இதயமே இளகுமா அத்தியாயம் 5

4.8
(12)

சமர் வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்து லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான். அப்போது வீட்டிற்குள் வந்தனர் அவனின் அம்மா, அப்பா இருவரும்.

“டேய், சமர் நீ ஹாஸ்பிடல் போகலையா” என்றபடி தன் மகனின் அருகில் அமர்ந்தார் நேத்ரன்.

“இல்லப்பா, நான் இன்னைக்கு  போகல,”

“அதான் ஏன்னு கேட்டேன்? இன்னைக்கு ஈவினிங் பாலாவோட ஊருக்கு எல்லாரும் கிளம்புறீங்கதானே, “

“நான் போகலப்பா”

“போகலையா, என்னாச்சுடா உனக்கு, ஹாஸ்பிடல் போகலையான்னு கேட்டால், போகலைன்ற, ஊருக்கு போகலையான்னு கேட்டாலும் போகலன்னு சொல்ற, என்னாச்சு என் தங்கபுள்ளைக்கு” என அவனிடம் வந்தார் வைஷ்ணவி.

“எனக்கு ஒன்னும் ஆகலைம்மா. இன்னைக்கு உங்களோட கல்யாண நாள், நான் போயிட்டு வரதுக்கு எப்படியும் 15 நாளைக்கு மேல ஆகலாம்.‌ அதான் இன்னைக்கு ஒரு நாள் முழுவதும் உங்க கூட இருந்துட்டு போகலாம் என்று முடிவு பண்ணிட்டேன்.”

“பொய் சொல்லாதடா, அந்த ஊருக்கு போனதும் எங்களை மறந்திடுவேன்னு சொல்லு”

“நான் ஏன்ம்மா உங்களை மறக்க போறேன். என்னோட உயிரே நீங்க ரெண்டு பேரும் தானே”

“இன்னொரு உயிர், அந்த ஊர்ல தானடா இருக்கு” என சமரை பார்த்து சிரித்தார் வைஷ்ணவி.

“ம்மா” என்றவனின் முகத்தில் வெட்கத்தில் சாயல்.

“சமர், எத்தனையோ வருஷம் கழிச்சு நீ அவளை பார்க்க போற, என் மருமகளை ஒரு போட்டோ அடுத்து எங்களுக்கு அனுப்பி விடுடா.”

“அம்மா அதுதான் எனக்கு யோசனைவே இருக்கு, இத்தனை வருஷம் கழிச்சு நான் அவளை பார்க்க போக போறேன். ஆனால், அவள் மனசுல நான் இருப்பேனான்னு தெரியலையே, அவள் என்னை நியாபகம் வச்சிருக்காலான்னு கூட தெரியவில்லை என்றவனுக்கு அவள் பதினைந்து முடிந்து பதினாறின் தொடக்கத்தில் இருந்த முகம் வந்து சென்றது. எப்போதும் பாவாடை சட்டையில் ரெட்டை ஜடை போட்டுக் கொண்டு சிரித்த முகமாக சுற்றித் திரிவாள். அவனை மட்டும் வித்தியாசமாக அழைக்கும் பெண்ணவளின் குரல் இன்றும் காதுக்குள் கேட்கிறது, அப்படியே பத்து வருடங்களுக்கு முன் நடந்தது ஞாபக அலைகளாய் மனதினை தொட்டுச் செல்ல,

அவன் தோளை தொட்டு உலுக்கினார் வைஷ்ணவி.

“என்னடா? என் மருமகள் நியாபகம் வந்துடுச்சா”

“ம்மா, நான் அவளை பார்க்கும் போது அவளுக்கு 16 வயசு இருக்கும். இப்பவும் அதே மாதிரி இருப்பாளான்னு தெரியாது. நான் அவ முன்னாடி போய் நின்றதும் நீங்க யாருன்னு கேட்டால் மொத்தமா நான் உடைந்து போய்டுவேன்.”

“தைரியமா இருடா, போறதுக்குள்ள இப்படியா பேசுவாங்க, நம்பிக்கை இல்லாத மாதிரி, அதெல்லாம் என் மருமக உன்னை ஞாபகம் வச்சு இருப்பாள்” என்றார் நேத்ரன்.

“காதல்னாலே தைரியம் எல்லாம் காணாம போய்டும் போல” என தந்தையின் தோலில் சாய்ந்தான் சமர்.

