விஷம் – 46
குழந்தை தூங்கியதும் அங்கிருந்த தொட்டிலில் அரணைப் படுக்க வைத்து விட்டு வெளியே வந்தவளை புன்னகையுடன் எதிர்கொண்டார் ரூபாவதி.
சற்று தள்ளி இருந்த சோபாவில் மடிக்கணினியை வைத்திருந்தவாறு அமர்ந்திருந்தார் யாழவனின் தந்தை.
அவர்கள் இருவரையும் பார்த்தவள் “உங்க ரெண்டு பேர்கிட்டயும் நான் கொஞ்சம் பேசணும்.. இப்போ பேச முடியுமா..?” எனக் கேட்க,
மடிக்கணினியை மூடிவிட்டு நிமிர்ந்து பார்த்த யாழவனின் தந்தையோ “இங்க வந்து உட்காருமா…” என அர்ச்சனாவை அழைத்தார்.
ரூபாவதியோ தன் கணவனின் அருகே அமர அவர்களுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தவளுக்கு விழிகளில் இருந்து ஒரு துளிக் கண்ணீர் சரேலென வழிந்தது.
“யாழனுக்கு ஆக்சிடென்ட் ஆனப்போ எனக்கு டெலிவரி பெயின் வந்துருச்சு.. என்னால அவர் கூட இருக்க முடியல.. டெலிவரி முடிச்சு நான் எழுந்து பார்த்து அவரைத் தேடினப்போ அவர் இந்த உலகத்திலேயே இல்ல.. எங்களையெல்லாம் விட்டுட்டு போய்ட்டாருன்னு சொன்னாங்க.. இது உண்மைதானே..? இல்லனா என்கிட்ட இருந்து எதையாவது மறைக்கிறீங்களா..?” என உடைந்து போன குரலில் அர்ச்சனா கேட்க,
ரூபாவதிக்கோ தேகம் வியர்த்துப் போனது.
படபடத்துப் போனவராய் என்ன பதில் கூறுவதென்று தெரியாது விழிக்கத் தொடங்கி விட்டார் அவர்.
அவரைப் போல நிதானத்தை இழக்காமல் அர்ச்சனாவை எதிர்கொண்டார் சாள்ஸ்.
“என்ன கேள்விம்மா இது..? எல்லாம் முடிஞ்சு ஆறு மாசம் ஆயிடுச்சு.. இப்போ வந்து இப்படி கேட்கிற..?”
“இல்ல அங்கிள்.. என் யாழனோட உடம்ப என்ன பண்ணீங்க..? எரிச்சீங்களா புதைச்சீங்களா..?” என கேட்டு முடித்தவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் நில்லாமல் வழிந்தது.
உயிருடன் இருக்கும் மகனைப் பற்றி அர்ச்சனா இப்படி எல்லாம் பேசுவதை தாங்க இயலாது ரூபாவதிக்கும் கண்ணீர் வழிந்தது.
மெல்ல ரூபாவதியின் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்தார் யாழவனின் தந்தை.
“இதோ பாருமா.. முடிஞ்சு போன விஷயத்தை பத்தி பேசினா வலி மட்டும்தான் மிஞ்சும்.. நாங்க எங்க பையனை இழந்த வேதனைல இருந்து இன்னும் மீண்டு வரல… இப்போ வந்து இப்படிலாம் கேட்டு இன்னும் எங்கள வேதனைப்படுத்தாதே..” என அவர் அழுத்தமாகக் கூற,
பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாது “சா… சாரி அங்கிள்… சாரி அத்தை…” என்றவள் வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.
மறந்திருந்தவர்களிடம் மீண்டும் அவர்கள் இழந்த மகனைப் பற்றி பேசி வலியை உண்டாக்கி விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சி அவளை வாட்டத் தொடங்கியது.
அழுது கொண்டே வெளியே வந்தவள் அன்று விபத்து நடந்த போது யாழவனுடன் புதிதாக ஒருவன் இருந்தானே அது யாராக இருக்கக்கூடும் என்ற கேள்வி எழ அப்படியே நின்றாள்.
முதன் முதலில் அரணை அவள் பார்த்தபோது அவர்தானே அவனைத் தூக்கி வைத்திருந்தார்.. விபத்து நடந்தபோது கூட யாழவனிடம் விரைந்து சென்றது அவர்தானே..
அவரைச் சந்தித்தால் இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்குமோ..?
அவளுடைய மூளையோ இது தேவையில்லாத ஆராய்ச்சி என்று சொல்லியது.
ஆனால் அவளுடைய மனம் னதான் சமாதானம் அடையவே இல்லை.
