அவன் பேசிய வார்த்தைகளில் கோபத்தோடு அவனைப் பார்த்தவள் அவனுடைய கண்களில் இருந்து கண்ணீர் வடிவதைக் கண்டதும் பதறித்தான் போனாள்.
அவளுக்கோ மனம் கேட்கவில்லை.
ஆதங்கம் அதீதமாய் கிளர்ந்தது.
“ஏன் இப்படிப் பண்றீங்க..? நீங்களும் கஷ்டப்பட்டு எதுக்காக என்னையும் கஷ்டப்படுத்துறீங்க..? என்னதான் உங்க பிரச்சனை..? எனக்கு சத்தியமா எதுவுமே புரியல சாஷு.. இத்தனை மாசத்துக்குப் பிறகு இன்னைக்குத்தான் உங்களைப் பார்க்கிறேன்.. உங்கள பாக்கிறதுக்காக எவ்வளவு நாள் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் தெரியுமா..? இந்த ரூமுக்குள்ள வந்ததும் என்னால இது எதையும் நம்பவே முடியல.
எனக்காக பார்த்துப் பார்த்து இப்படி டெக்கரேட் பண்ணி வச்சிருக்கீங்களே.. உங்களுக்கு என்னைப் பிடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்.. எனக்கும் உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் சாஷு.. என் மேலே ஏதாவது உங்களுக்கு கோவமா அதனாலதான் இப்படி எல்லாம் பண்றீங்களா..? எதுவா இருந்தாலும் தயவு செஞ்சு சொல்லிடுங்க.. எல்லாத்தையும் நாம சரி பண்ணிடலாம்.. ஏன்னா நானும் உங்களை ரொம்ப லவ் பண்றேன் சாஷு.. இது நம்ம குழந்தை தானே..? சொல்லுங்க ப்ளீஸ்.. இது நம்ம குழந்தை தானே சொல்லுங்க..” என அவள் அழுகையோடு மன்றாடியவாறு கேட்க அவளை வெறித்துப் பார்த்தான் அவன்.
“நீ சொல்றது உண்மையா இருந்தா அதை விட வேற என்ன சந்தோஷம் எனக்கு இருக்கப் போகுது..? ஆனா அது எதுவும் உண்மை கிடையாது.. நான் ஒன்னும் பைத்தியக்காரன் இல்லை வைதேகி.. நான் உன்னத் தொடவே இல்லை.. அப்புறம் எப்படி உன்னால கர்ப்பமாக முடிஞ்சுது..? நான் எதுவுமே பண்ணாம வந்த குழந்தையை எப்படி என்னோட குழந்தையா ஏத்துக்க சொல்ற..? இது நம்ம குழந்தை இல்ல.. இது உன்னோட குழந்தை.. இதோட அப்பா யாருன்னு உனக்குத்தான் தெரியும்..
உன்ன பாக்கறதுக்காக நாலு மாசத்துல முடிக்க வேண்டிய வேலைய மூணரை மாசத்துல முடிச்சுட்டு வந்தேன்.. எப்போ உன்னை பார்க்கலாம்னு தவியா தவிச்சேன்.. உன்ன சர்ப்ரைஸ் பண்ணனும்னு இதெல்லாம் பார்த்துப் பார்த்து ரெடி பண்ணினேன்.. ஆனா என்ன இப்படி காயப்படுத்திட்டியேடி..
நீ என்னோட முதுகுல குத்திட்ட வைதேகி.. உன்னை நம்பினதுக்கு எனக்கு நல்லாவே துரோகம் பண்ணிட்ட.. இதுக்கு மேலயும் செய்யாத தப்புக்கு என் மேல பழிய சுமத்துறத நிறுத்திட்டு உண்மையை சொல்லிடு.. உன்னை மன்னிச்சு டிவோர்ஸ் கொடுத்துடுறேன்..” என்றான் அவன்.
வாயடைத்துப் போய் நின்றால் அவள்.
அவன் பேசும்போது அவனுடைய விழிகளில் இருந்து கண்ணீர் வழிவதைக் கண்டவனுக்கு ஒரு நொடியில் தன் மீதே சந்தேகம் தோன்றி விட்டது.
தனக்குத் தெரியாமல்தான் வேறு யாரோ தன்னை ஏதும் செய்து விட்டார்களோ என எண்ணிப் பதறியவள் தன் தலையை பிடித்துக் கொண்டாள்.
நிஜமாகவே இவன் தவறு செய்தால் இப்படிக் கண்ணீர் சிந்துவானா..?
தனக்காக இவ்வளவு அழகாக அனைத்தையும் தயார் செய்து வைத்திருப்பானா..?
காதலைக் கூற வேண்டும் என காத்திருப்பவன் எதற்காக என் மீது வீண்பழியை சுமத்த வேண்டும்..?
