பார்வதியும் வேலுச்சாமியும் அன்னத்தை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தனர். வெளியே இருந்து பார்வதி, “கிருத்திஷ்.. கிருத்திஷ்..” என்று கூப்பிட, அவன் வெளியே வந்தான்.
“கண்ணா, நீ இங்க வந்து அன்னம் கூட இரு.. நான் போய் ஆர்த்தி எடுத்துட்டு வரேன். கல்யாணமாகி முதல் முதல்ல நம்ம வீட்டுக்கு வர்றா. அப்போ தனியா வர்றது சரியில்ல..” என்றார்.
கிருத்திஷ் எதுவும் பேசாமல் அன்னத்தின் அருகில் வந்து நின்றான். பார்வதியும் தனது மருமகளுக்கும் மகனுக்கும் சேர்த்து ஆர்த்தி எடுத்து உள்ளே அழைத்தார். இருவரும் வலது காலை எடுத்து வைத்து வீட்டிற்குள் சென்றனர். வேலுச்சாமி அவர்களுடன் வந்தார். பார்வதி, அன்னத்தை அழைத்துக் கொண்டு பூஜை அறைக்குச் சென்றார். அவளும் விளக்கேற்றி சாமியைக் கும்பிட்டாள்.
பார்வதி வேலுச்சாமியிடம், “அண்ணன் நைட்டுக்கு உரிய சடங்க பாக்கணும்.. யோசியரை வரச் சொல்லுங்க.” என்றார். உடனே கிருத்திஷ், “இங்க பாருங்க அம்மா ஏதோ கல்யாணம் திடீர்னு நடந்துடுச்சு.. மத்ததெல்லாம் இப்பவே நடக்கணும்னு இல்ல.. எனக்கு கொஞ்சம் டைம் வேணும்..” என்றவன் அங்கிருந்து அவனது அறைக்குள் சென்று விட்டான்.
“என்ன அண்ணே, இப்பிடி சொல்லிட்டு போயிட்டான்.. நீங்க எதுவும் பேசாம அமைதியாக இருக்கீங்க..” என்று கேட்க, வேலுச்சாமி பார்வதியிடம்,
“பார்வதி மாப்ள சொல்றதும் சரிதான்.. என் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சதே எனக்கு போதும்.. எது எது எப்பப்போ நடக்கணுமோ அது அப்போ நடக்கும்.. சரி நீ இந்த கல்யாண விஷயத்தை மாப்பிள்ளைக்கு போன் போட்டு சொல்லு..” என்றார்.
உடனே பார்வதி, “ஆமா அண்ணே. இன்னும் அவர்க்கிட்ட இதை பற்றி சொல்லல.. சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவாரு.. நான் அப்புறமா கால் பண்ணி சொல்றேன்..” என்றார்.
“சரிம்மா அப்போ நான் போயிட்டு வரேன்..”என்றதும் அன்னம் தந்தையிடம் வந்து, “அப்பா..” என்றாள்.
தன்னிடம் வந்த மகளின் தலையை வருடி விட்டவர், “கண்ணு நம்ம வீட்ல எப்படி இருந்தியோ அப்படி இங்க இருக்க முடியாது.. பொறுப்புக்கள் நிறைய இருக்கும் பார்த்து எல்லாத்தையும் சூதனமா நடந்துக்க.. மாப்பிள்ளை கோபப்பட்டா அமைதியா இரு..” என்றார்.
உடனே, “சரிங்க அப்பா.. நான் உங்களுக்கு சாப்பாடு இங்கிருந்தே சமைச்சு கொடுக்கிறேன்பா..” என்றாள்.
