சற்று நேரத்தில் இருவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
அக்கணம் ஹாலில் யாருமே இல்லாது இருப்பதைக் கண்ட வைதேகி வேகமாக படிகளில் ஏறி தன்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டாள்.
யாருடனும் பேசும் நிலையில் அக்கணம் அவள் இல்லை.
அவளுக்கு சற்றே தனிமை தேவைப்பட்டது.
அவள் தனிமையில் சிந்திப்பதற்கு ஆயிரம் விடயங்கள் வரிசை கட்டி நின்றன.
தனக்கே தெரியாமல் தான் ஏதாவது தவறைப் புரிந்து விட்டோமா..? எங்கேயும் கவனயீனமாக இருந்து விட்டோமா..?
நடந்து முடிந்ததை எப்படி அறிந்து கொள்வது..?
அவள் மீது இப்படி ஒரு அவப்பெயர் வரும் என்ன அவள் கிஞ்சித்தும் எதிர்பார்த்திருக்க வில்லையே.
இந்த அவப்பெயரை இல்லாது ஒழிக்க வேண்டும் என்ற முடிவோடு தன்னுடைய அறையின் மின் விளக்கை ஒளிரச் செய்தவள் திகைத்துப் போனாள்.
அறை முழுவதும் பூக்களாலும் மெழுகுவர்த்திகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
படுக்கைக்கு சற்று தள்ளி இருந்த வட்டமேசை ஒன்றில் சிறிய கேக்கும் அந்த கேக் மீது ஐ லவ் யூ வைதேகி.. என அவன் எழுதி வைத்திருப்பதையும் கண்டவளுக்கு அடுத்த நொடியே விழிகளில் இருந்து கண்ணீர் அருவி போல கொட்டத் தொடங்கியது.
வேகமாக கண்ணீரைக் கூடத் துடைக்காது கேக் வைக்கப்பட்டிருந்த மேஜையை நெருங்கிச் சென்றவள் அவன் காதலாய் எழுதி வைத்திருந்த வார்த்தைகளைக் கண்டு உடைந்து போனாள்.
இது அனைத்தையும் அவன் தனக்காக செய்திருக்கின்றானா..?
தன்னை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்குவதற்காக செய்திருக்கிறானா..?
இந்த அறையின் அலங்காரமும் இந்தக் காதல் வார்த்தைகளும் அழகிய சிவப்பு நிற ரோஜாக்களும் அவளுக்காக மாத்திரமே என்பதை புரிந்து கொண்டவளுக்கு அழுகை கூடியது.
இதற்காகத்தானா என்னை அறைக்குள் வரவிடாமல் கீழே அனைவரும் பிடித்து வைத்துப் பேசிக் கொண்டிருந்தனர்..?
நான் என்னுடைய அம்மா வீட்டில் இருந்து வருவதற்கு முன்னரே சாஷு இங்கே வந்து அறை முழுவதையும் அலங்கரித்திருக்கிறான்.
அவள் இப்போது எதை நம்புவது..?
இவ்வளவு அழகாக தன்னுடைய காதலை வெளிப்படுத்திய அவனுடைய காதலை நம்புவதா.?
இல்லை கயவனாக மாறி கொஞ்சம் கூட மனசாட்சியே இன்றி நான் சுயநினைவு இல்லாமல் இருக்கும்போது என்னை எடுத்துக் கொண்டதை நம்புவதா..?
நிஜமாக காதல் வைத்திருக்கும் ஒருத்தனால் தன்னுடைய மனம் நேசிக்கும் பெண்ணை இப்படி நோகடிக்க முடியாது அல்லவா.?
இதில் எது நிஜம்.?
சிந்தித்துச் சிந்தித்து சிந்தை சிதைந்து விடும் போல இருந்தது அவளுக்கு.
