நெஞ்சம் – 2௦
மகன் சாப்பிடக்கூட இல்லையே என்று கவலையில் அவனை குறித்து யோசித்தபடியே இருந்ததில் அருணாவுக்கு உறக்கம் வரவில்லை. அதனால் அர்விந்தின் அறை கதவு திறந்த சத்தம் அவருக்கு கேட்டது. மகன் ஏதும் சாப்பிட நினைப்பானோ என்ற எண்ணத்தில் வேகமாக எழுந்து வந்து பார்த்தார் அருணா. ஆனால் அங்கு யாரும் இல்லாததால் குழப்பம் ஆனவர், பாட்டியின் அறையை எட்டிப்பார்த்தார். அங்கு மலரும் இல்லை எனவும் வேகமாக வந்து தியாகுவை எழுப்பி விட்டார். இருவரும் வீட்டை ஒரு வலம் வந்த பின், வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்லவில்லை என்று உறுதி செய்துக்கொண்டனர். அப்போது தான் அறையிலிருந்து கொஞ்சம் சத்தம் வந்தது. அதனால் இருவரும் ஒருவரை ஒருவர் குழப்பமாக பார்த்துக் கொண்டு ஹாலிலேயே அமர்ந்து விட்டனர்.
தலை குனிந்து நின்ற மலரை ஒரு பார்வை பார்த்த அர்விந்த், தாங்கள் இருவரும் ஏதும் சொல்வோமா என்று பார்த்துகொண்டு நிற்கும் பெற்றோரை பார்த்து,
“ரெண்டு பேரும் ரொம்ப யோசிக்காதீங்க, நான் கொஞ்சம் திட்டிட்டேன் இவளை ஈவினிங், அதான் பேசிட்டு இருந்தோம்” என்றான்.
அவன் சொன்னதை விட்டுவிட்டு, “குடிச்சியா அர்விந்த்?” என்றார் கோபமாக தியாகு.
“அப்பா, லைட்டா தான் பா!” என்றான் அவன்.
அவனை கண்டனத்துடன் பார்த்தவர், “குடிச்சு இருக்க, இந்நேரத்தில் ஒரு பொண்ணை உன் ரூமுக்கு வரவழைச்சு பேச என்ன அவசியம்?” என்றார் மிகுந்த ஆத்திரத்துடன். அவன் பதில் சொல்வதற்குள்,
“சாரை திட்ட வேண்டாம், என் மேல தான் தப்பு” என்று மலரும், “அவளை ஒன்னும் சொல்லாதீங்க பா” என்று அர்விந்தும் ஒரே நேரத்தில் பேசினார்கள்.
அருணா மலரிடம், உங்க அம்மா கிட்டே கேட்டு என் பொறுப்பில் உன்னை இங்க வைச்சு இருக்கேன் நான்! நாளைக்கு எதாவது பிரச்சனைனா என்ன ஆகும்?” என்று கண்டிப்புடன் பேச, அவளுக்கு கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
அம்மாவும் அப்பாவும் சரியான விளக்கம் எதிர்பார்க்கிறார்கள் என்று புரிந்தாலும் என்ன சொல்லி சமாளிப்பது என்று புரியாமல், “அம்மா நான் தான் சொல்றேன்ல, அவளை ஏதும் சொல்லாதீங்க” என்றான் அர்விந்த்.
யாருமே எதிர்பாராத வகையில்,
“எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க, என் மேல தான் தப்பு. நான் தான் சார் ரூமுக்கு போனேன். சாரை லவ் பண்றேன்னு சொன்னேன், சார் எனக்கு இது சரியா வாரதுனு அட்வைஸ் பண்ணிட்டு இருந்தாங்க.” என்று சொல்லிவிட்டாள் வேகமாக.
“ஏய்….!” பல்லை கடித்தான் அர்விந்த். பெரிய தியாகி இந்த அம்மா, ஆஊ னா தியாகம் பண்ண கிளம்பிட வேண்டியது என்று முணுமுணுத்துக் கொண்டான். அவள் கூறிய செய்தியில் அர்விந்த் கடுப்பானான் என்றால் அருணாவும் தியாகுவும் வாயடைத்து போய் நின்றார்கள். என்ன சொல்வார்கள் இதுக்கு?
