
Category:
வில்விழி அம்பில்(அன்பில்) வீழ்ந்திடுவேனோ?
அம்பு..!! – ௰(10)
“இவ என்ன சக்கு சொல்றா?”
சகுந்தலாவை கூர்ந்து பார்த்தபடி மார்க்கண்டேயன் கேட்க அவரோ திருதிருவென விழித்தபடி “அ..அ..அது..அது ஒன்னும் இல்லைங்க.. மதிய நேரத்துல தூங்கினா உடம்பு வெயிட் போடுதா? அதான்.. நேரத்தை கொஞ்சம் உருப்படியா கழிக்கலாமேன்னு இந்த மாதிரி ஏதாவது படிச்சுக்கிட்டு.. என்னோட படிச்ச லாயர் ஃப்ரெண்ட்ஸோட பேசிக்கிட்டு இருந்தேன்.. அது.. சும்மா.. பொழுது போகணும் இல்ல..?” என்று தயங்கி தயங்கி சமாளித்தவர் “அதுக்காக தாங்க” என்று முடிக்கும் போது வெறும் காற்று தான் வந்தது அவர் வாயிலிருந்து..
விழியோ சகுந்தலாவை பார்த்து இடவலமாய் தலையாட்டி பெருமூச்சொன்றை விட்டு “இவங்கள திருத்த முடியாது” என்று சொல்லிக்கொண்டாள்..
“அப்பா.. அம்மா வெளியில வேலைக்கு போகலல்ல.. நீங்க சொல்றதை கேட்டு வீட்ல தானே இருந்தாங்க..? பொழுது போகலன்னு அவங்களுக்கு பிடிச்சது எதையோ படிச்சிருக்காங்க.. கொஞ்சம் லாயர்ஸோட பேசி இருக்காங்க.. ஆனா இந்த வீட்டையும் குடும்பத்தையும் பார்த்துக்கறதுல அவங்க எந்த குறையும் வெக்கலையேப்பா..”
ப்ருத்வி பேசியதில் மார்க்கண்டேயனும் “ம்ம்ம்..” என்று மேலும் கீழுமாய் தலையாட்ட ப்ருத்வி சகுந்தலாவிடம் “அப்போ உங்களுக்கு இதை பத்தி தெரியும் தானே? நீங்களே சொல்லுங்கம்மா.. ஒருவேளை கோர்ட்டுக்கு போனா சக்தி நம்ம கைக்கு கிடைக்கிறதுக்கு ஏதாவது வாய்ப்பு இருக்கா..?” என்று கேட்டான்..
சகுந்தலாவோ தயங்கியபடி மெதுவாக இடவலமாக தலையாட்ட மார்க்கண்டேயன் முகமோ சுருங்கி போனது..
“அப்பா.. கொஞ்சம் வரிங்களா? உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்..”
அவரும் தன் மகன்களோடு அறைக்குள் சென்றார்..
உள்ளே சென்றதும் “இங்க பாருங்கப்பா.. ஒருவேளை விழி நம்ம சக்தியை கூட்டிட்டு போயிட்டானா அவளை மாதிரியே முரட்டு பீஸா தான் வளர்ப்பா.. சக்தி வளர்ந்தப்புறம் எது பண்ணாலும் அவளை விழியோட பொண்ணுன்னு சொல்ல மாட்டாங்க.. மார்க்கண்டேயன் பேத்தி திமிரு பிடிச்சவன்னு சொல்லி உங்க பேரை தான் காலி பண்ணுவாங்க.. இப்ப நீங்க முடிவு பண்ணுங்க.. சக்தி இந்த வீட்ல நம்ம எல்லாரோட கண்காணிப்பில வளரணுமா.. இல்ல விழியோட போய் தனியா அவளை மாதிரியே வளரணுமா?”
அவன் கேட்ட கேள்வியில் மார்க்கண்டேயன் கையை பின்னால் கட்டி ஒரு சிறு நடை நடந்து யோசித்துக் கொண்டிருக்க அவர் யோசிக்க ஆரம்பித்த உடனேயே இந்தரிடம் ப்ருத்வி
“டேய் அப்படியே கண்டினியூ பண்ணுடா.. அவரை ரொம்ப யோசிக்க விடாதே.. இப்படியே அவரை மடக்கிடணும்..” என்று காதை கடிக்க
“அப்பா.. ப்ருத்வி சொல்ற மாதிரி சக்தி நம்மளோடயே இருக்கட்டும்பா.. இங்க இருந்தா என் மகளுக்கு எல்லா உறவுகளும் கிடைக்கும் பா..” என்றான்..
“சரி.. சக்தி இங்கேயே இருக்கட்டும்.. அந்த அடங்காப்பிடாரி கூட போய் அவளும் இன்னொரு அடங்காப்பிடாரியா வளர வேண்டாம்.. ஆனா முன்னாடி மாதிரி என்னை எகிறி எகிறி பேசிட்டு எதுக்கு எடுத்தாலும் செய்ய மாட்டேன் பண்ண மாட்டேன் என் இஷ்டத்துக்கு தான் பண்ணுவேன்னு தான்தோன்றி தனமா திரியாம வீட்டுக்கு அடங்கி ஒழுங்கா புள்ளையையும் புருஷனையும் பார்த்துக்கிட்டு இருக்கிறதா இருந்தா இருக்கட்டும் இல்லனா..”
ஒரு வழியாக அவர் விழியும் சக்தியும் அந்த வீட்டிலேயே இருக்கட்டும் என்று சொன்னதே பிருத்வி இந்தர் இருவருக்கும் மகிழ்ச்சி தான் என்றாலும் இன்னும் பாதி கிணறு தானே கடந்திருக்கிறார்கள்.. மிச்சத்தை கடக்க வேண்டுமே.. நிபந்தனைகளை பற்றி எப்படி பேசுவது என்று விழித்தான் இந்தர்..
பிருத்வி மார்க்கண்டேயனிடம் “அப்பா விழி திரும்ப இந்த வீட்டுக்கு பழையபடி வாழறதுக்கு வந்திருக்கான்னு நினைக்கிறீங்களா? இல்லப்பா.. அவ இந்த வீட்ல இருக்கறதுக்கு சில கண்டிஷன் எல்லாம் போட்டு இருக்கா.. அதை ஃபாலோ பண்ணா தான் அவ இந்த வீட்ல இருப்பேன்னு சொல்லி இருக்கா.. உங்களுக்கு உங்க பேத்தி உங்களோட இருக்கணும்னா நீங்களும் அந்த கண்டிஷனுக்கு எல்லாம் ஒத்துக்கணும்..” தயங்கி தயங்கி ஒருவழியாக சொல்லி முடித்திருந்தான்..
“என்னது.. கண்டிஷனா..? யாரு யாருக்குடா கண்டிஷன் போடறது? எவடா அவ? எனக்கே கண்டிஷன் போடுறவ.. ஒன்னும் தேவை இல்ல.. முதல்ல அவளை இந்த வீட்டை விட்டு தொரத்து.. கண்டிஷனாம் கண்டிஷன்.. பெரிய அல்லிராணி.. கண்டிஷன் போட வந்துட்டா..”
இந்தரோ “என்னடா இது? மறுபடியும் மொதல்லேர்ந்தா?” என்க “ஏன்டா நீ வேற.. கடுப்பை கிளப்பிக்கிட்டு.. அவசரப்படாத.. கொஞ்சம் கொஞ்சமா தான் கல்லை
நகர்த்தணும்..” அவனை ஆசுவாசப்படுத்தியவன் மார்க்கண்டேயன் பக்கம் திரும்பினான்..
“அப்பா.. கண்டிஷன் போட்டு இருக்கா.. ஆனா ஆறு மாசத்துக்கு தான் பா.. ஆறு மாசம் இந்த கண்டிஷனை கரெக்ட்டா ஃபாலோ பண்ணிட்டோம்னா அதுக்கப்புறம் அவ இந்தரோட எந்த கண்டிஷனும் இல்லாம வாழறேன்னு சொல்லி இருக்கா.. அப்போ அந்த ஆறு மாசத்துக்கு அப்புறம் நம்ம இஷ்டப்படி அவளை ஆட்டி வைக்கலாம்.. சோ இந்த ஆறு மாசம் அட்ஜஸ்ட் பண்ணீங்கன்னா அதுக்கப்புறம் உங்களுக்கு ஒரு அடக்கமான மருமக கிடைப்பா.. உங்க பேத்தியும் உங்களை விட்டு போக மாட்டா.. கொஞ்சம் யோசிங்கப்பா..”
மறுபடியும் யோசித்தார் மார்க்கண்டேயன்..
“ம்ம்.. முதல்ல என்ன கண்டிஷன்னு சொல்லு.. அந்த மகராணியோட கண்டிஷனை பொறுத்துதான் என் முடிவு இருக்கும்..”
இந்தரோ மறுபடியும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க “எப்பா.. முடியலடா ப்ருத்வி.. இவரை முழுசா ஒத்துக்க வெக்கறதுக்குள்ள எனக்கு வயசாயிடும் போல இருக்கு..” என்றான்..
“டேய்.. பேசறது எல்லாம் நானு.. நீ வேடிக்கை மட்டும் தான் பாத்துகிட்டு இருக்கே.. ஆனா ஏதோ நீதான் வெட்டி முறிக்கற மாதிரி பெருமூச்செல்லாம் விடுற.. நான் பார்த்துக்கறேன் விடுடா..” என்றவன் மார்க்கண்டேயனிடம்
“இந்த ஆறு மாசத்துக்கு வீட்ல இத்தனை நாளா அவங்க செஞ்சுகிட்டு இருந்த அத்தனை வேலையும் நம்ம செய்யணும்..”
“என்னது நாம செய்யணுமா? நாமன்னா..”
“நம்பனா நீங்க நானு இந்தர்.. நம்ம மூணு பேரும்..”
“டேய்..” என்று கர்ஜித்தவர் “என்னை பாத்தா எப்படி தெரியுது உங்க ரெண்டு பேருக்கும்.. இதெல்லாம் ஒரு கண்டிஷன்.. இதை தூக்கிட்டு வந்துட்டீங்க என்கிட்ட சொல்றதுக்கு.. வெக்கமா இல்லை உங்களுக்கு? நீங்க என் புள்ளைங்க தானாடா? பொண்டாட்டி கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருப்பாளாம்.. அவளை உட்கார வெச்சு அவளுக்கு சேவகம் பண்றதுக்கா உங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சேன்.. அதுக்கு நீங்க கல்யாணமே பண்ணாம இருந்திருக்கலாமே..”
“ப்ளீஸ்ப்பா.. ஒரு ஆறு மாசம் தானேப்பா..? அம்மாவை விட்டுட்டு முன்னாடி ஒரு பிசினஸ் ட்ரிப்புக்கு போனோம்.. ஞாபகம் இருக்கா..? அந்த இடத்தில வெளி சாப்பாடு ஒழுங்கா கிடைக்கல.. நம்ம ரூம்லயே நம்ம குக் பண்ணிக்கிட்டோம்… அந்த மாதிரி நினைச்சுக்கோங்க பா.. ஒரு ஆறு மாசம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க பா.. அது மட்டும் இல்லாம நீங்க தனியா செய்ய போறது இல்லையே.. நாங்க ரெண்டு பேரும் கூட செய்யப் போறோம் இல்ல.. அப்புறம் என்னப்பா..?”
“ஹான்.. அது சரி.. நாம வேலை எல்லாம் பாப்போம்.. மகராணிங்க எல்லாம் என்ன பண்ண போறாங்க..?”
“அவங்க இத்தனை நாள் நம்ம என்ன பண்ணிட்டு இருந்தோமோ அதை எல்லாம் பண்ணுவாங்களாம் பா..”
“எது..? நம்ம பண்ணிட்டு இருந்ததை.. ப்ச்.. நம்ம கம்பெனிக்கு போயிட்டு இருந்தோம்.. அவங்க கம்பெனிக்கு போவாங்களா..?”
“ஆமாம்பா.. வீட்ல எல்லா முடிவுகளையும் அவங்க எடுப்பாங்க.. கம்பெனிலயும் எல்லா முடிவுகளையும் அவங்க தான் எடுப்பாங்க.. நம்ம வீட்ல எல்லாத்தையும் அவங்க சொல்றபடி பாத்துக்கணும்..”
சொல்லிவிட்டு சட்டென தலையை குனிந்து கொண்டான் இந்தர்.. அவரோ இந்தரையும் பிருத்வியையும் எரித்து விடுவது போல் முறைத்தார்..
“உங்க ரெண்டு பேருக்கும் மூளை மங்கி போச்சு டா.. புத்தி பேதலிச்சு போச்சு.. அதான் இப்படி எல்லாம் வாய்க்கு வந்ததெல்லாம் பேசிகிட்டு இருக்கீங்க.. அந்த ராங்கிகாரி தான் சொன்னானா உங்களுக்கு எங்கடா போச்சு அறிவு? இதெல்லாம் நடக்கவே நடக்காது.. என்னால இதெல்லாம் பண்ண முடியாது.. இந்த வீட்ல நான்தான் குடும்ப தலைவன்.. நான்தான் முடிவு எடுப்பேன்.. அந்த பொறுப்பை நான் வேற யார்கிட்டயும் கொடுக்க மாட்டேன்.. அதும் பொம்பளைங்க கிட்ட.. விளங்கிடும்..”
