கன்னியப்பன் அவர் வீட்டில் அமர்ந்து இருந்தார். அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அவருடன் இருந்தார்கள். கன்னியப்பன் மனைவி ஒருபக்கம் மகனை நினைத்து அழுது கொண்டு இருந்தார்.
“இப்ப என்ன நடந்துபோச்சினு அழுதிட்டு இருக்க நீ…?”
“அழமா என்ன பண்ணச் சொல்றீங்க…? சர்வேஷ் ஜெயில்ல இருக்கும் போது நான் எப்படி அமைதியா இருக்க முடியும் சொல்லுங்க…”
“அதுக்காக இழவு வீடு மாதிரி ஒப்பாரி வச்சிட்டு இருப்பியா….? அமைதியா இரு… சர்வேஷை எப்படி வெளியில கொண்டு வரணும்னு எனக்குத் தெரியும்…”
“ஆமா அதுதான் அந்த போலீஸ்காரன் நீங்க அங்க போயும் நம்ம பையனை அனுப்பி வைக்கல… அப்புறம் எப்படிங்க சர்வேஷை கொண்டு வருவீங்க…?”
“அவனை சீக்கிரமா வெளியே கொண்டு வரேன்… நீஉள்ள போ…” என்றார். அவரும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் எழுந்து உள்ளே சென்றார்.
அவர் சென்றதும் தனது ஆட்களிடம், “அந்த போலீஸ்காரனுக்கு ஏதாவது பண்ணணும்…”
“ஐயா இப்போ எது பண்ணாலும் உங்களுக்குத்தான் ஆபத்து…”
“நீ சொல்றது சரி… ஆனால் என் பையனை எப்படியாவது ஜெயில்ல இருந்து கொண்டு வரணும்… அந்த ஐஜி வேற நான் சொல்ல வரத கூடக் கேக்காம அவனுக்கு சப்போர்ட் பண்றாரு…”
“சப்போர்ட் பண்ணுவாங்க தானே அந்த போலீஸ்காரனோட அப்பன்தான் இந்த ஐஜி…”
“ஓகோ அதுதான் விஷயமா அப்போ இதுக்கு ஒரு வழி பண்றன்…” என்றார்.
…………………………………………………
வீரேந்திர ப்ரசாத் குளித்து விட்டு வர, சுபத்ரா அவனுக்கும் விநாயக்கிற்கும் சாப்பாடு பரிமாறினார். வீரா வேகமாக சாப்பிடுவதைப் பார்த்த சுபத்ரா, “வீரா எதுக்கு இப்போ இவ்வளவு வேகமா சாப்பிடுற…? கொஞ்சம் மெதுவா சாப்டலாம்ல…”
“அம்மா ஸ்டேஷனுக்கு போகணும்மா…”
“இப்போதானே ஸ்டேஷன்ல இருந்து வந்த அப்புறம் எதுக்கு மறுபடியும் போகணும்ற…?”
“அங்க லாக்கப்ல மினிஸ்டர் பையன் இருக்கான்… நான் இருக்கும் போதே அவனை வெளியே கொண்டு போக முயற்சி பண்ணாங்க… ஆனா அவங்களால முடியல.. நைட் டைம்ல என்ன வேணாலும் பண்ணுவானுங்க அதுதான்மா நான் அங்க இருக்கணும்…”
“பாத்து பத்திரமா இரு வீரா… ஏதாவது பிரச்சனைனா உடனே எனக்கு கால் பண்ணு…” என்றார் விநாயக்.
“ஏங்க என்ன நீங்க… அவன்தான் பகல் ஃபுல்லா ஸ்டேஷன் கேஸ்னு திரியறான்… நைட்லயாவது அவன் ரெஸ்ட் எடுக்கிறலயாங்க… உடம்பு என்னதுக்காகும்…?”
