காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 23 🖌️

0
(0)

“என்ன… இங்க இருக்குற எல்லாரையும் மடக்க, உங்க அப்பா ஆதித்ய வர்மாவும், ஸ்வேதா லக்ஷ்மியும் அப்படி என்ன மந்திர வித்தைய சொல்லிக் கொடுத்தாங்க?” என அவளை கைகட்டிப் பார்த்தவாறு கண்களில் குரோதத்துடன் கேட்க, அவள் இதயம் நின்று துடித்தது. அங்கேயே கோமாவிற்கு போகாததுதான் குறை.

ஒரு நிமிடம் கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் வெளியில் எட்டிப் பார்த்தன. “இது கனவா இல்லை நினைவா?” என தன்னைத் தானே கிள்ளிக் கொண்டாள். வாயடைத்துப் போய்விட்டாள். முகம் வெளுத்துப் போனது.

“என்னாச்சு? பதில் சொல்லு.” என்றவனின் கண்களில் தெரிந்த கோபத்தின் தன்மையைப் பார்த்ததும் இதயம் பல மடங்கு பலமாகத் துடித்தது. அவள் இதயம் வெடித்து சிதறிடவா என கேட்காததுதான் குறை. நாடித் துடிப்பும் வேகமாக சீறிப் பாய்ந்து அளவு இல்லாமல் சென்றது. மூளை ப்ரீஷ் நிலையில் இருந்தது. கை கால்கள் உதறல் எடுத்து உறைநிலையில் நின்று கொண்டிருந்தாள். கடகடவென உடல் நடுக்கம் கொள்ள திருதிருவென முழிப்பதை தவிர அவளால் அந்த நிமிடத்தில் வேற எதையும் செய்ய முடியவில்லை.

நா கண்டதையும் உலரியது. “அ… நா… நா… வ…” என உயிரெழுத்தில் தொடங்கி வல்லினம் மெல்லினம் இடையினம் என அனைத்து எழுத்துக்களையும் உலரிக் கொண்டிருந்தாள். “நான்… நான்…” தவிர எதுவுமே அவளால் பேச முடியவில்லை.

“பதில் சொல்லுன்னு சொல்றேன்ல?” தொண்டை கிழிய கத்தியவனின் குரல் எட்டுத் திக்கிலும் எதிரொலிக்க அவளினுள் பயம் ஆட்டம் கொண்டது. வாயினுள் இருந்து காற்றைத் தவிர வேறு எதுவும் வெளிவர மறுத்தது.

“நான்… நான்…” என கூறியவளின் வார்த்தை வாயினுள்ளேயே அடங்கிப் போனது.

அடுத்த நிமிடம் “அம்மா… பாட்டி… எல்லாரும் வெளில வாங்க…” என்று கத்திய ஆதியின் குரல் காதைத் துளைத்தது. அக் குரலில் தென்பட்ட சினத்தால் அவள் கண்களில் அவளது இருண்ட எதிர்காலம் கண்ணீராய் ஊற்றெடுத்தது.

அடுத்த நிமிடம் வீட்டின் உள்ளே செல்ல நகர்ந்தவனின் முன் “வேண்டாம்.” என்றவாறு சென்று அவனை மறித்து நின்றாள். இப்போது எங்கிருந்துதான் வார்த்தை வந்ததோ தெரியவில்லை. கண்கள் இரண்டிலும் விழிநீர் ஆறாக பெருக்கெடுக்க

“வேண்டாம். தயவு செஞ்சு வீட்டுல இருக்குறவங்க கிட்ட இதப் பத்தி எதுவும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்… உங்களை கெஞ்சிக் கேட்குறேன். நான் உங்களுக்கு எல்லாத்தையும் எக்ஸ்ப்லைன் பண்றேன். ஆனால் ப்ளீஸ்… வீட்டுல யார்க்கிட்டையும் இதைப் பத்தி சொல்ல வேணாம். ப்ளீஸ்.” என அழுகை நெஞ்சை அடைக்க தனது திமிர், அகம்பாவம், மமதை, தைரியம், சுயமரியாதை என அனைத்தையும் அவன் முன் தூக்கி எறிந்துவிட்டு இரு கைகளையும் கோர்த்து வணங்கி சற்றுத் தலையைத் தாழ்த்தி அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

