அம்பு – ௬ (6)
அந்த பிரம்மாண்டமான பங்களா வீட்டின் வாசலில் விதவிதமான உயர்ரக கார்கள் வரிசை கட்டி நின்றிருக்க எதிர்பக்கத்தில் சிறிய கொட்டகையில் ஒரு குதிரையும் நின்று கொண்டிருந்தது..
பால் வெண்ணிறத்தில் இருந்த அந்தக் குதிரையின் முகத்தை வருடியபடி “டேய் கர்ணா.. உன் அண்ணியோட முடியலடா.. அவ இல்லாம இருக்கவும் முடியல.. ஆனா என் தவிப்புக்காக அவ சொல்றதை கேட்க முடியாது.. அவ முடிவை மாத்துன அப்புறம் நீ தான் போய் அவளை கூட்டிட்டு வர.. ஆனா அவ என்னோட முகம் கொடுத்து கூட பேச மாட்டேங்குறா டா.. கடைசி வரைக்கும் இப்படியே நானும் நீயும் புலம்பிக்கிட்டே உட்கார்ந்து இருக்க வேண்டியதுதானா..” தன் நண்பனிடம் புலம்பி தள்ளுவது போல் புலம்பிக்கொண்டிருந்தான் அந்த ஆறடி ஆண் மகன்..
அவன் ப்ருத்வி பார்த்திபன்.. அந்த வீட்டின் இரண்டாவது மகன்.. அவன் மனைவி மான்விழி.. அவளை நினைத்துத்தான் இவ்வளவு நேரம் தன் நெருங்கிய நண்பனான ஷ்யாம் கர்ணாவிடம் பேசிக்கொண்டிருந்தான்..
அவன் கேட்ட கேள்விக்கெல்லாம் சத்தமாக கனைத்தும் தலையாட்டியும் அவன் கன்னத்தோடு தன் முகத்தை உரசியும் பதில் சொல்லிக் கொண்டிருந்தான் ஷ்யாம் கர்ணா என்ற அந்த குதிரை..
“ரொம்ப கஷ்டமா இருக்குடா உன் அண்ணி இல்லாம.. எப்பவும் அவ நெனப்பாவே இருக்கு.. நான் சொல்றது எதையும் கேக்காம அவ பாட்டுக்கு போய் அவங்க அப்பா வீட்டில உட்கார்ந்துகிட்டா.. இவ போனது பத்தாதுன்னு சின்ட்டூவை வேற கூட்டிட்டு போய்ட்டா.. பாவம் அவன்.. நேத்து அவனை பாக்க அவங்க வீட்டுக்கு போனப்ப கூட ரொம்ப அழுதான்டா.. நீ இல்லாம என்னால இருக்க முடியலன்னு என்னை கட்டிக்கிட்டு ஒரே அழுகை.. என்னால ஒன்னையும் விட்டுக் கொடுக்க முடியாது.. அவங்களையும் விட்டுக் கொடுக்க முடியாது.. எனக்கு ரெண்டு பேரும் வேணும்.. எப்ப தான் புரிஞ்சுக்குவான்னு தெரியல.. சரி வா.. ஒரு ரவுண்டு போயி நம்ம ஃப்ரெண்ட்ஸை பாத்துட்டு வரலாம்..”
குதிரையின் கடிவாளத்தை பிடித்து இழுத்து வந்து ஒரே தாவலில் அதன் மேல் ஏறி வெளியே வர அவன் வெளியே வந்த நேரம் வேகமாக இந்த வீட்டின் கேட்டை திறந்து விட்ட செக்யூரிட்டி பணிவாய் மரியாதையோடு ஒதுங்கி நிற்க ஷ்யாம் கர்ணா புயல் வேகத்தில் அடுத்த இரண்டு நொடிக்குள் அவர் கண்ணை விட்டு மறைந்திருந்தான்..
வாசலில் குதிரையின் குளம்புகளின் சத்தம் காதில் கேட்க வரவேற்பறையில் அமர்ந்து அன்றைய நாளிதழை புரட்டிக் கொண்டிருந்த மார்க்கண்டேயன்
ஒரு பெருமூச்சை விட்டபடி “ஏய் சக்கு.. கிளம்பிட்டாண்டி உன் செல்ல புள்ள..” என்க
“ம்க்கும்..” என்று நொடித்து கொண்ட அவர் மனைவி சகுந்தலா
“பொண்டாட்டிக்கு புடிக்கலனா அந்த குதிரையை விட்டு தள்ளுடான்னா கேட்க மாட்டேங்கிறான்.. வாழ்க்கைல இவனுக்கு குதிரை முக்கியமா இல்ல பொண்டாட்டி முக்கியமா? குடும்பத்தோட வாழாம அந்த குதிரைக்காக எல்லாத்தையும் விட்டுட்டு நிற்கிறான்.. ஒரு நாள் அவனுக்கு தெரியாம அந்த குதிரையை எங்கேயாவது கொண்டு போய் வித்துட்டு வந்துடுங்க.. அப்ப தான் அவன் வாழ்க்கை உருப்புடும்..”
