13. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜

4.7
(93)

முள் – 13

இரண்டு மணி நேரத்தில் அனைத்தையும் இழந்தது போல சோர்ந்து போயிருந்த தன்னுடைய மருமகனின் முகத்தை ராஜியோ கவனிக்கத் தவறவில்லை.

அவனைப் பார்க்கப் பார்க்க பாவமாக இருந்தது.

மூத்த மகளை நம்பித் தாங்களும் அவனை வதைத்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி இன்னும் அவருக்கு இருக்கத்தான் செய்தது.

வான்மதியை விட அதிக நேரம் சாஹித்தியாவே குழந்தையை தூக்கி வைத்திருப்பதால் சாஹித்யாவுடன் நன்றாகவே ஒட்டிக் கொண்டாள் தியா.

“என்ன மாப்ள.. பாப்பா ரொம்பவே அழுதுட்டாளா..?”

“ஆமா அத்த.. அவ அம்மாவைத் தேடி அழுறா.. கொஞ்ச நேரத்துல எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல.. திணறிப் போயிட்டேன்..” என்றவன் ஓய்ந்து போனவன் போல அங்கிருந்த இருக்கையில் தொப்பென அமர்ந்தான்.

“அவ அம்மாவ நினைச்சு ஏங்கிப் போயிருவாளோன்னு பயமா இருக்கு…” என்றவனின் குரலில் நிஜமாகவே ஒரு வித கலக்கம் தெரிந்தது.

“அப்போ கொஞ்ச நாள் குழந்தை எங்க கூட இருக்கட்டும்..”

“கொஞ்ச நாள்னா எத்தனை நாளைக்கு அத்தை..? அது சரியா வராது.. நான் இதுவரைக்கும் என்னோட குடும்பத்தை விட்டுட்டு வேலைன்னு இருந்ததே தப்புன்னு நினைக்கிறேன்.. இனியும் குழந்தையை விட்டுட்டு என்னால இருக்க முடியும்னு தோணல..” என்றான் அவன்.

“அப்போ நான் உங்க கூட இங்கேயே இருந்துடுறேன் மாமா.. பாப்பா என் கூட சமத்தா இருப்பா.. நானே பாப்பாவ பாத்துக்குறேன்…” என சட்டென கூறினாள் சாஹித்யா.

அதிர்ந்து அவளைப் பார்த்தான் யாஷ்வின்.

“இல்லமா அது சரியா வராது.. நீ வாழ வேண்டிய பொண்ணு.. இங்க என் கூட இந்த வீட்ல இருக்க முடியாது..” என உடனே மறுத்தான் அவன்.

“எனக்கு கல்யாண வாழ்க்கை பிடிக்கலை மாமா… நான் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன்.. இவளை அக்கா தூக்கி வச்சிருந்ததை விட நான் தூக்கி வச்சிருந்ததுதான் அதிகம்… பாப்பா இப்படி ஏங்கி அழுறதைப் பார்த்துட்டு என்னால எங்க வீட்டுல நிம்மதியா இருக்க முடியாது மாமா.. நான் இங்கேயே இருந்துடுறேன்.. தயவு செஞ்சு என்னை அனுப்பிடாதீங்க.. பாப்பாவ விட்டுட்டு என்னால இருக்க முடியாது..” என்ற மகளின் வார்த்தைகள் அந்தப் பெற்றோரையும் சேர்த்து திகைக்கச் செய்தது.

சாஹித்யாவின் பேச்சில் அவனுக்கு தலைவலிதான் அதிகரித்தது.

இப்படி எல்லாம் தன் குடும்பத்தில் பிரச்சனை வரும் என முன்பே அறிந்திருந்தால் எத்தனை லட்ச ரூபாய் என்றாலும் அந்த வேலையை விட்டுத் தொலைத்து விட்டு குடும்பத்துடன் ஒன்றாக இருந்திருப்பானே.

மனம் பெரிதும் தடுமாறியது.

அவனால் இரண்டாவது திருமணம் என்பதையே சிந்தித்துப் பார்க்க முடியவில்லை, அதுவும் சாஹித்யா என்றால் நிச்சயம் அவனால் முடியவே முடியாது.

பெருமூச்சுடன் அவளைப் பார்த்தவன் “பாப்பா கொஞ்ச நாளைக்கு அழுவா.. அப்புறம் சரியாயிடுவா.. நீ இங்க இருந்து கிளம்புமா…” என்றான் அவன்.

“என்னை எங்க போகச் சொல்றீங்க மாமா..? இவங்க கூடவா போக சொல்றீங்க..? என்னால எப்படி இவங்க கூட போக முடியும்..? தப்பு பண்ணி இருக்கேனா இல்லையான்னு கூட என்கிட்ட ஒரு வார்த்தை இவங்க கேட்கவே இல்லையே..” என்றவள் மனதின் வலியைத் தாங்க முடியாது கதறி அழுதாள்.

