சுமதி பயந்தது போல் இல்லாமல் இந்த முறை ரேகாவோ சமர்த்தாக கிளம்பியிருந்தாள்.
“கிளம்பும்போது எந்த பரபரப்பும் வேண்டாம். காலை உணவை வெளியில் பார்த்துக் கொள்ளலாம்.” என்று பாஸ்கர் கூறியிருக்க.
கணவர் கூறியதைக் கேட்ட சுமதியோ, மனதிற்குள் கடவுளுக்கு நன்றி செலுத்தி விட்டு, எல்லோரையும் விரட்டி ஏழு மணிக்கே இரயில் நிலையத்திற்கு அழைத்து வந்து விட்டார்.
“அம்மா! கொஞ்சம் பொறுமையாவே வந்திருக்கலாம். ட்ரைன் கிளம்ப இன்னும் நேரம் இருக்கு.” என்று ரேகா புலம்ப.
“சாப்பிட்டு வந்தால் டைம் சரியாக இருக்கும். அப்படியும் போரடிச்சா இந்த ரெயில்வே ஸ்டேஷனை மூன்று முறை சுத்தி வா.”என்றார் சுமதி.
“மூன்று முறை சுத்துனா, ட்ரெயின் சீக்கிரம் வந்துடுமா அம்மா?”என்று கண் சிமிட்டினாள் ரேகா.
“ட்ரெயின் சீக்கிரம் வராது. உன் கொழுப்பு கொஞ்சம் குறையும்.”என்று சுமதி முறைக்க.
“நோ வன்முறைமா. நான் சமர்த்தா இருக்கேன்.”என்று ஜகா வாங்கிய ரேகாவோ, மகிழினியை பார்க்க.
அவளோ அமைதியாக தனக்குள் யோசித்துக் கொண்டிருந்தாள்.
தனது தோழியை லேசாக இடித்த ரேகாவோ,”என்ன?” என்பது போல் பார்க்க.
“ஒன்றுமில்லை…” என்பது போல் தலையசைத்தாள் மகிழினி.
இவர்களது மௌன மொழியை கவனிக்காமல் சுமதியும், பாஸ்கரும் நடக்க.
அவர்கள் பின்னே இவர்களும் தொடர்ந்தனர்.
“அப்பா! எந்த ஹோட்டலுக்கு போறோம்?”என்று மீண்டும் கலகலத்தாள் ரேகா.
மகளைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்த பாஸ்கரோ,”லக்கேஜை வச்சுக்கிட்டு அலைய முடியாது. வெயிட்டிங் ஹால்ல நீங்க எல்லோரும் வெயிட் பண்ணுங்க. நான் போய் டிபன் வாங்கிட்டு வந்துடுறேன்.”என்றார்.
அதைக் கேட்டதும் ரேகாவிற்கு ஏமாற்றமாகி விட்டது.
“அப்பா! ஹோட்டல்லையே போய் சாப்பிடலாம்பா! அப்போ தான் பிடிச்சது சாப்பிடலாம்.” என்றுக் கூற.
சுமதியோ, “நம்ம எல்லோருக்கும் என்ன வேணும்னு கேட்காமல் அப்பா எதாவது வாங்கிட்டு வருவாரா? அதுவும் மகிக்கு என்ன வேணும்னு கேட்காமல் போவாரா?”என.
“ அது வந்துமா சூடா சாப்பிடலாம்னு தான் சொன்னேன்.” என்று ரேகா தனது சமாளிக்கப் பார்க்க.
“உனக்கு சூடா இருந்தாலே பிடிக்காது. அதுவுமில்லாமல் இங்கே இருக்குற கடையிலிருந்து வாங்கிட்டு வர்றது, அப்படி ஒன்னும் சீக்கீரம் ஆறிடாது.” என்று மகளை முறைத்துப் பார்த்துக் கொண்டே சுமதி கூற.
பாஸ்கர் புன்னகைத்துக் கொண்டே அவர்களுக்கு என்ன வேண்டும் என்று விசாரித்துக் கொண்டு அங்கிருந்தார்.
தவத்திலிருந்து விழித்த மகிழினிக்கு ரேகாவின் கோபம் புரியாமல், ‘எதுக்கு இவ இப்படி இஞ்சித் தின்ன குரங்காட்டம் இருக்கா!’என்று முழித்துக் கொண்டிருந்தாள்.
ரேகாவோ, ‘மகி ஏதோ குழப்பத்துல இருக்கா. என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாம்னு பார்த்தால் விட மாட்டேங்குறாங்களே. இந்த சத்தத்தில் எப்படி ரகசியம் பேச முடியும். இதுவே ஹோட்டல்லா இருந்தா அவக் கிட்ட பேசி விஷயத்தை வாங்கலாம். விஷயம் தெரியாமல் தலையே வெடிச்சிடும் போல இருக்கே.’ என்று எண்ணி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.
