இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 16

4.9
(7)

கோகியை தேடி அவள் வீட்டிற்கு வந்தாள் செம்பா.

    “ஏய்!, கோகி அத்தை வேலைக்கு போய்ட்டாங்களா?”

“ஆமா” செம்பா. என்றாள் கோகி, வீட்டின் உள்ளே இருந்து குரல் கொடுத்தபடி

“நம்ம எப்போ போகலாம்?.”

“நம்ம ஏன் போகனும்” என்றபடி வெளியே வந்தாள் கோகி தட்டு நிறைய சாப்பாட்டுடன்

“விளையாடதான்டி”

“அம்மா இன்னைக்கு வரவேணாம் சொன்னாங்களே செம்பா?”

“ஏன்?”

“தெரியலை செம்பா. அம்மாவுக்கு இன்னைக்கு வேலை வேற இடத்துலயாம். அதனால் என்னை சாப்பாடு கொண்டு வரவேண்டாம்னு சொன்னாங்க.”

“அப்படியா” என முகத்தை சோகமாக வைக்க

“நீ ஏன் சோகமா இருக்க…?”

“இல்லைடி அங்கே விளையாடுறது நல்லா இருந்தது அதான்.” என்றாள் உண்மையை மறைத்து.

“ஆமா செம்பா. ஆனால் இன்னைக்கு எப்படி போறது” என கோகியும் யோசிக்க… அப்போது அவர்களை நோக்கி கையில் ஒரு கவருடன் வந்தான் கோகியின் அண்ணண் ஏழுமலை.

“கோகி”

“என்ன அண்ணா?”

“இந்தா இந்த கவரை கொண்டுபோய் அம்மாகிட்ட கொடு.”

“அம்மா எங்கே இருக்காங்கன்னு எனக்கு தெரியாதேண்ணா”.

“அந்த தோட்டத்து வீட்ல தான் நிற்கிறாங்க. வெண்டைக்காய் பறிக்கனுமாம், அதான் முழுக்கை சட்டை கேட்டாங்க, இதுல இருக்கு கொண்டு கொடுத்துட்டு வா கோகி. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு”

“சரிண்ணா” என அதை வாங்கிகொண்டு இரண்டுபேரும் தோட்டத்திற்கு வந்தனர்.

“பார்த்தியா கடவுளே நமக்கு கருணை காட்டி விளையாட அனுப்பிட்டார்.” என்றாள் கோகி

ராசாத்தியிடம் கவரை கொடுத்துவிட்டு இரண்டு பேரும் மாமரத்தின் கீழே ஓடிப்பிடித்து விளையாடி கொண்டிருந்தனர்.

திடிரென கேட்ட சத்தத்தில் செம்பா உடல் நடுங்கி நின்றாள்.

“என்னடி பிச்சைக்கார நாயே!, யாரு வீட்டுக்குல்ல யார் வர்றதுன்னு ஒரு விவஸ்தை வேணாம். அப்படியே நைஸா உள்ளே வந்து என் பையனை மயக்கி, எல்லா சொத்தையும் வளைச்சி போட்டுட்டு வான்னு, உன் ஆத்தாகாரி அனுப்பி வச்சாளா. யாரை கேட்டுடி என் வீட்டுக்குள்ள வந்த, ஓடுகாலி பெத்த ஓடுகாலி” என புடவை முந்தானையை இடுப்பில் சொருகியபடி வந்தார் கற்பகம். அவரை கண்டதும் அழுதபடியே நின்றாள் செம்பா.

“நாங்க எங்க அம்மாவுக்கு சட்டை கொடுக்கத்தான் வந்தோம். உங்க வீட்டுக்கு வரலை” என்றாள் கோகி.

“உன் ஆத்தாவையே உள்ளே விடக்கூடாதுன்னு சொன்னேன். என்‌ மாமியாகார கிழவிதான் விசுவாசமான குடும்பம், ஒருத்தன் பண்ணுண தப்புக்கு இவங்க என்ன பண்ணுவாங்க, அது இதுன்னு என் வாயை அடைச்சிட்டாள். அதான் நீங்கயெல்லாம் என் வீட்டுக்குள்ள வர்றிங்க. ஏய்!, என செம்பாவின் புறம் திரும்பிய கற்பகம் “என்னடி, நீ கொஞ்சம் அழகா இருந்ததும் உன்னை அனுப்பி வச்சிட்டாளா உன் ஆத்தாகாரி. அழகை காட்டி என் புள்ளையை மயக்குன்னு ஹாங்… பதில் சொல்லூடி நாயே!” என கோபத்தில் பேச…

