நெஞ்சம் – 26
அன்று மாலை வீட்டிற்கு வந்தவனிடம் முகம் கொடுத்து பேசவே இல்லை மலர். அவனுக்கு வேண்டிய அனைத்தையும் மட்டும் செய்ய, அர்விந்த் வழக்கம் போல் அவளை கிண்டல் செய்தான்.
‘நமக்கு கல்யாணம் ஆய்டுச்சு விழி!”
அவனின் கிண்டலில் அவளுக்குள் இருந்த ஏமாற்றம், கோபம் எல்லாம் வெளிவர,
“ஆனாலும் நான் வேலைக்காரி தான்னு நீங்க சொல்லி இருக்கீங்க….” என்றாள்.
அவள் பேசிய விதத்தில் அவனுக்கு சட்டென்று கோபம் மூள,
“உளறாதே, நான் என்னைக்கும் உன்னை அப்படி சொன்னதே இல்லை. நீ நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி இங்க இருந்தப்போ கூட நான் உன்னை அப்படி பார்க்கலை. உனக்கே தெரியும்!” என்றான் மிக ஆத்திரத்துடன்.
“ஆமா என்னை வேலைக்காரியாவும் பார்க்கலை, இப்போ வீட்டுக்காரியாவும் பார்க்கலை….”
“அப்போ நான் எப்படி பார்க்கிறேன்னு நீயே சொல்லு” என்றான் தன் ஆத்திரத்தை எல்லாம் அடக்கி கொண்டு.
அவள் நினைப்பதை சொன்னால், நிச்சயம் இருவருக்கும் வாக்குவாதம் வரும், வீட்டில் பெரியவர்களை வைத்துக் கொண்டு எதற்கு இதெல்லாம் என்று நினைத்து,
“பொண்டாட்டியா நினைச்சு இருந்தா, நிவேதா உங்க ஆபீஸில் தான் இருக்காங்கனு என்கிட்ட ஷேர் பண்ணி இருப்பீங்க, இன்னைக்கு போன்லயும் அவங்க கூட லன்ச் போறீங்கனு சொல்லலை, ஆனா நீங்க எதிர்பாராத விதமா நானே பார்த்து தெரிஞ்சுகிட்டேன். நான் உங்க ஆபீசுக்கு வந்தது உங்களுக்கு பிடிக்கலைனு உங்க முகமே சொல்லுச்சு” என்றவள் அழுகை வர வேகமாக அவன் அறையை விட்டு வெளியேறினாள்.
அடுத்த நாள் அவன் பேச முயற்சித்த போதெல்லாம் அவனை அவள் உதானசீனப்படுத்துவது போல் நடந்துக் கொள்ள அர்விந்தும் கோபமாக அதற்கு பின் பேச முயற்சிக்கவில்லை.
அடுத்த நாள் மலருக்கு கடுமையான ஜுரம் அடித்தது. அன்று இரவே அவளுக்கு அம்மை கண்டது. அருணாவே மலரை கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டார். அர்விந்தும் அலுவலகத்திற்கு ஒர்க் ப்ரம் ஹோம் சொல்லிவிட்டு வீட்டில் இருந்து தன்னால் மலருக்கும் அருணாவிற்கும் என்னெல்லாம் உதவி செய்ய முடியுமோ அனைத்தையும் செய்தான். பத்து நாட்கள் அவளை வாட்டி வதைத்து பின் இறங்கியது. தலைக்கு தண்ணீர் ஊற்றி வீட்டிற்கு அழைத்த இரண்டு நாளில் சட்டென்று மலர் தனக்கு இந்த மாசம் பீரியட்ஸ் வரவில்லை என்று உணர்ந்தாள். நாட்களை கணக்கு செய்தால் அறுபது நாட்களை தொட்டது.
பரபரப்பானவள், அர்விந்த் அலுவலகம் சென்றிருக்க அருணாவிடம் கூறினாள்.
