காளையன் கசாயத்தையும் சாப்பாட்டையும் எடுத்துக் கொண்டு மலர்னிகாவின் அறைக்குள் சென்றான். அவள் அருகில் இருந்த மேசையில் சாப்பாட்டுத் தட்டையும், கசாயத்தையும் வைத்தான். பின்னர் அவளின் அருகில் சென்று அமர்ந்தான். மலர்னிகா குளிரினால் நடுநடுங்கிக் கொண்டு இருந்தாள். அவளின் நெற்றியில் மெல்ல கை வைத்துப் பார்க்க, அது மிகவும் சூடாக இருந்தது. அதிலே அவனுக்குத் தெரிந்தது மலர்னிகாவிற்கு அதிகமான காய்ச்சல் இருப்பது.
“அம்மணி… அம்மணி” என்று அழைத்தான். அவனது சத்தத்தில் மெல்ல கண்களை திறக்க முயன்றாள். அதற்கு கூட அவளால் முடியவில்லை. கண்களை மூடிக் கொண்டு சுருண்டு படுத்தாள். அவளைப் பார்க்க பாவமாக இருந்தது காளையனுக்கு. அவளின் தலைப்பக்கம் வந்து இருந்தவன். அவளை மெதுவாக தூக்கி அவனது நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
அவளுக்கு அவனது நெஞ்சில் படுத்ததும் ஒருவித கதகதப்பாக இருந்தது. அது மிகவும் இதமாக இருக்க, மேலும் அவனுடன் ஒன்றினாள். அவனும் அவளை வாகாக அணைத்துக் கொண்டு, அருகில் மேசையில் வைத்திருந்த கசாயத்தை எடுத்தான். மெதுவாக மலர்னிகாவிடம், “அம்மணி, நான் இப்போ உனக்கு ஒண்ணு குடுப்பனாம், நீ அதை அடம்பிடிக்காம குடிக்கணும்.” என்று சொல்லி, கசாயத்தை அவள் வாயினுள் வைத்து, மெது மெதுவாக பருக்கினாள். அதை குடித்துக் கொண்டு இருக்கும் போது லேசாக இருமினாள். அவளது முதுகை வருடி விட்டான்.
பின்னர் சாப்பாட்டு தட்டை எடுத்து, அதில் இருந்த தோசையை கறியுடன் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக குடுத்தான். அவளும் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு, வேண்டாம் என்று தலையாட்டினாள். காளையன்தான், “இல்ல கண்ணு, கொஞ்சம்தான் இருக்கு. சாப்பிட்டால் தானே காய்ச்சல் சீக்கிரமா குணமாகும்.” என்று சிறு பிள்ளைக்கு சொல்வதைப் போல சொன்னான். அவளும் அதற்கு பிறகு எதுவும் பேசாமல், அவன் குடுத்த தோசையை வாங்கிக் கொண்டாள். சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடிக்க குடுத்தான். அதையும் வாங்கிக் குடித்தவள், அப்படியே அவன் மார்பில் தூங்கினாள்.
மோனிஷா அறையில் படுத்திருந்தாள். அவளது சிந்தனை முழுவதும் சபாபதியே நிறைந்திருந்தான். அவன் போனை எடுத்துப் பேசியிருந்தாலாவது அவளுக்கு நிம்மதியாக இருந்திருக்கும். ஆனால் அவனோ மோனிஷாவை மறந்தே விட்டது போல, போன் எடுக்காது இருந்தான்.
மோனிஷாவின் தோழி ஒருத்தி அவளுக்கு போன் பண்ணினாள். “ஹாய் கீத்து, எப்படி இருக்க? உன்னோட லைஃப் எப்படி இருக்கு?” என்று கேட்க, மறுபக்கம் இருந்த மோனிஷாவின் தோழி கீர்த்தனா, “மோனி என்னோட லைஃப்ஏ போயிடுச்சு டி” என்று அழுதாள். இதைக் கேட்ட மோனிஷா, “ஏய் என்னாச்சிடி? எதுக்கு இப்போ இப்படி அழுதிட்டு இருக்க முதல்ல சொல்லுடி, என்ன பிரச்சினைனு” என்று சொல்லுடி என்றாள்.
அதற்கு கீர்த்தனா, ” மோனி உனக்கு தெரியும்ல நான் ராகேஷை எவ்வளவு லவ் பண்றேன்னு. அவனும் ஆரம்பத்துல என்னோட லவ்வை ஏத்துக்கல, ஆனால் அப்புறம் ஏத்துக்கிட்டான். ரெண்டு வருஷமா எவ்வளவு டீப்பா லவ் பண்ணோம், இப்போ ராகேஷோட அம்மா, அவங்க தம்பி பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்றாங்க. வீட்டில இருக்கிறவங்க எல்லோரும் ராகேஷ்க்கும் அந்த பொண்ணுக்கும் கல்யாணம் பண்ண முடிவெடுத்துட்டாங்க. ராகேஷூம் அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கப் போறதா சொல்றான்டி. எனக்கு என்ன பண்ணணும்னு தெரியலை. ” என்று அழுதாள்.