வேலுச்சாமியும் மகளிடம் மறுப்பு சொல்லாமல், “சரிமா உன் இஷ்டப்படி செய்..” என்று சொல்லிவிட்டு பார்வதியிடம், “அன்னத்தை பாத்துக்க வேண்டியது உன் பொறுப்பு பார்வதி..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அன்னம் ஒரு பக்கமாக உட்கார்ந்து கொள்ள, பார்வதி அவளின் அருகில் வந்து, “அன்னம் என் பையன் படிச்சிட்டு அவனே ஒரு கம்பனியை ஆரம்பிச்சான். கடவுள் அருளால அது நல்லபடியா போயிட்டு இருக்கு.. அமெரிக்கால இருந்தாலும் நம்மட கலாச்சாரத்தை என்னைக்குமே மறந்ததே இல்லை. பொண்ணுங்கனா தள்ளித்தான் நிற்பான். கோபம் வந்தா அந்த விசுவாமித்திரரையே மிஞ்சிடுவான்.. ஆனால் பாசக்காரன். என்ன அவனோட பாசத்தை வெளிப்படுத்த தெரியாது.. எப்பவும் இறுக்கமாக இருந்திட்டான்.. நீ அவனைப் பார்த்து பயப்படாத. உன்னை நிச்சயம் ரொம்ப நல்லா பாத்துப்பான்.. போமா போய் என் பையன் கூட பேசு..” என்றார். அதற்கு அன்னமோ, “இல்லத்த எனக்கு மாமா கூட பேச பயமா இருக்கு..” என்றதற்கு பார்வதியோ, “நான் தான் சொன்னேனே அன்னம் என் பையன் கோபக்காரன்தான் ஆனா பொண்ணுங்கள மதிக்கிறவன்.. ஒன்னும் பயப்படாதே எப்படியும் ரெண்டுபேரும் பேசித்தானே ஆகணும் போ.. அப்போதான் நீங்க ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்க முடியும்..” என்று அவளை அனுப்பி விட்டு பார்வதி ரோகித்துக்கும் ஜனகனுக்கும் விஷயத்தை சொல்ல போன் எடுத்தார்.
அன்னமோ அவனின் அறை வரை சென்று விட்டு உள்ளே செல்லாமல் தயக்கத்துடன் வெளியே நிற்க, கிருத்திஷ் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டு இருந்தான். கீபோர்ட்டில் நடனம் ஆடிக் கொண்டிருந்த கிருத்திஷன் கைவிரல்கள் சற்று நின்றன. கண்களை நிமிர்த்தி பார்க்க, அன்னம் வாசலில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.
“ஏன் அங்கேயே நிற்கிற உள்ள வா..” என்றான். அன்னமும், “சரிங்க மாமா..” என்று உள்ளே வந்தாள். உள்ளே வந்தவளை, “உட்காரு..” என்றதும் எங்கு அமர்வது என்று தெரியாமல் இருக்க, “இங்கே உக்காரு..” என்று அவன் தனக்கு அருகில் இருந்த இடத்தை காட்ட அந்த சோபாவில் கிருத்திஷ் அருகில் அமர்ந்தாள்.
…………………………………………………
பெரிய கண்ணாடி ஜன்னல் வழியே இரவு நேர விளக்குகள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. சீரியஸான முகத்தோடு லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் ஜனகன். அருகே சோபாவில், ஹெட்போன் போட்டு பாட்டுக் கேட்டுக் கொண்டு காபி குடித்துக் கொண்டிருந்தான் ரோகித்.
பார்வதியின் அழைப்பு வந்ததும், ரோகித் சிரிப்போடு போனை எடுத்தான்.
“ஹாய் அம்மா, என்ன இந்த டைம்ல கால் பண்ணுறீங்க? ஏதாவது பிரேக்கிங் நியூஸா?”
பார்வதியின் குரல் நடுங்கியது.
“சின்னு… உன் அண்ணன்… கிருத்திஷ்…”
“அம்மா என்ன உங்க வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு.. அண்ணாக்கு என்ன?” என்று ரோகித் பதற, அருகில் இருந்த ஜனகன் போனை வாங்கி ஸ்பீக்கரில் போட்டார்.
“பாரு என் பையனுக்கு என்ன?” என்றார்.
“அவனுக்கு… அவனுக்கு கல்யாணம் நடந்திடுச்சி..” என்றார்.
அந்த ஒரு வாக்கியமே வீடு முழுக்க அமைதியை பிளந்தது.
“என்ன அண்ணாக்கு கல்யாணம் நடந்திடுச்சா?” என்று ரோகித் கத்தினான். அவனது கையில் இருந்த காபி கப் தரையில் விழுந்து உடைந்தது.
ஜனகன் நாற்காலியில் இருந்து எழுந்து, “பார்வதி, நீ சொல்றது உண்மையா? எங்க, எப்ப, யாரோட கல்யாணம்? எங்கிட்ட சொல்லாம பேசாம?” என்று கோபத்துடன் கேட்டார்.