“உனக்கு உடம்பு சரியில்லாம போனதில் இதை சுத்தமா யோசிக்கவே இல்லை” என்றவர் “எனக்கு பார்த்த டாக்டர் கிட்டேயே காட்டுவோம், நல்லா பார்ப்பாங்க, நீ அர்விந்திற்கு போன் பண்ணி சொல்லி நேரம் வாங்க சொல்லுமா” என்றார்.
“நான் வீட்டுக்கு வந்த உடனே சொல்றேன் அத்தை.” மலரும் அர்விந்தும் இன்னும் அவர்கள் சண்டையை தீர்த்துக் கொள்ளவில்லையே. இடையில் அவளின் உடல்நலத்தில் அனைவரும் கவனம் வைக்க அது ஓரம் போயிற்று. அர்விந்த் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறான் என்று தெரியாவிட்டாலும் அவன் முகம் பார்த்து இந்த விஷயத்தை கூற வேண்டும் என்று இருந்தது மலருக்கு. அதே போல் அவன் அலுவலகத்தில் இருந்து வந்ததும், அவன் கண்களுக்குள் பார்த்து, அவள் விஷயத்தை கூற, அங்கே அவள் எதிர்பார்த்த உணர்வு இல்லை, மாறாக வேறு ஏதோ சிந்தனை இருந்தது. சட்டென்று மலருக்குள் ஏதோ ஒன்று முறிந்தது. அவளுக்கு அழுகை வரப் பார்க்க, அடக்கிக் கொண்டு,
‘அத்தை, உங்களை அவங்களுக்கு பார்த்த டாக்டர் கிட்டே அப்பாயன்மெண்ட் வாங்க சொன்னாங்க” என்றாள்.
ம்ம்…. என்றவன் மெதுவாக அவளை இழுத்து அணைத்துக் கொண்டு நெற்றியில் இதழ் பதித்தான். அதை எல்லாம் அவள் உணரவே இல்லை, அவள் எண்ணம் எல்லாம் அர்விந்த் மகிழ்ச்சியாக வில்லை என்றே இருந்தது. அவள் சிந்திப்பது சரிதான், அர்விந்திற்கு மலர் விஷயத்தை கூறியவுடன், நெஞ்சம் திக் என்று தான் ஆனது. இப்போது தானே இப்படி ஒரு பெரிய வைரல் இன்பெக்ஷனில் இருந்து வெளிவந்து இருக்கிறாள்…. கர்ப்பம் என்றால் குழந்தையை பாதிக்குமோ என்று யோசித்தான் அவன். அவன் மனைவி, பிள்ளையின் நல்லது கெட்டது அவனையும் தானே பாதிக்கும். அவன் அவர்களை பிரித்து பார்க்கவே இல்லையே. ஆனால் மலர் அவன் அவளை வேறாக பார்ப்பது போல் எண்ணிக் கொண்டாள்.
அன்று படுத்து, விளக்கை எல்லாம் அணைத்தபின்,
“உங்களுக்கு சந்தோஷம் இல்லையா?” மனபாரம் தாங்காமல் கேட்டு விட்டாள் மலர். அவளை பயமுறுத்த வேண்டாம் என்று எண்ணியவன்,
“டாக்டர் கன்பார்ம் பண்ணட்டும்” என்றான்.
“இருந்தாலும்….” அவள் ஆரம்பிக்க,
ஏதாவது பேச்சை வளர்த்தால் அவளிடம் உளறி விட போகிறான் என்று பயந்த அர்விந்த், “நான் தூங்குறேன்” என்றான்.
நான் தான் பைத்தியம், எல்லாத்துக்கும் தடுமாறுறேன், அவர் நல்லா தெளிவா தான் இருக்கார் என்று கசப்பாக நினைத்துக் கொண்டாள் மலர்.