சந்தேகம் வந்தால் அதை தீர்த்து விடுவதே சிறந்தது என எண்ணியவள் மீண்டும் அந்த வீட்டிற்குள் சென்றாள்.
அங்கே ரூபாவதி தன் கணவரிடம் எதையோ கூறி வேதனையுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டவள் மெல்ல அவர்களை நெருங்கினாள்.
அவளைக் கண்டதும் அவருடைய பேச்சு நின்று போனது.
“அத்தை தப்பா எடுத்துக்காதீங்க.. யாழனுக்கு ஆக்சிடென்ட் நடந்த அன்னைக்கு அவர் கூட ஒருத்தர் இருந்தாரே அவர் யாரு..?”
“அந்தப் பையனா அது நம்ம யாழவனோட பிரண்டு அரவிந்தன்மா..”
“ஓஹ்..? எனக்கு அவரோட ஃபோன் நம்பர் கொடுப்பீங்களா..?”
சரியென தலையசைத்தவர் அவருடைய அலைபேசி எடுக்க முயன்ற கணம்,
“சாரிமா அந்தப் பையனோட கான்டக்ட் நம்பர் எல்லாம் எங்க கிட்ட இல்ல..” என்றார் யாழ்வனின் தந்தை.
சட்டென தன்னுடைய அத்தையின் முகத்தைப் பார்த்தாள் அவள்.
அவரோ தடுமாறியவராக “ஆ.. ஆமாம்மா… என்கிட்டயும் இல்லமா..” எனக் கூற இவளுக்கோ புருவங்கள் சுருங்கின.
முதலில் அவள் கேட்டபோது இருப்பது போல அல்லவா தலையை அசைத்து அலைபேசியை எடுக்க முயன்றார்..
இப்போது திடீரென எதற்காக மாற்றிப் பேசுகின்றார் எனப் புரியாது குழம்பிப் போனவளுக்கு இவர்கள் எதையோ தன்னிடம் இருந்து மறைக்கிறார்கள் என்பது உறுதியானது.
அடுத்த நொடியே எதுவும் கூறாது அங்கிருந்து வெளியே கிளம்பியவள் தன்னை ட்ராப் செய்வதாக கூறிய யாழவனின் தந்தையிடம் மறுத்துவிட்டு டாக்ஸி ஒன்றை அழைத்தாள்.
அடுத்து நேராக அவள் வேலை செய்யும் மருத்துவமனைக்குச் சென்றாள்.
விபத்து நடந்த அன்று இங்கேதானே யாழவனுக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது. இங்கே ஏதாவது தகவல்கள் கிடைக்கலாம் என எண்ணியவள் மருத்துவமனையின் உள்ளே நுழைந்தாள்.
ஏனோ அவளுக்கு பதற்றமாக இருந்தது.
மிகப்பெரிய நோயுடன் மருத்துவமனைக்குள் நுழைந்ததைப் போலத்தான் உணர்ந்தாள் அவள்.
அரவிந்தனின் அலைபேசி இலக்கத்தை எதற்காக அவர்கள் மறைக்க வேண்டும்..?
அப்படி என்றால் அவர்களிடம் ஏதோ ஒரு களவு இருக்கின்றது என்று தானே அர்த்தம்.
ஏனோ உடல் பதற்றத்தை குத்தகைக்கு எடுத்துக்கொண்டது.
ரிசப்ஷன் கவுண்டரை நோக்கிச் சென்றவள் அங்கே இருந்த பெண்ணைப் பார்த்து “ஹாய் வீணா…” என்றாள்.
“ஹாய் அர்ச்சனா.. இன்னைக்கும் நைட் டியூட்டிதான் வருவியா..?” என புன்னகையுடன் கேட்டாள் வீணா.
“இல்ல வீணா.. ஒன் வீக் லீவ் போட்டுருக்கேன்.. அதுக்கப்புறம்தான் மறுபடியும் வேலைக்கு வருவேன்..” என்றவள் “எனக்கு கொஞ்சம் டீடைல்ஸ் கிடைக்குமா..?” எனக் கேட்டாள்.
“சொல்லு அர்ச்சனா.. உனக்கு இல்லாத டீட்டைல்ஸா..? எதைப் பத்தி உனக்கு டீடெயில்ஸ் வேணும்..?”
“ஆறு மாசத்துக்கு முன்னாடி யாழவனுக்கு ஹாஸ்பிடல் முன்னாடி ஆக்சிடென்ட் ஆச்சுல்ல..?”
“ஆமா உனக்கு கூட அப்போதானே டெலிவரி பெயின் வந்துச்சு..”
“ஆமா… அன்னைக்கு யாழனுக்கு ட்ரீட்மெண்ட் பார்த்த டாக்டர் யாருன்னு தெரியுமா..? எனக்கு அந்த டீடைல்ஸ் கொஞ்சம் சொல்லு ப்ளீஸ்..”
