விருகோத்திரனின் துருபத கன்னிகை – 2

5
(1)

அத்தியாயம் 2 

 

இஷானி சொன்னதை தன் காதில் வாங்கி, அதை ஜீரணிக்கவே முழுதாக ஒரு நிமிடம் பிடித்தது தீரனுக்கு.. 

 

“என்ன சொல்கிறாள் இவள்?.. காதலா?.. அதுவும் தன் தம்பியுடனா?” என தன் முகத்தில் அதிர்வு நீங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். 

 

அவனின் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியை பார்த்த இஷானியின் முகத்தில் சிறு குரூர புன்னகை.. 

 

அவள் மனதை கொன்ற ஒருவனின் அண்ணன் மனம், இப்பொழுது தூள், தூளாக உடைந்து சிதறியிருக்கும் என்ற குரூர எண்ணம் அவளுக்குள் உதிர்க்க, அவனை பார்த்து கசந்த புன்னகை ஒன்றை வெளியிட்டாள். 

 

நான் பட்ட வேதனை?.. சற்று முன் நான் அடைந்த வேதனையை நீயும் அனுபவி.. என்ற வன்மமும் அவளுக்கு சிறிது சிறிதாக முளைத்தது. 

 

நல்லவர்கள்? தீயவர்கள்? என்பதெல்லாம் சூழ்நிலைக் கைதிகள் தானே தவிர, யாரும் இங்கே முழுதாய் நல்லவர்களும் இல்லை.. யாரும் இங்கே முழுதாய் கெட்டவர்களும் இல்லை.. 

 

“என்னம்மா என் பையன் கிட்ட ஏதோ ரகசியம் பேசிட்டு இருக்க?” என்ற சிதம்பரத்தை பார்த்து மென்மையாக புன்னகைத்தாள்.. 

 

அவரின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தாள் இஷானி..  

 

“ரகசியம் தான் ஆங்கிள்.. சிதம்பர ரகசியம்” என உதட்டில் வன்மையும், கண்களில் பழிவாங்கும் வெறியும் வைத்துக் கொண்டு போலி புன்னகை ஒன்றை செலுத்த, பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது.. 

 

“என்ன ஆங்கிள்?.. நான் சொல்லுறது சரிதானே” என சிதம்பரத்தை பார்த்து சிறு சிரிப்புடன் கேட்க, 

 

“நீ சொல்லுறது என்னைக்கும் சரிதான்மா, என் மருமக சொல்லுறது பொய்க்குமா என்ன?” என்றவர், அதிர்ச்சியில் உறைந்து நின்ற மகனின் தோளை லேசாக தட்டினார். 

 

“என்னடா நீ? இப்படி உறைஞ்சு போய் நிக்கிற?” என்றவரை ஏறிட்டுப் பார்த்தவன், சட்டென்று மண்டபத்தின் கூட்டத்தை தான் பார்த்தான்.. 

 

அவன் தேடிய நபர் அந்தக்கூட்டத்தில் இல்லவே இல்லை. 

 

அவனுக்கு இந்நொடி, இப்பொழுதே தன் தம்பியை பார்க்க வேண்டும் என்ற வெறியே ஏறியது.. 

 

“ஏன் இப்படி செய்தான்?” என இக்கணமே தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றெண்ணினான்.. 

 

சட்டென்று அவன் கழுத்தில் ஏறிய மாலையில் கை வைத்தவன், கழற்ற முற்பட, அவனின் கையை இறுக்கமாக பற்றினாள் இஷானி.. 

 

“என்ன?” என்பதாய் அவன் பார்வையை சற்று கடினமாக்கிப் பார்க்க, அதற்கெல்லாம் அஞ்சுபவளா இஷானி.. 

 

“இன்னும் மெட்டி போடலை.. சடங்கு எல்லாம் அப்படியே இருக்கு?.. எதுக்கு மாலையை கழற்றப் போறீங்க?” என சற்று காட்டமாக கேட்டாள்.. 

 

அவளின் வார்த்தையில் இருந்தது அன்போ, பாசமோ, அக்கறையோ இல்லை.. வன்மம், துவேஷம்.. தன்னை அழ வைத்தவனை அழ வைக்க வேண்டும், தவிக்க வைக்க வேண்டும் என்ற வன்மம் தான் அதிகம் இருந்தது.. 

