22. நேசம் கூடிய நெஞ்சம்

4.8
(20)

நெஞ்சம் – 22

அவ்வளவு நேரம் அவளை பேச விட்டு, கொஞ்சம் இடைவெளி விட்டு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவன், அவளின் பதிலில் சட்டென்று கிளர்ந்து, அவளை அருகில் இழுத்தான்.

அவளை பார்வையாலேயே  அவன் துவம்சம் செய்வது போல் உணர்ந்தாள் மலர். அவ்வளவு நேரம் வாயடித்து கொண்டு இருந்தவள், அவனின் அந்த பார்வையில் சட்டென்று மௌனி ஆனாள். மனதிற்குள் பிடிக்கலை பிடிக்கலைனு சொல்ல வேண்டியது ஆனா கண்ணிலே என்ன தான் வைச்சு இருக்காரோ, நம்மளால அந்த கண்ணை பார்க்கவே முடியலை, டெய்லி போன் பண்ணி திட்டுற மாதிரி தினமும் பேச வேண்டியது என்று அவனை செல்லமாக திட்டிக் கொண்டாள். அவனை பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு இருந்தவளிடம்,

“நாளையில இருந்து என் கண் பார்வையில தான் இருக்கணும், என்ன பேசுறதுனாலும் என்னை கேட்டு தான் பேசணும்…. உன் இஷ்டத்துக்கு உளறிக்கொட்டினது எல்லாம் போதும்! புரியுதா?” அவளை தன்னுடனே வைத்துக் கொள்ள அவன் போடும் திட்டம் அது! அது புரியாதவள் மனம் சோர்ந்தாள்,

“இதை மட்டும் விடவே மாட்டீங்களா?” என்றாள் வருத்தமாக.

“ஏன் விடணும்? இந்த கல்யாணத்துக்குக்கான உண்மையான காரணம் உங்க அப்பா அம்மாவுக்கே தெரியாது! அந்த அளவிற்கு நீ உன் மனசில், என்னை ஒரு வீணா போனவன்னு யோசிச்சு வைச்சு இருக்கே!” அவளிடம் இருந்து விலகி நின்று, பொருமினான் ஆதங்கத்தில் அர்விந்தன்.

அர்விந்த் மனதில் என்றுமே மலரை குறைவாக நினைத்ததே இல்லை, அவன் காதலை சொல்ல தாமதம் செய்தது கூட அவளுக்கு அவன் காதல் நன்மையா தீமையா என்ற குழப்பத்தில் தான். ஆனாலும் அவளை திருமணம் செய்ய வேண்டும் என்று தான் இருந்தான். ஊருக்கு கிளம்பும் முன் மலர் தியாகுவிடம் உளறியதில் அவன் அவர்கள் திருமணம் குறித்து பேசவேண்டிய நிர்பந்தத்தில் இருந்தான். மிகுந்த கோபம் இருந்தாலும், அவன் நேசிக்கிற பெண்ணிற்கு வேறு திருமண ஏற்பாடு என்றால் இவன் ஏதேனும் நடவடிக்கை எடுக்க தானே வேண்டும்! அதோடு ஒரு நாள் ஆனதுமே தியாகுவின் பொறுமை பறக்க, மகனிடம் வந்தவர்,

“எப்போ தான் உன் மனசில என்ன இருக்குனு சொல்லுவே?” என்றார்.

அவன் மனதை பெற்றவர்களிடம் பகிர்வதில் பல சிக்கல். முதல் விஷயம், நிவேதவுடன் நடந்த அவன் திருமணம் கேலிக்குறிய விஷயம் ஆகிவிடும். பின் ஆக்சிடெண்ட் நடந்த போது, மலர் இங்கு இருந்திருந்தால் அப்போது காதல் என்று சொல்லலாம், அதுவும் இல்லை. வந்து இரண்டே நாட்களில் காதல் என்றால் எப்படி நம்புவார்கள்? இப்படி சிக்கலில் தன்னை மாட்டிவிட்டாளே என்று மனதினில் புலம்பினான் அர்விந்தன். என்ன யோசித்தாலும் பெற்றவருக்கு பதில் கொடுத்து தானே ஆக வேண்டும்.