விம்மி வந்த அழுகையை அடக்க முடியாது அப்படியே தரையில் அமர்ந்தவள் தன்னுடைய முழங்கால்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
சாஷ்வதனோ உள்ளே செல்லாமல் வரவேற்பு அறையிலேயே அமர்ந்து கொண்டான்.
கொல்லன் பட்டறையில் துருத்தி முனையில் எரியும் நெருப்பைப் போல அவன் மனம் அக்கணம் எரிந்து கொண்டிருந்தது.
“ஹேய் சாஷா கண்ணா.. வீட்டுக்கு வந்துட்டீங்களா..? உன்னோட கார் சத்தம் கேட்கவே இல்லையே… அது சரி என்னோட மருமகள் எங்கே..?” என்றவர் சிறிய பாத்திரத்தில் கொண்டு வந்திருந்த இனிப்பை எடுத்து அவனுக்கு ஊட்டி விட மறுக்க முடியாமல் அந்த இனிப்பை தன் வாய்க்குள் வாங்கியவனுக்கு கசந்து வழிந்தது.
உண்ண முடியாது அருவருப்பான ஒன்றை விழுங்குவதைப் போல முகம் அஷ்ட கோணலாக மாறியது.
எதற்காக இந்த இனிப்பு..?
ஏன் இந்தக் கொண்டாட்டம்..?
இந்த மகிழ்ச்சி எல்லாம் வெறும் கண்துடைப்பு தானே..?
யாரோ ஒருவருடைய குழந்தை இந்த உலகத்திற்கு வரப் போவதற்கு அவன் கொண்டாடி என்ன பயன் இருக்கப் போகின்றது.?
இதற்கு இனிப்பு ஒன்று தான் குறையா.?
அவனோ அந்த இனிப்பை விழுங்க முடியாது முகத்தை அஷ்ட கோணலாக மாற்ற,
“என்னாச்சுப்பா.. இந்த ஸ்வீட் உனக்கு ரொம்ப பிடிக்கும்னுதான் செஞ்சேன்.. நல்லா இல்லையா..?” எனக் கேட்டார் கலா.
அப்போதுதான் தன்னுடைய உள்ளத்து உணர்வுகளை அப்படியே வெளிப்படையாகக் காட்டி விட்டோம் என்பதை உணர்ந்து தன்னையே மனதிற்குள் திட்டியவன்,
“என்னப்பா இப்படி சொல்ற..? நம்ம குடும்பத்தோட வாரிசு இன்னும் பத்து மாசத்துல நம்ம வீட்டுக்கு வரப் போகுது… எவ்வளவு சந்தோஷமான விஷயம் இது. இப்ப போய் ஸ்வீட் சாப்பிட்ற மூடு இல்லன்னு சொல்றியே..” என சற்றே ஆதங்கத்தோடு கேட்டார் சாஷ்வதனின் அன்னை.
குடும்பத்தின் வாரிசு என்ற அவருடைய வார்த்தைகளில் அவனுடைய கைமுஷ்டிகளோ இறுகின.
“அது என்னோட வாரிசு இல்லம்மா..” எனக் கதற வேண்டும் போல இருந்தது அவனுக்கு.
மனம் வெகுவாக காயப்பட்டது.
எவ்வளவு பெரிய துரோகத்தை செய்துவிட்டு முழுப் பழியையும் என் மீது தூக்கிப் போட்டுவிட்டு சென்றுவிட்டாளே பாவி..! என எண்ணிக் கலங்கியவனுக்கு கண்ணீர் வந்து விடும் போல இருக்க தன்னுடைய அன்னையின் முகத்தைப் பார்க்காது தலையைக் குனிந்து கொண்டான் அவன்.
“ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தாலும் இப்போ என்னால ஸ்வீட் சாப்பிட முடியாதும்மா..” என கரகரப்பான குரலில் கூறியவன்
“அப்புறமா சாப்பிடுறேன்.. எனக் கூறி விட்டு எழுந்து கொள்ள அவனுடைய கரத்தைப் பிடித்து நிறுத்தியவர் தன்னுடைய கரத்தில் இருந் பாத்திரத்தை அவனிடம் கொடுத்தார்.