 

அதை சிரிப்பான முகத்துடன் காட்டிக் கொண்டிருப்பவளை சற்று அழுத்தமாக பார்த்தான் விருகோத்திரன். 

 

தீரன் என அவனை அழைப்பவர்கள் தான் அநேகம் பேர்.. 

 

“கையை விடு இஷானி?” என வார்த்தைகளை பல்லிடுக்கில் கடித்து துப்பினான்.. 

 

அவனுக்கு இந்நொடியே தன் தம்பியைக் காண வேண்டும் என்ற பேரவா.. ஆனால் அவனோ மண்டபத்தில் இருப்பதாகவே தெரியவில்லை.. 

 

ஏதோ ஒன்று பெரிதாக நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.. ஆனால் அது ஏன்? எப்படி? என்ற வினாவின் விடை தான் கிடைக்கவில்லை.. 

 

“இங்கே பாரு இஷானி.. இப்போ நீ கையை எடுக்கலை, இங்கே நடக்கிறதே வேற?” என அடிக்குரலில் சீறினான்.. 

 

“இப்போ மட்டும் நீ எந்திரிச்ச, உன் தம்பியும் நானும் எடுத்த போட்டோவை, இந்த ஊர் ஜனங்க மத்தியில காட்டுவேன்.. கண்டிப்பா உன் தம்பி பெயர் இந்த ஊர்ல நாறும்.. பரவாயில்லையா?” என அவனை விட அதிகமான அழுத்தத்தில் அடிக்குரலில் சீறினாள்.. 

 

சட்டென்று தீரனின் கோபம் எங்கே போனது என்றே தெரியவில்லை. 

 

என்ன பெண் இவள்? என்ற எண்ணம் தான் தோன்றியது. ஒருவனை அழ வைக்க வேண்டும் என தன் மானத்தை காற்றில் பறக்க விடவும் ரெடியாகிவிட்டாள் என நினைக்கும் போதே வலித்தது.. 

 

அவளின் நெஞ்சத்தில் உறவாடிய தாலியை தான் ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தான்.. அதை மட்டும் அவன் கட்டாமல் இருந்திருந்தால், சத்தியமாக தன் தம்பியை இங்கு மணமகனாக அமர்த்தியிருப்பான்.. 

 

ஆனால் ஊர் சனம் மொத்தமும் கூடியிருக்கும் சபையில், தான் கட்டிய தாலியை இறக்கி தன் தம்பிக்கு மனம் முடித்து வைக்க அவனால் முடியவில்லை.. அக்கணம் சூழ்நிலைக் கைதியாகி நின்றான் தீரன்.. 

 

சுற்றியிருந்த குடும்பத்தார்கள் சொன்ன அத்தனை சடங்குகளை செய்தான்.. அதுவரைக்கூட ஆதவ் அவன் கண்ணில் படவில்லை.. 

 

“இனி மாப்பிள்ளையும் பொண்ணும் ரெஸ்ட் எடுக்கட்டும்” என ஒரு பெண்மணி சொன்னதும் தான் தாமதம், தன் கழுத்தில் இருந்த மாலையை கழற்றிக் கொண்டே வந்தவன், மணமகன் அறையில் இருந்த கட்டிலில் வீசியெறிந்தான்.. 

 

அவன் வீசியெறிந்த வேகத்தைப் பார்த்த இஷானி சிறிதும் அஞ்சவில்லை.. மாறாக அவனை சுட்டெரிக்கும் பார்வை பார்த்தாள்.. 

 

அவளின் புறம் கூட திரும்பாதவன், தன் தம்பிக்கு தான் முதலில் போனில் அழைத்தான்.. 

 

“நம்மைப் போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி இங்கு யாருமில்லை” என்ற ரிங்டோன் காதில் விழ, ஹாஸ்பிடலில் அமர்ந்திருந்த ஆதவ் ஒரே ரிங்கில் போனை எடுத்தான்.. 

 

“அண்ணா..” என்றவனின் குரலே சற்று கரகரத்து ஒலித்தது.. 

 

“எங்கேயிருக்க ஆதவ்?..” என்ற ஒற்றை வார்த்தை தான் கேட்டான்.. 

 

“அண்ணா நான் மண்டபத்துக்கு வந்துட்டு இருக்கேன்” என தான் இருக்கும் இடத்தை பற்றிய உண்மையை மறைத்தவன், ஹாஸ்பிட்டலில் இருந்து புறப்பட்டான்.. 