அவனுக்குத்தான் அவள் மீது துளியும் இரக்கம் எனப்பட்டது வரவே வர மாட்டேன் என அடம் பிடித்தது. அப்போது கூட அவன் வீட்டில் இருப்பவர்களை அழைப்பதிலேயே குறியாக இருந்தான். “அம்மா… அப்பா… பாட்டி… சித்தி… சித்தப்பா… எல்லாரும் எங்க போய்த் தொலைஞ்சீங்க? எல்லாரும் வெளில வாங்க.” என அவன் உள்ளிருக்கும் அனைவரிடமும் காட்டுக் கத்து கத்தியதும் இறுதியாக அவள் தன் நிலையை மறந்து

“தயவு செஞ்சு… உங்க கால்ல வேணா விழுறேன். ப்ளீஸ்… இந்த ஒரு விசயத்தை மட்டும் பண்ணுங்க. நான் என்ன வேணாலும் பண்ண தயாரா இருக்கேன். ஆனால் ப்ளீஸ் இத யார்க்கிட்டையும் சொல்லிடாதீங்க.” என அவன் காலில் விழுந்து தலை குனிந்து மண்டியிட்டு கதறிக் கதறி அழுது கொண்டிருந்தாள் யூவி.

அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவன் கால்களை நனைத்து ஈரமாக்கியது. ஆனால் அவன் அதை எல்லாம் பொருட்டாகவே நினைக்கவில்லை. அவளை வெறுப்பாக பார்த்தவன் கால்களை உதறி அவளைத் தள்ளி விட்டான். அருகில் இருந்த பாறையில் மோதி அவள் நெற்றியில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழியத் தொடங்கியது. அவள் வலது கைகளில் சிறிதாக காயம் ஏற்பட்டு இரத்தம் சொட்ட ஆரம்பித்தது.

அவளால் ஒன்றும் செய்ய முடியாத நிலை. அழுவதைத் தவிர எதுவுமே செய்ய முடியவில்லை. ஆனால் அவனுக்கு ஒரே ஒரு சந்தோசம். அவன் சொன்னதை செய்து முடித்துவிட்டான். அவளை அவன் கால்களில் விழச் செய்துவிட்டான். அவன் ஈகோ வெற்றி பெற்றதை நினைத்துப் பெருமிதம் கொண்டான். ஆனால் அவனை அறியாமல் அவன் இதயத்தை கண்ணாடிச் சிதல்களாய் கிழித்தது என்னமோ அவளது அழுகை.

தான் எத்தனையோ துன்பங்களை அவளுக்கு கொடுத்த போதும் கூட அவள் இவ்வாறு கதறிக் கதறி அழுததில்லை. எப்போதும் அவளுக்கே உரிய திமிரில் அவன் முன் தன் வார்த்தைகளையும் மனதில் தோன்றும் விடயங்களையும் தயங்காமல் உரைப்பாள். அவனுக்காக அவள் கீழிறங்கிப் போனதில்லை. அந்த விடயம் அவனை அவள் பால் மிகவும் வேகமாக ஈர்த்திருந்தது. அந்த நேரத்தில் அவன், அவள் தனக்கு ஏற்ற சரியான எதிரியென அவளை கருதிக் கொண்டான். ஆனால் தற்போது அவள் வைராக்கியம், திமிர், அகம்பாவம் என அனைத்தையும் தூக்கி எறிந்து அவன் முன் கெஞ்சுவதை அவன் மனம் ஏனோ விரும்பவில்லை.

பெண்கள் எப்போதும் தைரியமாகவும் துணிச்சலாகவும் இருப்பதையே அவன் விரும்புவான். அவர்கள் அடுத்தவர்களுக்கு அடிபணிந்து தனது சுய மரியாதையை இழப்பதை அவன் ஒருபோதும் விரும்புவதில்லை. ஆனால் தான் தனது சவாலில் வெல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே அவளை அழ வைத்தானே தவிர வேறு எந்தக் காரணத்திற்காகவும் இல்லை.