“ரேகா! இப்படி சின்ன பிள்ளை மாதிரி எல்லா விஷயத்திலும் மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டா, உன்னை எப்படி வேலைக்குன்னு வெளிநாட்டுக்கு அனுப்ப முடியும்?”என்று கண்டிப்புடன் சுமதி வினவ.
“படிக்க அனுப்பலையா? என்னமோ புதுசா அனுப்புறது போல நீங்களும் அப்பாவும் ரொம்பத் தான் பிகு பண்றீங்க.”
“படிக்கிற வரைக்கும் இருந்த சூழ்நிலை வேற. இப்போ வேலைக்காக போறது வேற. அதுவும் உன்னோட ஃபீல்டுக்கு கால நேரம் கிடையாது. நீ கவனமா இருக்கணும். உன் விளையாட்டுத்தனத்துக்கெல்லாம் அங்கே செட் ஆகுமான்னு தெரியலை. நீ ஆசைப்பட்டேன்னு உங்க அப்பா கிட்ட சொல்லி சம்மதம் வாங்குவோம்னு நினைச்சா, இப்படி சின்னப்பிள்ளையாட்டம் நடந்துக்குற?” என்று சுமதி மகளைத் திட்ட.
“ரேக்ஸ்! ஆன்ட்டி சொல்றது உண்மையா? நீ அப்போ நீ வெளிநாட்டுலே செட்டிலாகப் போறேன்னு சொன்னது உண்மை தானா?”என்று விழிகளை விரித்தாள் மகிழினி.
‘இவ என் ஃப்ரெண்டா?கிடையவே கிடையாது. இவ துரோகி!’என்று மனதுக்குள் முணுமுணுத்தவள், தனது அம்மாவை பார்த்தாள்.
சுமதியோ கலக்கத்தோடு எங்கோ வெறித்துக் கொண்டிருக்க.
“அம்மா! அது சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். நான் ஒரு இரண்டு வருஷம் வேலைப் பார்த்தா, எனக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும். அப்புறம் உன்னை விட்டு நகரவே மாட்டேன். அப்புறம் என் தொந்தரவு தாங்காமல் யாருக்காவது என்னை கல்யாணம் பண்ணி வச்சு நீயே துரத்தி விடுவ.” என்று அம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டு சமாதானப்படுத்த முயன்றாள்.
அவள் கையில் லேசாக அடித்த சுமதியோ,”அதுக்குள்ள கல்யாணத்துக்கு அடிப்போடுறீயா? நீ எப்ப பொறுப்பா இருக்கீயோ, அப்போ தான் கல்யாணம்.”என.
“அப்போ இந்த ஜென்மத்தில உங்களுக்கு என் கிட்ட இருந்து விடுதலை கிடைக்காது ராஜமாதா. யாருக்காகவும் நான் என் இயல்யை மாத்திக்க மாட்டேன்.”என்று ரேகா கூற.
மகிழினியோ தோழிக்கு ஹை ஃபை கொடுத்தாள்.
“நண்பிடி!” என்று ரேகா, தன் தோழியை அணைத்துக் கொள்ள.
இருவரையும் பார்த்து தலையில் அடித்துக் கொண்டார் சுமதி.
சுமதியின் கோபத்தை தடுப்பதுப் போல பாஸ்கர் உணவு பார்சலுடன் வந்து விட, நேரம் பறந்தது.
மகிழினியையும், ரேகாவையும் நேரமாச்சு சீக்கிரம் சாப்பிடுங்க என்று கம்பு வைத்து விரட்டதா குறையாக மிரட்டி, ரயில் கிளம்பும் நேரத்திற்கு முன்பாக அவர்களை தயாராக நிற்க வைத்தார் சுமதி.
“சுமதி! நான் போய் சார் எங்க இருக்கார்னு பார்த்துட்டு வரேன்.” என்று பாஸ்கர் அங்கிருந்து கிளம்ப முயல.
“உட்கார்ந்தே இருக்கிறது கால் வலிக்குதுங்க. நானும் வரேன்.” என்று சுமதியும் அவரோடு கிளம்பினார்.
ரேகா எதிர்ப்பார்த்த தனிமை கிடைக்க,
“மகி! என்னாச்சு? ஏன் டல்லா இருக்க. அதுவுமில்லாமல் சதா யோசனையிலே இருக்க? இதெல்லாம் உன் கேரக்டர் இல்லையே?” என்று வினவினாள்.
“ப்ச்! எல்லாம் அந்த மிலிட்டரி என் லைஃப்ல க்ராஸ் பண்ணதுல இருந்தே மாறிடுச்சு.”
“ஓஹோ! கதை அப்படிப் போகுதா?” என்று ராகம் பாடினாள் ரேகா.
“என்னடி எருமை உளறுற!”
