01. அமிழ்தாய் நான் அமிலமாய் நீ..!

4.6
(80)

அமிழ்தாய் நான் அமிலமாய் நீ..!!

-ஸ்ரீ வினிதா-

நாயகன் – சாஷ்வதன்

நாயகி – வைதேகி

டீசர் – 01

திருமணம் முடிந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு தன்னுடைய மனைவியிடம் காதலைக் கூறப் போகின்றான் அவன்.

புதிதாக பதற்றம் சூழ்ந்து கொண்டது அவனுக்கு.

அவளுக்கும் தன்மீது கொள்ளைப் பிரியம் இருக்கின்றது என்பதை நன்கே அறிந்து வைத்திருந்தவனுக்கு உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது.

பெற்றோர்கள் செய்து வைத்த திருமணம் ஆகையால் நன்றாக அவளுடன் பழகி நட்பு வளர்த்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதன் பின்னரே தாம்பத்தியம் என்ற முடிவை அவனும் வைதேகியும் பேசி முடிவெடுத்திருந்தனர்.

இதோ நான்கே மாதங்களில் அவர்களுடைய நட்பு காதல் வரை வளர்ந்து விட்டிருந்தது‌.

காதல் மட்டுமா வந்தது..?

காதலுடன் சேர்ந்து அவள் மீது தாளாத மோகமும் அல்லவா அழையாத விருந்தாளியாக வந்துவிட்டது.

இக்கணமே காதலைக் கூறி அவளை இறுக அணைத்து அவளை தனக்குரியவளாக மாற்றி விட வேண்டும் என்ற காதல் வேட்கையில் அவனுடைய அறையை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து முடித்தவன் இப்போதே அவளை மேலே தங்களுடைய அறைக்கு அழைத்து வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என வேகமாக படிகளில் இறங்கினான்.

அங்கே அவனுடைய மனைவியோ அரை மயக்கத்தோடு சோபாவில் சாய்ந்திருக்க அதைக் கண்டவனுக்கோ உள்ளம் பதறியது.

அதே கணம் “அம்மா அண்ணி பிரக்னண்டா இருக்காங்க..” என்றாள் மருத்துவக் கல்லூரியில் கற்றுக்கொண்டிருக்கும் அவனுடைய தங்கை காயத்ரி.

அவ்வளவுதான் மொத்தக் குடும்பமும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்காத குறையாக தங்களுடைய சந்தோஷத்தை முகத்தில் அப்பட்டமாக வெளிப்படுத்த,

அவளுக்கு சிறு இதழ் முத்தத்தைக் கூட இதுவரை கொடுக்காமல் விலகி அவளுடைய காதலுக்காக காத்திருந்த அவளுடைய கணவனுக்கோ தலையில் இடி விழுந்தாற் போல இருந்தது.

இதுவரை அவன் அவளோடு கூடவே இல்லையே..!

அப்புறம் எப்படி குழந்தை..?

சட்டென தன் தலையை உலுக்கிக் கொண்டவன்,

“முட்டாள்தனமா பேசாத காயத்ரி.. அதுக்கெல்லாம் வாய்ப்பே கிடையாது.. அவளுக்கு உடம்புக்கு முடியல போல.. முதல்ல ஹாஸ்பிடல் போகலாம்..” என அங்கே குதூகலித்துக் கொண்டிருந்த அனைவரையும் அடக்கியவன் அதிர்ந்து விழித்துக் கொண்டிருந்த தன்னுடைய மனைவியை நெருங்கி தன் கைகளில் ஏந்திக் கொண்டான்.

“இன்னும் ரெண்டே மாசத்துல நானும் டாக்டர்தான் அண்ணா.. அண்ணி கன்ஃபார்மா பிரக்னண்டாதான் இருக்காங்க.. நம்பலைனா நீங்களே ஹாஸ்பிடல் போய் செக் பண்ணிப் பாத்துக்கோங்க..” என மெல்லிய கோபத்தோடு கூறினாள் காயத்ரி.

