உயிர் 08
முப்பத்தாறு மணி நேர விமான பயணத்திற்கு பிறகு சென்னை வந்திறங்கினார்கள் ஆதித்யனும் நேஹாவும்.
பின்னர் அங்கிருந்து சொகுசு காரில் தேனிக்கு புறப்பட்டு சென்றனர். கிட்டதட்ட மேலும் ஏழு மணி நேர பயணத்திற்கு பிறகு தேனியை அடையும் போது இரவாகி இருந்தது.. வீட்டின் திண்ணையிலேயே மயில்வாகனமும் வடிவாம்பாளும் நின்றிருந்தனர்.
பல வருடங்களுக்கு பிறகு மகன் வருவதை கேள்விப்பட்ட நாளிலிருந்தே வடிவுக்கு கால் தரையில் படவில்லை. வீட்டையே தலைகீழாக மாற்றிக் கொண்டிருந்தார்.
ஒரே மகன் என்பதினால் அவன் மீது கண்மூடித்தனமான பாசத்தை கொட்டுவார். ஏன்…? எதற்கு…? நல்லதா..? கெட்டதா…? என்பதெல்லாம் மகனது பாசத்திற்கு முன்பு கானல் நீராய் தான் தெரியும்.
உயர் ரக கார் அந்த பிரம்மாண்டமான வீட்டின் முன்பு வழுக்கிக்கொண்டு நின்றது.
அதைக்கண்ட வடிவாம்பாள் மகிழ்ச்சியில் தலை கால் புரியாமல் “ “ ஏனுங்க…. சீக்கிரம் வாங்க இங்க….புள்ள வந்துட்டான். எங்குட்டு போனீக…” என அங்கலாய்த்து கொண்டே ஆரத்தித் தட்டில் சூடத்தை ஏற்றிவிட்டு நிமிர்ந்தார்.
முதலில் இறங்கியது ஆதித்யன் தான். ஆறடி உயரத்தில் தனது கேசத்தை கோதியவாறே ஆண்மையின் இலக்கணமாக நிற்கும் மகனது தோற்றத்தை கண்டு வடிவாம்பாளுக்கு பெருமை பிடிபடவில்லை.
அவரது மனதில் சீக்கிரம்” என் புள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும் ராசா கணக்கா இருக்கான் . அவனுக்கு ஏத்த ராணியை தேடனும் ” என நினைத்துக் கொண்டு இருக்கும்போதே , ஜீன்ஸ் பேண்ட் மற்றும் க்ராப் டாப் சகிதமாய் இறங்கினாள் நேஹா.
ஸ்லீவ்லெஸ் க்ராப் டாப் அவளது இடையை சிறதளவே மூடியிருந்தது. வெண்ணிற மெல்லிய இடை பளிச்சென்று தெரிந்தது.
நேஹாவைக் கண்ட வடிவாம்பாளுக்கு மட்டுமின்றி மயில்வாகனத்திற்கும் நெஞ்சுவலி வருவது போலிருந்தது.
ஆரத்தியை தனது மகனுக்கு மட்டும் காட்டிவிட்டு , “ வா…ராசா..எப்படியிருக்க.? இப்பதான் ஊர் பக்கம் வரனும்ன்னு தெரிஞ்சுச்சா…? எம்புட்டு வருஷமாச்சு…ம்ம்… வா…உள்ளாற வாப்பா...” என்றவர் மகன் அசையாமல் நிற்பதை கண்டு ,” என்னாச்சு. ராசா…? ஏன்அப்படியே நிக்குற…? “ என்றார் புரியாதவாறே.
அவனோ இன்னும் அழுத்தமாக நின்றிருந்தான்.
அவனது பார்வை நேஹாவைத் தொட்டு மீள்வதை கண்டவருக்கு புரிந்தது தான் இன்னும் நேஹாவை வரவேற்காமல் நிற்பதை தான் மகன் சுட்டிக் காட்டுகிறான் என்று.
“ம்ம்..கூம்…” என்றவாறே நேஹாவைப் பார்த்து ,” ஏம்மா அங்கேயே நிக்குற …? உள்ளாற வாம்மா…” என்றார் வேண்டாவெறுப்பாக.