“சரி விடு, உனக்காக அவ தான் பிறந்து இருக்கான்னா, கண்டிப்பா உன்னோட கை சேருவாள். என்னோட பையனோட காதல் உண்மையானது. அதனால கடவுள் கண்டிப்பா உன்னை சோதிக்க மாட்டார்.”

“சரிம்மா நாளைக்கு போய் தான் தெரியும் எதுவென்றாலும்,”

“நாளைக்கு எப்போடா கிளம்புற.?”

“நாளைக்கு மார்னிங் கிளம்புனேன்னா, ஈவ்னிங் அவங்க ஊருக்கு போயிடலாம், நாளைக்கு தான் அவங்க ஊர் திருவிழா ஸ்டார்ட் ஆகுது.”

“கிட்டத்தட்ட பத்து வருஷம் கழிச்சு நீ அந்த ஊருக்கு போக போறியா”

நாள் போனதே தெரியலை சமர். வருஷம் எவ்வளவு வேகமாக கடந்து போயிருக்கு .”

“ எல்லாமே என்னோட நேரம்.”

“சரி விடு சமர், இனிமே எல்லாமே உனக்கு சரியா அமையும்.”

“சரிம்மா, நீங்க போய் ரெடியாகுங்க, நம்ம போகலாம்.”

தாயும், தகப்பனும் தயாராகி வர சமர் அவர்களோடு சுற்றி பார்க்க கிளம்பினான்.

மாட்டை தொழுவத்தில் கட்டியபடியே சந்திரா “செம்பா இதுல பால் இருக்கு, அதை கொண்டு போய் சொசைட்டில ஊத்திட்டு வந்துடுறியா.” அம்மாவுக்கு கொஞ்சம் வேலை இருக்கும்மா,”

“சரிம்மா” என கோகிலாவை அழைத்துக் கொண்டு செம்பா கிளம்பினாள்.

கொஞ்ச தூரம் நடந்து வரவும் “அடியே என் அத்தை மகளே” என சத்தம் கேட்க திரும்பி பார்த்தனர் இருவரும்.

 

அங்கே ஒருவன் பல்லை “இஇஇ” என காண்பித்தபடி நின்றிருந்தான்.

“இந்த எருமை மாடு எதுக்குடி நம்மள பார்த்து பல்ல காமிக்கிறான்” என்றால் கோகிலா.

“நம்மள பார்த்து இல்லை, உன்னை பார்த்து”

“ஆமா என்ன பார்த்துதான், எவ்வளவு பேச்சு பேசினாலும் அந்த எருமைக்கு சொரணை இருக்க மாட்டேங்குது.”

“எருமைக்கு சொரணை இருந்தால் எப்படிடி மழையில் நனையும்” என செம்பா சொல்ல….

“ஆமால்ல, அதான் இவன் மர மண்டைக்கு நான் என்ன திட்டினாலும் புரிய மாட்டேங்குது போல.”

அவர்களிடம் வந்தான் பாண்டி. கோகிலாவிற்கு தந்தையின் வழி சொந்தம், அவளுக்கு  முறைப்பையன்.

“என்ன எதுக்கு இப்போ கத்திட்டு இருக்க..?” என கோகிலா கேட்க…

“ நான் எங்கடி கத்துறேன். மாமா நிற்கிறேன் நீ கண்டுக்காம போற அதான் கூப்பிட்டேன்.”

“உன்னைய ஏன் நான் கண்டுக்கனும். எனக்கு உனக்கு என்ன சம்பந்தம் இருக்கு..?”

“வேணும்னா சாயந்திரம் வந்து பரிசம் போடவா, சம்மதம் தன்னால உருவாகிடும்.”

“உனக்கு வேற வேலையே இல்லையா, பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்குற, ஆளைப்பாரு அரைக்கால் மாதிரி இருந்துட்டு, போய் வேற வேலை இருந்தால் பாரு”  வா செம்பா என இருவரும் நடக்க ஆரம்பிக்க, “அடியே குள்ள கத்திரிக்கா போடி போ, ஒரு நாள்ல ஒரு நாள் உன்னை பாத்துக்குறேன்” என்றபடி சென்றான் பாண்டி.

