மின்சார பாவை-5

4.8
(9)

மின்சார பாவை-5

எங்கோ அடித்த ஹாரனில் சுய உணர்வுக்கு வந்த நகுலன், இருக்கும் இடம் உணர்ந்து, வெண்ணிலாவை சமாதானம் படுத்த முயன்றான்.

“ப்ச்! நிலா! இன்னும் குழந்தையாட்டமே இருக்க. முதல்ல அழறதை நிறுத்து. எதுக்கு அழற? உனக்கு என்ன பிரச்சினை? ஸ்பீக் அவுட். மனசுல உள்ள எதையும் சொல்லாமல் குப்பை மாதிரி சேர்த்துக்கிட்டே வந்தா, இப்படித் தான் அழுகை தான் வரும்.”என்று நகுலன் கண்டிக்க.

“எனக்கு என்ன பிரச்சினை? அப்படி எதுவும் இல்லை டா. உன்னைப் பார்த்த ஆனந்தத்துல வந்த ஆனந்தக் கண்ணீர்.” என்று அவனது தோளில் இருந்து நிமிர்ந்த வெண்ணிலா, வேகமாக முகத்தைத் துடைத்துக் கொண்டுக் கூற.

அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு முறைத்த நகுலன்,” நீ? என்னைப் பார்த்து ஆனந்தம் படுற?அதில கண்ணீர் வேற வருது? இத என்னை நம்ப வேற சொல்ற? என்னவோ கோபம் உன் மனசுல இருக்கு. உனக்கு சொல்ல விருப்பம் இல்லைன்னு தெரியுது. அதுக்காக இந்த கம்பி கட்டுற வேலை எல்லாம் வேண்டாம். நீ எப்போ சொல்லணும்னு நினைக்கிறியோ அப்ப சொல்லு. இப்போ வா கிளம்பலாம்.” என்று வேகமாக நடக்க.

“நீ தான் டா என் நண்பன்.” என்றவாறே அவள் எடுத்து வந்த ட்ராலி பேகை அவன் கையில் கொடுத்து விட்டு துள்ளலாக நடந்தாள் வெண்ணிலா.

‘டேய் நகுல்! நீ மாறவே இல்லை டா.’ என்று மனதிற்குள் அவனை மெச்சிக் கொண்டாள். ஆம் நகுலன் எப்போதும் அவளுக்கு தேவையான போது ஆறுதலாக இருப்பவன், அவள் சொல்ல விரும்பாத விஷயத்தை சொல்ல சொல்லி வற்புறுத்தாமல் விட்டு விடுபவன். அவளை நன்கு புரிந்தவனாக இப்போதும் இவள் சொல்ல தயாராக இல்லை என்று புரிந்து நடந்துக் கொள்ள . வெண்ணிலாவின் முகம் நண்பனை நினைத்து பெருமிதத்தில் விகசித்தது. அது அவளது நடையிலும் தெரிந்தது.

அவளை விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த யுகித்தின் முகத்திலோ சினம் பெருகியது.

அங்கு ஒருவன் அவளையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை அறியாமல் நகுலனோடு காரில் ஏறிச் சென்றாள் வெண்ணிலா.

**************

நகுலனின் வீடு காலை உணவின் போது அதகளப்பட்டது. இவர்களது அட்ராஸிட்டியில் நகுலனே திணறித்தான் போனான்.

 வெண்ணிலாவோ வால் இல்லாத குரங்கு போல் ஆட. அவளைப் பார்த்து ஆச்சரியப்பட்டார் நகுலனின் அம்மா. “ ஏம்மா வெண்ணிலா நிஜமாவே உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” என்று சந்தேகமாகக் கேட்டார்.

“என்னமா சந்தேகம்? மேடத்தைப் பாருங்க, குடும்பஸ்திரீயா நெத்தியில குங்குமத்தோடு வந்திருக்கிறதைப் பார்த்தா தெரியலையா?” என்று நகுலன் கிண்டலடிக்க.

“ அதான் டா எனக்கு சந்தேகத்துக்கு காரணமே.”

“எனக்கு மேரஜாகிடுச்சு. அதுல என்ன சந்தேகம் ஆன்ட்டி ?” என்று வெண்ணிலா குழப்பத்தோடு அவரைப் பார்க்க.

“இல்லை! கல்யாணத்துக்குப் பின்னாடி எல்லோரும் கொஞ்சம் மெச்சூர்டியா இருப்பாங்க. ஆனால் நீ இன்னும் மாறவே இல்லை. அப்போ பார்த்த மாதிரி அதோ குறும்போடயே இருக்கேன்னு கேட்டேன்.” என்று நகுலன் அம்மா விளக்கமளிக்க.