“ எஸ்.. வர்றேன் ஆன்ட்டி…நோ பாஃர்மாலிட்டிஸ் . இது நம்ம வீடு மாதிரி தான..! கால் மரத்து போச்சு அதான் கார் பக்கத்துலயே நின்னுட்டேன். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க…” என வளவளவென்று பேசியபடி “ ஆதி…எவ்வளவு நேரம் இப்படியே நிப்ப…? கெட் இன் சைட்…” என அவனது கரங்களை பிடித்து இழுத்துக் கொண்டு வடிவினை முந்திக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.
வடிவாம்பாளும் மயில்வாகனமும் பேயறைந்தார் போல் நின்றிருந்தார்கள்.
முதலில் சுதாரித்த மயில்வாகனம், “வடிவு.. எதையும் போட்டுக் குழப்பிக்காத…முதல்ல உள்ள வந்து அவங்களுக்கு ஏதுனாலும் சாப்பிடக் குடு. நான் மாடி ரூமை அந்த பொண்ணுக்கு சரி பண்ணுறேன்.. சாப்டுட்டு தூங்கட்டும்” என்றார்.
உடனே ஆங்காரமாக திரும்பிய வடிவு , “ என்னது ரூம்ப ரெடி பண்ணுறீகளா..? உம்ம மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீக..? இந்த பய ஏதோ ஒரு பொண்ண கூட்டிட்டு வந்துருக்கான். என்ன ..? ஏதுன்னு..? கேக்காம ரொம்பத்தேன் அழிச்சாட்டியம் பண்ணுறீக..? “ என படபடத்தார்.
நிதானமாக திரும்பிய மயில்வாகனம், “ஏன் உன் புள்ளை இம்புட்டு நேரமா குத்துக்கல்லு மாதிரி இங்கதான் நின்னுட்டு இருந்தான். அந்த கேள்வியை நீயே அவன் கிட்ட நேராகவே கேட்டுருக்கலாம்ல…? என் கிட்ட ஏன் பாயுறவ..?” என நக்கலாக கேட்டார்.
அவரது குரலில் இருந்த நக்கலை புரிந்து கொண்டாலும் அதைக் கண்டுகொள்ளாமல் , “ என்ன…ரொம்பவே பேசுறீக..? பையன் வந்துட்டான்னு ரொம்ப ஆடாதீக..அவன் என் புள்ளை. அவன் ஊருக்கு போய்ட்டா.. நான் தான் சோறாக்கிப் போடனும் உமக்கு. அதை நினைப்பில வைய்யும். சரி..சரி..உள்ள வாங்க புள்ளைக்கு பசிக்கும். சூட்டோட சாப்டுட்டு படுக்கட்டும். காலையில என்ன ஏதுன்னு கேட்டுக்கிடலாம்.” என்றவாறே உள்ளே சென்றார்.
இலகுவான ஷார்ட்ஸ் மற்றும் ஆர்ம் கட் பனியனை அணிந்துகொண்டு உணவினை கொஞ்சமாக எடுத்துக் கொண்டான்.
“ ஏன் பா…இப்படி கொஞ்சமா கொறிக்கிற…? நல்லா சாப்பிடு…இளைச்சு போயிட்ட..” என வடிவு கூற சட்டென்று புரையேறியது நேஹாவிற்கு கூடவே சிரிப்பும் அடக்கமுடியாமல் வந்துவிட வாய்விட்டு சிரித்து விட்டாள்.
பின்னே…! ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவான உடற்கட்டுடன் இருப்பவனைப் பார்த்து இளைத்து விட்டாய் என்று கூறினால் சிரிப்பு வரத்தானே செய்யும்.
வடிவுக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை, “ இந்தா பொண்ணு…..நீ என்ன நினைக்கின்றது எனக்கு நல்லாவே புரியுது. ஆறடி உசரத்துதல அம்சமா இருந்தாலும் தாய்க்கு புள்ளை எப்பவும் குழந்தை போல தான். என் கண்ணுக்கு அவன் இளைச்சிதான் போயிருக்கானுக்கும்…ம்ம்க்கும்..” என நொடித்துக் கொண்டார்.
