சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 1 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
சுந்தரியும் சுந்தரனும்..!!
வரிசைக்கட்டி குடிசை வீடுகள் ரயில்பெட்டி போல அமைந்திருந்த அந்த பகுதியில் அந்த தண்ணீர் லாரி நுழைய அதை சுற்றி பெண்கள் கூட்டம் குடங்களோடு அலை மோதி கொண்டிருந்தது..
எப்போதும் போல அடித்து பிடித்து எல்லோரும் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்க சுந்தரியோ சற்று தள்ளி நின்றுக் கொண்டிருந்தாள்..
அப்போது அங்கே வந்த ரதி “ஏய் சுந்தரி… என்ன அப்படியே குடத்தை வெச்சிக்கிட்டு நின்னுட்டு இருக்க.. இவங்க எல்லாம் விலகி போய் தான் தண்ணி புடிக்கணும்னா நீ இந்த ஜென்மத்துக்கு தண்ணி புடிக்க முடியாது.. போ உள்ளார மத்தவங்கள தள்ளிக்கிட்டு போய் புடி.. ” என்று சொல்லிவிட்டு அந்தக் கூட்டத்திற்குள் தான் வைத்திருந்த இரண்டு குடங்களோடு அடித்துப் பிடித்து நுழைந்தாள்..
ஏதோ ஒரு பெண்ணிடம் வாயால் சண்டை போட்டுக் கொண்டு அவள் குடத்தை நகர்த்தி வைத்துவிட்டு தன் குடத்தில் தண்ணீர் பிடித்தாள்..
அந்த பெண் குடத்தை பிடித்து தள்ளப் போக அவள் கையை வாகாக பிடித்து தன் குடத்தை எப்படியோ எடுத்து இடுப்பில் சரியாக அதை வைத்துக்கொண்டு அந்த கூட்டத்தை விட்டு வெளியே வந்து விட்டாள்..
சுந்தரியோ இன்னும் அப்படியே கூட்டத்திற்கு வெளியே எட்டி எட்டி பார்த்துக்கொண்டு நின்று இருக்க “உன்னால இந்த ஜென்மத்தில தண்ணி புடிக்க முடியாது.. சரி இந்தா புடி.. இந்த ரெண்டு குடத்தையும் கொண்டு போய் வீட்டில வெச்சிரு.. அந்த காலி குடத்தை என்கிட்ட கொடு.. நான் அதுல தண்ணி புடிச்சிட்டு வரேன்..” என்றாள் அவள்..
“எதுக்கும் கையாலாகாது உனக்கு.. அப்படியே அம்மா மகாராணி மாதிரி சொகுசா இருக்கணும்னு நினைக்கிறீங்க.. ம்ம்ம்ம்.. கொஞ்ச நெறமா அழகா இருக்கியா? அதுவும் இல்ல.. எவனும் வந்து கட்டிக்க மாட்டேங்கிறான்.. அப்படியே வந்தாலும் ரெண்டாம் தாரமா குடுக்குறியான்னு கேக்கறான்.. என்னதான் இருந்தாலும் நீ எனக்கு தங்கச்சி ஆச்சே.. அப்படி ஈவு இரக்கம் இல்லாம புடிச்சு தள்ள எனக்கு மனசு வரமாட்டேங்குது.. என்ன பண்ணறது உன்னை வெச்சிட்டுனு தெரியலை” சுந்தரியை வாய்க்கு வந்தபடி வசை பாடினாள் ரதி..
அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.. இப்படி தண்ணிக்கு அடுத்தவரோடு அடித்து பிடித்துக் கொண்டிருக்கும் இந்த நிலைக்கு அவளுடைய அக்கா இந்த ரதிமீனா தான் காரணம்.. தான் காதல் செய்தவருடன் அவளுடைய அக்கா இந்த ரதிமீனா போய்விட அதிர்ச்சியில் அவர்களுடைய அப்பா மாரடைப்பில் காலமானார்..
அந்த சோகம் தாங்காது படுத்த படுக்கையாகிய தாயும் இரண்டே மாதங்களில் அவர் கூடவே போய் சேர்ந்தார்.. அனாதை ஆன சுந்தரியை பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் என்று வந்த ரதிமீனாவும் அவளுடைய கணவர் பாஸ்கரும் அந்த வீட்டிலேயே தங்கிவிட அப்போதுதான் பாஸ்கரின் உண்மையான முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளி வந்தது..
பாஸ்கருக்கு குடிப்பழக்கம் உண்டு என்பதும் அவனுக்கு நிரந்தரமான வேலை எதுவும் இல்லை என்பதும் அந்த வீட்டிற்கு வந்த பிறகுதான் ரதிமீனாவிற்கு தெரிந்தது.. அதுவரை கையில் பணம் இல்லாமல் குடிக்காமல் இருந்தவன் அந்த வீட்டிற்கு வந்தவுடன் கையில் பணம் புரள குடிக்க ஆரம்பித்தான்..
