இன்னிசை-18

3.8
(6)

இன்னிசை- 18

குழம்பி தவித்து நின்ற மேனகாவை கண்டு கொள்ளாமல் அவனது இருப்பிடத்திற்கு சென்றான் ரிஷிவர்மன்.

மேனகாவோ இரவு முழுவதும் உறங்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அவளது தவத்தை களைப்பதெற்கென்றே வந்திருந்தான் ரிஷிவர்மன்.

” ப்ச்… மேனகா… இப்போ எதுக்கு ஊருக்கு கிளம்பாமல் சீன் போட்டுட்டு இருக்க?” என்று உலுக்க.

” ஹான்…” என்று சுயத்திற்கு வந்த மேனகா, அவனை மலங்க மலங்கப் பார்த்தாள்.

” என்ன இன்னும் வேடிக்கைப் பார்த்துட்டுருக்க. சீக்கிரம் கிளம்பணும்னு நேத்தே சொன்னேன் தானே. சொல் பேச்சு கேட்கக்கூடாதுன்னுல இருக்க?”

என்று எரிச்சலானான் ரிஷிவர்மன்.

” விடிஞ்சுடுச்சா…” என்று முணுமுணுத்த மேனகா, மரத்துப் போன காலை மெல்ல ஊனி, அவளது அறைக்குச் சென்றாள்.

மெதுவாக செல்லும் மேனகாவைப் பார்த்த ரிஷிவர்மனோ, ‘ஆடி அசைஞ்சு போறதைப் பாரு… இடியட்‌… முதல்ல கல்யாணம் முடியட்டும். அப்புறம் இருக்கு இவளுக்கு. என்னையே வேண்டாம்னு சொல்லிட்டா… சின்ன வயசுல இருந்து என் பின்னாடியே சுத்திட்டு இருந்த கழுதை, இப்போ என்னை எதிர்க்குது. பார்த்துக்கலாம். ஊருக்கு போனதும் அம்மாவையும், இவளையும் தனியா பேச விடக்கூடாது. எப்படியாவது கல்யாணத்தேதியை முடிவு பண்ணிட்டு இவளைக் கையோட கூட்டிட்டு வந்துடணும்.’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தான்.

மனதில் வலியிருக்கும் போது‍, எப்படி சுறுசுறுப்பு வரும். மெதுவாக கிளம்பிக் கொண்டிருந்தாள் மேனகா.

அதற்குள் பலமுறை அறைக்கதவை தட்டி விட்டான் ரிஷிவர்மன்.

ஒரு மணி நேரம் கடந்திருக்க, மேனகா ஏனோ தானோ என்று கிளம்பியிருந்தாள். எப்பவும் அவளது முகத்தில் இருக்கும் துள்ளல் இன்று மிஸ்ஸிங்.

” வேணும்னே லேட்டா கிளம்புறீயா மேகி? எப்படி இருந்தாலும் நாம இன்னைக்கு ஊட்டிக்கு போறோம். அது மிட் நைட்டா இருந்தாலும் சரி தான். அப்புறம் கல்யாணப்பேச்சும் நடக்கும். என் அம்மா… அதான் உன் செல்ல அத்தை இதுக்காகத் தான் ரொம்ப நாளா காத்துட்டு இருக்காங்க.” என்று அவளைப் பார்த்து நக்கலாக கூறினான்.

அவனை வெறித்துப் பார்த்த மேனகா, பதில் எதுவும் சொல்லாமல் பேகை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

தோளைக் குலுக்கிய ரிஷிவர்மன் அவளைப் பின் தொடர்ந்தான்.

பேருந்திலும் மேனகா மௌனத்தை தத்தெடுத்துக் கொண்டு அமைதியாகவே வந்தாள். ஆனால் வீட்டிற்கு சென்றதும் அவள் மௌனமாகவே இருந்திடலாம் என்று தான் நினைத்திருந்தாள். ஆனால் அங்கே அவளுக்காக குரல் கொடுக்கவும் ஒரு ஜீவன் இருந்தது.