“அப்பா ஏன்பா அப்டி சொல்றீங்க? நம்மளுக்கு மட்டும் முதல் நாளே பிசினஸ் செட் ஆயிருச்சா..? எவ்வளவு லாஸை பார்த்துருக்கோம்.. எல்லாருமே புதுசா தான கத்துக்குறோம்.. அவங்களும் கொஞ்சம் கொஞ்சமா கத்துப்பாங்க பா.. அதுவும் ஒரு ஆறு மாசம் தானேப்பா…? அப்புறம் பழையபடி நம்ம கம்பெனில போய் நம்ம வேலை பார்க்க போறோம்..”
சிறிது நேர மௌனத்திற்கு பின்
“சரி.. ஆறு மாசம் தான்.. இன்னைக்கு தேதியிலிருந்து ஆறாவது மாசம்.. வரைக்கும் இதுக்கு ஒத்துக்கிறேன்… அது கூட எந்த காலத்துக்கும் என் பேத்தியை அவகிட்ட விட்டுக் கொடுக்க கூடாதுங்கறதுக்காகவும்.. இந்த ஆறு மாசம் கழிச்சு அவளை பழைய படி இந்த வீட்ல அடக்கி வைக்கணுங்கறதுக்காகவும் மட்டும் இந்த கண்டிஷனுக்கு நான் ஒத்துக்குறேன்.. இந்த ஆட்டம் ஆடுறவளோட வாலை ஒட்ட நறுக்கணும்”
விழிகளில் கோபம் தெறிக்க சொல்லிக் கொண்டிருந்தார் மார்க்கண்டேயன்..
“ம்க்கும்.. பார்க்கலாம் யார் வாலை யாரு நறுக்க போறாங்கன்னு..” ப்ருத்வி உள்ளுக்குள் சொல்லிக்கொண்டான்..
“ரொம்ப தேங்க்ஸ் பா..”
இந்தர் சொல்ல
“அப்ப சரி போய் அவகிட்ட சொல்லு..”
சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு திரும்பிச் செல்லப் போனவரை மறுபடியும் அழைத்தான் இந்தர்..
“அப்பா.. இன்னும் ரெண்டு கண்டிஷன் இருக்குப்பா..”
“இன்னும் ரெண்டு கண்டிஷனா? இதுக்கு மேல என்ன தான்டா வேணும் அவளுக்கு?” என்று கேட்க
“ஐயோ இப்பவே எனக்கு நாக்கு தள்ளுதே.. இவருக்கு எப்படி சொல்லி புரியவைக்க..?” இப்போது ப்ருத்விக்கும் கொஞ்சம் அழுத்தமாய் தான் இருந்தது..
எச்சில் விழுங்கியவன் “அப்பா ஆர்ச்சரி அகடமியை வில்விழி பேர்ல முழுசா மாத்தி கொடுக்கணும்னு கேட்டிருக்கா..”
“என்ன..? ரெண்டு பேரும் விளையாடுறீங்களா? இதெல்லாம் வேலைக்காகாது.. நானே போய் அவளை வீட்டை விட்டு வெளியே தள்ளிட்டு வரேன்..” என்று திரும்பியவரை
“அப்பா.. ப்ளீஸ் பா கொஞ்சமாவது கன்சிடர் பண்ணுங்க.. இது என் வாழ்க்கை பா.. எப்படி இருந்தாலும் அந்த ஆர்ச்சரி அகடமி நம்ம கைல நிக்காதுப்பா.. ஒருவேளை விழி என்னை விட்டு போயிட்டா என்னால எதுலயுமே ஃபோக்கஸ் பண்ண முடியாது.. அகடமியை கவனிக்க ஆள் இல்லாம மறுபடியும் மொத்தமா கைவிட்டுப் போய்டும்.. அதுக்கு விழி பேரில இருந்தா..”
அவன் சொன்னதைக் கேட்டவர் அவனை ஆழ்ந்து பார்த்து “என்னடா.. மொத்தமா எல்லாத்தையும் அவளுக்கு எழுதி கொடுத்துடலாம்னு முடிவு பண்ணிட்டியா? ஏன் அகடமியை மட்டும் தர்ற? நம்ப கம்பெனி வீடு எல்லாத்தையும் எழுதி கொடுத்துடேன்.. ஏதாவது அறிவோட தான் பேசுறியா நீ? இங்க பாரு.. நீ சொன்ன முதல் கண்டிஷனுக்கு நான் ஒத்துக்கிட்டதுக்கு காரணம் ஆறு மாசம் மட்டும் தான் அந்த கண்டிஷனை ஃபாலோ பண்ணனுங்கறதால தான்.. ஆனா இது அப்படி இல்ல.. ஒரு வாட்டி எழுதி கொடுத்துட்டா எழுதி கொடுத்தது தான்.. திரும்ப வாங்க முடியாது.. அவ மறுபடியும் வீட்டை விட்டு ஓடி போய்ட்டானா அகடமியும் அவளோட சேர்ந்து போய்டும்.. அவ திமிருக்கு என்னால தீனி போட்டுக்கிட்டே இருக்க முடியாது..”
உறுதியான குரலில் அதிரடியாய் சொன்னார் மார்க்கண்டேயன்..
இந்தரின் முகம் தொங்கி போக அதை பார்த்த மார்க்கண்டேனோ “இவன் வேற.. அப்பப்போ தலைய கவுத்துகிட்டு.. ஏன்டா இப்படி பொண்டாட்டி தாசனா ஆயிட்ட.. சரி.. உனக்காக இப்படி வேணா பண்ணலாம்.. உன் பேர்ல 50% அவ பேருல 50% எழுதி வைக்கிறேன்.. இத்தனை வருஷமா உழைச்சு அந்த அகடமியை முன்னுக்கு கொண்டு வந்து இருக்கடா.. உன் உழைப்புக்கு மதிப்பே இல்லையா? முழுசா அவ பேருல எழுதி வைக்கணும்கற? நான் சொல்றது புரியுதா? இதுக்கு ஓகேன்னா சரி.. இல்ல அவ கேட்டதை குடுக்கலன்னு அவ உன்னோட வாழமாட்டேன்னா வாழ வேண்டாம்.. அவ சக்தியை எடுத்துட்டு போறதுனாலும் போகட்டும்.. ஆனா என்னால அகடமியை முழுசா அவகிட்ட தூக்கி கொடுக்க முடியாது..”
அவர் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே பட்டது ப்ருத்விக்கு..
இந்தரிடம் திரும்பியவன் “இந்திரா.. நம்ம இதை பத்தி விழி கிட்ட பேசி கன்வின்ஸ் பண்ண பார்க்கலாம்.. அப்பா சொல்ற மாதிரி இது உன் உழைப்புடா.. அப்படியே முழுசா கொடுக்க முடியாது..”
“பேசலாம்டா..” என்றவன் குரலை தாழ்த்தி “ஆனா அவ அப்பாக்கு மேல ஆடுவாடா.. முடியலடா.. பேசி பேசி ரொம்ப டயர்டாவுது..” என்றான்..
“ம்க்கும்.. அடுத்த கண்டிஷனுக்கு என்ன சொல்ல போறாரோ..? சரி விடு.. இவ்வளவு பண்ணிட்டோம்.. அதை பண்ண மாட்டோமா?”
“என்னடா பொம்பளைங்க மாதிரி குசுகுசுன்னு பேசிட்டு இருக்கீங்க? என் முடிவை நான் சொல்லிட்டேன்.. உங்க கண்டிஷன் எல்லாம் அவ்வளவு தானா? இன்னும் இருக்கா..?”
“இன்னும் ஒன்னே ஒன்னு பா” தயக்கத்தோடு சொன்னான் இந்தர்..
“அதான் ஏற்கனவே இடியை இறக்கிட்டீங்களே.. கடைசியா இன்னொரு இடி தான? இறக்கு.. இப்பதான் என் ஹார்ட் எவ்வளவு ஸ்ட்ராங்னு எனக்கு தெரியுது.. பெரிய பெரிய இடி எல்லாம் தாங்குது.. இதுக்கு மேல ஒன்னும் நீ பெருசா கேட்டுற போறதில்ல.. சொல்லித்தொலை..”
“அது.. ஊர்மிளா..”
“ஊர்மிளாவா? அவளுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்? அவளை பத்தி பேசறதுக்கு இவ யாரு? அவ என் பொண்ணு.. அவ விஷயத்துல நான் எதையுமே மாத்திக்க முடியாது..”
“என்னடா ப்ருத்வி?”
இந்தர் சிணுங்க “இவன் ஒருத்தன்.. பார்க்க தான் அப்படியே சிங்கம் மாதிரி இருப்பான்.. மத்தவங்க முன்னாடி அப்படியே விரைப்பா திரியவேண்டியது.. அப்பாவை பார்த்தா என்னடா ஆகுது உனக்கு..? அப்படியே பம்முற?”
“டேய்.. நான் கேக்கறது எல்லாம் கொஞ்சம் ஓவர்னு எனக்கே கொஞ்சம் மனசாட்சி உறுத்துதுடா.. அதனாலதான் வாயே வரமாட்டேங்குதுடா..”
“ம்க்கும்.. வெளங்கிரும்.. மனசாட்சி பத்தி பேசற மூஞ்சை பாரு… அப்பா கிட்ட இதெல்லாம் கேக்குறதுக்கு இவ்ளோ மனசாட்சியோட யோசிக்கிறவன் அன்னிக்கு பொண்டாட்டியை அவர் அவ்வளவு கேவலமா பேசினப்பல்லாம் வாயை திறக்காம இருந்தியேடா.. அப்ப மட்டும் உனக்கு மனசாட்சி உறுத்தல.. அவ மேல தப்பே இல்லன்னு உனக்கு தெரியும் தானே?”
“நீ வேற ஏன்டா வெந்த புண்ணுல வேலை பாய்ச்சுற? ஏற்கனவே அவ நிறைய பேசிட்டா.. அண்ணியும் மச்சினனும் ஒண்ணா சேர்ந்து என்னை வெச்சு செய்யறீங்க..”
“உன்னை வெச்சு அப்பா ஆடுன ஆட்டம் அப்படி.. சரி இரு.. நான் பேசி பார்க்கிறேன்..”
“அப்பா ஊர்மி வந்தா நீங்க அவளுக்கு கல்யாணம் பண்ணி வெக்கறேன்னு சொன்னீங்க இல்ல..?”
“ஆமா.. அதுக்கு என்ன இப்போ? அவ போற புகுந்த வீட்லயும் அந்த மாப்பிள்ளை தான் சமைக்கணும்னு சொல்றாளா..?”
அவர் கேட்கவும் பக்கென சிரித்து விட்டார்கள் இந்தரும் பிருத்வியும்..
“இல்லப்பா.. அவளுக்கு இப்ப கல்யாணம் பண்ணி வைக்க கூடாதாம்.. அவ விருப்பத்தோட தான் கல்யாணம் பண்ணி வைக்கணுமாம்.. இங்க வந்தவுடனே அவ வேலைக்கு போக ஆசைப்பட்டா அவ வேலை பாக்கட்டும்னு..”
“இல்ல.. இது சரிபட்டு வராது.. நான் என் ரூமுக்கு போறேன்.. இன்னும் 10 நிமிஷம் தான் டைம்.. அந்த திமிர் பிடிச்சவளை வெளியில துரத்திட்டு அப்புறம் என்னை கூப்பிடுங்க..” என்று வெளியே போகப் போனவரை ஓடிப் போய் இரு பக்கமும் கைப்பிடித்து தடுத்தார்கள் இந்தரும் ப்ருத்வியும்..
“அப்பா.. இப்படி முழுசா கேட்காம ஏம்ப்பா புசுக்கு புசுக்குன்னு கோவப்படுறீங்க.. இப்ப என்ன அவ அடுத்த மாசம் ஊர்மி வந்த உடனே கல்யாணம் பண்ண கூடாதுன்னு தானே சொன்னா? எப்படியும் ஆறு மாசத்தோட இந்த கண்டிஷனுக்கு எல்லாம் டைம் முடிஞ்சுடும்.. அதுக்கப்புறம் ஊர்மிளாவை கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணி வச்சுரலாம்.. ஆறு மாசம் கல்யாணத்தை தள்ளி போடறதனால என்னப்பா ஆயிடப்போகுது…?”
“டேய்.. அவ என் பொண்ணுடா.. அவளுக்கு எப்ப கல்யாணம் பண்ணனும்னு நான் தான் முடிவு பண்ணனும்..”
“சரியா போச்சு போ.. அவ இதைத்தான் கூடாதுங்கறா.. இவரு நம்ம வழிக்கு வரமாட்டாரு..”
