வீரேந்திர ப்ரசாத் ஸ்டேஷனுக்கு சென்று, அங்கிருந்த ஒரு கான்ஸ்டபிளை அழைத்து, “இங்க பாருங்க இந்த ஸ்கூட்டி யாரோடதுனு விசாரிச்சி உடனே கொடுத்துட்டு வாங்க…. அந்த வண்டியில பாருங்க ஆர்சி புக் ஏதும் இருக்கும் இருந்தா அதுல அட்ரஸ் போட்டு இருப்பாங்க அத உரியவங்ககிட்ட சேர்த்துட்டு வந்துடுங்க….” என்று ஸ்கூட்டி சாவியை அவரிடம் கொடுத்தான்.
“சரிங்க சார் நான் கொடுத்துடறேன்… சார் அப்புறம் உள்ள….” என்று இழுத்தார்.
“அத நான் பாத்துக்குறேன்… நீங்க போயிட்டு வாங்க…” என்று அவரை அனுப்பி விட்டு உள்ளே சென்றான் வீரா.
அங்கே காலுக்கு மேல் கால் போட்டபடி வெள்ளை வேஷ்டி சட்டையில் அமர்ந்திருந்தார் கன்னியப்பன். வீராவைப் பார்த்தும், “என்னை சிப்பி சார் என் பையன கோர்ட்ல நிறுத்தனும்னு ரொம்ப ஆசைப்பட்டீங்க போல இருக்கு…. என்ன பண்றது பாவம் நீங்க… உங்க ஆசை நிறைவேறவே இல்ல…. எப்படி என் பையனை வெளியில் கொண்டு வந்தேன் பாத்தியா…. அந்த ஐஜி உன் அப்பனாமே நேத்து தான் எனக்கு தெரிய வந்துச்சு…. அப்பனும் பையனும் சேர்ந்து டபுள் கேமா ஆடுறீங்க ஏன்கிட்ட…? என்னோட விளையாட்டு எப்படி இருக்கு….?” என்று கன்னியப்பன் பேசிக் கொண்டே சென்றார்.
“ஹலோ நீ வந்த விஷயத்த மட்டும் சொல்லு…. இந்த ஆட்டம் பாட்டமெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்…”
கன்னியப்பன் அவரின் லாயரிடம் கண்ணைக் காட்ட அவர் ஜாமினை வீராவிடம் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்த வீரா, “என்ன உன் பையனுக்கு நெஞ்சுவலின்னு போட்டு இருக்கு…. பாத்து பத்திரமா இருக்க சொல்லு உன் பையன… நெஞ்சு வலி அடிக்கடி வந்துடும்…. அப்புறம் ஒரேயடியா அல்ப்பாய்ஸ்ல டிக்கெட் வாங்கிட்டு போக வேண்டியதுதான்…..” என்றான்.
“என் பையன டிக்கெட் போடுறளவுக்கு நீ பெரிய ஆளா…. ஏதோ சொன்ன என் பையன ஜெயில்ல அடைப்பேன் அப்படின்னு…. உன்னால அதைப் பண்ண முடிஞ்சுதா இல்லல… அதுதான் உன்னோட இந்த காக்கிச் சட்டைக்கும் என்னோட இந்த வெள்ளை சட்டைக்கும் உள்ள வித்தியாசம்….”
“என்னடா பெரிய வெள்ளை சட்டை காக்கிச் சட்டை…. இந்த காக்கிச் சட்டை நினைச்சா உன் வெள்ளை சட்டையை அழுக்காகவும் முடியும்… அதே வெள்ளையாகவே வச்சிருக்கவும் முடியும்… நேர்மை இல்லாத உன்னாலதான்டா மக்களுக்கு அரசியல் மேலேயும் அரசியல்வாதிங்க மேலயும் நம்பிக்கை இல்லாம போயிடுச்சு… நீ யாரு உன் பையன் யாருனு இந்த உலகத்துக்கு நிரூபிக்கல நான் வீரேந்திர ப்ரசாத் இல்லடா….”