நிஜமாகவே அவன் மீது தவறில்லையோ..?
நானும் எந்த தவறும் செய்யவில்லையே.
யாரேனும் மயக்கம் மருந்து கொடுத்து என் உடலை தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொண்டார்களோ..?
எப்படி..?
எங்கு..?
எப்போது..?
அவள்தான் தனியாக வெளியே எங்கும் செல்லவே இல்லையே.
மனம் கலங்கிப் போய் விழிகளை மூடிக்கொண்டாள் அவள்.
அவனோ அதற்கு மேல் எதுவும் கூறாது விழிகளைத் துடைத்துக் கொண்டு ஆடை மாற்றுவதற்காக இன்னொரு அறைக்குள் சென்று விட வெகு நேரம் அப்படியே நின்றாள் வைதேகி.
ஆடை மாற்றி விட்டு மீண்டும் அறைக்குள் வந்தவன் அங்கே ஒருத்தி நிற்பதையே கவனத்தில் கொள்ளாது சோபாவில் அமர்ந்து தன்னுடைய அலைபேசியை பார்க்கத் தொடங்கிவிட அமைதியற்றுத் தவித்தாள் அவள்.
இருவருக்குள்ளும் காதல் அதீதமாய் இருக்கத்தான் செய்தது.
ஆனால் சூழ்நிலையோ அவர்களுடைய காதலை அடியாழத்திற்குத் தள்ளி விட ஒருவர் மீது இன்னொருவர் கோபத்தையும் வெறுப்பையும் மட்டுமே வளர்க்கத் தொடங்கி இருந்தனர்.
அவன் மலேசியாவில் இருந்த நாட்களில் அவனோடு நிறைய பேச வேண்டும் என எண்ணியிருந்தவள் இப்போது ஒரே அறைக்குள் இருந்தும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு இருக்கும் நிலையை சகிக்க முடியாது அந்த அறையை விட்டு வெளியேறிச் சென்றாள் வைதேகி.
கீழே சென்றதும் அவளை ஓடிவந்து அணைத்துக் கொண்ட காயத்ரியோ “நான்தான் சொன்னேன்ல… நீங்க ப்ரக்னண்டா இருக்கீங்கன்னு எனக்கு கன்ஃபார்மா தெரியும்.. இந்த அண்ணாதான் நான் சொன்னதை நம்பவே இல்லை..” என மகிழ்ச்சியோடு கூறியவள் வைதேகியைக் கட்டியணைத்து வாழ்த்துக் கூற போலியான சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள் வைதேகி.
கஜனோ அளவில்லாத மகிழ்ச்சியோடு அவளுக்கு சாக்லேட் கொடுக்க மறுக்காமல் வாங்கிக் கொண்டவள்,
“என்ன ஆச்சு அண்ணி..? எல்லாம் ஓகே தானே..? உங்க முகம் ஏன் இவ்வளவு சோர்வா இருக்கு..? டாக்டர் செக் பண்ணி என்ன சொன்னாங்க..?” என அவள் கேள்விகளைத் தொடுக்க,
“இல்ல காயூ.. நான் ஓகேதான் கொஞ்சம் டயர்டா இருக்கு.. தூங்கினா சரியாகிடும்னு நினைக்கிறேன்..” என்றாள் அவள்
“அம்மாடி நீ மதியமும் ஒழுங்கா சாப்பிடல.. அதனாலதான் டயர்டா இருக்கோ என்னவோ… இனி கொஞ்ச மாசம் இப்படித்தான்டா இருக்கும்.. அதெல்லாம் பழகிரும்.. உன்ன பாத்துக்க நாங்க இருக்கோம்.. நீ எதுக்கும் கவலைப் படாத..” என அங்கே வந்த கலாவோ உணவு எடுத்து வந்தவர் அவரே அவளுக்கு ஊட்டி விடத் தொடங்க அவளுக்கு அவர் கூறிய அன்பான வார்த்தைகளில் சட்டென உடைந்தது இதயம்.
இதழ்கள் துடித்து அழுகை வந்துவிடும் போல இருக்க அடக்க முடியாமல் அழுதே விட்டாள் அவள்.
கலாவும் காயத்ரியும் பதறிப் போயினர்.
“அம்மாடி என்ன ஆச்சு..? எதுக்காக அழுகுற..?” என கலா பதறியவாறு கேட்க,
“இ.. இல்லம்மா நீங்க ஊட்டி விடவும் எங்க அம்மாவோட ஞாபகம் வந்துருச்சு.. அதுதான்..” என சமாளித்தவள் அதன் பின்னர் அவர் கொடுத்த உணவை அமைதியாக உண்ணத் தொடங்கினாள்.
“அம்மாவோட ஞாபகம் வந்தா அவங்கள இங்க வரச் சொல்லலாம்.. இல்லன்னா நாங்க போய் அவங்கள பாத்துட்டு வரலாம்.. இத நினைச்சுல்லாம் நீ இனி அழவே கூடாது..”