அடுத்த ஒரு நாள் அமைதியாக கழிய, அதற்கு அடுத்த நாள் அப்பாயின்மெண்ட் கிடைத்தது. அன்று மாலை தான் நேரம் கொடுத்து இருந்தார்கள் என்பதால் காலையில் இருந்து கணவன் மனைவி இருவருமே ஒரு வித பதட்டத்தில் இருந்தனர். அவளுக்கு கர்ப்பம் கன்பார்ம் ஆகவேண்டும் என்று. அவனுக்கு எந்த குறையும் இருக்கக் கூடாது என்று.
இவர்களுக்கு கொடுத்த நேரத்தில் சரியாக டாக்டர் முன் அமர்ந்து இருந்தார்கள் அர்விந்தும் மலரும். கர்ப்பம் என்பதை உறுதி செய்த டாக்டர், நர்சை அழைத்து மலரை அருகில் இருந்த அறையில் படுக்க வைக்க சொன்னார். அவள் சென்றவுடன், அர்விந்திடம்,
“இப்போ தான் சிக்கன் பாக்ஸ் போட்டு ரிக்கவர் ஆகி இருக்காங்க. ரொம்ப எர்லி ஸ்டேஜ் கர்ப்பத்தில வந்ததில் கருவோட வளர்ச்சியை எப்படி பாதிக்கும்னு சொல்ல முடியாது. நாம இனி வர டைம்ல் ரொம்ப க்ளோஸா மானிட்டர் பண்ணுவோம்” என்று அர்விந்த் எதிர்பார்த்ததை போலவே பயமுறுத்தினார்.
“அவளும் குழந்தையும் நல்லா இருப்பாங்க தானே டாக்டர், அவ ரொம்ப வீக்கா இருக்கா! அபார்ஷன் மாதிரி பயம் இல்லைல….” மிகவும் தயங்கி தயங்கி கேட்டான் அர்விந்த். அவனிடம் பையை கொடுக்க வந்த மலரின் காதில் அபார்ஷன் என்ற ஆங்கில வார்த்தை விழ, அவன் கன்னடத்தில் பேசியதில் மற்ற வார்த்தையின் பொருள் புரியாதவள் நன்றாக தவறாக வேண்டாத அர்த்தம் எடுத்துக் கொண்டாள்.
“நீங்க பயப்பட வேண்டாம். இப்போதைக்கு நல்லா இருக்காங்க. நாம ரெகுலர் ஸ்கேன், செக் அப் எல்லாம் பார்க்கலாம். டோன்ட் ஒர்ரி” என்று அனுப்பி வைத்தார்.
டாக்டர் பேசியதிலேயே அவனின் எண்ணம் இருக்க, மலரின் கசங்கிய முகத்தை அவன் கவனிக்கவில்லை. வீட்டிற்கு வந்து பெரியவர்களிடம் விஷயத்தை பகிர்ந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர் இருவரும். அருணாவுக்கு கண்ணில் குளம் கட்டி விட்டது. தியாகுவும் மிகுந்த சந்தோஷம் அடைந்தார். அவன் ஐசியூவில் இருந்த நாட்களை நினைத்து பார்த்துக் கொண்டனர் இருவரும். மலரை இறுக்க அணைத்துக் கொண்டார் அருணா. ஜனனியும் தொலைபேசியில் வந்து மிகுந்த மகிழ்வுடன் வாழ்த்துக் கூறினாள்.
மலர் வீட்டினரிடமும் விஷயத்தை கூறி மகிழ்ந்தனர். அவர்கள் விரைவில் வருவதாக கூறினார்கள்.
அர்விந்த் டாக்டர் கூறிய நெகட்டிவ் விஷயத்தையோ, அவன் சஞ்சலதையோ யாரிடமும் பகிரவில்லை. அன்று இரவு வழக்கத்திற்கு மாறாக விரைவாக படுக்க சென்றவளிடம்,
“இந்த மாத்திரையை சாப்பிட்டு படு” என்று மாத்திரைகளை கொடுத்தான் அர்விந்த்.