“மலர் கூட இருக்கும் போது ஐ பெல்ட் பெட்டர் பா! அவ கூட பேச, பழக எனக்கு பிடிச்சு இருக்கு!” என்றான்.

“நீ ஈஸியா சொல்றே! ஆனா மலர் ரொம்ப தீவிரமான காதலா சொல்லுதே பா!”

“அவளுக்கு அப்படி இருக்கு! சொல்றா!”

“அப்போ உனக்கு ஒண்ணுமில்லையா? இப்போ அவங்க வீட்டில பார்க்கிற மாப்பிளையை அந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்க மாட்டா! உனக்காக வெயிட் பண்ணுவா! உன் பதில் என்னனு தெளிவா சொல்லு, அப்போ தான் யார் வாழ்க்கையிலும் எந்த பிரச்சனையும் இருக்காது.”

“இங்க என்ன வேணா பேசலாம், ஊருக்கு போன அவ, அவங்க அம்மா அப்பா சொல்றதை கூட கேட்டு இருக்கலாம். நீங்களா எதாவது சொல்லாதீங்க பா.” திருக்கோவிலுரில் என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்தவன் தியாகுவிடம் எரிந்து விழுந்தான்.

அவளால் அவள் பெற்றோரை எதிர்க்க முடியுமா? இவன் தலையீட்டால் அவளுக்கு எந்த பிரச்சனையும் வரக் கூடாது, ஒரு வேளை அவள் அவர்களுக்காக மனம் மாறினால் இவன் மலருக்கு ஒரு பிரச்சனை ஆகி விடக் கூடாது என்று தான் அவள் கிளம்பும் நேரமும் அதற்கு பின்னும் அவன் அவளிடம் பேசவே இல்லை.

பல விஷயங்களை யோசித்து அர்விந்தன் குழம்பிக் கொள்ள, அவனுக்கு நேரெதிராக அவள் காதலை மட்டுமே யோசித்து மலர் செயல்பட்டாள். அவனுக்கு விவாகரத்து ஆனது மட்டுமின்றி அவனும் மலரிடம் நெருங்கி வர அன்றே அவளின் மனநிலை வேறு மாதிரி மாறியது. அவனின் வாழ்க்கையில் நுழைய அவளுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமாயின் அதை எப்படியும் பெற்று விட வேண்டும் என்று ஆகி விட்டாள்.

மகன் சொல்வதை கேட்ட தியாகு, அருணாவிடம் கேட்டார். “நீ பேசினியா மலர் கிட்டே? என்ன ஆச்சு அந்த வரன்?”

“நான் பேசலைங்க. இப்போ அவங்க அம்மாவை கேட்கிறேன் இருங்க….” என்றவர், அப்போதே கண்ணகிக்கு அழைத்து பேசினார்.

சம்பிரதாய பேச்சிற்கு பின், “எப்படி போச்சு பொண்ணு பார்த்த நிகழ்ச்சி? என்ன சொல்றாங்க பொண்ணும் மாப்பிளையும்?” என்றார்.

“என்ன சொல்றது மா… நானே உங்களுக்கு அழைக்கணும்னு இருந்தேன்! எந்த மூஞ்சியை வைச்சுக்கிட்டு பேசுறதுனு தெரியலை. இந்த மாப்பிளையை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். உங்க பையனுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ண பொண்ணு பார்க்கிறாங்க, அவங்க இஷ்டப்பட்டா, அவங்களை தான் கல்யாணம் பண்ணிப்பேன் சொல்றா! ரெண்டாவது கல்யாணம்னாலும் உங்க கிட்ட நாங்க என்ன பேசுறது? எப்படி பேசறது? உங்க வீட்டில் வந்து இருந்து என்ன அவளுக்கு பிடிச்சுதோ தெரியலை…. புரியாம சொன்னதே சொல்றா மா! அவளுக்கு நீங்களே பேசி புத்தி சொல்லுங்க மா!” என்றார் கண்ணகி.

“நான் அப்புறம் பேசுறேன்” என்று அழைப்பை துண்டித்தார் அருணா.

