தொல்லை – 15
மதுராவுடன் பேசிவிட்டு முடிவு பண்ணலாம் எனக் கூறிய கதிர் அறையை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களுக்குப் பின்னரே மீண்டும் அறைக்குள் திரும்பினான்.
நேரமோ இரவு 11 ஐத் தொட்டிருந்தது.
அஞ்சலியால் தூங்கவே முடியவில்லை.
கதிர் மதுராவுடன் பேசி இருப்பானா?
இருவரும் பேசி என்ன முடிவு எடுப்பார்கள்?
நான் இனி இந்த வீட்டை விட்டுச் செல்ல வேண்டுமா?
இனி மாமாவுக்கு எனக்கும் எந்த உறவும் இல்லையா என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தவளுக்கு நெஞ்சில் சுருக்கென வலித்தது.
இங்கிருந்து செல்ல வேண்டும் என்ற எண்ணமே அவளுக்கு வலியைக் கொடுக்க திகைத்துப் போனாள் அவள்.
என்ன இது?
நானா இப்படியெல்லாம் சிந்திக்கிறேன்?
இது எனக்கு தகுதியான இடமல்லவே…
இந்த இடம் என்னுடைய சகோதரியுடையதல்லவா..?
சிந்தனைகள் தறிகெட்டு அலைந்தன.
விழிகளை மூடித் திறந்தவள் அனைத்தையும் மறந்து விட்டு உறங்க முயன்றாள்.
ஆனால் உறக்கமோ அவளை நெருங்கவே இல்லை.
அக்கணம் அந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த கதிரைப் பார்த்தவள் படுக்கையில் இருந்து எழுந்து நின்றாள்.
அவனுடைய விழிகள் சிவந்து போயிருந்தன.
முன்பு போல அவனோடு இயல்பாகத் தன்னால் பேச முடியாது என எண்ணிக் கொண்டவள் தலையைக் குனிந்து கொண்டாள்.
ஆனால் நெஞ்சின் படபடப்பு மட்டும் அவளுக்கு சிறிதும் குறையவே இல்லை.
‘மதுராவும் மாமாவும் பேசி இருப்பார்களா?’ என்ற கேள்வி மீண்டும் எழுந்து அவளை மருக வைத்தது.
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அஞ்சலி… இப்போ உன்னால பேச முடியுமா? இல்ல தூங்கணும்னா தூங்கு… நாளைக்கு காலையில பேசிக்கலாம்…” என்றான் அவன்.
“இல்ல மாமா… இப்போ பேசலாம்…” என்றாள் அவள்.
அவனோ அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டவன் அவளையும் அமரச் சொன்னான்.
“இல்ல மாமா… பரவால்ல…” எனக் கூறியவளை அழுத்தமாகப் பார்த்தவன் “நான் நிறைய பேசணும்… அதுவரைக்கும் இப்படியே நின்னுக்கிட்டே இருக்கப் போறியா? முதல்ல வந்து உட்காரு…” என்றான் அவன்.
பெருமூச்சோடு அவனுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டவளுக்கு ‘என்ன கூறப் போகிறானோ..?’ என்ற படபடப்பு இதயத்தைத் தாக்கியது.
“அடுத்து என்ன பண்ணலாம்னு முடிவு எடுத்திருக்க அஞ்சலி..?” என அவளிடம் கேட்டான் அவன்.
“இதுல நான் முடிவெடுக்கிறதுக்கு என்ன மாமா இருக்கு? நீங்களும் அக்காவும்தான் முடிவெடுக்கணும்… நீங்க என்ன முடிவெடுத்தாலும் எனக்கு சம்மதம் தான்…” என்றாள் அவள்.
“நானும் உங்க அக்காவும் முடிவெடுத்தா போதுமா? இதுல உன்னோட வாழ்க்கையும் இருக்கு… அதைப் பாக்க வேணாமா?” எனக் கேட்டான் அவன்.
“என்னோட வாழ்க்கைக்கு என்ன..? நான் இடைல வந்தவ… இடைலயே போறதுதானே சரியா இருக்கும்..” எனக் கூறியவளுக்கு விழிகள் கலங்கின.
அவன் முன்பு அழுது விடக்கூடாது எனத் தன் கீழ் உதட்டைப் பற்களால் அழுத்திக் கடித்தவள் தன் தலையைக் குனிந்து கொண்டாள்.
அவனோ அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருக்க “அக்காக்கிட்ட பேசினீங்களா?” எனக் கேட்டாள் அவள்.
“ஆமா… பேசிட்டேன்…” என அவன் கூறியதும் ஏனோ அவளுடைய மனம் காயம் கொண்டது.
“சரி மாமா… இப்போ நான் என்ன பண்ணணும்?” எனக் கேட்டாள் அவள்.
“மூணு மாசத்துல மதுரா வந்துடுறேன்னு சொல்லி இருக்கா… நான் உண்மையை எங்க வீட்டுக்கு சொல்லலாம்னு இருக்கேன்… நீ தாலியை மட்டும் கழட்டிக் கொடுத்துட்டு இங்கே இருந்து போயிடு அஞ்சலி… நீ இங்கேயே இருந்தா உன்னோட வாழ்க்கை அழிஞ்சிடும்…” என அவன் கூற அவளுக்கோ இதயத்தை யாரோ கைகளால் கசக்கிப் பிழிவது போல வலித்தது.
