ஆதவனின் சுட்டெரிக்கும் வெயில் குறைந்து மிதமான ஒளி வீசும் மாலை பொழுது நேரம். கடற்கரை ஓரத்தில் அம்ருதாவின் விரலை இறுக பிடித்து கொண்டு ஆத்யா தனது சிறிய கால்களால் குட்டி குட்டி எட்டுக்கள் வைத்து நடந்து கொண்டிருந்தாள். கடல் அலைகள் ஒவ்வொரு முறை குழந்தையின் பாதத்தை தொட்டு செல்லும்போதும் துள்ளி குதித்து விளையாடிய படியே வந்தது அந்த அமுல் பேபி.
குழந்தையுடன் ஓரிடத்தில் அமர்ந்தவள் கடல் அலையை வேடிக்கை பார்த்தவரே குழந்தையை தூக்கி தன் மடி மீது அமர்த்தி கொண்டிருக்கும் நேரம், நான்கு வருடங்களுக்கு முன்பு அவளுடன் வேலை பார்த்த ஒருவன் வந்து அவள் அருகில் அமர்ந்தான்.
“ஹாய் அம்ருதா… என்ன பாப்பாவை கூட்டிட்டு வெளில வந்தீங்களா?” என்று கேட்க, அவனை விட்டு தள்ளி அமர்ந்தவள்,
“ஆமா. குழந்தை ஆசைப்பட்டா அதான் கூட்டிட்டு வந்தேன். உங்க வைஃப் வரல? என்று அவனுக்கு பின்னால் தேட, “இல்ல நான் ஃப்ரெண்ட்ஸ் கூட வந்திருக்கேன். உங்களை பார்த்தேனா, அதான் அப்படியே பேசிட்டு போலாம்னு வந்தேன்” என்றதும் புருவம் சுருக்கி, “என்கிட்ட பேச என்ன இருக்கு?” என்று கேட்க,
அவளை உச்சி முதல் பாதம் வரை அளந்தவன், “எனக்கு சுத்தி வளச்சு பேசலாம் விருப்பம் இல்ல அம்ருதா. நேரா விஷயத்துக்கே வரேன், உன்னை பார்த்தா ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியே தெரியலை தெரியுமா? அப்படியே காலேஜ் படிக்கிற பொண்ணு மாதிரி அவ்வளவு அழகா இருக்க” என கூறும்போதே முகம் சுழித்தவள்,
“ஸ்டாப் இட். என்ன பேசிட்டு இருக்கீங்க நீங்க? முதல்ல இங்கிருந்து எழுந்து போங்க” என்று கோபமாக சீறியவளை பார்த்து,
“ரிலாக்ஸ்… இப்போ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற? உனக்கும் ஆசைகள், தேவைகள் எல்லாம் இருக்கும்தானே? எத்தனை நாள் இப்படியே தனியா கிடந்து கஷ்ட படுவ? நீ ஓகேனு சொன்னா எல்லா விதத்திலும் உனக்கு நான் உதவியா இருக்கேன்.” என்றவன் அந்த எல்லா விதத்திலும் என்ற வார்த்தைக்கு மட்டும் அழுத்தம் கூட்டி கூறியிருந்தான்.
அவனது பேச்சில் காதுகள் கூசி போனது அவளுக்கு. உள்ளம் பதறினாலும் தனக்கு தானே தைரியம் சொல்லி கொண்டவள்,
“ச்சீ… எழுந்து போடா நாயே.. உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட இப்படி பேசுவ?” என்றாள்.