 

கைகளில் தையல் போட்டிருந்தது, ஆனால் அதுக்கூட அவனுக்கு வலிக்கவில்லை.. 

 

தன் காதலியை தானே தாரை வார்த்துக் கொடுத்தது தான் உயிர் வரை சென்று வலித்தது.. 

 

கைகளில் இருந்த காயத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், காரை மின்னல் வேகத்தில் ஓட்டிக் கொண்டு மண்டபத்தை வந்தடைந்தான். 

 

இன்று காலை வரை தன் காதலியாக இருந்தவளை, இந்நொடியில் இருந்து தன் அண்ணனின் மனைவியாக பார்க்கக்கூடிய அவல நிலை வரும் என கனவில் கூட அவன் நினைத்ததில்லை.. 

 

தன் அண்ணனின் சம்மதத்துடன், ஊரறிய இஷானியை மணமுடித்து, சிறப்பான ஒரு வாழ்க்கை வாழுவோம் என எதிர்பார்த்திருந்தான்.. 

 

ஆனால் இன்று, தன் அண்ணனின் திருமணத்தைக் கூட பார்க்க முடியாமல் ஓடி வந்து விட்டான்.. 

 

ஆம். ‘வெளியே போடா’ என இஷானி கத்தியதைக் கேட்டதுமே, மண்டபத்தில் இருந்து மெதுவாக நழுவி, மண்டப வாசலின் வந்து நின்றான்.. 

 

“கெட்டிமேளம்.. கெட்டிமேளம்..” என்ற சத்தத்தை தன் காதால் கேட்ட பின்பே, தன் கைகளில் இருந்த காயத்தைப் பற்றிய நினைவு வந்தது அவனுக்கு.. 

 

தனக்காக இல்லையென்றாலும், தன் அண்ணனுக்காக ஓட வேண்டிய கட்டாயம் அவனுக்கு.. 

 

ஹாஸ்பிட்டல் வந்தவன், கட்டுப் போட்டு முடித்து விட்டு சோர்வாக அமரும் வேளையில் தான் தீரனின் போன் கால் வந்தது.. 

 

அதன் பின் அங்கிருக்க மனம் வருமா? அவனுக்கு. இதோ அவசர, அவசரமாக தன் காரை எடுத்துக் கொண்டு விரைந்தான்.. 

 

அவன் மண்டப வாசலில் நிற்பதற்கும், அங்கு தீரன் மண்டப வாசலில் குறுக்கும், மறுக்குமாக நடப்பதற்கும் சரியாக இருந்தது.. 

 

“என்னாச்சி அண்ணா? இங்கே ஏன் நடந்துட்டு இருக்கீங்க?..” என்றவனின் செவிப்பறை கிழிவதைப் போல் விட்டான் ஒரு அறை.. 

 

‘ங்ஙொய்ய்ய்’ என்ற சத்தம் தான் ஆதவ்வின் காதில் விழுந்தது.. 

 

“பெரிய தியாகி **யிரா நீ?.. ஹான்.. உன் காதலியை எனக்கு விட்டுக் கொடுக்குறீயா?” என்றவனை அதிர்ந்து பார்த்தான் ஆதவ்.. 

 

எப்படி?.. எப்படி இந்த விஷயம் அண்ணாவுக்கு தெரிந்தது? என விழிகள் தடுமாற, 

 

“இங்கே பாரு..தாலி தான் கட்டியிருக்கேன்.. அந்தப் பொண்ணுக் கூட என்னால வாழ முடியாது.. எண்ணி ஒரே வருஷத்துல அந்தப் பொண்ணை டிவோர்ஸ் பண்ணிடுவேன்.. அதுக்கப்புறம் நீ அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிற?..” என்றவன் திரும்ப, அங்கு மணப்பெண்ணின் அலங்காரத்தில் கைகளை கட்டியபடி நின்றிருந்தாள் இஷானி.. 

 

தீரன் அறையை விட்டு வெளியே வந்து, வாசலில் குறுக்கும், மறுக்குமாய் நடக்கும் போதே இஷானி இங்கு வந்து விட்டாள்.. 

 

ஆதவ் வந்ததில் இருந்து, தீரன் கூறிய எல்லா வார்த்தையும் அவளும் ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டுதானிருந்தாள்.. 

 

“இஷானி” என்ற ஆதவ்வை, ஒற்றைக் கையை உயர்த்தி தடுத்து நிறுத்தினாள்.. 

