“இனி எங்கே?” என்று அவளது மனைவி அங்கு இல்லாததை கவனித்து வினவ.
“ப்ச்! அவ எப்பவும் ரூம்ல தான் இருப்பா. பாப்பா ரொம்ப நேரமா அழுதுட்டே இருக்கா. எனக்கு பயமா இருக்கு சித்து.” என்றாள் ஸ்வேதா.
“பயப்படாதீங்க! ஹாஸ்பிடலுக்கு போகலாம். இதோ வந்துடுறேன் அண்ணி.” என்றவன், அவர்களது அறைக்குச் செல்ல.
அங்கோ ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டு கண்களை மூடிக்கொண்டிருந்தாள் அவனது மனைவி.
அதைப் பார்த்ததும் அவனுக்கு கோபம் பற்றிக் கொண்டு வர, வேகமாக அவளது காதில் இருந்து பிடுங்கி வீசினான்.
அவனது செயலில் பதறி எழுந்தாள் இனி.
“ஹேய் அறிவு இருக்கா? அங்க குழந்தை அழுதுட்டு இருக்கு. என்ன ஏதுன்னு போய் கேட்காமல், ஒய்யராம படுத்திட்டுருக்க. எல்லாம் திமிர்! பணக்கார திமிர்.” என்று திட்டியவன், வேகமாக அங்கிருந்து வெளியேறியிருந்தான்.
ஹாஸ்பிடலுக்கு சென்று விட்டு வந்திருந்தார்கள்.
சுபத்ராவும், குமாரும் ஹாலில் இருக்க. அப்பவும் அவளது மனைவி அங்கு இல்லை.
பதற்றத்தோடு இருந்தவர்களிடம்,”லேசா ஜுரம் இருந்திருக்கு. அதான் பாப்பா அழுதுட்டு இருந்திருக்கா. மருந்து குடுத்திருக்காங்க. சரியாகிடுமாம்.” என்றவன், அறைக்குச் செல்ல விருப்பமில்லாமல் மீண்டும் வெளியே கிளம்பினான்.
சுபத்ரா, “சித்து! டூர்ல இருந்து இப்போ தானே வந்த? இதுல ஹாஸ்பிடலுக்கு வேற போயிட்டு வந்திருக்க. கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க வேண்டியது தானே இப்ப எங்க போற?” என்று வினவினார்.
“வந்து ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு மா.”
“அதெல்லாம் உன் மேனேஜர் பார்த்துப்பார். எப்பப் பாரு வேலை, வேலைன்னு ஓடிட்டே இருந்தா உடம்பு என்னத்துக்காகும். அதுவும் இல்லாமல் உனக்காக ஒருத்தி காத்திட்டுருக்கா. அவளோட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணு.” என்றார் சுபத்ரா.
‘ம்கூம்! எங்கே அவளைப் பார்த்தால் கோபத்தில் மீண்டும் வார்த்தைகளை விட்டுவேனோன்னு பயந்து தான் வெளியவே கிளம்புனேன். பேசாமல் தூங்கிடுவோம்.’ என்று எண்ணியவன், ஒன்றும் கூறாமல் அறைக்குச் சென்றான்.
அவளைக் கண்டுக்கொள்ளாமல், உடை மாற்றிய சித்தார்த் உறங்குவதற்கு முயல, அவனது மனைவி விட்டால் தானே.
“குட்டிமாவுக்கு என்ன சொன்னாங்க?” என்று வினவினாள்.
“ரொம்பத்தான் அக்கறை என்று முணுமுணுத்தவன், நெற்றியில் கைகளை வைத்துக் கொண்டு கண்களை மூடினான்.
“நான் குட்டியை தூக்கப் போனேன். அக்கா திட்டினாங்க. அதான்…” என்று அவள் ஏதோ கூற வர.