“என் கர்ப்பத்தை கலைக்க இன்னைக்கே மாத்திரை வாங்கிட்டு வந்துட்டீங்களா? நீங்க மனுஷனே இல்லை!” என்றவள் அவன் கையில் இருந்த மாத்திரையை வாங்கி ஆவேசமாக தரையில் வீசினாள்.
அவன் பிள்ளையின் நலனை நினைத்துக் கவலைப் பட்டுக் கொண்டு இருந்தவனுக்கு அவளின் அந்த அபாண்டமான குற்றசாட்டு மிக மிக அதிர்ச்சியாக இருந்தது.
“உனக்கு என்ன பைத்தியமா? எதுக்கு இப்படி அநியாயம பேசுறே?”
“ஆமா இத்தனை நாள் உங்க மேல பைத்தியமா தான் இருந்தேன்…. இன்னைக்கு நீங்க அபார்ஷன்னு டாக்டர் கிட்டே பேசின அந்த நிமிஷம் என் பைத்தியம் தெளிஞ்சுடிச்சு….”
“ஓ!” என்றவன் சற்று நேரம் அமைதியாக இருக்க, அந்த மௌனம் கூட பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்தாள் மலர்.
“நான் உங்களுக்கு மேட்ச் இல்லை, என்கூட குழந்தை பெத்துக்க வேண்டாம்னு உங்க முத பொண்டாட்டி சொல்லிட்டு போனா, அது தான் உங்க மனசிலையும் இருந்திருக்கும் போல். உங்களுக்கு என்கிட்டே தேவையே ஒரே ஒரு விஷயம் தான்! அது எனக்கு இப்போ தான் புரியுது. என் மனசை பத்தி உங்களுக்கு எந்த கவலையும் இல்லை. நான் ஒரு லூசு, உங்க தேவைக்கு தான் எனக்கு தாலி கட்டுறீங்கனு தெரியாம, உங்க மனசில என் மேல அன்பு இருக்கு, ஆனா ஏனோ வெளிபடுத்த தயங்கிறீங்கனு முட்டாள் தனமா நினைச்சு உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்….”
இருந்த மனஉளைச்சலில் என்ன வார்த்தைகளை கொட்டுகிறோம், அவனை மோசமாக பேசுகிறோம் என்று எந்த உணர்வும் இல்லாமல் மனதில் இருப்பதை அள்ளி வெளியே கொட்டினாள் மலர்.
“அப்போ நீ என்கூட சந்தோஷமா வாழலை….அப்படித்தானே?” மலர் உணர்ச்சிவசப்பட்டாலும் அர்விந்த் நிதானத்தை இழக்காமல் இருந்தான். அவள் மனதில் இருப்பது அனைத்தும் வெளியே வரட்டும் என்று அவளிடம் பேச்சு கொடுத்தான். அவளின் வார்த்தைகளில் இருந்த வலி, ஏமாற்றம் அனைத்தும் அவள் மூலம் இப்போது அவனுக்கும் வந்த்து. மனம் வலித்தது. எப்படி எல்லாம் தன்னை குற்றம் சொல்கிறாள்? என்று வருந்தினான்.
“உங்களை சந்தோஷமா வைச்சுக்கணும்னு ஆசையா கல்யாணம் பண்ணிகிட்டேன், ஆனா சந்தோஷமா இருக்க மட்டும் தான் நீங்க என்னை கல்யாணம் பண்ணி இருக்கீங்கனு எனக்கு புரிஞ்ச பின்னாடி நான் எப்படி சந்தோஷமா இருக்கிறது….?”
“நான் உன்னை அப்படி மட்டும் தான் உணர வைச்சேனா விழி?” இந்த கேள்வியை கேட்கும் போது அர்விந்தின் கண்கள் கலங்கி, குரல் தழுதழுத்தது.