“இங்க பாரு.. ஐடியா தான் கொடுக்க முடியும்.. நான் ரொம்ப கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணிட்டேன்.. நீயும் கொஞ்சம் பேசுடா..” என்றான் பிருத்வி..
“அப்பா.. ஆறு மாசம் கழிச்சு நீங்க எப்படி நினைக்கிறீங்களோ அப்படியே ஊர்மிக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு.. தயவு செஞ்சு இந்த ஆறு மாசம் எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கப்பா… ப்ளீஸ் பா எனக்கு என் வில்லியும் சக்தியும் வேணும்பா..”
விட்டால் அழுது விடுபவன் போல் கெஞ்சிக் கொண்டிருக்கும் பிள்ளையிடம் அதற்கு மேல் இறுக்கத்தை காட்ட முடியவில்லை மார்க்கண்டேயனால்..
“வில்லியா? ம்ம்..கரெக்டான பேர் தான் அவளுக்கு.. சரி.. ஆறு மாசம் முடிஞ்சு அடுத்த நாள் ஊர்மிக்கு நான் பார்த்திருக்கற மாப்பிள்ளையோட நிச்சயதார்த்தம்.. சரியா?”
“ஓகே பா.. ஆனா இந்த விஷயம் வீட்ல யாருக்கும் தெரிய வேண்டாம்.. ஆறு மாசம் முடிஞ்சப்புறம் சொல்லிக்கலாம்பா..”
“சரி.. ஆனா இந்த கண்டிஷனுக்கு எல்லாம் நான் ஓகே சொன்னதை நீங்களே போய் சொல்லிடுங்க.. எனக்கு அந்த வில்லி முகத்தை பார்க்க கூட பிடிக்கல..” விரைப்பாய் சொல்லிவிட்டு எதிர்புறமாய் திரும்பி நின்று கொண்டார் மார்க்கண்டேயன்..
“அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம்ப்பா… ரொம்ப தேங்க்ஸ் பா..” என்றவன் ஒரு நிம்மதி பெருமூச்சோடு தம்பியோடு வெளியே சென்றான்..
அம்பு பாயும்..
அம்பு – ௯ (9)
வில்விழி போட்டதாக சொன்ன ஒரு நிபந்தனையை கேட்டதிலேயே அரண்டு போனான் பிரித்வி.. அவள் சொன்ன மற்ற நிபந்தனைகளையும் ஒவ்வொன்றாய் இந்தர் பட்டியலிட மயக்கமே வராத குறை தான் அவனுக்கு..
கடைசி நிபந்தனையை மட்டும் தம்பியிடம் கூற முடியாமல் மறைத்து இருந்தான் இந்தர்..
ப்ரித்வியோ மெதுவாக கண்களை மூடி மேலும் கீழுமாய் மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டபடி தன் கையை மேலிருந்து கீழாக மெல்ல இறக்கி தன்னையே ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தான்..
“டேய் இந்திரா.. நீ சொல்ற மாதிரி நெஜமாவே இதெல்லாம் கண்டிஷனே இல்லைடா.. ஒன்னும் ஒன்னும் ஒரு அணுகுண்டு.. நீ சரியா தான் சொன்ன.. அப்பா எப்படி இருந்தாலும் இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டாரேடா..”
“டேய்.. இத சொல்லவா டா உன்னை கூப்பிட்டேன்.. இதுதான் எனக்கே தெரியுமே.. ஆனா அந்த வில்லியை என்னோட இருக்க வைக்கணும்னா இதை தவிர வேற வழியே கிடையாதுடா.. அவளை மீட் பண்ணதுலேர்ந்து என் மூளை சுத்தமா வேலை செய்ய மாட்டேங்குது.. எங்க அவ குழந்தையை தூக்கிட்டு என்னை விட்டு போயிடுவாளோன்ற யோசனைலயே ஒரே படபடப்பா இருக்குடா.. ப்ளீஸ்டா.. என் பெருமூளை தான் வேலை செய்யல.. உன்னோட இந்த சிறு மூளைய கசக்கி ஏதாவது உருப்படியான ஐடியா சொல்லுடா..”
அந்த நேரத்திலும் விடாமல் தன்னை கலாய்த்தவனை கண்களை சுருக்கி முறைத்தான் ப்ரித்வி..
“ஆனாலும் மவனே.. உனக்கு ரொம்ப லொள்ளு தான்டா.. கைவசம் ஒரு ஐடியா இல்லை.. வந்து என்னை ஐடியா கேட்கிறே.. அது நடுவுல இந்த நக்கல் கிண்டல் இதெல்லாம் உனக்கு தேவையா?”
“ஐயையோ இதை மனசுல வச்சுட்டு என் வாழ்க்கைல விளையாடிடாதடா.. உருப்படியா ஏதாவது ஐடியா சொல்லு..”
“ஐடியா தானே..? சொல்றேன்..” என்றபடி தீவிரமாய் சிந்தித்தவன்
“ம்ம்..”
அடுத்த நிமிடம் “ஐடியா சிக்கிருச்சு.. டேய்.. நம்ப அப்பா நிச்சயமா இந்த கண்டிஷனுக்கு எல்லாம் ஒத்துப்பாரு.. ஒத்துக்க வெக்கறோம்.. அதுக்கு நான் கேரண்டி..”
“என்னடா சொல்ற அப்பா எப்படி ஒத்துப்பாரு..”
“ஒத்துப்பாரு.. ஆக்சுவலா நீ இதுக்கெல்லாம் உன் பொண்ணு சக்திக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்.. நல்ல வேளை.. அவ உன் வாழ்க்கையில வந்தா.. உன் வாழ்க்கைல விளக்கேத்தி வைக்க போற நம்ம வீட்டு மகாலட்சுமி அவ தான்டா.. சரி வா..” என்றவன் மறுபடியும் வரவேற்பறைக்கு இந்தரையும் அழைத்துக் கொண்டு போனான்..
“என்னடா நீயும் உங்க அண்ணனும் பேச வேண்டிய ரகசியம் எல்லாம் பேசிட்டீங்களா? இப்ப நாம பேசலாமா?”
வெளியே வந்தவர்களை பார்த்து மார்க்கண்டேயன் கேட்க
“பேசலாம் பா.. ஆனா இங்கேயே அம்மா முன்னாடியும் வில்விழி முன்னாடியும் பேசலாம்..”
“வில்விழியா? அது யாருடா வில்விழி..?”
“ம்ம்.. உங்க பெரிய மருமக.. இந்தரோட வைஃப்… எனக்கு அண்ணி.. உங்க பேத்தி சக்தியோட அம்மா.. அவ தான் வில்விழி..”
“வில்விழியா? அது என்னடா பேரு? அவ பேரு மலர்விழி தானே..”
“இப்போ பேரை மாத்தியாச்சு.. அவ பேரு வில்விழி.. அவ செய்யற ப்ரொஃபஷனுக்கு ஏத்த மாதிரி பேரை மாத்திக்கிட்டு இருக்கா போல இருக்குப்பா..”
‘அது சரி.. புகுந்த வீட்ல மாமனார் மாமியாருக்கும் புருஷனுக்கும் தான் மதிப்பு கிடையாதுன்னு நினைச்சேன்.. பொறந்த வீட்டுல அப்பா வச்ச பேருக்கும் மதிப்பு கிடையாதா? அதையும் மாத்திட்டாளா..?”
வில்விழியை பார்த்து முறைத்தவர்
“சரி.. வில்விழியோ வேல்விழியோ எதையோ வெச்சுக்கிட்டு போகட்டும்.. எனக்கு என்ன வந்தது? அதை விடு.. அப்புறம் உள்ள போய் பேசினீங்களே என்ன முடிவு பண்ணிங்க..?”
“என்னப்பா முடிவு பண்ணுறது? இந்தர் அவன் வைஃபோடதானப்பா வாழணும்? குழந்தை வேற இருக்கு.. மூணு பேரும் குடும்பமா வாழறதுதான் பா கரெக்ட்..”
“ம்ம்.. நீ சொல்றது சரிதான்.. அவ இங்கேயே இருந்து நல்லபடியா புருஷனோட வாழ்ந்து புள்ளைய பெத்து இருந்தானா மூணு பேரும் குடும்பமா வாழறது சரி.. அவ நடுவுல ஓடிப் போய் இல்ல புள்ள பெத்துட்டு வந்து இருக்கா..? இந்த வீட்டுல அவளால எவ்வளவு அவமானங்களை தாங்கி இருக்கோம் நாம? இவ்வளவு அவமானத்தை அவனுக்கும் இந்த குடும்பத்துக்கு தேடி தந்தவளோட மறுபடியும் என் புள்ள வாழணுமா? ஒன்னும் தேவையில்லை.. அவ கெளம்பட்டும்..”
கம்பீரமான குரலில் வந்தன இறுதி வார்த்தைகள் இதுதான் என் முடிவு என்பது போல…
“மாமா..” என்றழைத்த வில்விழி சட்டென நிறுத்தி “ஓ.. உங்களை மாமானு வேற கூப்பிடக்கூடாதுன்னு சொல்லிட்டீங்க.. வேற என்ன கூப்பிடுறது..? ம்ம்..” என்று சுட்டு விரலை கன்னத்தில் வைத்து யோசிப்பது போல் நின்றவள்
“ஹா..ன்.. அங்கிள்னு கூப்பிடவா?” என்று கேட்டுவிட்டு பதிலுக்கு மார்க்கண்டேயனின் முறைப்பையும் வாங்கிக் கொண்டாள்..
ஆனால் அந்த முறைப்பு அவளில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை..
“ஓடினேன் ஓடினேன்னு சொல்றீங்களே.. நான் ஓடினதுக்கு காரணம் யாரு? நான் என்ன இந்தரோட வாழ பிடிக்காமயா ஓடுனேன்.. நான் ஏன் ஓடுனேன்னு உங்களுக்கு தெரியாது..? இந்தரை உயிருக்கு உயிரா விரும்பினவ நான்.. இப்பவும் விரும்புறேன்..”
அவள் இப்படி சொன்ன நேரம் சட்டென ஒரு நொடி இந்தரின் விழிகளை காதலோடு தழுவின அவள் விழிகள்..
அடுத்த நொடி மார்க்கண்டேயன் பக்கம் திரும்பியவள் “ஆனா என் கனவெல்லாம் தொலைச்சிட்டு ஒரு அடிமையா தான் அவரோட வாழ முடியும்னா அப்படி ஒரு வாழ்க்கை எனக்கு தேவையே இல்லைன்னு தான் ஓடினேன்..”
“ஓ.. புருஷனை விட உன் கனவு தான் உனக்கு அவ்ளோ முக்கியமா?”
“ம்ம்.. பொண்டாட்டிக்கு புருஷனை விட கனவு முக்கியம் இல்லன்னு நீங்க சொல்றீங்க.. அது என்ன பொண்டாட்டிக்கு மட்டும் அப்படி..? பாசம் நேசம் காதல் கனவு இதெல்லாம் புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருக்குமே சமம் தானே.. அப்போ பொண்டாட்டி கனவை நிறைவேத்தறதுக்காக புருஷனும் அவனோட கனவை விட்டுக் கொடுக்கலாம் இல்ல..? ஃபார் எ சேஞ்ச் உங்க புள்ளையை வீட்ல இருக்க சொல்லுங்க.. நான் என் கனவை நோக்கி போறேன்..”
“ஊர் உலகத்துல எங்கேயுமே இந்த மாதிரி ஒரு கிறுக்குத்தனத்தை யாருமே பண்ண மாட்டாங்க.. ஏன்டா.. என்னடா இது பைத்தியக்காரத்தனம்.. என்ன பேசிட்டிருக்கா இவ? பொண்டாட்டியை வேலைக்கு அனுப்பிச்சிட்டு புருஷன் வீட்ல உக்காந்திருக்கணுமா? விட்டா உன்னை சேலை கட்ட வச்சிருவா போல அவ..”
மார்க்கண்டேயன் அடிக்குரலில் சீறினார்..
“அப்பா.. இப்படியே பேசிட்டு இருந்தா இதுக்கு சொல்யூஷனே கிடைக்காது.. முன்னாடி அவ போனதெல்லாம் இருக்கட்டும் பா.. இப்ப வீட்டுக்கு திரும்பி வந்து இருக்கா.. இப்போ அவங்க மட்டும் இல்ல.. ஒரு குழந்தையும் இருக்கு.. நாம அதையும் யோசிச்சு பாக்கணும்.. அந்த குழந்தைக்காக ஒரு நல்ல முடிவு எடுக்கணும்.. உங்க பிள்ளையோட பொண்டாட்டியை அவன் கிட்ட இருந்து நீங்க பிரிச்சு அனுப்பலாம்.. ஆனா உங்க பேத்தியோட அம்மா அப்பாவை நீங்க பிரிக்க முடியாது பா.. அது நீங்க சக்திக்கு பண்ற பெரிய பாவம்.. கொஞ்சம் யோசிச்சு பேசுங்கப்பா..”
