23. நேசம் கூடிய நெஞ்சம்

4.8
(18)

நெஞ்சம் – 23

மங்கள வாத்தியங்கள் முழங்கிக் கொண்டு இருக்க, மாப்பிள்ளை வந்து மணவறையில் அமர்ந்தான். முஹுர்த்த நேரம் வந்து விட, இன்னும் மேக்கப் முடியவில்லையா என்று அனைவரும் மணப்பெண்ணின் அறையையே பார்த்தனர்.

சீக்கிரம் பெண்ணை அழைச்சுண்டு வாங்கோ…. நாழியாறது…. ஐயர் குரல் கொடுக்க, ஜனனியின் கணவன் வேகமாக மனைவியிடம் கூற விரைந்தான். ஜனனி, மணப்பெண்ணின் அறையில் தான் இருந்தாள். தம்பியின் மனம் தெரிந்த பின், அவள் முழு மனதுடன் மலரை ஏற்றுக் கொண்டாள். ஆரவ் சென்று ஜனனியிடம் சொல்லி துரிதப்படுத்த, அடுத்த ஐந்து நிமிடத்தில் மலரின் மாமா மனைவி அவள் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்தார்.

பொண்ணு வருது பொண்ணு வருது….. ஆங்காங்கே குரல் வர, ஆர்வமாக பக்கவாட்டிற்கு பார்வையை திருப்பினான் அர்விந்த்.

வயலட் நிறத்தில் புடவை, அதன் உடலெங்கும் தங்க ஜரிகை நெய்யப்பட்டு இருக்க, அந்த புடவையை உடுத்தி இருந்தவளும் தங்க தாரகையாக ஜொலித்தாள். மணக்கோலம் அவளை இன்னும் பேரழகியாக காட்ட, அவளை விரிந்த புன்னகையுடன் கண்களால் வரவேற்றான் அர்விந்தன். அவனின் மேல் மட்டுமே தன்  பார்வையை வைத்து இருந்தவளுக்கு அவனின் சந்தோஷம் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. இருவருக்கு அவரவர் புன்னகை பேரழகை கொடுக்க, ஒருவரை ஒருவர் ரசித்தபடி தம்பதிகள் ஆக தயார் ஆயினர். மலரின் பெற்றவர்கள் அவளை தாரை வார்த்து கொடுக்க, மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டான் அர்விந்தன். பின் கெட்டி மேளம் கொட்ட, கையில் தாலியை வாங்கியவன், போன முறை போல் இல்லாமல் இம்முறை கண்களை மூடி மனதார பிராத்தித்து கட்ட, பார்த்திருந்த அனைவரும் நெகிழ்ந்து போயினர். அந்நேரம் வரை கொஞ்சம் சஞ்சலமாக இருந்த அருணா, அந்த நொடியில் சட்டென்று மாறி போனார். மகன் இவ்வளவு அவளை விரும்புகிறானா என்று அவரும் மலரை மனதார மருமகளாக ஏற்றுக் கொண்டார். தியாகு பற்றி சொல்லவே வேண்டாம்! அதே போல் கண்ணகியும், மாணிக்க வாசகமும் அவனின் செயலில் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர். வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் மனைவியை நன்றாக வைத்துக் கொள்வான் அல்லவா? மற்றவர்களே இப்படி என்றால், மலரை பற்றி சொல்லவே வேண்டாம், இன்னும் அவன் மேல் காதல் பொங்கியது அவளுக்கு!

கெட்டிமேளம்! கெட்டிமேளம்!

அவனுக்கு என காத்திருந்த நெஞ்சம் மலர, அவன் கண்ணோடு கண் நோக்கி அவன் கையால் தாலி வாங்கிக் கொண்டாள் மலர்.

அவனை மயக்கிய அந்த பெண்மையிடம் வாழ்நாள் எல்லாம் மயங்கி கிடக்க விரும்பி அவளை தன்னவள் ஆக்கிக் கொண்டான் அர்விந்தன்.

அவன் கையால் தாலி வாங்கி கொண்டவளுக்கு, நெற்றியில் திலகமிட அவளை தன்னுடன் சேர்த்து நன்றாக அணைத்து நெற்றியில் குங்குமம் வைத்தான்.

“மாப்பிள்ளை இன்னும் நேரம் இருக்கு…. பொறுமை பொறுமை” என்று பக்கத்தில் இருந்த ஒருத்தர் கிண்டல் செய்ய,

“நீங்க எல்லாம் இன்னும் இங்கேயே வா இருக்கீங்க….?” அசால்ட்டாக பதில் அளித்தான் அர்விந்த்.

