி பப்ளிஷ் பண்ணு.. அத விட்டுட்டு என்கிட்ட கதை அடிக்கிற வேலை வச்சுக்காத வைதேகி… உன்ன தொலைச்சுக் கட்டிடுவேன்..” எச்சரித்தான் அவன்.

இவளுடைய நிலைமையோ மிக மோசமாகிப் போனது.

தலைவலி ஒரு பக்கம். அவன் அடித்ததால் ஏற்பட்ட கன்னத்து வலி ஒருபக்கம். கழுத்தை நெரித்ததால் கழுத்து வேறு வலித்துக் கொண்டு இருக்க அந்த இடமே அவளுக்கு ஒவ்வாத சூழ்நிலையை உருவாக்கியது.

“மரியாதையா இது உன்னோட தப்புன்னு ஒத்துக்கோ.. நீ யார் கூட தப்பு பண்ணினேன்னு உண்மைய சொல்லிடு… அவன் கூடவே உன்னை சேர்த்து வச்சிடுறேன்.”

மறுப்பாக வேதனையுடன் தலை அசைத்தாள் அவள்.

“ச.. சத்தியமா நான் எந்த தப்பும் பண்ணல.. சத்தியமா நான் எந்த தப்பும் பண்ணல.. எனக்கு எதுவுமே தெரியாது.. நீங்கதான் என்னை ஏதோ பண்ணிட்டீங்க… இப்போ உங்க மேல தப்பு இல்லைன்னு சாதிக்கிறீங்க..” என தேம்பித் தேம்பி அழுதாள்.

அவனுக்கோ அவளுடைய வார்த்தைகள் மேலும் மேலும் கோபத்தையே உண்டாக்கின.

தவறும் செய்துவிட்டு மொத்த பிழையையும் என் மேல் தூக்கிப் போடும் அவளை ஈனப்பிறவியைப் போல பார்த்தான் அவன்.

“நீ தப்பு பண்ணிட்டு என் மேலேயே தப்பு சொல்றல்ல..? இன்னும் ஒரு மாசத்துக்குள்ள இந்தப் பிள்ளையோட அப்பன் யாருன்னு நான் கண்டுபிடிச்சு காட்டுறேன்.. உன்னோட சாயத்த எல்லாரும் முன்னாடியும் வெளுக்கிறேன்.. அதுக்கப்புறமா என்னோட வாழ்க்கையை விட்டு உன்ன மொத்தமாக விரட்டி அடிக்கிறேன்..” என அவளிடம் சவாலாகக் கூறியவன் ஸ்டேரிங்கை இறுகப் பற்றிக் கொண்டு வீதியை வெறித்துப் பார்க்க அவளுக்கோ அழுகை மேலும் கூடியது.

குழப்பமும் கூடியது.

அவனிடம் தவறில்லை என்றால் இவ்வளவு உறுதியாக கூறுவானா..?

ஆனால் எனக்கு உடல் எல்லாம் வலித்ததே.

ஐயோ எனக்கு என்னதான் ஆச்சு..?

ஏன் கடவுளே என்னை எவ்வளவு சோதிக்கிற..? சத்தியமா என்னால முடியல.. ரொம்ப அசிங்கமா இருக்கு.. அவமானமா இருக்கு… வாழவே பிடிக்கல.. என எண்ணியவள் தனக்குள் கூனிக் குறுகிப் போனாள்.

“ஏய்… வீட்ல இருக்க யாருக்கும் இந்தப் பிரச்சனை பத்தி எதுவும் தெரிய வேணாம்.. உன்னோட முகத்திரைய கிழிச்சதுக்கு அப்புறமா எங்க வீட்ல உன்ன பத்தி சொல்லிக்கிறேன்… அது மட்டும் நீயும் வாயைத் திறக்கவே கூடாது… இல்ல நான் இப்பவே இந்த வீட்ட விட்டு போகிறேன்னா கூட நீ போகலாம்…” என்றவன் எட்டி அவளுடைய பக்க கார்க் கதவைத் திறந்து விட விதிர்விதிர்த்துப் போனவளாய் அந்தக் காரினுள்ளேயே வெளியே செல்லாமல் அமர்ந்து இருந்தாள் அவள்.

இப்போதே அவனை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்றுதான் அவளுடைய மனம் பரபரத்தது. ஆனால் இப்படியே சென்றால் அவன் சுமத்தியபடி உண்மை என்று ஆகிவிடுமே.

வைதேகி இன்னொரு ஆணுடன் கள்ளத்தொடர்பு வைத்து கர்ப்பமாகி விட்டால் என்றல்லவா ஊர் பேசும்.

வேகமாக மறுத்து தலையை ஆட்டினாள் அவள்.

“என்னோட மனசாட்சி அறிய நான் எந்தத் தப்பும் பண்ணல… எனக்கு நீங்க நினைக்கிற மாதிரி எந்தக் கள்ளப் புருஷனும் கிடையாது… இது உங்களோட குழந்தைதான்னு நானும் இந்த ஒரு மாசத்துக்குள்ள ப்ரூஃப் பண்ணிக் காட்டுறேன்.. அதுவரைக்கும் உங்க வீட்லதான் இருப்பேன்..” என கண்ணீரோடு கூறியவள் சீட்டில் சாய்ந்து தன்னுடைய விழிகளை மூடி விட அளவற்ற ஆத்திரத்துடன் காரை வேகமாக செலுத்தத் தொடங்கினான் சாஷ்வதன்.

இருவருடைய சவாலிலும் வெல்லப்போவது யார்.??

 

💜👑💜😎💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 75

No votes so far! Be the first to rate this post.

1 thought on “10 . அமிழ்தாய் நான் அமிலமாய் நீ..!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!