படுத்திருந்த சித்தார்த் வேகமாக எழுந்து, “அவங்க பயத்துல ஏதாவது சொல்லுவாங்க. அதுக்காக நமக்கென்ன வந்துச்சுன்னு விட்டுட்டு போயிடுவியா? புள்ளை அழுதுட்டு இருக்கும் போது மனசு பதறாதா? எப்படித் தான் ஹெட்ஃபோனை மாட்டிக் கிட்டு பாட்டுக் கேட்க மனசு வருதோ. எல்லாத்திலும் ஒரு விளையாட்டுத்தனம்.” என்று கோபத்தில் பொரிய.
“ப்ச்! குழந்தை அழற சத்தத்தைக் கேட்க முடியாமல் தான் ஹெட்செட் போட்டுருந்தேன்.”
“ச்சை! அடுத்த சமாளிப்பா?” என்றவன் விருட்டென்று அங்கிருந்து எழுந்துச் சென்றான்.
அவளோ விக்கித்து நின்றாள்.
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு, அவள் குழந்தையைத் தூக்கி அவன் பார்க்கவே இல்லை.
குழந்தையிடம் கூட அவளது பிடிவாதத்தைக் காண்பித்திருந்தாள். ‘என்ன பெண் இவள்,’ என்று எண்ணிய சித்தார்த், அவளது நினைவை உதறி, நிகழ்வுக்கு வந்தான்.
மகிழினியையும், அவளது தோழியையும் அங்கு காணவில்லை.
இவன் வந்ததும் அங்கிருந்து நழுவியிருந்தாள் மகிழினி.
“ரேக்ஸ்! வா ஆன்ட்டி, அங்கிள் கிட்ட அட்டனன்ஸ் போட்டுட்டு வந்துடுவோம்.” என்று,இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து போகலாம் என்ற ரேகாவையும் வற்புறுத்தி அழைத்துச் சென்றிருந்தாள் மகிழினி.
சித்தார்த் கையிலிருந்த ஃபோனில், ட்ரெயின் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை ட்ராக் செய்தவன், அடுத்த ஸ்டேஷன் வரப்போகிறதை அறிந்து, தனது உதவியாளர்களை அழைத்துக் கொண்டு கதவருகே சென்று நின்றான்.
அடுத்த ஸ்டேஷனில், அவன் ஏற்பாடு செய்து இருந்த மதிய உணவு வரும்.
அங்கு ட்ரெயின் இரண்டு நிமிடங்கள் தான் நிற்கும் என்பதால் கதவருகே சென்று தயாராக இருந்தான்.
சுமதி, “ வா மகி! இங்கே உட்கார்!”, என்று தனக்கருகே அமர வைத்தவர், “ஏன் டா ஆன்ட்டி மேல கோபமா இருக்கியா? அதான் இங்கே வராமல் அங்கேயே இருக்கியா?” என்றார்.
“நான் ஏன் உங்க மேல கோபப்படப்போறேன் ஆன்ட்டி.” என்று புரியாமல் வினவினாள்.
”எங்க நீ கீழ விழுந்துடுவியோன்னு பயந்துட்டேன். அதான் திட்டுனேன்.”
“ ஐயோ! ஆன்ட்டி! இதுக்கெல்லாமா கோப்படுவாங்க. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களோட அறிமுகமாகிட்டிருந்தேன் ஆன்ட்டி. அவங்க கிட்ட பேசிட்டு இருந்ததில்ல டைம் போனதே தெரியலை.”
“இந்தப் பக்கம் சீட்டு மாத்திக் கேட்கவா?” என்றார் சுமதி.
“ அங்கிளோட டைம் ஸ்பென்ட் பண்ண உங்களுக்கு நேரமே இல்லை. இந்த சான்ஸை யூஸ் பண்ணிக்கோங்க. நானும், ரேக்ஸும் அங்க இருக்கோம். எங்களைத் தேடிட்டு இல்லாமல், நீங்க ஜாலியா பேசிட்டு இருக்க வேண்டியது தானே!”