“உங்க கூட நான் தப்பா நடந்து இருப்பேன்னு நம்பி கால்ல போடுற செருப்பால என்னை அடிச்சாங்க.. எப்படி என்னால இவங்க முகத்தைப் பார்த்து இனி வாழ முடியும்னு நினைக்கிறீங்க..? என்னால முடியாது மாமா.. நான் இவங்க கூட எங்கேயும் போறதா இல்லை..” என மறுத்துக் கூறினாள் அவள்.

அவளின் பெற்றோருக்கோ அவள் உதிர்த்த வார்த்தைகளைக் கேட்டதும் கோபத்திற்குப் பதிலாக குற்ற உணர்ச்சிதான் அதிகரித்தது.

அவளுடைய மனதை நன்றாக நொறுக்கி விட்டோம் என்பது புரிய மெல்ல சாஹித்யாவின் அருகே சென்று அவளுடைய கரங்களை பற்றிக் கொண்டார் ராஜி.

“மன்னிச்சிடுமா.. தப்புதான்.. உன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கணும்.. அவ இந்த உலகத்துல இல்லைன்னதும் என்னால வேற எதையுமே யோசிக்க முடியல.. அவ தப்பு பண்ணி இருந்தாலும் என் பொன்னாச்சே.. அவளோட இழப்பை எப்படி என்னால தாங்கிக்க முடியும்..? அந்தக் கோபத்துலதான் யோசிக்காம இப்படி நடந்துகிட்டேன்..’ என கலங்கிய குரலில் கூறினார் அவர்.

“ஏன்மா அக்கா தப்பே பண்ணினாலும் உங்க பொண்ணுன்னு சொல்றீங்களே… நானும் உங்க பொண்ணுதானே என்ன போய் எப்படிம்மா உங்களால தப்பா நினைக்க முடிஞ்சுது..? அக்கா செத்த அதிர்ச்சியில உங்களால எதையும் யோசிக்க முடியலன்னு சொல்றீங்களே சரிதான்.. ஆனா அதுக்கப்புறம் நான் உண்மைய சொன்னப்ப கூட நீங்க என்ன நம்பவே இல்லையே..

எனக்காக ஏன் நீங்க யோசிக்கல..? ஒரு நிமிஷம் கூட நம்ம பொண்ணு இப்படி பண்ணி இருப்பாளான்னு நீங்க ஏன் நினைச்சுப் பார்க்கல..? உங்க ரெண்டு பேரையும் நம்ப வைக்கிறதுக்காக நான் ஹாஸ்பிடல் வரைக்கும் வந்து டெஸ்ட் பண்ணி காட்டணும்ல..? அந்த ரிப்போர்ட் சொன்னத நம்பின நீங்க நான் சொன்னத நம்பவே இல்லையே..

வேணாம்மா நான் அப்பவே செத்துட்டேன்.. சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் அக்கா பண்ண எல்லா தப்புக்கும் பழிய ஏத்திக்கிட்டு ஏத்திக்கிட்டு எனக்கு பழகிப் போயிருச்சுமா…

ஆனா இந்த பழியை என்னால தாங்கிக்க முடியல… ரொம்ப வலிக்குது…

நானும் மனுஷிதானே..? என்னால எவ்வளவு வலியைத்தான் தாங்கிக்க முடியும்..?” என்றவளுக்கு விழிகளில் இருந்து கண்ணீர் நில்லாமல் பெருகியது.

“தப்புதான்டி.. உன்ன நம்பாம உன்னை ஹாஸ்பிடல் வரைக்கும் கூட்டிட்டுப் போனது எங்களோட தப்புதான்… சூழ்நிலை அப்படி பண்ண வச்சிருச்சு… அதுதான் மன்னிப்புக் கேட்டுட்டோமே.. அது போதாதா..? எங்க கூட வராம இங்க இருந்து என்ன பண்ணப் போற..? ஏற்கனவே பேரு கெட்டு போய் கிடக்கு.. இப்பவே நீ எங்க கூட வந்தாதான் இருக்கிற கொஞ்ச நெஞ்ச நகையையாவது கொடுத்து உன்னை யாராவது ஒரு பையனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கலாம்.. இப்பவும் வர முடியாதுன்னு அடம் பிடிச்சீன்னா உன்னோட வாழ்க்கை இப்படியே நாசமா போயிடும் பரவாயில்லையா?” என ஆதங்கத்தில் திட்டினார் ராஜி.

“இப்போ கூட என்னோட மனசு உங்களுக்கு முக்கியமா தெரியலையாம்மா..? என்னப் பத்தி தப்பா ஒரு வதந்தி பரவிருச்சுன்னுதான் உங்களுக்கு கவலைல..? யாராவது ஒருத்தர் கிட்ட என்ன தள்ளி விட்டா போதும்னு நினைக்கிறீங்க..