தன் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மறைத்தவள் சிறு புன்னகையுடன் சரியென தலை அசைத்தாள்.
அவளை அழுத்தமாகப் பார்த்தவன் “அப்போ நீயும் மதுராவ மாதிரி இந்தத் தாலியைக் கழட்டிக் கொடுத்துட்டு போயிருவியாடி..?” என அவன் கேட்க, அவனை அதிர்ந்து பார்த்தாள் அவள்.
“நான் கட்டின தாலியை மதுரா உன்கிட்ட கழட்டி கொடுத்துட்டு போயிட்டா… அதுக்கு அப்புறம் பூஜை ரூம்ல வச்சு உன்னோட கழுத்துல இந்தத் தாலியை கட்டினவன் நான் தானே..? அப்போ நீ என்னோட மனைவிதானே? நான் உன்னோட புருஷன்தானே அஞ்சலி..? இது உன்னோட புத்திக்கு எட்டவே இல்லையா..? ‘கழட்டி கொடு’ன்னு சொன்னா தாலியை கழட்டிக் கொடுத்துட்டு போயிடுவியா?” எனக் கதிர் கேட்க அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
“ஐயோ என்ன மாமா பேசுறீங்க..? அது தெரியாம நடந்தது… நீங்க மதுரான்னு நினைச்சுதானே என்னோட கழுத்துல தாலி கட்டினீங்க? நான் எப்படி உங்களுக்கு பொண்டாட்டியா மாறுவேன்?” என அவள் பதற சோபாவில் இருந்து எழுந்தவன் மெல்ல அவள் அருகே வந்து நின்றான்.
அவள் புரியாமல் எழுந்து நிற்க இன்னும் அவளை நெருங்கியவன் “இப்போ உன்னோட கழுத்துல தொங்குற இந்த தாலியை கட்டினது யாரு?” எனக் கேட்டான்.
“நீ… நீங்கதான் மாமா…” என திணறியவாறு பதில் கூறினாள் அவள்.
“அப்போ நான்தானே உன் புருஷன்?” என அவளுடைய மனதில் பதியும் வண்ணம் அவன் அழுத்திக் கூறியதும் அவளுக்கு விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.
“இதோ பாரு அஞ்சலி… இவ்வளவு நாளா நான் மனைவியா நினைச்சது உன்னைத் தான்… உன் கழுத்துலயும் நான்தான் தாலி கட்டி இருக்கேன்… உன் கூடதான் ஒன்னா தூங்கிருக்கேன்… உன்னோட கேரக்டர் பிடிச்சுதான் அன்னைக்கு நான் ‘லவ் யூ’ சொன்னேன்… உன்னை மட்டும்தான் நான் கிஸ் பண்ணி இருக்கேன்… எனக்கு நீதான் வேணும்… எனக்கு மனைவியா இருக்கணும்னா அது நீ மட்டும்தான்…” என அவன் கூற அவளுக்கு முகம் வெளிறிப் போனது.
“ஐயோ… என்ன இது?” என தவிப்போடு முனகினாள் அவள்.
“இதுதான் நிதர்சனம் அஞ்சலி…” என்றான் அவன்.
“ஆ… ஆனா அக்கா…” என அவள் தயங்க,
“உண்மையை சொல்லணும்னா நான் இன்னும் மதுராக்கிட்ட பேசல… அவளோட போன் நம்பரை மட்டும் சேவ் பண்ணி வச்சிருக்கேன்… என்னோட மனசுல இருக்குறதை உன்கிட்ட சொன்னதுக்கு அப்புறமா மதுராக்கிட்ட பேசுறது நல்லதுன்னு தோணுச்சு… அதனாலதான் நேரா உன்னைத் தேடி வந்தேன்… என்னோட மனசுல நீ மட்டும்தான் இருக்க அஞ்சலி… ஊரைக் கூட்டி தாலி கட்டினாதான் கல்யாணமா? உனக்கும் எனக்கும் நடந்ததும் கூட கல்யாணம்தான்… என்னால மதுராவை என் மனைவியா நினைச்சுப் பார்க்கவே முடியல… உன்னைத் தவிர அந்த இடத்தை யாருக்கும் நான் கொடுக்கத் தயாரா இல்லை… இதுதான் என்னோட முடிவு…” என்றான் இறுதியாக.
“ஐயோ… என்னால இப்படியெல்லாம் நினைச்சு கூட பாக்க முடியல மாமா… இது அக்காவோட வாழ்க்கை…” என அவள் கூறியதும் அவனுக்கோ கோபம் முகிழ்த்தது.
“முட்டாள் மாதிரி பேசாத அஞ்சலி… இந்த வாழ்க்கையே வேணாம்னு தூக்கிப் போட்டுட்டு அவ போய்ட்டா… அவளுக்கு நானோ இந்த கல்யாண வாழ்க்கையோ முக்கியமில்ல.. இவ்வளவு நாளும் நான் மனைவியா நினைச்சுப் பழகியது உன்கூடதான்..