அவள் சொல்வதைக் கேட்ட மார்க்கண்டேயனுக்கோ கோபமாக வந்தது..
“என்னடி பேசுற.. அவன் மேல என்ன தப்பு.. அவனுக்கு சின்ன வயசுல இருந்தே குதிரைங்கன்னா அவ்வளவு பிடிக்கும்.. உன் மருமக தான் தேவை இல்லாம பிடிவாதம் பிடிக்கிறான்னா நீயும் அவளுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு..”
“என்னங்க உங்களுக்கு அவளை பத்தி தெரியும் தானே அப்புறமும் இப்படி பேசினா எப்படி?”
“ஆமாம்.. அவ சரியான பயந்தாங்கொள்ளியா இருக்கா.. சரி.. பொம்பள புள்ள அப்படித்தான் இருக்கணும்.. கொஞ்சம் அடக்கம் பயம் இதெல்லாம் இருக்க வேண்டியதுதான்.. ஆனா அவளுக்கு எதுக்கு எடுத்தாலும் பயம்.. ஒரு பொண்ணு இவ்வளவு பயந்துகிட்டு புருஷனை ஒரு வேலையும் பண்ண விடாம செஞ்சா அவனால எப்படி வாழ முடியும்..”
“அதுக்குன்னு அவளை விட்டுட்டு குதிரையோட வாழ முடியுமாங்க?”
சகுந்தலா கிண்டல் தொனியில் அவரிடம் கேட்க அவரோ சகுந்தலாவை திரும்பி ஆழமாய் முறைத்தார்..
“என்னடி கிண்டலா? இவன் அவ பயத்தை உடைச்சு கொஞ்சமாச்சும் தைரியமா மாத்தணும்னு நினைக்கிறான்.. அவ என்னடான்னா சிங்கம் மாதிரி இருக்கிற என் புள்ளைய மொசக்குட்டியா மாத்தி வச்சுக்கணும்னு நினைக்கிறா.. இதுல நீ வேற அவளுக்கு பரிஞ்சுக்கிட்டு வராத.. முடிஞ்சா உன் மருமகளுக்கு அட்வைஸ் பண்ணி அவ மனசை மாத்த பாரு..”
“ஏங்க.. என்ன பேசுறீங்க? உங்களுக்கு தெரியாதா அவ ஏன் இப்படி இருக்கான்னு.. அவளுக்கு நடந்த ட்ராமா (trauma) அப்படி.. அவளால அதை மறக்க முடியல.. இவன்தான் கொஞ்சம் அவளுக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்க கூடாதா? அட்லீஸ்ட் அவ கண்ணுக்கு முன்னாடி அந்த குதிரையை ஓட்டாம இருக்கலாம் இல்ல? வீட்டு வாசல்ல அதை கட்டி வச்சிக்கிட்டு அராஜகம் பண்ணிக்கிட்டு இருக்கான்.. அவ சொல்ல சொல்ல அவன் இப்படி பண்ணிட்டு இருந்தா அவனோட நிம்மதி தானேங்க போகுது.. குடும்ப நிம்மதிக்காக சில விஷயங்களை ஸேக்ரிஃபைஸ் பண்றதுல தப்பு இல்லயேங்க..”
“என்னது சாக்ரிஃபைஸ் பண்ணனுமா? அவன் எதுக்குடி சாக்ரிஃபைஸ் பண்ணனும்? அவன் ஆம்பள சிங்கம் டி .. அவன் நினைச்சதை பண்ணுவான்.. அவளுக்கு பயமா இருந்தா அந்த குதிரை இருக்கற இடத்துக்கு வராம வீட்டுக்குள்ள பூட்டிட்டு இருக்கட்டும்.. அதுக்காக என் புள்ளையை அடக்கி வைப்பாளா அவ.. பொண்டாட்டின்னா புருஷன் என்ன நினைக்கிறானோ அதை அப்படியே ஒரு துளி கூட மாறாம அவன் வாழ்க்கையில நடத்தி வைக்கணும்.. அவ தான் உண்மையான பொண்டாட்டி.. அதுக்காக அவ என்ன இழக்க நேர்ந்தாலும் எழக்கனும்.. ஒரு ஆம்பள புள்ளயை காலம் முழுக்க சந்தோஷமா வச்சுக்கணும்னு தான் ஒரு பொம்பள புள்ளைய கட்டி வைக்கிறது.. அவன் சந்தோஷத்தையே அவ கெடுக்கிறான்னா அப்புறம் அவன் வாழ்க்கையில அவ எதுக்குடி? தேவையே இல்லை.”.