போய் படுங்க, எதுவா இருந்தாலும் காலையிலே பேசிக்கலாம் என்று அவர்களும் படுக்கச் சென்றார்கள். அறைக்குள் சென்ற உடனேயே,
“என்னங்க இது? நான் கற்பனையில கூட நினைக்காத விஷயமா இருக்குங்க….” என்றார் அருணா.
“இதில வேற ஏதோ விஷயம் இருக்கு அருணா. நல்லா கவனிச்சு பாரு, மலரை விட்டுக்கொடுக்காம ஜாக்கிரதையா பேச தான் அர்விந்த் முயற்சி பண்ணான். மலர் இது தான் விஷயம்னு சொன்ன அப்போவும் அவனுக்கு கோபம் தான், ஆனா ஏன் நம்மகிட்டே சொன்னாங்கிற கோபம் தான் அது, நடந்த விஷயத்துக்காக இல்லை” என்றார் தியாகு.
“அவன் எப்போவுமே அவளிடம் கோபப்பட்டாலும், சின்ன பொண்ணுனு நல்லா கவனிப்பான்” என்ற அருணா, “ஒரு வேளை அதில் தான் மலர் அவனை விரும்பிட்டாளோ?” என்றார்.
“அர்விந்த் மலர் அவனை விரும்புறது தெரிஞ்சும் சாதாரணமா தான் இருக்கான்…. அதோட சப்போர்ட் பண்ணப் பார்க்கிறான்…. யோசனையாக பேசினார் தியாகு.
பெற்றோர்கள் இருவருக்குமே அவர்கள் திருமணம் என்ற அளவு யோசிக்க மனம் வரவில்லை. மகனின் தற்போதைய மனம் மாற்றம் தெரியாது அல்லவா? அவன் மலரை விரும்புவான் என்று அவர்களுக்கு கொஞ்சமும் யோசனை இல்லை.
மறுநாள் காலையில் தியாகு மகனின் அறை கதவை தட்டினார். எப்படியும் அப்பா தன்னிடம் பேசுவார் என்று எதிர்பார்த்திருந்த அர்விந்திற்கு அவர் வந்தது ஒன்றும் ஆச்சரியமாக இல்லை. ஆனால் இரவு தாமதமாக உறங்கியவனுக்கு எரிச்சலாக வந்தது.
“ஏன் பா என் தூக்கத்தை கெடுக்கிறீங்க? எப்போ வேணா பேசலாமே?” என்றான் சாதாரணமாக.
“உனக்கு வேணா நடந்தது பெரிய விஷயமா இல்லாம இருக்கலாம், எங்களை பொறுத்தவரை இது பெரிய விஷயம் பா. ஒரு சின்ன பொண்ணு மனசு சம்பந்தப்பட்ட விஷயம்” என்றார் தியாகு கண்டிப்புடன். அதில் நீ இதை இவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற தொனி இருந்தது.
“இங்க ஒன்னும் தப்பு நடக்கலை பா, இனியும் நடக்காது. அவகிட்ட நான் பேசி, அவளை பத்திரமா ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டியது என் பொறுப்பு!”
“உன்னால நிச்சயமா சொல்ல முடியுமா, பிரச்சனை இல்லைனு?”
“வேணும்னா, மலரையே கூப்பிட்டு கேளுங்க பா….”
அங்கே மலர், அவள் அம்மாவுடன் போனில் வாக்குவாதம் செய்துக் கொண்டு இருந்தாள். அவள் சொல்வதை கேட்காமல், அருணாவிடம் போனை கொடுக்க சொன்னார் கண்ணகி. அதே போல் மலர் கொடுக்க, அருணாவும் பேசினார். அதே நேரம் சரியாக மகன் கூறியது போல் மலரை தியாகு அழைக்க, அருணாவும் அவள் கூடவே வந்தார்.
“மலர் ஊருக்கு போகணுமாம், அவங்க அம்மா உடனே அவளை கிளம்பி வரச் சொல்றாங்க. என்கிட்டயும் பேசி அனுப்பி வைக்கச் சொன்னாங்க” என்றார்.
