பனிச்சாரல் -4

4.9
(9)

பனிச்சாரல் – 4

மேடை முழுவதும் அலங்கார விளக்குகளும், கண்ணை கவரும் மலர்களுமாக ஒளிர, அதற்கு இணையாக பொண்ணும், மாப்பிள்ளையும் அழகாக ஜொலித்தனர்.

லேசான முகச் சிவப்பும், சிறு படபடப்பும், ரூபாவை பேரழகியாகக் காட்டியது. அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் தனக்குள் ஏதோ யோசனையாக இருந்தான் மகேஷ்.

லேசாக அவனது தோளை இடித்த ரூபா, யாரும் தங்களைப் பார்க்கிறார்களா என்று லேசாக விழிகளைத் சுழற்றியவள், யாரும் கவனிக்கவில்லை எனவும் முகம் சிவக்க, “என்ன யோசனை” என்பதுப் போல் புருவத்தை உயர்த்தினாள்.

அவளைத் திருப்பிப் பார்த்தவன்,”ஒன்றுமில்லை.” என்பதுப் போல தலையசைத்து விட்டு திரும்பினான்.

அவர்களுக்கு எதிரே பக்கவாட்டில் இருந்த பெரிய திரையில், சற்று முன் அரங்கேறிய ரகசிய நாடகத்தைத், திரும்பத் திரும்பப் போட்டுக் கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்ததும் மகேஷின் முகம் முழுவதும் புன்னகை ஆக்கிரமிக்க, இப்போது வேண்டும் என்று ரூபாவின் தோளை இடித்துக் காட்டினான்.

அதைப் பார்த்த ரூபா, வெட்கத்தால் முகம் சிவக்க, மகேஷின் தோளில் முகம் புதைத்தாள். சிரிப்புடன் அவளை அணைத்தான் மகேஷ்.

இவ்வளவு நேரம் மகேஷ் இன்றைய நிகழ்வில் உயிர்ப்புடன் இல்லாமல், ஏதோ யோசனையில் இருப்பதைப் பார்த்த சித்தார்த்‌, ஒன்றும் செய்ய இயலாத தனது கையலாகத்தனத்தை எண்ணி நொந்துக் கொண்டிருந்தான். இப்போது தான் அவனுக்கு உயிர் வந்தது.

புன்னகையுடன் அவர்களிலிருந்து பார்வையை சுழற்றியவனின் கழுகுப் பார்வையில், அந்த பெரிய மேடையில் மற்றொரு ஜோடியின் தோள் இடியை கண்டதும், ‘ஐயோ!’ என்றானது.

‘எல்லாம் இந்த மகிழினியால் தான்…’ என்று மனதிற்குள் நூறாவது முறையாக திட்டிக் கொண்டவன், வேகமான எட்டுக்களை எடுத்து வைத்து அவர்களை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான்.

லேசாக கணவனை இடித்தார் சாந்தினி.

“என்னாச்சு சாந்தி? மயக்கம் வருதா?”என்று பாசமாக வினவினார் மகேந்திரன்.

அவரை ஆராய்ச்சியாகப் பார்த்த சாந்தினியோ,”என்ன ரொம்ப பாசம் வழியுது? நீங்க பண்ண திருகுத்தாளத்தை மறைக்க இந்த ட்ராமாவா”என்றார்.

“உண்மையிலே நீ என் மேல வந்து விழவும் பயந்துட்டேன் சாந்தி. என் பாசம் உனக்கு நடிப்பா தெரியுதா?” பாவமாக கேட்டார் மகேந்திரன்.

அவரை கோபமாகப் பார்த்த சாந்தினியோ,“இது என்ன புதுக்கதை? லேசாத் தானே இடிச்சேன்.” என்று விடாமல் வாக்குவாதம் செய்தார்.

‘ம்கூம்! இதுக்குப் பேர் லேசா இடிக்கிறதா? புல்டோசர் மாதிரி இடிச்சிட்டு…’ என்று மனதிற்குள் புலம்பியவர், வெளியவோ, “ஓ! லேசா இடிச்சியா? சரி எதுக்காக இடிச்ச?” என்று வினவினார்.

“உங்க பேத்தியை எங்க அனுப்பி வச்சீங்க?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு வினவினார் சாந்தினி.

“ ஐயோ சாந்தி! எனக்கு எதுவும் தெரியாது.”என்று பதறினார் மகேந்திரன்.

சாந்தி மீண்டும் அவரிடம் ஏதோ கூற வருவதற்குள், “என்ன வேணும் பாட்டி?”என்று ஆஜரானான் சித்தார்த்.

அவர்கள் இருவரின் முகப்பாவனையைப் பார்த்து‌ மேடையேறியவன், அவர்கள் வழக்காடிக்கொண்டிருந்ததை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருதான். பேச்சு திசைமாறுவதைக் கண்டதும் தான் தலையிட்டான்.

இப்போது மகிழினியைப் பற்றி பேசினால், அது சண்டையில் தான் முடியும் என்று அவனுக்கு நன்குத் தெரியும். அதனாலே தலையிட்டான்.

அவன் மேடை ஏறி சாந்தினி, மகேந்திரனிடம் முக மலர பேசிக் கொண்டிருப்பதைக் கண்டதும், அவனதுக் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி. இவ்வளவு நேரம் யாரோ போல கீழே அமர்ந்திருந்ததை மனம் வலிக்கப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சித்தார்த்தின் கேள்விக்கு,”சும்மா பேசி கொண்டிருந்தோம் ராசா…” என்று அவனது கையைப் பிடித்த சாந்தினி, அதற்கு பிறகு அவனை விடவே இல்லை. நிச்சயதார்த்தம் முடியும் வரை தனக்கருகிலே அவனை நிறுத்திக் கொண்டார்.

நிச்சயதார்த்தம் இளசுகளின் கேலி, கிண்டலுடன் நல்லபடியாக முடிந்தது.

 மகிழினி எங்கே என்பது போல் பேச்சுக்கள் எழாமல் இல்லை. அங்கே இருக்கிறாள், இங்கே இருக்கிறாள் என்று எப்படியோ அவளின் குடும்பத்தினர் சமாளித்தனர். வந்திருந்த உறவினர்களோ, நாகரீகம் கருதியோ‌, இல்லை சாந்தினியின் வாய்க்கு பயந்தோ, நமக்கு ஏன் வம்பு என்று கண்டும் காணாமலும் இருந்தனர்.

ஆனால் தங்களுக்குள் மகிழினி அங்கு இல்லாததைப் பற்றி கிசுகிசுத்துக் கொண்டனர்.

முகம் மாறாமல் சித்தார்த் சிரித்த முகமாகவே இருந்தான். இன்றைய விழா அவனுக்கு மிக முக்கியமானது. அவனது செல்லத் தங்கையின் விழாவல்லவா! ஆனால் அவனைக் கோபப்படுத்திப் பார்ப்பது போலவே அடுத்தடுத்து சம்பவங்கள் நடந்தேறியது.

வந்திருந்த உறவினர்கள் ஒவ்வொருவராக விடை பெற, பெண் வீட்டு ஆட்கள் மண்டபத்தில் இருந்தவாறே ஊருக்கு கிளம்ப முயன்றனர்.

“ வீட்டுக்கு வந்துட்டு போகலாம். இது என்ன அடுத்த இடமா? இப்படி மண்டபத்தோடு போக.“ என்று மகேந்திரனும், சாந்தினியும் அழைக்க.

“இல்லை சித்தப்பா! நேரமாச்சு…” என்று சமாளித்தார் சுபத்ரா.

ஆனால் அவரது முகத்தில் சுரத்தே இல்லை. தனது இளைய மகனின் இன்றைய நிலைக்குத் தான் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியே அவரை கொன்றுக் கொண்டிருக்கிறது. அவசர, அவசரமாக திருமணம் செய்து வைத்ததன் பலன், அவன் இன்று ஒற்றை மரமாக இருக்கிறான். மூத்தமகன் மனைவி, மகள் என்று குடும்பமாக இருக்க, மகளும் வருங்கால கணவருடன் சிரித்துப் பேசிக் கொண்டிருக்க. தனது கவலைகளை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடன் வளைய வரும் சித்தார்தைப் பார்த்தே அவரது இதயம் வலித்தது.

சாந்தினியும், மகேந்திரனும் சுபத்ராவையே பார்த்துக் கொண்டிருக்க,

குமார், தன் மனைவியின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, “இப்போ நாங்க கிளம்புறோம் மாமா. ரூபாவை கட்டிக் குடுத்துட்டா, நாளப்பின்ன நாங்க வந்துப் போயிட்டு தான் இருப்போம் மாமா. எதையும் நினைச்சு கவலைப்படாமல் ஃப்ரீயா விடுங்க.” என்றார்.

சமாதானம் படுத்துவதற்காக குமார் சொன்ன வார்த்தை சாந்தினியையும், மகேந்திரனையும் வதைத்தது.

”மாப்பிள்ளை! இது சம்பந்தம் போட்டதால வந்த உறவுக் கிடையாது. சுபத்ரா என் அண்ணன் பொண்ணு. எங்க ரெண்டு குடும்பத்துக்கும் அவ ஒருத்தி தான் இளவரசி. எங்க போதாத காலம் இவ்வளவு நாள் பிரிஞ்சு இருந்துட்டோம். அந்த கடவுள் மனசு வச்சதால எங்க காலம் முடியறதுக்குள்ள சுபத்ராவை பார்த்துட்டோம். ஆனால் இப்படி அவ மனசை கஷ்டப்படுத்துவோம்னு நினைக்கலை.”என்ற மகேந்திரனின் குரல் தழுதழுத்தது.

“நீங்க வருத்தப்பட அவசியமே இல்லை சித்தப்பா. எல்லாம் விதி தான் காரணம். இல்லை… இல்லை என்னோட கோழைத்தனம் தான் காரணம். நான் காதலிச்சு ஓடிப் போயிருக்கக் கூடாது. குமார் எவ்வளவோ சொன்னார் வீட்ல வந்து பேசி சம்மதம் வாங்கலாம்னு.. நான் தான் மறுத்துட்டேன். இப்போ உள்ள பொண்ணுங்களுக்கு உள்ள தைரியம் எனக்கில்லை. ”என்ற சுபத்ராவின் மனதில் மகிழினி வந்துப் போனாள்.

அவரது எண்ணவோட்டத்தைப் புரிந்துக் கொண்ட சித்தார்த்தின் முகத்திலோ ஏளனப் புன்னகை வந்துப் போனது.

அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாத சுபத்ரா, தலையை உலுக்கி மறுபடியும் பேச ஆரம்பித்தார்.” நான் எடுத்த முடிவு தவறா இருக்கலாம். ஆனால் என் குமார் தப்பானவர் கிடையாது. எத்தனை முறை குழந்தையோட வந்தேன். ஆனால் அப்பா, அம்மா என்னை மன்னிக்கவே இல்லை. திரும்ப உங்கக் கிட்ட வந்து நிக்கக் கூடாதுன்னு வீம்பா போனேன். விதி மறுபடியும் உங்களை சந்திக்க வச்சது. அது தான் பெரிய தப்பே. என் மேல உள்ள பாசத்துல என்னை ஏத்துக்கிட்டீங்க. ஆனால் அப்பாவும், அம்மாவும் என்னை மன்னிக்கவே இல்லை அதான் என் பையன் வாழ்க்கையில் விளையாடுறாங்க.”என்றார் சுபத்ரா.

“சுபத்ரா! என்ன பேச்சு இது? தெய்வமா இருக்குற பெரியம்மா, பெரியப்பாவை இப்படி சொல்லலாமா? அவங்க நமக்கு நல்லது தான் பண்ணுவாங்க.”என்றார் நரேந்திரன்.

“ அண்ணன் சொல்றது சரிதான் சுபா.” என்றார் சுரேந்திரன்.

 பெரிய அண்ணனைப் பார்த்து லேசாக சிரித்த சுபத்ரா,”நீங்க இன்னும் மாறவே இல்லைண்ணா. பாப்பா, சுபான்னு செல்லம் கொஞ்சிட்டு இருப்பீங்க. ஆனால் நான் அம்மாவையும், அப்பாவையும் ஏதாவது சொன்னா முதல் ஆளா சண்டைக்கு வந்துடுவீங்க. எப்பவும் அவங்களுக்கு அப்புறம் தான் நான். அவங்களும் என்னை நினைச்சுப் பார்க்கலை. ஊர் என்ன சொல்லும், உறவுக்காரவங்க என்ன சொல்லுவாங்கன்னு ஈசியா என்னை விட்டுக் கொடுத்துட்டாங்க.”என்று விரக்தியாக கூறினார்.

“அது வந்து…” என்று நரேந்திரன் ஏதோக் கூற வர.

“பழசெல்லாம் எதுக்குண்ணா? விட்டுடுங்க! விட்டுடுங்கன்னு சொல்றது எல்லாத்தையும் தான்.”

“சுபா! நீ என்ன பேசுறேன்னு யோசிச்சு பேசு.”என்றார் பத்மா.

“பத்மா! எதுக்கு சுபா கிட்ட கோபப்படுற? சுபா பேசுனது ஒன்னும் தப்பு கிடையாது. தப்பெல்லாம் உன் மகக் கிட்ட தான் இருக்கு.”

“அத்தை! எதுக்கு இப்போ மகிழை பத்தி பேசுறீங்க?” என்றார் பத்மா.

“பெரியம்மா! இப்போ நடக்குற எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் மகிழினி தான். எங்க சித்துவை அவாய்ட் பண்றதுக்காகவே அவங்க அண்ணன் நிச்சயதார்த்துல கூட இல்லாமல் போயிட்டா. அண்ணனோட வாழ்க்கையைப் பத்தி கொஞ்சமாவது

நினைச்சாளா? கூடப் பிறந்த அண்ணனா இருந்தா பாசம் இருக்கும்.” என்றாள் ஸ்வேதா.

ஸ்வேதாவின் பேச்சில்‍, எல்லோரும் வாயடைத்து போயினர்.

இவ்வளவு நேரம் பதட்டமாக நகங்களை கடித்துக் கொண்டிருந்த சாஹித்யாவோ, தோழியின் கைகளைப் பிடித்து அமைதியாக இருக்குமாறு கண்களால் மன்றாடினாள்.

 அங்கு தன்னையும், மகிழினியையும் வைத்து நடக்கும் வாக்குவாதத்தைப் பார்த்து கொதிநிலைக்கு சென்றான் சித்தார்த். வார்த்தைகளை விடக்கூடாது என்று கண்களை மூடி தன்னை நிதானப்படுத்த முயன்றுக் கொண்டிருந்தான்.

அதே போல நிச்சயத்தார்த்த விழாவில் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டிருந்த மகேஷோ, தங்கையின் பாசத்தையே கேலி செய்யவும் கோபத்தில் வார்த்தைகளை விட்டான்.

“இங்கே பாரு ஸ்வேதா! சஹியோட ஃப்ரெண்டுங்குற முறையிலே, சின்ன வயசுல இருந்து உன்னைத் தெரியும். மனசுல வச்சுக்காமல் எதுவா இருந்தாலும் பட்பட்டுன்னு பேசுவ. அதுக்காக எல்லா இடத்திலும் அப்படியே இருக்க முடியாது. பார்த்து பேசு.எனக்கும், என் தங்கை மகிழினிக்கும் இடையே உள்ள பாசத்தைப் பத்தி யாரும் பேச வேண்டாம். அவ எந்தத் தப்பும் பண்ணலை. நான் தான் தப்பு பண்ணிட்டேன். கொஞ்சமாவது என் தங்கையைப் பற்றி நான் நினைத்து இருக்கணும். என் வாழ்க்கை முக்கியம்னு நினைச்சுட்டேன். நான் தான் சுயநலவாதி.” என்று நா தழுதழுக்கக் கூறினான் மகேஷ்.

அவனது பேச்சில் இவ்வளவு நேரம், வெட்கமும், பூரிப்புமாக இருந்த ரூபாவின் வதனம் களையிழந்தது. மகேஷை கலங்கிய கண்களுடன் பார்த்தாள்.

ஸ்வேதா ஏதோக் கூற வர…

சித்தார்த்தின் பொறுமை எல்லையைக் கடக்க, தனது அண்ணனைப் பார்த்து முறைத்தான்.

அவனது பார்வையின் பொருள் புரிய, “ஸ்வேதா! வாயை மூடு…” என்று மனைவியை அடக்கினான் வேதாந்த்.

“நான் ஒன்னும் தப்பா சொல்லலங்க…”என்று ஸ்வேதா ஏதோ கூற வர.

“ப்ச்! வாயை மூடு… உன்னை யாரும் பஞ்சாயத்துக்கு கூப்பிடலை. இங்கே இவ்வளவு பேரு இருக்கோம். யாராவது வாயைத் திறந்தாங்களா? உனக்கு ஏன் இந்த அதிங்கபிரசங்கித்தனம்?” என்று மனைவியிடம் கடிந்துக் கொண்டான் வேதாந்த்.

அவனது கோபத்தில் வாயை மூடிக் கொண்டாள் ஸ்வேதா.

சித்தார்த்தின் பார்வை எல்லோரையும் ஒரு முறை வலம் வந்தது.

தலைக்குனிந்து, கலங்கிய கண்களை மறைக்க முயன்றுக் கொண்டிருந்த ரூபாவைப் பார்த்ததும் முகம் கடினமுற, “மாப்பிள்ளை!”என்று அழுத்தமாக அழைத்தான் சித்தார்த்.

அவனது குரலில் திடுக்கிட்டுப் பார்த்தான் மகேஷ்.

