மெல்ல மெல்ல கதவருகில் சென்ற சென்ற சம்யுக்தாவிற்கு உடல் எல்லாம் தூக்கிப் போட்டது. அடை மழையாக இருந்தாலும் அவளுக்கு பயத்தில் வியர்வை வடிந்தது. அவள் கதவின் கைபிடியை தொடுவதற்கு இடையில் பல தடவை கதவு தட்டப்பட்டது. நடுங்கிய விரல்களால் கதவினைத் திறந்த சம்யுக்தா மழையில் நனைந்தவாறு நின்றுகொண்டிருந்த தீஷிதனைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தாள்.
“யுக்தா என்ன தூங்கிட்டியா? எத்தனை தடவை கதவை தட்டுறது? ஃபோன் பண்ணலாம்னா ஃபோன்ல சார்ஜ் இல்லை…”என்றவனை பாய்ந்து அணைத்துக் கொண்டாள் சம்யுக்தா.
“யுக்தா என்னாச்சு? நான் மழையில நனைஞ்சிட்டேன் யுக்தா… ட்ரெஸ் எல்லாம் ஈரமா இருக்கு…” என்றான்.
“பரவால்லங்க நான் ரொம்ப பயந்துட்டேன். கதவை வேற தட்டிட்டே இருந்தீங்களா நான் வேற யாராவது வந்திட்டாங்களோனு பயந்துட்டேன்” என்றவளை அணைத்துக் கொண்டே உள்ளே அழைத்து வந்து கதவை சாத்தியவன், பின்னால் திரும்பி ஒரு சைகை காட்டிவிட்டு வீட்டினுள் சென்றான்.
உள்ளே வந்ததும் அவனிடம் இருந்து விலக மறுத்தாள் சம்யுக்தா.
“யுக்தா என்னை மீறி உனக்கு எந்த ஆபத்தும் வராது… நான் போய் ஃப்ரெஷாகிட்டு வந்திடுறன். நீ என்ன பண்ணு எனக்கு ஒரு க்ளாஸ் பால் மட்டும் சூடு பண்ணு நான் வேகமா வந்திடுறன்” என்று அறைக்குள் செல்ல, சம்யுக்தா அவனுக்கு பால் காய்ச்ச சென்றாள்.
அறைக்குள் வந்த தீக்ஷிதன் கண்களில் கோபம் எரியும் தீயாக இருக்க, தனது ஃபோனை சார்ஜில் போட்டு விட்டு அதில் இருந்த ஒரு நம்பர்க்கு கால் பண்ணினான்.
“சொல்லுங்க சார்.”
“ராக்கி நீ அந்த பிரகாஷை நம்மளோட இடத்துல கட்டிப்போடு. அவனுக்கு பச்சத் தண்ணீர் கூட குடுக்காத. என்ன நெஞ்சளுத்தம் இருந்திருந்தா இங்க வந்திருப்பான்? நல்லவேளை நான் வந்தேன். அவனை எல்லாம் சும்மாவே விடக்கூடாது. ராக்கி நான் காலையில வர்றேன். அவனை தப்பிக்க விட்டுடாத.”
“ஓகே சார்.” என்றவன் பிரகாஷை இழுத்துக் கொண்டு அவர்களின் இடத்திற்குச் சென்றான்.
பின்னர் ஃப்ரெஷாகிவிட்டு கதவைத் திறக்க, அங்கே சம்யுக்தா நின்றாள்.
“என்னடா நீயே வந்திட்ட?”
“பயமா இருந்திச்சு அதுதான் பாலை எடுத்திட்டு நானே வந்திட்டேன்.” என்றவளிடம் இருந்து க்ளாஸை வாங்கிக் கொண்டு மறு கையால் அவளை அணைத்துக் கொண்டு உள்ளே சென்று சோபாவில் அமர்ந்தான்.
“யுக்தா நீ பயப்படக்கூடாதுனு நான் சொல்லியிருக்கேன்ல.. நான் எப்போ இல்லையோ அப்போதான் உனக்கு ஆபத்து.. நான் இருக்கும் வரைக்கும் உன்னை யாரும் நெருங்க முடியாது.” என்றவனை அணைத்துக் கொண்டாள்.