“பொண்ணை தவிர அவருக்கு யாருமே கண்ணில் தெரியலையாம் பா…. எப்படி சொல்றார் பாருங்க….”

“பொண்ணு இல்லைங்க என் பொண்டாட்டி” அர்விந்த் அவர் பேச்சை திருத்த,

“நீங்க நடத்துங்க மாப்பிள்ளை…..”

“அதுக்கு தானே கல்யாணம்?” அவனும் விடாமல் பேச, பேசியவர் கை எடுத்து கும்பிட்டு விட்டார். அங்கே ஒரு சிரிப்பலை. அனைவரின் மனமும் அகமும் நிறைந்து இருந்தது.

அன்று மண்டபத்தில் இருந்து தியாகுவின் அபார்ட்மெண்டிற்கு தான் சென்றனர் மணமக்கள். சென்னையில் தியாகுவிற்கு இருக்கும் ஒரு அபார்ட்மெண்டில் தான் கல்யாணத்துக்கு என தங்கி இருந்தார்கள். மூன்று அறைகள் கொண்டது என்றாலும், சொந்தங்கள் சூழ்ந்து இருக்க, அர்விந்துக்கு இயல்பாகவே இருக்க முடியவில்லை. யாரும் சாந்தி முஹுர்த்தம் என்று பேச கூடாது என்று முன்பே அம்மாவிடம் சொல்லி விட்டான் அவன். அதனால் பெண் வீட்டினர் மணமக்களை நாளை அவர்கள் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்து விட்டு கிளம்பினர்.

அவர்கள் கிளம்பும் போது, மலர் கண் கலங்க,

“நீயும் வேணா அவங்க கூட கிளம்புறியா?” என்றான் அர்விந்த் மெதுவாக  குனிந்து அவள் காதில். சொல்லும் போது அவளை அவன் தோளோடு  அணைத்தபடி பேசினான்.

“தாலி கட்றதுக்கு முன்னாடியே உங்களால் என்னை அனுப்ப முடியலை, இப்போ போய் ட்ரை பண்றீங்களே?” அவன் விளையாட்டாக அவளை வம்பு செய்யவேஅப்படி பேசினான். ஆனால் அவன் பேசியதை உண்மை என புரிந்துக் கொண்டு சீரியசாக பதில் சொன்னாள் மலர். அவளை இப்படி அணைத்து கொண்டு இருக்கிறேன் அது கூட புரியவில்லை என் மக்கு பொண்டாட்டிக்கு என அவளை செல்லமாக திட்டிக்கொண்டு,

அவளை ஒரு மார்க்கமாக பார்த்து, “நீயெல்லாம் வேற லெவல்!” என்றபடி அனைவரும் கிளம்பியதில் அவளை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

அர்விந்த் ஹாலிலேயே அமர்ந்து போனை நோண்டிக் கொண்டு இருக்க, இருந்த மிக சொற்ப சொந்தகளும் படுக்க சென்றனர். அர்விந்த் சொல்லியதால் சாந்தி முஹுர்த்தம் என்று யாரும் பேசவில்லை. மலரிடம் நீ போய் குளிச்சிட்டு ரூமில ரெஸ்ட் எடு மா என்று அனுப்பி விட்டனர். அனைவரும் உறங்க சென்ற பின்னர் அர்விந்த், அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றான்.

குளித்து விட்டு, சாப்ட் சில்க் போல் ஒரு மென்மையான புடவை ஒன்று உடுத்தி, கட்டிலில் அமர்ந்து போன் பார்த்துக் கொண்டு இருந்தாள் மலர். அர்விந்த் வருவானா வருவானா என்று இருந்ததில் அவளின் கவனம் போனில் பதியவில்லை. கலவையான மனநிலையில் இருந்தாள். அர்விந்த் அவளுக்கு புதிது இல்லை என்றாலும், இன்று கணவனாக, அதுவும் முழு தனிமை…. ஆர்வம், ஆசை கொஞ்சம் அவனை குறித்து பயமும் இருந்தது அவளுக்கு. அவன் உள்ளே வந்ததும் படக்கென்று எழுந்து நின்றாள் மலர்.

“நான் உனக்கு எப்போ டீச்சர் ஆனேன்?” வழக்கம் போல் அவளை வாரினான் அவன்.

