அகமித்ரா கேன்டீனில் இருந்து ஸ்டாப் ரூமிற்கு செல்லும் வழியில் அவளது புடவை முந்தானையை பிடித்தது ஒரு கரம். திரும்பிப் பார்த்தாள் அகமித்ரா. அங்கே கொழுகொழு கன்னங்களுடன் சிரித்துக் கொண்டு நின்றாள் அதிதி. அவளைப் பார்த்து சிரித்த அகமித்ரா, “அடேய் அதிதி பாப்பாவா…? இங்க எதுக்கு கண்ணா வந்தீங்க…?”
“கிரவுண்ட்ல விளையாடிட்டு இருந்தனா… நீங்க இந்தப் பக்கம் போறதைப் பார்த்தேன்… அதுதான் ஓடி வந்தேன்…”
“அப்டியா அதிதி பாப்பா என்னை பார்க்க வந்தாங்களா…?” என்று குழந்தையின் உயரத்திற்கு முட்டி போட்டு நின்றாள். “என்னோட செல்லம்…” என்று அதிதிக்கு கன்னத்தில் முத்தம் வைத்தாள். அதிதியும் சிரித்துக் கொண்டு அகமித்ரா கன்னத்தில் முத்தம் வைத்தாள். பின்னர் தனது பர்ஸில் இருந்த சாக்லேட்டை எடுத்து அதிதியிடம் கொடுத்தாள். அதிதி வாங்க மறுத்தாள்.
“மிஸ் யாரு என்ன குடுத்தாலும் வாங்கிக்க கூடாதுனு அப்பா சொல்லியிருக்கிறாங்க….”என்றாள்.
அதற்கு அகமித்ரா, “ஆமா அதிதி, தெரியாதவங்க குடுத்தா வாங்கிக்க கூடாது… ஆனால் என்னைதான் உங்களுக்கு தெரியுமே… அதனால வாங்கிக்கலாம்…” என்றாள். அவள் இப்படி சொன்ன பின்னர் தான் அதிதி அந்த சாக்லேட்டை வாங்கிக் கொண்டாள். பின்னர் அகமித்ராவிடம் சொல்லி விட்டு தனது க்ளாஸ்கு சென்று விட்டாள். அவள் வகுப்பிற்கு செல்லும் வரை பார்த்து விட்டு திரும்பியவள் எதிரில் நின்றவரை முட்டச் சென்று நொடிப் பொழுதில் தன்னை சுதாரித்து நின்றாள்.
“சா… சார்….”
“யெஸ் அகமித்ரா… என்ன சின்னப் பிள்ளைகள்கூட பேசிட்டு இருக்கிறீங்க…?”
“தேவையில்லை சார்… நீங்க கரஸ்பாண்டன்ட் சார்… உங்ககூட ப்ரண்ட்ஷிப் வச்சிக்கிற தகுதி எனக்கு இல்லை… என்னை மன்னிச்சிடுங்க…” என்றவள் அங்கிருந்து சென்றுவிட்டாள். அவளை அப்படி சென்றது ரித்தேஷிற்கு கோபத்தை வரவழைத்தது.
‘போடி போ… பார்க்க அழகா இருந்தா பெரிய நினைப்போ… உன்னை எப்படி என்னோட வழிக்கு கொண்டு வரணும்னு நல்லாவே தெரியும்…. உனக்கு என்ன நடந்தாலும் என்னாச்சினு கேட்க நாதியில்லாத உனக்கு திமிரா… உன்னோட திமிர அடக்கிறன்டி…’ என்று போகும் அகமித்ராவைப் பார்த்தவாறே மனதுக்குள் பேசினான் ரித்தேஷ்.
ஊட்டியில் இருந்த ரோயல் எஸ்டேட்டின் முதலாளி தர்மராஜ் வீட்டில் சத்தமாக இருந்தது. அவரது மனைவி கவிதா ஒருபுறம் இருந்து அழுது கொண்டு இருந்தார். அவரை இருவர் சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தனர். தர்மராஜ் தலையில் கையை வைத்துக் கொண்டு இருந்தார். அவரது ஆட்கள் வந்தனர்.
“ஐயா எங்க தேடியும் நம்மளோட சின்ன முதலாளியை காணவே இல்லைங்க…”
“ஐயோ… என்னோட பிள்ளை எங்கேன்னு தெரியலையே… ஐயோ என் பிள்ளையை எப்படியாவது கண்டுபிடிச்சி குடுங்க…” என்று அழுதார் கவிதா.
அப்போது தர்மராஜின் பிஏ, “சார் சின்னையா காணாமல் போய் ரெண்டு நாளாகுது… இதுக்கு மேலும் பொறுமையாக இருக்கிறது சரியில்லை… போலீஸிக்கு போயிடலாம் சார்…” என்றார்.
தர்மராஜிற்கும் அதுதான் சரி என்று பட்டது. உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வீட்டிற்கு வரச் சொன்னார். அவரும் பெரிய இடத்திலிருந்து கால் வந்ததும் உடனே ஓடி வந்தார்.
“வணக்கம் சார்… என்ன விஷயம் சார் திடீர்னு போன் பண்ணிக் கூப்டீங்க…?”