“என்ன என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா? இல்லை நீ எதுவும் சொன்னியா மலர் உங்க வீட்டில?” புரியாமல் கேட்டார் தியாகு. அர்விந்த் மலரின் முகம் பார்க்க, அதில் மிகுந்த குழப்பம் தெரிந்தது.
“இல்லைங்க, மலருக்கு அவங்க எதிர்பார்க்காத இடத்தில இருந்து நல்ல வரன் வந்து இருக்காம், நல்ல நாள்னு நாளைக்கு சாயந்திரம் பொண்ணு பார்க்க வரேன்னு சொல்றாங்களாம். அதான் அவங்க அம்மா பேசினாங்க.” அருணா பேச பேச அர்விந்தின் முகம் அவனையும் அறியாமல் மாறியது. இதென்ன எதிர்பாராத குழப்பம் என்று எண்ணினான் அவன். அதை பெரியவர்கள் இருவருமே கவனித்துக் கொண்டனர்.
நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்னா, இப்போ அவ வீட்டில ஏற்பாடு பண்றாங்க என்ற கடுப்பில்,
“வாழ்த்துக்கள் விழி! மலர்விழிக்கு கல்யாணம்!” என்றான் நக்கலாக அர்விந்தன்.
எப்படியும் திருமணத்தை தடுத்து விடுவாள் என்ற நம்பிக்கை இருந்தாலும் சின்ன பதட்டம் இருக்க, அவனின் இந்த நக்கலில் மனம் உடைந்து கண்ணீர் சிந்தினாள் மலர். அவள் அழுவதை கண்ட அருணா, மகனை கண்டித்தார்.
“என்ன அர்விந்த் இப்படி நடந்துக்கிறே? நல்லாவே இல்லை!” என்றவர், மலரை தனியாக அழைத்துச் சென்றார். அவரும் கண்ணகி பேசியபின் மலரிடம் பேசவே இல்லையே. அவள் மனதை பற்றி பேச வேண்டும் என்று இருந்தது அவருக்கு.
அருணாவுடன் சென்ற மலர், தேம்பி தேம்பி அழ, “உன் மனசில என்ன இருக்கு மலர், சொல்லு என்கிட்ட” என்றார் உண்மையான அக்கறையுடன்.
“இப்படி சொல்றதுக்கு என்னை மன்னிச்சுடுங்க மா, ஆனா இது தான் உண்மை. சாரை நான் ரொம்ப லவ் பண்றேன் மா, ஊருக்கு போய் இந்த கல்யாணத்தை எப்படியும் நிறுத்திடுவேன் மா” என்றாள் அழுதபடியே.
ஒரு நிமிடம் அருணாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அர்விந்துடன் மலரை சேர்த்து நினைக்கவே முடியவில்லை அவரால். அதோடு இது அர்விந்தின் வாழ்க்கை, அவர் சொல்லவும் ஏதுமில்லை. அவளுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற எண்ணத்தில்,
“சரி மா நீ ஊருக்கு போய்ட்டு என்ன ஆச்சுனு சொல்லு, அப்பறம் நாம பேசுவோம்” என்றார்.
“உங்ககிட்ட ஒன்னு கேட்கவா மா?” தயங்கி தயங்கி கேட்டாள் மலர்.
“சார் ஒருவேளை என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா, என்னை மருமகளா ஏத்துப்பீங்களா?”
எப்படி சொன்னால் அவள் மனம் காயப்படாது என்று யோசித்து யோசித்து பேசினார் அருணா.
“இது கல்யாணம் வரை போகும்னு உனக்கு நம்பிக்கை இருக்கா மலர்?”
“என் ஆசையை கேட்டேன் மா” என்றாள் தலையை குனிந்து கொண்டு.
“நாங்க இதெல்லாம் எதிர்பார்க்கலை மா, உன்னை ரொம்ப பிடிக்கும் எங்களுக்கு. கல்யாணம் எப்படி தெரியலை. ஆனா எங்களுக்கு எங்க பையன் என்ன முடிவு எடுத்தாலும் சரி. அவன் சந்தோஷம் தான் முக்கியம்” என்றார்.
