பிரகாஷ் ஹோட்டல் அறையில் உள்ள பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு உடைத்துக் கொண்டு இருந்தான். அப்போது அவனது அறைக் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. ‘இருக்கிற கடுப்பில கதவை வேற தட்டிட்டு இருக்கிறது யாருன்னு தெரியலையே..’என்றவாறு வந்து கதவைத் திறக்க அங்கே அவனின் மனைவி சீமா நின்றிருந்தாள். அவளை இங்கே சற்றும் பிரகாஷ் எதிர்பார்க்கவில்லை. “சீமா என்னாச்சு என்ன திடீர்னு வந்து இருக்க?” என்று கேட்டான்.
அதற்கு அவளும், “பிரகாஷ் என்னால அங்க தனியாக இருக்க முடியல.. அதுதான் உங்களை பாக்க இங்க வந்துட்டேன்… அதுவும் இல்லாம அங்க அத்தை வேற ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்காங்க.. அவங்க சொல்ற வேலையை எல்லாம் என்னால செய்ய முடியல.. நீங்க எப்படியும் இங்க ஒரு நாலு அஞ்சு நாள் இருப்பீங்க இல்ல அதான் நானும் கிளம்பி வந்துட்டேன்…” என்றவள் அந்த அறை இருந்த கோலத்தையும் பிரகாஷின் முகத்தில் இருந்த காயத்தையும் பார்த்து பிரகாஷிடம், “என்னாச்சு பிரகாஷ் இப்படி அடிபட்டிருக்கு? றூமை எதுக்கு இப்படி அலங்கோலப்படுத்தி வச்சிருக்க?” என்றாள்.
உடனே பிரகாஷ், “சீமா இங்க நான் அந்த சம்யுக்தாவ பார்த்தேன்..” என்று கூற, “சம்யுக்தாவையா.. அவ எப்படி இங்க… ஓ ஹோட்டல்ல வேலை பாக்குறாளா?” என்று நக்கலாக கேட்ட சீமாவைப் பார்த்தவன், “அதுதான் இல்லை… அப்படி இருந்தா நான் சந்தோஷப்பட்டு இருப்பேனே.. அவ ஹோட்டல் எல்லாம் வேலை பார்க்கல… இங்கே ஒரு பெரிய பணக்காரன புடிச்சுட்டா… இப்போ அவளுக்கும் அவனுக்கும் கல்யாணம்னு பேச்சு..”
“என்ன சொல்ற பிரகாஷ் சம்யுக்தாவுக்கும் கல்யாணமா? அது எப்படி?”
“அதை ஏன் கேக்குற..” என்றவன் அவன் ஊட்டிக்கு வந்தது முதல் இன்றைய பிசினஸ் மீட்டிங் வரை அனைத்தையும் சொல்லி முடித்தான். இதைக் கேட்டதும் சீமாவிற்கு கோபம் வந்தது, “அந்த சிலிண்டர் மாதிரி இருக்கிறவளுக்கு இவ்வளவு பெரிய வாழ்க்கையா? பிரகாஷ் அவளை நிம்மதியா இருக்கவே விடக்கூடாது… நீ என்னை கல்யாணம் பண்ணி இருந்தாலும் எல்லாரும் என்னை உன்னோட ரெண்டாவது பொண்டாட்டி ரெண்டாவது பொண்டாட்டின்னுதானே சொல்றாங்க… அதுக்கு அவதான் காரணம்… அவ மட்டும் நம்ம லைஃப்ல வராம இருந்திருந்தா இந்த வீட்டுக்கு நான் தான் மூத்த மருமகளா, முதல் மருமகளா இருந்திருப்பேன்… எப்படி இருந்தாலும் நான் இப்போ இரண்டாவது பொண்டாட்டி தானே… அதுக்கு காரணமானவளை ஏதாவது பண்ணனும்னு நெனச்சிட்டு இருந்தேன்.. கடவுள் அதுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அமைத்துக் கொடுத்துட்டாரு…” என்றாள் வில்லத்தனத்துடன்.