“ஹலோ ப்ரித்வி.. நீங்க எதுக்கு எனக்காக இவர் கிட்ட கெஞ்சிகிட்டு இருக்கீங்க..? நான் யார்கிட்டயும் இங்க கெஞ்சி வாழ்க்கை கேக்கறதுக்கு வரலை.. இந்தரை பிரிஞ்சு நான் சந்தோஷமா இல்ல தான்.. ஆனா அதுக்காக என் சுயமரியாதையை விட்டு கொடுத்துட்டு வாழமுடியாது.. அதான் இந்த வீட்டை விட்டு போனேன்.. ஆனா இப்ப என் குழந்தையோட வாழ்க்கைக்காக தான் நான் இந்த வீட்டுக்குள்ள மறுபடியும் வந்து நின்னுகிட்டு இருக்கேன்.. இப்பவும் யாருக்காகவும் என் செல்ஃப் ரெஸ்பெக்ட்டையும் என் ப்ரொஃபஷனையும் நான் இழக்கறதுக்கு ரெடியா இல்ல..”
அவள் பேசியதை கேட்ட ப்ருத்வியோ முற்றிலும் தளர்ந்தவனாய் இந்தரிடம் “டேய் ரெண்டு பேரும் அடங்க மாட்டேங்கிறாங்க டா.. உன் பொண்டாட்டி கொஞ்சம் வாயை அடக்கினா ஏதாவது பண்ணலாம்.. கண்டிஷனையும் போட்டுட்டு இந்த பேச்சு பேசுறா.. அண்ணாத்த.. உன் வாழ்க்கை ஓவரா ஊசலாடிட்டு இருக்குடி.. உன் வில்லி அவ வாயை ஒரு அஞ்சு நிமிஷம் மூடுனானா நான் எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன்.. ஆனா எங்க.. அப்படி ஒரு அதிசயம் நடக்கும்ன்னு எனக்கு தோணவே இல்லை..” இந்தர் காதை கடித்தான் ப்ருத்வி..
“எப்படி சிக்கி இருக்கேன் பாருடா..” சோகம் அப்பிய முகத்துடன் தழுதழுத்த குரலில் தம்பியிடம் ரகசியமாய் புலம்பினான் இந்தர்..
“சுயமரியாதையை விட்டு இங்க யாரும் அவளை வாழ சொல்லல.. கிளம்பி போயிட்டே இருக்க சொல்லுடா ப்ருத்வி.. ஆனா எந்த காரணத்தை கொண்டும் என் பேத்தி அவளோட போக மாட்டா.. என் பேத்தி அவ அப்பனோட தான் இருப்பா..”
கொஞ்சமும் இறுக்கம் தளராமல் பேசிக்கொண்டிருந்தார் மார்க்கண்டேயன்..
“அப்பா.. என்னப்பா பேசுறீங்க? உங்களுக்கு இப்ப இருக்கிற ரூல்ஸ் தெரியாதா? நீங்க கோர்ட்டுக்கு போனா கூட குழந்தை அம்மா கிட்ட தான் இருக்கணும்னு தான் தீர்ப்பு வரும்.. அதுவும் பெண் குழந்தை அம்மா கிட்ட வளரணும்னு தான் சொல்லுவாங்க..”
“அதெல்லாம் நம்ம வக்கீல் கிட்ட பேசி ஏதாவது செஞ்சு பிள்ளையை வாங்கிடலாம் டா.. நீ ஒன்னும் கவலைப்படாத..”
“ஓ அப்படி வேற உங்களுக்கு நெனைப்பு இருக்கா.. பெண் குழந்தை அம்மாகிட்ட தான் வளரனும்னு தான் சட்டமும் சொல்லும்.. நீங்க எந்த வக்கீலை வேணா போய் கேட்டு பாருங்க.. எதுக்கு வெளில கேட்டுக்கிட்டு.. இதோ அத்தையே வக்கீல் தானே..? அவங்க கிட்டயே கேட்கலாம்.. என்னத்த..? நான் சொல்றது சரிதானே..?”
வில்விழி சகுந்தலா பக்கம் திரும்பி கேட்க அவளோ திடுக்கிட்டு அவளை பார்த்து “என்னை ஏன்மா இதுல மாட்டிவிடுறே?” என்பது போல் புருவம் சுருக்கி விழிகளை உருட்டியபடி மார்க்கண்டேயனின் பக்கம் திரும்ப அவரின் முறைப்பை சந்தித்தவள் அப்படியே தலையை பட்டென குனிந்து கொண்டாள்..
மார்க்கண்டேயனோ அவள் பக்கம் ஏளனமாய் ஒரு பார்வையோடு “இவ படிச்சு எவ்வளவு வருஷம் ஆகுது..? இவளுக்கு எப்படி இன்னிக்கு இருக்கிற சட்டம் எல்லாம் தெரியும்? அதெல்லாம் நம்ம வக்கீல் கிட்ட பேசி நமக்கு சாதகமா தீர்ப்பு வாங்கிக்கலாம் டா.. அந்த பொண்ணு ஏதோ சொல்றான்னு பயப்படாதீங்க..” என்றார்..
மார்க்கண்டேயனை கூர்ந்து பார்த்த வில்விழியோ “யாரு..? அத்தைக்கு இப்ப இருக்கற சட்டங்களை பத்தி ஒன்னும் தெரியாதா? உங்களுக்கு வேணும்னா நாட்டு நடப்பு தெரியாம இருக்கும் மாமா.. அத்தைக்கு எல்லா விஷயமும் தெரியும்.. நீங்க கம்பெனிக்கு போயிருக்கும் போது அத்தை வேலை எல்லாம் முடிச்சுட்டு வீட்ல லா புக்ஸ் எல்லாம் வச்சு படிச்சுக்கிட்டு இருக்காங்க.. அது மட்டும் இல்லாம நியூஸ் பேப்பர்ல வர்ற நியூஸ் இப்ப இருக்கிற கேஸ்களோட டீடைல்ஸ்.. இது எல்லாமே அவங்களுக்கு அத்து படி.. மூணு வருஷத்துக்கு முன்னாடி நான் இந்த வீட்ல இருந்தப்போ அத்தைக்கு இந்த மாதிரி நியூஸ் எல்லாம் தெரிஞ்சுக்கறதுக்கு ஹெல்ப் பண்ணதே நான்தான்.. ஆன்லைன்ல வித்தியாசமான கேஸ் பத்தின டீடெயில்ஸ்.. இப்ப இருக்கிற வக்கீல்கள் எப்படி வாதாடுறாங்க.. ஜட்ஜ்மெண்ட் எப்படி கொடுக்குறாங்க.. இதை பத்தி எல்லாம் நிறைய டீடெயில்ஸ் அவங்களுக்கு நான் எடுத்து கொடுத்து இருக்கேன்.. நீங்க இல்லாதப்போ அவங்க நிறைய லாயர்ஸோட கூட ஃபோன்ல பேசி இருக்காங்க.. சில கேஸஸ்ல இவங்க குடுக்கற சில டிப்ஸ் அந்த லாயர்ஸூக்கே ஹெல்ப்பா இருந்திருக்குன்னு அவங்க சொல்லி இருக்காங்க.. இவங்களுக்கு அந்த ஃபீல்டுல இவ்வளவு டேலண்ட் இருக்கும்போது அதெல்லாம் இப்படி வேஸ்ட் பண்றாங்களேன்னு வருத்தமும் பட்டிருக்காங்க..”
வில்விழி சொன்னதை கேட்டு அப்படியே அதிர்ந்து வாயடைத்து போய் நின்றது மார்க்கண்டேயன் மட்டும் இல்லை அவரது இரு மகன்களும் கூடத்தான்..
அம்பு பாயும்..
அம்பு..!! – ௮ (8)
“ஐயையோ.. முதலுக்கே மோசம் பண்ணிருவா போலயே.. சொக்கா.. என்னை காப்பாத்து.. இவ வேற கொஞ்சம் நிமிண்டி விட்டா போதும்.. பத்திட்டு எரியறா.. இந்த அப்பா வேற ஓவரா பேசி இவளை கிளப்பி கிளப்பி விடுறாரே..”
நாலா பக்கமும் விழிகளை உருட்டியபடி திருதிருவென விழித்துக் கொண்டு இதை எப்படி சமாளிப்பது என்று யோசித்து திண்டாடிக் கொண்டிருந்தான் இந்தர்..
“டேய் இந்திரா.. உன் நிலைமை ரொம்ப மோசமாயிரும் போலயேடா.. ஏடாகூடாமா இப்படி ரெண்டு டார்ச்சர்க்கு நடுவுல மாட்டிக்கிட்டியேடா.. சிக்கினா சின்னாபின்னமாக்காம விடமாட்டாங்க.. இன்னைக்குன்னு பார்த்து இந்த பிரித்வியை வேற காணோம்.. கொஞ்சம் கூட இருந்து ஏதாவது ஹெல்ப் பண்ணுவான்னு பாத்தா நேரம் பார்த்து எங்க தொலைஞ்சான்னு தெரியல பாவிப்பய.. டேய் எரும.. எங்கடா போய் ஒழிஞ்ச?”
மனதிற்குள் ப்ரித்விக்கும் அர்ச்சனை செய்தபடியே வில்விழியிடம் திரும்பி..
“வில்லி..” என்று அவசரப்பட்டு அழைத்தவன் நாக்கை கடித்தபடி “இன்னைக்கு உன் நாக்குல சனி அவர் இஷ்டத்துக்கு தாண்டவம் ஆடிகிட்டு இருக்காரு டா.. ஏற்கனவே கிளம்பி போறேன்னு சொல்லிக்கிட்டிருக்கா.. இதுல இவர் முன்னாடி வில்லின்னு வேற கூப்பிட்டுட்டோம்.. இப்ப சலங்கை கட்டி ஆடப்போறா..”
பாவமாய் அவள் புறம் பார்த்தவன் “ஹிஹி” என்று அசிங்கமாக இளித்துவிட்டு “சாரி.. விழின்னு கூப்பிட வந்து டங்கு ஸ்லிப்பாயிடுச்சு.. கொஞ்சம் இரு விழி.. அப்பா கிட்ட நான் பேசறேன்.. அதுக்குள்ள அவசரப்பட்டு நீ எந்த முடிவும் எடுத்திராத.. ” என்றவன்
தன் தந்தை பக்கம் திரும்பி “அப்பா.. நான் சொல்றதை முதல்ல கேளுங்க..” என்று சொல்லிக் கொண்டிருந்த நேரம் சரியாக கேட்டை திறக்கும் சத்தமும் ப்ருத்வி குதிரையை ஓட்டி உள்ளே வர குதிரையின் குளம்படி சத்தமும் கேட்டது..
அதை கேட்டு ஆசுவாசமாய் ஒரு பெருமூச்செடுத்த இந்தர் “அப்பாடா வந்துட்டான்.. கொஞ்சம் சமாளிக்கலாம் இவரை.. கொஞ்சம் விட்டா பத்து நிமிஷத்துல என் மொத்த வாழ்க்கையையும் அழிச்சிருப்பாரு.. எவ்ளோ கஷ்டப்பட்டு இவளை சமாதானப்படுத்தி இழுத்துட்டு வந்து இருக்கேன்.. மொத்தத்தையும் ஒரு டயலாக்கை வச்சு முழுசா காலி பண்ணி தரை மட்டமாக்க பார்க்கறாரு.. இந்த அப்பாங்கள்லாம் ஏன் தான் இப்படி இருக்காங்களோ..”
இப்படியே யோசனையில் இருந்தவனின் சிந்தனையை கலைத்தார் மார்க்கண்டேயன்..
“என்னடா.. அவ இஷ்டத்துக்கு பேசிக்கிட்டே இருக்கா.. நீ எந்த ரியாக்ஷனும் இல்லாம வாயை மூடிட்டு இருக்கே..”
அவர் கேட்ட அதே நேரம் உள் நுழைந்த ப்ருத்வி வில்விழியை பார்த்த வியப்பில் விழி விரித்து “மலரு.. எப்ப வந்த? முதல்ல எங்க போன நீ? இப்ப எப்படி இருக்க..?” என்று உற்சாகமாக கேட்டுக் கொண்டிருந்தவன் அப்போதுதான் சக்தியை கவனித்திருக்க
“ஆமா.. இதாரு க்யூட்டி பை.. ஹாய் குட்டி. க்யூட்டா டால் மாதிரி இருக்கீங்களே.. குட்டி பொண்ணு..” என்று குழந்தையின் நாடியில் கைவைத்து கொஞ்சினான்..
“மலர்.. உங்க குழந்தையா? அப்ப இங்கே இருந்து போகும்போது பிரக்னண்டா இருந்தியா? இந்த இளவரசி பேர் என்ன?” என்று நேராக மலரை விசாரிக்க தொடங்க
மார்க்கண்டேயனோ “ஏ.. ப்ருத்வி… நல்லா விசாரிச்சு முடிச்சிட்டியா? இல்ல உள்ளே இருந்து ஒரு ஆரத்தி தட்டு எடுத்துட்டு வந்து நீயும் உங்க அம்மாவும் சேர்ந்து ஆர்த்தி எடுத்து அவளை பூரண கும்பம் வெச்சு வரவேற்க போறிங்களா?” என்று நக்கலாக கேட்டார்..