*******************

தனம் நிமிடத்திற்கு ஒரு முறை வாசலுக்கு சென்று பார்ப்பதும், கிச்சனுக்கு சென்று உருட்டுவதுமாக இருக்க…

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ராமன்,” தனம்… இப்போ எதுக்கு இப்படி கிச்சனுக்கும், வாசலுக்கும் நடந்துட்டுருக்க” என.

” உங்களுக்கென்ன பேப்பரும், காஃபியும் இருந்துட்டா போதும். வேற எதைப் பத்தியும் கவலையில்லை.”

” இப்போ எதுக்கு கவலைப் படணும்?”

” காலையிலே வரேன்னு சொன்ன பசங்களை இன்னும் காணோம். அவங்க ரெண்டு பேரும் வந்துட்டா நாம போய் கல்யாணத்துக்கு நாள் பார்த்துட்டு வந்துடலாம். நேரம் வேற ஆகுது. போன முறை போன அந்த நாடி ஜோசியர் வேண்டாம். பட்டுபட்டுனு பேசுறார். நம்ம பக்கத்து வீட்டு வனஜா ஒருத்தரைப் பார்க்க சொன்னாங்க. அவரு பன்னிரண்டு மணி வரைக்கும் தான் பார்ப்பாராம்.”

” அது தான் நேத்துல இருந்து சொல்லிட்டு இருக்கியே தனம்?”

” தெரியுதுல‌… கொஞ்சமாவது அக்கறை இருந்தா மணியாகுதேன்னு பதறுவீங்க. உங்களுக்கென யாருக்கு வந்த விருந்தோன்னு இருக்கீங்க.”என்று முறைத்தார் தனம்.

” தனம்… உன் மகனுக்கு ஃபோன் போட்டு எப்ப வருவாங்கன்னு கேளு. லேட்டாகும்னா நாம போய் நாள் பார்த்துட்டு வந்துடுவோம். இதுக்கு எதுக்கு டென்ஸனாகுற?”

” இது நல்ல ஐடியாவா இருக்கே. இதை முன்னாடியே சொன்னா என்னவாம்.” என்று ராமனிடம் கூறிய தனம் ஃபோனை எடுத்து ரிஷிவர்மனுக்கு அழைத்தார்.

” தம்பி கிளம்பிட்டியா? இல்லையா? எப்போ வருவீங்க?” என்று படபடக்க.

“எங்கமா கிளம்பணும்?” என்று ரிஷிவர்மன் வினவ.

” டேய் அப்போ நீங்க இங்க வரலையா?” என்றவரின் குரலில் ஏமாற்றம் வழிந்தது.

” மா… அப்படியே கொஞ்சம் எட்டிப் பாருங்க.” என்ற ரிஷிவர்மனின் குரலில் சலிப்புடன் வெளியே வந்த தனமோ, அங்கு நின்றவனைப் பார்த்ததும் முகம் மலர்ந்ததார்.

” டேய்… வீட்டுக்கு வந்துட்டு தான் என் கிட்ட வம்பு பண்ணியா? கொஞ்ச நேரத்துல பதற வச்சுட்ட?” என்று அவனைப் பார்த்து முறைத்தார்.

” மா… சும்மா விளையாண்டேன். நோ கோபம். என் செல்ல அம்மால்ல சிரிங்க.” என்று அவரது கன்னத்தை பிடித்து கெஞ்சினான்.

” சரி டா. என்னை விடு… நேரமாகுது… நாங்க போய் ஜோசியரை பார்த்துட்டு வந்துடுறோம்.” என்று உற்சாகமாக கூற.

ரிஷிவர்மனோ அவருக்கு பதிலளிக்காமல், மேனகாவை ஓரப் பார்வை பார்த்து நக்கலாக சிரித்தான்.