“சீமா பார்த்து பேசு… அவள் இப்போ யாரும் தொட முடியாத இடத்துல இருக்கிறா…”
“அவ எங்க வேணா இருக்கட்டும்.. ஆனா அவளை ஒரு வழி பண்ணிட்டு தான் நான் இந்த ஊட்டிய விட்டு கிளம்புவேன்…”
“நீ புரிஞ்சுதான் பேசுறியா சீமா? இங்க பாருங்க நான் சொன்னா சொன்னதை செய்வேன்.. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு.. இந்த றூமை கிளீன் பண்ண சொல்லுங்க… நான் கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடுக்கணும்…” என்றாள்.
பிரகாஷீம் ஹோட்டல் மேனேஜர்கு கால் பண்ணி விஷயத்தை சொன்னான். அவரும் உடனே கிளீன் பண்ணுவதற்கு ஆட்களை அனுப்பி வைத்தார் அந்த அறைக்கு..
************************************************
மணிகண்டனும் லீலாவதியும் வித்யாவை எங்கெல்லாமோ தேடி அலைந்தார்கள். ஆனால் வித்யாவை கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதே நேரத்தில் வித்யாவை பெண் கேட்டு வரும் சம்பந்தக்காரர்களும் வந்தார்கள். அவர்களைக் கண்டதும் தான் இவர்களுக்கு ஞாபகம் வந்தது அவர்களிடம் வித்யா இல்லாததை சொல்லாதது. மணிகண்டனோ லீலாவதி முறைத்துக் கொண்டு வந்திருப்பவர்களை, “வாங்க வாங்க.. வந்து உட்காருங்க..” என்று வரவேற்றார்.
அவர்களோ மகிழ்ச்சியாக வந்து அமர்ந்தனர். “என்னாச்சு மணிகண்டன் தங்கச்சி ஏதோ யோசனையில இருக்கிற மாதிரி இருக்கு..” என்றார். அதற்கு மணிகண்டனும், “ஒன்னும் இல்ல ஜெகன் வித்யா பிரண்ட்ஸ் கூட டூர் போயிட்டா எங்ககிட்ட சொல்லக்கூட இல்ல.. அது தான் உங்ககிட்ட எப்படி சொல்றதுனு இவ தயங்கிட்டு இருக்கா…” என்று சொல்ல,
“இல்ல தங்கச்சி அவளுக்கு தெரியாது… நாங்க தான் சப்ரைஸ் ஆக இருக்கட்டும்னு சொல்லல.. ஆனா அவ காலையில டூர் போயிடுவானு எங்களுக்கு தெரியாது… எங்களை மன்னிச்சிடுங்க…”
“மாமா எதுக்காக மன்னிப்பெல்லாம் கேட்டுட்டு.. என்னைக்கா இருந்தாலும் வித்யா எனக்கு தானே… சோ வொரி பண்ணாதீங்க… பிரண்ட்ஸ் கூட போய் இருக்கா ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வரட்டும்… நான் அப்புறமா வந்து வித்யாவை பாத்துக்குறேன்…” என்றான் விக்டர்.
விக்டர் அவ்வாறு சொன்னதை கேட்ட இருவருக்கும் சென்ற உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. எப்படியாவது வித்யாவை சீக்கிரமாக கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். வந்திருந்தவர்கள் மணிகண்டனுடன் பேசிவிட்டு சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.
அவர்கள் சென்றதும், “வித்யாவை விக்டருக்கு ரொம்ப புடிச்சிருக்கு… அதனாலதான் அவன் பொறுமையா போறான்… சீக்கிரமா வித்யாவை நம்ம கண்டுபிடிச்சே ஆகணும்…” என்றார்.
லீலாவதியும், “சரிங்க கண்டுபிடிச்சிடலாம்… நான் என்னோட பிரெண்ட்ஸ்ட சொல்லி தேட சொல்றேன்… நீங்க உங்க பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி தேட பாருங்க… எப்படியாவது கண்டுபிடிச்சிடலாம்…” என்று இருவரும் வித்யாவை தேடுவதற்கான முயற்சியில் மீண்டும் ஈடுபட்டனர்.