உள்ளே இருந்து “என்னதான்டா உன் பிரச்சினை? வந்ததுல இருந்து இப்போ வரைக்கும் எதுக்கெடுத்தாலும் அம்மா… அம்மா… அம்மா…  ச்சோவ்… என்னால உன் தொல்லை தாங்க முடியலடா. இங்க பாரு… உனக்கு முதல்ல கல்யாணம் பண்ணி வைக்கனும். அப்போதான் அம்மா… அம்மான்னு என் பின்னால திரியாம உன் பொண்டாட்டி பின்னால திரிவ. எனக்கும் உன் தொல்லை ஒழிஞ்சு போய்டும்.” என இங்கே நடப்பது தெரியாது நெற்றியில் அவனுக்கு குங்குமத்தை வைத்து விட்டார் மகாலக்ஷ்மி.

அடுத்த நிமிடம் அவர் பார்வை யூவியின் பக்கம் திரும்பியது. “யூவி…” என அவளை ஆச்சரியமாக பார்த்தவர் அவள் அருகில் சென்று

“யூவி…” என அமைதியாக அவளை நெருங்க அவள் அவளது முழங் கையில் இருந்த காயத்தை அழுதவாறே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அடுத்ததாக என்ன நடந்திருக்கும் என்று யூகித்த மகாலக்ஷ்மி தன் மகனை முறைத்தவாறே நோக்கினார். அவன் அவர் பக்கம் மறந்தும் கூட திரும்பவில்லை. அவன் “பாட்டி… நீங்க வெளில வருவீங்களா மாட்டீங்களா? வீட்டுல இருக்குற எல்லாரும் வெளில வாங்க.” என மீண்டும் கத்த சற்று நேரத்தில் வீட்டில் இருந்த அனைவரும் வெளியே கூட்டமாக வந்து சேர்ந்தனர்.

யூவியைப் பார்த்து பாட்டி துடித்துப் போய்விட்டார். “யூவிம்மா… உனக்கு என்னாச்சு?” என அவள் அருகே சென்றவர் அவள் காயத்தைப் பார்த்து தெரிந்து கொண்டார் நடந்ததை.

“என்னதான்டா பிரச்சினை உனக்கு? எப்போ பார்த்தாலும் அவ கூட ஏதாவது வம்பு பண்ணிட்டே இருக்குற… சும்மான்னு அவள நிம்மதியா இருக்க விடுறியா? எப்போ பாத்தாலும் உங்க ரெண்டு பேருக்குள்ளையும் சண்டைதானா?” என அவர் எரிச்சலில் கத்த

“அத முதல்ல கேளுங்கம்மா. இத்தனை நாளும் பொறுத்து பாத்தாச்சு… இனிமேல் நான் இத பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன். இவளை அவன் படுத்துற பாடு இருக்கே. ஒரு பொண்ணுன்னாவது மதிக்கிறானா பாரு. எல்லாம் என் தப்புதான். இவன அடிக்கிற மாதிரி அடிச்சு வளர்த்திருந்தா இந்த பிரச்சினை இருந்திருக்காது.” என மகாலக்ஷ்மி அவர் பாட்டுக்கு கத்தினார்.

“இதென்ன புது கதை போகுது. இதுங்களுக்கு வேற வேலை இல்லை. சண்டைய புடிக்க வேண்டியது. மண்டைய உடைக்க வேண்டியது. பின்ன இந்த பெரிசு வந்து பஞ்சாயத்து பண்ண வேண்டியது.” என சிவனேசன் சிவராமன் காதினுள் சுவரம் பாடிக் கொண்டிருந்தார்.

“நமக்கு என்ன மச்சான் வந்தது? கண்ணுக்கு காட்சி பாக்குறோம். இந்த வீட்டுல நாம என்ன ஆசைப்பட்டா இருக்குறோம்? எல்லாம் சொத்துக்காக தானே?” என்றார் சிவராமன் வேண்டா வெறுப்பாக.

” என்னமோ இந்தப் பொண்ணு யூவியப் பாத்தா எனக்கு ரொம்ப தப்பா இருக்கு. இவ முழியே சரியில்லை. இவ ஏதோ மறைக்கிறா. அது என்னன்னு முதல்ல கண்டு பிடிக்கனும்.” என அனூயா கூற இப்படியே இவர்கள் மாறி மாறி காதைக் கடித்துக் கொண்டனர்.

