காளையன் வழமை போல நெல்லை மில்லுக்கு கொண்டு போவதற்காக மூட்டைகளை எண்ணி ஏற்றிக் கொண்டு இருந்தான். அப்போது அங்கிருந்த மூட்டைகளை விட ஒரு மூட்டை மட்டும் கொஞ்சம் சின்னதாக இருந்தது. காளையனுக்கு சந்தேகம் வர, கதிரிடம் அந்த மூட்டையை கீழே இறக்கச் சொன்னான்.
அங்கிருந்த சிறிய கத்தி ஒன்றை எடுத்து அந்த மூட்டையை குத்தினான். அதில் இருந்து நெல்மணிகள் விழுந்தன. பின் வேறு ஒரு இடத்தில் குத்தினான். அதில் இருந்து போதைப் பொருளான கஞ்சா விழுந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.
அவன் அருகில் நின்றிருந்த கதிர், “அண்ணே, இது என்ன….? பார்க்க கஞ்சா போல இருக்கு. இது எப்பிடி அண்ணே நம்ம நெல்லு மூட்டைக்குள்ள வந்திச்சு….?” என படபடப்புடன் கேட்டான். அதற்கு காளையன், “எனக்கும் அதுதான் தெரியலை கதிர், நீ இதை யாருக்கிட்டையும் சொல்லாத. இந்த நெல்லு மூட்டையை கட்டினவங்களுக்கு சாயந்தரம் கூலி கொடுக்கும் போது பார்த்துக்கலாம். இதை எடுத்திட்டு போய் காட்டில போட்டுத்து வந்திடு….” என்றான். கதிரும் சரி என்று அதை எடுத்துக் கொண்டு சென்றான்.
காளையன் யோசனையில் இருந்தான். இதை யாரு செய்திருப்பார்கள் என்று. பின் மீதி மூட்டைகளை ஏற்றி மில்லுக்கு அனுப்பி வைத்தான். குணவதி வந்து அவனை சாப்பிட கூப்பிட உள்ளே சென்றான். யோசனையோடு சாப்பிடாமல் தட்டில் கோலம் போட்டுக் கொண்டு இருந்தவன் தலையில் தட்டினார் நேசமதி. “ஏன் மதி சாப்பிடுற பிள்ளை தலையில தட்டுற…..?” என்று கேட்டவாறு வந்தார் விசாகம்.
அவரிடம் நேசமதி, “பாருங்க அத்தை, சாப்பிடாமல் ஏதோ யோசனையில தட்டில் கோலம் போட்டுட்டு இருக்கிறான்…..” என்றார். அப்போதுதான் விசாகம் காளையனின் தட்டைப் பார்க்க, அவன் செய்து கொண்டிருந்தது தெரிந்தது. சிரித்துக் கொண்டவர், தட்டை எடுத்தார். அப்போதுதான் காளையன் நிமிர்ந்து பார்க்க, அங்கே நேசமதி முறைப்போடும், விசாகம் சிரித்துக் கொண்டும் இருப்பதைப் பார்த்தான்.
விசாகம் தனது கையால் அவனது தலையை தடவிக் கொண்டு, “என் ராசாக்கு என்ன யோசனை? எல்லாம் சரியாகிடும்.. முதல்ல சாப்பிடு,” என்றவர் அவனுக்கு தனது கையாலே சாப்பாட்டை எடுத்து ஊட்டி விட, அவனும் வாங்கிக் கொண்டான். “நீயும் உன்னோட அப்பனை மாதிரித்தான்.அவனும் இப்பிடித்தான். ஏதாச்சும் யோசிச்சிட்டு இருந்தா, சரியாக சாப்பிட மாட்டான்…” என சொன்னார்.
உடனே காளையன், “அப்பா, பெரியப்பா ரெண்டு பேரும் எங்க….?” என கேட்க, குணவதி “அவங்க ரெண்டு பேரும் ரைஸ் மில்லுக்கு போயிருக்கிறாங்க…..” என்றார். அதற்கு காளையன், “பாட்டி சாப்பாடு போதும்….” என்றவன் தண்ணீர் கூட குடிக்காமல் வெளியே வந்து வண்டியை எடுத்தான். சரியாக அந்த நேரத்தில் காளையன் சொன்னதை செய்து விட்டு, வந்தான் கதிர். கதிரையும் தன்னுடன் சேர்த்து கூட்டிக் கொண்டு ரைஸ் மில்லுக்குச் சென்றான்.
மலர்னிகாவை நார்மல் வார்ட்டுக்கு மாற்றியதும், அவளைப் பார்க்க உள்ளே சென்றனர் துர்க்கா, வள்ளி மற்றும் நிஷா. அங்கே கட்டிலில் தலை, கை கால்களில் கட்டுடன் படுத்திருந்தாள் பிஸ்னஸ் சாம்ராஜ்யத்தை ஆளும் சிங்கப் பெண். அவளின் நிலையை பார்த்த பெற்றவளுக்கு பெற்ற வயிறு துடித்தது.
