சாஷ்வதனோ எந்த விடயமாக இருந்தாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கும் வழக்கம் உடையவன்.
எந்தப் பிரச்சினையையும் இலகுவில் கடந்து செல்லும் குணம் அவனுடையது.
ஆனால் அவனுடைய பொறுமை எல்லை மீறும் போது அவனை கட்டுப்படுத்துவது என்பது முடியாத காரியம்.
அவன் கர்ப்பமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை எனக் கூறியதன் பின்பு கூட காயத்ரி கோபமாக கூறிய வார்த்தைகளில் இவனுக்கோ சினம் பொங்கியது.
ஆனால் அவனுடைய கரங்களில் மருண்டு விழித்தவாறு அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த வைதேகியின் முன்பு பிரச்சினையை பெரிதாக்க விரும்பாதவன்,
“டாக்டர்கிட்ட போய்ட்டு வந்து உன்கிட்ட பேசிக்கிறேன்..” எனக் கூறிவிட்டு தன்னவளைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று விட காயத்ரியின் கண்களிலோ கண்ணீர் நிறைந்து விட்டது.
சாஷ்வதனுடன் கலாவும் மருத்துவமனை சென்றுவிட காயத்ரியின் துணைக்கு அவளோடு வீட்டிலேயே இருந்தான் கஜன்.
“ஹேய் வாலு.. இதுக்கு ஏன்டி அழுகுற..?”
“இல்ல கஜி அண்ணா நான் ஏதோ பொய் சொன்ன மாதிரி அண்ணா என்னத் திட்டிட்டு போகுது.. நானும் இப்போ பாதி டாக்டர் தானே..?”
“சரி சரி நீ பாதி டாக்டர்னு நான் நம்புறேன் போதுமா..?” எனக் கேலியோடு கூற,
“போடா அண்ணா..” என கஜனுக்குத் திட்டியவள்,
“சரி அவங்க செக் பண்ணிட்டு வரட்டும்.. எனக்குப் பசிக்குது… நான் போய் சாப்பிடப் போறேன்…” எனக் கூறிவிட்டு எழுந்து சென்றுவிட,
“எனக்கும் ஏதாவது எடுத்துட்டு வாடி…” எனக் கத்தினான் கஜன்.
அங்கே மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த கலாவின் முகத்திலோ எதிர்பார்ப்பு கலந்த ஆர்வம் மிகுந்திருந்தது.
அவருடைய எதிர்பார்ப்புக்கு எதிரான பாவத்துடன் வெளியே நின்றிருந்தான் சாஷ்வதன்.
எப்படியும் தன்னுடைய மனைவி கர்ப்பம் இல்லை என்பதை அவன் அறிவான்.
திடீரென எதற்காக அவளுக்கு இந்த சோர்வும் மயக்கமும் வந்தது என்ற கேள்வியே அவனுள் ஓடிக் கொண்டிருந்தது.
தன்னவளுக்கு ஏதேனும் உடல்நிலை சரியில்லையோ என்ற எண்ணமே அவனை வெகுவாக வாட்டிக் கொண்டிருக்க சற்று நேரத்தில் வெளியே வந்தார் வைத்தியர்.
வேகமாக அவரை நெருங்கியவன் “டாக்டர் வைதேகிக்கு ஒன்னும் இல்லையே..? அவ ஏன் திடீர்னு மயக்கம் போட்டு விழுந்தான்னு தெரியுமா..?” என இவன் படபடப்போடு கேட்க,
“ரிலாக்ஸ்.. ஏன் இவ்வளவு டென்ஷனாகுறீங்க..? எல்லாமே நல்ல விஷயம்தான்.. அவங்க கன்சீவா இருக்காங்க.. நீங்க அப்பா ஆகப் போறீங்க.. வாழ்த்துக்கள் மிஸ்டர் சாஷ்வதன்..” என்றவர் கலாவுடன் பேசத் தொடங்கிவிட இவனுக்கோ மிகப்பெரிய பாறாங்கல் ஒன்று நேராக அவனுடைய தலையில் வந்து மோதி தலை சிதறியது போல இருந்தது.
அந்த நொடி அவனால் நம்பவே முடியவில்லை.