“இதோப்பாருங்க ரொம்ப பேசாதிங்க. நாங்க ஒன்னும் உங்க சொத்தை அடையை வரலை. எங்க அத்தையை தேடி வந்தோம். இங்கே விளையாடினோம். இனிமே உங்க வீட்டு பக்கமே வரமாட்டோம். உங்க இஷ்டத்துக்கு போசாதிங்க” என்றாள் செம்பா அதே கோபத்துடன்.

“வாடி என் வாரிய கட்டை, என்னையே எதிர்த்து பேசுறியா. நீ இருக்குறது என் இடம். இங்கே திருட வந்தேன்னு பஞ்சாயத்தை கூட்டி, உனக்கு மொட்டை அடிச்சி கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏத்தி அனுப்பிடுவேன். என்னை எதிர்த்து பேசுற அளவுக்கு தைரியம் வந்துடுச்சாடி நாய்களா, கஞ்சிக்கே வழியில்லாத உங்களுக்கு எல்லாம் ஏன்டி கோபம் வருது. அதான் பெரிய சொத்து வச்சிருக்கியே, அதை வச்சி வேற யாரையாவது மயக்க வேண்டியதுதானே நிறைய பணம் கிடைக்குமே” என செம்பாவை மேலும் கீழும் பார்க்க, அவர் பார்வையில் அறுவெறுப்பாக உணர்ந்ததில் உடல் கூசியது.

“உங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கு பார்த்து பேசுங்க” என்றாள் கோகி

“என் பொண்ணா, உன் வீட்ல வந்து விளையாடினாள். என் பொண்ணு உன் வீட்ல கால் வைக்கிறதுக்குகூட உங்களுக்கு தகுதி இல்லை. என் வீட்டு சோத்தை திண்ணவன்தான் உன் அப்பன். உண்ட வீட்டுக்கே துரோகம் பண்ணுணவன். நல்ல வசதியான பொண்ணு பார்த்ததும் அவளை மயக்கி கட்டிகிட்டான். உன் ஆத்தாளும், அவன் ஆளு நல்லா இருந்ததும் என் தம்பியை வேணாம்னு அவன் பின்னாடி போனாள். என் தம்பியை கட்டியிருந்தால் ராணி மாதிரி இருந்திருக்கலாம். உன் அப்பனை கட்டி பிச்சகாரியா ஐந்துக்கும் பத்துக்கும் வேலைக்கு போய்ட்டு இருக்காள். போதாத குறைக்கு இரண்டு பொம்பளை பிள்ளைங்க வேற, உங்களை எப்படி கட்டி கொடுக்குறாங்கன்னு நானும் பார்க்க தானே போறேன். உன் அழகுல மயங்கி கட்டினாதான் உண்டு. அதுக்குன்னு எவனாவது வருவான். உங்க அப்பன் எப்படியும் தேடி பிடிச்சி இருப்பான். நல்ல வசதியான மாப்பிள்ளையா. அப்போ தானே நல்லா சொகுசா குடும்பமே உட்கார்ந்து சாப்பிட முடியும்.” என்க…

‘இப்போ எதுக்கு தேவையில்லாமல் பேசுறிங்க.?” என செம்பா கோபத்தில் சீற…

என்னடி சீறிட்டு வர்ற “முதல்ல இங்கே இருந்து வெளியே போ. என் வீட்ல நின்னால் இன்னும் அசிங்கமா பேசுவேன். இதுதான் உங்களை இங்கே பாக்குறது கடைசியாக இருக்கனும். “போங்கடி வெளியே” என்றதும் இரண்டு பேரும் அங்கிருந்து வெளியேறினார். நல்ல வேளை அந்த இடத்தில் யாரும் இல்லை. யாராவது இருந்திருந்தால் சந்திராவிடமோ இல்லை ராசாத்தியிடமோ சொல்லிவிடுவார். இங்கே கற்பகம் பேச்சால் மனதால் நொந்ததை விட, அவர்கள் இருவரும் உடலால் நோகடித்து விடுவர்.