மலர், அர்விந்த் நிச்சயம் காதல் என்று பேச மாட்டான். அவளை திருமணம் செய்ய வேறு என்ன காரணம் சொல்வது என்று அவனுக்காக யோசித்து, அவனுக்கு எந்த அவப்பெயரும் தன்னால் வந்து விடக்கூடாது என்று முன்னெச்சரிகையாக தன்னை காரணம் காட்டிக்கொண்டாள். கண்ணகி சொன்னதை ஆண்கள் இருவரிடமும் பகிர்ந்து கொண்ட அருணா,

“இதை நான் கொஞ்சமும் மலர் கிட்டே எதிர்பார்க்கலை. நம்ம கிட்டே கலந்துக்காம, அவளா பேசி வைச்சு இருக்கா. என்ன நம்மளை கார்னர் பண்ண பார்க்கிறாளா?” அதிருப்தியுடன் பேசினார்.

தியாகு பதில் சொல்லும் முன், வேகமாக பதில் வந்தது அர்விந்திடம் இருந்து.

“அவங்க வீட்டிலே, அவ பேரண்ட்ஸ் கிட்டே அவ எதையோ சொல்றா! நீங்க ஏன் அதை தப்பா எடுத்துக்கிறீங்க? இன்பேக்ட் அதில் நம்மளை பத்தி  எதுவுமே இல்லை!!” என்றான்.

அன்று ஜனனி தம்பி கூறியதாக சொன்னது, இப்போது இவன் பேசுவது என்று அனைத்தையும் யோசித்த தியாகுவிற்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது. அவன் மலரை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் மற்றவர் யாரும் எதுவும் சொல்லிவிடக் கூடாது என்பது.

தனக்குள் சிரித்துக் கொண்டவர்,

“அப்போ நீ மலருக்காக அவளை கல்யாணம் பண்ணிக்க போறியா? அவளும் அந்த மாப்பிள்ளை வேண்டாம், நீதான் வேணும்னு சொல்லிட்டா! இப்போ உன் முடிவு சொல்லு!”

“நான் கல்யாணம் பண்ணின பொண்ணு என்னை வேண்டாம்னு சொன்னுச்சு, சரி நீ போம்மானு விட்டுட்டேன்…. இந்த பொண்ணு நான் வேணும்னு சொல்லுது, சரி வாம்மான்னு சொல்ல வேண்டியது தான்!”

“அப்போ நிவேதாவை நீ லவ் பண்ணே! இப்போ மலரையும் லவ் பண்றியா?” கிடுக்குப்பிடி போட்டார் தியாகு.

“நான் நிவேதாவை லவ் பண்ணவே இல்லை. அவளும் அதை தானே ஜனனிகிட்டே சொன்னா! எனக்கு செட் ஆகும்னு நினைச்சேன். அவ்ளோ தான்!” இப்படி சொன்னவன், மலர் குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதை குறித்துக் கொண்டார் தியாகு. அவனிடம்,

“நீ மலரை கல்யாணம் பண்ணிக்க ரெடி ஆயிட்டே புரியுது!” என்றவர், அருணாவிடம்,

“இனி நீயும் உன் மனசை தயார் பண்ணிக்க அருணா! நம்ம மகன் ஏதோ மறைக்கிறான் நம்ம கிட்டே இருந்து!” என்றார்.

அதுவரை அமைதியாக இருந்த அருணா, “இதென்ன வாழ்க்கையா விளையாட்டா அர்வி? இனி அமைய போற வாழ்க்கை உனக்கு நல்லா இருக்கணும்னு நாங்க துடிக்கிறோம், நீ யாரோ யாரோ இழுக்கிற இழுவைக்கு போறேன்னு சொல்றே? மலருக்கு மனசு நிலையா இருக்கும்னு உனக்கு தெரியுமா? முதல்ல நீ ஏன் யாரோ ஒரு பொண்ணு ஆசைக்கு அவளை கல்யாணம் பண்ணிக்கணும்?” பேசி முடிக்கும் போது கண்ணீர் வந்து விட்டது அருணாவுக்கு. அவர் தேம்பி தேம்பி அழ,

வேகமாக அம்மாவை நெருங்கியவன், அவரை அணைத்து கொண்டு,

“அவ யாரோ இல்லைமா…. என் மனசுக்கு ரொம்ப நெருக்கம் ஆன பொண்ணு மா…. அவ கூட இருந்தா நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன்மா…. எனக்கு மலரை ரொம்ப பிடிக்கும் மா…. அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்…. நீங்களே பாருங்க அவ எனக்காக எவ்ளோ போராடுறானு…. அவளை எப்படி மா நான் மிஸ் பண்ணுவேன்….?” என்று ஒருவழியாக அவன் மனதை பெற்றவர்களிடம் தெரிவித்தான்.