“யாழவன் சாருக்கு இங்க டிரீட்மென்ட் பண்ணவே இல்லையே..”
“வாட்..? நீ என்ன சொல்ற..? எனக்கு புரியல..” என அதிர்ந்து போய் கேட்டாள் அர்ச்சனா.
“சாரை உள்ள தூக்கிட்டு வந்தாங்க.. பட் சிட்டுவேஷன் ரொம்ப சீரியஸா இருக்குனு அடுத்த நிமிஷமே வேறு எங்கேயோ அவரை கொண்டு போய்ட்டாங்க.. இங்க அவருக்கு எந்த ட்ரீட்மெண்ட்டும் நடக்கவே இல்லை.. ரெகார்ட் கூட கிடையாது..” என்றாள் வீணா.
தூக்கி வாரிப் போட்டது அர்ச்சனாவுக்கு.
இங்கே வைத்தியம் பார்த்து இறந்துவிட்டான் என்றல்லவா சொன்னார்கள்..?
அதுவும் இறந்த உடலை எடுத்துக்கொண்டு யாழவனின் பெற்றோர்கள் சென்று விட்டதாக அறிந்து வைத்திருந்தவளுக்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது.
“வீணா நிஜமாதான் சொல்றியா..? கொஞ்சம் செக் பண்ணி சொல்லு ப்ளீஸ்..” எனக் கலங்கிய குரலில் அர்ச்சனா கேட்க,
நிலைமை சரியில்லை என்பதை உணர்ந்து கொண்ட வீணாவோ சரி என்பது போல தலையசைத்துவிட்டு கணினியில் விபத்து நடந்த அன்று ஏதேனும் பதிவு இருக்கின்றதா எனத் தேடத் தொடங்கினாள்.
ஆனால் யாழவனைப் பற்றிய பதிவுகள் எதுவுமே அங்கே இல்லாது போக,
“நான்தான் சொன்னேன்ல இதோ பாரு சார் பத்தி இங்கே எதுவுமே இல்ல… அவருக்கு இங்க ட்ரீட்மென்ட் பண்ணவே இல்ல..” என்றதும் மார்பில் கரத்தைப் பதித்தவாறு அப்படியே அதிர்ந்து நின்று விட்டாள் அவள்.
“ஹேய் ஆர் யூ ஓகே..?” எனப் பதறிய வீணாவோ எழுந்து அவள் அருகே வந்து அவளுடைய கரத்தைப் பற்ற,
“எ… எஸ்… எஸ் நான் ஓகேதான்..” எனத் தடுமாறிய குரலில் கூறியவள் “தே… தேங்க்ஸ் வீணா..” என்றுவிட்டு வேகமாக அந்த மருத்துவமனையை விட்டு வெளியே வந்தாள்.
இதயம் வேகமாக துடித்தது.
என்ன நடக்கின்றது என்று அவளுக்குப் புரியவில்லை.
யாழவனை எங்கே கொண்டு சென்று வைத்தியம் பார்த்தார்கள்..?
விஷ்வா சொல்வது உண்மையாக இருக்கக்கூடுமோ..?
ஒருவேளை என் யாழன் உயிருடன் இருந்தால்..?
அந்த நினைப்பே அவளுக்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்தது.
எப்படியாவது யாழவன் பற்றிய உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர்தான் வீட்டுக்கு திரும்ப வேண்டும் என எண்ணியவள் சட்டென திகைத்தாள்.
அவள் வீட்டை விட்டு வெளியே வந்து கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.
இதற்கு மேலும் அவளால் வெளியே இருக்க முடியாதே… அங்கே யாழினி எழுந்து அவளைத் தேடி அழக்கூடுமே என எண்ணியவள் கலங்கிய விழிகளை துடைத்துக் கொண்டு ஆட்டோ ஒன்றைப் பிடித்தாள்.
தன்னுடைய வீட்டு முகவரியைக் கூறி அங்கே செல்லும்படி பணித்துவிட்டு விழிகளை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவளுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புரியவே இல்லை.
அந்தக் கோரமான விபத்துநாள்…
யாழவனுடன் மூச்சு திணறி கண்ணீரோடு கதறிய ஒரே ஒருவன் அவனுடைய நண்பன் அரவிந்தன்.
அந்த நொடி குழந்தையை தாங்கியிருந்தவனும் என் யாழனின் கடைசி உணர்வுகளையும் பார்த்தவனும் அவனே.
அந்த ஒரு மனிதனை மீண்டும் கண்டுபிடித்தாலே யாழவன் பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை தொலைதூர வெளிச்சமாய் அர்ச்சனாவின் நெஞ்சில் நுழைந்தது.