“பஞ்சாயத்துல… அன்னத்தை…”
“அன்னமா?” என்ற ரோகித் வாயை மூடிக்கொண்டு சிரித்தவன்,
“சூப்பர் ட்விஸ்ட்! ‘மாமா’ன்னு அழைச்சுட்டு வந்தவளே… அவனோட மனைவி ஆயிட்டாளா?” என்றான்.
பார்வதியின் குரல் கலங்கியது.
“என்ன பண்ணுறது? கிராமத்தில பேச்சு வந்திட்டு. அன்னம் ரொம்ப பாவம்ங்க.. அவளுக்கு வீணாக ஒரு பழி வரக்கூடாது. நம்ம பையனையும் தப்பா பேசிட்டாங்க..” என்றவர் நடந்ததை சொன்னார்.
பார்வதி சொன்னதைக் கேட்ட ஜனகனின் கண்கள் சுருங்கின.
“கிருத்திஷ் எப்போதும் முடிவு பண்ணினா, பின்வாங்க மாட்டான். ஆனா பார்வதி, கல்யாணம் மாதிரி விஷயத்தில எப்படியெல்லாம் அவசரமா நடந்துகிட்டான்னு புரியல.. எனக்கு தெரிஞ்சி அங்க இருக்கிறவங்க சொன்னதால மட்டும் கிருத்திஷ் அன்னத்தை கல்யாணம் பண்ணியிருக்க மாட்டான். அவனுக்கு புடிச்சதால மட்டும்தான் கல்யாணம் பண்ணியிருக்கிறான்..” என்றார்.
ரோகித் சிரித்தபடி, “அப்பா, உங்க சீரியஸ் பையன் லைஃப்ல லவ் டிராமா ஆரம்பிச்சுட்டுச்சு. சீக்கிரம் இந்தியா போகணும். இங்க இருந்து பார்த்தா எதுவும் புரியாது.” என்று அவன் கிருத்திஷை கலாய்க்க ஆரம்பித்தான். பின்னர் மூவரும் சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தனர்.
…………………………………………………அன்னம் கிருத்திஷ் அருகில் அமைதியாகவே இருந்தாள். கிருத்திஷ் வேலையிலேயே கவனமாக இருந்தான். அன்னம் நடந்த எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு மூச்சு எடுக்க முடியாமல். போனது. கை நடுங்க ஆரம்பித்தது. ஒரு மாதிரியாக இருக்க, “அம்மா…” என்று கூப்பிட நினைத்தாள், ஆனால் குரல் வெளியில் வரவில்லை. அவள் அப்படியே கிருத்திஷில் சாய்ந்தாள்.
“அன்னம்.. என்னாச்சு உனக்கு?” என்று அவசரமாய் தனது லேப்டாப்பை கீழே வைத்து விட்டு அவளை தனது மடியில் தாங்கினான்.
அன்னத்தின் முகம் சிவந்து, வியர்வை வழிந்தது.
“இங்க பாரு அன்னம் உனக்கு ஒண்ணுமில்லை..” என்று கிருத்திஷ் அவளது முகத்தை தடவியபடி சொன்னான்.
“மாமா… மாமா..”என்று சொன்னாள்.
கிருத்திஷின் முகம் பாறை போல இருந்தாலும் கண்களில் அக்கறை ஒளிந்தது.
“ஒண்ணும் இல்லை அன்னம்.. நடந்ததை நினைக்காத.. நான் இருக்கேன். உனக்கு எதுவும் ஆகாது.”
என்று மெல்ல அவளது சில்லிட்டிருந்த கையை வருடி விட்டான். அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளுக்கு தண்ணீர் குடிக்க கொடுத்தான். கொஞ்ச நேரத்தில் அன்னம் ஆசுவாசமடைந்நாள்.
“உனக்கு ஏன் இப்படியாச்சு?” என்று கேட்டான்.
“பதட்டம் வந்தாலே இப்படியாகிடும்.. இது அதிகமான வலிப்பு வந்திடும்.. சின்ன வயசிலிருந்து இப்பிடித்தான் மாமா…” என்று அவள் மெதுவாகச் சொன்னாள்.
“அப்படியென்றால் நான் எப்போதும் கவனமா இருக்கணும்,” என்றான்.
அன்னம் அவனைப் பார்த்தாள். ஒரு பக்கம் வெட்கம், இன்னொரு பக்கம் குழப்பம். “இவரோட முகம் எப்போதும் இறுக்கமாக இருக்கு.. குரலும் ஆணையிடுவது போல இருக்கு.. ஆனா அதை கேட்கும் போது எனக்கு புதுசா ஒரு உணர்வு வருதே…” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.