சில நாட்களில் ரதிமீனா பணம் கொடுப்பதை நிறுத்தி விடவே யாரிடமோ கடன் வாங்கி குடித்துவிட்டு வந்து அவளை அடிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தான்.. அவனுடைய அடி தாங்க முடியாமல் ரதிமீனா கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு பணம் கொடுத்து வந்தாள்.. இறுதியாக வீட்டில் பணம் இல்லாமல் போகவே அடுத்து சொத்தின் மீது கையை வைக்கத் துணிந்தான் பாஸ்கர்..
ரதிமீனாவை அடித்து துவைத்து அவள் பேரில் இருந்த சொத்தை அடமானம் வைத்து கடன் வாங்கியவன் மீண்டும் அந்த பணத்தையும் குடித்து குடித்து கரைத்து விட்டிருந்தான்..
அதன் பிறகு அவனுடைய கண் சுந்தரியின் பெயரிலிருந்த சொத்தின் மேல் விழுந்தது.. சுந்தரியை அந்த பத்திரத்தை பத்திரப்படுத்தி வைக்க சொன்ன ரதிமீனா அந்த சொத்தை தரமாட்டேன் என்று சொல்லவும் ஒரு பிள்ளையை சுமந்து இருந்த கர்ப்பிணியான அவளை நாள்தோறும் சுந்தரி கண் எதிரிலேயே அடித்துக் கொடுமைப்படுத்த வேறு வழி இல்லாமல் அந்த சொத்து பத்திரத்தை அவனிடம் கொடுத்து விட்டிருந்தாள் சுந்தரி.. அதையும் அடமானம் வைத்து குடித்து அழித்து விட்டிருந்தான் பாஸ்கர்..
ரதிமீனாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகி இருந்தபோது வீட்டை ஜப்தி செய்து அவர்கள் எல்லோரையும் வெளியே தள்ளினார்கள்..
கையில் பணமும் இல்லாமல் வேறு போக்கிடமும் இல்லாமல் இந்த குடிசைகள் நிறைந்த பகுதிக்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தார்கள் அக்காவும் தங்கையும்..
ரதிமீனா நிறமாய் இருப்பதால் சுந்தரியின் மட்டு நிறத்தை அவ்வப்போது சொல்லம்புகளால் குத்தி காண்பித்துக் கொண்டே இருந்தாள்…
“உன் மேல தொட்டு எடுத்தா கண்ணுக்கு மை வச்சுக்கலாம் போல அப்படி ஒரு கருத்த நிறமா இருக்க.. ஆனா உனக்கு எப்படித்தான் அம்மா அப்பா சுந்தரின்னு பேரு வச்சாங்களோ தெரியல.. உன் பேரை கேட்டு ஆசையா பொண்ணு பார்க்க வர்றவங்க எல்லாம் உன் நெறத்தை பார்த்த உடனே தலை தெறிச்சி ஓடுறாங்க”
ஒவ்வொரு முறையும் அவள் அக்கா தன்னை வசை பாடும்போது அவளுக்கு அப்படியே செத்து விடலாமோ என்று தோன்றும்..
ஆனால் பாஸ்கர் அவளுடைய அக்காவை அடித்துக் கொடுமைப்படுத்தும் போது அவளுக்கு ஆறுதலாய் இருக்கும் ஒரே ஜீவன் இவள் தான் என்பதால் அப்படி விட்டுப் போகவும் அவளுக்கு மனது வரவில்லை..
என்னதான் அவளை திட்டி தீர்த்தாலும் அவளை இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்து கொடுக்கக் கூடாது என்று பிடிவாதமாய் இருக்கும் தன் அக்காவை அந்த மனித மிருகத்திடம் தனியே விட்டு செல்ல மனம் வரவில்லை அவளுக்கு..
குடத்துடன் வீட்டுக்கு வந்தவள் சமையல் வேலையை செய்ய தொடங்கினாள்.. பணத்திற்கு பாஸ்கரை நம்பி பிரயோஜனம் இல்லை என்று அறிந்த அவள் பக்கத்தில் இருந்த ஒரு கார்மெண்ட்ஸில் வேலை செய்து கொண்டிருந்தாள்..
ரதி தன் குழந்தையை பார்த்துக் கொள்ள வீட்டிலேயே இருந்தாள்.. ரதி கல்லூரி படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டதால் கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை..
சுந்தரி கல்லூரியில் முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தவள் தன் தந்தை இறந்து போனதால் அதன் பிறகு கல்லூரி படிப்பை தொடர முடியாமல் நிறுத்தி விட்டிருந்தாள்..