அவரின் நிலை புரிந்தது மலருக்கு. திருமணம் என்பது குடும்பங்களும் கலப்பது அல்லவா! உயர் மத்தியதர குடும்பமும், நடுத்தர வகுப்பிற்கு கீழே உள்ள குடும்பமும் எப்படி கலக்கும்? அதற்கு மிகவும் விசாலமான மனம் வேண்டும்! சமூகத்தை சமாளிக்க திடம் வேண்டும்! உறுதி வேண்டும்!
மலர் தன் உடமைகளை அடுக்க, அவளிடம் தனியே பேச வேண்டும் என்று அர்விந்தன் அவளை அவன் அறைக்கு அழைத்தான். அருணா, தியாகு முன்னிலையில் தான் அழைத்தான். அவள், அவர்கள் இருவர் முகத்தையும் பார்க்க, கோபமாக இருந்தவன், இன்னும் பொங்கினான்.
“அவங்களை கேட்டா என்கிட்ட லவ் சொன்னே?” என்றான் கோபமாக.
அர்விந்த்! தியாகு அதட்ட, குனிந்த தலையுடன் அவன் அறைக்கு சென்றாள் மலர்.
“இவனுக்கு அக்கறையை கூட ஒழுங்கா காட்ட தெரியலை!” அருணா அலுத்துக் கொள்ள, “உன்னை நீயே ஏமாத்திக்காதே அருணா. அர்விந்த் நடத்தை எல்லாம் பார்த்தும் நீ இப்படி பேசக் கூடாது” என்றார் தியாகு. அவருக்கு நன்றாக புரிந்தது, அவனுக்குள் மலர் குறித்து உணர்வுகள் இருக்கிறது என்று. ஆனால், அவன் எவ்வளவு தெளிவாக இருக்கிறான் என்பதில் தான் அவருக்கு சந்தேகம்!
“என்ன சொல்றீங்க?” அருணா கேட்க,
“எனக்கும் சரியா தெரியலை, ஆனா மலர் அர்விந்திற்கு ரொம்ப க்ளோஸ், உரிமை எல்லாம் இருக்கு. இல்லைனா இப்படி பேச பழக வாய்ப்பில்லை” என்றார்.
“இது கல்யாணம் வரை போகுமா? அப்படி போனா உங்களுக்கு ஓகே வா?”
“அப்படி ஒரு நிலை வந்தா, அர்விந்த் சந்தோஷம் மட்டும் தான் பார்க்கணும்! அர்விந்திற்கு ரெண்டாவது கல்யணம், அதனால் இப்படி போயிட்டாங்கனு பேசுவாங்க, அதெல்லாம் கண்டுக்க கூடாது.” என்றார் தெளிவாக.
அவர்கள் இருவரும் ஒரு முடிவுக்கு வருவதற்குள் இவர்கள் தங்கள் மனதை தயார் செய்துக் கொண்டனர்.
அறைக்குள்,
“என்ன போய் கல்யாணத்துக்கு ரெடி ஆகபோறியா?” என்றான் கிண்டலாக.
“அப்போ நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” தைரியமாக கேட்டாள் மலர்.
ஆசையும் சிரிப்பும் போட்டி போட்டுக் கொண்டு வர, அதை மறைத்துக் கொண்டு, “ஏன் பண்ணிக்கணும்? இப்போ என் மனநிலை சரியில்லை அதனால் உன்கூட கசமுசா ஆச்சு! என் மன நிலை சரியான அப்பறம் உன்கிட்ட கூட வரமாட்டேன்! அப்போ கல்யாணம் வேஸ்ட் தானே!”
அவன் அறையில் பாட்டில் இருக்கும் இடத்தை காட்டி, “உங்க மனநிலை எப்போதும் இப்படி தான் இருக்கும், சரி ஆகாது! அதுக்கு தானே நிறைய வாங்கி வைச்சு இருக்கீங்க!” என்றாள் அவளும் கிண்டலாக.
அப்போ வெறும் கசமுசாவுக்கு மட்டும் தான் இந்த கல்யாணமா? அவன் மேலும் அவளை வெறுப்பேத்த,
“நான் உங்களை விரும்புறேன்னு தானே சொன்னேன்!”