மேனகாவின் கடைசி நம்பிக்கையும் போயிற்று. எப்படியும் அவளது அத்தை, அவளிடம் திருமணத்திற்கு சம்மதமான்னு விசாரிப்பார் என்று நினைத்திருக்க… எப்போதும் கிடைக்கும் வரவேற்பு கூட இப்போது கிடைக்கவில்லை. ஊரிலிருந்து மேனகா வந்தால் முதலில் அவளது வயிற்றுக்கு ஏதாவது அனுப்பிவிட்டு தான், ஓய்வெடுக்க அனுப்புவார். இன்றோ எதுவும் செய்யாமல் இருக்கும் போதே அவளுக்கு தெரிந்து விட்டது, இந்த கல்யாணத்தை எந்தளவுக்கு அவர் ஆவலாக எதிர்ப்பார்க்கிறார் என்று புரிந்து போயிற்று. அவர் மட்டுமா, அவளும் தானே எதிர்ப்பார்த்திருந்தாள். ஆனால் எதிர்பாராத விதமாக இப்படி ஒரு கண்டிஷனை ரிஷிவர்மனிடமிருந்து எதிர்ப்பார்க்கவில்லை.

அம்மா, அப்பா இருந்திருந்தால் இப்படி அவளது வாழ்க்கை இருந்திருக்குமோ என்று முதல்முறையாக எண்ணியவளது ஓய்ந்து போன தோற்றத்தை கண்டு கொண்டார் ராமன்.

” தனம்… ஊர்ல இருந்து வந்த பிள்ளைகளை முதலில் சாப்பிட சொல்லாம என்ன பேசிட்டு இருக்க. இங்கே பாரு மேகியோட முகம் வாடி போய் இருக்கு.” என்று அவரது கவனத்தை மேனகாவிடம் திரும்பினார்.

மேனகாவை பார்த்த தனம்,

” என்னடா மேகி? என்னாச்சு? ஏன் இப்படி முகம் வாடியிருக்கு. உடம்பு சரியில்லையா?” என்று பதறிவிட்டார்.

ஒரு நிமிடம் அவர்களைத்தான் தவறாக எண்ணியதை நினைத்து தன்னையே நொந்துக் கொண்ட மேனகா,”இல்லை.” என்று தலையாட்டினாள்.

” கல்யாண பேச்செடுக்கும் போது இப்படி இருந்தா எப்படி மேகிமா. உன்னை பார்த்தாலே மனசெல்லாம் பகிருங்குது. உனக்கு உன் அத்தான புடிக்கும் தானே. உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான?” என்று சற்று பயத்துடன் வினவினார் தனம்.

அங்கிருந்து பார்வையால் மிரட்டிக் கொண்டிருந்த ரிஷிவர்மனை ஒரு பார்வை பார்த்தது விட்டு, “அத்தை இப்போ கல்யாணம் வேணாம்த்தை. கொஞ்ச நாளாகட்டும்.எனக்கு வேலைக்கு போகணும்னு ஆசையா இருக்கு.” என்று தட்டுத்தடுமாறி கூறி முடித்தாள் மேனகா.

“நீ வேலைக்கு போகறதுக்கும், கல்யாணம் பண்றதுக்கும் என்னடா சம்பந்தம். நீ யார கல்யாணம் பண்ணிக்க போற உன் அத்தான தான. அவனும் அங்க தான வேல பார்க்குறான். கல்யாணத்துக்கு பிறகும் வேலைக்கு போக வேண்டியது தானே.” என்ற தனம் புரியாமல் அவளைப் பார்க்க.

” நான் தான் வேண்டாம்னு சொன்னேன்.” என்று இடையிட்ட ரிஷிவர்மனை ராமனும், தனமும் ஆச்சரியமாக பார்த்தனர்.

“உனக்கு என்ன பைத்தியமா?” என்று ராமன் கோபமாக வினவ.

” நான் என்ன சொல்ல வர்றேன்னு நீங்க கொஞ்சம் கூட புரிஞ்சுக்காதீங்கபா. எப்ப பார்த்தாலும் இவ சொல்லுறது தான் உங்களுக்கு முக்கியம். நாங்க இரண்டு பேரும் ஒரே இடத்தில் வேலை பார்த்தா சரி வராது.” என்று தனது பிடியில் உறுதியாக நின்றான் ரிஷிவர்மன்.

” அப்பா சொல்றது சரிதான் டா. உனக்கு பைத்தியம் தான் புடிச்சிருக்கு. இந்த காலத்தில் போய் இப்படி பேசிகிட்டு இருக்க. புருஷனும், பொண்டாட்டியும் ஒரே இடத்தில் வேலை பார்த்தா தான் வசதியினு ஒரே ஆபீஸ்ல வேலை தேடிட்டு இருக்காங்க. நீ என்னடானா வேலையை விட சொல்லி உளறிட்டு இருக்க.” என்று தனமும் கோபமாக கூற.