************************************************
வித்தியாவும் மதுராவும் சேர்ந்து சம்யுக்தாவை ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தனர். “வித்து உனக்கு தெரியுமா? எங்க அண்ணன் அப்படியே மான்ஸ்டர் மாதிரி யாருக்கிட்டேயும் நெருங்கி பேசினது இல்ல… ஏன் எங்க அப்பா கிட்டேயும் சரி எங்கிட்டேயும் சரி ஏதாவது சொல்லனும்னா அதுவே ஒரு கட்டளை மாதிரி தான் பேசுவாரு…. அப்படிப்பட்ட எங்க அண்ணன் அண்ணிக்கிட்ட எப்படி பேசுவார் தெரியுமா? யாரு சாமி நீனு எனக்கு கேட்க தோணும்… அவ்வளவு மென்மையாக பேசுவார் தெரியுமா? வெளியில எவ்வளவு முரடா இருந்தாலும் வைஃப் கிட்ட இப்படித்தான் இருப்பாங்க போல….” என்று சம்யுக்தாவை கேலி பண்ணிக் கொண்டிருந்தாள் மதுரா.
அவளுடன் இணைந்து கொண்ட வித்யா, “ஏன் எங்க அக்காக்கு மட்டும் என்ன குறை? எங்க சம்மு அக்காவைப் பார்த்தா யாருக்கும் சத்தமா கூட பேச வராது… எங்க அக்கா முகம் அப்படியே குழந்தை மாதிரி இல்லகா…” என்று தனது தமக்கையை அணைத்துக் கொண்டாள்.
“ஆமா வித்து எனக்கும் அண்ணியை ஃபர்ஸ்ட் டைம் பார்த்தப்போ ரொம்ப புடிச்சி இருந்துச்சு… ஆனா எப்படித்தான் இவங்கள கஷ்டப்படுத்த உன் அம்மாக்கு மனசு வந்துச்சோ தெரியல…”
“அவங்களை ஏன் மது இப்ப ஞாபகப்படுத்த? நானே அவங்க கிட்ட இருந்து எஸ்கேப் ஆயிட்டேன்னு சந்தோஷமா இருக்கேன் நீ வேற…” என்றாள் வித்யா.
அப்போது சம்யுக்தா, “வித்யா நீ அம்மா அப்பா கிட்ட இங்க இருக்கிறதை சொல்லிடு… இல்லனா உன்னை காணோம்னு தேடுவாங்க…”
“அக்கா நீ புரிஞ்சுதான் பேசுறியா? நான் மட்டும் இங்கே இருக்கிறது தெரிஞ்சுதுன்னு வை அப்புறம் அந்த விக்டர் என்னை இங்க வந்து இழுத்துட்டு போய் தாலி கட்டிடுவான்… அதனால நான் எங்க இருக்கேன்னு அவங்களுக்கு இப்போதைக்கு தெரிய வேணாம்…” என்றாள் வித்யா.
அவர்கள் கீழே பேசிக்கொண்டு இருக்க அங்கே வந்த பரந்தாமன், “மதுரா இன்னைக்கு நைட்டு உன்னோட தமயந்தி அத்தை, விக்ராந்த் அப்புறம் மாப்பிள்ளை எல்லாரும் வர்றாங்க…”
“வாவ் என்னது விக்ராந்த் அத்தான் வராங்களா? செம ஜாலியா இருக்கலாம்… அத்தை வந்தா தான் கல்யாண வீடு களை கட்டும்…” என்றாள் மதுரா.
“ஏய் யாருடி அது விக்ராந்த்?”
“வேற யாரும் இல்ல வித்து.. அவன் என் அத்தை பையன்… செம லுக்கா இருப்பான்… என்ன பண்றது நான் மட்டும் இந்த புகழை லவ் பண்ணாம விட்டிருந்தா விக்ராந்தை தான் கல்யாணம் பண்ணி இருப்பேன்..” என்றாள்.