“என்னங்க இப்படி பேசுறீங்க..? மான்விழி பயப்படுறான்னு அவ சரியில்லைன்னு சொல்றீங்க.. பெரியவன் பொண்டாட்டி மலர்விழி.. அவ நல்ல தைரியமான பொண்ணுதானே..? அவளையும் தானே உங்களுக்கு புடிக்கல? ஆம்பளன்னு ஒரு மரியாதை கூட இல்லாம யாரையும் மதிக்காம ரொம்ப திமிர் பிடிச்சு ஆடுறான்னு இல்ல சொன்னீங்க?”
“ஆமாம்டி சொன்னேன்.. ஏன்னா அவ பொம்புளை புள்ள மாதிரியா நடந்துக்கிட்டா? யாருக்கும் அடங்காம எகிறி எகிறி பேசிக்கிட்டு அவனுக்கு சரி சமமா அகாடமிக்கு போறேன்.. போட்டிக்கு போறேன்.. கப்பு ஜெயிச்சுட்டு வரேன்னு இஷ்டத்துக்கு திரிஞ்சா.. ஒரு ஆம்பளயால எவ்வளவோ விஷயங்களை வெளியில சமாளிக்க முடியும்.. பொட்ட புள்ள அந்த மாதிரி சமாளிக்க முடியுமா? அதுக்கு ஏத்த மாதிரி தான் அவ வாழ்க்கையில எல்லாம் நடந்தது.. நான் சொல்ல சொல்ல கேட்காம என் பேச்சை மீறி போனதுக்கு எவ்வளவு அனுபவிச்சா?அவ அப்படியும் புத்தி வராம மறுபடியும் வீட்டை விட்டு ஓடி போய் இருக்கா.. ஓடுகாலி.. பேசாத அவளை பத்தி..”
“சரிங்க.. அதுக்காக காலம் முழுக்க நம்ம புள்ள இப்படியே ஒத்தையில இருந்து கஷ்டப்படணுமாங்க.”
“நானும் அதை தாண்டி கேட்கிறேன்.. என் ரெண்டு பிள்ளை வாழ்க்கையும் இப்படி ஒன்னும் இல்லாம கிடக்குது.. சின்னவனுக்காவது பொண்டாட்டி அவங்க அம்மா அப்பா வீட்ல இருக்கான்னு தெரியும்.. பெரியவன் பொண்டாட்டி எங்க இருக்கானே தெரியல.. சரி.. வேற கல்யாணம் பண்ணலாம்னா அதுக்கும் ஒத்துக்க மாட்டேங்கிறான்.. கல்யாணம் பண்ணி என் ரெண்டு புள்ளைங்க வாழ்க்கையும் சொகப்படலை.. அந்த வீட்டிலிருந்து நம்ம பொண்ணே எடுத்துருக்க கூடாதுடி..”
“இங்க பாருங்க.. அவங்க அவங்களோட விருப்பு வெறுப்புனால சூழ்நிலையினால ஏற்பட்ட சங்கடத்துக்கு எல்லாம் நீங்க அந்த குடும்பத்தை பழி சொல்றது சரி இல்ல.. நீங்க பேசறத நம்ம புள்ளைங்க கேட்டாலும் ரொம்ப வருத்தப்படுவாங்க.. அந்த பொண்ணுங்களை பத்தி இப்படி தப்பா பேசாதீங்க.. ரெண்டு பொண்ணுங்களும் தங்கமானவங்கதான்.. ஆனால் அவங்களை சுத்தி நடந்த சில விஷயங்கள் அவங்களை அப்படி மாத்தி இருக்கு.. பெரியவன் வாழ்க்கை இப்படி ஆனதுக்கு காரணம் அந்த பொண்ணுங்க இல்லை.. அதுக்கெல்லாம் அந்த விஷ்வா தான் காரணம்.. அவன் மட்டும் இவங்க வாழ்க்கைல தலையிடலன்னா இது எதுவுமே நடந்திருக்காது.. பாவிப்பய.. நல்லா இருப்பானா அவன்..?”
“கவலைப்படாத சக்கு… எல்லாம் சரியாயிடும்.. அந்த விளங்காதவ எங்கேயோ போனவ போய்ட்டா.. இந்தர் மனசை மாத்தி எப்படியாவது அவனை இன்னொரு கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சுடலாம்.. அவனுக்கு என்னடி ராஜா வீட்டு பிள்ளை.. இப்பவும் அவனை கல்யாணம் பண்ணிக்கணும்னா பொண்ணுங்க கியூவில நிப்பாங்க.. நிச்சயமா அவனுக்கு இன்னொரு வாழ்க்கை அமைஞ்சுதுன்னா எல்லாமே நல்லா ஆயிடும்.. அதை ஒத்துக்க வைக்கிறது தான் பெரிய விஷயம்.”.