ஒரு மனிதனை குற்றம் சாட்டினால், அவன் பக்கம் நியாயம் இருக்கிறது, அவன் தவறு செய்யவில்லை என்ற திடம் இருக்கும் போது தான் அவனால் இவ்வளவு நிதானமாக இருக்க முடியும். அவனுக்கு அவன் செய்த தப்பு தெரியுமாயின் தன் தப்பை ஒத்துக்கொள்ளாமல் உரக்க பேசுவது, காரணங்களை அடுக்குவது, குற்றஞ்சாட்டியவரையே காரணம் காட்டுவது போன்ற செயல்களை செய்வார்கள்.
அர்விந்தனின் அதிகபட்ச நிதானத்தை அப்போது தான் உணர்ந்தாள் மலர். அவன் மலரை எந்த குறையும் கூறவில்லை, தன்னிலை விளக்கமும் அளிக்கவில்லை. அவள் அவனையே பார்க்க,
“சொல்லு விழி, உன்னை நான் வெறும் சந்தோஷம் தர்ற பொருளா மட்டும் தான் உணர வைச்சேனா? என் பொண்டாட்டிங்கிற உணர்வு உனக்கு வர மாதிரி உனக்கு உரிமை கொடுக்கலையா? உன்னை ஹர்ட் பண்ணேனா? உன்னை மரியாதை இல்லாம நடத்துனேனா?” என்றான்.
“நீங்க என்னை பத்தி என்ன நினைக்கிறீங்கனு எனக்கு தெரியாது….”
“என்னை பத்தி அப்பறம்…. நீ என்ன மனநிலையில் இந்த ஒரு மாசம் என்கூட வாழ்ந்தே? அதை மட்டும் சொல்லு.”
“உங்களால் தான் இவ்ளோ கஷ்டம் எனக்கு!”
“என்ன நான் அவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன் இப்போ? உன்னை எதுவும் ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கலையே…. சொல்ல போனா நான் தான் ஏமாந்து நிற்கிறேன் இப்போ…. அவசரமா காதல் சொன்னே, எங்க அப்பா அம்மா கிட்டே எல்லாத்தையும் சொன்னே…. உங்க வீட்டிலையும் சொன்னே…. நான் எல்லாத்துக்கும் அமைதியா தான் இருந்தேன்…. எனக்கும் சேர்த்து நீ முடிவு செஞ்சே…. இப்போவும் அவசரமா பேசி, அவசரமா என்னை பத்தி ஒரு முடிவுக்கு வந்துட்டே…. உனக்கு இருக்கிறது காதலே இல்லை” இப்போது கோவம் வர குரலை உயர்த்தினான் அர்விந்த்.
“ஆமா என் தப்பு தான், எல்லாமே என் தப்பு தான்!” முகத்தை மூடிக் கொண்டு அழுதாள் மலர்.
“என் தப்பும் தான்! உன்னோட காதலோட ஆழம் என்ன வெயிட் பண்ணி இருக்கணும்…. நான் தான் ஏமாந்து போயிட்டேன்…. என்னை காதலிக்கிறேன், எப்படி இருந்தாலும் பராவயில்லைனு நீ சொன்னதை நம்பி என் வாழ்க்கையே போச்சு…. என்னை எல்லாவிதத்திலும் கேவலமா பேசிட்டே…. இனிமே நான் விளக்கம் கொடுத்து தான் நீ என்கூட இருக்கணும்னா, எனக்கு அசிங்கமா இருக்கு” என்றவன்,
“நாளைக்கு காலையில குழந்தை விஷயத்தில் என் மேல எந்த தப்பும் இல்லைன்னு நான் உனக்கு ப்ரூவ் பண்றேன். அதுக்கு அப்பறம் உன் இஷ்டம். உன் வாழ்க்கையை நீ எப்படி வேணும்னாலும் முடிவு பண்ணிக்க…. அதுக்கும் நான் கட்டுப்படுறேன்” என்றான்.
அதிர்ந்து விழித்தாள் மலர். அவனை குற்றம் சொன்னாளே தவிர வேறு எதையும் அவள் சிந்திக்கவில்லையே? வழக்கம் போல் மனம் சொன்னதை செய்தாள்.
தன்னை பிரிந்து விடுவானா?
Superrrr