அவள் மனதிற்குள், ம்ம்… காதல் பாடம் எடுத்த அப்போ இருந்து…. என்று சொல்லிகொண்டாள். அதை அவள் முகத்தில் இருந்து தெரிந்து கொண்டவன்,

“முழுசா தெரியுமா?” என்றான் மிகுந்த நக்கலுடன்.

அடப்பாவி கண்டுபிடிச்சுட்டான் என்று நினைத்தவளுக்கு முகம் சிவந்து போனது வெட்கத்தில்.

அந்த முகத்தை ரசித்து கொண்டே, அவன் அணிந்திருந்த ஷர்ட்டை கழட்டினான் அர்விந்த். இதுவரை அவனை அப்படி கண்டிராதவள், அவனை பார்த்தும் பார்க்காதது போல் பார்க்க, பாட்டு ஒன்று பாடினான் அர்விந்த்.

சின்ன சின்னக்கோலம்
போட்டுப் பார்க்கலாமா
புள்ளி வைக்க வேணும்
தள்ளி நிக்கலாமா….

அவன் பாட பாட, அவள் தளிர் மேனியில் லேசாக பதட்டம். அதை உணர்ந்தவன், மெதுவாக கட்டிலில் அமர்ந்து, அவளை அழைத்தான்.

“வாங்க மேடம், இங்க வந்து உட்காருங்க, நேத்து யாரோ தைரியமா கேள்வி எல்லாம் கேட்டாங்க…. ஆனா இன்னைக்கு அவங்களே ஓடிருவாங்க போல்….” அவளை சீண்டினான்.

வந்து அமர்ந்தவள் அப்போதும் தலை நிமிர்ந்தாள் இல்லை. அவள் அணிந்திருந்த அந்த மெல்லிய புடவை அவளின் அழகை அவனுக்கு எடுத்துக் காட்ட, அதற்கு மேல் பொறுமை இல்லாமல் அவளை மெத்தையில் சாய்த்து அவளின் மேல் படர்ந்தான் அர்விந்த். ஜனனி கூறியதில் அவள் எந்த பின்னும் போடவில்லை புடவைக்கு. அவளை சாய்த்ததில் முந்தானை அவன் கையேடு வர, அவளின் இளமை அவனை முறுக்கியது. அவன் அவளின் இளமையை சோதிக்க, கண்களை கைகள் கொண்டு மூடினாள் மலர். அவள் கைகளை எடுத்து விட்டவன், என்னை பார் விழி என்றான். கண்களில் மயக்கத்துடன் அவனை நோக்கியவளிடம்,

“நான் யாருடி உனக்கு….?” என்றான். முதல் முறையாக அவளை உரிமையுடன் டி போட்டு அழைத்தான்.

“எல்லாமே நீங்க தான்” அவள் சொல்ல, சற்று வேகமாக அவள் இதழை பற்றினான். பற்றியவனுக்கு அவளின் இதழின் மீது இருந்த பற்று குறையவே இல்லை. அது குறையவும் குறையாது என்று தெரிந்து போயிற்று இருவருக்கும். மெதுவாக அவனிடம் இருந்து அவள் இதழை மீட்க அவள் முயற்சிக்க, அதை விடுத்தவன், கலைந்த அவள் கூந்தலை ஒதுக்கி விட்டபடி, அவளின் கண்ணை நோக்கி,

“என்னை இனிமே எப்படி கூப்பிட போறே?” என்றான். அன்று ஒரு முறை பேர் சொன்னதின் பின், அவனை வாங்க போங்க என்பது போல் தான் அழைத்தாள் அவள். அவளால் அவனை பேர் சொல்லி அழைக்கவே முடியவில்லை.

அவள் அமைதியாக இருக்க,

அர்விந்த் சொல்லு…. என்றபடி அவள் தலையில் இருந்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். அவள் சொல்லாமல் இருக்க இருக்க, முத்தத்தால் அவளை வேட்டையாட ஆரம்பித்தான். இடை இடையில் அர்விந்த் சொல்லு சொல்லு என்றதில், அவன் செய்த விஷமத்தில் அர்விந்த் என்று கூவியே விட்டாள் மலர்.

விழி சொல்லுடி , என் பேரை சொல்லுடி என்றவன் அவள் நாணம் கொண்டு அவளை மறைக்க நினைக்க, அவளின் முயற்சி அனைத்தையும் வீணடித்து, அவளின் பொக்கிஷத்தை எல்லாம் கண்டு, ரசித்து, உணர்ந்து அவளை மிச்சம் மீதி இன்றி களவாடி கொள்ளையடித்து தான் ஓய்ந்தான். அவன் ஓய்ந்த பின்னரும் அவளின் மெல்லிய அர்விந்த் என்ற முனகல் தொடர்ந்ததில் அவளை இறுக்க அணைத்துக் கொண்டான்.