“ஆன்ட்டி கேட்குறது கரெக்ட் தான் நிலா. ஹரிஷ் கூட, தனியா இருக்கும் போது எப்படி வேணும்னாலும் இரு. அம்மா, அப்பா இருக்கும்போது கொஞ்சம் பார்த்து நடந்துக்கோன்னு தான் சொல்லுவான். அவனுக்கு என்னப் பத்தி நல்லா தெரியும் .ஆனா அவனே இப்படி சொல்லும் போது உங்க வீட்லயும் நீ உன் இயல்பெல்லாம் மூட்டைக்கட்டி வச்சுட்டு தானே இருந்திருப்ப. வீட்ல அமைதியா இருந்து, இருந்து என்னோட கேரக்டரே இப்ப மாறி போயிடுச்சு. ஆனால் நீ அப்போ பார்த்த மாதிரியே இருக்க நிலா.”என்று மஹதி கூற.

“நான் எங்க அம்…” என்று ஆரம்பித்த வெண்ணிலா, தலையை உலுக்கிக் கொண்டு, “ நான் கல்யாணத்துக்கு முன்னாடி இருந்ததை விட என்னோட மாமியார் வீட்ல தான் நான் சந்தோஷமா இருக்கேன்‌. என் மாமியாரும், நாத்தனாரும் ஃப்ரெண்ட்டு மாதிரி தான் பழகுவாங்க‌. அங்க நான் நானாக இருக்கேன். அந்த விதத்துல கடவுளுக்கு நன்றி தான் சொல்லணும்.”என்றுக் கூற

“”பரவால்ல! உங்க மாமியார் கிரேட். உன் ஹஸ்பெண்ட் எப்படி?” என்று சபரிகா வினவ.

“ அடேய் அப்ரசண்டிங்களா! விசாரணை கமிஷனை அப்புறம் வைங்க. நானும் எவ்வளவு நேரம் தான் சாப்பாட்டை கண் முன்னால வச்சுக்கிட்டு, பார்த்துக்கிட்டே டீஸண்டா இருக்கிறது. என்னை சாப்பிட விடுங்க.” என்ற வெண்ணிலா வேகமாக சாப்பிட ஆரம்பிக்க.

“அச்சோ! காலையில சீக்கிரமே எழுந்து ட்ராவல் வேற பண்ணியிருக்க. அதான் பசி வந்திருச்சு. முதல்ல சாப்புடுமா.” என்று நகுலனின் அம்மா அவளைக் கவனித்தார்.

அவள் பேச்சை மாற்றியதை உணராமல் எல்லோரும் உணவருந்த, நகுலன் மட்டும் அவள் தனது கணவரைப் பற்றி பேச விரும்பாததை உணர்ந்துக் கொண்டான்.

நகுலன் யோசனையுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, வடையை சாம்பாரிலும், சட்னியிலும் தோய்த்து வாயில் திணித்த வெண்ணிலாவோ, “டேய் ஸ்கேனர்! என்னை ஸ்கேன் பண்றதை விட்டுட்டு, சாப்பிடுற வேலையைப் பாரு.” என்று தனக்கருகிலிருந்த நகுலனிடம் கூறினாள்.

அவள் கூறியது மற்றவர்களுக்குப் புரியவில்லை என்றாலும் நகுலனுக்கு புரிய, அவளது கேலியில் அவன் முகத்தில் புன்னகை அரும்ப.

‘அப்பாடா சிரிச்சுட்டான்.’ என்று நிம்மதியடைந்த வெண்ணிலா, பார்வையைத் திருப்ப.

ரகுலனோ, ‘ வெண்ணிலாவுக்கு நல்ல லைஃப் கிடைச்சிருக்கு. யுகி வந்து கெடுக்காமல் இருக்கணும்.’ என்று எண்ணியவாறே இவளை இரக்கமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

‘ஐயோ! இப்போ எதுக்கு இந்த ஸ்கேனோரோட அண்ணன் கேவலமா லுக் விட்டுட்டு இருக்கார். இவரு அந்த நெட்டைகொக்கோட ஃப்ரெண்டு தானே. அது தான் இந்த லுக்கா? இது சரியில்லையே ரூட்டை மாத்து.’ என்று தனக்குள் பேசிக் கொண்டவள்,

“ஆன்ட்டி! பொங்கல் யாரு செஞ்சா? அங்கிளா?” என்று இனிமையாக வினவ.

“நான் தான் செஞ்சேன். இந்த வீட்ல என்னைத் தவிர யாரும் கிச்சன் பக்கம் எட்டிக் கூட பார்க்கமாட்டாங்க. ஏன் டா கேக்குற? பொங்கல் நல்லா இல்லையா?” என்று

“ நான் இன்னும் பொங்கலை சாப்பிடவே இல்லை ஆன்ட்டி. பொங்கலை வாய்க்கு எடுத்துட்டுப் போகும் போது ரகுண்ணா இரக்கமாப் பார்த்தாரு. அதான் கேட்டேன். நீங்க நல்லா சமைப்பீங்கன்னுத் தெரியும். அதான் அங்கிள் சமைச்சாங்களான்னு கேட்டேன்.”