“பாட்டி… Stop it…” என கோபமாக அந்த இடமே அதிரக் கத்தினான் ஆதி. அதில் அனைவரும் அவனைத்தான் திரும்பிப் நோக்கினர்.

“பாட்டி… உங்களுக்கு ஒன்னு தெரியுமா? இந்தப் பொண்ணு யூவி ஒரு ஏமாத்துக்காரி. இவ ஒரு ஒன்னா நம்பர் போர் ட்வென்டி. நம்ம அத்தனை பேரையும் இவ்ளோ நாளா ஏமாத்திட்டு இருந்திருக்கா எல்லாத்தையும் மறைச்சு வெச்சிட்டு நம்ம முன்னாடி நாடகம் போட்டுட்டு இருந்திருக்கா. எல்லாத்தையும் மறைச்சிருக்கா. நம்மள முட்டாள் ஆக்கிட்டு இருந்திருக்கா.” என படபடவென உண்மையை பொறிந்து தள்ளினான்.

அபிநயாவிற்கோ இதயமே இல்லாமல் போன்றதொரு உணர்வு. “என்னது? ஏமாத்திட்டாளா? இவ என்னடான்னா அழுறா. அவன் என்னடான்னா ஏமாத்திட்டான்னு சொல்றான். ஒரு வேளை நம்ம கதையெல்லாம் கார்த்திக்கு தெரிஞ்சு போச்சா? தெரிஞ்சா சங்கருத்துடுவானே.” என பயந்தவாறே யூவியின் அருகில் சென்று கீழே அமர்ந்தவள்

“என்னடி ஆச்சு? ஏதாவது பண்ணி மாட்டிக்கிட்டியா?” என கண்களை புரட்டிப் புரட்டிக் கேட்க

“ஆம்…” என்றவாறு தலையை வேகமாகவும் பாவமாகவும் ஆட்டினாள் யூவி.

மயக்கம் மயக்கமாக வந்தது அபிக்கு. “என்னடி சொல்ற…? உண்மைய சொல்லுடி. என் ஈரல் கொலை எல்லாம் நடுங்குது. விட்டா ப்ளட் ப்ரஸர், சுகர், ஹார்ட் அட்டேக், கொளோஸ்ட்ரோல்னு எல்லாமே அதிகமாகி இங்கேயே செத்துடுவேன்டி. எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லுடி.” என அவள் கால்கள் நடுங்க யூவியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

அவள் இருக்கும் அதிர்ச்சியில் அபியின் எந்த கேள்விகளும் அவள் மூளையில் பதியவில்லை. அவள் வேறு சிந்தனையில் மூழ்கிப் போய் இருந்தாள். அவளை அபி உலுக்கி உலுக்கி கேள்வி கேட்க அவளோ அசைவதாக இல்லை. அவனையே உயிர் உறைய பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“டேய்… நீ என்னடா உலர்ர? எதுவுமே புரியல. இவ ஏன் நம்மள முட்டாளாக்கனும்? இவ எத நம்மகிட்ட இருந்து மறைச்சா? எல்லாத்தையும் தெளிவா சொல்லுடா.” என அவனிடம் எதுவும் தெரியாது குழப்பத்தில் புலம்பினார்.

அபி என்னவோ “என்னடி நீ பண்ணி வெச்சிருக்க? போச்சு. எல்லாமே போச்சு. நம்ம குடலை உருவி மாலையா போட போறாங்க. எனக்கு எங்கேயோ தூரத்துல சங்கு ஊதுற சத்தம் கேட்குது தெரியுமா? எனக்கு என்னவோ பயமா இருக்கு. பேசாம பின்னாடி வழியா யாருக்கும் தெரியாம தப்பிச்சு ஓடிப் போய்டலாமா?” என யூவியின் கைகளைப் பற்றிக்கொண்டு அழுது கொண்டே இருந்தாள் அபி.

“டேய்… இப்படி வாலையும் சொல்லாம தலையையும் சொல்லாம குழப்பினா எப்படிடா? என்னதான் ஆச்சு? தெளிவா சொல்லித் தொலைடா.” என விஜயனான அவன் அப்பா அவனிடம் கேட்டதும்

“சொல்றேன்.” என்று அழுத்தமாக சொன்னவன் அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தான்.