“என்ன ரெண்டு நாளாக காணலையா… சார் ஏன் முன்னாடியே சொல்லலை…”
“அதுவந்து இந்த விஷயம் யாருக்கும் தெரியாது… நாங்களே தேடிக் கண்டுபிடிக்கலாம்னு நினைச்சோம்… ஆனால் பையன் கிடைக்கல…. வெளியே தெரிஞ்சா பிரச்சனை அதனால கொஞ்சம் யாருக்கும் தெரியாமல் பையனை கண்டுபிடிச்சிக் குடுக்க முடியுமா…?”
“ஓகே சார்… நீங்க ஒரு கம்ப்ளைன்ட் குடுங்க.. நான் இப்போ இருந்தே வேலையை ஆரம்பிக்கிறன்… உஙஉங்க பையனோட போட்டோ ஒன்னு குடுங்க…”
“முரளியோட போட்டோவை சார்க்கிட்ட குடுங்க…” என்றார் தர்மராஜ் தனது அடியாட்களிடம். அவர்களும் போட்டோவை எடுத்து வந்து போலீஸ்காரரிடம் குடுத்தனர்.
“ஓகே உங்க பையனுக்கு விரோதிங்க யாராவது இருக்கிறாங்களா…? அவரோட ப்ரண்ட்ஸ் பற்றி தெரியுமா…”
“இல்லை சார் அவனுக்கு விரோதிங்க யாரும் இல்லை… ப்ரண்ட்ஸ் நிறைய பேரு இருக்கிறாங்க… அவங்க பிரச்சனை இல்லை… எனக்கு முரளியோட ப்ரண்ட்ஸ் மேல சந்தேகம் இல்லை…”
“சார் உங்களுக்கும் எதிரிங்க இல்லை, உங்க பையனுக்கும் எதிரிங்க இல்லைனு சொல்றீங்க… ஒருவேளை உங்க பையன் யாராவது லவ் பண்ணி அதுக்கு நீங்க சம்மதிக்கலையா…?”
“இல்லை சார் என் பையனுக்கு கல்யாணத்துக்கு வரன் பார்த்திட்டு இருக்கிறம்… அவனுக்கு லவ் எல்லாம் இல்லை…. ஒருவேளை அவன் லவ் பண்ணியிருந்தாலும் நான் ஒத்துக்குவன் சார்….”
“எந்தப் பக்கம் போனாலும் இடிக்குதே… நான் ஏதாவது விஷயம் தேவைனாலோ இல்லை உங்க பையனை கண்டுபிடிச்சிட்டு உங்களுக்கு கால் பண்றேன் சார்…”
“சரி சார் நான் வர்றேன்…”
“சார்… சார்… ப்ளீஸ் சார் என் பையனை எப்பிடியாவது கண்டுபிடிச்சி குடுத்திடுங்க… உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போகும் சார்…” என்று அழுதார் கவிதா.
“மேடம் அழாதீங்க… உங்க பையனை எப்படியாவது கண்டுபிடிச்சு கூட்டிட்டு வர்றேன்…” என்று சொல்லிவிட்டு அவர் சென்றார்.
கவிதாவோ, “என் பையன் பசி தாங்க மாட்டானே… சாப்டானா இல்லையானே தெரியலையே… கடவுளே நாங்க யாருக்கும் மனசாலகூட கெடுதல் நினைச்சது இல்லையே…” என்று அழுது கொண்டு இருந்தார்.
தேவசூரன் தனது வீட்டில் யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு கீழே இருந்த இருட்டு அறையில் ஒருவனைப் போட்டு அடித்துக் கொண்டு இருந்தான். அவனுடன் அவனது அடியாட்களும் நின்றனர்.
“சொல்லுடா… உன்கூட இருந்த மற்றவங்க யாரு… உண்மையை சொன்னா வலிக்காம கொல்லுவன்… பொய் சொன்ன உன்னோட சாவு எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும்… உன்னோட இருந்த ஒருத்தனை எனக்குத் தெரியும்… மற்றவங்களை மரியாதையா சொல்லிடு…” என்றவன் எதிரில் கட்டிப் போட்டு இருந்தவனை அடித்துக் கொண்டு இருந்தான். அடிவாங்கியவனோ தேவசூரனின் அடியை தாங்க முடியாமல் கதறினான். அவனின் உடல் எங்கும் இரத்தமாக இருந்தது.
எவ்வளவு அடித்தும் தேவசூரனுக்கு கோபம் குறையவே இல்லை. “இப்போ சொல்லப் போறியா இல்லை உன்னோட ஒவ்வொரு விரல்களையும் வெட்டவா…?” என்று கேட்டுக் கொண்டு அந்த விரலை வெட்ட கருவி ஒன்றை எடுத்து வரச் சொன்னான். தேவசூரனிடம் மாட்டியவனோ கதறினான். தேவசூரன் தனது கையில் இருந்த சிகரெட்டால் அவனின் கையில் சுட்டான். அவனோ வலியில் துடித்தான். அவன் கதறுவதை அங்கிருந்த வீடியோ மூலமாக பார்த்துக் கொண்டு இருந்த ஒரு ஜீவன் மகிழ்ச்சி அடைந்தது.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