“ஏன்டி அவர் தான் உன்னை அடிக்கடி கல்யாணம் பண்ணிக்கோ, கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்கிறார் இல்ல, நீ ஏன் அவரை திட்டிட்டே இருக்க, ராசாத்தி அத்தை கிட்ட சொல்ல வேண்டியது தானே,

“உனக்கு அவனை பற்றி தெரியாது செம்பா.” அவன் நம்ம ஊர் மளிகை கடைக்கார பொண்ணு இருக்கு இல்ல,

“ஆமா”

“அந்தப் பொண்ணும் இவனும் விரும்புறாங்க,”

“அப்போ ஏன் உன் கிட்ட இப்படி பேசிட்டு இருக்கான்.”

“நம்ம குடும்ப கஷ்டத்தை வச்சு நம்மள வளைச்சு போடலாம்னு பாக்குறாங்க, கட்டிக்கிறதுக்கு அவளையும், வச்சிக்கிறதுக்கும் நம்மலையும் புரியுதா…”

“என்னடி சொல்ற..?”

“ஆமா செம்பா நீ யார்கிட்டயும் அவ்வளவு பேசமாட்ட. அதான் உனக்கு தெரியல, நான் ரெண்டு நாளுக்கு முன்னாடி அந்த கடைக்கு போயிருந்தேன், அப்போ இவன் நான் வந்ததை பார்க்காமல் அந்த பொண்ணுகிட்ட கடலை போட்டுட்டு இருந்தான். அந்த பொண்ணும் பதிலுக்கு இவனை பார்த்து பல்லை காமிக்குது. இவனை பத்தி தெரியாம விழுந்துடுச்சு போல, “காதலுக்கு கண் இல்லை” என்று சொல்வார்களே அது இவன் விஷயத்துல என்னமோ சரியா தான் இருக்கு. இப்பல்லாம் காதல் மனசை பார்த்து வருதில்லை, பணத்தை பார்த்து தான் வருது. இவன் ஒன்னும் அவ்வளவு வசதி இல்ல, அதான் வசதியான மளிகை கடைக்காரர் பொண்ணை  பார்த்துகிட்டு இருக்கான். அப்போ பணக்காரங்க எல்லாம் எப்படி இருப்பார்களோ, யோசிச்சு பாரு , அவனுங்க இவனுங்களை விட மோசமா இருப்பாங்க” என்றபடி கோகிலா நடக்க, செம்பா அப்படியே நின்றாள்.

“தன்னோடு நடந்தவளை காணாது திரும்பி பார்க்க, அப்படியே நின்றிருந்தவளை ‘இவ ஒருத்தி ஆனா ஊனா நின்னுடுறாள்.’ ‘என்னடி ஆச்சு உனக்கு வா” என அழைத்துக் கொண்டு சென்றாள் கோகிலா.

சொசைட்டியில் பாலை ஊற்றி விட்டு திரும்பவும் அவர்கள் எதிரே வந்தால் குகன்.

“என்னம்மா, ரெண்டு பேரும் இந்த பக்கம் போறீங்க..?”

“அம்மாவுக்கு வேலை இருக்குதாம்  குகன்மாமா. அதான் நான் பாலை கொண்டு சொசைட்டியில் ஊற்ற  வந்தேன்” என செம்பா கூறவும்,

“ ஒரு போன் பண்ணி இருக்க வேண்டியது தானே, நான் வந்து வாங்கிட்டு போயிருப்பேன் இல்ல” என்றான் குகன்.

“இதுல என்ன இருக்கு பக்கம் தானே அண்ணா. அதான், நாங்களே வந்துட்டோம்” என்றாள் கோகி.

“சரிடா அம்மா சொன்னாங்க, உங்க ரெண்டு பேருக்கும் வேலை கிடைச்சிருக்குன்னு, என்னைக்கு வேலையில் சேர போறீங்க,”

“நாளைக்கு டியூட்டில ஜாயின் பண்ண சொல்லி இருக்காங்க மாமா”.

“சரி செம்பா. மாமா, அத்தை உன்ன பத்தி தான் ரொம்ப கவலைப்படுவாங்க, என் பொண்ணு இப்படி இருக்காளேன்னு, . உனக்கு ஒரு வேலை கிடைச்சதும் அத்தைக்கு ரொம்ப சந்தோஷம்”

“சரி மாமா, நீங்க பொண்ணு பார்க்க போனதா சொன்னாங்களே,”