“இனிமே அந்த பொம்பள வீட்டுக்கு போகனும்னு சொன்ன உன்னை கொண்ணுடுவேன் செம்பா. எப்படி பேசுறான்னு பாரு. அவ மகள் ஒழுங்காம். அவளை பற்றி எனக்கு தெரியாது பாரு. லிஸ்ட்டே போடனும். அவ கால் எதுக்கு நம்ம வீட்ல படனும். அவளே ஒரு தரித்திரியம், அவ வரனும்னு நம்ம என்ன தவமா இருக்கோம். அழாதே! அவ பேசியதை எல்லாம் பெரியதாக எடுக்காதே செம்பா” என அவளை சாமாதானபடுத்தி வீட்டில் விட்டு சென்றாள் கோகி.

ரஞ்சி செம்பாவின் முகத்தை பார்த்து “ஏன் அழுதுறுக்க, உனக்கு கோகிக்கும் சண்டையா?” என கேட்க

“இல்லைக்கா. விளையாடும்போது கீழே விழுந்துட்டேன்”.

“ஐயோ!, அடி எதுவும் பட்டுடுச்சா செம்பா.”

“அதுலாம் ஒன்னூம் இல்லக்கா, வலிக்குது அவ்வளவுதான்.”

“பார்த்து விளையாட கூடாதாடி. பாரு வலியில் அழுறியே, சரி காலை காட்டு அக்கா மருந்து போடுறேன்”.

“இல்லக்கா வேணாம். அது சரியாகிடும்”.

“மருந்து போடாமல் எப்படி சரியாகும்”

“கோகி மருந்து போட்டு விட்டாக்கா”

“உண்மையாவா…”

“ஆமாக்கா”

“சரி” என்றவள் சமையல் அறைக்குள் சென்று கையில் சாப்பாடு தட்டோடு வந்தாள். செம்பாவிற்க்கு சாப்பாடு ஊட்டிவிட்டு தூங்கவைத்தாள். கற்பகம் பேசியதை நினைத்தபடியே தூங்கிபோனாள் செம்பா.

செம்பா எப்போதும் வரும் நேரம் தாண்டிவிட, அவள் வருகிறாளா? என பார்க்க வெளியே வந்தான். அவள் வருவது போல தெரியவில்லை. வாசலுக்கும் அவன் அறைக்குமாய் நடந்துகொண்டிருந்தான். மணி மாலை ஆகிவிட்டது. இனிமே செம்பா வருவது கஷ்டம். அவளை பார்க்காமல் மனது ஒரு மாதிரியான உணர்வில் தத்தளித்து. சமர் இருக்கும் வீட்டில் இருந்து செம்பா வீடு பக்கம்தான். “அவளை பார்த்து விட்டு வரலாமா!” என கீழே இறங்கினான். ஓரளவுக்கு இருட்டி இருந்தது. மெதுவாக நடந்து செம்பாவின் வீட்டின் முன்னே வந்தான்.

எல்லாரும் அவர்கள் வீட்டின் வெளியே முன் பகுதியில் பாயை விரித்து அமர்ந்து இருந்தனர். செம்பாவை மட்டும் காணவில்லை. “பட்டாசு மட்டும் இல்லை. எங்கே போனாள். ஒருவேளை வெளியே சொந்தக்காரங்க வீட்டுக்கு போய்ருப்பாளோ, இல்லையே போனால் நேற்றே சொல்லிருப்பாளே, அப்புறம் எல்லாரும் இருக்காங்க!, இவ மட்டும் எங்கே போனாள்?, ஒரு வேளை உடம்பு சரியில்லையோ, அதான் நம்மளை பார்க்க வரலையோ?” என மனதிற்குள்ள பட்டிமன்றம் நடத்தியவன் “இதற்கு மேல் இங்கே நிற்பது நல்லது இல்லை. யாராவது பார்த்தால் தவறாக நினைக்ககூடும்” என அவள் வீட்டை பார்த்தபடியே தாண்டிசென்றான்.

“அத்தை கோகி இன்னும் எழுந்துக்கலையா?”

“இல்லை கோகி. அவ நல்லா தூங்குறாள்” என்றார் சந்திரா.

“அண்ணே” என ராசாத்தி அழைக்க…

“சொல்லும்மா” என்றார் நல்லசிவம்.