அவனோ அவர் பேச்சில் இருந்த நக்கலை அலட்சியப்படுத்தியவன் “ஆரத்தி எடுக்கணும் தானப்பா..? இந்தர் மக.. இந்த வீட்டு இளவரசி முதல் முதலா இந்த வீட்டுக்குள்ள வரா.. நியாயமா பார்த்தா ஆரத்தி எடுத்து தானப்பா உள்ள கூப்பிடனும்.. புள்ள பெத்து முதல் முதலா வீட்டுக்கு தூக்கிட்டு வர மருமகளை புகுந்த வீட்ல ஆரத்தி எடுத்து தானே உள்ள கூப்பிடுவாங்க.. மானுவை அப்படி தானே கூப்பிட்டீங்க.. என்னம்மா நீங்களும் அப்படியே நிக்கிறீங்க? அவங்களை வெளியில நிக்க வெச்சே பேசிக்கிட்டு இருக்கீங்க?”
ப்ருத்வி கேட்க சகுந்தலாவோ இருதலை கொள்ளி எறும்பாய் தவித்து போனாள்..
மார்க்கண்டேயனை பார்த்து பார்வையாலேயே அவள் கெஞ்ச “சரி சரி.. சொல்ற மாதிரி என் பேத்தி முதல் முதல்ல இந்த வீட்டுக்கு வந்துருக்கா.. அவளை இப்படி வெளியில நிக்க வச்சு பேச வேண்டாம்.. சக்கு.. போ.. போய் ஆரத்தி எடுத்துட்டு வா.. ஆனா இந்த ஆரத்தி என் பேத்திக்கு மட்டும்தான்..” என்றார் இறுக்கமான குரலில்..
“ஐயோ.. மறுபடியும் வில்லங்கத்தை கூட்டுறாரே.. இவ வேற இப்ப தொடங்கிடுவாளே..” என்று நினைத்தவன் ப்ருத்விக்கு கண்ணை காட்டி “டேய் கொஞ்சம் சமாளி டா..” என்று சத்தமின்றி வாயசைத்து சொல்லவும் அவனும் கண்ணை மூடி திறந்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்பது போல் சைகை செய்தான்..
வில்விழி இந்தரை முறைத்தபடி பல்லை கடித்துக்கொண்டு நின்றிருக்க சகுந்தலாவோ மார்க்கண்டேயன் சொன்னதுதான் தாமதம்.. வேகமாக உள்ளே போய் ஆரத்தி கரைத்து அடுத்த இரண்டாவது நிமிடம் எடுத்துக்கொண்டு வெளியே ஓடி வந்தார்..
“அம்மா பாத்தும்மா.. தட்டு கீழே விழுந்திட போகுது..”
“அதெல்லாம் விழாதுடா..” என்றவர் பேத்தியை கண்ணார கண்டு கொண்டே கண்கள் பனிக்க ஆரத்தி எடுத்து அவள் நெற்றியில் பொட்டை வைத்துவிட்டு தன் மகன் நெற்றியில் வைத்தவர் ஏதோ தைரியத்தில் மருமகள் நெற்றியிலும் சட்டென வைத்துவிட “சக்கு..” என்று உறுமினார் மார்க்கண்டேயன்..
அவரோ மார்க்கண்டேயன் பக்கம் கூட திரும்பாமல் தட்டை பிருத்வியிடம் தந்து “டேய்.. போய் இதை வெளியில் கொட்டிட்டு வாடா..” என்றார்..
“அட என்னம்மா.. என்னை போய் இந்த வேலை எல்லாம் வாங்குறீங்க..”
அவன் கேட்க இந்தருக்கோ அதை கேட்டு சட்டென புறை ஏறியது..
“அடே..ய்.. உடன் பிறந்தவனே.. இதுக்கே இப்படி சலிச்சிக்கற? ஹைய்யோ.. இன்னும் நான் கண்டிஷன் எதையுமே சொல்லலயே.. அந்த கண்டிஷன் எல்லாம் கேட்டா இந்த வேலை செய்யறதெல்லாம் ஒண்ணுமே இல்லன்னு புரிஞ்சுக்கவடா தங்கம்.. இப்போதிலிருந்தே பழகிக்கோ.. அம்மா தான் உனக்கு முதல் வேலை கொடுத்து இருக்காங்க.. ப்ராக்டிஸ் செஷன் தொடங்கிருச்சுடா உனக்கு..”
உள்ளுக்குள் பல கலவரங்கள் நிகழ்ந்து கொண்டிருக்க சங்கடம் நிறைந்த புன்னகையுடன் சிரித்த முகமாக நின்றிருந்தான் இந்தர்..
சகுந்தலா அதற்கு மேல் பொறுமை இல்லாமல் பட்டென இந்தரின் கையில் இருந்து சக்தியை வாங்கிக்கொண்டு குழந்தையின் முகம் முழுவதும் முத்தமிட்டு
“செல்ல குட்டிமா.. இந்த வீட்டு மகாலக்ஷ்மி டா நீ.. எங்கேயோ போய் கண்காணாத இடத்துல பிறந்து இப்படி கஷ்டப்பட்டு இருக்கியே? இங்க இருந்து இருந்தா உன்னையும் உங்கம்மாவையும் கண்ணுக்குள்ள வெச்சு பார்த்திருப்பேன்.. எவ்வளவு பேர் இருக்கோம் உன்னை பார்த்துக்கறதுக்கு.. இப்படி நீயும் உங்க அம்மாவும் எங்கேயோ போய் அனாதை மாதிரி வாழ்ந்து இருக்கீங்களேடா..” என்று புலம்பியவர்
அதற்கு மேல் அங்கு நிற்க கூட இல்லை.. உள்ளே சென்று ஒரு கதிரையில் அமர்ந்தவர் மடியில் பிள்ளையை வைத்துக் கொண்டு அவளோடு பேசி விளையாட ஆரம்பித்து விட்டார்…
சக்தியோ அவர் ஏற்கனவே ஏதோ தனக்கு ரொம்ப பரிச்சயமானவர் என்பது போல பார்த்தவுடன் அவரோடு ஒட்டிக்கொண்டாள்.. எப்போதும் போல தன் மழலை பேச்சால் கொஞ்சி குலாவி பேசி அவரை மயக்க தொடங்கி விட்டாள் அவள்..
“அப்பா.. எதுவா இருந்தாலும் மலரை உள்ள கூப்பிட்டு பேசிக்கலாம் பா.. மலரை உள்ள கூப்பிடுங்க.. அவ அம்மாவோட பேசிக்கிட்டு இருக்கட்டும்.. நம்ம மூணு பேரும் தனியா பேசலாம்.. அவனோட ஒரு வார்த்தை கூட பேசாம மலரை வெளியில போக சொன்னீங்கன்னா அது எப்படிப்பா நியாயமாகும்.. இப்ப மலர் வெளியில போனா நஷ்டம் மலருக்கு மட்டும் இல்ல.. உங்க பிள்ளைக்கும் தான்.. புரிஞ்சுக்கோங்க பா.. என்ன பேசணும்னாலும் நிதானமா பேசி முடிவெடுங்க.. இந்தர் ஏதோ சொல்லணும்னு நினைக்கிறான்.. அவனும் சொல்லட்டும்.. நீங்க என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்களோ அதையும் சொல்லுங்க.. பேசி முடிவெடுப்போம் பா.. அவசரப்பட்டு முடிவு எடுக்க இது ஒன்னும் சாதாரண விஷயம் இல்ல.. அவங்க மூணு பேரோட வாழ்க்கை பா..”
ப்ருத்வி பேசுவதையே ஆச்சரியமாக பார்த்திருந்தாள் வில்விழி.. இவ்வளவு தெளிவாக பேசுபவன் எப்படி மான்விழியையும் தன் குழந்தையையும் இவ்வளவு நாளாக பிரிந்து இருக்கிறான் என்று வியப்பாக இருந்தது அவளுக்கு..
“சரி சக்கு.. இவளை உள்ள கூட்டிட்டு போ.. நானும் இந்தரும் ப்ருத்வியும் கொஞ்சம் பேசிட்டு வரோம்..” என்று மார்க்கண்டேயன் சொல்லி முடிக்கவில்லை..
சகுந்தலா குழந்தையுடன் வேகமாய் வந்து “அம்மாடி.. வாம்மா உள்ள..” என்று மலர்விழியை கட்டி அணைத்து தன்னுடன் கூட்டி போக மார்க்கண்டேயனோ அவரைத்தான் முறைத்துக் கொண்டு இருந்தார்..
சட்டென மார்க்கண்டேயனை பார்த்து எச்சில் விழுங்கியவர் “அதுக்கு தானங்க பேச போறீங்க.. எப்படியும் நல்ல முடிவா சொல்லுவீங்கன்னு ஒரு நம்பிக்கை தான்..” என்று தயங்கி தயங்கி சொல்லிக் கொண்டே அதற்கு மேல் அவர் புறம் பார்க்காது தலையை குனிந்து கொண்டு வேகமாக வில்விழியின் தோளில் கை வைத்து அழைத்துப் போனார்..
அதற்குள் ப்ருத்வியோ “அப்பா நான் இந்தர் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசும் பேசணும்.. நாங்க ரெண்டு பேரும் ஒரு அஞ்சு நிமிஷம் தனியா பேசிட்டு வரோம்.. நீங்க இங்கயே இருங்க..” என்க
“அதை என் முன்னாடியே பேசுங்க.. அது என்ன தனியா பேசுறது..?” என்று மார்க்கண்டேயன் கேட்க
“இல்லப்பா.. அது.. உங்க முன்னாடிலாம் பேச முடியாது.. நாங்க சின்ன பசங்க.. ஏதாவது பேசிப்போம்.. ஒரு ஃபைவ் மினிட்ஸ் தான்பா… நான் பேசிட்டு உடனே வந்துடறேன்..” என்று அவன் முகம் சுருக்கி கெஞ்ச..
“சரி சரி.. பேசிட்டு வா..” என்றவரும் அப்படியே அங்கிருந்த நீள்விருக்கையில் அமர்ந்து கொண்டவர்
உணவு மேஜை முன்னே அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்த வில்விழியையும் சகுந்தலாவையும் நடுநடுவே தன் பிஞ்சு விரல்களால் அவர்கள் முகங்களை தன் புறம் திருப்பி அவர்களோடு அவர்கள் கதைப்பது போலவே தானும் புரியாத மொழியில் கதைத்துக் கொண்டிருந்த சிறியவளையும் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்..
இந்தரும் ப்ருத்வியும் ஒரு அறைக்குள் சென்ற மறு நொடியே இந்தர் வேகமாய் கதவைத் தாழிட்டு “டேய் ப்ருத்வி.. எப்படியாவது அப்பாவை சமாளிக்க ஹெல்ப் பண்ணுடா.. சுத்தமா முடியலடா.. இந்த வில்லி வேற என்கிட்ட இருந்து எப்ப பிச்சுக்கிட்டு போகலாம்னு காத்திருக்கா.. ரெண்டு பேரையும் சமாளிக்கறதுக்குள்ள எனக்கு பைத்தியமே பிடிச்சுடும் போல இருக்கு..”
அவன் சொன்னதை கேட்டவன் “அது ஒன்னும் ப்ராப்ளம் இல்லடா.. கொஞ்சம் மலர் அட்ஜஸ்ட் பண்ணி பழையபடி இந்த வீட்ல அப்பாவோட ரூல்ஸை ஃபாலோ பண்ணி இருந்துக்கிட்டான்னா அப்புறம் அப்பாவ சமாளிச்சுடலாம்.. ஆனா அவர்கிட்ட அவ பழைய படி மானு மாதிரி அவர் சொன்னதெல்லாம் கேட்டு நடப்பான்னு பிராமிஸ் பண்ணனும்..”
அவன் சொன்னதை கேட்ட இந்தருக்கு தலையே சுற்றியது..
“டேய்.. அரை மண்டையா.. விஷயம் புரியாம உளரிட்டே போகாதடா.. அப்பாவோட ரூல்ஸை அவ ஃபாலோ பண்ணறது இருக்கட்டும்.. அந்த வில்லி என்கிட்ட சில பல கண்டிஷன்களை போட்டு இருக்காடா..”
“என்னது..? கண்டிஷனா..? இரு இரு.. அது என்ன அப்போலருந்து வில்லி வில்லின்னு சொல்லிட்டு இருக்கே.. நீ வில்லின்னு கூப்பிடுறதுக்கும் நீ அவளை பார்க்கிற பார்வைக்கும் சம்பந்தமே இல்லாம இருக்கே டா..” அவனை ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்தபடி கேட்டான் பிருத்வி..