“ஓ… ஓஹோ… கதை அப்படி போகுதா… எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல மது… நீ விரும்பினால் நான் விலகிக்கிறன்… நீ தாராளமா விக்ராந்தை கல்யாணம் பண்ணிக்கலாம்…” என்றவாறு புகழ் வந்தான்.
அதைக் கேட்டதும் மதுரா, “என்கிட்ட இருந்து அவ்வளவு சீக்கிரமா உங்களால தப்பிச்சிட முடியாது… எனக்கு இப்போ மட்டும் இல்ல எப்பவும் நீங்க தான்…” என்றாள்.
இதைக் கேட்ட புகழ் சிரித்துக் கொண்டு, “என்னமா பண்றது? உன்கிட்ட இருந்து தப்பிக்க ஏதாவது வழி கிடைக்கும்னு பாத்தேன்… என்ன பண்றது வழி கிடைக்கவே இல்லை… சரி இதுதான் எனக்கு அமைஞ்ச வாழ்க்கைனு நினைச்சுட்டு போக வேண்டியதுதான்…” என்று சொல்ல அவ்விடத்தில் சிரிப்பு அலை ஒன்று எழுந்து ஓய்ந்தது.
“இல்ல சம்மு எனக்கு வெளில ஷாப்பிங் மால்ல வேலை இருந்துச்சு.. அங்க போயிட்டு வரேன்… ஆனா இந்த டைம்க்கு வந்து இருக்கனுமே மீட்டிங் முடிஞ்சிருக்குமே…” என்று சொல்லும்போதே, “வந்துட்டேன் டா…” என்றவாறு வந்தான் நமது தீக்ஷிதன்.
தீக்ஷிதன் உள்ளே வந்து உடனே, சம்யுக்தா அங்கிருந்து எழுந்து சென்றாள்.
“அக்கா எங்க போற?”என்று வித்யா கேட்க, “இரு வரேன்…” என்ற சம்யுக்தா கிச்சனுக்கு சென்று எல்லோருக்கும் ஜூஸ் போட்டு எடுத்து வந்தாள்.
“சம்மு இவ்வளவு நேரம் நாம எல்லாம் பேசிட்டு இருந்தோம்… அப்ப ஜூஸ் கொடுக்கல… இப்போ உன்னை கட்டிக்க போறவன் வந்த உடனே ஜூஸ் எடுத்துட்டு வர்ற…” என்று அவளை கலாய்த்தார் பரந்தாமன். அதை கேட்டதும் மதுரா புகழ் வித்யா அனைவரும் சேர்ந்து சிரிக்க, சம்யுக்தா சங்கடமாக நெளிந்தாள். அப்போது அவளுக்கு உதவிக்கு வந்தான் தீஷிதன்.
“அதனால என்ன இப்ப கூட எனக்கு மட்டுமா எடுத்துட்டு வந்தா? உங்க எல்லாருக்கும் சேர்த்துதானே எடுத்துட்டு வந்தா…”
“மச்சான் நீ ரொம்ப கொடுத்து வச்சவன்… நீ வந்த உடனே சம்மு போய் ஜூஸ் எடுத்துட்டு வந்துட்டா… நான் வந்து பத்து நிமிஷமாவது இருக்கும்… ஆனா இன்னும் ஒரு காபி கூட என்னை கட்டிக்க போறவ கொண்டு வரல…” என்றான் புகழ். அதற்கு தீஷிதன், “என்ன பண்றது மச்சான் அதுக்கு எல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்…” என்று கலாய்த்து விட்டு அந்த ஜூசை குடித்து முடித்தவன், “நான் பிரஷ் ஆயிட்டு வரேன் எல்லாரும் கல்யாணத்துக்கு டிரஸ் எடுக்க போலாம்….” என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு அங்கிருந்து தனது வேக எட்டுக்களுடன் அறைக்குள் சென்றான்.
அவன் சென்றதும், “சரி சூப்பரான டிரஸ் எடுக்கலாம்… வித்து வா நம்ம போய் ரெடியாகலாம்… அண்ணி நீங்களும் போய் ரெடி ஆகுங்க… அப்பா நீங்க வராங்களா?” என்றாள் மதுரா.