“ம்ம்… சரி அத்தை…”
“சரிம்மா நீ போய் நேரத்துக்கு தூங்கு.. ஏதாவது வேணும்னா இன்டர்காம்ல சொல்லு..” என்றவர் தட்டை எடுத்துக் கொண்டு சென்று விட சாஷ்வதனின் வெறுப்பை சந்தித்து விட்டு வந்தவளுக்கு மற்றவர்களின் அன்பும் அரவணைப்பும் சற்றே பலத்தைக் கொடுத்தது.
சிறிது நேரம் காயத்ரியுடன் அங்கேயே இருந்து தொலைக்காட்சி பார்ப்பது போல வெறுமனே தொலைக்காட்சியை வெறித்துக் கொண்டிருந்தவள் நேரம் ஆகியதும் எழுந்து தன்னுடைய அறைக்குள் நுழைந்தாள்.
அங்கே படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தான் சாஷ்வதன்.
அவன் எரிதனலாக அவள் மீது கொட்டிய வார்த்தைகள் அவன் அருகே தூங்குவதற்கு அவளுக்கு தயக்கத்தை உண்டாக்கின.
தூங்கினால் தூக்கம் வருமா என்பதே கேள்விதான்.
மெல்ல சத்தம் இன்றி சோபாவில் சென்று அமர்ந்து கொண்டவள் என்ன நடந்திருக்கும் என தன்னுடைய மூளையைக் கசக்கிப் பிழிந்து சிந்திக்கத் தொடங்கினாள்.
நேரமோ நள்ளிரவைத் தொட்ட போதும் கூட அவளுடைய வெறுத்த பார்வையும் என்ன நடந்திருக்க கூடும் என்ற சிந்தனையும் நின்ற பாடே இல்லை.
சில மணி நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவன் தூக்கம் நீங்கி விழிகளைத் திறக்க சுவற்றை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த வைதேகியைக் கண்டதும் அதிர்ந்து நேரத்தைப் பார்த்தான் அவன்.
நேரமோ அதிகாலை ஒன்று எனக் காட்ட அவனுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
இவ்வளவு நேரமும் இவள் தூங்கவே இல்லையா..?
அந்த சுவற்றையே வெறித்துப் பார்க்கும் அளவிற்கு சிந்தனைகள் அவளை ஆட்டிப் படைக்கின்றதோ என எண்ணிக்கொண்டவன்
“வைதேகி..?” என அழுத்தமாக அழைத்தான்.
அந்த அழுத்தமான குரல் அவளுடைய செவிகளை எட்டவே இல்லை.
அவள் சற்றும் அசையவும் இல்லை.
அவளுடைய பார்வை சுவற்றின் மீதே இருந்தது.
“மணி என்ன ஆச்சுன்னு பாரு.. இன்னும் எவ்வளவு நேரத்துக்குதான் அந்த சுவத்தையே பாத்துட்டு இருக்கப் போற..? வந்து தூங்கு இட்ஸ் நாட் குட் ஃபார் ஹெல்த்..” என்றவன் அப்போதும் அவள் அசையாமல் இருப்பதைக் கண்டு திகைத்தான்.
மூச்சை வேகமாக உள்ள இழுத்துக் கொண்டவன் படுக்கையில் இருந்து இறங்கி சுவற்றுக்கும் அவளுக்கும் இடையே வந்து அவளுடைய பார்வையை மறைக்கும் வண்ணம் நின்றவன் அவளை அழுத்தமாகப் பார்க்க அவன் வந்து நின்றதைக் கூட அவள் உணரவே இல்லை.
அவளுடைய பார்வை முன்னர் எப்படி இருந்ததோ அப்படியே தான் அசையாமல் மாற்றம் இன்றி இருக்க இவனுக்கோ உள்ளம் பதைபதைத்துப் போனது.
சட்டென குனிந்து அவளுடைய தோள்களைப் பற்றி வேகமாக உலுக்கியவன்,
“வைதேகி உன்னத்தான் கூப்பிடுறேன்… ஏய்…. நான் பேசுறது கேக்குதா இல்லையா..?” என அவன் அதட்டிக் கேட்க,
தூக்கத்தில் இருந்து விழிப்பதைப் போல அதிர்ந்து விழித்து அவனைப் பார்த்தாள் அவள்.
“ஆர் யூ ஓகே..?” என அவன் கேட்க இமைகளை சிமிட்டி விழிகளை மூடித் திறந்தவளுக்கு அப்போதுதான் சுயம் வந்தது.
“சாரி.. சாரி எ… என்ன கேட்டீங்க..?” என எதுவும் புரியாது மீண்டும் அவனிடம் கேட்டாள் அவள்.
Pavam vaidehi