இப்போவே உன் முன்னாடியே அவகூட பேசுறேன்… எல்லா பிரச்சனையையும் இப்பவே முடிச்சு வைக்கலாம்… அவளுக்கு நான் வேணாம்.. எனக்கும் அவ வேணாம்…” என்றவன் தன் அலைபேசியை எடுத்து மதுராவை அழைக்கத் தொடங்க அஞ்சலியோ செயலற்றுப் போனாள்.
***
சென்னையில் ஒரு பிரபலமான கிளப் அது.
அங்கே ஒளி விளக்குகள் மின்னி மின்னி அந்த அறையை வர்ணங்களால் நிறைத்தன.
இசை அலை அலையாக எழுந்து அந்த இடத்தை அதிர வைத்தது.
மதுராவோ ஒரு கரு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் தன்னை மறந்து ஆடிக்கொண்டிருந்தாள்.
அவளுடைய முகத்தில் உற்சாகமும் சுதந்திரத்தின் புன்னகையும் மலர்ந்து விரிந்திருந்தன.
அவள் கைகள் காற்றில் அசைந்து நடனத்தின் லயத்தில் ஒன்றின.
அர்ஜுன் அவளுக்கு அருகில் நின்று ஆடினான்.
அவனுடைய கண்கள் மதுராவின் அழகை மட்டுமே ரசித்தன.
“மதுரா… நீ செமயா டான்ஸ் பண்ற… இந்த வைபுக்கு பொறுத்தமானவ நீதான்…” என உற்சாகமாகக் கூறினான் அவன்.
மதுராவோ சிரித்தவாறே “ஆமா அர்ஜுன்… இந்த இடம்… இந்த மியூசிக்… இதுதான் எனக்கு வேணும்… இங்க நான் ரொம்ப ப்ரீயா ஃபீல் பண்றேன்..” எனக் கூறினாள்.
அவளுடைய குரல் இசையை விட உரத்து ஒலித்தது.
அவள் தன் கிராமத்து வாழ்க்கையையோ கதிரையோ அஞ்சலியையோ மறந்து முழுமையாக இந்தத் தருணத்தில் மூழ்கியிருந்தாள்.
அர்ஜுனோ அவளை இன்னும் நெருங்கி ஆடினான்.
“இன்னைக்கு நைட் நாம இன்னும் ஜாலியா இருக்கலாம் மது.. இந்த கிளப் க்ளோஸ் ஆகுற வரை ஆடுவோம்…” எனக் கண்ணடித்து கூற,
மதுராவோ “கண்டிப்பா…” எனப் புன்னகைத்து அவனுடன் இணைந்து ஆடினாள்.
கிளப்பின் ஒளி விளக்குகள் அவளுடைய முகத்தில் மின்னின. அவளுடைய உடை அவள் நடனத்துடன் ஒத்திசைந்து அசைந்தது.
அர்ஜுன் அவளுடைய கையைப் பற்றி ஒரு திருப்பம் கொடுத்தான்.
மதுராவோ சிரித்தபடி திரும்பி ஆடினாள்.
“வாவ் நீ இவ்வளவு கூலா ஆடுவன்னு நினைக்கவே இல்ல…” எனப் பாராட்டினான் அர்ஜுன்.
“இஸ் இட்…?” என அவனுடைய கூற்றை ரசித்தவள் தன்னுடைய அலைபேசி ஒலிப்பதை உணர்ந்து முகத்தை சுளித்தாள்.
பாக்கெட்டில் இருந்து அதிர்ந்த தொலைபேசியை எடுத்துப் பார்த்தவள் அது புதிய எண் என்றதும் மீண்டும் பாக்கெட்டில் ஃபோனை வைத்து விட்டு ஆடத் தொடங்கினாள்.
ஆனால் மீண்டும் மீண்டும் அழைப்பு வந்து கொண்டே இருந்தது.
“யாரு இவ்வளவு லேட் நைட்ல கால் பண்ணுறது?” என எரிச்சலுடன் முனகினாள்.
அர்ஜுனோ அவளைப் பார்த்து “யாரு மதுரா? எதுக்கு இப்போ கால் பண்ணுறாங்க?” எனக் கேட்டான்.
“தெரியல… ஏதோ அன்நோன் நம்பர்…” எனக் கூறி அந்த அழைப்பைத் துண்டித்தாள் மதுரா.
ஆனால் தொலைபேசி மீண்டும் ஒலித்தது.
இந்த முறை அவள் எரிச்சலுடன் எடுத்து “ஹலோ… யாரு?” எனக் கேட்டாள்.
இசையின் சத்தத்தில் அவளுடைய குரல் கரகரப்பாக ஒலித்தது.
“மதுரா… நான் கதிர் பேசறேன்…” என்ற குரல் மறுமுனையில் ஒலித்தது.
மதுராவின் முகம் சட்டென இருண்டது.
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை