மனதில் குழப்ப மேகங்கள் சூழ்ந்திருக்க எந்த வேலையிலும் ஈடுபட முடியாது ஒரு விதமான தவிப்பிலேயே தன்னுடைய நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தாள் வைதேகி.
அக்கணம் அலுவலகத்திற்கு சென்ற சாஷ்வதனோ சென்ற வேகத்திலேயே மீண்டும் வீட்டிற்கு வந்துவிட அவளுக்கோ புருவங்கள் உயர்ந்தன.
“என்னங்க… இப்போ தானே ஆபீஸ் போனீங்க..? ஒன் ஹவர் கூட ஆகலையே… ஏதாவது மறந்து வச்சிட்டு போயிட்டீங்களா..?” எனக் கேட்டவளை நெருங்கி வந்தவன் அவளுடைய கரங்களை அழுத்தமாகப் பற்றிக் கொண்டான்.
“வைதேகி நான் நம்ம பிஸ்னஸ் விஷயமா அர்ஜெண்டா மலேசியா போகணும்.. ஆல்ரெடி உன்கிட்ட புது பிரான்ச் ஓபன் பண்றத பத்தி பேசி இருந்தேனே.. அதுல கொஞ்சம் ப்ராப்ளம் ஆயிருச்சு.. நான் போனா மட்டும்தான் அந்த பிரச்சனையை என்னால மேனேஜ் பண்ண முடியும்.. இங்க இருந்துகிட்டே என்னால அந்த பிரச்சனையை ஃபுல்லா சால்வ் பண்ண முடியாது.
சோ நான் கிளம்பட்டுமா..?” என கேட்டவனின் கரங்களை தானும் பற்றிக் கொண்டவள்,
“எப்போ வருவீங்க..?” என்ற கேள்வியைத்தான் முதலில் கேட்டாள்.
“தெரியல வைதேகி.. லாங் ப்ராசஸ்னுதான் நினைக்கிறேன்.. பிகாஸ் எல்லாமே கொலாப்ஸ் ஆயிடுச்சு.. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணும்.. சாப்பாடு தூக்கம் எல்லாத்தையும் மறந்து மறுபடியும் எல்லாத்தையும் ஸ்டார்ட் பண்ணா மட்டும்தான் அட்லீஸ்ட் மூணு மாசத்துலயாவது என்னால இந்த வேலைல இருக்கிற பிரச்சனையை சரி பண்ண முடியும்..” என அவன் சற்று கலக்கமாகக் கூற அவனைத் தவிப்போடு பார்த்தாள் அவள்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அவனை விட்டு பிரிந்து இருக்க வேண்டுமா..?
அவளால் முடியுமா..?
அலுவலகம் சென்ற பின்பு கூட அவன் இல்லாமல் மனம் தவிக்கின்றதே..!
மூன்று மாதங்கள் எப்படி அவன் இன்றி இருப்பது..?
அவனுடைய முகத்தில் தெரிந்த கலவரத்தில் பிரச்சனை மிகவும் பெரியது என்பதை உணர்ந்து கொண்டவள் பெருமூச்சோடு “சரிங்க.. டோன்ட் வொரி… உங்களால எல்லாத்தையும் சரி பண்ண முடியும்.. சரி பண்ணிட்டு சீக்கிரமே வாங்க..” எனக் கூறினாள்.
“உன்ன என் கூடவே கூட்டிட்டு போயிடலாம்னுதான் திங்க் பண்ணினேன்… பட் அங்கே என்னோட உழைப்பு ரொம்ப அதிகமா இருக்கும் வைதேகி.. நீ ரொம்ப லோன்லியா பீல் பண்ணுவ.. என்னால உன் கூட ஸ்டே பண்ணக் கூட முடியாது.. பட் ஐ அம் ஷோர் சீக்கிரமா எல்லாத்தையும் முடிச்சிட்டு இங்க வந்துருவேன்.. பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணதுக்கப்புறம் உன்னையும் கூட்டிட்டுதான் போவேன்.. நீ ஓகே தானே..?” என மீண்டும் அவன் தவிப்பாய் கேட்டவாறு அவளுடைய கன்னங்களைப் பற்றிக்கொள்ள இவளுக்கோ விழிகள் கலங்கி விடுவேன் என அடம்பிடிக்கத் தொடங்கின.
“இட்ஸ் ஓகேபா.. எனக்குப் புரியுது.. நீங்க முதல்ல எல்லா பிரச்சனையும் முடிச்சிட்டு வாங்க.. மூணு மாசம்தானே, கண் மூடி திறக்கறதுக்குள்ள போயிரும்.” என தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு அவனையும் சமாதானம் செய்தவளை இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான் சாஷ்வதன்.
அவளை விட்டுப் பிரிந்து போவதில் அவனுக்கு சிறு துளி கூட இஷ்டமே இருக்கவில்லை.
என்றாலும் அவனுடைய இத்தனை வருட உழைப்பு நொடியில் சரிந்து போவதை அவன் விரும்பவில்லை.
முதலில் தன்னுடைய உழைப்பைக் காப்பாற்றி அதை உறுதியாக்க வேண்டும் என்ற முடிவோடு அவன் மலேசியாவிற்கு கிளம்பத் தயாரானான்.
உழைப்பை காப்பாற்றுவதற்காக கிளம்பியவனுக்கு தன்னுடைய வாழ்க்கை தலைகீழாக கவிழ்ந்து அவனைப் பாடாய் படுத்தப் போவதை அக்கணம் அவன் அறியவில்லை.
அன்றைய நாளே அவன் இந்தியாவில் இருந்து மலேசியா புறப்பட்டு விட கொஞ்சம் கொஞ்சமாக ஆழ்ந்த தனிமையில் சிக்கியது போல உணரத் தொடங்கினாள் வைதேகி.
அவன் அருகே இருந்தபோது தோன்றாத உணர்வுகள் எல்லாம் அவன் இல்லாத போது அதிகமாகத் தோன்ற அவனுடைய அணைப்பும் அருகாமையும் வேண்டுமென தவியாய் தவிக்கத் தொடங்கியது அவளுடைய மனம்.
நாட்களோ மெல்ல மெல்லக் கரையத் தொடங்க இவளுக்கோ அவளுடைய கைத்தொலைபேசியுடன் நாட்கள் கரையலானது.
அங்கே மிகவும் பிஸியாக இருப்பவன் குறிப்பிட்ட சில நேரங்களில் தவறாது அவளுக்கு அழைத்துப் பேசி விடுவான்.
இவளும் அந்த நேரத்தில் மற்ற எல்லா வேலையையும் மறந்து விட்டு அவன் அழைப்பதற்காக காத்திருந்து திரையில் அவனுடைய முகத்தைக் கண்டதும் “சீக்கிரமா வந்துடுங்களேன்..” எனக் கூறுவதை வாடிக்கையாக்கி கொண்டாள்.
தொலைதூரம் ஒன்றும் பிரிவை ஏற்படுத்திவிடுவதில்லை.
அது மீண்டும் சேர வேண்டும் என்ற ஏக்கத்தையே உறவுகளுக்கு இடையே மறைமுகமாக உருவாக்கி விடுகின்றது.
இவர்களுடைய தற்காலப் பிரிவு ஒருவர் மீது மற்றவர் கொண்ட காதலை மெல்ல மெல்லத் தூண்டி விட தங்களின் இணையை காண்பதற்காக காதலோடு காத்திருந்தனர் அந்த புதுமண தம்பதியினர்.
இருவரின் காதல் உணர்வுகளும் துளிர்த்து விட மாதங்களோ கரையத் தொடங்கியிருந்தன.
கிட்டத்தட்ட மூன்றரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தான் சாஷ்வதன்.
இந்தியாவிற்கு வருவதை தன்னுடைய அன்னையிடம் மாத்திரமே கூறியவன் வைதேகியிடம் தான் வருவதைப் பற்றி எதுவும் கூற வேண்டாம் என்றும் அவளை அவளுடைய அம்மாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்று வரும்படியும் கூறிவிட அவனின் நோக்கம் புரிந்து கொண்ட கலாவோ வைதேகியை அழைத்துக் கொண்டு அவளுடைய பிறந்த வீட்டிற்குச் சென்றிருந்தார்.
அவனோ தங்களுடைய வீட்டிற்குள் நுழைந்த கணம் காயத்ரியையும் கஜனையும் அணைத்து விடுவித்தவன் தன்னுடைய சர்ப்ரைஸ் பிளானைப் பற்றிக் கூற கஜனுக்கும் காயத்ரிக்கும் கொண்டாட்டமாகிப்போனது.
“ஹேய் காயூ… இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க அண்ணி வந்துருவா, அவ வந்தா மேல மட்டும் அவளை அனுப்பிடாத.. எப்படியாவது அவகிட்ட பேச்சு கொடுத்து ஹாலிலேயே வச்சுக்கோ..” எனக் காயத்ரியிடம் கூறியவன் கஜனை மட்டும் தன்னுடைய உதவிக்கு அழைத்துக் கொண்டான்.
தன்னுடைய அறை முழுவதையும் அவளுக்குப் பிடித்தது போல அலங்கரிக்க புதுவிதமான ஐடியாக்களை கொடுத்து அவனுக்கு உதவினான் கஜன்.
அடுத்த அரை மணி நேரத்தில் கீழே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க,
“டேய் கஜா… அவ வந்துட்டா போல.. நீ கீழ போ… மீதிய நான் பார்த்துக்கிறேன்…” என்றவன் கர்ஜனை அனுப்பி விட்டு ரோஜா மலர்களை ஆங்காங்கே பூங்கொத்துக்களாக வைத்தான் புதிதாக காதல் கொண்ட நம் நாயகன்.
இதைப் பார்த்ததும் என்னுடைய காதல் மனம் அவளுக்கு நிச்சயம் புரியும் என எண்ணியவனுக்கு முகம் முழுவதும் மகிழ்ச்சி ரேகைகள் சூழ்ந்தன.
திருமணம் முடிந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு தன்னுடைய மனைவியிடம் காதலைக் கூறப் போகின்றான் அவன்.
புதிதாக பதற்றம் சூழ்ந்து கொண்டது அவனுக்கு.
அவளுக்கும் தன்மீது கொள்ளைப் பிரியம் இருக்கின்றது என்பதை நன்கே அறிந்து வைத்திருந்தவனுக்கு உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது.
பெற்றோர்கள் செய்து வைத்த திருமணம் ஆகையால் நன்றாக அவளுடன் பழகி நட்பு வளர்த்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதன் பின்னரே தாம்பத்தியம் என்ற முடிவை அவனும் வைதேகியும் பேசி முடிவெடுத்திருந்தனர்.
இதோ நான்கே மாதங்களில் அவர்களுடைய நட்பு காதல் வரை வளர்ந்து விட்டிருந்தது.
காதல் மட்டுமா வந்தது..?
காதலுடன் சேர்ந்து அவள் மீது தாளாத மோகமும் அல்லவா அழையாத விருந்தாளியாக வந்துவிட்டது.
இத்தனை நாட்கள் அவளை விட்டுப் பிரிந்திருந்த ஏக்கம் வேறு அவனைப் பாடாய்படுத்த,
இக்கணமே காதலைக் கூறி அவளை இறுக அணைத்து அவளை தனக்குரியவளாக மாற்றி விட வேண்டும் என்ற காதல் வேட்கையில் அவனுடைய அறையை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து முடித்தவன் இப்போதே அவளை மேலே தங்களுடைய அறைக்கு அழைத்து வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என வேகமாக படிகளில் இறங்கினான்.