“ஷப்பா டா, நீ வாயை திறக்க இவ்ளோ கஷ்டமா டா! பாவம் டா மலர், அந்த பொண்ணு கிட்டேயும் சீக்கிரம் பேசு டா” என்றார் தியாகு.

“இங்க தான் நீங்க ரெண்டு பேரும் எனக்கு ஹெல்ப் பண்ணனும். இது ஒரு அரேன்ஜ் மேரேஜ் மாதிரி மாட்டுமே இருக்கணும். நான் மலர் கிட்டே என் மனசை சொல்ல எனக்கு கொஞ்சம் டைம் வேணும், ப்ளீஸ்” என்று சொல்லிவிட்டு அறைக்கு சென்று விட்டான் அர்விந்தன்.

அர்விந்த்….. நம்ப முடியாமல் அருணா திகைக்க,

“அம்மா…. ப்ளீஸ்…. போதும் பேசினது….” என்று அறைக்கு போனான் அர்விந்த்.

அவன் அறைக்குள் சென்றதும்,

“உங்களால் இந்த கல்யாணத்தை ஏத்துக்க முடியுதாங்க? என்னால முடியலையே…. எனக்கு மலரை ரொம்ப பிடிக்கும்…. தனிமனுஷியா அவளை ரொம்ப ரொம்ப பிடிக்கும்…. ஆனா எனக்கு மருமகளா நினைக்க மனசு முரண்டுதே…. எனக்கு பயமா இருக்குங்க…. நான் மோசமான மாமியார் ஆய்டுவேனா? அந்த நல்ல மனம் தவித்தது.

சில விஷயங்கள் ஏத்துக்க கஷ்டமா இருக்கும், வருத்தமா கூட இருக்கும்…. ஆனால் நம்ம அர்விந்த் மனசு…. நல்லா யோசிச்சு பாரு…. மூணு மாசத்துக்கு அப்பறம் மலர் வந்த அன்னைக்கு தான் அவன் சிரிச்சான், வெளில கிளம்பினான். ஆயிரம் பேர் குடும்பத்தில் இருந்தாலும், அந்த துணை சொல்ற உறவுக்கு தான் மனசு அடிமை. அவங்களை தான் தேடும், அவங்களோட தான் பகிரும்…. அதை நினைச்சு இந்த கல்யாணத்தை நடத்தி வைப்போம். நீ சொன்ன மாதிரி மலர் நல்ல பொண்ணு, வேற எதையும் பெரிசா யோசிக்காத. என் அருணாவுக்கு யாரையும் காயப்படுத்த  தெரியாது!” என்று மனைவிக்கு ஆறுதலாக பேசினார்.

அதன் பின் அவர்கள் இருவர் மட்டும் யாருக்கும் எதையும் தெரிவிக்காமல் திருக்கோவிலூர் கிளம்பி சென்றனர். பல விஷயங்கள் ஏமாற்றமாக இருந்தாலும், மகனை முன்னிலைப்படுத்தி, மலர் அவர்கள் வீட்டில் பேசியது போலவே, அரவிந்தனுக்கும் இந்த திருமண ஏற்பாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் திருமணம் பேசினர். மாணிக்கவாசகம், கண்ணகிக்கும் தாங்கள் பெண்ணால் தான் இந்த திருமணமே நடக்கிறது, அவர்கள் தங்கள் வீட்டில் பெண் எடுப்பதே பெரிய விஷயம் என்று நினைத்தனர். ஆனாலும் அவர்களுக்கு இந்த திருமணத்தில் முழு மகிழ்ச்சியும் இல்லை. அர்விந்தனும் யாரிடமும் எதுவும் பேசவில்லை. மலரை மட்டும் அழைத்து அவ்வப்போது திட்டுவான்.

“மேடமுக்கு யார் மேலையும் நம்பிக்கை இல்லை! எல்லாம் உங்க தலையில தான் நடக்குதுனு நினைப்பு!” என்பான்.