“ஓ இந்த கன்னியப்பன் கிட்டேயே சவாலா தம்பி…. எனக்கு சவால்னா ரொம்ப பிடிக்கும்…. உன்னோட இந்த சவால நான் ஏத்துக்குறேன்…. முடிஞ்சா எப்படிள முடிஞ்சா நான் யாரு…? என்ன பத்தின விஷயங்களை இந்த மக்களுக்கு சொல்லு பாக்கலாம்… அவங்க இதை நம்பவே மாட்டாங்க…. அதுக்கு முன்னாடி நீ அதை எல்லாம் கண்டுபிடிக்கிறதுக்குள்ள என்ன வேணாலும் நடக்கலாம்….”
“அப்பிடின்ற ஆனா அதையும் பாத்திடலாம்….” என்றான் வீரா. பின்னர் அங்கிருந்து தனது ஆட்களை அழைத்துக் கொண்டு சென்று விட்டார் கன்னியப்பன்.
வீரா சொன்ன மாதிரி அந்த ஸ்கூட்டியை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நினைத்த கான்ஸ்டபிள், ஸ்கூட்டியில் இருந்த ஆர்சி புக்கை எடுத்துப் பார்த்தார். அதில் அட்ரஸ் இருக்க, ‘நல்லவேளை ஆர்சி புக் இருந்துச்சு… இதுல இருக்கிற அட்ரஸ்ல ஸ்கூட்டியை கொண்டு குடுத்துட்டு வந்துடலாம்….’ என்று நினைத்துக் கொண்டு அந்த ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு ஸ்டேஷனில் இருந்து சென்றார்.
சுதர்ஷினியின் வீட்டின் முன்னால் சென்று ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்று சாவியை கொடுக்கலாம் என்று நினைக்கும் போது. வீரேந்திர பிரசாத்திடமிருந்து வாக்கிடாக்கி மூலம் அழைப்பு வந்தது.
“வெளியில இருக்கிற எல்லோரும் சீக்கிரமா ஸ்டேஷனுக்கு வாங்க வெரி அர்ஜென்ட்…” என்று சொன்னான். இதைக் கேட்ட கான்ஸ்டபிள், ‘சரி வீட்டுக்குள்ள போய் கீய கொடுத்து வர லேட்டாயிடும்…. பேசாம இங்க வச்சுட்டு போகலாம்…. அவங்க வரும்போது எடுத்துக்காட்டும்…’ என்றவர், ஸ்கூட்டியை அங்கேயே அப்படியே வைத்துவிட்டு அங்கிருந்த ஆட்டோ ஒன்றைப் பிடித்துச் சென்று விட்டார்.
சரவணன் குளித்துவிட்டு வந்ததும், “அப்பா இவ்வளவு நேரமா… சீக்கிரமா வாங்க அந்த போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணலாம்…. எனக்கு அவனை ரொம்ப நல்லா ஞாபகம் இருக்கு…. எங்க பாத்தாலும் எப்போ பாத்தாலும் அவனை கரெக்டா கண்டு பிடிச்சிடுவேன்….” என்று தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. இருக்காதா பின்ன எந்த ஸ்கூட்டியை காணவில்லை என்று ஸ்டேஷனுக்கு கம்பளைண்ட் பண்ணுவதற்கு தந்தையை அழைத்துக் கொண்டு செல்ல வந்தாளோ அந்த ஸ்கூட்டி அவர்கள் வீட்டு கேட்டின் முன்னால் நின்றது. உடனே தந்தையைப் பிடித்திருந்த கையை விட்டவள், ஸ்கூட்டியிடம் சென்றாள். அதை தொட்டுப் பார்த்தவள், பின்னர் நன்றாக சுற்றி வந்து பார்த்தாள் ஏதாவது உடைந்திருக்கா என்று.
எந்தவித சேதாரமும் இன்றி அவள் கொண்டு செல்லும் போது எப்படி இருந்ததோ அப்படியே திரும்பி வந்திருந்தது.
“அப்பா ஸ்கூட்டி கிடைச்சிடுச்சு…. நல்ல வேளைப்பா போலீஸ் ஸ்டேஷனுக்கு போகல….” என்றவள் தன் தாயை அழைத்தாள்.
“ஏய் எதுக்குடி இப்ப வெளியிலிருந்து இந்த கத்து கத்துற…? ரோட்ல போற வரவங்க எல்லாம் இங்க நின்னு வேடிக்கை பாக்கவா….?” என்றவாறு வெளியே வந்தவர், அங்கே ஸ்கூட்டியை பார்த்து, “நீ என்ன சொன்ன சுதர்… ஸ்கூட்டியை யாரோ திருடிட்டு போயிட்டதாதானே சொன்ன… ஆனா ஸ்கூட்டி இங்க நம்ம வீட்டு வாசல்ல நிக்குது….”