மனம் முழுவதும் மகிழ்ச்சி ததும்பியது.
ஆம் அவன் நினைத்ததைப் போலவே அவனுடைய மனைவி வந்துவிட்டிருந்தாள்.
ஆவலாக ஆசையாக அவளுடைய முகத்தைப் பார்த்து விட வேண்டும் என துடியாய் துடித்தது அவனுடைய மனம்.
அங்கே அவனுடைய மனைவியோ அரை மயக்கத்தோடு சோபாவில் சாய்ந்திருக்க அதைக் கண்டவனுக்கோ உள்ளம் பதறியது.
அவளுடைய சோர்ந்த தோற்றத்தைக் கண்டு பதறிப் போனான் அவன்.
அதே கணம் “அம்மா அண்ணி பிரக்னண்டா இருக்காங்க..” என்றாள் மருத்துவக் கல்லூரியில் கற்றுக்கொண்டிருக்கும் அவனுடைய தங்கை காயத்ரி.
அவ்வளவுதான் மொத்தக் குடும்பமும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்காத குறையாக தங்களுடைய சந்தோஷத்தை முகத்தில் அப்பட்டமாக வெளிப்படுத்த, இவனுக்கோ முகத்தில் இருந்த மகிழ்ச்சி யாவும் நொடியில் வடிந்து போயின.
என்ன கூறுகிறாள் இவள்..?
வைதேகி எப்படி கர்ப்பமாக இருக்க முடியும்..?
அவளுக்கு சிறு இதழ் முத்தத்தைக் கூட இதுவரை கொடுக்காமல் விலகி அவளுடைய காதலுக்காக காத்திருந்த அவளுடைய கணவனுக்கோ தலையில் இடி விழுந்தாற் போல இருந்தது.
இதுவரை அவன் அவளோடு கூடவே இல்லையே..!
அப்புறம் எப்படிக் குழந்தை..?
“ரப்பிஷ்..” என முணுமுணுத்தன அவனுடைய தடித்த அதரங்கள்.
சட்டென தன் தலையை உலுக்கிக் கொண்டவன்,
“முட்டாள்தனமா பேசாத காயத்ரி.. அதுக்கெல்லாம் வாய்ப்பே கிடையாது.. அவளுக்கு உடம்புக்கு முடியல போல.. முதல்ல ஹாஸ்பிடல் போகலாம்..” என அங்கே குதூகலித்துக் கொண்டிருந்த அனைவரையும் அடக்கியவன் அதிர்ந்து விழித்துக் கொண்டிருந்த தன்னுடைய மனைவியை நெருங்கித் தன் கைகளில் ஏந்திக் கொண்டான்.
சோர்ந்து போயிருந்தவள் தன்னுடைய கணவனின் குரலைக் கேட்டதும் பெரும் அதிர்ச்சியோடு அவனுடைய முகத்தைப் பார்த்தாள்.
வந்து விட்டானா..?
எப்போது வந்தான்..?
என்னிடம் கூறவே இல்லையே..!
எப்படியோ அவன் இங்கே வந்து சேர்ந்ததே போதும் என எண்ணியவள் தான் ஒன்றும் கர்ப்பமாக இல்லை என்பதைக் கூற முயன்ற கணம்,
“இன்னும் ரெண்டே மாசத்துல நானும் டாக்டர்தான் அண்ணா.. அண்ணி கன்ஃபார்மா பிரக்னண்டாதான் இருக்காங்க.. நம்பலைன்னா நீங்களே ஹாஸ்பிடல் போய் செக் பண்ணிப் பாத்துக்கோங்க..” என மெல்லிய கோபத்தோடு கூறினாள் காயத்ரி.
OMG pavummmmm
Ayyayyo enna nadakka pohudho theriyalaiey sis