…………………………………………………
பார்வதியிடம் பேசி விட்டு தனது அறைக்கு வந்த ரோகித் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். தலையை குஷனில் புதைத்தபடி சிரித்தான்.
“அட, என் பிக் ப்ரதர் கல்யாணம் பண்ணிட்டாரு.. எவ்வளவு சந்தோஷமா இருக்கு இதை முதல்ல இராக்கிட்ட சொல்லணும்..” என்று அவன் நினைக்கும் போதே, அவனது போனில் இராவிடம் இருந்து மெசேஜ் வந்தது.
“ஹாய் சீனியர்..” என்ற மெசேஜை பார்த்த ரோகித் சிரித்துக்கொண்டு போன் செய்தான், அதை ஒரே ரிங்கில் எடுத்தாள் இரா. “ஹாய் ஸ்வீட்டி.. உனக்கு ஒரு ஷாக்கிங்கான நியூஸ் சொல்லப்போறேன்..”
“வாட் ஷாக்கிங்கான நியூஸா? என்ன நியூஸ் சீனியர்?”
“என் அண்ணனுக்கு மேரேஜ் ஆகிடுச்சு..”
“என்ன சீனியர் சொல்றீங்க? உங்க அண்ணனுக்கு கல்யாணமாகிடிச்சா? ஏன் யாருக்கும் சொல்லல?”என்றாள். அதற்கு அவனும், “அட நீ வேற ஸ்வீட்டி. அவன் கல்யாணம் இந்தியால நடந்திச்சி..” என்றவன் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான்.
“சீனியர் எனக்கு ஏதோ சீரியல் கதை கேக்கிற மாதிரி இருக்கு.”
“அம்மா இந்த விஷயத்தை சொல்லும் போது செம ஷாக்கா இருந்திச்சு..” என்றவனின் பேச்சு மெல்ல காதல் பேச்சாக மாற ஆரம்பித்தது.
…………………………………………………
இரவு வேலுச்சாமியை இவர்களுடனே சாப்பிட அழைத்திருந்தார் பார்வதி. எனவே நால்வரும் ஒன்றாக சேர்ந்து பேசிக் கொண்டு சாப்பிட்டனர். கிருத்திஷ் மட்டும் கேட்கும் கேள்விகளுக்கு மாத்திரம் பதில் சொல்லிக் கொண்டு இருந்தான். சாப்பிட்டு முடிந்ததும் சிறிது நேரம் இருந்து விட்டு வேலுச்சாமி சென்று விட்டார். பார்வதி சமையலறையில் வேலை செய்து கொண்டிருக்க, அவருக்கு உதவியாக இருந்தாள் அன்னம். கிருத்திஷ் லேப்டாப்பை எடுத்துக் கொண்டு வேலையை ஆரம்பித்துவிட்டான். சமையலறையில் இருந்த அன்னம் பார்வதியிடம், “அத்தை நான் ஒண்ணு கேக்கட்டுமா?”
“என்ன அன்னம் இப்படி கேக்கிற. நீ என்ன வேணும்னாலும் கேக்கலாம்..”என்றார்.
“ஏன் அத்தை மாமா எப்போ பார்த்தாலும் அந்த லேப்டாப்பிலேயே வேலை பார்த்திட்டு இருப்பாங்களா? கொஞ்ச நேரம் கூட சும்மா இருக்க மாட்டாங்களா?”என்றாள். இதைக் கேட்ட பார்வதிக்கு சிரிப்பு வந்தது.
“அன்னம் நல்லா கேட்ட போ.. அவன் எப்பவும் அதிலேதான் வேலை செய்திட்டு இருப்பான். அங்கேயும் இப்பிடித்தான். இதைப் பார்த்து பார்த்து எங்களுக்கு பழகிடிச்சு.. போகப் போக உனக்கும் பழகிடும்..” என்றவர். அவள் கையில் பால் க்ளாஸை கொடுத்தார்.
“அன்னம் இதை அவனுக்கு கொடுத்திட்டு அந்த அறையிலே நீயும் தூங்கு..”
“அத்தை மாமா எதுனா சொன்னா என்ன பண்றது?”
“அதெல்லாம் ஒண்ணும் சொல்லமாட்டான் நீ போ.” என்றார். அவளும் தலையையாட்டி விட்டு சென்றாள்.