“ஆமாம்மா ஸ்கூட்டி எங்கிட்ட இருந்து புடுங்கிட்டு போனான்…. ஆனா இப்போ இங்க இப்படி வந்துச்சுன்னு தான் எனக்கு தெரியல….” என்றாள்.
அதற்கு சரவணன், “யாரும் அவசரத்துக்கு எடுத்துட்டு போய் இருக்கலாம் இல்ல மா…. உன்னோட ஆர்சி புக் இல்லன்னா லைசன்ஸ் ல இருக்கிற அட்ரஸ பார்த்து கொண்டு வச்சுட்டு போயிருக்கலாம்…. எப்படி இருந்த என்ன ஸ்கூட்டி கிடைச்சிடுச்சு இல்ல…”
“அப்பா அவசரம்னா என்கிட்ட கேட்டு வாங்க வேண்டியது தானே கேக்காம என்னைத் தள்ளி விட்டுட்டு வேற எடுத்துட்டு போனான்… அவனை எங்கேயாவது பார்த்தேன் தொலைச்சிடுவேன் தொலைச்சிட்டு…”
“சுதர் வீணா எந்த பிரச்சினைக்கெல்லாம் போகாத சுதர்… ஆமா இப்ப நீ காலேஜ் போறியா இல்லயா… என்ன பண்ணலாம்னு இருக்க….?”
“ஐயோ அம்மா அத மறந்தே போயிட்டேன்…. ப்ரின்சிப்பால் சாருக்கு நான் இன்பார்ம் கூட பண்ணல…. இருங்க நான் போய் மொதல்ல எங்க ப்ரின்சிப்பாலுக்கு கால் பண்ணிட்டு வரேன்….” என்று உள்ளே ஓடினாள்.
சிரித்துக் கொண்ட சரவணனைப் பார்த்த சுமதி, “ஏங்க நான் சொன்ன விஷயம் என்னாச்சு… தரகர்கிட்ட பேசினீங்களா….?”
“ம்ம்ம் பேசி இருக்கேன் சுமதி நல்ல சம்பந்தம் ஏதாவது வந்தா சொல்றேன்னு சொல்லி இருக்காரு….”
“சரிங்க எதுக்கும் ரெண்டு நாளைக்கு ஒரு தடவை அவருக்கு கால் பண்ணி பாருங்க….”
“நான் பாத்துக்குறேன் மா…” என்றார். இருவரும் உள்ளே வந்தார்கள். இங்கே போனில் பேசிக் கொண்டிருந்தாள் சுதர்ஷினி.
“சார் நெஜமா சார்…. காலைல நான் காலேஜ் வரும்போது ஸ்கூட்டிய ஒருத்தன் திருடிட்டு போயிட்டான்… இப்பதான் ஸ்கூட்டி கிடைச்சது… சார் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் லீவ் கொடுங்க சார் ப்ளீஸ்….”
மறுபக்கம் இருந்த ப்ரின்சிப்பால், “நேத்து தான் வந்து ஜாயின் பண்ணீங்க இன்னைக்கு லீவ் கேக்குறீங்க…?”
“சார் சார் ப்ளீஸ் சார்….”
“சரி இன்னைக்கு ஒரு நாள் மட்டும் உங்களுக்கு லீவு குடுக்கிறன்…. இதுக்கு அப்புறம் இப்படி எல்லாம் லீவ் எடுக்க கூடாது என்ன புரிஞ்சுதா….”
“நல்லாவே புரிஞ்சது சார் ரொம்ப நன்றி…”
“சரி சரி நான் போன வைக்கிறேன் நாளைக்கு வேலைக்கு வந்துடுங்க…” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார் ப்ரின்சிப்பால்.
‘இந்த வீணாப்போன ப்ரின்சிப்பால்கிட்ட இப்படி கெஞ்ச வச்ச அவனுக்கு இருக்கு… என்னைக்காவது ஒருநாள் கையில சிக்குவல அப்போ பாத்துக்கிறன் உன்னை…’ என மனசுக்குள் சபதம் போட்டுக் கொண்டாள்.