தனக்குத் தான் கொடுத்து வைக்கவில்லை. தனது நண்பனுக்கு அத்தகைய வரம் கிடைத்திருப்பது அவளை நெகிழ்ந்து போகத் தான் செய்தது. மகனுக்காக பார்த்துப் பார்த்து அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் அவளை பிரமிக்க வைத்தது . இருப்பினும் அவர் கூறியது சற்று அதிகப்படி என்றே தோன்றியது .
இதற்கு மேல் பேசினால் தேவையற்ற விவாதம் வருமென்பதால் பணிவாகவே , “சாரி..ஆன்ட்டி..! மன்னிசசுக்கோங்க. பாருங்களேன் ஆதி என்னை உங்ககிட்ட இன்ட்ரோ பண்ணவேயில்லை. அதனால நானே பண்ணிக்கிறேன். என் பேரு நேஹா. பூர்வீகம் தமிழ்நாடு தான். அம்மா அப்பா ரெண்டு வருஷம் முன்னாடி இறந்துட்டாங்க. ஆதி தான் எனக்கு ரொம்ப உதவி செஞ்சான் . ஆதி என்னிக்குமே என்னோட நல்ல ஃபிரண்ட் மட்டுந்தான். ஊர்ல இருந்து வெள்ளைக்காரியை எல்லாம் கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணப்போறேன்னுலாம் சொல்ல மாட்டான். அதனால் நீங்க கவலைப்படாம இருங்க. எங்க அப்பா அம்மாவோட சொந்த பந்தங்களோட தொடர்பில்லாம இருக்குது. எனக்கு இந்தியாக்கு வரணும்னு ரொம்ப நாள் ஆசை . அதான் ஆதியோட இங்க வந்துட்டேன். உங்களுக்கு ஒண்ணும் சிரமம் இல்லையே…?” என தங்கள் இருவருக்கும் இடையே இருப்பது நட்பு மட்டுமே என்பதை தெளிவாக கூறினாள் நேஹா.
வடிவாம்பாளுக்கு சிறிதே சமாதானம் ஆகியிருந்தது என்றாலும் கூட முழுதாக இல்லை.
இருப்பினும் சிரித்தபடி, “அய்யோ…! அதெல்லாம் ஒன்னுமில்லை கண்ணு. இது உன் வீடு மாதிரி…எதாயிருந்தாலும் என் கிட்ட தயங்காம கேளு மா. சரி சரி… நேரமாச்சு மாடில உனக்கு தனி ரூம் இருக்கு அங்கன தங்கிக்க. ஆதி இங்கன கீழ தங்கிக்கிட்டும். எல்லாம் வசதியாதான் மா இருக்கும். தண்ணி குடிக்க கூட நீ கீழ இறங்கி வர வேணாமாக்கும். எல்லாம் இப்பதேன் புதுசா வாங்கிப் போட்டுருக்கேன். நீ போம்மா…தூங்கி மெதுவா எழுந்திரு. “ என அவளை விரட்டாத குறையாக மாடியில் இருக்கும் அறைக்கு அனுப்பி வைத்தார் வடிவு.
ஆதிக்கோ தனது தாயினது செயலில் தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.
நேஹாவிற்கோ அவரது செயல் சிரிப்பினை வரவழைத்தது. அவனைப் பார்த்து கண்ணடித்து விட்டு மாடிக்குச் சென்றாள்.
அதை கவனித்த வடிவிற்கோ பகீரென்றது.
“ கடவுளே..! எம்புள்ளைக்கு சீக்கிரம் கல்யாணம் கட்டி வைக்கனும்.” என்று நினைத்துக்கொண்டு உறங்கச் சென்றார்.
நாட்கள் சென்றது. ஒரு வாரமாக நேஹாவிற்கு ஊரினை சுற்றி காட்டினான். பச்சை பசேல் என இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருந்தது அரண்மனை போன்ற அவர்களின் வீடு.
வெண் மேகங்கள் மலை முகடுகளில் தவழ்ந்து பூலோக சொர்க்கம் என்பது இதுவல்லவோ என்று எண்ண வைத்தது. சில்லென்று காற்று அலையலையென இருக்கும் ஆதியின் கேசத்தை கலைத்துச் சென்றது. முகத்தில் மோதிய இதமான தென்றலை கண்மூடி ரசித்து நின்றிருந்தாள் நேஹா.