சாஷ்வதனின் உடலோ காயத்ரியின் வார்த்தைகளைக் கேட்டு இறுகியது.

அமிலம் – 01

பால் செம்பை தன்னுடைய கரங்களில் வைத்திருந்தவளுக்கு அதீத நடுக்கம் உடலில் தொற்றிக் கொண்டது.

அதே கணம் மனதிற்குள் சீற்றமும் முகிழ்த்தது‌.

திருமணம் செய்து வைப்பதாக கூறிய பெற்றோர்கள் ஏழே நாட்களில் திடீரென திருமணத்தையே நடத்தி முடித்து விட இவளுக்கோ அனைத்தும் கனவைப் போல இருந்தது.

இதோ பெற்றோர்களின் விருப்பப்படி அவர்கள் பார்த்த மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டி தாலியையும் வாங்கிக் கொண்டவள் முதல் இரவு அறைக்குள் நுழைவதற்கு தயங்கியவாறு நின்றிருந்தாள்.

கணவனைப் பற்றி அவளுக்கு எதுவும் தெரியாதே.

அவர் செய்யும் தொழிலும் அவருடைய பெயரையும் தவிர வேறு என்னதான் அவளுக்குத் தெரியும்..?

பேசிப் பழகுவதற்கு கூட இடம் கொடாது வேகமாக திருமணம் நடந்து முடிந்திருக்க தனியறையில் அவனை எதிர்கொள்ளும் தைரியமின்றி தயங்கி நின்றிருந்தாள் அவள்.

அவள் நம் நாயகி வைதேகி..!!

இப்போது திருமணத்திற்கு அப்படி என்ன அவசரம்..? நிச்சயதார்த்தத்தை மட்டும் முடித்துவிட்டு பேசிப் பழகுவதற்காகவது நேரம் கொடுத்திருக்கலாமே..? என மனதிற்குள் சீற்றமாக எண்ணிக் கொண்டவள் நடந்து முடிந்ததை மாற்ற இயலாதவளாய் தன்னுடைய சிந்தனைகளை ஒதுக்கி வைக்க முடிவெடுத்தாள்.

என்னதான் நடந்து முடிந்ததை மாற்ற முடியாது எனத் தள்ளி வைத்தாலும் கூட இந்தத் திருமணத்தை அவசரப்படுத்தி நடத்தியது மாப்பிள்ளை வீட்டார்தான் என அறிந்து வைத்திருந்தவளுக்கு அவர்கள் அனைவரின் மீதும் கோபம் எழுந்தது.

இதுவரை அவள் தன் கணவனோடு தனியாகக் கூடப் பேசியதில்லை.

ஜாதகம் பொருந்தியது ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கின்றது என இரு குடும்பங்களும் பேசித் தீர்த்து திருமணத்தை அவசர கதியில் நடத்தி முடித்து விட்டிருந்தனர்.

இப்போது அவளுக்குத்தான் அச்சமாக இருந்தது.

மணவறையில் கூட அவன் அவளோடு பேசவே இல்லையே.

‘நீயும்தான் அவர் கூட பேசலை..’ என அவளுடைய மனசாட்சியோ அவளுக்கு எதிராக பதில் கூற தன் மனசாட்சியின் தலையில் ஓங்கிக் கொட்டி அதனை அடக்கியவள்,

‘அத்தனை பேர் முன்னாடி நான் எப்படி அவர்கிட்ட பேசுறது..? இதுக்கு முன்னாடி பேசினது கூட கிடையாது..’ எனத் தன் மனசாட்சிக்குப் பதில் கொடுத்தாள் வைதேகி.

‘உன்ன பொண்ணு பாக்க வரும்போது அவர் கூட நீயே பேசி இருக்கலாம்ல..’ என மீண்டும் அடங்காது அவளிடம் கேள்வியைத் தொடுத்தது அவளுடைய மனசாட்சி.