அவன் அவள் மேல் காட்டிய ஆசையில், அவளை அவன் வசப்படுத்தியதில் இருந்த காதலில், வேட்கையில், வேகத்தில் களைத்து போனாலும், அவன் அவளை அணுகிய விதத்தில் மிகவும் நிறைவாக தான் உணர்ந்தாள் மலர். அவன் வெறுமனே ஆசையை மட்டும் காட்டி இருந்தால் இந்த நிறைவு அவளுக்கு தோன்றி இருக்காது.

மறுநாள் பிரம்மமுஹுர்த்தத்திற்கு முன்பே மிகவும் சந்தோஷமாக கண் விழித்தான் அர்விந்த். அவன் விழி அவனிடம் வந்து விட்டாளே…. இதை விட என்ன வேண்டும் அவனுக்கு. ஏன்? எப்படி என்றெல்லாம் அவனுக்கு தெரியாது ஆனால் மலர் அவனுக்கு ஆக்சிஜன் போல்! இருக்கும் போது தெரியாது இல்லை என்றால் மூச்சு முட்டி விடும் அவனுக்கு என்று புரிந்து கொண்டவன் அல்லவா! அவன் தன் கையணைப்பில் உறங்கும் மலரை கண்டு அவன் வாழ்வே  மிகவும் அழகானது போல் உணர்ந்தான். இந்த உணர்வு அவன் வாழ் நாளெல்லாம் வேண்டும் என்றும் விரும்பினான். அவளின் உடல் சூடு அவனுக்கு தரும் இதத்தை அவனால் வார்த்தையில் நிச்சயம் வெளிபடுத்த முடியாது. அவளின் மேல் ஆசை, காதல், மோகம், தாபம் என அனைத்து உணர்வும் பெருக, அவளை இறுக்கி அணைத்து அவள் கழுத்தில் புதைந்தான். அவள் தூக்கத்தில் குழந்தையாய் சிணுங்க, அவளுடன் போட்டி போட்டு கொண்டு, அவளை தூங்க விடாத குழந்தை ஆனான் இவன். அதற்கு பின் இருவருக்கும் தூக்கம் ஏது? இரவெல்லாம் அர்விந்த் என்றவளுக்கு விடிந்ததும் பேர் மறந்து போனது போல் ஆயிற்று. அவன் கெஞ்ச இவள் மிஞ்ச, அவன் மிரட்ட இவள் மறுக்க என்று கடைசி வரை அவன் பெயரை சொல்ல வில்லை அவள். அவளுடன் இருக்க இருக்க ஆசை குறையும் என்று பார்த்தால் பெருகியது. விடியும் வேளையாகி விட, அவனிடம் இருந்து பிய்த்து கொண்டு ஓடினாள் அவள். சத்தமாக சிரித்தான் அர்விந்த். அவளை தொடர்ந்த அந்த சிரிப்பு சத்தம் அவளின் நாளை அழகாக தொடக்கி வைத்தது.

புது மணமக்கள் சென்னையில் இருந்து கிளம்பி திருக்கோவிலூர் சென்றனர். அவர்களுடன் ஜனனியின் குடும்பம், அருணா, மற்றும் தியாகு. பாட்டி பெங்களூரிலேயே இருக்கிறார். திருமணத்தை வீடியோ காலில் பார்த்தார். அவருக்கு ஆச்சரியம் தான் பேரனின் விருப்பம். ஆனால் வயதான பின் உலகில் எதுவுமே பெரிய பிரச்சனையாக தோன்றாததால், சந்தோஷமா இருங்க என்று மட்டும் கூறி விட்டார்.

போகும் வழியில் காரில் மலர் அவனை பார்ப்பதும், ஏதோ சொல்ல வருவதும் பின் தயங்கியதுமாக வர, முதலில் அவளே சொல்லட்டும் என்று கண்டுகொள்ளாமல் இருந்தவன், பின் பொறுமை இழந்து,

“இப்போ சொல்லணும்னு நினைக்கிறதை சொல்ல போறியா? இல்லை எல்லார் முன்னாடியும் உன்னை இழுத்து தயங்குற அந்த வாய்க்கு முத்தம் கொடுக்கவா?” என்றான் கோபமாக.

“இது கோபத்தில் கொடுக்கிற தண்டனை மாதிரி இல்லையே….” மலர் சிரிக்க,

“விஷயத்தை சொல்லுடி என் வாய் சொல் வீராங்கனையே….”