“போலீஸ் வேலைனா இப்பிடித்தான் சுபா இருக்கும்…”
“இதுக்குத்தான்ங்க நான் இவன்கிட்ட போலீஸ் வேலை வேணாம்னு தலபாடா அடிச்சிக்கிட்டன் கேட்டானா இல்லையே…. அப்பா பாக்குற வேலைதான் பாப்பேன்னு…. சமூகத்தை திருத்தப்போறன்னு வசனம் பேசிட்டு இந்த வேலைக்கு வந்தான்…. இந்த வேலைக்கு வந்ததுல இருந்து எவ்வளவு எத்தனை நாள் நம்மகூட ஒண்ணா இருந்திருக்கான்…? டிரான்ஸ்பர் டிரான்ஸ்பர்னு ஊர் ஊரா சுத்திட்டு இருந்தவனை பெரும்பாடு பட்டு இங்க கொண்டு வந்தீங்க… இவன் வந்து முழுசா ஒரு வாரம்கூட ஆகல…. அந்த மினிஸ்டர் கூட பிரச்சனை பண்ணிட்டு இருக்க…”
“அம்மா இப்போ எதுக்காக இதை எல்லாம் சொல்லிட்டு இருக்க…?”
“சொல்றன்…. அவனால உன்னோட உயிருக்கு எதுவும் ஆபத்து வந்திடுமோனு பயமா இருக்கு வீரா… எங்களுக்கு என்ன பத்துப் பிள்ளையா இருக்கு…? எங்களுக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு இருக்கிறது நீ மட்டும்தான்… இங்க பாரு வீரா உனக்கு ஏதாச்சும் நடந்திச்சு நான் சத்தியமா உயிரோட இருக்க மாட்டேன்…”
“அம்மா ஏன்மா இப்படி எல்லாம் சொல்ற… எனக்கு எதுவும் நடக்காது சரியா…?” என்ற வீரேந்திர ப்ரசாத் தாயை அணைத்துக் கொண்டான்.
“வீரா அம்மா ஒண்ணு சொன்னா கேப்பயா…?”
“கண்டிப்பா கேப்பேன் மம்மி… சொல்லுங்க நான் என்ன பண்ணணும்…?”
“வீரா நீ கல்யாணம் பண்ணிக்கணும்…”
“கல்யாணம்தானே பண்ணிட்டாப் போச்சு…”
“வீரா நீ நெஜமாத்தான் சொல்றயா…?”
“ஆமா அம்மா நான் நெஜமாத்தான் சொல்றன்…பொண்ணை பாரு உன்னை மாதிரி அழகா, அறிவா…”
“சரிமா நான் இப்போ போயிட்டு வரேன்…” என்று தாயின் நெற்றியில் முத்தம் வைத்து விட்டு, தந்தையிடம் சொல்லிவிட்டுச் சென்றான்.
லாக்கபில் இருந்த சர்வேஷைப் பார்த்த வீரா அங்கிருந்த கான்ஸ்டபிளிடம், “சாப்பாடு குடுத்தீங்களா…?”
“ஆமா சார் குடுத்தேன் ஆனா அவரு சாப்பிடல…”
“மினிஸ்டரோட பையன்ல அதுதான் ரோட்டுக்கடை சாப்பாடு சாப்பிட மாட்டாரு… இப்போ எப்டி சாப்பிட வைக்கிறன்னு பாருங்க…. எடுத்துட்டு வாங்க சாப்பாட்டை…” என்றான். அவரும் அவனிடம் சாப்பாட்டை எடுத்து வந்து குடுக்க, அதை எடுத்துக் கொண்டு சர்வேஷின் லாக்கப்பிற்குச் சென்றான். வீராவைப் பார்த்ததும் சர்வேஷ் முறைத்தான்.