‘அட பைத்தியமே, என்கிட்ட அவரைப் பிடிச்சிருக்கான்னு கூட எங்க அப்பா கேட்கவே இல்ல.. வைதேகிக்கு நாங்க பார்க்கிற மாப்பிள்ளை யாரா இருந்தாலும் பிடிக்கும்னு எல்லாருக்கு முன்னாடியும் சொல்லிட்டாரு… நான் மட்டும் மாப்பிள்ளை கூட தனியா பேசணும்னு சொல்லி இருந்தேன்னா அவ்வளவுதான்… குடும்பத்துக்கு அடங்காதவ அப்படி இப்படின்னு கழுவிக் கழுவி ஊத்தி இருப்பாரு… இதெல்லாம் தேவையா..?’ மீண்டும் சலித்துக் கொண்டாள் வைதேகி.

‘இட்ஸ் ஓகே வைதேகி இப்போ அந்த ரூமுக்குள்ள போனதும் நீயும் உன்னோட ஹஸ்பெண்ட் மட்டும்தான் இருக்க போறீங்க ஆசை தீர அவன்கூட பேசிக்கோ..’ என்ற மனசாட்சியை கொன்றுவிடும் வெறியில் திட்ட முயன்றவளின் தோளில் மென்மையான கரம் பதிய திகைத்துத் திரும்பிப் பார்த்தாள் வைதேகி.

அங்கே அவளுடைய கணவனின் தங்கை காயத்ரி நிற்க அவளைப் பார்த்ததும் அரண்டு போயிருந்த தன்னுடைய முகத்தை மாற்றிவிட்டு மெல்லிய புன்னகையை சிந்தினாள் அவள்.

“என்ன அண்ணி ரொம்ப நேரமா கதவுக்கு வெளியவே நின்னு திங்க் பண்ணிக்கிட்டு இருக்கீங்க..? ஏதாவது வேணுமா..? இல்லனா சாரி எதுவும் கம்பேர்டபிலா இல்லையா..? நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா..?” என அவள் அன்பாகக் கேட்க அவளுடைய மென்மையான வார்த்தைகளில் அவளுக்கோ மனம் சற்றே சமப்பட்டது.

“இல்லை காயத்ரி கொஞ்சம் டென்ஷனா இருக்கு…” என படபடப்போடு கூறிய அண்ணியை மிகவும் பிடித்துக் கொண்டது காயத்ரிக்கு.

“அச்சோ சோ ஸ்வீட் அண்ணி நீங்க… எங்க அண்ணாவும் உங்கள மாதிரி ரொம்ப ஸ்வீட்தான்.. அவர் கூட பேசினாலே உங்களுக்கு இந்த படபடப்பு எல்லாம் இல்லாம போயிரும்..” என்றவள் அந்த அறைக் கதவைத் திறந்து அவளை உள்ளே போகுமாறு விழிகளால் சைகை காண்பிக்க சரி என்பதைப் போல காயத்ரிக்கு தலையசைப்பைக் கொடுத்துவிட்டு அந்த அறைக்குள் காலடி எடுத்து வைத்தாள் வைதேகி.

அக்கணம் அவளை ஓடிவந்து ஒட்டிக்கொண்டது ஒரு விதமான நடுக்கம்.

இதற்குத்தான் காதல் திருமணம் செய்வது பெட்டர் என தன்னுடைய தோழிகள் கூறினரோ என்று அக்கணம் எண்ணிக்கொண்டாள் அவள்.

இதுவே காதலனுடைய அறையாக இருந்திருந்தால் அவளுக்கு இவ்வளவு தயக்கமும் பயமும் எழுந்திருக்காதே.

முன்னரே பேசிப் பழகி ஒரு விதமான புரிந்துணர்வுடன் அல்லவா அவர்களுடைய உறவு தொடங்கி இருக்கும்.

இப்போது யார் என்றே தெரியாத ஒருவனை வீட்டிற்காகத் திருமணம் செய்துவிட்டு அவள் தவிப்பதைப் போல எல்லாம் தவித்திருக்க தேவையில்லை அல்லவா..?