“சரி என் பட்டுல…தங்கம்ல… தூங்குடாமா…” என்று தட்டிக் கொடுக்க சிறிது நேரத்தில் அவனின் மார்பிலே தூங்கிப் போனாள் சம்யுக்தா.
அவள் தூங்கினாலும் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தவனுக்கு மாலையில் நடந்தது ஞாபகம் வந்தது.
ஊட்டி கம்பனியில் இருந்த பிரச்சனையை மூன்று மணி நேரத்தின் பின்னர் முடிவிற்கு கொண்டு வந்தான். புகழும் ஒரு வழியாக மதுராவை சமாதானப்படுத்தி வீட்டில் விட்டு விட்டு, கம்பனிக்கு வந்தான். அங்கே தீஷிதன் தீயாக வேலை பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, “தீஷி வேலையை முடிச்சிட்டுவியா?”
“ஜஸ்ட் டுவென்டி மினிட்ஸ்”என்றான். அவன் சொன்னது போலவே வேலையை முடித்து விட்டு கைவிரல்களை நீட்டி சொடக்கெடுத்தான்.
இதைப் பார்த்த புகழ், “சாரி தீஷி நானும் எவ்வளவோ முயற்சி பண்ணேன்.. பட் என்னால முடியல. அதுதான் உன்னை கூப்ட வேண்டியதா போயிட்டு. நாளைக்குத்தான் இதை அனுப்ப வேண்டிய கடைசி நாள். சாரி தீஷி.”
“இதில்ல என்ன இருக்கு புகழ்? உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? சரி விடு இப்போ எல்லாம் ஓகே நான் கிளம்பறேன்.”
“எங்க தீஷி வீட்டிற்கா?”
“இல்லைடா சென்னைக்கு.”
“என்ன சென்னைக்கா? இவ்வளவு தூரம் வந்திட்டு உடனே போகணும்னா எப்படி தீஷி? வீட்டிற்கு போயிட்டு ரெஸ்ட் எடுத்திட்டு நாளைக்கு போலாம்ல”
“போகலாம்தான் புகழ். ஆனால் வீட்ல யுக்தா தனியா இருப்பா. அந்த பிரகாஷ் எப்போ டைம் கிடைக்கும் சம்யுக்தாவை பழிவாங்கலாம்னு இருக்கிறான். நான் இப்போ அங்க இல்லைனு அவனுக்கு தெரிஞ்சா. அவன் எந்த எல்லைக்கு வேணும்னாலும் போகலாம். எப்படியும் ரெண்டு நாள்ல குலதெய்வம் கோயிலுக்கு வரும் போது அவங்களை பார்க்கிறன்.. சரி நான் கிளம்புறன் புகழ்.”
“ஓகே தீஷி.. பத்திரமா போயிட்டு வா.” என்று தீஷிதனை ஏர்போர்ட்டில் விட்டு விட்டு சென்றான் புகழ்.
ஏர்போர்ட்டில் இருந்த தீஷிதனுக்கு மனசுக்கு படபடப்பாக இருந்தது. சம்யுக்தாவிற்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து கொண்டு இருந்தான். ராக்கிக்கு கால் பண்ணி வீட்டிற்கு செல்லக் கூறினான். ராக்கியும் உடனே ராக்கியும் தீஷிதன் வீட்டிற்கு சென்று விட்டான். அங்கே பிரகாஷ் தனது ஆட்களுடன் சம்யுக்தா இருந்த வீட்டை சுற்றி வைத்திருந்தான். உடனே இதை தீஷிதனிடம் கூற, அவனோ “ராக்கி அங்க நடக்கிற எல்லாத்தையும் வீடியோ எடு, நம்ம ஆளுங்களை உதவிக்கு கூப்டுக்க.. ஆனால் ஒண்ணு வெளியே நடக்கிற எதுவும் உள்ளே இருக்கிற சம்யுக்தாக்கு தெரியக்கூடாது” என்றான்.
உடனே ராக்கியும் அவனது ஆட்களை அழைத்து பிரகாஷிற்கு தெரியாமல் அவனது ஆட்களை அங்கிருந்து அகற்றினார்கள். ராக்கி பிரகாஷ் செய்வது ஒவ்வொன்றையும் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தான். பிரகாஷ் மெல்ல மெல்ல வீட்டிற்கு அருகில் சென்றான். வீட்டினுள் தீஷிதன் இருக்கலாம் என்று நினைத்து, மெல்ல ஜன்னல் பக்கம் வந்து பார்க்க, அங்கே சம்யுக்தா மாத்திரம் ஹாலில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.