“பாட்டி… இந்தப் பொண்ணு யூவி… சக்திய ரொம்ப சின்சியரா லவ் பண்ணிட்டு இருந்திருக்கா பாட்டி. அதாவது இவ இங்க வந்ததே சக்திக்காகதான். அவன ஸ்டார்டிங்ல இருந்தே லவ் பண்ணிட்டு இருந்திருக்கா. ஆனால் அவளால அவன எப்போவும் கூட இருந்து இம்ப்ரஸ் பண்ண முடிலன்னு இந்த வீட்டுக்குள்ள நுழைய நினைச்சிருக்கா. அதனால அபிய ஏமாத்தி ப்ரண்டாக்கி அவ மூலமா நம்ம வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கா. என்ட் இவ்ளோ நாளா இவ பண்ண எல்லாமே நம்மலையும் சக்தியையும் இம்ப்ரஸ் பண்ணி எப்படியாவது அவன அவளுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிடலாம்னு நம்ம வாயாலையே சொல்லனும்றதுக்காக தான். சோ… இவ்ளோ நாளா இவ நம்மல ஏமாத்திட்டு இருந்திருக்கா. ஏன்னா அவளுக்கு சக்தி மேல அவ்ளோ லவ்வு. பட்… இன்னைக்கு என்னடான்னா இவ்ளோ நாள் இம்ப்ரஸ் பண்ணியும் இம்ப்ரஸ் ஆகாதவன் இனிமேலா? இம்ப்ரஸ் ஆகிடுவான்னு கொஞ்சம் மனசு தளர்ந்து போயிட்டா. அதனால உடைஞ்சு போன அவ தற்கொலை பண்றதுக்கு ட்ரை பண்ணா. நான்தான் அதை தடுத்தேன் பாட்டி.” என கட்டுக் கட்டாக கதையை அவிழ்த்து விட்ட ஆதி யூவியைப் பார்த்து கண்ணடித்தான்.

அவனின் இந்த கப்ஸாக்களைக் கேட்டதும் யூவிக்கு தலை சுற்றோ சுற்று என்று சுற்றியது. அவள் சுற்றம் தெரிந்து பழைய நிலைக்கு வந்தாலும் அவளுக்கு இந்தக் கதையை ஏற்றுக் கொள்ளும் மனநிலை இல்லை. ஆனாலும் அவளுக்கு அதை ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியும் இல்லை. சூழ்நிலை காரணமாக ஏற்றுக் கொள்ளவேண்டிய நிலை. இன்னொரு பக்கம் ஆதி ஏன் இவ்வாறு பேசுகிறான் என்ற சந்தேகம்.

இப்போதுதான் அபிக்கு உயிரே வந்தது. அவள் நிம்மதி அடைந்திருந்தாலும் ஒருவேளை அவள் சக்திக்காக இந்த வீட்டிற்கு வந்திருப்பாளோ என்ற எண்ணம் கூட அபிக்கு தோன்றி மறைந்தது. ஆனால் அவளுக்கு சக்தியையும் யூவியையும் ஒன்றாக இணைத்து மனதில் கற்பனை செய்து பார்க்க சகிக்க முடியவில்லை. அதில் அதிர்வுற்றுப் போனாள்.

அதே போல்தான் மற்றவர்களும் அனைவருக்கும் மிகவும் விசித்திரமாக இருந்தது. வில்லன் அணிக்கும் பார்வதி பாட்டிக்குமே இந்த விடயத்தில் சந்தோசமாக இருந்தது. ஏனைய யாருக்கும் இந்த விடயம் சற்று சங்கடமாகவே இருந்தது.

“இப்படி ஒரு பொண்ணு கிடைக்க நம்ம குடும்பத்துல இருக்குறவங்க வரம் வாங்கிருக்கனும். இந்த ரெண்டு கல்யாணத்தோடவும் சேர்த்து இவங்க கல்யாணத்தையும் பண்ணிடலாம்.” என பாட்டி கூறி சிரித்தார்.

இதனைக் கேட்டதும் மீராவுக்கு மாரடைப்பே வந்தது. உடனே அவள் விக்ரமிடம் சென்று அவனை சொரிந்தவள் “விக்ரம்… சத்தியமா என்னால இந்த காட்சிய எல்லாம் பார்க்க முடியாதுடா. யூவிக்கும் அவனுக்கும் கல்யாணமா?” என அவன் காதைக் கடிக்க அவனும் பதிலுக்கு அவள் காதைக் கடித்தான்.