அதனால் அவளுக்கு கார்மெண்ட்ஸில் தையல் தைக்கும் வேலை தான் கிடைத்தது.. ரதி வீட்டில் இருந்தபடியே அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு துணி தைத்துக் கொடுத்து கொஞ்சமாக பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தாள்..
ஆனால் இதில் பாதி பணத்தை பாஸ்கர் வந்து அடித்து பிடுங்கி எடுத்துச் சென்று குடித்து குடித்து அழித்தான்.. இந்த நிலை என்று மாறுமோ என்று எண்ணிக் கொண்டே சமையல் வேலையை வேகமாக பார்த்துக் கொண்டிருந்தாள் சுந்தரி..
################
தன்னுடைய சுந்தர் கார்மென்ட்ஸில் வேலை எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்று கவனித்துக் கொண்டிருந்தான் சுந்தர்..
அங்கு மேற்பார்வையாளராக இருந்த கணேசன் தையல் தைக்கும் ஒரு பணியாளருடன் கதை பேசி நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்க அதை பார்த்த அவனுக்கு சட்டென கோபம் வந்தது..
நேரே அவரிடம் சென்று “மிஸ்டர். கணேசன்.. உங்களுக்கு இந்த மாதிரி கதை பேசணும்னா வெளியில போய் பேசுங்க.. நீங்க வந்திருக்கிறது வேலை செய்ய.. அவங்களையும் வேலை செய்யவிடாம அவங்க நேரத்தையும் வீணாக்கிட்டு.. நீங்களும் வேலை செய்யாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க? இங்க எல்லா நேரமும் நானே உள்ள இருந்து வந்து தான் சூப்பர்வைஸ் பண்ணனும்னா உங்களை எதுக்கு சூப்பர்வைசரா அப்பாயின்ட் பண்ணனும்? பேசாம இன்னிக்கு உங்களை டிஸ்மிஸ் பண்ணிடறேன்.. நீங்க வெளியில போங்க.. இந்த வேலையை நானே பாத்துக்கிறேன்..” என்றான் அவன் கோவமாக..
“சார் சார் நான் புள்ள குட்டிக்காரன் சார் அப்படிலாம் எதுவும் பண்ணிடாதீங்க.. இனிமே இப்படி நின்னு பேச மாட்டேன்.. சார் அந்த பொண்ணு வேலையில டவுட்டு கேட்டுச்சு சார்..”
“வேலையில் டவுட்டு கேக்கும் போது ஏதோ விருமன்.. பொன்னியின் செல்வன்..னு படம் பேரா காதுல விழுந்துச்சு.. அந்த மாதிரி டவுட்டு கேட்கிற மாதிரி எதுவும் வேலை செய்யலையே நம்ம கம்பெனியில..”
அவன் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் கேட்கவும் தலையை குனிந்து கொண்டார் கணேசன்..
“மிஸ்டர் கணேசன்.. இதுதான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங்க்.. இதுக்கு மேல இந்த மாதிரி ஒரு தப்பு நடந்ததுன்னா உங்களை வேலையை விட்டு அனுப்பிடுவேன்.. அப்புறம் இதே மாதிரி வந்து மறுபடியும் கெஞ்சாதிங்க என்கிட்ட” என்று சொல்லி அங்கிருந்து அவன் அறைக்குள் சென்றான்..
“நான் எப்பயாவது பேசும்போது மட்டும் இந்த மனுஷனுக்கு எங்கே இருந்துதான் மூக்குல வேர்க்குமோ.. அங்கிருந்து வந்துருவாரு என்னை திட்றதுக்கு.. சரி மா நீ ஒழுங்கா வேலைய பாரு.. மறுபடியும் அந்த மனுஷன் வந்து கத்த போறாரு..” என்றவர் வேலை செய்ய போய்விட்டார்..
சுந்தர் கார்மெண்ட்ஸின் முதலாளி சுந்தர் என்கிற சுந்தரேஸ்வரன்.. கிராமத்தில் பிறந்தவன்.. விவசாயியின் மகன்.. நிலத்தில் இறங்கி வேலை செய்ய யோசிக்காதவன்.. வளர வளர நல்ல கட்டு மஸ்தான உடலோடு இருந்தவன்..
படிப்புக்காக அமெரிக்கா சென்று எம்பிஏ முடித்துவிட்டு இங்கே வந்தவுடன் சிறு அறையில் துணி தைத்து மற்றவர்களுக்கு விற்க ஆரம்பித்தவன்.. இன்று ஒரு துணி வடிவமைக்கும் தொழிற்சாலை மற்றும் ஒரு துணி கடைக்கு முதலாளியாக இருந்தான்.