“டேய் அவ பேரை வில்விழின்னு மாத்திக்கிட்டு இருக்காடா.. பேரிலேயே தெரியுது இல்ல.. அவ எப்படி போனவ எப்படி திரும்பி வந்து இருக்கான்னு.. இனிமே பழைய மலரை தேடுனாலும் கிடைக்க மாட்டா.. வில்லுலருந்து வர்ற அம்பு மாதிரி கண்டிஷன் போட்டே கொல்றாடா மனுஷனை.. அந்த கண்டிஷன் எல்லாம் ஃபாலோ பண்ணா தான் என்னோட சேர்ந்து இருப்பேன்னு சொல்றா.. இல்ல மறுபடியும் குழந்தையை தூக்கிட்டு என்னை விட்டு போயிருவேன்னு மிரட்டுறாடா.. இந்த முறை அவ என்னை விட்டு போனா அப்புறம்…”
அதற்கு மேல் பேச முடியாமல் அவனுக்கு தொண்டை அடைக்க
“புரியுதுடா.. சரி.. பார்த்துக்கலாம் விடு.. ஆமா.. அப்படி என்ன கண்டிஷன் போட்டா அவ..?” என்று கேட்க
“அவ போட்டது கண்டிஷனே இல்லடா.. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு அணுகுண்டு.. அதை அப்பா முன்னாடி சொல்றதுக்கே பயமா இருக்குடா எனக்கு..”
“அப்படி என்னடா கண்டிஷன்? ரொம்ப சஸ்பென்ஸை ஏத்தாம சொல்லித் தொலைடா.. எனக்கு மண்டை வெடிக்குது..”
“அது.. இந்த வீட்ல இனிமே பொம்பளைங்க ராஜ்யம் தானாம்.. அவங்கதான் இந்த வீட்ல நடக்கிற எல்லாத்தையும் டிசைட் பண்ணுவாங்களாம்.. அவங்க செஞ்ச அத்தனை வேலைகளையும் நம்ம செய்யணுமாம்.. குழந்தைகளை பாத்துக்குறதுல இருந்து சமையல் வேலை வரைக்கும்..”
“நம்ம செய்யணுமா? ஆமா.. இந்த நம்பங்குறது..”
அவன் சந்தேகமாய் இழுக்க இந்தரோ அவன் என்ன கேட்கிறான் என்று புரிந்து விட “அப்பாவையும் சேர்த்து தான்டா சொல்றா..”
இன்னும் கொஞ்சம் விட்டால் அவன் அழுது விடுவான் போல இருந்தது..
“சோலி முடிஞ்ச்சு”
என்ற பிருத்வியோ நம்ப முடியாமல் விழி விரித்து அவனையே மலங்க மலங்க பார்த்து கொண்டு இருந்தான்..
அம்பு பாயும்..
அம்பு – ௭ (7)
இந்த்ர தனுஷ் – ஒரு காலத்தில் பெயர் பெற்ற வில்லாளன்.. வில் வித்தையில் கர்ணன் அர்ஜுனனுக்கு அடுத்ததாக இவன் பெயரை சொல்லும் அளவிற்கு அதில் சிறந்து விளங்கியவன்.. வில்வித்தைக்கான போட்டி எங்கு நடந்தாலும் அங்கு அவன் பெயர் முதல் மூன்று இடங்களில் எதிரொலிக்காமல் இருந்ததே இல்லை..
அப்படிப்பட்டவன் மூன்று வருடங்களாய் ஒரே அறையில் உலகமே கவிழ்ந்து போனதாய் உயிர் இல்லாது முடங்கி இருந்தான்.. தன்னவளின் நினைவுகளோடு தனிமையில் ஆதங்கத்தோடும் ஏக்கத்தோடும் வேதனையோடும் கழித்துக் கொண்டிருந்தான் அவன்..
வில் வித்தை பயிற்சிக்காக அவன் ஏற்படுத்திய பயிற்சி கூடம் தான் இந்த்ர தனுஷ் ஆர்ச்சரி அகடமி.. மூன்று வருடங்களுக்கு முன்னால் அந்த அகடமியில் பயிற்சிக்கு இடம் கிடைக்காது ஏமாந்து திரும்பி போனவர்கள் எத்தனையோ பேர்..
ஆனால் மூன்று வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக அதன் பெயரை இழந்து பொலிவை இழந்து இன்று விரலால் எண்ணி விடக்கூடிய எண்ணிக்கையில் மட்டுமே விளையாட்டு வீரர்கள் அங்கே பயிற்சிக்கு வந்து கொண்டு இருந்தார்கள்.. ஒன்று இரண்டு பயிற்சியாளர்கள் மட்டுமே இருக்க அவர்களும் அங்கு வேலை செய்யும் ஆர்வமே இல்லாமல் விலகிப் போக நினைத்திருந்தார்கள்..
இந்த சமயத்தில்தான் சம்யுக்தா அகடமியோடு பார்ட்னர்ஷிப் டீலிங் பேச போயிருந்தவன் கண் முன்னால் இப்போது வில்விழியாக மாறி இருந்த மலர்விழி தோன்றியிருந்தாள்..
காரில் வரும்போது அதை ஓட்டிக்கொண்டு வந்தவன் நடுநடுவே வில்விழியின் மடியில் “அவ்வா.. ட்ர்ர்.. பப்பே..” என்று புரியாத மழலை சிதறல்களை உளறல்களாய் உதிர்த்தபடி அவள் முகத்தில் கை வைத்து விளையாடி கொண்டு அவள் விழியோடு விழி உருட்டி பேசிக்கொண்டு இருந்த சக்தியை சுவாரஸ்யமாய் அதே சமயம் ஏதோ ஒருவித ஏக்கப் பார்வை வீசி பார்த்துக் கொண்டு வந்தவன் நடு வழியில் திடீரென வண்டியை நிறுத்தினான்..
இந்தரிடம் வில்விழி என்னவென்று கேட்க அவனோ அவளிடம்
“ஏ வில்லி.. எனக்காக ஒரே ஒரு வேலை மட்டும் பண்றியா?” என்று கேட்க
“கண்டிஷன் எதையும் என்னால மாத்த முடியாது.. அது தவிர வேற எதை வேணா கேளு பண்றேன்..”
“அதுதான் அந்த கண்டிஷன் எல்லாம் பண்றேன்னு ஒத்துக்கிட்டேனேடி.. அதை பத்தி மறுபடியும் பேசமாட்டேன்.. இது வேற.. கொஞ்சம் வீட்டு வரைக்கும் எனக்கு பதிலா நீ கார் டிரைவ் பண்றியா? ப்ளீஸ்..” சக்தியை விழிகள் கலங்க பார்த்தபடி அவளிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டிருந்தவன் அவன்..
அவன் முதல் முறையாய் அவளிடம் கெஞ்சுகிறான்.. அதுவும் அவன் குழந்தையோடு நேரம் செலவிட.. அவன் நினைத்திருந்தால் என் உதிரத்தில் உதித்த குழந்தை இவள்.. இவளோடு விளையாடுவதற்கு உன்னிடம் நான் எதற்கு அனுமதி கேட்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம்..
மூன்று வருடங்களுக்கு முன் அவள் பார்த்த இந்தரின் இயல்பு அதுதானே..
எதையுமே அனுமதி கேட்காமல் ஆளுமையோடு ஆண்டு தானே அவனுக்கு பழக்கம்.. வில்விழியை பொறுத்தவரை அவளிடத்தில் தனக்கு இல்லாத உரிமை வேறு யாருக்கும் இல்லை என்று எண்ணியிருந்தவன் அவன்..
இன்று அவள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு அவன் குழந்தையின் கூட நேரம் செலவிட அவளிடம் வண்டி ஓட்ட சொல்லி மன்றாடி கொண்டிருக்கிறான்..
வில்விழிக்கு முதல் முறையாக இந்த ஆறு மாத சவாலில் அவன் ஜெயித்து விடுவானோ என்று ஒரு சிறு நம்பிக்கை தோன்றியது.. அந்த நம்பிக்கை அவள் இதழில் ஒரு புன்முறுவலையும் கொண்டு வந்திருந்தது..
“சரி சரி ரொம்ப கெஞ்சுற.. பாக்க பாவமா இருக்கு.. ஓட்டுறேன் ஓட்டுறேன்..” என்றவள்
குழந்தையை எடுத்துக் கொண்டு தன் பக்க கதவை திறந்து இறங்கி வந்து அவனிடம் குழந்தையை கொடுத்தது தான் தாமதம்.. அதன் பிறகு அவள் பக்கம் விழியை கூட நகர்த்தவில்லை அவன்..
இதை கவனித்தவளோ உதட்டை சுழித்த படி “ரொம்ம்ம்ம்பத் தான்..” என்று முணுமுணுத்துக் கொண்டே ஓட்டுனர் இருக்கையில் ஏறிக்கொண்டாள்..
காரில் ஏறிய பிறகும் புலம்பலை நிறுத்தவில்லை அவள்.. பெற்ற மகள் மீதே பொறாமை தலைவிரித்தாடியது அவளுக்குள்.. உண்மையில் அவள் தான் இந்தர் அவளுக்காக ஏங்கியதை விட அவன் அன்புக்காக இந்த மூன்று வருடங்களாக ஏங்கிப் போயிருந்தாள்.. வெளியில் சிங்க பெண்ணாக அவள் எவ்வளவு தான் சாதித்திருந்தாலும் அவள் இரவுகளில் அவள் தலையணை கண்ணீரில் நனையாத நாட்களே இல்லை எனலாம்..
அவனுடைய தீண்டலுக்காகவும் அணைப்புக்காகவும் இதழ் அணைப்புக்காகவும் ஏங்கி ஏங்கி உள்ளுக்குள உருகி போய் இருந்தாள் பெண்ணவள்.. அவளின் விரக தாபம் அவளை உறங்க விடவில்லை.. பல நாட்கள் பசலை நோய் கண்டவளைப் போல தலைவனின் அருகாமைக்காய் உடல் வாடி மனம் வாடி துடித்துப் போயிருந்தாள் அவள்..
இப்போது அவள் இங்கு வந்தவுடன் அவன் கவனம் முழுதும் அவள் மீது இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்தவளுக்கு மகளைக் கண்ட நொடி தன்னை மறந்து மகளின் உலகத்துக்குள் மூழ்கி போய் இருந்தவனின் புறக்கணிப்பு அவளை வாட்டியது..
மகளுக்கு அவள் தந்தையின் முழுமையான அன்பு கிடைப்பது அவளுக்கும் மகிழ்ச்சியை தான் தந்தது என்றாலும் தனக்குத்தான் எப்போதும் அவன் பார்வையில் முதலிடம் இருக்க வேண்டும் என்று அசையாத வேட்கை கொண்டாள் அவள்.. மனை அதிகாரத்திற்குப் பிறகே மகள் அதிகாரம் வரவேண்டும் என்று எதிர்ப்பார்த்தவளுக்கு பெருத்த ஏமாற்றமாகித் தான் போனது..
“புள்ள வந்த உடனே பொண்டாட்டி கண்ணுக்கு தெரியலல்ல… அந்த முட்டை கண்ணை உருட்டி உருட்டி புரியாத பாஷை பேசி பேசியே அவனை அப்படியே மயக்கி தன் பக்கம் இழுத்துகிட்டா.. சவால்ல வேற ஜெயிச்சுட்டான்னா நம்மள கண்டுக்கவே மாட்டான் போலயே.. ம்ம்ம்ம்.. இந்த ஆறு மாசத்துல இவனை ஒரு வழி பண்ண வேண்டியது தான்.. இருடா.. உன்னை என் பின்னாடி பழையபடி அலைய வைக்கிறேன்..” மனதிற்குள் சபதம் எடுத்து கொண்டாள் வில்விழி..
யார் எவர் பின்னால் அலைய போகிறார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்..
குழந்தையை கையில் வாங்கியவுடன் அவளை உயர தூக்கியவன் அவளை உலுக்கி விளையாட்டு காட்ட அவளோ களுக் களுக்கென்ற சிரித்து வெள்ளை முல்லை சிரிப்பில் தன் தந்தையை தன்னோடு காந்தமாய் ஈர்த்து கட்டிபோட்டாள் சக்தி..
“சக்தி செல்லம்.. அப்பா கிட்ட வந்துட்டீங்களா? இனிமே நீங்க எப்பவும் அப்பாவோட தான் இருப்பீங்க.. உங்களை எங்கேயும் போக விட மாட்டேன்.. என் தங்கம் டா நீங்க..” என்று சொல்லி
அப்படியே தன் மார்போடு அவளை இறுக்க அணைத்து சக்தியின் முகம் முழுவதும் முத்தமிட்டு கொண்டே தன் பக்க இருக்கையில் வந்து ஏறி அமர்ந்து கொண்டான்..
அதன் பிறகு இமைக்கும் நொடி கூட சக்தியின் முகத்திலிருந்து வேறு பக்கம் அவன் பார்வை திரும்பவில்லை.. கார் வீடு வந்து சேரும் வரை தன் மகளோடு ஆசை தீர விளையாடிக் கொண்டிருந்தான் அவன்.. ஆனால் வீட்டுக்கு வந்தும் ஆசை தீர்ந்த பாடில்லை அவனுக்கு..