‘பிரகாஷ் இன்னைக்கு அந்த சம்யுக்தாவ சும்மா விடவே கூடாது’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு கதவைத் தட்டினான்.
அதே சமயம் சென்னை ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய தீஷிதன் ராக்கிக்கு அழைத்து நடப்பதைக் கேட்க, அவனும் இதுவரை நடந்ததை சொன்னான். தீக்ஷிதன் புயல் வேகத்தில் காரை ஓட்டிக் கொண்டு வந்தான். அரைமணி நேரத்தில் வர வேண்டிய வீட்டிற்கு வெறும் பதினைந்து நிமிடத்தில் வந்து நின்றவனைப் பார்த்து வாயைப் பிளந்தான் ராக்கி. அவனிடம் தலையசைத்து விட்டு பிரகாஷை மெல்ல நெருங்கி அவனின் கழுத்துப் பகுதியில் ஒரு அடி அடித்தான். அடியை வாங்கிய பிரகாஷ் அங்கேயே மயங்கி விழுந்தான். அவனை அங்கிருந்து தூக்கிச் செல்லுமாறு சொல்லி விட்டு மீண்டும் கதவைத் தட்டினான் தீஷிதன். நடந்ததை நினைத்துப் பார்த்த தீக்ஷிதன் நாளைக்கு பிரகாஷிற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
………………………………………………….
அடுத்த நாள் காலையில் இருவரும் ரெடியாகி கம்பனிக்கு செல்லும் போது, தீஷிதன், “யுக்தா நீ கம்பனிக்கு போடா. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு அதை முடிச்சிட்டு நான் வந்திடுறன்.”
“சரிங்க..” என்றவள் கீழே இறங்கும் போது, அவளது கையைப் பிடித்து இழுத்து நெற்றியில் முத்தம் வைத்தான். அவளும் சிரித்துக் கொண்டு அவனின் நெற்றியில் முத்தம் வைத்து விட்டு கீழே இறங்கினாள்.
அவள் உள்ளே செல்லும் வரை பார்த்து விட்டே காரை திருப்பிக் கொண்டு ராக்கி பிரகாஷை வைத்திருந்த இடத்திற்குச் சென்றான்.
அங்கே கதிரையில் கட்டிப் போட்டு வைத்திருந்த பிரகாஷைப் பார்த்ததும் கோபத்தில் பக்கத்தில் இருந்த கட்டையால் அவனை போட்டு அடி வெளுத்து விட்டான் தீஷிதன்.
“என்னடா நான் இருக்கும் போதே என்னோட யுக்தா மேல கைவைக்கிறளவுக்கு தைரியமா உனக்கு? இன்னைக்கு உன்னை கொல்லாம விடமாட்டேன்டா” என்று அவனை மீண்டும் அடிக்கப் பாய்ந்தவனை பிடித்து நிறுத்தினான் ராக்கி.
“சார் இதுக்கு மேல இவனை அடிச்சா இவன் செத்திடுவான் சார்..” என்று அவன் சொல்லும் போது பிரகாஷின் போன் ஒலித்தது. எடுத்துப் பார்க்க சீமாதான் அழைத்திருந்தாள். அவள் கர்ப்பமாக இருப்பவள் என்பதால் பிரகாஷை அவளிடம் பேச சொன்னான். போனை அவனிடம் கொடுக்காமல் ஆன் பண்ணி ஸ்பீக்கரில் போட்டான்.
“என்னங்க எங்க இருக்கிறீங்க? நைட்டும் வீட்டிற்கு வரல.. இன்னைக்கு எனக்கு செக்கப் இருக்குங்க.. நம்ம குழந்தையை முதல் தடவை ஸ்கேன்ல பார்க்கப் போறோம்னு ரொம்ப சந்தோஷமா இருந்தீங்க.. இப்போ ஆளையே காணோம்.. நீங்க எங்க இருக்கிறீங்க? சீக்கிரமா வாங்க நம்ம பேபியை பார்க்க நான் ரொம்ப ஆவலா இருக்கேன்.”என்று தாய்மையின் மகிழ்வில் பேசிக் கொண்டே சென்றாள் சீமா. இதைக் கேட்ட தீக்ஷிதன் பிரகாஷைப் பார்க்க, அவன் கண்களில் கண்ணீர்.