“ உனக்கு என் மேல் என்ன கோபம் மகி? என்னைய ஏன் கோர்த்து விடுற?”என்று பாஸ்கர் சிரித்துக் கொண்டே வினவ.
“ஏன் என் கிட்ட பேசுறது அவ்வளவு கஷ்டமான விஷயமா?” என்று சுமதி அவரிடம் சண்டைக்கு செல்ல.
அவர்கள் இருவரையும் பார்த்து ரேகாவும், மகிழினியும் வாய் விட்டு நகைத்தனர்.
முகமெல்லாம் பளபளக்க, கள்ளம்கபடமில்லாமல் சிரிக்கும் மகிழினியைப் பார்த்துக் கொண்டே உணவு பார்சல்களை எடுத்து வந்தான் சித்தார்த்.
அவன் ஒவ்வொருவருக்கும் எடுத்துக் கொடுக்க. அவனுக்கு உதவி செய்ய முயன்றாள் மகிழினி.
“ பரவால்ல விடுங்க! நான் பார்த்துக்கிறேன்.”என்றான் சித்தார்த்.
“இருக்கட்டும் தம்பி! சின்ன உதவி தானே. எப்பவும் அவ அப்படித்தான். எல்லாருக்கும் உதவி பண்ணுவா. சும்மா கொஞ்ச நேரம் உட்கார மாட்டா. ரொம்ப பொறுப்பான பொண்ணு.” என்று சுமதி மகிழினியை புகழ்ந்து தள்ள.
மகிழினியை ஒரு பார்வைப் பார்த்து விட்டு, “அப்போ இங்க உள்ளவங்களுக்கு நீங்க கொடுத்துடுங்க. உங்களோட சாப்பாடு,உங்க இடத்துல இருக்கும்.” என்று விட்டு அடுத்த சீட்டிற்கு எடுத்துச் சென்றான்.
அங்கு சென்றாலும் கவனத்தை இவர்களிடமே வைத்திருந்தான்.
ரேகாவிற்கான உணவை அவளது கையில் குடுத்த மகிழினியோ,” அடியே! ஆன்ட்டி வாயை அடைக்க ஏதாவது டிப்ஸ் சொல்லு. ஓவரா புகழுறேன்னு என்னை டேமேஜ் பண்ணுறாங்க.” கூற
“நீ அந்த வேலையை செய்ய வேண்டாம். இந்த சாப்பாட்டை அவங்களுக்கு குடு. வாயை அடைச்சுடலாம்.” என்றாள் ரேகா.
“அடியே! ஆன்ட்டி காதுல விழுந்துடப் போகுது.”
“அதெல்லாம் விழாது. சீக்கிரம் எல்லாருக்கும் குடுத்துட்டு வா. நான் உன் கூட வந்து சாப்பிடுறேன்.”, என்றாள் ரேகா.
“ஆமாம்மா!” என்ற ரேகா, மகிழினியை இழுத்துக் கொண்டு சென்றாள்.
சித்தார்த்தும், அவனது உதவியாளர்களும் எல்லோருக்கும் உணவைக் கொடுத்து விட்டு வந்திருந்தனர்.
ரேகாவும், மகிழினியும் பேசி சிரித்துக் கொண்டே சாப்பிடுவதை பார்த்தவன், அவனது உணவு பார்சலை எடுத்துப் பிரித்தான்.
ஒரு வாய் உணவை எடுத்து வாயில் வைப்பதற்குள், அவன் இருந்த இடத்துக்கு பின்புறம் குரல் கேட்டது. “எங்க உங்க ஓனர் அவரை வர சொல்லுங்க.” என.
சாப்பாட்டை அப்படியே மூடி வைத்தவன், அங்கே சென்றான்.
“பாவம் டி! சாப்பிடக் கூடி விடமாட்டேங்குறாங்க.” என்ற ரேகா, அங்கே நடப்பதை கவனித்தாள்.