அப்போதும் சக்தியை விலக மனமில்லாமல் அவளை தானே தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழைய உள்ளே நுழைந்தவனை கண்ட சகுந்தலா அவன் மலர்ந்த முகத்தையும் அவன் பக்கத்திலேயே இருந்த வில்விழியையும் பார்த்தவள் மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போனாள்..
“மலரு.. வந்துட்டியாம்மா?” என்று கேட்டபடி முன்னே அடிவைத்து அவளை நோக்கி போனவளை மார்க்கண்டேயனின் குரல் தடுத்தது..
“சக்கு… இன்னொரு அடி எடுத்து வச்ச நீயும் அவளோடயே சேர்ந்து வீட்டை விட்டு வெளியில போக வேண்டியதுதான்..”
அதன் பிறகு சகுந்தலா எங்கே முன்னேறி செல்வது அப்படியே தான் நின்ற இடத்திலேயே வந்து ஆணி அடித்தார் போல் நின்று கொண்டாள்..
தன் இடத்தில் இருந்து மெல்ல எழுந்த மார்க்கண்டேயனோ “எதுக்குடா இந்த ஓடுகாலியை திரும்ப வீட்டுக்கு கூட்டிட்டு வந்தே? நான் எவ்வளவு நாளா உன்னை இவளை மறந்துட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்லிட்டு இருக்கேன்..? இத்தனை நாளா இவளை மறக்க முடியாம ஏதோ உயிர் போன மாதிரி ஜடமா வாழ்ந்துட்டு இருந்த.. இப்ப இவளை பார்த்த உடனே இவளை கூட்டிட்டு வந்துட்டியா? என்ன.. இவளோட வாழ போறியா?”
“ஆமாம்பா.. அவளோட வாழ போறேன்.. அதுல என்னப்பா தப்பு? எனக்கு பொண்டாட்டின்னா அது அவ மட்டும் தான் பா.. என் மனசுல இருந்து அவளை தூக்கி எறிஞ்சிட்டு வேற யாரையும் அந்த இடத்துல வைச்சு என்னால பார்க்க முடியாது.. அவ என் வாழ்க்கையில இருக்கணும்னா அதுக்காக நான் என்ன வேணா பண்ணுவேன்..’
“பைத்தியக்காரனாடா நீ என்னிக்கு உன்கிட்ட சொல்லாம உன்னை விட்டுட்டு ஓடிப்போனாளோ அன்னிக்கே உனக்கும் இவளுக்கும் இருக்கிற உறவு அறுந்து போச்சு.. இப்ப அவளோட வாழ போறேன்னு கூட்டிட்டு வந்து இருக்கியே திரும்ப அதே மாதிரி ஓட மாட்டான்னு என்னடா நிச்சயம்? அப்படி ஓடிட்டான்னா மறுபடியும் இதே மாதிரி தேவதாஸா திரிஞ்சுக்கிட்டு இருப்பியா? இங்க பாரு.. அதுக்கு நீ இவ்வளவு நாள் இருந்த மாதிரி எப்பவும் தேவதாசாவே இருந்திரு.. இன்னொரு முறை அடி வாங்குனா தாங்க மாட்ட டா நீ..”
“இல்லப்பா.. அவ என்னை விட்டு போக மாட்டா.. நிச்சயமா நான் இந்த முறை என்னை விட்டு அவளைப் போக விடமாட்டேன்.. அப்படி அவ போகக்கூடாதுன்னா அது உங்க கையில தான் பா இருக்கு..”
“என்னது.. இந்த ஓடுகாலி ஓடாம இருக்குறது என் கையில இருக்கா? ஏதாவது புரியிற மாதிரி பேசுறியா நீ..
அது சரி.. இந்த குழந்தை யாரு..?”
அவனையும் அவளையும் நிதானமாக முறைத்தபடி அவர் கேட்க
“உங்க பேத்திபா.. என் பொண்ணு சக்தி.. இப்போ என்னோட இன்னொரு உயிர்..”
அதைக்கேட்ட சகுந்தலாவின் கைகளும் கால்களும் உடனே ஓடிச் சென்று தன் பேத்தியை கையில் அள்ளிக் கொள்ள துடித்துப் பரபரத்தது..
“ஓ.. இப்ப எனக்கு புரியுது.. இங்க பார்.. இந்த குழந்தைக்காக நீ அவளோட சேர்ந்து வாழணும்னு கட்டாயம் எல்லாம் இல்லை.. இந்த குழந்தையை நம்மளே வச்சுப்போம்.. அவளை அத்து விட்டு அனுப்பிச்சு விடு.. அவளை எல்லாம் நம்ப முடியாது.. சொன்னா கேளுடா.. இந்த குழந்தை இந்த வீட்டு வாரிசு.. இவளை விட்டுக் கொடுக்க முடியாது.. இந்த ஓடுகாலி ஏதாவது பிரச்சனை பண்ணா அதை கோர்ட்டு மூலமா எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும்.. இந்த குழந்தை அவகிட்ட வளர்ந்தா அவளை மாதிரியே இன்னொரு ஓடுகாலியா தான் வளருவா..”
“மாமா வார்த்தையை அளந்து பேசுங்க.. என் பொண்ணுக்கு என்னைக்கும் அந்த நிலைமை வராது.. நான் வரவும் விட மாட்டேன்.. அவ கனவு காணற மாதிரி ஒரு வாழ்க்கையை தேடி ஓட வேண்டிய அவசியத்தை என்னிக்குமே அவளுக்கு வரவே விட மாட்டேன்.. அவ கனவு நிறைவேற அவளுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை நானே அவளுக்கு பண்ணி கொடுப்பேன்.. என்னால யார் உதவியும் இல்லாம தனியாவே அதை பண்ணமுடியும்”
“யாருடி உனக்கு மாமா? என்னைக்கு நீ இந்த வீட்டை விட்டு போனியோ அப்பவே இந்த மாமா மருமக உறவு எல்லாம் முடிஞ்சு போச்சு.. இப்ப எங்க வீட்டை பொறுத்தவரைக்கும் நீ யாரோ ரோட்ல போற ஒருத்தி.. நான் என் புள்ள கிட்ட பேசிட்டு இருக்கேன்.. நீ வாயை திறக்காத..”
“நீங்க உங்க புள்ள கிட்ட என்ன வேணா பேசலாம்.. ஆனா என்னை பத்தி என் பொண்ணை பத்தி பேசுனீங்கன்னா நான் வாயை தொறந்து தான் ஆகணும்.. கஷ்டப்பட்டு புள்ளைய பெத்து ரெண்டு வருஷம் வளர்த்து உங்க கிட்ட தூக்கி குடுத்துட்டு போவேன்னு நினைச்சீங்களா..? அதுக்கு வேற ஆளை பாருங்க.. என் குழந்தை என்னோட தான் இருப்பா.. இந்தர்.. நீங்க குழந்தைய குடுங்க நான் கிளம்புறேன்.. இது சரிப்பட்டு வராது..”
அவள் பட்டென்று சொல்லிவிட இந்தரோ ஆடி போனான் ஒரு நொடி..
அம்பு பாயும்..
E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)NovelsUncategorizedவில்விழி அம்பில்(அன்பில்) வீழ்ந்திடுவேனோ?
வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ!! – ௬ (6) 5 (54)
written by Competition writers
அம்பு – ௬ (6)
அந்த பிரம்மாண்டமான பங்களா வீட்டின் வாசலில் விதவிதமான உயர்ரக கார்கள் வரிசை கட்டி நின்றிருக்க எதிர்பக்கத்தில் சிறிய கொட்டகையில் ஒரு குதிரையும் நின்று கொண்டிருந்தது..
பால் வெண்ணிறத்தில் இருந்த அந்தக் குதிரையின் முகத்தை வருடியபடி “டேய் கர்ணா.. உன் அண்ணியோட முடியலடா.. அவ இல்லாம இருக்கவும் முடியல.. ஆனா என் தவிப்புக்காக அவ சொல்றதை கேட்க முடியாது.. அவ முடிவை மாத்துன அப்புறம் நீ தான் போய் அவளை கூட்டிட்டு வர.. ஆனா அவ என்னோட முகம் கொடுத்து கூட பேச மாட்டேங்குறா டா.. கடைசி வரைக்கும் இப்படியே நானும் நீயும் புலம்பிக்கிட்டே உட்கார்ந்து இருக்க வேண்டியதுதானா..” தன் நண்பனிடம் புலம்பி தள்ளுவது போல் புலம்பிக்கொண்டிருந்தான் அந்த ஆறடி ஆண் மகன்..
அவன் ப்ருத்வி பார்த்திபன்.. அந்த வீட்டின் இரண்டாவது மகன்.. அவன் மனைவி மான்விழி.. அவளை நினைத்துத்தான் இவ்வளவு நேரம் தன் நெருங்கிய நண்பனான ஷ்யாம் கர்ணாவிடம் பேசிக்கொண்டிருந்தான்..
அவன் கேட்ட கேள்விக்கெல்லாம் சத்தமாக கனைத்தும் தலையாட்டியும் அவன் கன்னத்தோடு தன் முகத்தை உரசியும் பதில் சொல்லிக் கொண்டிருந்தான் ஷ்யாம் கர்ணா என்ற அந்த குதிரை..
“ரொம்ப கஷ்டமா இருக்குடா உன் அண்ணி இல்லாம.. எப்பவும் அவ நெனப்பாவே இருக்கு.. நான் சொல்றது எதையும் கேக்காம அவ பாட்டுக்கு போய் அவங்க அப்பா வீட்டில உட்கார்ந்துகிட்டா.. இவ போனது பத்தாதுன்னு சின்ட்டூவை வேற கூட்டிட்டு போய்ட்டா.. பாவம் அவன்.. நேத்து அவனை பாக்க அவங்க வீட்டுக்கு போனப்ப கூட ரொம்ப அழுதான்டா.. நீ இல்லாம என்னால இருக்க முடியலன்னு என்னை கட்டிக்கிட்டு ஒரே அழுகை.. என்னால ஒன்னையும் விட்டுக் கொடுக்க முடியாது.. அவங்களையும் விட்டுக் கொடுக்க முடியாது.. எனக்கு ரெண்டு பேரும் வேணும்.. எப்ப தான் புரிஞ்சுக்குவான்னு தெரியல.. சரி வா.. ஒரு ரவுண்டு போயி நம்ம ஃப்ரெண்ட்ஸை பாத்துட்டு வரலாம்..”
குதிரையின் கடிவாளத்தை பிடித்து இழுத்து வந்து ஒரே தாவலில் அதன் மேல் ஏறி வெளியே வர அவன் வெளியே வந்த நேரம் வேகமாக இந்த வீட்டின் கேட்டை திறந்து விட்ட செக்யூரிட்டி பணிவாய் மரியாதையோடு ஒதுங்கி நிற்க ஷ்யாம் கர்ணா புயல் வேகத்தில் அடுத்த இரண்டு நொடிக்குள் அவர் கண்ணை விட்டு மறைந்திருந்தான்..
வாசலில் குதிரையின் குளம்புகளின் சத்தம் காதில் கேட்க வரவேற்பறையில் அமர்ந்து அன்றைய நாளிதழை புரட்டிக் கொண்டிருந்த மார்க்கண்டேயன்
ஒரு பெருமூச்சை விட்டபடி “ஏய் சக்கு.. கிளம்பிட்டாண்டி உன் செல்ல புள்ள..” என்க
“ம்க்கும்..” என்று நொடித்து கொண்ட அவர் மனைவி சகுந்தலா
“பொண்டாட்டிக்கு புடிக்கலனா அந்த குதிரையை விட்டு தள்ளுடான்னா கேட்க மாட்டேங்கிறான்.. வாழ்க்கைல இவனுக்கு குதிரை முக்கியமா இல்ல பொண்டாட்டி முக்கியமா? குடும்பத்தோட வாழாம அந்த குதிரைக்காக எல்லாத்தையும் விட்டுட்டு நிற்கிறான்.. ஒரு நாள் அவனுக்கு தெரியாம அந்த குதிரையை எங்கேயாவது கொண்டு போய் வித்துட்டு வந்துடுங்க.. அப்ப தான் அவன் வாழ்க்கை உருப்புடும்..”
அவள் சொல்வதைக் கேட்ட மார்க்கண்டேயனுக்கோ கோபமாக வந்தது..
“என்னடி பேசுற.. அவன் மேல என்ன தப்பு.. அவனுக்கு சின்ன வயசுல இருந்தே குதிரைங்கன்னா அவ்வளவு பிடிக்கும்.. உன் மருமக தான் தேவை இல்லாம பிடிவாதம் பிடிக்கிறான்னா நீயும் அவளுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு..”
“என்னங்க உங்களுக்கு அவளை பத்தி தெரியும் தானே அப்புறமும் இப்படி பேசினா எப்படி?”
“ஆமாம்.. அவ சரியான பயந்தாங்கொள்ளியா இருக்கா.. சரி.. பொம்பள புள்ள அப்படித்தான் இருக்கணும்.. கொஞ்சம் அடக்கம் பயம் இதெல்லாம் இருக்க வேண்டியதுதான்.. ஆனா அவளுக்கு எதுக்கு எடுத்தாலும் பயம்.. ஒரு பொண்ணு இவ்வளவு பயந்துகிட்டு புருஷனை ஒரு வேலையும் பண்ண விடாம செஞ்சா அவனால எப்படி வாழ முடியும்..”