மெல்ல அவளருகில் சென்ற காயம் படாத விரல்களை பிடித்தார் துர்க்கா. “கடவுளே என் பொண்ணுக்கு இன்னும் எவ்வளவு கஸ்டத்தை கொடுப்ப நீ……? அவளோட வயசுப் பொண்ணுங்க எல்லாம் எப்படி எப்பிடியோ சந்தோசமா இருக்கு. இவ என்னனா இயந்திரம் மாதிரி ஓடிட்டே இருக்கா…. இப்போ இவளோட உயிருக்கும் ஆபத்து வந்திடுச்சே..” என்று அழுதார்.
நிஷா, “மேடம் கவலைப்படாதீங்க. நம்மளோட மேடத்துக்கு எதுவும் ஆகாது….. அவங்க ரொம்ப தைரியமானவங்க…” என்று தேற்றினாள். அப்போது மெல்ல தனது கண்களைத் திறந்தாள் மலர்னிகா. “அம்மா….” என்றாள்.
“என்னை ரொம்ப பதட்டப்பட வைச்சிட்டியே தங்கம்…..” என்றவரைப் பார்த்து சிரித்தவள், “எனக்கு ஒண்ணும் இல்லை. ஐ ஆம் ஆல் ரைட்….” என்றாள். பின் டாக்டர் வந்து செக் பண்ணி விட்டு ரெண்டு நாள்ல வீட்டிற்கு போகலாம் என்றார்.
துர்க்காவும் வள்ளியும் மலர்னிகாவிற்கு உடையும் சாப்பாடும் எடுத்து வருவதற்கு வீட்டிற்கு செல்ல, நிஷா அவளுடன் இருந்தாள். அப்போது அங்கே விபத்து பற்றி விசாரிக்க போலிஸ் வந்தனர்.
அவளிடம் நலன் விசாரித்து விட்டு, “மேடம் உங்களுக்கு நடந்தது விபத்தா….? இல்லை திட்டமிடப்பட்ட கொலை முயற்சியா….?” என்று கேட்டனர். அதற்கு மலர்னிகா, “என்னால என்னனு சொல்ல முடியலை சார்…. வேகமாக வந்த லாரி கார்ல மோதிச்சு…. இதுதான் நடந்திச்சி சார்…” என்றாள்.
அதற்க்கு போலிஸ், “உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா….?” என கேட்க, அதற்கு நிஷா பேச வர அவளது கையைப் பிடித்து தடுத்த, மலர்னிகா “இல்லை சார்…. எனக்கு யார் மேலயும் சந்தேகம் இல்லை. இதை ஆக்ஸிடெண்ட்டாவே முடிச்சிடுங்க…” என்று சொன்னதும், அவர்களும் மேலும் எதுவும் பேசாமல், அவளிடம் ஒரு சைன் வாங்கிக் கொண்டு சென்று விட்டனர்.
அவர்களு சென்றதும் “ஏன் மேடம் என்னை தடுத்திட்டீங்க….? இதுக்கு நிச்சயமா அந்த முகேஷ் தான் காரணமா இருப்பான். நேற்று டென்டர் நமக்கு கிடைச்சதாலதான் இப்படி பண்ணியிருப்பான்….” என்று கோபப்பட்டாள்.
கதிருடன் தனது புல்லட்டில் வேகமாக ரைஸ் மில்லுக்கு வந்து கொண்டிருந்தான் காளையன். அங்கே ராமச்சந்திரனும், தேவச்சந்திரனும் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். காளையன் அனுப்பி வைத்த நெல் மூட்டைகளை வேலை செய்பவர்கள் சிலர், மில்லின் ஒரு பக்கத்தில் அடுக்கிக் கொண்டு இருந்தனர்.
வேகமாக அவர்களிடம் வந்தான் காளையன். “அப்பா, பெரியப்பா நீங்க நல்லா இருக்கிறீங்கல….?” என்றான். அதற்கு அவர்கள், “காளையா என்னப்பா….? எதுக்கு இவ்வளவு பதட்டமா வர்ற….? நாங்க நல்லாத்தான் இருக்கிறம்….” என்றனர்.
அவர்களிடம் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு, “இன்னைக்கு காலையில ஏதும் லோட் வந்ததா…?” என்று கேட்டான். அவர்களும்,” ஆமா காளையா. பக்கத்து ஊர்ல இருந்து நெல்லு மூடைகளை வந்திருக்கு. அதை அண்ணாச்சி கடைக்கு அனுப்பணும்….” என்று ராமச்சந்திரன் சொன்னார்.
உடனே காளையன் கதிரை அழைத்துக் கொண்டு போய் அந்த மூடைகளை செக் பண்ணிக் கொண்டு இருந்தான். அவன் நினைத்த மாதிரியே ஒரு மூட்டையில் கஞ்சா இருந்தது. “என்ன அண்ணே இது….?” என்ற கதிருக்கு, “டேய் யாரோ பிளான் பண்ணி இதை செய்றாங்க…. முதல்ல இதை இங்கிருந்து அப்புறப்படுத்திடு…” என்றான். கதிரும் வேகமாக அந்த மூட்டையை எடுத்துக் கொண்டு பின் பக்க வழியாக சென்றுவிட்டான்.
இங்கே என்ன நடக்குது என்ற ரீதியில் பார்த்துக் கொண்டு இருந்தவர்களிடம் காளையன் பேச வருவதற்குள், ஒரு வேலையாள் ஓடி வந்து சொன்னதைக் கேட்ட, ராமச்சந்திரனும் தேவச்சந்திரனும் அதிர்ச்சி அடைந்தனர்….
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