இருவரிடம் பேசி புரிய வைக்க முடியாத ரிஷிவர்மன் மேனகாவை பார்த்து முறைத்தான். ‘ தான் சொன்ன விசுவாசம், நன்றி இந்த வார்த்தைக்கு பயந்து கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்வாள் என்று எண்ணிய தன்னையே நொந்து கொண்டவன், ” அம்மா… அப்பா… இந்த கல்யாணம் நடக்கணும்னா மேனகா வேலை விடணும். இல்லைன்னா எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை.” என்று கூறியவன், அவனது அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான்.

தனம் முகம் வெளிற ராமனை பார்த்து,”என்னங்க இவன் இப்படி பேசிட்டு போறான். ஏற்கனவே அந்த நாடி ஜோசியர் வேற என்ன பயமுறுத்திட்டு விட்டுட்டார்.” என்று புலம்ப.

” தனம் சும்மா இரு.” என்று ராமன் அவரை அடக்கப் பார்த்தார்.

தன்னிலையில் இல்லாத தனமோ, மேலும் மேலும் புலம்பிக் கொண்டிருந்தார்

” எப்படிங்க சும்மா இருக்கிறது சீக்கிரம் இவனுக்கு கல்யாணம் பண்ணனும்… இல்லன்னா இவனோட உசுருக்கே ஆபத்துன்னு சொன்னாரே. அவர் பட்டுபட்டுன்னு சொல்றாருன்னு தானே இன்னைக்கு அவர் கிட்ட போகாமல் வேற ஜோசியர் கிட்ட போகலாம்னு நினைத்தேன்.” என.

 தனம் பேசியதை கேட்ட மேனகா,”அத்தை நான் வேணும்னா வேலையை விட்டுட்டுறேன்.” என்று அவளது ஆசையை தனக்குள் புதைத்துக் கொண்டு கூறினாள்.

இப்போதைக்கு மேனகா வேலையை விட்டால் இந்த பிரச்சனை தீர்ந்து விடும் என்று எண்ணிய தனம், மேனகாவை நன்றியுடன் பார்த்தாள்.

ராமனோ, ” சும்மா இரு மேனகா. அப்படி எல்லாம் வேலையை விடாத. ஒரு பொண்ணுக்கு வேலை தான் ரொம்ப முக்கியம். அதை நீ யாருக்காவும் விடத் தேவையில்லை. அப்படி கல்யாணம் உடனே பண்ணனும்னா வேற பொண்ணை பார்ப்போம்.” என்றார்.

 அதைக் கேட்டதும் மேனகாவின் இதயத்தில் யாரோ கத்தியை சொருகியது போல் இருந்தது. கண்களிலிருந்து கண்ணீர் வழிய… தனது மாமாவை பார்த்தவள்,”அத்தான் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டார். நான் போய் அத்தான் கிட்ட பேசி பார்க்கிறேன்” என்றவள் ரிஷிவர்மனின் அறையை நோக்கிச் சென்றாள்.

இவ்வளவு நேரம் கதவருகே நின்று அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ரிஷிவர்மனின் முகத்தில் கர்வபுன்னகை வந்தது.

 அவள் வரும் காலடி சத்தம் கேட்டதும் மீண்டும் சென்று கட்டிலில் படுத்துக்கொண்டவன், கைகளை கட்டி கண்ணை மறைத்துக் கொண்டிருந்தான்.

இரண்டு முறை கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள் மேனகா.

” அத்தான்…”என்று அழைக்க.

 அவன் மௌனமாக இருந்தான்.

 மெல்ல அவன் அருகே சென்றவள், கையை எடுத்து அவன் முகத்தை பார்க்க. வெடுக்கென தள்ளிவிட்டான்.