“நிச்சயத்தார்த்தம் முடிந்தாலே பாதி திருமணம் முடிந்தது போல தான். ரூபா உங்களோட சரிபாதி. அது உங்க மைண்ட்ல பதியல போல. அவ்வளவு ஈஸியா நீங்க அவளை விட்டுக் கொடுத்துட்டீங்க. அவ முகத்தைப் பாருங்க. இன்றைய நாளோட சந்தோஷம் அவ முகத்துல இருக்கா. இங்கே நடக்குற விஷயத்துக்கு கோபப்படணும்னா, நான் தான் கோபப்படணும். நானே பொறுமையா இருக்கேன். நம்ப குடும்பம்னு நான் யாரையும் விட்டுக் கொடுக்காமல் தான் இருக்கேன்.”என்ற சித்தார்த்தின் பார்வையில், தான் செய்த தவறை புரிந்துக் கொண்டான் மகேஷ்.

தனக்கு அருகில் இருப்பவள் முகத்தைப் பார்க்க, அவளது முகமோ கலங்கியிருந்தது.

“சாரி ரூப்ஸ்!” என்ற மகேஷ் ரூபாவின் கையை பிடிக்க போக, அவளோ விலகினாள்.

காலையிலிருந்து பட்டும் படாமலும், உரிமையாக உரசிக் கொண்டிருந்தவளின் விலகல், அவனை வதைத்தது. ‘இனிமையாக ஆரம்பித்த விழாவில், சிறு அபஸ்வரமாக அந்த நிகழ்வு.

சற்று பொறுமையாக இருந்திருக்கலாம்.’என்று எண்ணிப் பெருமூச்சு விட்ட மகேஷின் முகமும் கலங்கியது.

இருவரது முகவாட்டத்தைப் பார்த்த, சித்தார்த், ‘எல்லாம் அந்த அவசரக்குடுக்கையால தான். இன்னைக்கு என் தங்கச்சிக்கு முக்கியமான நாள். அவ எவ்வளவு சந்தோஷமா இருக்கணும். ஆனால் அவ கலங்கித் தவிக்கிறா. ஆனால் அந்த அவசரக்குடுக்கை நிம்மதியாத் தான் இருப்பா.’என்று மனதிற்குள் மகிழினியை வறுத்தெடுத்தவன்,

“மகேஷ்! என் தங்கை கல்யாண சம்பந்தமான விஷயத்துல நான் இல்லாமல் எதுவும் நடக்காது. அப்படி இருக்கும் போது நிச்சயதார்த்தத்துக்கு நான் வரமாட்டேன் எப்படி நினைக்கலாம். எல்லாத்தையும் எதிர்கொள்ள தயாராக இருக்கணும்னு உங்க தங்கைக்கு புரிய வைங்க.

 கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு மாசம் டைம் இருக்கு. அதுக்குள்ள உங்க தங்கைக்கு புரிய வச்சு கல்யாணத்துக்கு வரச் சொல்லுங்க. இல்லை இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க.” என்று இறுக்கமான குரலில் கூறினான்.

“நிறுத்துங்க மச்சான்!” என்று கோபம் கொப்பளிக்கும் குரலில் மகேஷ் கத்த.

“என்ன கல்யாணத்தை நிறுத்தணுமா?” என்று ஏளனமாக வினவினான் சித்தார்த்.

சற்றுத் தள்ளியருந்த ரூபாவை இழுத்து அணைத்தவன், “ரூபா என் பொண்டாட்டி. ரூபா தான் என் பொண்டாட்டி. உங்கத் தேவையில்லாத பேச்சை நிறுத்துங்க.”என்று பல்லைக் கடித்து சொன்னவன், தன் அணைப்பிலிருந்து விலக முயன்றுக் கொண்டிருந்த ரூபாவைப் பார்த்து, “இப்போ எதுக்கு விலகணும்னு நினைக்குற? இந்த ஜென்மத்துல மட்டும் இல்லை, எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் தான் உனக்கு புருஷன். என்னை விட்டு போகணும்னு கனவுல கூட நினைக்காதே.”என்று கோபமாக கூறினாலும், அவனது கண்களில் இருந்து வழிந்த காதலைப் பார்த்தவளது கண்களிலும் காதலோடு, கண்ணீரும் பெருகியது. உரிமையாக அவனது தோளில் சாய்ந்தாள் ரூபா.

இவ்வளவு நேரம் பதட்டமாக இருந்த குடும்ப உறுப்பினர்கள் மனதில் நிம்மதி மலர்ந்தது.

மகேஷிற்கு ரூபா எவ்வளவு முக்கியம் என்பதை ஆழமாக எல்லோருக்கும் உணர்த்தியிருந்தான் சித்தார்த்.

தங்கை மேல் எவ்வளவு பாசம் என்று எல்லோரும் சித்தார்த்தை பெருமையாக எண்ணினர். ஆனால் ஒருத்திக்கு மட்டும் தான் அவன் மகிழினியை விட்டுக்கொடுக்காதது நன்கு புரிந்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!