தேமேன்னு உட்கார்ந்து பொங்கல் சாப்பிட்டுக் கொண்டிருந்த செந்தில் தனது பெரிய பையனைப் பார்த்து முறைக்க,

“அம்மா! தாயே! நான் உன்னைப் பார்க்கவே இல்லை. ஆளை விடு. காலேஜ்ல தான் என்னை ரேகிங் பண்ணேன்னுப் பார்த்தா, வீட்லையும் விட மாட்டேங்குற. எனக்கு சாப்பாடுக் கூட வேண்டாம். ஆளை விடு.” என்று ரகுலன் எழுந்திருக்க.

“அண்ணா! வந்ததுல இருந்து என் கிட்ட பேசாமல் பார்த்துட்டே இருந்தீங்களா, அதான் கலாய்ச்சேன். பொங்கல் சூப்பரா இருக்கு. அதனால அங்கிள் செஞ்சிருக்க மாட்டார்னு நல்லாவே தெரியும்.” என்று கண்ணடித்து சிரிக்க.

அவள் தலையில் தட்டிய நகுலனோ, “ஹேய்! நிலா ! எங்கப்பா பாவம்… அவரையாவது விட்டுடுடி.” என.

“அங்கிளும் என் கிட்ட பேசலை அதான்.” என்று அவரைப் பார்த்து புன்னகைத்தாள் வெண்ணிலா.

“நீங்க ஃப்ரெண்ட்ஸுங்க பேசிட்டு இருந்தீங்கன்னு தொந்தரவு பண்ணலை.”என்று விளக்கம் கொடுத்தார் செந்தில்.

“ஐயோ அப்பா! நீங்க என்ன பண்ணாலும் நிலாப் பொண்ணு வம்பு பண்ணும். நம்ம எந்திருச்சு போயிடலாம்.” என்றவாறே மீண்டும் அங்கு வந்த ரகுலன் தந்தையையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர முயன்றான்.

“ரகுண்ணா! அங்கிள் வேணும்னா என் கிட்ட இருந்து தப்பிக்கலாம். நீங்க காலேஜுக்கு வருவீங்க தானே. அங்கே இருக்கு உங்களுக்கு கச்சேரி.” என்று வெண்ணிலா கூற.

ஜெர்காகி நின்றான் ரகுலன்.

“ரகுண்ணா! அந்த நாள் முதல் இந்த நாள் வரை, நீங்க தான் நம்ம நிலாவுக்கு கிடைச்ச அடிமை.” என்று ஹரிஷ் கேலி செய்ய.

“பாவம் ரகுண்ணா! சீனியரா இருந்தாலும் நிலா கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்குறதோ இவரோட வேலையா இருக்கு.”என்று உச்சுக் கொட்டினாள் சபரீகா.

இப்படியே பேச்சும், சிரிப்புமாக அந்த இடம் அமர்க்களம் பட.

“ஹேய் இப்போ காலேஜுக்கு வர்ற ஐடியா உங்களுக்கெல்லாம் இருக்கா? இல்லையா?” என்று நகுலன் தான் எல்லாரையும்

இழுத்துக் கொண்டுக் கல்லூரிக்குச் சென்றான்.

அவர்கள் எல்லோரையும் ஒன்று சேர்த்த இடமான அந்த கல்லூரி வாசலில் காலை வைத்ததும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனநிலையில் இருந்தனர்.

வெண்ணிலாவோ இவ்வளவு நேரம் இருந்த உற்சாகமும், ஆர்ப்பாட்டமும் அவளிடமிருந்து விடைப் பெற.

அந்த கல்லூரியில் அவளது இறுதி நாள் நடந்த நிகழ்வு அவளுக்கு நினைவுக்கு வர கால்கள் வலுவிலுக்க, தடுமாறினாள்.

அவளையேப் பார்த்துக் கொண்டிருந்த நகுலன், அவளைத் தாங்கிப் பிடித்தான்.

“என்னாச்சு நிலா? பார்த்து, பார்த்து…” என்று ஆளாளுக்கு பதறினர்.

எல்லோரும் தன்னை இரக்கமாக பார்ப்பது போல தோன்ற, வெண்ணிலாவின் கண்கள் கலங்கியது.

 நகுலன் அவளது கையை அழுத்தினான். அவனை நிமிர்ந்துப் பார்த்தவளோ, கண் சிமிட்டி வெளி வர இருந்த கண்ணீரை உள்ளுக்குள் இழுத்தாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!