அதைக் கண்ட ஆதியின் இதழில் மெல்லிய கீற்றாக புன்னகை .
“ கமான் நேஹா…சீக்கிரம் வா போலாம் இப்ப கிளம்பினா தான் சுருளி ஃபால்ஸ்க்கு போக முடியும். போகுற இடம் இன்னும் நல்லா இருக்கும்.” என்றான்.
“ ஆதி …இவ்வளவு நாளாக எப்படி இந்த இடத்தை பாக்கமா இருந்த…? சத்தியமா இந்த இடத்தை விட்டு என்னால வர முடியல. அவ்வளவு ப்ளசண்ட்டா இருக்கு. அமைதியா இருக்கு. அப்பறம் இந்த காத்து ஜஸ்ட் அமேசிங். ஏசி கூட வேண்டாம். நைட் மூன் லைட்ல இங்க உட்கார்ந்து ப்ளசண்ட் மியுசிக் ப்ளே பண்ணினா எவ்வளவு ரொமாண்டிக் ஃபீல் வரும். நீ எப்பயாவது இது மாதிரி ஃபீல் பண்ணிருக்கியா…? ” என அவனிடம் கேட்டாள்.
அவனது மனக்கண்ணில் மீனாட்சியின் முகமே வந்து நின்றது. எத்தனை இரவுகளின் ஏகாந்தம் கூட அவளது நினைவுகள் கனலாய் தகிக்கச் செய்திருந்தது.
இரவின் இனிமையும் பொல்லாத தனிமையும் கூட காதலுக்கு பெரும் எதிரியாகிப் போகும் என்பதற்கு ஆதியே சிறந்த உதாரணம்..
“ ஆதி… என்ன ப்ரீஸ் ஆகி நிக்குற..?” என் அவனது தோளினை உலுக்கினாள்.
அவனோ அவளைத் திரும்பி பார்த்தவன் , “ ஆம் “ என்பது போல தலையசைத்தான்.
“வாவ்…யார் அந்த லக்கி கேர்ள்…?” என்றாள்.
அவனோ கண்களில் வலியுடன் ,” ஐ யம் நாட் லக்கி..” என்றவாறே நடந்து கொண்டிருத்தான்.
நேஹாவோ , “என்ன ஓன் சைடா….? ” என்றவள் , ஆச்சர்யத்துடன்,” நீ இந்த மாதிரியெல்லாம் ஃபீல் பண்ற ஆள் இல்லயே…? “ என்றாள்.
ஆதித்யனுக்கும் யாரிடமாவது தனது மனப்பாரத்தை இறக்கி வைக்க வேண்டுமெனத் தோன்றியது.
தான் விரும்பும் பெண் வேறு ஒருவரை காதலிக்கிறாள் என்று சுருக்கமாக கூறினான்.
அதற்கு அவளோ , ” ஹலோ…! மிஸ்டர் ஆதி வேற ஒருத்தரோட லவ்வரை தான் நீங்க விரும்புறீங்க….மாத்தி சொல்லாத.…கடுப்பாகுது…” என்றாள்.
அவனோ விரக்தியுடன், “உனக்குப் புரியாது. நேஹா…லீவ் இட்…லெட்ஸ் கோ” என்று அவளை அழைத்து கொண்டு சுருளி அருவி, இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள திராட்சைத் தோட்டம் என அவளிற்கு அனைத்து இடத்தையும் சுற்றிக் காட்டினான்.
மீனாட்சி நான்காம் வகுப்பு படிக்கும்போது ஆதித்யன் ஏழாம் வகுப்பும், ஈஸ்வரன் ஆறாம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தார்கள்.
சுதந்திர தின விழாவில் ஈஸ்வரனுக்கும் ஆதித்யனுக்கும் மிட்டாய் கிடைக்காமல் போய்விடவே…தன்னுடைய மிட்டாயை பாவாடையில் வைத்துக் கடித்து இரு பங்காக இருவருக்கும் கொடுத்தாள்.
அதனை எப்போதும் நினைத்து பார்ப்பவனுக்கு அதன் சுவை இன்றுமே ஆழ் மனம் வரை தித்திப்பை தருகின்றது.