பெருமூச்சோடு அடுத்த அடியை எடுத்து வைத்தவள் மெல்ல தன்னுடைய பார்வையை உயர்த்தி படுக்கையில் அமர்ந்திருந்த அவளுடைய கணவன் சாஷ்வதனைப் பார்த்தாள்.

நான்கு பேர் படுத்து உருளும் அளவிற்கு இருந்த மிகப்பெரிய பஞ்சு மெத்தையில் காலுக்கு மேல் காலைப் போட்டவாறு அமர்ந்திருந்தான் அவன்.

பட்டு வேஷ்டி சட்டை எல்லாம் அணியவில்லை அவன்.

ஆர்ம் கட் பனியனும் இலகுவான ஷார்ட்ஸ் ஒன்றும் அணிந்து தன்னுடைய கரத்தில் அலைபேசியோடு அமர்ந்திருந்தவனைக் கண்டு திணறிப் போய் தன்னுடைய நடையை நிறுத்திவிட்டாள் வைதேகி.

இப்போது அவனுடைய பார்வையும் அவளைத்தான் மொய்க்கலானது.

இதற்கு மேல் இந்த இடத்தை விட்டு அசையவே மாட்டேன் என்பதைப் போல அவள் அசையாமல் நின்று விட அவனோ தன்னுடைய அலைபேசியை படுக்கையில் வைத்து விட்டு எழுந்து கொண்டான்.

எழுந்து கொண்டவன் அத்தோடு நின்றால் அவளுக்கு நிம்மதியாக இருந்திருக்குமே.. ஆனால் அவனோ கொஞ்சம் கொஞ்சமாக அவளை நெருங்கத் தொடங்க அவளுக்கோ கரங்களின் நடுக்கம் அதிகரித்து விட்டது.

‘ப்ளீஸ் இன்னைக்கு எதுவுமே வேணாம்… எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.. புரிஞ்சுக்கோங்க..’ என அவனிடம் கூறுவதாக நினைத்து தன் மனதிற்குள் மீண்டும் மீண்டும் இந்த வார்த்தைகளை பயத்தில் உருப்போட்டுக் கொண்டிருந்தாள் அவள்.

அவன் அருகே நெருங்க நெருங்க இவளுக்கோ வாயை விட்டு வார்த்தைகள் வெளிவர மறுத்தன.

வார்த்தைக்குப் பதிலாக வெறும் காற்று தான் வெளியே வர தடுமாறிப் போனவள் அச்சத்தோடு அவனுடைய முகத்தைப் பார்க்க அவனோ இன்னும் நெருக்கமாக அவளை நெருங்கி வந்திருந்தான்.

அவ்வளவுதான் பதற்றத்தில் இன்னும் கரங்கள் அதீதமாய் நடுங்க அவளுடைய கரத்தில் வைத்திருந்த பால் செம்போ தரையில் கணீர் என்ற சத்தத்தோடு விழுந்து பால் முழுவதும் தரையில் சிந்தியது.

அதில் பதறிப் போனவள் தன் வாயில் கை வைத்து இரண்டடி பின்னால் விலகி தரையில் சிந்திய பாலைப் பதற்றத்தோடு பார்த்தவாறு,

“சா… சாரி சாரி.. தெ… தெ.. தெரியாம…” என அவள் திணற,

“வைதேகி..” என அழுத்தமாக அதே கணம் சத்தமாக அழைத்தான் சாஷ்வதன்.

அந்த அழுத்தமான குரலில் அதிர்ந்து அவனுடைய முகத்தை அவள் கலவரத்தோடு பார்க்க,

“ஹேய் ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.. ஏன் இவ்வளவு டென்ஷன்..?” என அவன் சிறு புன்னகையை அவளை நோக்கிச் சிந்தியவாறு நிதானமாகக் கேட்க அப்போதுதான் அவளுக்கு நின்ற மூச்சு மீண்டும் வந்தது.