“சீமா நீ அம்மாகூட போ.. நான் வந்திடுறன்..”
“பிரகாஷ் சீக்கிரமா வந்திடுங்க.. நம்ம காதலோட பரிசு நம்ம பேபி.. அதை பார்க்கும் போது நீங்க கூட இருக்கணும்னு ஆசையா இருக்கு பிரகாஷ் சீக்கிரமா வந்திடுங்க..” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.
பிரகாஷிற்கு முன்னால் இருந்த தீஷிதன், “இங்க பாரு பிரகாஷ் உன்னை கொலை பண்ணணும்னு தான் நான் வந்தேன்.. ஏன்டா நீதான் சம்யுக்தா வேணாம்னு போயிட்டல்ல. அப்புறம் என்னத்துக்கு அவளை இப்படி டார்ச்சர் பண்ற? உன்னால எவ்வளவோ கொடுமையை அனுபவிச்சுட்டு இருந்தவ இப்போதான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கிறா அது உனக்கு பிடிக்கல.. உன் பொண்டாட்டி சீமா வயித்துல வளர்ற குழந்தை நாளைக்கு வெளியே வரும் போது, அந்த குழந்தையை தொட்டுத் தூக்க உனக்கு ஆசை இல்லையா? எந்த அப்பனும் பிள்ளைக்கு நல்ல முன்னுதாரணமா இருக்கணும்.. இப்பிடி பழி பழினு சுத்திட்டு இருக்கக்கூடாது… இங்க பாரு பிரகாஷ் உன்னோட குழந்தைக்காக உனக்கு ஒரே ஒரு சான்ஸ் நான் தர்றேன்.. இனிமேல் உன்னாலேயோ உன் குடும்பத்தாலேயோ சம்யுக்தாக்கு எந்தப் பிரச்சினையும் வரக் கூடாது.. மீறி வந்திச்சு அப்புறம் உன் குழந்தை அப்பா இல்லாத குழந்தையாகத்தான் வளரும்.. அதை மறந்திடாத..”
தனது முடியாத கையால் தீஷிதன் பார்த்து கையெடுத்து கும்பிட்டு விட்டு, “இனிமேல் என்னால யாருக்கும் பிரச்சனை இருக்காது.. என்னோட குழந்தைக்காக இதை எல்லாம் விட்டுடுறன்.. என்னை மன்னிச்சிடுங்க..” என்றான்.
தீஷிதனும் அவனை அங்கிருந்து அனுப்பி விட்டான். அவன் சென்றதும் ராக்கி தீஷிதனிடம், “சார் என்ன நீங்க அவனை மன்னிச்சு விட்டுட்டீங்க? அவன் மன்னிப்பு கேட்டதும் நம்புற மாதிரி இல்லையே..” என்றான்.
அதற்கு தீஷிதனும், “ராக்கி அவனை மன்னிச்சிட்டேன்னா அதுக்கு காரணம் அவனோட குழந்தை. அது என்ன பாவம் பண்ணினது பொறக்கும் போதே அப்பா இல்லாம பொறக்க? அது மட்டுமல்ல பிரகாஷோட அம்மா ரொம்ப ஜாதகம் பாப்பாங்க.. பிரகாஷிற்கு ஏதாவது நடந்தா அதுக்கு வயித்துல இருக்கிற குழந்தைதான் காரணம்னு சொல்லிடுவாங்க.. அதோட அவனை தண்டிச்சு நமக்கு என்ன லாபம்.. இதோட திருந்தினா அவனுக்கு நல்லது. எனக்கு என்னோட சம்யுக்தா சந்தோஷமா இருந்தா போதும்..” என்றான்.
“உங்க வைஃப் ரொம்ப லக்கி சார்.. இப்படி ஒரு ஹஸ்பண்ட் கிடைக்க..”
“நோ ராக்கி நான்தான் அவ பொண்டாட்டியா கிடைக்க குடுத்து வச்சிருக்கணும்.. பேசிட்டு இருந்ததில உனக்கு நன்றி சொல்ல மறந்திட்டேன் ராக்கி. ரொம்ப நன்றி ராக்கி அந்த இக்கட்டான நிலமையில் நீ பண்ண இந்த ஹெல்பை எப்பவும் மறக்க மாட்டேன்.”