தன் காதுகளில்தான் ஏதேனும் கோளாறோ..?
காயத்ரி சொன்னதை அடிக்கடி நினைத்துக் கொண்டே வந்ததால் வைத்தியர் இப்படி சொன்னதைப் போல நானே கற்பனை செய்து கொண்டேனோ..?
இல்லை நிஜமாக அவர் அப்படித்தான் சொன்னாரா..?
சற்று நேரம் எதுவும் புரியாது விக்கித்துப் போனவனாய் அசைய மறுத்து நின்றிருந்தான் சாஷ்வதன்.
“ரொம்ப சந்தோஷமான விஷயத்தை சொல்லி இருக்கீங்க ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்..” என மகிழ்ச்சிக் குரலில் கூறிய கலாவோ அறைக்குள் இருந்த வைதேகியைக் காணச் சென்றுவிட இவனுக்கோ பைத்தியம் பிடித்து விடும் போல இருந்தது.
கலா உள்ளே சென்றதும் மீண்டும் அந்த மருத்துவரை நெருங்கியவன்,
“டாக்டர் நீங்க என்ன சொல்றீங்க..? நிஜமாவே அவ பிரக்னண்டா இருக்காளா.?” என இவன் அதிர்ச்சியாகக் கேட்டதும் வைத்தியரின் முகமோ நொடியில் மாறியது.
“ஏன் மிஸ்டர் என் மேல நம்பிக்கை இல்லையா..? ஹன்ரட் பர்சன்ட் அவங்க பிரக்னண்டாதான் இருக்காங்க..” என உறுதியாகக் கூறினார் வைத்தியர்.
அவனோ திணறிப் போனான்.
அவரிடம் என்னவென்று கூறுவது..?
இதுவரை அவளும் நானும் உடலுறவு கொள்ளவே இல்லை என்றா கூறுவது..?
நிஜத்தை உடைத்துக் கூற முடியாமல் தடுமாறியவன்
“நானும் அவளும் கட்டுப்பாடாதான் இருந்தோம் டாக்டர்.. அப்படி இருக்கும்போது எப்படி பேபி வந்துச்சுன்னு தெரியல… உண்மைய சொல்லணும்னா பேபி வர சான்சே இல்ல..” என மீண்டும் அவன் கூற,
“ஸீ மிஸ்டர் சாஷ்வதன்.. என்னதான் கட்டுப்பாடா இருந்தாலும் எல்லாத்தையும் நம்ம கண்ட்ரோலுக்கு கொண்டுவர முடியாது… உங்களையும் கரு தங்கி இருக்கலாம்தானே..? உங்க மனைவி பிரக்னண்டா இருக்காங்க.. அதுல எந்த சந்தேகமும் உங்களுக்கு தேவையே இல்லை.. வேணும்னா இன்னொரு டெஸ்ட் உங்களுக்காக எடுத்துக் காட்டுகிறேன்..” என்றவர் உள்ளே சென்று கலாவை வெளியே அனுப்பிவிட்டு அரை மணி நேரத்தில் அவனை அழைத்து மீண்டும் அவள் கர்ப்பம் என்பதை உறுதி செய்ய பைத்தியம் பிடித்தவனைப் போல ஆகினான் அவன்.
எப்படி.?
எப்படி அவள் கர்ப்பமாக முடியும்.?
பின்னந்தலை அதீதமாய் வலித்தது அவனுக்கு.
அந்த இடத்தில் இதற்கு மேலும் நின்றால் எரிமலை போல வெடித்து விடுவோம் என்பதை உணர்ந்து யாரிடமும் எதுவும் கூறாது மருத்துவமனையை விட்டு வேகமாக வெளியே வந்தவன் வெளியே இருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டான்.
மூளைக்குள் மின்னல்கள் வெட்டுவது போல திடீர் திடீரென 1008 கேள்விகள் உற்பத்தியாகி அவனை வாட்டி வதக்கி எடுத்தன.
டாக்டர் கூறுவது நிஜமாக இருந்தால் வைதேகி என்னை ஏமாற்றிவிட்டாளா..?
நான் அவளை ஒரு எல்லைக்கு மேலே தொட்டது கூட கிடையாதே..