“ஏய் சும்மா நிறுத்து டி. புருஷன் கூட இருந்து ஒரு பிள்ளையை பெத்திருக்க, இப்போ தனியா இருக்க நேரம் உனக்கு எதுவும் தோணாமலா இருக்கும்?” என்றவன் சற்றே குரலை தாழ்த்தி “அதுக்குதான் நான் இருக்கேனு சொல்றேன். நமக்குள்ள நடக்குற எந்த விஷயத்தையும் யாருக்கும் தெரியாம நான் பாத்துக்கிறேன். நீ அதை நெனச்செல்லாம் பயப்பட வேண்டாம்” என்றதும்
அவனை எரிக்கும் பார்வை பார்த்தவள் “இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின, பொது இடம்ன்னு எல்லாம் பார்க்கவே மாட்டேன். செருப்பு பிஞ்சிடும். இதுக்கு மேல நீ ஒரு நிமிஷம் இங்க இருந்தாலும் உன் பொண்டாட்டிக்கு ஃபோன் பண்ணி உன் யோக்கிதை என்னன்னு சொல்ல வேண்டி வரும் ஜாக்கிறதை…” என்று அவள் ஒற்றை விரலை உயர்த்தி மிரட்டியதும் சற்றே திணறினான். ஆனாலும் அடங்காமல்,
“உன்னோட நல்லதுக்குதான் சொன்னேன். மனசு மாறினா கால் பண்ணு. நான் எப்போதுமே ரெடிதான். வரட்டா..” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.
பிறகு நண்பர்களோடு கலந்து கொண்டவன் “மச்சி.. அவ எப்படி பேசினாலும் மடங்கவே மாட்டேங்குறா டா. பெரிய உத்தமி மாதிரி பேசுறா. இத்தனை நாள் தனியா இருக்குறவளுக்கு எவன் மேலையும் ஆசை வராமலா இருந்திருக்கும்? ” என்றவனின் வார்த்தைகள் இவர்களை விட்டு சற்று தள்ளி நின்று கொண்டிருந்த ஹர்ஷ மித்ரனின் காதில் விழ தொடங்கியது.
ரெஸ்டாரெண்ட் வேலைகளை முடித்தவன் சிறிது நேரம் கடல் அலைகளை பார்த்து விட்டு செல்வது வழக்கம். இன்றும் அது போலவே வந்திருக்க, அருகில் நின்றிருந்த ஆறு பேர்கள் கொண்ட நண்பர்கள் கூட்டத்தில் பேசி கொள்வது இவனுக்கு நன்றாக கேட்டது.
“ஏன்டா? என்ன சொல்றா அவ?” என்று கூட்டத்தில் ஒருவன் கேட்க,
“டிவோர்ஸ் ஆகி தனியா தானே இருக்கா, அவளுக்கும் சில ஆசைகள் இருக்குமேனு கேட்டா செருப்பு பிஞ்சிடும்னு சொல்றா.. போதா குறைக்கு என் பொண்டாட்டிகிட்ட போட்டு கொடுத்துருவேன்னு வேற சொல்றாடா. எப்படி பேசினாலும் மடங்கவே மாட்டேன்றாடா மச்சி ” என்றவனை பார்த்து,
“எப்படி பட்டவளையும் பேசி பேசியே கவுத்துடுவியே. உன்கிட்ட மயங்காத பொண்ணா? யாரு மச்சி அவ? எனக்கே பார்க்கணும் போல இருக்கே?” என்று சிரித்தபடியே கேட்க,
“அத ஏன் கேக்குற? அவளுக்கு கல்யாணம் ஆகும் முன்னாடியே ட்ரை பண்ணினேன் இப்போ வரைக்கும் சிக்க மாட்டேன்றா. அதோ, அந்த க்ரீன் கலர் சாரி கட்டிட்டு ஒரு குழந்தையை மடில வச்சுக்கிட்டு உக்கார்ந்திருக்காளே அவ தான்” என்று கூற,
இதை கேட்டு கொண்டிருந்த ஹர்ஷாவின் விழிகளோ தானாகவே அவன் கூறிய திசை பக்கம் சென்றது. அவன் சுட்டி காட்டிய பெண்ணை கண்டவனுக்கு புருவங்கள் இடுங்கின. ‘இவளைத்தானே இரண்டு நாட்களுக்கு முன்னால் ரெஸ்டாரெண்ட்டில் குழந்தையை சரியாக கவனிக்கவில்லை என்று திட்டினேன்.’ என்றெண்ணியவன் எதிர் புறம் திரும்பி இருந்த குழந்தை தன்னை நோக்கி திரும்பியதும் உறுதி செய்து விட்டான் அவள்தான் என்று.
‘இவள் விவாகரத்து ஆனவளா? என்று சற்றே அதிர்ந்தாலும், அடுத்த நிமிடமே என்னவா இருந்தா என்ன?’ என்பது போல் அவளிடமிருந்து தனது பார்வையை திருப்பி கொண்டான்.