“அதை ஏன்டா கேக்குற? விவசாயம் பண்றேன்னு சொன்னாலே யாருமே கட்டிக்க முன்னாடி வர மாட்டேங்கிறாங்க, கவர்மெண்ட் வேலை, ஐடி வேலைன்னுதான் பேசுறாங்களே தவிர நமக்கெல்லாம் சோறு போடுற விவசாயத்தை யாரும் மதிக்கிற மாதிரியே தெரியல செம்பா. யாராவது ஒருத்தர் விவசாயியதான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றாங்களா, யாரும் சொல்றது இல்லை, என்ன பண்றது..? பொண்ணு கிடைத்தால் கல்யாணம் முடிப்போம். இல்ல கடைசி வரைக்கும் இப்படியே தாயும் தகப்பனையும் பார்த்துட்டு இருந்துற வேண்டியதுதான்” என்ற குகனிடம்

“அப்போ நீங்க நம்ம செம்பாவையே கல்யாணம் முடிச்சுக்கோங்க அண்ணா” என்றதும்

“அவ எனக்கு தங்கச்சி மாதிரி கோகி, நான் என்னைக்குமே அவளை அப்படி பார்த்ததில்லை” என ஒரே வார்த்தையில் முடித்து விட்டான் குகன்.

“சரி மாமா நாங்க கிளம்புறோம். அம்மா தேடும்.”

“ சரிடா பார்த்து போங்க” என்ற குகன் “செம்பா” என்க,

என்ன மாமா..?””

“ வேலைக்கு எதுல போக போறீங்க..?”

“பஸ்ல தான் மாமா போகனும்.”

“என் வீட்ல ஒரு ஸ்கூட்டி சும்மா தான் கிடக்கு, அதை நான் ரிப்பேர் பண்ணி தரவா, அதுல போறீங்களா..?

“அதெல்லாம் வேணாம் மாமா. நாங்க பாத்துக்குறோம்.”

“அட நீ என்னத்த பாத்துக்க போற செம்பா. இன்னைக்கு நான் வொர்க் ஷாப்ல விட்டால் நாளைக்கு காலைல வந்துடும். நீ வந்து வாங்கிட்டு போ, உனக்கு தான் வண்டி ஓட்ட தெரியும் இல்ல, அது சும்மா தான் கிடக்கு. நான் அதை ஓட்டிட்டு இருந்தாலாவது பரவால்ல. உனக்கு தான் கொடுத்தேன்னு சொன்னால் அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க.”

“சரி மாமா” என்றால் செம்பருத்தி.

“சரிடா பார்த்து போங்க, நான் தோட்டத்துக்கு போறேன்” என கிளம்பினான் குகன்.

அதே நேரம் ஹாஸ்பிடல் வளாகத்தில் பாலா, தினேஷ், கோகுல், ஆத்வி, வித்யா ஐவரும் பாலாவின் கிராமத்திற்கு கிளம்ப தயாராகினர்.

ஆத்வியின் முகம் இருளடைந்து போய் இருந்தது.

பாலா மெடிக்கல் கேம்ப் தேவையான மெடிசன் மத்த பொருள் எல்லாம் எப்போ வரும்‌. இப்போ நம்ம கூடவே வருமா..? இல்லை 5 நாள்கள் கழிச்சு வருமா..? என தினேஷ் கேட்க,

“திருவிழா முடிஞ்சிதாண்டா வரும். இப்பவே நம்ம அங்கே கொண்டு போய் என்ன பண்றது, அதனால சமர் திருவிழா முடிஞ்சது கொண்டு வர சொல்லி இருந்தான். நம்ம போற ஐந்து நாளும் நம்ம மைண்ட் நல்லா ரிலாக்ஸ் பண்றதுக்காகதான். இவ்வளவு நாள் வேலைன்னு இருந்துட்டோம்ல.”

“அந்த கிராமத்தில் போய் மைண்ட் ரிலாக்ஸ் பண்றதுக்கு அங்க என்ன பிச், பார்க், ரெஸ்ட்டாரண்ட், ஷாப்பிங் மால்னு இருக்கா என்ன..? பெருசா பேச வந்துட்டாங்க அவங்க ஊர் புகழை பாடிகிட்டு”, என ஆத்வி நக்கலாக சொல்ல…

“நீ கடைசி வரைக்கும் நக்கலாவே பேசிட்டு இரு, எங்க ஊரு வந்து பார் அப்புறம் உனக்கு தெரியும்.

 “எல்லாரும் ஏறுங்கடா” என்றதும் காரில் ஏறி அமர்ந்தனர் ஐவரும். பாலா டிரைவ் செய்ய கார் தேனி மாவட்டத்தை நோக்கி தன் பயணத்தை தொடங்கியது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

1 thought on “இதயமே இளகுமா அத்தியாயம் 5”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!