 

“இனிமேல் என்னை அண்ணின்னு கூப்பிடு ஆதவ்” என்ற வார்த்தை, சுடுதண்ணீரை எடுத்து முகத்தில் ஊற்றினாற் போன்று வலித்தது.. 

 

ஒரே வார்த்தையில் விலக்கி விட்டாள்?.. அவனை.. 

 

நேராக வந்து நின்றது என்னவோ தீரனின் முன்பு தான்.. 

 

அவனும் அவளை தான் இமைக்காமல் பார்த்தான்.. அவனின் உயரத்திற்கு நெஞ்சளவே இருந்தாள் பெண்ணவள்.. அவனின் உரிமையானவளாய் நின்றாள்.. 

 

“அப்புறம் டிவோர்ஸ், அது இதுன்னு என் காதுல விழுந்தது?.” என அசராமல் கேட்ட பெண்ணவளை அயர்ந்து தான் பார்த்தான் தீரன்.. 

 

“இங்கே பாரு இஷானி..” என சொல்லி முடிக்கவில்லை.. 

 

“நான் உங்களை மட்டும் தான் பார்க்கிறேன்” என சொல்லில் மட்டுமில்லாது, செயலிலும் அதைத்தான் செய்தாள். அவனை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.. 

 

அவனின் கண்களை தடுமாறாது பார்த்தவளின் விழிகளில் அவன் தான் தடுமாறி நின்றான்.. 

 

“இஷானி என் கண்ணைப் பார்க்காதே” என்ற தீரனின் மறுப்புக்களை எல்லாம் புறம் தள்ளியவள், 

 

“என் புருஷன் கண்ணு, நான் பார்க்கிறேன்.. உங்களுக்குப் பிடிக்கலைன்னா நீங்க முகத்தை திருப்பிக்கோங்க” என்றவள் மெல்ல தலையை மட்டும் சாய்த்து, ஆதவ்வை பார்த்தாள்.. 

 

“அப்புறம் கொழுந்தனாரே, புருஷனும், பொண்டாட்டியும் தனியா பேசணும்.. நீங்க கொஞ்சம் உள்ளார போறீங்களா?” என்றவளை கண் சிமிட்டாமல் பார்த்தான் ஆதவ்.. 

 

அவன் நேசித்த இஷானி இவளில்லை என்பது மட்டும் நன்றாக புரிந்தது. 

 

ஏதோதோ செய்கிறாள்?.. என்னவெல்லாமோ பேசுகிறாள்?.. அவளுக்கு இந்த திருமணம் அதிர்ச்சி என்பது அவனுக்கும் புரிந்தது.. ஆனால் இவ்வளவு எளிதாக இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டாளா? என்பதை தான் அவனால் நம்ப முடியவில்லை.. 

 

ஏனோ மனம் படபடவென அடித்துக் கொண்டது.. 

 

“இஷானி..” 

 

“அண்ணி… இனிமேல் உன் வாய்ல இருந்து இஷானிங்கிற பேர் வரவே கூடாது.. நான் உன்னோட எக்ஸ்.காதலியோ இல்லை கொலிக்ஸோ இல்லை.. உன் அண்ணனோட பொண்டாட்டி.. இந்த வீட்டோட மூத்த மருமக.. சோ அதுக்கான மரியாதைக் கொடுத்து பழகுங்க கொழுந்தனாரே” என ஆதங்கமாய் கோபத்தில் ஆரம்பித்தவள், இறுதியில் சிரித்த முகத்துடன் முடிக்க, 

 

அங்கு நின்றிருந்த தீரனுக்கே அவள் செய்கை தூக்கிவாரிப் போட்டது.. 

 

மல்ட்டிபிள் பெர்சனாலிட்டி இருப்பதை போல், ஒன்றும் ஒன்றும் மாற்றி மாற்றி பேசுகிறாளே, என தவிப்புடன் தான் அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.. 

 

“இஷானி..” என தீரனின் அழைப்பில், சட்டென்று கோப முகம், சிரித்த முகமாக மாறியது.. 

 

“சொல்லுங்க மாமா?” என்றவளைக் கண்டு, தீரனே ‘அம்மாடியோவ்வ்’ என்பதை போல் வாயைப் பிளந்து பார்த்தான்.. 

 

அவளின் செய்கை ஒரு வித பயத்தை இருவருக்குள்ளும் விதைத்தது.. 