“அது…. எங்க வீடு ரொம்ப சிம்பிளா தான் இருக்கும்…. உங்களுக்கு கஷ்டமா இருந்தா என்கிட்ட சொல்லிடுங்க, நாம அங்க இருந்து கிளம்பிடுவோம்….” என்றாள் மெதுவாக.

அவளின் அலைப்புறுதல் புரிய, அவளை கண்டு மிருதுவாக புன்னகைத்தவன்,

“உன்னை மாதிரி சிம்பிளா இருக்கும்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்….டோன்ட் வொர்ரி…. நாம கிளம்ப எல்லாம் வேண்டாம், நீ மட்டும் என்கூடவே இரு… அது போதும்!” என்றான் மென்மையிலும் மென்மையாக.

அவன் கைகளுடன் தன் கையை பிணைத்துக் கொண்டு அவன் தோளில் தானாக சாய்ந்து கொண்டாள் மலர். உலகமே அவன் காலடியில் போல் உணர்ந்தான் அர்விந்தன். அது அவன் முகத்தில் வெளிப்பட்டது. அவன் தலையை அவள் தலை மேல் அவனும் சாய்க்க, அதை கண்ட அவன் குடும்பத்தினர் அனைவருக்கும் மிகுந்த திருப்தி.

ஆரத்தி எடுத்து மணமக்களை வரவேற்று, மலர் வீட்டினர் மாப்பிள்ளை வீட்டினரை உபசரிக்க, அனைத்தையும் ஏற்று இயல்பாக இருந்தான் அர்விந்தன். அவன் வீட்டினரும் அப்படியே. கனிமொழி பழக மிகவும் தயங்க, மலரின் மாமா அத்தை பிள்ளைகள் அர்விந்தனிடம் சகஜமாக பேசினார்கள். அதில் கல்லூரி படிக்கும் ஒருவன்,

“அண்ணா, எங்க மலர் உங்க கிட்டே பிளாட் ஆகுற மாதிரி ஏதாவது அவளை பத்தி சொல்லுங்க” என்றான்.

“இனிமே தான் ஆகணுமா என்ன?” அர்விந்தன் கேட்க, அனைவரும் ஓ என்று கத்தினார்கள். மலர் வெட்கப்பட்டாள் அழகாக.

“சொல்லுங்க மாமா ப்ளீஸ்….” கனிமொழி மெதுவாக கேட்க,

“ஒருவழியா என்கிட்டே பேசிட்டியா? சரி உனக்காக சொல்றேன்” என்றவன், அருகில் இருந்த மலரிடம்,

“தேவதை எல்லாம் வெள்ளை டிரஸ் மட்டும் தான் போட்டுகிட்டு இருக்கும்னு சின்ன வயசில என்னை ஏமாத்திட்டாங்க மலர்” என்றான்.

என்னங்க சொல்றீங்க? மலருக்கு மட்டும் இல்லை, அங்கு இருந்த யாருக்குமே அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியவில்லை,

“இல்லை நீ டெய்லி கலர் கலரா தானே டிரஸ் போடுறே!” என்றதும் அனைவரும் ஹேய் செம சூப்பர் என்று கத்தினார்கள்.

அவளை தேவதை என்று சொல்லிவிட்டான் என்று சின்னவர்கள் அனைவரும் பெரியவர்களிடம் விஷயத்தை பரப்ப, இப்படி எல்லாம் தங்கள் பிள்ளைக்கு பேச தெரியுமா என்று வாயை பிளந்தனர் அரவிந்தனின் குடும்பம். அதில் மலரும் அடக்கம்! அசந்து விட்டாள் அவள். ஒரே சிரிப்பும், கேலியும் கிண்டலுமாக இருந்து விட்டு விடை பெற்று கொண்டனர் அர்விந்தனின் குடும்பம். மகளின் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்று மகிழ்ச்சியாக மலரை வழியனுப்பி வைத்தனர் மலரின் குடும்பத்தினர். நாளை சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல போகிறார்கள் அவர்கள். மலரின் குடும்பம் ஒரு வாரம் கழித்து அங்கே செல்கிறார்கள்.

பெங்களூர் சென்ற மறுநாளே திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்க என்று அழையா விருந்தாளியாக வந்திருந்தாள் நிவேதா!

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

1 thought on “23. நேசம் கூடிய நெஞ்சம்”

Leave a Reply to ArundathiPosalan Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!