“இதோ பாரு கண்ணா.. இனி நாமதான் வைதேகிய ரொம்ப நல்லா பாத்துக்கணும்.. இவ்வளவு நாள் கழிச்சு நீ இப்போதான் இந்தியா வந்திருக்க.. போய் அவகிட்ட பேசு… இந்த ஸ்வீட்டையும் அவகிட்ட கொடுத்திருப்பா.. கொஞ்ச நாளைக்கு பிஸ்னஸ் பிஸ்னஸ்னு அலையாம உன்னோட பொண்டாட்டியையும் கவனிச்சிக்கோ..” என்றவர் அவனுடைய தலையை அன்பாக தடவி விட்டு சென்றுவிட அவருடைய வார்த்தைகளில் ஒரு கணம் அதிர்ந்தான் அவன்.
பிஸ்னஸ் பிஸ்னஸ் என தொழிலை முக்கியப்படுத்தி மலேசியாவுக்கு அவளை விட்டுச் சென்றதன் பின்னர்தான் இந்த தவறெல்லாம் நடந்து இருக்குமோ..?
அவளையும் அழைத்துச் சென்றிருக்க வேண்டுமோ..?
இல்லையென்றால் முதல் இரவிலேயே நானும் ஆண்தான் எனும் வகையில் எந்த ஒரு விருப்பு வெறுப்பும் இன்றி அவளுடன் கூடிக் கலந்திருக்க வேண்டுமோ..?
அப்படி எல்லாம் செய்தால்தான் இப்படி துரோகம் செய்யாமல் இருப்பார்களா..?
மீண்டும் தலை வலிக்க தொடங்கியது அவனுக்கு.
இப்படியே சிந்தித்துக் கொண்டிருந்தால் நிச்சயம் ஒருநாள் அவனுக்கு பைத்தியம் பிடித்து விடும் என எண்ணியவன் தன்னுடைய கரத்தில் இருந்த இனிப்பை வெறுப்பாகப் பார்த்தான்.
எதையும் செய்ய முடியாத தன்னுடைய இழிநிலையை நொந்தவாறு அதை எடுத்துக் கொண்டு தன்னுடைய அறைக்குள் நுழைந்தவனுக்கு அங்கே தரையில் அமர்ந்திருந்து அழுது கொண்டிருந்த வைதேகியின் உருவம்தான் முதலில் தென்பட்டது.
அதன் பின்னர் அவளுக்காக அவன் தயார்படுத்தி வைத்திருந்த அறையைக் கண்டவனுக்கு தான் ஒரு மிகப்பெரிய முட்டாள் என்ற எண்ணம் எழுந்தது.
அடுத்த நொடியை தன்னுடைய கரத்தில் இருந்த இனிப்புப் பாத்திரத்தை தூக்கி எறிந்தான் அவன்.
அந்த சில்வர் பாத்திரமோ கணீர் என்ற சத்தத்தோடு தரையில் விழுந்து அதற்குள் இருந்த இனிப்புத் துண்டுகள் யாவும் தரையில் கொட்ட அந்த சத்தத்தில் பதறிப் போய் அவனைப் பார்த்தாள் வைதேகி.
அங்கே அவன் ஏற்றி வைத்திருந்த பாதி எரிந்த மெழுகுவர்த்திகளை உடைத்து எறிந்தவன் சிவப்பு ரோஜாக்களையும் பிய்த்து எறிய அவனுடைய ஆக்ரோஷத்தில் அதிர்ந்து எழுந்து நின்றவளுக்கோ அந்த அறையை விட்டு அக்கணமே வெளியேற வேண்டும் போல கால்கள் பரபரத்தன.