எப்படியும் யாழவனின் பெற்றோர்கள் அரவிந்தனை பற்றிய தகவல்களை அவளுக்கு தெரிவிக்க மாட்டார்கள்.
அவனை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும்.
எப்படிக் கண்டுபிடிப்பது என சிந்தித்துக்கொண்டே வந்தவள் வீடு வந்து சேர்ந்ததும் ஆட்டோவிற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு சோர்வோடு உள்ளே நுழைந்தாள்.
“அர்ச்சனா நில்லு… வீட்ல உனக்கு ஒரு குழந்தை இருக்குனு கொஞ்சமாவது ஞாபகம் இருக்கா..? காலைல போய்ட்டு இப்பதான் வர..” என அவளுடைய அன்னை கோபமாகத் திட்டியது அவளுடைய கவனத்தில் பதியவே இல்லை.
“அம்மா என்னை ராகிங் பண்ணான்னு சொன்னேன்ல.. இதோ பாருங்க என்னோட பிரண்ட் லிஸ்ட்லையே இருக்கா.. இந்த பொண்ணுதான்மா ரொம்ப ஓவரா பேசினா..” என கீர்த்தனா தன்னுடைய மருத்துவக் கல்லூரியில் நடந்ததைப் பற்றி தன் தாயிடம் கூறிக் கொண்டிருக்க,
தளர்வான நடையுடன் தன்னுடைய அறைக்குள் நுழைய முயன்ற அர்ச்சனாவின் நடையோ நின்றது.
கீர்த்தனா கூறிய வார்த்தைகளில் பிரண்ட் லிஸ்ட் என்ற வார்த்தையை கேட்டவளுக்கு சட்டென மூளையில் பொறி தட்டியது.
அரவிந்தன் யாழவனின் நண்பனாக இருந்தால் நிச்சயம் அவனுடைய முகப்புத்தகத்திலோ அல்லது இன்ஸ்டாகிராமிலோ இருக்கக்கூடும் என எண்ணியவள் தன்னுடைய ஹேண்ட் பேக்கை அப்படியே போட்டுவிட்டு வேகமாக படுக்கையில் வந்து அமர்ந்தவள் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் கண்டு நிம்மதி கொண்டவளாய் தன்னுடைய அலைபேசியை திறந்து முகப்புத்தகத்திற்குள் நுழைந்தாள்.
அங்கே ப்ளு டிக் விழுந்த யாழவனின் ஐடியை திறந்து நண்பர்களின் பட்டியலைப் பார்த்தவளுக்கு மூச்சடைத்துப் போனது.
கிட்டத்தட்ட 15.5 லட்சம் ஃபாலோவர்ஸை வைத்திருந்தான் அவன்.
அவனுடைய ஊழியர்கள், லண்டன் நண்பர்கள் அவனுடைய பிஸ்னஸ் பார்ட்னர்கள் என நிறைந்து போயிருந்த அந்தப் பட்டியலை பார்த்தவளுக்கு இந்தக் கடலில் எப்படி அரவிந்தனைக் கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை.
அரவிந்தன் என அவனுடைய பெயரை டைப் செய்து தேடிப் பார்த்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரவிந்தன்கள் வந்து குவிந்தும் கூட அவள் தேடிய அரவிந்தன் மட்டும் அவளுக்கு கிடைக்கவில்லை.
பின்பு யாழவன் பதிவேற்றியிருந்த புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்க்கத் தொடங்கினாள்.
மணித்துளிகள் விரைவாக கரைந்து கொண்டே சென்றன.
சாப்பிட அழைத்த அன்னைக்கு மறுப்பு தெரிவித்துவிட்டு அழுத யாழினியைத் தூக்கி பால் கொடுத்துவிட்டு மீண்டும் தன்னுடைய தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தவளுக்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்தின் பின்பே ஏதோ ஒரு திருமண விழாவில் யாழவனின் அருகே நின்றிருந்த அரவிந்தனின் முகம் விழிகளுக்குத் தென்பட்டது.
அன்று அவள் பார்த்த அதே முகம்.
சட்டென டேக் செய்தவர்களை வைத்து அரவிந்தனின் ஐடியை கண்டுபிடித்தவளுக்கு உள்ளம் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது.
கண்டு பிடித்து விட்டேன்..!
அர்வி ஷாம் என இருந்தது அவனுடைய ஐடியின் பெயர்.
அது மட்டுமா அவனுடைய முகவரி தொடக்கம் அலைபேசி எண் வரை அனைத்தும் இருக்க இது போதுமே என எண்ணிக் கொண்டவள் கரங்கள் நடுங்க அரவிந்தனின் அலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள்.
Super super super super super