சிரித்த முகத்துடன் சென்ற சித்தார்த்தோ, “ உங்களுக்கு என்ன உதவி செய்யணும் சார்?” என்று தன்மையாக வினவினான்.
“எனக்கு எந்த வேலையும் செய்ய உன்னை கூப்பிடலை. உன் வேலையை முதல்ல ஒழுங்கா செய்.” என்று அறுபதை நெருங்கும் வயதான மனிதர் கூற.
“என்ன விஷயம் சார்? எதுவும் செய்யாமல் நாங்க விட்டுருந்தா சொல்லுங்க சார். உடனே உங்களுக்கு சரி செய்து தர்றேன்.” என்று புன்னகையுடன் வினவினான் சித்தார்த்.
அவனது தன்மையான பேச்சில், இவ்வளவு நேரம் கோபத்தில் குதித்துக் கொண்டிருந்த பெரியவரோ, “ இந்த மாதிரி புளிசாதம், லெமன் சாதம் எல்லாம் என் பொண்டாட்டிக்கு ஒத்துக்காது. வயசாகிடுச்சு. சாதம், ரசம் எளிமையா செரிமானம் ஆகுறது போல உணவெல்லாம் செய்து தர மாட்டீங்களா?” என்று சுருதி குறைந்த குரலில் வினவினார்.
“சாரி சார்! இங்கே ட்ரெயின்ல வேற எதுவும் ஏற்பாடு பண்ண முடியாது. இதுவே வேற ஸ்டேஷன்ல உங்களுக்காக செய்து எடுத்துட்டு வர சொல்லியிருந்தேன். வயசானவங்களுக்காகத் தான் தயிர் சாதமும் அரேஞ்ச் செய்து இருக்கிறேன்.”
“அப்போ ஊருக்கு போற வரைக்கும் தயிர் சாதம் தான் எங்க தலையில எழுதியிருக்கா?”என்று கிண்டலாக அந்த பெரியவர் வினவ.
“அப்படியெல்லாம் இல்லை சார். ஷீரடில உங்களுக்கு மீல்ஸ் ஏற்பாடு பண்ணியிருக்கோம்.” என்று பொறுமையாக பதில் அளித்தான் சித்தார்த்.
“அப்போ சரி!” என்று அரைகுறையாக தலையாட்டினார் அந்தப் பெரியவர்.
அவரது மனைவியோ,”எனக்கு மட்டும் தான் வயசாகிடுச்சு. உங்களுக்கு இளமைத் திரும்புதோ. உங்களுக்கு வேணும்னா, உங்களுக்கு வேணும்னு சொல்லுங்க. எதுக்கு என்ன இழுக்குறீங்க? ஒரு நாலு நாள் அட்ஜெஸ்ட் பண்ணி இருக்க முடியாதா?”என்று அதட்ட.
“அது…” என்று அவர் அசடு வழிய.
புன் சிரிப்புடன் தலையசைத்த சித்தார்த் அவனது இருக்கைக்கு வந்தான்.
சித்தார்த்தையே பார்த்துக் கொண்டிருந்த ரேகா,” வாவ்! மகி ஆள் செம ஹேண்ட்ஸமாக இருக்காருன்னு பார்த்தால், கொஞ்சம் கூட டென்ஷனாகாமல், எவ்வளவு பொறுமையா, கூலா, அவங்களை ஹேண்டில் பண்றாரு பாரு.” என்று கூற.
‘இவன் பொறுமையா இருக்கானா? பொறுமைன்னா என்னென்ன தெரியாதவன். விட்டா இந்த லூசு பொறுமையின் சிகரம் என்று அவனுக்கு அவார்ட் கொடுத்தாலும் கொடுத்துடுவா போல இருக்கே.’ என்று எண்ணிய மகிழினி, ரேகாவை பார்க்க.
ரேகாவின் பார்வை, தனக்கு எதிரே அமர்ந்து இருந்த சித்தார்த்தையே வட்டமிட்டு கொண்டிருந்தது.