உதட்டை கடித்துக் கொண்ட மேனகா,”அத்தான் ப்ளீஸ்… நான் உங்க மேல வச்சிருக்க காதல் உங்களுக்கு தெரியாதா? எனக்காக விட்டுக்கொடுக்க மாட்டீங்களா? கொஞ்ச நாள் மட்டும் நான் வேலைக்கு போறேன். ப்ளீஸ் …” என்று தன் இயல்பை விட்டு கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

 இப்பொழுது எழுந்து அமர்ந்த ரிஷிவர்மனோ, “நானும் அதே தான் கேட்கிறேன் மேகி. என் மேல உனக்கு காதல் இருந்துச்சுன்னா எனக்காக வேலையை விடு. எனக்கு நீ அங்க வர்றது பிடிக்கலை.”

“அத்தான் நான் அங்கே வந்து உங்களுக்கு எந்த தொந்தரவும் தர மாட்டேன்.”

” நீ எங்க நான் சொல்றதை கேட்குற? உன் இஷ்டத்துக்கு தானே இருக்குற? நீ அங்க வர்றது எனக்கு தொந்தரவா இருக்கு.”

” அத்தான்… நான் உங்க வேலையில என்ன தொந்தரவு பண்றேன்?”

” அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது.”

” சரிங்கத்தான் அதை விடுங்க. நீங்க எப்படி இந்த வேலையை நேசிக்கிறீர்களோ, அதே மாதிரி தானே எனக்கும் இருக்கும்.”

“ஹா…ஹா… குட் ஜோக். நான் சொன்னேனா இந்த வேலை பிடிக்கும்னு…”

” அத்தான்…”என்று அதிர்ச்சியாக பார்க்க.

” இங்கே பாரு கவர்மெண்ட் ஜாப்ன்ற ஒரே காரணத்துக்காக தான் நா அங்க வேலை பார்க்குறேன். புரிஞ்சுக்கோ… அப்புறம் இந்த காடு, மரம், மண்ணாங்கட்டி எதுவும் எனக்கு முக்கியமில்லை புரியுதா?” என்று எரிந்து விழ.

பலமுறை மறைமுகமாக பொன்னம்மாள் கூறிய விஷயம் அவளுக்கு நினைவுக்கு வந்தது. ‘ மோகினி எல்லாரும் உன்னை போல இருக்க மாட்டாங்க. காடு, இயற்கை இதெல்லாம் பெருசா நினைக்க மாட்டாங்க தாயி. அப்புறம் இந்த வேலைக்கு வந்தவங்க எல்லாம் விரும்பி வந்தவக கிடையாது. அவங்க காசுக்காக என்ன வேணாலும் செய்வாங்க. பார்த்து சூதனமா இருந்துக்கோ தாயி.’ என்று பலமுறை கூறியிருக்கிறார் ஆனால் யார் என்று கேட்டால் மழுப்பிடுவார். ஆனால் இன்று அவளுக்கு கொஞ்சம் புரிந்ததுப் போலிருந்தது.

தான் அந்த காட்டில் நினைத்த நேரம் செல்வதை அத்தான் விரும்பவில்லை. கோல்டு சொன்னது போல் காட்டில் சில தவறுகள் நடக்கிறது. அதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.’ என்று எண்ணியவள் திடமாக நிமிர்ந்து அவனைப் பார்த்து, “சாரி அத்தான்… என்னால வேலையை விட முடியாது. உங்களுக்கு வேணும்னா வேலைக்கு போகாதவங்களா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க.” என்று நிமிர்வாக கூறியவள் அங்கிருந்து வெளியே வந்தாள்.

அங்கு ஆர்வமாக காத்திருந்தவர்களிடம், ” சாரி அத்தை… சாரி மாமா. இந்த கல்யாணம் நடக்காது. நீங்க அத்தான் மனசை மாத்தப் பாருங்க. நான் ஊருக்கு கிளம்புறேன்.” என்றவள், வந்த கையோடு புறப்பட்டு விட்டாள்.

அவளை போக விடாமல் இருக்க முயன்ற தனத்தை, ராமன் தடுத்து விட்டார். சிறுவயதிலிருந்து மலர்ந்து மணம் வீசிய காதல், ஒரு சுயநலம் பிடித்தவனால் மடிந்து போனது. 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 3.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!