“இல்ல பால் தெரியாம….” என அவள் மீண்டும் கூற முயற்சிக்க,

“இட்ஸ் ஓகே… பால் தானே நோ ப்ராப்ளம்… உன்னோட புடவையை கொஞ்சம் மேல தூக்கு.. பால் பட்டு அழுக்காயிட போகுது.. முதல்ல இந்தப் பக்கம் வா..” என அவளை அழைத்து வந்து அங்கு இருந்த சோபா ஒன்றில் அவளை அமரச் செய்தவன்,

“என்ன பாத்தா பயமா இருக்கா..?” எனச் சிரித்தவாறு கேட்டான்.

அவனுடைய சிரிப்பில் இன்னும் சற்றே அமைதி அடைந்தாள் அவள்.

சற்றும் யோசிக்காமல் முதலில் அவள் ஆம் என்று தலையை அசைத்து விட வாய்விட்டு சிரித்து விட்டான் அவன்.

“ஹா… ஹா.. இதுவரைக்கும் நிறைய பொண்ணுங்க நான் ஹேண்ட்சமா இருக்கேன்னுதான் சொல்லி இருக்காங்க… நீ தான் என்ன பார்த்து பயமா இருக்குனு சொல்லி இருக்க..” அவன் இலகுவான குரலில் பேச அவனுடைய முகத்தை இப்போது நன்றாக நிமிர்ந்து பார்த்தவளுக்கோ அவன் நிஜமாகவே ஆணழகன்தான் என்ற எண்ணம் தோன்றியது.

“என்ன அழகா இருக்கேனா..?” என அவனோ ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்க பதறிப்போய் அவனுடைய முகத்திலிருந்து தன்னுடைய பார்வையை விலக்கியவள் தன்னுடைய கரங்களை உற்றுப் பார்க்கத் தொடங்கினாள்.

“ஓ மை காட்… நீ இவ்வளவு சென்சிடிவா இருப்பேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை… ஓகே இங்க உனக்கு பிடிக்காதது எதுவுமே நடக்காது வைதேகி.. நாம இதுவரைக்கும் பேசினது கிடையாதுல்ல..? பேசலாம்… பழகலாம்.. நீ ரிலாக்ஸா இரு..” என விழிகளை மூடித் திறந்தவன் மீண்டும் பால் சிந்திக்கிடந்த இடத்தை நெருங்கி அந்த பால் செம்பை எடுத்துவிட்டு தரையை சுத்தப்படுத்தத் தொடங்க

வேகமாக எழுந்து வந்து “நான் கிளீன் பண்றேன்..” என்றாள் அவள்.

“நோ.. இந்தப் புடவை உனக்கு ரொம்ப அழகா இருக்கு.. இப்படியே கிளீன் பண்ணினா புடவை எல்லாம் அழுக்காயிடும்… நான் பாத்துக்குறேன் நீ போ..” என்றவன் தரையை சுத்தப்படுத்திவிட்டு குளியலறைக்குள் நுழைந்து தன்னுடைய கரங்களைக் கழுவி விட்டு வெளியே வர,

அவள் இந்த அறைக்குள் வரும்போது இருந்த தயக்கமும் பயமும் அவளை விட்டு சற்றே அகன்றிருந்தது.

அதுவும் அவன் உனக்குப் பிடிக்காத எதுவும் இங்கே நடக்காது என அழுத்திக் கூறிய விதம் அவளுடைய மனதில் ஆழமாகப் பதிந்து விட அவன் மீது இருந்த கோபமும் சட்டென குறைந்து போனது.

‘பரவால்லையே ரொம்ப நல்லவனாதான் இருக்கான்..’ என எண்ணிக் கொண்டது அவளுடைய மனம்.

💐💜💐

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 80

No votes so far! Be the first to rate this post.

4 thoughts on “01. அமிழ்தாய் நான் அமிலமாய் நீ..!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!