“அதுக்குன்னு அவளை விட்டுட்டு குதிரையோட வாழ முடியுமாங்க?”
சகுந்தலா கிண்டல் தொனியில் அவரிடம் கேட்க அவரோ சகுந்தலாவை திரும்பி ஆழமாய் முறைத்தார்..
“என்னடி கிண்டலா? இவன் அவ பயத்தை உடைச்சு கொஞ்சமாச்சும் தைரியமா மாத்தணும்னு நினைக்கிறான்.. அவ என்னடான்னா சிங்கம் மாதிரி இருக்கிற என் புள்ளைய மொசக்குட்டியா மாத்தி வச்சுக்கணும்னு நினைக்கிறா.. இதுல நீ வேற அவளுக்கு பரிஞ்சுக்கிட்டு வராத.. முடிஞ்சா உன் மருமகளுக்கு அட்வைஸ் பண்ணி அவ மனசை மாத்த பாரு..”
“ஏங்க.. என்ன பேசுறீங்க? உங்களுக்கு தெரியாதா அவ ஏன் இப்படி இருக்கான்னு.. அவளுக்கு நடந்த ட்ராமா (trauma) அப்படி.. அவளால அதை மறக்க முடியல.. இவன்தான் கொஞ்சம் அவளுக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்க கூடாதா? அட்லீஸ்ட் அவ கண்ணுக்கு முன்னாடி அந்த குதிரையை ஓட்டாம இருக்கலாம் இல்ல? வீட்டு வாசல்ல அதை கட்டி வச்சிக்கிட்டு அராஜகம் பண்ணிக்கிட்டு இருக்கான்.. அவ சொல்ல சொல்ல அவன் இப்படி பண்ணிட்டு இருந்தா அவனோட நிம்மதி தானேங்க போகுது.. குடும்ப நிம்மதிக்காக சில விஷயங்களை ஸேக்ரிஃபைஸ் பண்றதுல தப்பு இல்லயேங்க..”
“என்னது சாக்ரிஃபைஸ் பண்ணனுமா? அவன் எதுக்குடி சாக்ரிஃபைஸ் பண்ணனும்? அவன் ஆம்பள சிங்கம் டி .. அவன் நினைச்சதை பண்ணுவான்.. அவளுக்கு பயமா இருந்தா அந்த குதிரை இருக்கற இடத்துக்கு வராம வீட்டுக்குள்ள பூட்டிட்டு இருக்கட்டும்.. அதுக்காக என் புள்ளையை அடக்கி வைப்பாளா அவ.. பொண்டாட்டின்னா புருஷன் என்ன நினைக்கிறானோ அதை அப்படியே ஒரு துளி கூட மாறாம அவன் வாழ்க்கையில நடத்தி வைக்கணும்.. அவ தான் உண்மையான பொண்டாட்டி.. அதுக்காக அவ என்ன இழக்க நேர்ந்தாலும் எழக்கனும்.. ஒரு ஆம்பள புள்ளயை காலம் முழுக்க சந்தோஷமா வச்சுக்கணும்னு தான் ஒரு பொம்பள புள்ளைய கட்டி வைக்கிறது.. அவன் சந்தோஷத்தையே அவ கெடுக்கிறான்னா அப்புறம் அவன் வாழ்க்கையில அவ எதுக்குடி? தேவையே இல்லை.”.
“என்னங்க இப்படி பேசுறீங்க..? மான்விழி பயப்படுறான்னு அவ சரியில்லைன்னு சொல்றீங்க.. பெரியவன் பொண்டாட்டி மலர்விழி.. அவ நல்ல தைரியமான பொண்ணுதானே..? அவளையும் தானே உங்களுக்கு புடிக்கல? ஆம்பளன்னு ஒரு மரியாதை கூட இல்லாம யாரையும் மதிக்காம ரொம்ப திமிர் பிடிச்சு ஆடுறான்னு இல்ல சொன்னீங்க?”
“ஆமாம்டி சொன்னேன்.. ஏன்னா அவ பொம்புளை புள்ள மாதிரியா நடந்துக்கிட்டா? யாருக்கும் அடங்காம எகிறி எகிறி பேசிக்கிட்டு அவனுக்கு சரி சமமா அகாடமிக்கு போறேன்.. போட்டிக்கு போறேன்.. கப்பு ஜெயிச்சுட்டு வரேன்னு இஷ்டத்துக்கு திரிஞ்சா.. ஒரு ஆம்பளயால எவ்வளவோ விஷயங்களை வெளியில சமாளிக்க முடியும்.. பொட்ட புள்ள அந்த மாதிரி சமாளிக்க முடியுமா? அதுக்கு ஏத்த மாதிரி தான் அவ வாழ்க்கையில எல்லாம் நடந்தது.. நான் சொல்ல சொல்ல கேட்காம என் பேச்சை மீறி போனதுக்கு எவ்வளவு அனுபவிச்சா?அவ அப்படியும் புத்தி வராம மறுபடியும் வீட்டை விட்டு ஓடி போய் இருக்கா.. ஓடுகாலி.. பேசாத அவளை பத்தி..”
“சரிங்க.. அதுக்காக காலம் முழுக்க நம்ம புள்ள இப்படியே ஒத்தையில இருந்து கஷ்டப்படணுமாங்க.”
“நானும் அதை தாண்டி கேட்கிறேன்.. என் ரெண்டு பிள்ளை வாழ்க்கையும் இப்படி ஒன்னும் இல்லாம கிடக்குது.. சின்னவனுக்காவது பொண்டாட்டி அவங்க அம்மா அப்பா வீட்ல இருக்கான்னு தெரியும்.. பெரியவன் பொண்டாட்டி எங்க இருக்கானே தெரியல.. சரி.. வேற கல்யாணம் பண்ணலாம்னா அதுக்கும் ஒத்துக்க மாட்டேங்கிறான்.. கல்யாணம் பண்ணி என் ரெண்டு புள்ளைங்க வாழ்க்கையும் சொகப்படலை.. அந்த வீட்டிலிருந்து நம்ம பொண்ணே எடுத்துருக்க கூடாதுடி..”
“இங்க பாருங்க.. அவங்க அவங்களோட விருப்பு வெறுப்புனால சூழ்நிலையினால ஏற்பட்ட சங்கடத்துக்கு எல்லாம் நீங்க அந்த குடும்பத்தை பழி சொல்றது சரி இல்ல.. நீங்க பேசறத நம்ம புள்ளைங்க கேட்டாலும் ரொம்ப வருத்தப்படுவாங்க.. அந்த பொண்ணுங்களை பத்தி இப்படி தப்பா பேசாதீங்க.. ரெண்டு பொண்ணுங்களும் தங்கமானவங்கதான்.. ஆனால் அவங்களை சுத்தி நடந்த சில விஷயங்கள் அவங்களை அப்படி மாத்தி இருக்கு.. பெரியவன் வாழ்க்கை இப்படி ஆனதுக்கு காரணம் அந்த பொண்ணோட கனவு நிறைவேறாதது தான்.. அவ ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க”
என்ன சக்கு..? இன்னிக்கு வழக்கத்துக்கு மாறா ரொம்ப பேசுற.. உன் பெரிய மருமகளோட காத்து உன் பக்கம் வீசிடுச்சா..? அவளை மாதிரியே புருஷன் பேச்சுக்கு மறுபேச்சு பேசுற..?”
சகுந்தலா பயத்தில் எச்சில் விழுங்கினாள்..
“மன்னிச்சிருங்க.. ஏதோ நம்ம பிள்ளைங்க வாழ்க்கை இப்படி ஆகிருச்சேங்கற கவலையில பேசிட்டேன்..” என்றாள் தழைந்த குரலில்..
“அவளுக்கு சப்போர்ட் பண்ணாத சக்கு… எல்லாம் சரியாயிடும்.. அந்த விளங்காதவ எங்கேயோ போனவ போய்ட்டா.. இந்தர் மனசை மாத்தி எப்படியாவது அவனை இன்னொரு கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சுடலாம்.. அவனுக்கு என்னடி ராஜா வீட்டு பிள்ளை.. இப்பவும் அவனை கல்யாணம் பண்ணிக்கணும்னா பொண்ணுங்க கியூவில நிப்பாங்க.. நிச்சயமா அவனுக்கு இன்னொரு வாழ்க்கை அமைஞ்சுதுன்னா எல்லாமே நல்லா ஆயிடும்.. அதை ஒத்துக்க வைக்கிறது தான் பெரிய விஷயம்.”.
“நீங்க சொல்றது இந்த ஜென்மத்துக்கு நடக்காது.. மலர் மேல உயிரையே வச்சிருக்கான் அவன்.. இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்றதை விடுங்க.. அவனால மனசால மலர் இடத்துல இன்னொரு பொண்ணை நினைச்சு கூட பாக்க முடியாது.. மலர் திரும்பி வந்தா தான் எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அவன் பழைய இந்தரா மாறுறதுக்கு வாய்ப்பு இருக்கு.. ஆனா அந்த மகராசி எங்க இருக்கான்னு தெரியல.. நீங்க கொஞ்சம் அவகிட்ட..”
“என்னடி.. அவ ஆடினா ஆட்டத்துக்கு எல்லாம் அவ கால்ல விழுந்து வழி அனுப்பி வைக்கணுமா நானு.. அவ திமிர் பிடிச்சு ஓடி போனதுக்கு நான் தான் காரணம்னு சொல்றியா? வர வர உனக்கு கூட வாய் ரொம்ப நீளுது.. ஏன் நீ கூட தான் வக்கீலுக்கு படிச்சிருக்க.. கல்யாணம் பண்ணதும் வெளியில வேலைக்கு போகக்கூடாதுன்னு சொன்னதும் அத்தனையும் இழுத்து மூடிட்டு வீட்டையும் பிள்ளைகளையும் என்னையும் பார்த்துட்டு உட்கார்ந்து இருக்க இல்ல.. நீ என்ன கெட்டு போய்ட்ட இப்போ.. நல்லா சந்தோஷமா தானே இருக்க..? அவளும் உன்னை போல இருந்திருந்தா நான் ஏன் அவ மேல கோபப்பட்டு இருக்க போறேன்..? அந்த ஓடுகாலிக்கு என்ன தேவைப்பட்டுச்சோ.. அவளுக்கெல்லாம் புருஷன் வேணாம்.. அடிமை தான் வேணும்.. அதுக்கு என் புள்ள ஆளு கிடையாது..”
சகுந்தலாவோ மனதில் இருப்பதை வெளியே சொல்ல முடியாமல் எச்சில் விழுங்கிக் கொண்டாள். எப்போதும் போல தன் ஆதங்கத்தை எல்லாம் தனக்குள்ளே பூட்டி வைத்துக் கொண்டாள் அவள்.. இந்த அடிமை வாழ்வுக்கு விடிவு காலமே கிடைக்காதோ என்று மனதிற்குள் புழுங்கிப் போனாள் அவள்..
“ம்ம்.. அவனுக்கு பிடிச்ச அந்த அகாடமி விஷயத்துல அவனை கொஞ்சம் ஈடுபடுத்துனா மனசு மாறும்ன்னு பார்த்தா.. எங்க..? தாடி வளர்த்துக்கிட்டு தேவதாஸ் மாதிரி எப்ப பாரு ரூம்குள்ளயே அடைஞ்சு கிடக்குறான்.. நாலு வருஷமா இவன் கவனிக்காம இருந்ததுனால அகாடமி சுத்தமா படுத்து போச்சு.. அந்த அகாடமிக்கு போகும்போதுதான் கொஞ்சம் மலரை மறந்து அவன் அந்த வேலையில மூழ்கி இருக்கான்.. அவனை பாத்தா அவ நெனைப்புவயே செத்துருவான் போல இருக்கு.. அதனாலதான் இந்த அகடமில சம்யுக்தா அகடமியோட பார்ட்னர்ஷிப்ல ஒர்க் பண்றதுக்கு கேட்க சொல்லி அனுப்பி இருக்கேன்.. இன்னைக்கு அந்த சம்யுக்தாவோட அது விஷயமா மீட்டிங் இருக்கு.. உன் பிள்ளை அங்க தான் போய் இருக்கான்.. எதுவும் வில்லங்கத்தை இழுத்துட்டு வராம இருக்கணும் அவன்..”
இப்படி அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தது இந்திர தனுஷின் கார்..
மார்க்கண்டேயனும் சகுந்தலாவும் வாசல் பக்கம் கண்களை திருப்ப அங்கே குடும்பமாக வந்து நின்றது என்னவோ கையில் குழந்தையுடன் இந்த்ரதனுஷும் அவன் பக்கத்தில் இவ்வளவு நேரம் ஓடிப்போனதாய் மார்க்கண்டேயன் வசவு பாடிக்கொண்டிருந்த வில்விழி என்கிற மலர்விழியும்..
அம்பு பாயும்..