கன்னத்திலும் நெற்றியிலும் முத்தமிட்டு இருக்கிறேனே தவிர மோகமாய் அவள் இதழ்களை முற்றுகையிட்டது கூட இல்லையே.
அப்படி இருக்கையில் இது என்ன சோதனை..?
மிகவும் குழம்பிப் போனவன் வைதேகியிடம் பேசினால்தான் இதற்கான முடிவு கிடைக்கும் என எண்ணினான்.
எதற்கும் தன்னுடைய அன்னையை வீட்டில் விட்டுவிட்டு இன்னொரு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துக் கொள்ளலாம் என்ற முடிவோடு எழுந்து மீண்டும் மருத்துவமனைக்குள் வந்தவன் வைதேகி இருந்த அறைக்குள் நுழைந்தான்.
அங்கே அவளுடைய விழிகளோ கலங்கிச் சிவந்து போயிருந்தன.
அவனைப் போலவே அவளும் பதறிப் போய் இருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டவன் அருகே இருந்த அன்னையை விழிகளால் சுட்டிக்காட்டி அவளிடம் அமைதியாக இருக்கும் படி கூற அவளின் கரங்களோ நடுங்கிக் கொண்டிருந்தன.
அந்தக் கரங்களின் நடுக்கத்தை உணர்ந்தவனுக்கு மேலும் தலைவலிதான் கூடியது.
“கண்ணா வாழ்த்துக்கள் டா… எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..?
“அம்மாடி சீக்கிரமா பேரப் பிள்ளையை பெத்துக் கொடுத்துடு.. பேரனையோ பேத்தியையோ வளத்தெடுக்கிறதுதான் இனி என்னோட வேலையே..” என அவர் குதூகலமாக கூறிக்கொண்டு போக இவர்களுக்குத்தான் எரியும் எண்ணெயை உடலில் ஊற்றியதைப் போல இருந்தது.
சாதாரணமாக வாழ்க்கை போல இருவருக்கும் தாம்பத்தியம் நடந்து அவள் கர்ப்பமாக இருந்தால் அவர்களும் அவரைப் போல மகிழ்ந்திருக்கக் கூடும். சந்தோஷத்தில் துள்ளி குதித்திருக்கவும் கூடும்.
ஆனால் அவர்களுடைய சூழ்நிலைதான் வேறாக அல்லவா போய்விட்டது.
“அம்மா உங்களை கூட்டிட்டுப் போக ட்ரைவர் அங்கிள் வெளியே வெயிட் பண்றாரு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நானும் வைதேகியும் அந்த வேலையை முடிச்சிட்டு வீட்டுக்கு வர்றோம்… நீங்க ட்ரைவர் கூட வீட்டுக்குக் கிளம்புங்க..” என சாஷ்வதன் கூற,
“சரிப்பா பத்திரமா ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க..” என்றவர் மருத்துவமனையை விட்டு சென்றுவிட இப்போது வைதேகி முகத்தை அழுத்தமாகப் பார்த்தான் சாஷ்வதன்.
“எ.. என்னங்க இது..? எ.. எனக்கு…” என நடுங்கியவாறு அவள் வார்த்தைகளை உதிர்க்க,
“ஹேய் உஷ்… நீ டென்ஷனாகாத… எனக்கு என்னவோ இவங்க மேலதான் டவுட்டா இருக்கு… எதுக்கும் நாம வேறொரு ஹாஸ்பிடல்ல போய் செக் பண்ணி பார்த்துடலாம்..” என அவன் கூற, சரி என படபடப்போடு தலையை அசைத்தாள் அவள்.
மருத்துவமனைக்குரிய பில்லை செலுத்தியவன் அருகில் இருந்த இன்னொரு மருத்துவமனையை நோக்கி வண்டியை செலுத்தத் தொடங்கினான்.
கிட்டத்தட்ட மூன்றரை மாதங்களுக்குப் பிறகு அவளை நேரில் பார்க்கின்றான்.
அவளிடம் எவ்வளவோ பேச வேண்டும்.. தன் காதலை கூற வேண்டும் என ஆசை ஆசையாய் வந்திருந்தவனுக்கு லாரி மண்ணை அள்ளித் தன் ஆசை மீது கொட்டியதைப் போலத்தான் இருந்தது.