“ஆமாம். பூமாலைய தூக்கி குரங்கு கையில கொடுத்த மாதிரி இருக்கும். இந்த பொண்ணுக்கு வேற நல்ல டேஸ்டே இல்லயா? இவன போய் காதலிக்கிறேன்னு சொல்றா. யக்…” என்றதும் அதில் பல்லவியும் சேர்ந்து கொண்டாள்.

“ஆமாம்பா. இந்த கல்யாணம் நடக்கவே கூடாது. எப்படியாவது அவங்க ரெண்டு பேரையும் சேர விடக் கூடாது.” என்றாள் அகல்யா.

“அந்த பொண்ணு பாவம். அவ வாழ்க்கை நாசமாக நான் விட மாட்டேன்.” என பல்லவியும் மாறி மாறிக் கூறிக் கொண்டனர்.

ஆனால் இவர்கள் அனைவருக்கும் அப்பால் ஆதியின் மூளையில் ஓடிக் கொண்டிருந்தது வேற ஒரு விடயம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கத்திலும் யோசிக்க “சரி. ரொம்ப நேரம் ஆச்சு. எல்லாரும் போய் தூங்குங்க.” எனக் கூறிய பாட்டி முதலில் உள்ளே சென்றார். அவர் பின்னால் அனைவரும் இடத்தை காலி செய்தனர்.

அபியும் சிலையாக நின்ற யூவியை இழுத்து வந்து அறையில் தள்ளிவிட்டு கதவை லொக் செய்தாள். “ஏய்… என்னடி பண்ணித் தொலைச்சிருக்க? ஒரு நிமிசம், அந்த கிறுக்கனுக்கு ஏதாவது தெரிஞ்சு போச்சோன்னு பயந்தே போய்ட்டேன். நல்ல வேளை எதுவும் தெரியல.” என இழுத்து மூச்சை நிதானமாக விட்டவள் சில நொடிகளில் அதிர்ந்து போய்

“வன் மினிட்… அது சரி… அந்த கிறுக்கன் கார்த்திக் சொன்னது உண்மையாடி? அந்த லூசுப்பயல நீ கல்யாணம் பண்ணிக்க போறியா என்ன?” என புருவம் உயர்த்தி ஒரு மாதிரியாக முகபாவனையுடன் கேட்டதும் யூவியிற்கு இருக்கும் குழப்பத்தில் இன்னும் எரிச்சல் மூன்டது.

“ஏய்… கொஞ்ச நேரம் சும்மா கத்தாம இருக்குறியா? இல்லைன்னா அடிச்சி சாவடிச்சிடுவேன் உன்னை… நானே செம்ம கடுப்புல இருக்கேன். நீ என்ன நினச்ச? நான் இங்க வந்தது அந்த குரங்கை கல்யாணம் பண்ணிட்டு குடும்பம் நடத்தவா? உங்கண்ணன் என்னடான்ன என்ன பத்தி தெரியாம சாவடிக்கிறான். நீ என்னடான்னா தெரிஞ்சும் சாவடிக்கிற. சரி நான் தெரியாமதான் கேட்குறேன்… இந்த வீட்டுல இருக்கிறவங்களுக்கு என்னதான்டி பிரச்சினை? ஒரு பொண்ண நிம்மதியா இருக்க விட மாட்டாங்களா? முக்கியமா அந்த லூசு. அவனுக்கு என்னதான் பிரச்சினை? எப்போ பாரு ஏதாவது பிரச்சினை பண்ணிக்கிட்டு இருக்குறான். சரியான தொல்லை பிடிச்சவன்.” என ஆதியை அர்ச்சித்துக் கொண்டிருந்தாள்.

அவனைக் கண்டால் அப்படியே கடித்து தின்று ஏறிப் போட்டு மிதித்து கொன்றுவிடும் அளவு கோபம் வந்தது. ஆனால் அவன் ஏன் உண்மையை யாரிடமும் சொல்லவில்லை என்று குழப்பத்தில் இருந்தாள் அவள்.