 

“நீ கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிக்கிறீயா?” என தீரன் அவளை அழைக்க, அவனின் உரமேறிய கரங்களோடு தன் பிஞ்சு விரல்களை கோர்த்துக் கொண்டாள்.. 

 

தீரனின் கைப்பிடித்து மண்டபதற்குள் நடந்தவள், பாதி தூரம் செல்லும் போது, சட்டென்று திரும்பி வாசலில் நின்றிருந்த ஆதவ்வை பார்த்தாள்.. 

 

அவளின் கண்களில் அவ்வளவு வன்மம், இவனுக்காகத் தானே என்னை தூக்கி எறிந்தாய், இவனையே உன்னிடம் இருந்து பிரிக்கிறேன் என துவேஷம் கொண்டு தான் அவள் ஒவ்வொரு காயாய் நகர்த்த ஆரம்பித்தாள். 

அவனை வன்மத்துடன் ஒரு போலியான புன்னகை ஒன்றை உதிர்த்தவள், தீரனுடன் ஒட்டியவாறே நடக்க ஆரம்பித்தாள்.. 

 

தன்னருகில் ஒட்டி நடப்பவளை சட்டென்று விலக்கவும் முடியாமல், அவளருகில் நடக்கவும் முடியாமல் தடுமாறியது என்னவோ தீரன் தான்.. 

 

அவளின் வார்த்தைகள் ஒன்றை உதிர்க்க, அவளின் கண்களோ வேறு ஒன்றை உதிர்க்க, இரண்டிற்கும் நிறைய வித்தியாசம் அவன் கண்களுக்கு தெரிந்தது.. 

 

தன் தம்பியை மறக்க முடியாமல் தவிக்கிறாளோ? என்று பார்த்தாள் அது தான் இல்லை.. வேற எதையோ செய்ய துடிக்கிறது அவளின் கண்கள் என்பதை அவன் அறிந்திருந்தான்.. 

 

“நீ இந்த ரூம்ல படு.. கொஞ்ச நேரத்துல வீட்டுக்குப் போயிடலாம்” என தீரன் விட்டுச் சென்ற இரண்டு நிமிடத்தில் அந்த அறைக்கு வந்தார் சிதம்பரம்.. 

 

அவரைப் பார்த்ததும் போலியான புன்னகை ஒன்றை தான் உதிர்த்தாள்.. 

 

“வாங்க ஆங்கிள்” என்றவளை பார்த்து சிரித்தவாறே, “அழகா மாமான்னு கூப்பிடு ம்மா, இனிமேலும் அங்கிள் எல்லாமே வேண்டாமே..”

 

“சரி மாமா.. உள்ளே வாங்க” என்றவளின் கைகளில் ஒரு நகைப்பெட்டியை வைத்தார் சிதம்பரம்.. 

 

“என்ன மாமா இது?” 

 

“இது என் பொண்டாட்டி ஜானகியோட நகைம்மா, இந்த வீட்டுக்கு வரப்போற மருமகள்களுக்காக வாங்கி வச்சிருக்கா, மூத்த மருமக உன்னோடது இது” என்றவரை விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள்.. 

 

என்னதான ஆதவ்விடமும், தீரனிடமும் தன் கோபத்தை, ஆதங்கத்தை கொட்டினாலும், சிதம்பரத்திடம் தன் எண்ணத்தை வெளிப்படுத்த முடியவில்லை.. 

 

“இல்லை மாமா, எனக்கு இந்த நகையெல்லாம் வேண்டாம்” என திருப்பிக் கொடுக்க, 

 

“என்னம்மா நீ?.. இது உன்னோட உரிமை, இந்த நகை உனக்குத்தான்” என இஷானியின் கையில் திணித்தபடி செல்ல, அவர் செல்லும் திசையையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள் இஷானி.. 

 

“நான் இந்த வீட்டுக்கு வாழ வரலை மாமா, அழிக்க வந்திருக்கேன்.. என் வாழ்க்கையை கெடுத்த உங்க பையன் ரெண்டு பேரும் நிம்மதியையும், சந்தோஷத்தையும் தொலைச்சிட்டு நிற்கிறதை பார்த்தா மட்டும் தான் எனக்கு நிம்மதி..” என்றவளின் விழிகளில் கண்ணீரை தாண்டி ரெளத்திரம் மட்டும் தான் தெரிந்தது.. 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!