“ஆனா நான் ஸ்டெடி மைண்ட் இல்லாமல் தான் உன்கிட் வந்தேன்னும் சொன்னே!”
“அது அப்படி இல்லை சார்….”
“எப்படியும் இல்லை சார்…. போதும் உன் பரிதாபம் எல்லாம் எனக்கு வேண்டாம்! அதனால் நீ எல்லாத்தையும் மூட்டை கட்டிக்கிட்டு ஊருக்கு போய் அந்த மாப்பிள்ளை எப்படி இருக்கான் பார்! மறக்காம கல்யாண பத்திரிக்கை அனுப்பு, இப்போ கிளம்பு” என்றான்.
அவனுக்கு நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. நேற்றைய அவளின் பேச்சின் முட்டாள் தனத்தை அவளுக்கு உணர்த்த இப்போது அவனுக்கு அவகாசம் இல்லை என்பதால் அவள் ஊருக்கு செல்லட்டும், பிறகு என்ன செய்யலாம் என்று முடிவெடுக்கலாம் என்று நினைத்தான் அர்விந்தன்.
அது தெரியாதவள், “அவ்ளோதானா சார்?” என்றாள் ஏமாற்றமாக.
“வேறென்ன?”
“என்னை மன்னிச்சுடுங்க சார்….”
“எதுக்கு…?”
“இதுக்கு தான்!” என்றவள் அர்விந்தின் கன்னத்தில் ஒரு அறை வைத்தாள்.
“ஹேய், என்ன கொழுப்புடி உனக்கு? என்னை அறைவியா? அவள் கையைப் பிடித்து முறுக்கியவனின் குரலில் மட்டுமே கோபத்தின் சாயல். முகத்தில் துளியும் ஆத்திரம் இல்லை. அடக்கப்பட்ட சிரிப்பு தான்.
அவன் முகத்தை பார்க்கவிடாமல் அவளை அந்த பக்கம் திருப்பி இருந்தான் அர்விந்த்.
“உங்களுக்கே நீங்க என் மேல வைச்சு இருக்க ஆசை தெரியலை, இல்லை தெரிஞ்சே மறைக்கிறீங்க! இது ரெண்டுல ஒன்னு தான்! அதை நான் எப்படி உங்களை ஒத்துக்க வைக்கிறது? நீங்களா சொன்னா தான்! ஆனா நீங்க சொல்ல மாட்டீங்க சார். இதுக்கு மேல் நான் எப்படி கேட்கிறது? நானும் உங்களை மாதிரி படிச்சு, நல்ல வேலை பார்த்து இருந்தா, நீங்க சம்மதம் சொல்லி இருப்பீங்க போல்!” மீண்டும் கண்ணீர் விட்டாள் மலர்.
“பாரு மறுபடி, இப்படி என்னையும் உன்னையும் சேர்த்து அசிங்கப்படுத்துற! இன்னைக்கு நீயே இப்படி சொன்னா, நாளைக்கு எல்லாரும் சொல்வாங்க! என்னை பேர் சொல்லி கூட கூப்பிட முடியலை உன்னால….ரெண்டு பேர் வாழ்க்கை நரகம் ஆயிடும். என்ன பிரச்சனை வந்தாலும் இந்த காரணம் தான் முன்னால வரும். உன்னால என்கூட சந்தோஷமா இருக்க முடியாது. அதனால் தான் உன் காதல் வேண்டாம் சொல்றேன்!”
“உங்க காதல்?”
“கசமுசா மட்டும் தான் உன்மேல!!” ஒத்துகொள்ளவே இல்லை அவன்!
ஒரு நிமிடம் அமைதியானவள், கண்ணை இறுக்க மூடிக் கொண்டு, “டேய் அர்விந்தா, என்னை கல்யாணம் பண்ணிக்கோடா” என்றாள் பட்டென்று.
மூடி இருந்த விழிகளை பார்த்தவனுக்கு அவள் மேல் அலை அலையா ஆசையும் தாபமும் பெருகியது.
கொஞ்சம் கமெண்ட்ஸ் போடுங்க, என்ன பீல் பண்றீங்கனு ….
fmc is bold and beautiful with disarming frankness. i like her honesty