“சரிடி. கூல்… கூல்… இப்போ மருந்து போட்டுக்கோ.” என அபி முதலுதவிப் பெட்டியிலிருந்த மருந்தை எடுத்து யூவியின் நெற்றியில் தடவ அதனைத் தட்டிவிட்டவள்

“அதெல்லாம் வேணாம்.” என உடனே அந்த அறையை விட்டு வேகமாக எழுந்து வெளியேறினாள்.

காலைத் தூக்கி வெளியில் வைத்த உடனே அந்த விசில் சத்தம் அவளைத் தடுத்தது. உடனே கடுப்புடன் கண்களை அழுந்த மூடி பல்லைக் கடித்தவள் சத்தம் வந்த திசையை தலையைத் திருப்பி நோக்கினாள். ஆதிதான் சுவற்றில் சாய்ந்து கைகளைக் கட்டி நின்றவாறு விசில் அடித்து அவளைக் கடுப்பாக்கிக் கொண்டிருந்தான். அவளது கோபம் பல்லாயிரம் மடங்கு எகுறியது. கைகளை மடக்கி கண்களைப் பொத்திக் கொண்டாள்.

“எப்படி எப்படி? உன்னால முடிஞ்சா என்ன உன் ஸ்லேவ் ஆக்கி காட்டுடா…” என திமிராக உரைத்தவன் அடுத்த நிமிடம்

“ப்ளீஸ்… உங்க கால்ல வேணாலும் விழுறேன் தயவு செஞ்சு வீட்டுல இருக்குறவங்க கிட்ட இதப் பத்தி எதுவும் சொல்லிடாதீங்க. ப்ளீஸ்… ப்ளீஸ்…” என அவளைப் போல பாவனை செய்து கட்டியதும் அவளுக்குத் தான் அவமானமாய் போனது. அவன் முகத்தை அவளால் எதிர் கொள்ளவே முடியவில்லை. தலை குனிந்து நின்றவளின் கண்களில் கண்ணீர் மாத்திரம் வரவா என எட்டிப் பார்த்தது.

“ரைட்… யூ…வி… இப்போ எங்க போச்சாம் அந்த திமிரு? என் முன்னாடி தலையை உயர்த்தி திமிரா டயலொக் பேசுவியே. எங்க அந்த யூவி? செத்துப் போய்ட்டாளா என்ன? இவ்ளோ நாளும் உன்ன புலியா பாத்துட்டு இப்போ எலியா பாக்க கொஞ்சம் வேடிக்கையாகவும் இருக்கு. கொஞ்சம் மனசுக்கு சந்தோசமாகவும் இருக்கு. கொஞ்சம் இல்லை நிறையவே. இப்படி உன்னைப் பார்க்கும் போது எப்படி இருக்கு தெரியுமா? உச்சந் தலையில ஐஸ் கட்டிய தூக்கி வெச்ச மாதிரி ஜிவ்வுன்னு ஒரு பீலிங்.” எனக் கூறி பயங்கரமாக சிரித்து சிரிப்பை அடக்கியவனிடம்

“எனக்கு ஒன்னே ஒன்னுதான் தெரிஞ்சிக்கனும்… இப்போ எதுக்காக நீ இந்த ட்ராமா எல்லாம் போட்டுட்டு இருக்க? உன்னோட நோக்கம்தான் என்ன?” என அந்த நிலைமையிலும் ஏனோ என்று தத்தக்கு என தன் மனதில் தோன்றியதை யூவி கேட்டுவிட