அதைப் பார்த்ததும் அதிர்ச்சியில் அவனும் அங்கு தான் இருக்கிறான் என்பதை மறந்து,”அடியே ரேக்ஸ்! என்னடி பண்ணுற?” என்று தோழியை அதட்ட.
“ ஹேய்! சும்மா சைட் அடிச்சேன் டி! அதுக்கு ஏன் எருமை இப்படி கத்துற?” என்று மகிழினியின் காதருகே முணுமுணுத்தாள் ரேகா.
அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லாத மகிழினியோ, “ஸ்கூல் படிக்கும் போது என்ன சொன்ன?” என்று ரேகாவைப் பார்க்க.
மகிழினி சொன்ன கோர்ட் வேர்டில் அதிர்ந்து தோழியையும், எதிரில் இருந்த சித்தார்த்தையும் திரும்பி, திரும்பி பார்த்தாள் ரேகா.
சித்தார்த்தும், வாயருகே எடுத்து போன உணவுடன், அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு, சாப்பாட்டில் கவனத்தை வைத்தான்.
“அப்படி என்னங்க உங்க ஃப்ரெண்ட் ஸ்கூல்ல சொன்னாங்க. யாரையும் சைட் அடிக்க மாட்டேன்னு எதுவும் வாக்குறுதி கொடுத்திருந்தாங்களா?” என்று தருண் வினவ.
அப்போதுதான் தான் சத்தமாக பேசியதை உணர்ந்த மகிழினி, எல்லோரையும் பார்க்க.
சித்தார்த்தோ கவனமாக உணவருந்திக் கொண்டிருந்தான்.
நல்லவேளை என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டவள், “அது வந்து… ஹான்!
இந்தியர்கள் அனைவரும் எனது சகோதர சகோதரிகள்னு உறுதிமொழி எடுத்திருக்கா. அதைத் தான் சொன்னேன்.” என்று தருணிடம் கூற.
அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த தருணுக்கு, மகிழினி கூறியதைக் கேட்டதும், சாப்பாடு புரையேற, தலையை தட்டிக் கொண்டவன்,”சொல்ல விருப்பம் இல்லை என்றால் விட்டுடுங்க. அதுக்காகவெல்லாம் பொய் சொல்லாதீங்க.” என்று விட்டு கை கழுவ எழுந்துச் சென்றான்.
ரேகாவும், மகிழினியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டே, அவர்களும் கை கழுவ செல்ல.
தருண், சித்தார்த் சொன்ன வேலையை செய்வதற்காக அடுத்த கம்பார்ட்மெண்டிற்கு சென்று இருந்தான். அந்த கம்பார்ட்மெண்டில் தான் இவர்களது உதவியாளர்கள் இருந்தனர். மீதமுள்ள உணவினை அடுத்த ஸ்டேஷன் வரும் போது, அங்கு வேலைப் பார்க்கும் கூலித் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டும். அந்த வேலையை பார்ப்பதற்காகத்தான் சென்றான்.
சித்தார்த்தும் சாப்பிட்டு முடித்து கை கழுவ வந்தவன், மகிழினியும், ரேகாவும் ஏதோ மெல்லிய குரலில் பேசி, சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவன் கை கழுவி விட்டு அவர்கள் அருகே வந்தான்.
“ ஹலோ மேடம்! உங்க ஃப்ரெண்ட் கிட்ட டைரக்டாவே சொல்ல வேண்டியது தானே. நான் ஒரு செகண்ட் ஹாண்ட்னு. எதுக்கு சுத்தி
வளைச்சு என்ன சைட் அடிக்கக் கூடாதுன்னுறதுக்கு காரணம் எல்லாம் யோசிச்சு சொல்லிக் கிட்டு….” என்று மகிழினியைப் பார்த்து கூற.
அவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் வாயைப் பிளந்தாள் ரேகா.