காரோ வழமையை விட இன்று அவனுடைய கரங்களில் அதிகமாய் தடுமாறத் தொடங்கியது
காயத்ரியும் வைதேகி கர்ப்பமாக இருக்கிறாள் என உறுதியாகக் கூறினாளே.
வைத்தியரும் நூறு சதவீதம் கர்ப்பமாகத்தான் இருக்கிறாள் என்றார்.
மூச்சு எடுக்கவே அவனுக்கு சிரமமாக இருந்தது.
அப்படி எல்லாம் இருக்கக்கூடாது. அப்படி எதுவும் இருக்காது என தன்னைத் திடப்படுத்திக் கொண்டவன் மருத்துவமனை வாயிலில் காரை பொறுமையற்று நிறுத்திவிட்டு தன் மனைவியை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றான்.
இருவருக்கும் இதயத்துடிப்பு ஏகத்துக்கும் எகிறிப் போயிருந்தது.
பரிசோதனையை மேற்கொண்ட வைத்தியரும் சற்று நேரத்தில் வெளியே வந்து “ஷீ இஸ் பிரக்னன்ட்..” எனக் கூற அவ்வளவுதான் அவனுடைய மொத்த நம்பிக்கையும் அந்த நொடி சிதறிப் போயின.
கை நரம்புகள் தொடக்கம் கழுத்து நரம்புகள் வரை முறுக்கேற இறுகிப்போய் அப்படியே நின்றிருந்தான் அவன்.
எல்லோரும் ஒன்று போல அவள் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தால் இதற்கு என்ன அர்த்தம்..?
நான் அவளைத் தொடவில்லையே.. தொடாமல் பிள்ளையை பெறுவதற்கு அவள் என்ன குந்தி தேவியா..?
இந்தக் கலிகாலத்தில் அப்படி எந்த சூரிய பகவான் என்னுடைய மனைவிக்கு குழந்தையைக் கொடுத்து விட முடியும்..?
இதெல்லாம் நடக்கிற காரியமா..?
ஆக தன்னுடைய மனைவி வேறொருத்தனின் குழந்தையை சுமக்கிறாளா..?
ஆம் அதுதானே நிஜம்.
நான் தொடவில்லை என்றால் இன்னொருவன் தொட்டிருக்கிறான் என்று தானே அர்த்தம்.
நான் முத்தமிடவில்லை என்றால் இன்னொருவன் முத்தமிட்டு இருக்கிறான் என்றுதானே அர்த்தம்.
நான் உடலுறவு கொள்ள வில்லை என்றால் இன்னொருவன் அவளோடு உடலுறவில் ஈடுபட்டிருக்கிறான் என்பது தானே அர்த்தம்.
யாரோ ஒருவனோடு சேர்ந்து என்னை ஏய்த்து விட்டாளா..?
அவளை எவ்வளவு காதலித்தேன்..
அவளை காண்பதற்காக எவ்வளவு ஆசையாக ஓடி வந்தேன்.
எனக்கே துரோகம் செய்து விட்டாளா..?
அவனுக்கு விழிகள் இரண்டும் கலங்கி அருவி போல கண்ணீர் வழியத் தொடங்கியது.
கரங்களோ நடுங்கத் தொடங்க தன்னுடைய கட்டுப்பாடின்றி மிகவும் உடைந்து போய் நின்றான் அந்த ஆண்மகன்.
இப்படிப்பட்ட சூழ்நிலையை இதுக்கு முன்னர் அவன் கையாண்டதே இல்லையே.
அழுகைதான் வந்தது அவனுக்கு.
மிகவும் மோசமாக ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற நிதர்சனம் நெற்றி பொட்டில் அறைந்தாற் போல அவனுக்குப் புரிய அழுகை குறைந்து அந்த இடத்தை அதீத கோபம் ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
அடுத்த கணமே தான் இருப்பது மருத்துவமனை என்பதையும் மறந்து “வைதேகிஇஇஇஇஇ” என அந்த இடமே அதிரும் வண்ணம் அலறினான் சாஷ்வதன்.
Ayyayyo enna sis idhu