“ நீ அண்ணனை ரொம்ப மிஸ் பண்ணுற போல. பேசாமல் நீ வீட்டை விட்டு ஓடி வராமல் இருந்திருக்கலாம்.” என்று சொல்லி கண்ணடித்து சிரித்தாள் ரேகா.
“உன்னை கொள்ளாமல் விட மாட்டேன்.”என்று கழுத்தைப் பிடிக்க போக.
“அம்மா! தாயே… ஆளை விடு. எனக்குன்னு நிறைய கனவுகள் இருக்கு. இன்னும் அதை அச்சீவ் பண்ணவே இல்லை. அதுக்குள்ள என்னைப் போட்டுத்தள்ளிடாதடி.”
“அப்போ வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்கணும். அதை விட்டுட்டு ஏன் என்னை வம்பிழுக்குற. என் முகரக்கட்டை எப்படி இருந்தா உனக்கு என்ன?” என்ற மகிழினி கோபமாக நகர.
“சாரிடி செல்லம்! அது சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். சரி சொல்லு ஏன் டல்லா இருக்க? பாட்டி எதுவும் ஃபோன் பண்ணி திட்டுனாங்களா?”
“ப்ச்! திட்டுனாதான் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுடலாமே!”
“அதானே பார்த்தேன்.”என்று இடையிட்டாள் ரேகா.
“இப்போ நான் முழுசா சொல்லவா? வேண்டாமா?”என்று முறைத்துக் கொண்டே மகிழினி கூற.
“சரி! சரி! நான் வாயே திறக்கலை. நீ சொல்லு.”
“என் விருப்பம் இல்லாமல் இனி எந்த விஷயமும் நடக்காதாம். வீட்டுக்கு வான்னு அழறாங்க. நான் ஃப்ரெண்ட்ஸோட டூர் போறேன். வர பத்து நாளாகும்னு சொன்னேன். உடனே பாட்டிக்கு இதெல்லாம் பிடிக்காது. அப்பா, பெரியப்பாலாம் திட்டுவாங்க. வீட்டுக்கு வாடா என்று கெஞ்ச ஆரம்பிச்சுட்டாங்க.”
“பாவம் டி ஆன்ட்டி .”
“அவங்க பாவம்னா, என்னைப் பற்றி யாருமே யோசிக்க மாட்டேங்குறீங்க. ஜாலியா சிரிச்சு பேசிகிட்டு விளையாட்டுத்தனமா இருந்தா, எனக்கு எந்த கவலையும் இல்லைன்னு அர்த்தமா? எனக்குள்ளும் ஆயிரம் ஏக்கங்களும், வருத்தங்களும் இருக்கத்தான் செய்யுது. அதை வெளிக்காட்டிக்காமல் இருந்து, இருந்து மூச்சு முட்டுது. எனக்கு ரிலாக்ஸ் வேணும். அதான் கிளம்பி வந்துட்டேன். நீ புரிஞ்சுப்பேன்னு நினைச்சேன் ரேக்ஸ். என்றாள் மகிழினி.
திரும்பி பார்த்தால், மூச்சு வாங்க சுமதி நின்றிருந்தார்.
‘ஐயோ! நாம சொன்னதுக்காக சுமதி காளியவதாரம் எடுத்துக்கிட்டு நிக்குது.ஒருவேளை சைட்டடிக்கணும்னு மனசுக்குள்ள நினைச்சது தெரிஞ்சிடுச்சோ.’ என்று பயத்துடன் அவரைப் பார்க்க.
“அடியே! எதுக்கு இப்படி மரம் மாதிரி நிக்குற. எவ்வளவு நேரமா கூப்டிட்டே இருக்கேன். ட்ரெயின் மூனாவது ஃபிளாட்பார்ம்ல தான் நிக்குமாம். சீக்கிரம் வாங்க.” என்றவர் லக்கேஜ்களை எடுக்க.
மகிழினியும், ரேகாவும் தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு விரைவாக நகர்ந்தனர்.
வேக, வேகமாக படி ஏறி மூன்றாவது ஃப்ளாட்பார்மில் நின்றிருந்த ட்ரெயினில் அவர்களது கோச்சை தேடி லக்கேஜ்களை ஒவ்வொன்றாக ஏற்ற, பாஸ்கர் அதை அவர்களின் இருக்கைக்கு எடுத்துச் சென்றார்.
மகிழினியோ, தான் எங்கே ஏறுவது என்று யோசனையிலிருக்க, அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளாத ரேகா, அவளது லக்கேஜையும் ஏற்றினாள்.
அப்பொழுது தான் கவனித்த மகிழினியோ, “ ஹேய்! எனக்கு வேற இடத்துல தானே சீட்.” என்றாள்.
