அகமித்ரா தூரத்தில் மரத்திற்கு அருகே யார்யாரோ நிற்பதை அறிந்தாள். ஆனால் ஆட்கள் யாரென்று சரியாக அடையாளம் காண அவளால் முடியவில்லை. எனவே சற்று வேகமாக நடந்து வந்து மரத்திற்கு அருகே வர சரியாக மின்னலும் மின்னியது. அதன் வெளிச்சத்தில் அங்கே நின்றிருந்தவர்களை அடையாளம் கண்டு கொண்டாள். அதுமட்டுமின்றி தேவசூரன் முரளியை மரத்தில் தொங்கவிடுவதையும் பார்த்து விட்டாள். அகமித்ரா முரளியை இப்போதுதான் அவர்கள் கொலை செய்கிறார்கள் என்று நினைத்தவள் “ஆஆஆஆஆஆஆஆஆஆ….” என்று அலறினாள். அவளது அலறல் சத்தத்தில் அவர்கள் திரும்பிப் பார்க்க அங்கே அகமித்ரா நின்றிருப்பது தெரிந்தது. தேவசூரனின் புருவங்கள் வளைந்தன.
அகமித்ராவிடம் செல்ல முயன்ற தனது ஆட்கள் தடுத்து நிறுத்தியவன், முரளியின் உடலை மரத்தில் தொங்க விட்டுவிட்டு கீழே இறங்கினான். அவனது ஆட்களை ஜூப்பை எடுத்துக் கொண்டு அங்கிருந்து செல்லுமாறு கூறினான். தேவசூரனின் பேச்சிற்கு எந்த எதிர்பேச்சும் பேசாதவர்கள், இப்போதும் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.
அவர்கள் சென்றதும் தேவசூரன் அகமித்ரா அருகில் வந்தான். அவன் அருகில் வந்ததும் பயத்தில் கத்த ஆரம்பித்தாள் அவள். அவளை நோக்கி தேவசூரன் முன்னேற, அகமித்ரா பின்னோக்கிச் சென்றாள். அவனும் எதுவும் பேசாமல் அவளை நோக்கி செல்ல, அகமித்ராவும் பின்னாடியே சென்றாள். இப்படியாக அந்த இடத்தில் இருந்து கொஞ்ச தூரம் அவளை நகர்த்திக் கொண்டு வந்திருந்தான் அவன்.
“இந்த நேரத்தில எங்க போயிட்டு வர்ற….?” என்று அவளிடம் கேட்டான்.
அதற்கு அவள், “நான் எங்க போயிட்டு வந்தா உனக்கு என்ன…? இப்படி அநியாயமா ஒருத்தரை கொலை பண்ற… உனக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா…? ச்சீ நீ எல்லாம் என்ன ஜென்மம்…. இரு உன்னைப் பற்றி போலீஸ்ல சொல்றன்….” என்றாள்.
அவள் சொல்வதைக் கேட்டு சத்தமாக சிரித்தான் தேவசூரன்.
“என்னைப் பார்த்து நடுங்கிற நீ, இப்போ போலீஸ்ல போய் இதை சொல்லப் போறியா….? நீ மட்டும் இந்த விஷயத்தை யார்க்கிட்டையாவது சொன்ன, உன்னை எதுவும் பண்ண மாட்டேன்… உன்னோட ஸ்கூல்ல பாம் வச்சிடுவன்….” என்றவன் சிகரெட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.
“என்ன மிரட்டுரியா….?”
“நோ… நோ நான் மிரட்டல நடக்கப் போறதை சொல்றன்… எனக்கு சொன்ன பேச்சு மாறி மாறி பேசுறது பிடிக்காது…. நான் ஒன்று சொன்னால் அது என்னைக்குமே மாறாது….” என்றவன் கண்களையே பார்த்தாள் அகமித்ரா.
பின்னர், “நீ பண்ற பாவத்துக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கும்… என்னோட ஸ்கூல் பிள்ளைகளுக்காக உன்னைப் பற்றி போலீஸ்ல சொல்லாம விட்டுடுறன்…. ஆனால் இதுக்கு கண்டிப்பா நீ பதில் சொல்லியே ஆகணும்…” என்றவள் அங்கிருந்து செல்லத் தொடங்கினாள். அவனும் அவள் பின்னாடியே வந்தான்.
“அதுதான் போலீஸ்ல சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டேன்ல இப்போ எதுக்கு என் பின்னாடியே வர்ற….?”
“உன் பின்னாடியே வர எனக்கு வேற வேலை இல்லை தானே… நான் என்னோட வீட்டிற்கு போறேன்…” என்றான். அதன் பிறகு இருவரும் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தது அந்தப் பயணம். அகமித்ரா அவளது வீட்டிற்கு அருகில் வரும் வரை அவள் பின்னாடியே வந்தவன், அவள் உள்ளே சென்றதும் தனது ஆளுங்களுக்கு கால் பண்ணி ஜீப்பை எடுத்து வரச் சொன்னான். ஜீப் வந்ததும் அதில் ஏறிச் சென்று விட்டான்.
அதிதி கட்டிலில் படுத்து தூங்கும் அவள் தாயின் அருகில் இருந்து படம் வரைந்து கொண்டிருந்தாள். அவளது தந்தை வந்து, “அதிதி பாப்பா என்ன பண்றாங்க…?” என்று கேட்டார்.