சற்றே பெரியவர்கள் ஆனவுடன், வயதிற்கு மீறிய வளர்ச்சியில் இருந்த ஆதித்யனைக் கண்டு மிரள ஆரம்பித்தாள்.
ஒருமுறை ஆதித்தயனது வகுப்பு மாணவர்கள் சிலர் மீனாட்சியைப் பற்றி தப்புப் தப்பாக பேசியதால் அடித்து துவைத்து விட்டான் .
அவன் அடித்ததை மட்டுமே பார்த்த மீனாட்சி இன்னுமே அவனிடம் இருந்து விலக ஆரம்பித்தாள் .
ஆர்பாட்டம் இல்லாத அமைதியாக இருக்கும் ஈஸ்வரன் தான் அவள் மனதில் காலடி தடம் பதித்தான்.
ஊரிலேயே செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவளது இனியமையான பேச்சும் குணமும், அனைவரிடத்திலும் காட்டும் அக்கறையும் அனைவருக்குமே மீனாட்சியை பிடிக்க வைத்தது.
சாத்வீகமான அழகையும் தாண்டி எளிய பண்பும் குணத்தினால் அனைவரையும் ஈர்த்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி.
ஈஸ்வரன் மற்றும் ஆதித்யன் மனதில் நங்கூரமிட்டு அமர்ந்தாள் மீனாட்சி.
மொட்டை மாடியில் நிலவின் நிழலில் இவையனைத்தும் யோசித்துப் கொண்டிருந்தான் ஆதித்யன்.
தேனிக்கு வந்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டது. கள்ளிக்குடிக்குச் செல்ல வேண்டும். எந்த காரணமும் இன்றி மாமனின் வீட்டில் ஒரு மாதம் தங்க முடியாது.
“என்ன செய்வது …?”என்று யோசித்தவனுக்கு அங்கு போதிய வசதிகள் கொண்ட பள்ளிகள் இல்லை என்று தெரிய வந்தது.
எனவே அங்கு சரியான இடத்தை தெரிவு செய்து ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்க திட்டமிட்டான்.
சற்று முன்னர் தான் தனது தாயிடம் விவரத்தை கூறினான்.
அவரோ ,” அது ஏன் அங்கன போய் கட்டனும். இங்கேயே கட்டலாம்ல பா…இலவசமா கொடுத்தா அதோட மதிப்பு தெரியாது அப்பு…. கொஞ்சமாவது காசு வாங்குனா தான் ஒழுங்கா பள்ளிக்கூடத்துக்கு வருவாய்ங்க…” என்று அதிலும் காசு பார்க்க திட்டமிட்டார்.
அவனோ அழுத்தமாக, “நான் உங்கிட்ட என் முடிவதான் சொன்னேன். அபிப்பிராயம் கேக்கலை. ஹான்…..அப்பறம் இன்னொரு விஷயம் நேஹாவும் நம்ம கூட தான் வருவா… மாமா வீடு வேணாம் .வேற வீடு பக்கத்துலயே பாத்து தங்கிக்கலாம். வேலை முடிய எவ்வளவு நாள் ஆகுமுன்னு தெரியலை. அவ்வளவு நாள் அவங்க வீட்டுல தங்க வசதிப்படாது. அவங்ககிட்ட தீர்மானமா சொல்லிடுங்க. ஏற்கனவே நாம மூணு பேர் வர்றோம்னு தானே சொல்லருக்கீங்க.நேஹா வர்றதையும் சேர்த்தே சொல்லிடுங்க….எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அங்க வீடு பார்த்தவுடனே கிளம்பிடலாம்….” எனக் கூறிவிட்டான்.
அவன் கூறிய பின்பு மறுப்பேது. வடிவாம்பாள் தனது அண்ணனுக்கு அலைப்பேசியில் அழைத்து விஷயத்தை கூறினார். சில தினங்களிலேயே கள்ளிக்குடியில் வீடு பார்த்துவிட்டார் சங்கர பாண்டியன்.
ஆதித்யன் தனது பெற்றோருடனும் நேஹாவுடனும் கள்ளிக்குடிக்கு கிளம்பினான்.