“இதே கோச் தான். நாங்க புக் பண்ண சீட்டுக்கும், உனக்கு பண்ணினதுக்கும் நடுவுல ஒரு சீட் தான் இருக்கும். நல்ல வேளை அந்த ஒரு சீட்டாவது இடையில் இருக்கே. நான் உன் சீட்டுக்கு வந்துடுவேன். அப்ப தான் நாம ஜாலியா எல்லோரையும் சைட்டடிக்கலாம்.” என்றாள் ரேகா.
“எதே!” அதிர்ச்சியாக பார்த்தாள் மகிழினி.
“நடிக்காதே செல்லம்!”
“திருந்தலாம்னு பார்த்தால் விட மாட்டேங்குறீயே!” என்று மகி சிரிக்க.
ட்ரெயினில் ஏறாமல் பேசிக் கொண்டிருக்கும் இருவரையும் பார்த்து பதற்றமான சுமதி,” ஹேய் ரேகா!” என்று கத்தினார்.
“ஐயோ! அம்மா டென்ஷனாகிட்டாங்க போல. மிச்ச கதையை அங்க போய் பேசலாம்.” என்று மகிழினியின் கையைப் பிடித்து இழுத்தாள் ரேகா.
“விடு லூசு! நானே வர்றேன்.”என்ற மகிழினி கையை உதற.
அவள் கையிலிருந்த மோதிரம் கீழே விழுந்தது.
“அச்சோ!”என்று பதறிய மகிழினி, மோதிரத்தை தேட.
“என்னாச்சுடி? எதுக்கு இப்படி பதறுற?”
“மோதிரத்தை காணும்டி. கையை உதறுனதுல கீழே விழுந்திடுச்சு”
“எங்க போய் விழுந்துச்சோ தெரியலையே. நானும் தேடுறேன்.” என்று ரேகா கூற.
“ப்ச்! நான் பார்த்துக்கிறேன். நீ முதல்ல ட்ரெயின்ல ஏறு! ஆன்ட்டி வேற டென்ஷனா இருக்காங்க.” என்றாள் மகிழினி.
“சீக்கிரம் டி.”என்ற ரேகா மனதே இல்லாமல் மேல ஏறினாள்.
“அவ என்னப் பண்ணிட்டு இருக்கா? அவளையும் வர சொல்லு.” என்று பதறினார் சுமதி.
“மோதிரம் கீழே விழுந்துடுச்சு. அதை எடுத்துட்டு வந்திடுவா. நீ டென்ஷனாகாதமா.” என்ற ரேகாவை ஒன்றும் கூறாமல் முறைத்துக் கொண்டிருந்தார் சுமதி.
அதே நேரத்தில் ட்ரைன் கிளம்புவதற்கு அறிகுறியாக, விசில் சத்தம் ஊதவும், பதட்டமான ரேகா,“டைம் ஆகிடுச்சு மகி. விசில் ஊதிட்டாங்க. சீக்கிரம் டி.”என்று கத்த.
மகிழினிக்கும் பதட்டம் அதிகமானது. கண் கலங்க பார்வையை வேகமாக சுழல விட்டாள். சற்றுத் தள்ளி அமருவதற்காக இருந்த இருக்கையின் கீழ் மின்னிக் கொண்டிருந்தது அவளது டைமண்ட் ரிங்.
“ஹே! ரிங் கிடைச்சிடுச்சு.”என்று கத்திய மகிழினி, அதை எடுத்துக் கொண்டு திரும்ப, ட்ரெயினோ மெல்ல நகர்ந்துக் கொண்டிருந்தது.
நெஞ்சு படபடக்க ஓடி வந்தாள் மகிழினி.
அதற்குள் அங்கு வந்த ஆர்கனைசர், “ஏன் இங்கே நிக்குறீங்க? உங்க இடத்துல போய் உட்காருங்க.” என.
முகம் வெளுக்க பயத்துடன் சைகையில் வெளியே கை காட்டினாள் ரேகா.
அங்கு வேகமாக மகிழினி ஓடி வர, இவர்களை நகர சொன்னவன், கைப்பிடியில் ஒரு கரத்தைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கரத்தை அவளிடம் நீட்டினான்.
மூச்சு வாங்க வந்த மகிழினியோ, உதவிய கரத்தை இறுகப் பற்றிக் கொண்டாள்.
அழுத்தமாக பற்றி இழுத்தவனின் நெஞ்சில் மோதி நின்றாள் மகிழினி.
அவள் கீழே விழாமல் அணைத்தவன், அந்த ஏசி கோச்சின் கதவுகளை மூடினான் சித்தார்த்.
மகிழினியோ அவனை அங்கு எதிர்ப்பார்க்கவில்லை. கண்கள் விரிய, படபடத்த நெஞ்சை அழுத்திக் கொண்டாள்.
அவனோ நிதானமாகப் பார்த்தான். அந்த பார்வையே அவளை வாயடைக்க செய்தது.