“சார் இதுக்கு போய் எதுக்கு எங்கிட்ட நன்றி சொல்லிட்டு.. நீங்க எனக்கு பண்ண ஹெல்ப்க்கு முன்னாடி இது தூசு சார்.”
“ஓகே ராக்கி நான் கிளம்புறன்..”
“போயிட்டு வாங்க சார்..”என்றான். ராக்கியிடம் கைகுலுக்கி விட்டு அங்கிருந்து சென்றான் தீஷிதன்.
………………………………………………….
இரண்டு நாட்களின் பின்னர் வயலூரில் உள்ள குலதெய்வக் கோயிலில் தீஷிதனின் குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தனர். எல்லோரும் சந்தோஷமாக இருந்து குலதெய்வக் கோயிலில் பூஜை செய்து விட்டு அங்கிருந்த பெரிய ஆலமரத்தின் கீழே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது தமயந்தியும் துர்க்காவும் பரந்தாமனிடம், “அண்ணா எங்கேதான் போனாலும், எப்படி சம்பாதிச்சாலும் நம்ம சொந்த ஊர்ல இருக்கிற சுகமே தனிதான்ல..”
“ஆமா நீங்க சொல்றது சரிதான்.. நான்கூட இங்க ஒரு வீட்டை கட்டிட்டு இங்கேயே வந்துடலாமானு பார்க்குறேன். பிள்ளைகளும் வளர்ந்திட்டாங்க. ஆளுக்கு ஒரு கம்பனியை பொறுப்பா பார்த்துக்கிறாங்க. நம்ம ஓய்வா இங்க இருக்கலாம்னு தோணுது.”
“அப்பா உங்களுக்கு இங்க இருக்கறது பிடிச்சிருக்கு.. ஆனால் எங்களுக்கு உங்களை வி்ட்டுட்டு இருக்க முடியாது அப்பா..”
“தீஷி அண்ணா சொல்ற மாதிரி இங்க ஒரு வீட்டை கட்டிட்டு நாங்க எல்லோரும் இருக்கிறம்.. நீங்க லீவு நாள்ல, பண்டிகை நாள்ல வந்திட்டு போங்க.. நாங்களும் அப்பப்போ வந்து உங்களை பார்த்திட்டு போறோம்”என்றார் துர்க்கா.
“அம்மா ஏன்மா இப்பிடி சொல்றீங்க.. நீங்க எல்லோரும் இங்க இருக்கணும்னா இது நியாயமா? நாங்க பாவம்ல..” என்று சம்யுக்தா சொல்ல, உடனே தீஷிதன், “சரி சரி இந்த பேச்சை இத்தோட நிறுத்துங்க. முதல்ல வித்யா, மதுரா கல்யாணம் நல்லபடியா முடியட்டும் அப்புறம் இதைப் பற்றி பேசலாம்” என்று அந்த பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்தான்.
பின்னர் அங்கிருந்த யோசியரிடம் நல்லநாள் குறித்துக் கொண்டு வீடு திரும்பினார்கள்.
மூன்று மாதங்களின் பின்னர்………….
ஊட்டியில் இருந்த பிரபல கல்யாண மண்டபத்தில் திரள்திரளாக மக்கள் கூடியிருந்தனர். டிஜே ஒரு பக்கம் தனது திறமையை காட்டிக் கொண்டு இருந்தான். ஐயரோ கருமமே கண்ணாக மணமேடையில் அவரது வேலையை பார்த்துக் கொண்டு இருந்தார்.
மணமகன் அறையில் புகழும் விக்ராந்தும் ரெடியாகி எப்போது தங்கள் மனம் கவர்ந்தவர்களை மணம்முடிப்பது என்று ஆவலாக இருந்தனர்.
மணப்பெண்களோ விட்டால் இப்போதே மணமேடைக்கு வந்து விடுபவர்கள் போல மிகுந்த ஆர்வமாக இருந்தனர். இவர்களை மேலும் தாமதிக்க வைக்காமல் ஐயர் முதலில் மணமகன்களை மேடைக்கும் பின்னர் மணமக்களை மேடைக்கும் அழைத்தார்.