வேண்டாம்மா.. எனக்கு கல்யாணமே வேணாம்… நான் பாப்பா கூடவே இருந்துக்கிறேன்.. என்ன விட்டுருங்க…” என்றதும் மீண்டும் அடிப்பதற்கு கையை ஓங்கி விட்டார் ராஜி.

“அத்த வேணாம்.. அவள அடிக்காதீங்க.. அவதான் சின்ன பொண்ணு புரிஞ்சுக்காம பேசுறான்னா நீங்களும் அவளை அடிக்கப் போறீங்களே.. கொஞ்சம் பொறுமையா பேசி புரிய வைக்கலாம்ல..?” என ராஜியை அமைதியாக இருக்கச் செய்தவன்,

சாஹித்யாவை அழுத்தமாகப் பார்த்தான்.

“இங்கிருந்து நீ என்னமா பண்ணப் போற..? குழந்தையை பாத்துக்குறது மட்டும்தான் உன்னோட வேலையா என்ன..? இப்போ கொஞ்ச நாளைக்கு உனக்கு பாசம் பெருசா தெரியலாம்… ஆனா அதுக்கு அப்புறமா உன்னோட வாழ்க்கைதான் உனக்கு முக்கியமா தெரியும்.. சொன்னா கேளு படிச்சு முடிச்சு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லன்னா நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.. இங்க என் கூடவோ பாப்பா கூடவோ இருக்க முடியாது சாஹிம்மா புரிஞ்சுக்கோ…”

“ஏன் மாமா நீங்களும் என்னை வீட்டை விட்டுப் போன்னு சொல்றீங்களா..? வீட்ட விட்டு போகணும்னா சொல்லுங்க.. நான் இங்க இருந்து போயிடுறேன்.. ஆனா என்ன நம்பாதவங்க கூட நான் போகவே மாட்டேன்..” என பிடிவாதமாய் நின்றாள் அவள்.

விமலனுக்கோ வருத்தமாக இருந்தது.

ஒரே நாளில் தன் குடும்பம் இப்படி சிதைந்து போகும் என அவர் கனவா கண்டார்..?

“அப்பா அம்மா திட்றது எல்லாம் பெருசா எடுத்துக்க கூடாது சாஹித்யா..” கண்டிப்புடன் கூறினான் அவன்.

“திட்றது வேற சந்தேகப்படுறது வேற மாமா.. என்ன எவ்வளவு கேவலமா நினைச்சிருந்தா செருப்பால அடிச்சிருப்பாங்க..?” துடித்தாள் அவள்.

“விடுங்க மாப்ள.. இவளுக்கு திமிரு.. பெரியவங்க நாங்க இவ்வளவு பொறுமையாக எடுத்து சொல்றோம்.. அப்ப கூட கேட்கவே மாட்டேன்னு அடம் பிடிக்கிறா.. இன்னும் நாலு போட்டாதான் அடங்குவா போல..” என ராஜி மீண்டும் கோபத்துடன் திட்டத் தொடங்கி விட பயந்து பின்னால் நகர்ந்தாள் சாஹித்யா.

“ப்ளீஸ் மாமா நீங்களே என்ன கல்யாணம் பண்ணிக்கோங்க மாமா.. நான் உங்க கூடவே பாப்பாவ பார்த்துகிட்டு இந்த வீட்ல இருந்துடுறேன்.. தயவு செஞ்சு என்னைப் போகச் சொல்லாதீங்க..” என அவனைப் பார்த்து கைகூப்பி அவள் அழத் தொடங்கி விட அங்கிருந்த அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.

அவளுடைய வார்த்தைகளில் யாஷ்வினோ உடல் விறைத்தான்.

கோபத்துடன் அவளைப் பார்த்தவன் “உன் கூட கொஞ்சம் தனியா பேசணும்.. உள்ளே வா..” என சாஹித்யாவை அழைத்துவிட்டு அனுமதிக்காக அவளுடைய பெற்றோர்களை அவன் பார்க்க அவர்களோ ஆமென தலையை அசைத்தனர்.

அதன் பின்னர் அங்கே இருந்த மற்றைய அறைக்குள் அவளை அழைத்துச் சென்றவனுக்கு அவள் மீது அத்தனை கோபம் எழுந்தது.

உள்ளே நுழைந்ததும் சட்டென அவனுடைய கால்களில் விழுந்து விட்டாள் சாஹித்யா.

“ஒன்னு என்ன கல்யாணம் பண்ணிக்கோங்க.. இல்லைன்னா இப்பவே என்ன கொன்னு போட்டுருங்க..” என கதறலோடு வெளிவந்தன அவளுடைய வாய்மொழி.

💜💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 93

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “13. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜

Leave a Reply to Kotteeswari K Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!