“நீங்க சொல்றது இந்த ஜென்மத்துக்கு நடக்காது.. மலர் மேல உயிரையே வச்சிருக்கான் அவன்.. இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்றதை விடுங்க.. அவனால மனசால மலர் இடத்துல இன்னொரு பொண்ணை நினைச்சு கூட பாக்க முடியாது.. மலர் திரும்பி வந்தா தான் எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அவன் பழைய இந்தரா மாறுறதுக்கு வாய்ப்பு இருக்கு.. ஆனா அந்த மகராசி எங்க இருக்கான்னு தெரியல.. நீங்க கொஞ்சம் அவகிட்ட..”
“என்னடி.. அவ ஆடினா ஆட்டத்துக்கு எல்லாம் அவ கால்ல விழுந்து வழி அனுப்பி வைக்கணுமா நானு.. அவ திமிர் பிடிச்சு ஓடி போனதுக்கு நான் தான் காரணம்னு சொல்றியா? வர வர உனக்கு கூட வாய் ரொம்ப நீளுது.. ஏன் நீ கூட தான் வக்கீலுக்கு படிச்சிருக்க.. கல்யாணம் பண்ணதும் வெளியில வேலைக்கு போகக்கூடாதுன்னு சொன்னதும் அத்தனையும் இழுத்து மூடிட்டு வீட்டையும் பிள்ளைகளையும் என்னையும் பார்த்துட்டு உட்கார்ந்து இருக்க இல்ல.. நீ என்ன கெட்டு போய்ட்ட இப்போ.. நல்லா சந்தோஷமா தானே இருக்க..? அவளும் உன்னை போல இருந்திருந்தா நான் ஏன் அவ மேல கோபப்பட்டு இருக்க போறேன்..? அந்த ஓடுகாலிக்கு என்ன தேவைப்பட்டுச்சோ.. அவளுக்கெல்லாம் புருஷன் வேணாம்.. அடிமை தான் வேணும்.. அதுக்கு என் புள்ள ஆளு கிடையாது..”
சகுந்தலாவோ மனதில் இருப்பதை வெளியே சொல்ல முடியாமல் எச்சில் விழுங்கிக் கொண்டாள். எப்போதும் போல தன் ஆதங்கத்தை எல்லாம் தனக்குள்ளே பூட்டி வைத்துக் கொண்டாள் அவள்.. இந்த அடிமை வாழ்வுக்கு விடிவு காலமே கிடைக்காதோ என்று மனதிற்குள் புழுங்கிப் போனாள் அவள்..
“ம்ம்.. அவனுக்கு பிடிச்ச அந்த அகாடமி விஷயத்துல அவனை கொஞ்சம் ஈடுபடுத்துனா மனசு மாறும்ன்னு பார்த்தா.. எங்க..? தாடி வளர்த்துக்கிட்டு தேவதாஸ் மாதிரி எப்ப பாரு ரூம்குள்ளயே அடைஞ்சு கிடக்குறான்.. நாலு வருஷமா இவன் கவனிக்காம இருந்ததுனால அகாடமி சுத்தமா படுத்து போச்சு.. அந்த அகாடமிக்கு போகும்போதுதான் கொஞ்சம் மலரை மறந்து அவன் அந்த வேலையில மூழ்கி இருக்கான்.. அவனை பாத்தா அவ நெனைப்புவயே செத்துருவான் போல இருக்கு.. அதனாலதான் இந்த அகடமில சம்யுக்தா அகடமியோட பார்ட்னர்ஷிப்ல ஒர்க் பண்றதுக்கு கேட்க சொல்லி அனுப்பி இருக்கேன்.. இன்னைக்கு அந்த சம்யுக்தாவோட அது விஷயமா மீட்டிங் இருக்கு.. உன் பிள்ளை அங்க தான் போய் இருக்கான்.. எதுவும் வில்லங்கத்தை இழுத்துட்டு வராம இருக்கணும் அவன்..”
இப்படி அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தது இந்திர தனுஷின் கார்..
மார்க்கண்டேயனும் சகுந்தலாவும் வாசல் பக்கம் கண்களை திருப்ப அங்கே குடும்பமாக வந்து நின்றது என்னவோ கையில் குழந்தையுடன் இந்த்ரதனுஷும் அவன் பக்கத்தில் இவ்வளவு நேரம் ஓடிப்போனதாய் மார்க்கண்டேயன் வசவு பாடிக்கொண்டிருந்த வேல்விழி என்கிற மலர்விழியும்..
அம்பு பாயும்..