சாப்பாட்டு மேசையில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் ஐஜி விநாயக். அவருக்கு சாப்பாட்டை பரிமாறியபடி அருகில் நின்று கொண்டிருந்தார் சுபத்ரா.
“நீ இப்படி சொன்னனுதான் நான் அன்னைக்கி அவன்கிட்ட கேட்டேன் அவன் என்ன சொன்னான்னு தெரியும்ல…. இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருக்கான்…”
“ஏங்க அவன் அப்படித்தான் சொல்லுவான்… அதுக்காக நம்ம அப்படியே விட்டுட முடியுமா….? நமக்குத் தான் வீரா ஒத்த புள்ளையா போயிட்டான்… பேரன் பேத்தி பாக்கணும்னு எனக்கு ஆசையா இருக்குங்க…. ஏன் உங்களுக்கு மட்டும் அந்த ஆசை இல்லையா என்ன….?”
“அது எப்படிமா இல்லாம இருக்கும்…. எனக்கும் நம்ம பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைதான் எங்க அவன்தான் அந்த பேச்சு எடுத்தாலே கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருக்குறானே என்ன பண்றது….?”
“என்ன பண்றதுன்னா…. ஏங்க நீங்க ஐஜி தானே நீங்க சொன்னா வீரா கேட்கணும்ல்ல….”
“சுபா நான் ஐஜிதான் ஆனா அது போலீஸ் டிபார்ட்மெண்ட்ல…. வீட்ல நான் ஐஜி இல்ல அவனுக்கு அப்பா… நீ நினைக்கிற ஐஜியாலயே அவனை கண்ட்ரோல் பண்ண முடியாது….”
“இங்க பாருங்க நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது…. நம்ம வீராக்கு சீக்கிரமாவே கல்யாணம் பண்ணி வைக்கணும்….. அத நீங்க ஐஜியா இருந்து பண்ணாலும் சரிதான் இல்ல வீராவுக்கு அப்பாவா இருந்து பண்ணாலும் சரிதான்…. எனக்கு வீராவுக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைக்கணும் அவ்வளவுதான்….” என்றவர், விநாயக் கைகழுவிய தட்டை எடுத்துக்கொண்டு சமையலறைக்குச் சென்றார்.
‘இது என்னடா ஐஜிக்கு வந்த சோதனை….?’ என்று தலையில் அடித்துக் கொண்டவர், “சுபா டைமாச்சு என்ன பண்ற சீக்கிரமா வா….”
“இருங்க வந்துடுறேன்….” என்றவர் கையை கழுவிட்டு வெளியே வந்தார். அவர் நெற்றியில் ஒரு முத்தத்தை வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார் விநாயக். சுபத்ராவும் அவருடன் வாசல் வரை சென்று அவரை வழி அனுப்பி வைத்து விட்டு மீதி இருக்கும் வேலையைப் பார்க்க உள்ளே சென்றுவிட்டார்.
ஸ்டேஷனில் இருந்த எல்லோரையும் ஒன்றிணைத்த வீரா, பேச ஆரம்பித்தான். வீரேந்திர ப்ரசாதின் அருகே நின்றிருந்தான் பரத்.
“நான் உங்க எல்லாரையும் எதுக்கு இப்ப அவசரமா இங்க கூப்பிட்டுருக்கேன்னு உங்களுக்குத் தெரியுமா….? நம்மளோட கண்ட்ரோல்ல இருக்கிற அந்த காட்டுப் பகுதியில கள்ளச்சாராயம் காச்சுறதா இன்ஃபார்ம் வந்திருக்கு… அது மட்டும் இல்ல அந்த கள்ளச்சாராயத்தை குடிச்சி நிறையப் பேருக்கு உடம்பு சரியில்லாம போயிருக்கு… அது மட்டும் இல்ல அஞ்சு பேரு அந்த சாராயத்தை குடிச்சு இறந்திருக்காங்க…. அதனால நாம அந்த இடத்தை கண்டுபிடிக்கணும்…. அதுக்காக தான் இந்த அவசரமான மீட்டிங் இன்னைக்கே இப்பவே கிளம்புறோம்….” என்றான். உடனே பரத்,”போலாம் வீரா…. இந்த கள்ளச் சாராயத்தால இன்னும் பல பேரோட உயிர் போகாம இருக்கணும்னா அதை உடனே கண்டுபிடிச்சேயாகணும்….”