ஆனால் இப்படியே அழுது கொண்டு வெளியே சென்று இந்த வீட்டில் இருக்கும் வேறு யாருடைய கண்ணிலும் பட்டு பிரச்சனையாகிப் போவதை விட இப்படியே இந்த அறைக்குள் இருந்து விடலாம் என எண்ணி அவள் தன்னுடைய முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அவனுடைய காதல் வாசகங்களை தாங்கிய கேக்கோ தரையில் கவிழ்ந்து விழுந்தது.
அவனைப் பார்த்தால் தானே வேதனையாக இருக்கும்..? அவனைப் பார்க்கவே கூடாது என்ற முடிவை எடுத்தவளின் முன்பு வந்து சொடக்கிட்டு அழைத்தான் சாஷ்வதன்.
அவளோ என்ன என்பதைப் போல அவனை நிமிர்ந்து பார்க்க தரையில் கொட்டிக் கிடந்த இனிப்புத் துண்டுகளைச் சுட்டிக் காட்டியவன்,
“இந்தக் குடும்பத்தோட வாரிச நீ வயித்துல சுமக்கிறியாம்.. அதுக்காக உனக்கு இந்த ஸ்வீட்டை பண்ணி எங்க அம்மா கொடுத்திருக்காங்க… கமான் எடுத்து சாப்பிட்டுக்கோ… சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் எங்க அம்மாகிட்ட போய் சொல்லு.. இது ஒன்னும் உங்க குடும்ப வாரிசு இல்லை.. இது என்னோட மறைமுக காதலனோட குழந்தைன்னு அவங்க புத்தியில உரைக்கிற மாதிரி சொல்லு..” என கோபம் தாங்காது அவன் வார்த்தைகளை எரிதனலாய் கொட்ட,
“இத எதுக்கு என்கிட்ட சொல்றீங்க..? ஸ்வீட்ட வாங்கிட்டு வந்தவருக்கு அதைக் கொடுத்த உங்க அம்மாகிட்ட சொல்றதுக்கு வாய் வரலையோ..? முடிஞ்சா நீங்களே போய் உங்க அம்மாகிட்ட சொல்லுங்க.. இது என்னோட வாரிசுதான்.. ஆனா அதோட அம்மாக்கே தெரியாம குழந்தையை கொடுத்துட்டேன் அப்படின்னு நெஞ்ச நிமித்திக்கிட்டு சொல்லுங்க.. ரொம்ப சந்தோஷப்படுவாங்க..” என அவளும் திருப்பிக் கொடுக்க கொதித்துப் போய் “ஏய்ய்….” எனக் கர்ஜித்தான் சாஷ்வதன்.
“சும்மா கத்துற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்க வேணாம் சாஷ்வதன்..” என்றவளின் தொண்டை அடைத்தது.
தைரியசாலி போல எதிர்த்து பேசி இருந்தாலும் கூட அவனுடைய கோபமான வார்த்தைகள் அவளை வெகுவாக பலவீனப்படுத்தி இருந்தன.
அவனுடைய உதடுகளிலோ இகழ்ச்சியான புன்னகை படர்ந்தது
“தப்பு பண்ணிட்டு வெக்கமே இல்லாம எப்படி உன்னால இப்படி எல்லாம் நடந்துக்க முடியுது..?” என்றவன் கீழே விழுந்து கிடந்த கேக்கை பார்த்து தன் முகத்தை சுளித்துக் கொண்டான்.
அக்கணம் அவனுடைய விழிகளில் இருந்தோ கண்ணீர் வழிந்தது.
அது ஏமாற்றத்தில் உண்டான வலி.
💜💜💜💜
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.7 / 5. Vote count: 56
No votes so far! Be the first to rate this post.
Post Views:836
2 thoughts on “11. அமிழ்தாய் நான் அமிலமாய் நீ..!”
Deepti
Ena dha nadakuthyuy puriyalayeeeee …… Interesting epiiii ❤️❤️❤️❤️❤️
Ena dha nadakuthyuy puriyalayeeeee …… Interesting epiiii ❤️❤️❤️❤️❤️
So sad sis