“அப்பா நான் படம் வரையுறன்…”
“அப்படியா என் தங்கம்…” என்று பிள்ளையின் நெற்றியில் முத்தம் வைத்து விட்டு, மனைவியின் கையைப் பிடித்துப் பார்த்தான். ஆம், அதிதியின் தந்தை வர்மன் ஒரு வைத்தியர். அவர் செய்வதைப் பார்த்த அதிதி, “அப்பா அம்மா எப்போ எந்திரிப்பாங்க….?”
“அம்மாக்கு காய்ச்சல் கண்ணு.. அதுதான் படுத்திருக்கா… கொஞ்ச நேரத்தில எந்திரிச்சிடுவா… நீ வா அதிதி, அப்பா உனக்கு சாப்பாடு தர்றேன்…”
“ஓகே அப்பா…” என்றவள் தந்தையிடம் தாவினாள். மகளை தூக்கிக் கொண்டு போய் டைனிங் டேபிளில் வைத்து விட்டு, சமையல் அறைக்குச் சென்று ஒரு தட்டில் தோசையும் தொட்டுக்க கறியும் எடுத்து வந்து அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விட்டான். அதிதியும் தந்தையை தொல்லை பண்ணாமல் சமத்தாக சாப்பிட்டாள்.
வீட்டிற்கு வந்த அகமித்ரா கதவை பூட்டிவிட்டு நேராக தனது அறைக்குச் சென்றவள் அங்கிருந்த கட்டிலில் விழுந்து அழ ஆரம்பித்தாள். தேற்றுவார் யாரும் இன்றி அழுதவள் அப்படியே உறங்கிப் போனாள்.
முரளியை தேடித் திரிந்தனர் போலீஸார். அவன் எங்கும் கிடைக்காமல் போக, அதை தர்மராஜிடம் நேரில் சொல்லலாம் என்று அவர் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வரும் வழியில் இருந்த மரத்தில் யாரோ தொங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்து, ஜீப்பை நிறுத்தி விட்டு, கீழே இறங்கிச் சென்றனர்.
கான்ஸ்டபிளிடம் இருந்த டார்ச்சை வாங்கி மரத்தில் அதன் வெளிச்சத்தைப் பிடித்தார். அங்கிருந்த கான்ஸ்டபிள், “சார் இது தர்மராஜ் சாரோட மகன் மாதிரி இருக்கு….” என்றார்.
அதற்கு அவரும், “ஆமா… இவனைத்தானே நாம இன்னைக்கு ஃபுல்லா தேடிட்டு இருக்கிறம்… இவன் என்னனா இந்த மரத்தில தொங்கிக்கிட்டு இருக்கிறான்… எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு…”
“சார் அவனோட கழுத்தை பாருங்க நான் ஒரு பொறுக்கினு எழுதியிருக்கு….”
“ம்… சரி முதல்ல தர்மராஜ் சாருக்கு தகவல் சொல்லுவோம்….” என்றவர் தர்மராஜிற்கு கால் பண்ணி விஷயத்தை சொன்னார். தர்மராஜ் உடனே அந்த இடத்திற்கு வந்தார். அவருடன் கவிதாவும் வந்திருந்தார்.
முரளியை பார்த்ததும், “ஐயோ… என்னோட பிள்ளை இப்படி தொங்கிறானே… என் பிள்ளையை யாரு இப்பிடி செய்தாங்கனு தெரியலையே… ஐயோ முரளி… என் தங்க மகனே….” என்று அழுது புலம்பினார்.
தர்மராஜ் இன்ஸ்பெக்டரிடம், “என்ன சார் இது… என் பையனை யாரு இப்படி பண்ணினது….? சொல்லுங்க சார்….” என்றார்.
இன்ஸ்பெக்டர் அவரிடம், “சார் கொஞ்சம் பொறுமையாக இருங்க… நாங்க உங்க வீட்டிற்கு வரும் வழியில்தான் இதைப் பார்த்தோம்… அதுதான் உடனே உங்களுக்கு கால் பண்ணோம்…. முதல்ல பாடியை போஸ்மாட்டத்திற்கு அனுப்பணும்… கொஞ்சம் டைம் குடுங்க சார்… இதைப் பண்ணினவனை கண்டிப்பாக உங்க முன்னாடி நிறுத்துவேன்…..” என்றான்.
“நிறுத்தியே ஆகணும்… இதற்கு காரணமானவனை நான் சும்மா விடமாட்டேன்…” என்றவர் மனைவியை சமாதானப்படுத்தச் செல்ல, இன்ஸ்பெக்டர் ரகுவோ நடக்க வேண்டியதைப் பார்த்தார்.
முரளியின் உடலை போஸ்மாட்டத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர்.
இன்ஸ்பெக்டர் ரகுவும் தர்மராஜூம் அவரது மனைவி கவிதாவும் உறவினர்கள் சிலரும் ஹாஸ்பிடலில் இருந்தனர். பெரிய இடம் என்றபடியால் மீடியாவும் வந்திருந்தது. அவர்களை ரகு தான் சமாளித்தான். முரளியின் போஸ்மாட்டம் முடிந்து அவனது உடல் தாய்தந்தையரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களை அனுப்பி வைத்து விட்டு, ரகு டாக்டரிடம் சென்றான்.
“டாக்டர் முரளியோட போஸ்மாட்டம் ரிப்போர்ட்ல என்ன இருக்கு…?” என்று கேட்டான். அதற்கு டாக்டர் சொன்ன பதிலில் அதிர்ச்சி அடைந்தான் ரகு.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