இதைக் கேட்ட மோனிஷாவுக்கு உடனே சபாபதியின் ஞாபகம் வந்தது. அதை விட்டு அழும் தோழியை சமாதானப் படுத்தினாள். அவளோ அழுது கொண்டு,” இல்லை மோனி, நீ என்ன சொன்னாலும் என்னோட மனசு ஏத்துக்குது இல்லை. வீட்டில உள்ளவங்க எது சொன்னாலும் அவன் கேட்கணுமா? அப்படினா என்னை லவ் பண்ணது பொய்யா?” என்று எதிர் கேள்வி கேட்டாள்.
மோனிஷாவிற்கு அவள் பக்கம் நியாயம் இருப்பதாகப் பட்டது. “கீத்து நாளைக்கு நான் ஊருக்கு போறன். போயிட்டு வந்ததும் வா நாம ரெண்டு பேரும் போய் அந்த ராகேஷை ஒரு வழி பண்ணிட்டு வந்திடலாம். “என்று மோனிஷா சொன்ன பின்னரே கீர்த்தனா சமாதானமாகி போனை வைத்தாள்.
கீர்த்தனா நன்றாக மோனிஷாவை குழப்பி விட்டாள். மோனிஷாக்கு எங்கே கீத்துவை ராகேஷ் ஏமாத்திட்டு, வீட்டில சொன்னாங்கன்னு வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்க தயாராக இருப்பதைப் போல எங்கே சபாபதியும் தன்னை ஏமாற்றி விடுவானோ என்ற பயம் மேலும் அதிகரித்தது. “சபா நீ என்னை ஏமாத்தினா, கீத்துவைப் போல அழுதிட்டு இருக்க மாட்டேன். எனக்கு பிடிச்சதை எப்படி எடுத்துக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும்.” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டாள்.
முகேஷ் தனது அறையில் குடித்துக் கொண்டு இருந்தவன் காளையனைப் பற்றி எதுவும் தெரியாமல், அவனை மிரட்ட நினைத்து போன் பண்ணினான். நெஞ்சில் தன்னவளை சுமந்து கொண்டு, அவளை பழையபடி மீட்டெடுக்க என்ன செய்யலாம்? என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
அப்போது அவனது பாக்கெட்டில் இருந்த போன் அடித்தது. அதில் தூக்கம் கலைந்த மலர்னிகாவை தட்டிக் கொடுத்து விட்டு, போனை எடுத்தான்.
“ஹலோ யாருங்க?” என்றான். அதற்கு மறுபக்கம் இருந்த முகேஷ், “நான்தான் சொன்னேன்ல என்னைப் பற்றி நீ தெரிஞ்சிக்க தகுதியில்லாதவன்னு.
நான் அனுப்பின அந்த வீடியோவை பார்த்ததுக்கு பிறகும் அவளோட கழுத்தில தாலி கட்டிருக்கனா, உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? நான் சொன்னதை நீ மறந்துட்டியா? நீ அவளை கல்யாணம் பண்ணினா, அந்த வீடியோவை, இல்லை…. இல்லை உன்னோட பொண்டாட்டியோட வீடியோவை வீட்டில உள்ளவங்களுக்கு அனுப்பி வைப்பேன்னு சொன்னதை மறந்துட்டியா? “என்றான்.
அதற்கு சிரித்துக் கொண்ட காளையன்,” என்னோட குடும்பத்தைப் பற்றி எனக்கு தெரியும். அவங்க மலரை…. இல்லை நீ சொன்ன மாதிரி என்னோட பொண்டாட்டியை தப்பா நினைக்க வாய்ப்பே இல்லை. அவங்க நிச்சயம் நடந்ததை புரிஞ்சிப்பாங்க “என்றான் தைரியமாக.
“என்ன தைரியம் காளையன், சரி உன்னோட குடும்பத்து மேல நீ வச்சிருக்கிற நினைப்பு சரியானதானு பார்க்கலாம். “என்றவன் போனை கட் பண்ணி விட்டான். காளையனுக்கு ஒருபக்கம் பயமாக இருந்தது. அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைத்துப் பயந்தான். ஆனால் என்ன நடந்தாலும் பரவாயில்லை. மலர்னிகா பக்கம் எந்த தப்பும் இல்லை. அதனால் அவள் பக்கம்தான் இருக்க வேண்டும். அவளை எந்த நிலையிலும் கைவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டான்.
அதே நேரத்தில் கூடத்தில் இருந்த ராமச்சந்திரன், தேவச்சந்திரன், குணவதி, நேசவதி, விசாகம், பெருந்தேவனார், துர்க்கா இவர்கள் மூவரின் போனிலும் ஒரே நேரத்தில் மெசேஜ் வந்த சத்தம் கேட்டது.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