ஆனால் அந்த குழந்தையிடமிருந்து தனது பார்வையை திருப்ப முடியவில்லை. எவ்வளவு அழகான குழந்தை. ஏனோ அந்த குழந்தையின் மழலை சிரிப்பும், மிளிரும் கண்களும், கைகளை அசைத்து அசைத்து கதை சொல்வது போல் முகத்தில் நொடிக்கு நொடி பாவனையை மாற்றி பேசும் அதன் செயலிலும் புன்னகை மலர்ந்தது இதழில். குழந்தை என்றாலே பொதுவாக எல்லோருக்கும் பிடிக்கும்தான். ஆனால் இந்த குழந்தை மட்டும் ஏனோ அவனுக்கு சற்றே கூடுதல் பிடித்தமாகி போனது. அதை ரசனையோடு பார்த்து கொண்டிருக்க, இவர்கள் பேசும் வார்த்தைகள் மீண்டும் காதில் விழ தொடங்கியது.
“காரணம் இல்லாமலா ஒருத்தன் இவ்வளவு அழகான பொண்ணை வேண்டாம்னு சொல்லிட்டு போவான்? அவ புருஷனுக்கு என்ன பைத்தியமா இப்படிபட்ட ஒருத்தியை வேண்டாம்னு சொல்ல? இவ என்ன பண்ணினாளோ யாருக்கு தெரியும்? இவ புருஷன் இவளை விட்டுட்டு போய்ட்டான்” என்று கூற ஹர்ஷாவின் முகம் இருகியது.
தன்னை சுற்றி வட்டமிடும் அதே வார்த்தைகள். ஆணாகிய தனக்கே இப்படி பட்ட வார்த்தைகள் பொறுத்து கொள்ள முடியாத போது, அம்ருதாவின் நிலை சற்றே வருத்தமாகத்தான் இருந்தது. பேசுபவர்கள் மீது கோபம் வந்தாலும் ‘எத்தனை பேரிடம் சண்டையிட முடியும்? அது மட்டுமின்றி இவர்களிடம் சண்டையிட்டு எதை நிரூபிக்க போகிறோம்?’ என்றெண்ணியவன் தனது கோபத்தை கைவிட்டு அவர்கள் பேச்சை காதில் வாங்காமல் குழந்தையை பார்த்தப்படியே நின்றிருந்தான்.
ஏனோ தன்னை போன்ற ஒருத்தி என்பதில் அவன் பார்வை, மீண்டும் ஒருமுறை அவளது முகத்தை தொட்டு மீண்டது. யாரேனும் குழந்தை இல்லாமல் அவளை தனித்து பார்த்தால் திருமணம் ஆனவள் என்றே கூற மாட்டார்கள். கல்லூரி செல்லும் சிறு பெண்ணைப்போலத்தான் இருந்தாள்.
லட்சணமான முகம், பளீரென்ற வெண்மையான நிறம், திரைப்படத்தில் வரும் கதாநாயகி போன்ற தோற்றம், அளவான உடல் வாகுடன் எந்தவித ஒப்பனையும் இல்லாமலே பார்ப்பவர்களை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கும் வசீகரிக்கும் அழகுடைய பெண்ணாகவே தோன்றினாள். அவன் மனம் திடுகிட்டது. ‘நான் இவளை ரசிக்கிறேனா?’ என்றெண்ணியவன் ஒரு நொடி தன்மீதே கோபம் கொண்டான்.
அதே தருணம் அம்ருதாவின் அருகில் வந்தமர்ந்தார் ஒரு வயதான பெண்மணி. வயது எழுபதை நெருங்கி இருக்கும் போலும், ஆனாலும் சாந்தமான முகத்துடன் கண்ணுக்கு நிறைவாக இருந்தார். கையில் பூ கூடையுடன் இருந்தவரை பார்த்து “பூ வேண்டாம் பாட்டிமா” என்று அம்ருதா கூற,
“நான் உன்கிட்ட கொஞ்சம் பேசலாமா தாயி?” என்று அவர் கேட்டதும் விழிகளை சுருக்கி “சொல்லுங்க” என்றவளை பார்த்து,
“உனக்கு விவாகரத்து ஆகிடுச்சாமா?” என்று அவர் நேரடியாகவே கேட்டுவிட முகம் சுருங்கி போனது அம்ருதாவிற்கு.