“அண்ணே!, ஏழுமலைக்கு நல்ல வேலை கிடைச்சிடுச்சில்ல, நம்ம ரஞ்சிக்கும் அவனுக்கும் சின்ன வயசுலயே பேசினது தானே. உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணலாம்ல.”

“அம்மா, ரஞ்சி இப்போதான் காலேஜ் இரண்டாவது வருஷம் படிக்கிறாள். படிச்சி முடிக்கட்டும். அதுக்கு அப்புறம் கல்யாணத்தை பற்றி பேசலாம்” என்றான் ஏழுமலை.

“இல்லடா நீ தனியா கஷ்டபடுறியேன்னு சொன்னேன். எங்க பக்கத்துல இருந்தால் நான் ஏன் இதை பற்றி பேச போறேன்”.

“எனக்கு என்னம்மா கஷ்டம் நான் நல்லாதான் இருக்கேன்‌. படிக்கிற பிள்ளையோட படிப்பை கெடுத்துடாதே. ரஞ்சி படிச்சி முடிக்கட்டும். அதுக்கு அப்புறம் கல்யாணத்தை பற்றி பேசலாம்.”

“சரிடா நீயே சொல்லிட்ட அப்புறம் நான் என்ன சொல்றது. என்ன அண்ணா, நீயென்ன அமைதியா இருக்க…?”

“நான் பேசணும் நினைச்சதை என் மருமகனே பேசிட்டானே. அப்புறம் நான் பேச என்ன இருக்கு ராசாத்தி. என் புள்ளைங்க நல்லா படிச்சி அவங்க சொந்தம் கால்ல நிற்கனும். அதை நான் பார்க்கனும். அதான் என் ஆசை. ரஞ்சியை மாதிரி என் ஆத்தாளையும் அவ ஆசைப்பட்ட மாதிரியே நர்ஸிங் படிக்க வைக்கனும். இரண்டு பிள்ளைங்களும் அவங்க படிச்ச படிப்புக்கு வேலைக்கு போகனும். அதுக்கு அப்புறம்தான் அவங்க கல்யாணத்தை பற்றி பேசனும். அவங்களும் சந்தோஷமா புருஷன், பிள்ளையோட வாழுறதை பாக்கனும் அதான் என் ஆசை”

“உன் ஆசை கண்டிப்பா நடக்கும்ண்ணே. கவலைபடாதே. அண்ணி செம்பாவை எழுப்புங்க புள்ளை மதியமே படுத்துடுச்சி. இன்னும் எழும்பாமல் இருக்காளே”

“அவ சாயந்திரம் தூக்கத்திலேயே காபி குடிச்சிட்டு தான் தூங்குறாள் ராசாத்தி. அதான் அவளை நான் எழுப்பலை. வயிறு பசித்தால் தன்னாலே எழுவாள்‌. நல்லா விளையாண்டு இருப்பாள். கால் வலியில் தூங்குவாள். அவளே எழுந்து வரட்டும். வயசு பிள்ளையா ஒரு இடத்துலே இருன்னு சொன்னாள், எங்கே கேட்குறாங்க ரெண்டு பேரும். இன்னும் சின்ன பிள்ளை மாதிரி அலையிறாளுங்க. அவளுங்க விருப்பபடிதான் இருக்காங்க. என்னத்தை சொல்ல!”

“ஆமா அண்ணி. அவ கெட்டு போக காரணமே இவள்தான்” என்றார் கோகியை பார்த்து

“ஆமா இல்லன்னா மட்டும் உன் மருமக படிச்சி மாநிலத்துலயே முதல்ல வந்திருப்பாள் போயேன்ம்மா, காமெடி பண்ணிட்டு”

“எதிர்த்து எதிர்த்து பேசாதேடி. உனக்கு இருக்குற வாய்க்கு உன் மாமியார் உன்னை உரல்ல போட்டு இடிக்கிறவளாதான் வருவாள்”

“என்னை அவ உரல்ல போட்டு இடிச்சாள். நான் அவளை அம்மில போட்டு அரைச்சிடுவேன்.”

“இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. நாளைக்கு பள்ளிக்கூடம் தானே போ, போய் தூங்குடி” என்றதும் ‘இதுக்கு மேலே இவர்களிடம் இருந்தால் நம்ம தலைதான் உருளும்’ என நல்லபிள்ளையாக “சரிம்மா” என ஓடி போய் செம்பாவின் அருகில் படுத்து கொண்டாள் கோகி.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!