“இல்லையா பின்னே? நான் இல்லைனா இந்த கல்யாணம் இவ்ளோ சீக்கிரம் நடக்குமா?”

“ஓ! இப்படி ஒரு நினைப்புல தான் இருக்கியா?” அவனுக்கு கோபமாக வரும், அவனின் பங்கு, சம்மதம், எதையும் அவள் யோசிக்கவில்லையா? அவனின் பெற்றோர் சம்மதம் எளிதாக எப்படி கிடைத்தது? அதை கூட அவள் யோசிக்கவில்லையா? அவள் கேட்டால், இவ்வளவு பெரிய காரியம் நடந்து விடுமா? அவன் என்ன உதவாக்கரையா? அவனை பற்றிய அவளின் எண்ணம் அவ்வளவு தானா? அவள் முன்னெடுத்தாள் தான் அவர்களின் திருமணப் பேச்சை? ஆனால் அவன்? அவனின் மனது? அர்விந்தனின் கோபத்தை விடாமல் பிடித்துக் கொண்டு அலைந்தான் அவன். அவள் அவனை என்று தான் உணர்கிறாள் பார்போம் என்று நினைத்தான்.

இப்போது மண்டபத்திற்கு வந்து தான் மலரின் பெற்றோரையே சந்தித்தான். அவர்களும் மகளே பார்த்து முடிவு செய்த வாழக்கை என்று அவனை பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. அவனின் தற்போதைய புகைப்படம் பார்த்திருந்தனர். மலர் அவன் கால் பற்றி கூறி இருந்தாலும், அவனை முதல் முறையாக மண்டபத்தில் காணும் போது, அந்த பெரிய முகத் தழும்பும், லேசாக விந்தும் அவன் காலும் அவர்களுக்கு சற்று வேதனையாக தான் இருந்தது. ஆனால் அவர்கள் காட்டிக்கொள்ளவில்லை. அங்கு கூடி இருந்த அனைவரும் அவர்கள் குடும்பங்களின் இந்த பொருந்தா திருமணத்திற்கு காரணம் என்ன என்று அறிந்து கொண்டதை போல் குசுகுசுத்தனர். அர்விந்தனின் பக்கம் இருந்து மிக சொற்பமே, அவர்கள் யாரும் எதையும் பேசிக் கொள்ளவில்லை. தியாகு மற்றும் அருணாவின் மனதிற்காக அவர்களும் அமைதியாக இருந்து கொண்டனர்.

இப்போது மண்டபத்தின் மாடியில் நின்று அடுத்த வாக்குவாதத்திற்கு தயாரானவர்களை பற்றி தெரிந்தவராக தியாகு பாதி படியில் இருந்து குரல் கொடுத்தார்.

“அர்விந்த், ரொம்ப டைம் ஆச்சுப்பா!”

“கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்….” நக்கலாக அர்விந்தன் மலரிடம் கூற,

“ரொம்ப பண்ணாதீங்க….”

“நான் இப்படி தான், கல்யாணம் வேணுமா வேணாமான்னு முடிவு பண்ணிக்க….”

“எல்லாம் எங்களுக்கு தெரியும்!”

“நீதான் பெரிய அறிவாளி ஆச்சே…. உனக்கு எல்லாம் தெரியும் தான்!”

“ம்க்கூஹும்…..” அவனை பழிப்பு காட்டியபடி, நாலு அடி நடந்தவள், நின்று, குறும்பாக,

“கிளம்பு கிளம்பு சொல்றீங்களே, நாளைக்கு நைட் இதே சொல்வீங்களா….” என்றாள் சிரிப்பை அடக்கியபடி.

“தானா வந்து சிக்கின ஆட்டை பிரியாணி போடாம எப்படி? இன்னைக்கு நைட் வரைக்கும் தான் எல்லாம் உன் சாய்ஸ், நாளையில இருந்து என் கன்ட்ரோல் தான்!” பேச்சு தான் இஷ்டத்துக்கு வந்ததே தவிர முகத்தில் சிரிப்பும் கேலியும் கூத்தாடியது இருவருக்கும்!

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

1 thought on “22. நேசம் கூடிய நெஞ்சம்”

Leave a Reply to ArundathiPosalan Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!