“ஹேய்… நீ என்ன நினைச்ச? நீ பாட்டுக்கு வருவ… எல்லார் தலையிலையும் நல்லா மிளகாய் அரைப்ப… கடைசில எதுவும் தெரியாதவ மாதிரி நின்னா… நான் உன்னை மன்னிச்சு அப்படியே ஏத்துக்குட்டு உன் புராணம் பாடனுமா? நீ என்னப் பத்தி என்ன நினைச்சிட்டு இருக்குற? உன்னை மன்னிச்சு ஏத்துக்கிட்டு உன் பின்னாடியே வர்ரதுக்கு நான் ஒன்னும் அவ்ளோ நல்லவன் எல்லாம் இல்லம்மா. பேசிக்கலி ஏமாத்துறவங்கள பாத்தாலே எனக்கு பத்திக்கிட்டு எறியும். நீ… அதுல எக்ஸ்ட்ரீம் லெவல்ல பண்ணிருக்க. உன்னை எப்படி மன்னிக்க முடியும்? ஆனால்… ஏன் இன்னும் உன்ன இங்க விட்டு வெச்சிருக்கேன்னு கேட்டேன்னா, நீ பண்ணதுக்கு எல்லாம் உன்ன இந்த மாதிரி தண்டிக்க கூடாது. இத விட பெரிய தண்டனை கொடுக்கனும். என்ட்… இங்க நான் வந்தது இவங்க கூட எல்லாம் எமோஷனல் ட்ராமா போட இல்லை. எனக்கு வேற வேலை இருக்கு. நீ அவங்கள ஏமாத்தினது… ஏமாத்திக்கிட்டு இருக்கறது எல்லாம் அவங்க பிரச்சனை. வட் எவர்… அதனால எனக்கு எந்த யூஸும் இல்லை. உன்னால எனக்கு சில பல காரியங்கள் ஆகனும். அதனாலதான் இப்படி ஒரு ஸ்கெட்ச். இல்லன்னா நீ எதுக்கு எக்ஸ்ட்ரா குப்பைன்னு இந்த வீட்டை விட்டு வெளில தூக்கி எறிஞ்சிருப்பேன். சோ… இன்னையில இருந்து நீ என்ன பண்றேன்னா எனக்கு ஆக வேண்டிய சில பல வேலைகளை பண்ற.” என அவன் அதிகாரமாய் கூறியவனின் மூளையில் அவளால் இப்போதைக்கு எந்த யூஸும் இல்லை என்று அறிந்தும் அவளை விட்டுச் செல்ல மனமில்லாமல் இப்படி சொல்லிக் கொண்டிருக்கிறான்.

“ஏய்… நான் என்ன உன் வீட்டு வேலைக்காரியா? இல்லை… உன் பொண்டாட்டியா?’ என தன் நிலை மறந்து பழைய யூவியாய் கத்தியவளின் குரல்

“ஏய்… என்ன சவ்ன்ட் ஓவராகுது? இன்னும் உன் கொழுப்பு கரையலையா? அடங்குடீ… இனிமேல் இந்த வீட்டுல இருக்கனும்னா எனக்கு கீழ அடங்கிதான் போகனும். நான் சொல்றததான் செய்யணும். நான் சொல்றததான் கேட்கனும். இல்லன்னா….” என சீரியஸாக உரைத்தவன் அடுத்த நிமிடம் “பாட்டிஇஇஇஇ………” என பாட்டியை ஏலம் போட

“இல்ல இல்ல. நான் எதுவும் பேசல. நீ சொல்றத பண்றேன். ஆனால் பாட்டிய எல்லாம் கூப்பிடாத.” என்றவளைப் பார்த்து அவசரமாக சொன்னவளைப் பார்த்து அடுத்த கனம் அவன் வாய்க்குள் சிரித்துக் கொண்டான் ஆதி.

“ஏய்… என்ன? மரியாதை இல்லாம பேசுற? இனிமேல் நீ… வா… போ… இதெல்லாம் கூடாது. மரியாதை… மரியாதை…” என்றதும் அவள் தலை கடகடவென “சரி…” என்ற ரீதியில் ஆடியது.

“அந்த பயம்…” என்று விரல் நீட்டி மிரட்டியவன் உள்ளே செல்ல எத்தனிக்க

“ஒரு நிமிசம்…” என அவனைத் தடுத்து நிறுத்தினாள் யூவி. அவன் திரும்பி “என்ன?” என்றவாறு புருவத்தால் வினவ

“ஏதோ வேலைன்னு சொன்னியே…” என்றதும் அவளை தீயாய் முறைத்தான்.

“சோரி… சொன்னீங்களே. என்ன வேலை?” என ஆர்வமாக கேட்டவளிடம்

“ஒருத்தரை கொலை பண்ணணும்.” என்றான் சாதாரணமாக.

அவளுக்கு கண் முழி பிதிங்கிப் போனது. “என்னாஆஆஆஆது கொலையா?” என்று வாய் பிளந்து கத்தினாள்.

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!