அதுக்கு பரந்தாமன், “இல்லம்மா நீங்க எல்லாம் போய் எடுத்துட்டு வாங்க… நான் எதுக்கு நான் தமயத்தி வர்றால நான் போய் கூட்டிட்டு வர ஏர்போர்ட் போறேன்… புகழ் நீயும் இவங்க கூட போயிட்டு வா…” என்றார்.
“மாமா நீங்க இல்லாம எப்படி ப்ளீஸ் வாங்களேன்…” என்றாள் சம்யுக்தா. “இல்லம்மா அதுதான் தீக்ஷிதன் வர்றான்ல அவன் சூப்பரா செலக்ட் பண்ணுவான்…. நீங்க சந்தோஷமா போய் எடுத்துட்டு வாங்க…” என்றார். அதற்கு சரி என்று தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து சென்றாள் சம்யுக்தா.
தனது அறைக்குச் சென்ற தீக்ஷிதன் குளித்துவிட்டு ரெடியாகி விட்டு, சம்யுக்தாவின் அறைக்கதவில் வந்து தட்டினான். தீக்ஷிதன் சொன்னதும் ரெடியாகி கொண்டு வெளியே செல்லவும் மனமில்லாமல் அங்கிருந்த கட்டிலில் தனது நகத்தை கடித்த படி உட்கார்ந்திருந்தாள் சம்யுக்தா. அப்போது அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்டதும் வித்யா அல்லது மதுராவாகத்தான் இருக்கும் என்று நினைத்தவள், “உள்ள வாங்க…” என்றாள்.
கதவைத் திறந்து கொண்டு வந்த தீஷிதன் சம்யுக்தா முன்னால் வந்து நின்றான். “யுக்தா என்ன ஆச்சு? நீ உன்னோட விரல்ல இருக்கிற நகத்தை எல்லாம் கடிச்சு முடிஞ்சிடுச்சுன்னா கிளம்பலாமா?” என்றான்.
அவனது குரலில் நிமிர்ந்து பார்த்தவள் சட்டென்று கட்டலில் இருந்து எழுந்து நின்றாள். “ஏன் இப்படி பண்ற? ரிலாக்ஸாக இரு… நான் தான் வந்து இருக்கேன் எதுக்கு இப்படி பதறிட்டு இருக்க… ரிலாக்ஸ் இரு யுக்தா…” என்றவன் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் குனிந்து நின்றாள்.
“யுத்தா இங்க பாரு…” என்றவன் அவனது வலது கையினால் அவள் முகத்தைப் பிடித்து தன் முகம் பார்க்க வைத்தான்.
“யுக்தா நான் மறுபடியும் சொல்றேன் இதுவரைக்கும் நடந்ததெல்லாம் மறந்திடு… இனிமே நடக்கப்போறத பத்தி மட்டும் யோசி… அப்புறம் உனக்கு யோசிக்க எதுவும் இல்லன்னா என்ன பத்தி யோசி… என்னை எப்படி பார்த்துக்கலாம்னு யோசி…” என்று அவளை பார்த்து குறும்பாக கண்ணடித்தான்.
“யுக்தா இந்த கல்யாணம் ரொம்ப ஸ்பெஷல் ப்ளீஸ் ஹாப்பியா இரு…” என்றவன், அவளது நெற்றியில் முத்தம் வைத்தான்.
அவனது முத்தத்தை ஏற்கும் விதமாக அவளது கண்கள் மூடின. அவள் தன்னிடம் இருந்து விலகிடுவாள் என்று எதிர்பார்த்தான் தீஷிதன். ஆனால் அவளோ அவனிடம் இருந்து விலகவில்லை என்றதும் சிரிப்புடன், “யுக்தா போலாம் வா…” என்று அவளது கை பிடித்து அழைத்து வந்தான். எல்லோரும் வந்ததும் ஊட்டியில் இருந்த பிரபல துணிக்கடைக்கு அவர்களை அழைத்துச் சென்றான் தீஷிதன்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😀
Super divima