உழைப்பதற்கு யோசிக்கவே மாட்டான்.. அவன்.. ஆனால் அவன் வாழ்க்கையில் அவனை பாதித்த ஒரு விஷயம் இருந்தது.. தன் நண்பர்களுடன் வெளிநாட்டுக்கு படிக்க சென்றவனை கருப்பாய் கிராமத்தான் மாதிரி இருக்கிறான் என்று அவன் நன்கு படித்து நன்கு ஆங்கிலத்தில் பேசினால் கூட அவனை ஒதுக்கி வைக்கும் மனப்பான்மை இருந்தது அவர்களிடம்..
அன்று அவன் ஒரு முடிவு செய்தான் நல்ல பால் வண்ண நிறத்தில் இருக்கும்.. நவநாகரிகமாய் நடந்து ஆங்கிலம் சரளமாக பேசும் ஒரு பெண்ணை காதலித்து மணந்து அந்த நண்பர்கள் முன்னெல்லாம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதே அந்த முடிவு..
பலமுறை இதை அவன் தன் நண்பர்களிடமும் சொல்லி இருந்தான்.. அப்போதெல்லாம் “உன்னை பாத்தாலே அப்படி எந்த பொண்ணும் உன்கிட்ட வராதுடா.. உன்னை மாதிரி கிராமத்து ஆளுக்கெல்லாம் நல்ல ஒரு நாட்டுக்கட்டையா தான் அமையும்”
அவன் சொல்வதை கேட்டு கிண்டல் செய்வார்கள் அவனுடைய நண்பர்கள்..
ஆனால் இப்போது அவன் பல கோடிகளுக்கு அதிபதி… அவன் நண்பர்கள் செய்த கேலியும் கிண்டலும் அவனை எந்த விதத்திலும் முன்னேறுவதிலிருந்து தடை செய்யவில்லை..
சமூகத்தில் நல்ல அந்தஸ்தோடு முன்னேறி இருக்கும் தன்னை பார்த்து அப்படி ஒரு பெண் ஈர்க்கப்பட்டு நிச்சயம் காதலித்து திருமணம் செய்து கொள்வாள் என்று அவன் நம்பினான்..
அப்படி ஒரு பெண்ணைத்தான் இப்போது அவன் தேடிக் கொண்டிருந்தான்.. மதியம் வரை தன்னுடைய கார்மெண்ட்ஸ் தொழிற்சாலையில் இருந்து விட்டு மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தன்னுடைய துணி கடைக்கு வந்தான் சுந்தர்..
மாலை வரை அங்கு அமர்ந்து வியாபாரத்தை கவனித்துவிட்டு வீட்டுக்கு வந்தவனை வரவேற்றார் பார்வதி பாட்டி..
“எப்பா கண்ணு.. வந்துட்டியா? சமைச்சு வச்சிருக்கேன்.. இப்பவே சாப்பிட வந்தேன்னா நான் உனக்கு பரிமாறிட்டு போயிருவேன்… இல்லனா நீயே எடுத்து போட்டு சாப்பிடற மாதிரி இருக்கும்.. நாளைக்கு காலைல நான் வந்து பார்க்கும்போது சாப்பாடு எல்லாம் அப்படி அப்படியே இருக்கும்.. நீயே சாப்பிட்டா ரொம்ப கொஞ்சமா தான் கண்ணு சாப்பிடுற.. நான் உனக்கு பரிமாறிட்டு போயிடுறேனே..”
பாட்டி சொல்லவும் பாட்டியின் அன்பான பேச்சில் அப்படியே நெகிழ்ந்து போனான் அவன்..
தன் அன்னை இருந்தபோது இப்படித்தான் அவனை வற்புறுத்தி நிறைய சாப்பிட வைப்பார்..
“சரி பாட்டி நீங்களே எனக்கு பரிமாறுங்க.. நான் உட்கார்ந்து சாப்பிடுறேன்..”
சாப்பாட்டு தட்டை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தவனுக்கு ஆசையாக பரிமாறினார் பாட்டி..
பாட்டி சமையல் ரொம்பவும் அற்புதமாக இருக்கும்.. அதுவும் இப்படி பாட்டி பரிமாறும் போது இரண்டு மூன்று கவளங்கள் அதிகப்படியாகவே உள்ளே செல்லும் அவனுக்கு..
சாப்பிட்டு முடித்தவுடன் “சரி பா.. நான் கிளம்புறேன் வீட்டுக்கு போகணும்.. அங்க பக்கத்து வீட்டு சுந்தரி வந்து காத்திருப்பா..” என்றாள் பாட்டி..
“யாரு பாட்டி அந்த சுந்தரி? எப்பவும் அவங்க வந்துருவாங்க வந்துருவாங்கன்னு சொல்லிட்டு ஓடுறீங்க.. ஏன் அவங்க அவங்க வீட்ல இருக்க மாட்டாங்களா? அவங்க வரலைன்னா நீங்க இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு நிதானமா போவீங்க இல்ல? ” என்று கேட்டான் அவன்..
தொடர்ந்து வருவார்கள்…
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி “❤️சுபா❤️”