ஒரு பொண்ணு தனியா இருந்தா இது மாதிரியான தெரு நாய்கள் எல்லாம் சீண்டி பார்க்கத்தான் நினைக்கும். நீ ஏன் உனக்குன்னு ஒரு துணையை தேடிக்க கூடாது” என்று அவர் கேட்டுவிட, அதில் சற்றே கோபம் துளிர் விட்டாலும் யாரென்று தெரியாத ஒருவர் தன்மீது அக்கறை கொண்டு பேசுவதை எண்ணி சற்றே அமைதி ஆனவள் கடலை வெறித்தவாறே பேச தொடங்கினாள்.
“இதோ இவதான் என்னோட குழந்தை ஆத்யா. என்னோட உலகமே இவதான். நீங்க சொல்றபடி இவனுங்களுக்கு பயந்து நான் கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தா வர போறவன் என் பொண்ணை பார்த்துப்பானா? அவன் குடும்பம் இவளை எப்படி பார்க்கும்?
என்னை கல்யாணம் பண்ணிக்க போகிறவனுக்கு நான்தான் தேவையே தவிர, என் பொண்ணு இல்ல. அவன் என் பொண்ணை ஏத்துக்கணும்னு நான் எதிர் பார்க்கவும் முடியாது.” என்றவள் அவரை பார்த்தபடி,
“எனக்கும் இந்த கல்யாண வாழ்க்கை மனசு முழுக்க வெறுப்பை ஏற்டுத்தி விட்டுடுச்சு. போதும் போதும்ங்குற அளவுக்கு பட்டாச்சு பாட்டிமா. அது ஒரு நரகம். தெரிஞ்சே மறுபடியும் அதுக்குள்ள போக சொல்றீங்களா? இப்போதான் கொஞ்ச நாளா நிம்மதியா இருக்கேன். திரும்ப கல்யாணம்ன்ற பெயர்ல திரும்பவும் ஒரு நரகத்துக்குள்ள போக நான் விரும்பல.
நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா அது என் பொண்ணு எதிர்காலத்தையும் சேர்த்து பாதிக்கும். என் பொண்ணு விஷயத்துல என்னால எந்த ரிஸ்க்கும் எடுக்க முடியாது பாட்டிமா. என்றவள் மீண்டும் பார்வையை கடலை நோக்கி திருப்பினாள்.
“நீ சொல்றது எல்லாமே ஒரு விதத்துல சரிதான். ஆனா இந்த உலகத்துல நல்ல மனுஷங்களும் இருக்கத்தான் செய்றாங்க. உனக்கு ஒரு துணை அவசியம், உனக்கும் உன் குழந்தைக்கும் ஒரு பாதுகாப்பு வேணும்ல? கொஞ்சம் யோசி.
நானும் சின்ன வயசுலயே என் புருஷனை இழந்துட்டேன். இப்படி பட்ட கேடு கெட்டவனுங்ககிட்டருந்து என்னை காப்பாத்திக்க போராடி போராடியே என் வாழ்க்கை முடிஞ்சு போய்டுச்சு. துணை இல்லாத வாழ்க்கை வெறுமையைதான் கொடுக்கும். ஆணோ, பெண்ணோ துணை அவசியம்” என்றவர் பேசியபடியே எழுந்து கொள்ள, பூ கூடையை தூக்கியவாறே,
“நல்லா யோசிமா.. உலகத்தில் எல்லாரும் கெட்டவங்க இல்ல. உனக்கான துணை வரும்போது மறுக்காம ஏத்துக்கோ பாப்பா. கண்டிப்பா நல்லா இருப்ப. என் பேச்சை நம்பு ” என்றவர் அங்கிருந்து கிளம்பி விட, அவருடைய வார்த்தைகளுக்கு சொந்தக்காரன் அவர்களை விட்டு சற்று தொலைவில்தான் நிற்கிறான் என்பதை அறியாதாவள் விரக்தியாக சிரித்து கொண்டாள்.