இரண்டு ஜோடிகளுக்கும் குடும்பத்தினரின் ஆசிர்வாதத்துடன் இனிதே திருமணம் நடந்தேறியது. இதைப் பார்த்த சம்யுக்தாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அருகில் நின்ற தீஷிதனின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அவனும் அவளைப் பார்த்து கண்ணடிக்க வெட்கத்தில் சிவந்த முகத்தை அவனிடம் காட்டாமல் குனிந்து கொண்டாள். அங்கிருந்த சடங்குகள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடிந்தது. விருந்தினர்களை பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டு இருந்தாள் சம்யுக்தா.
விருந்தினர்கள் வயிறார உணவு உண்டு விட்டு, மணமக்களை வாழ்த்தி விட்டு சென்றனர். பெரும்பாலானோர் சென்றிருக்க நெருங்கிய உறவினர்கள் மட்டும் அங்கே இருந்தனர்.
சம்யுக்தாவை அழைத்து அவளுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தீஷிதன் அவளை அழைக்க, “வந்திட்டேன்ங்க.” என்று எழுந்தவள் மயக்கம் போட்டு கீழே விழுந்தாள். அவள் விழுந்ததைப் பார்த்த தீக்ஷிதன் ஓடி வந்தான். அவளை தன் மடியில் வைத்துக் கொண்டு, “யுக்தா என்னாச்சுடி? எழுந்திருடி…” என்று பதறினான். அங்கிருந்த பாட்டி ஒருவர், “தீஷி கொஞ்சம் இருப்பா பதட்டப்படாத” என்று சொல்லி சம்யுக்தாவின் கைப்பிடித்துப் பார்த்து விட்டு, தீஷிதனின் கன்னத்தை கிள்ளினார்.
“பயப்படாத ராசா.. உனக்கு வாரிசு வரப் போகுது..” என்றார். இதைக் கேட்ட தீக்ஷிதனின் கண்களும் கலங்கின.
“தீஷி ரொம்ப சந்தோஷம் பார்த்து.. சம்முவ அறையில படுக்க வை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.”
“சரி அத்தை.”என்றவன் அவளை அங்கிருந்த அறைக்கு தூக்கிச் சென்று படுக்க வைத்தான்.
சிறிது நேரத்தில் சம்யுக்தா கண்விழிக்க அவளை அள்ளி அணைத்து முத்தமழை பொழிந்தான் தீஷிதன்.
“என்னங்க இது? இவ்வளவு சந்தோஷமா இருக்கிறீங்க? என்னாச்சு?” என்றான்.
ஒரு நிமிடம் சம்யுக்தாவிற்கு தீஷிதன் சொன்னதை நம்ப முடியவில்லை.
“நீ… நீங்… நீங்க என்ன சொல்றீங்க?”
“ஆமா யுக்தா, நீ கர்ப்பமா இருக்க..”என்றான்.
உணர்ச்சிப் பெருக்கில் இருந்த சம்யுக்தா நடுங்கும் தன் கைகளால் தனது வயிற்றைத் தொட்டுப் பார்த்தாள். எத்தனை பேர் தன்னை மலடி மலடி என்று வார்த்தையால் என்னைக் கொன்றார்கள். அத்தனை பேர் முன்னாலும் இப்போது நான் மலடி இல்லை. நானும் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கத்தி சொல்ல வேண்டும் போல இருந்தது. இத்தனைக்கும் காரணமான தன்னவனை அணைத்துக் கொண்டாள் சம்யுக்தா.
“உள்ளே நாங்க வருகிறோம்…” என்று கூறிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு முன்னால் மதுராவும் வித்யாவும் வர சிரித்துக் கொண்ட தீஷிதன், “இல்லை நீங்கள் வரவேண்டாம்.”என்று சொல்ல அவர்கள் நகைத்தனர்.
அனைவரும் சம்யுக்தாவிற்கும் தீஷிதனுக்கும் வாழ்த்துக் கூறினார்கள்.
அனைவரும் இதே போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்தி நாமும் விடைபெறுவோம்.
முற்றும்.
இத்தனை நாள் இந்த கதைக்கு சப்போர்ட் பண்ண ரீடர்ஸ் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள் 💙💙
2 comments
Super super super super super super super super super ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Nice move and good ending
Wow super and happy ending divima