“என்னடா முறைப்பு…? நீ முறைக்கிறதனால எந்த யூஸ்ஸூம் இல்ல… உன்னை நாளைக்கு கோர்ட்ல ஒப்படைச்சி தண்டனை வாங்கிக் குடுக்கல… அதென்ன குடுக்கல தண்டனை வாங்கிக் குடுக்கிறன்…. என்ன இருந்தாலும் பசியோட இருக்கக் கூடாதுல பிடி சாப்பிடு….”
“யாருக்கு வேணும் உன்னோட சாப்பாடு…? எனக்கு தண்டனை வாங்கிக் குடுக்கலாம்னு நீ கனவுல கூட நினைக்காத நாளைக்கு கோர்ட்டுக்கு போறதுக்கு முன்னாடி நான் வெளியில போயிடுவன்…”
“அவ்வளவு தைரியம்…. ஆனா இந்த வீரேந்திர ப்ரசாத் உன்னோட தைரியத்தை ஒடைச்சி உனக்கு தண்டனை வாங்கிக் குடுப்பான்…” என்றவன் வெளியே வந்தான்.
…………………………………………………
அடுத்த நாள் காலையில் சுமதி நேரத்திற்கே சுப்பிரபாதத்தை பாட ஆரம்பித்தார்.
“சுதரு எழுந்திரு டி…”
“ஏய் எந்திரி டி நானும் எத்தனை வாட்டி உன்பேர ஏலம் போடுறது…? இப்போ மட்டும் நீ எந்திரிக்கல… உன் மூஞ்சில சுடு தண்ணிய கொண்டு வந்து ஊத்திடுவன்…”
“ஏன் சுமதி அவகூட வம்பிழுக்கிற…?”
“ஏங்க உஙக்ளுக்கு மனசாட்சினு ஒன்னு இருக்கா இல்லையா…? நான் அவளை வம்பு பண்றேன்னு சொல்றீங்க… டைம்க்கு அவ எந்திரிக்கலனா அவ எப்பிடி டைம்க்கு காலேஜ் போவா…? ரெடியாகி கலம்புறதுக்குள்ள நம்மளை ஒரு வழி பண்ணிடுவா….”
“அதுக்காக இப்படி சத்தம் போட்டா அவள எழுப்பணும்…? இரு நான் போய் எழுப்புறன்…”
“ஆமா பெருசா வந்திட்டாரு பேச… முடிஞ்சா உங்க பொண்ணை எழுப்பிப் பாருங்க… நான் போய் உப்புமா செய்றன்…” என்று சொல்லிவிட்டு அவர் செல்ல, சரவணன் மகளின் அறைக்குச் சென்றார்.
அங்கே பெரிய ஆளுயர கரடி பொம்மையை அணைத்துக் கொண்டு, சிறு பிள்ளை போல வாயை கொஞ்சம் திறந்து கொண்டு தூங்கும் மகளைப் பார்த்தவருக்கு சிரிப்புத்தான் வந்தது.
‘இவ இன்னும் மாறவே இல்ல… சின்ன வயசுல எப்படி இருந்தாளோ இப்பவும் அப்படியேதான் இருக்கிறா…’ என நினைத்துக் கொண்டு அவளின் அருகில் வந்தார்.
தந்தையின் குரலில் தூக்கம் கலைந்து விட கண்களைத் திறக்காமலேயே தந்தையின் மடியில் தலைசாய்தாள். சிரித்துக் கொண்டே அவள் தலையை கோதி விட்டவர், “கண்ணு காலேஜ் போகணும்ல எந்திரிச்சு ரெடியாகு டா…”
“அப்பா ஒரு ஐஞ்சு நிமிஷம் தூங்கிறனே…”
“உன் அம்மா வந்தா அப்புறம் தையத்தக்கான்னு குதிப்பா சுதர்… நேற்றும் லேட்டாயிடுச்சினு சொன்ன… இன்னைக்கும் லேட்டாப் போனா நல்லா இருக்காதுல…” என்று மகளை ஒருவாறு எழுப்பி விட்டார்.
“சரிப்பா நீங்க இந்த சேரிய கொஞ்சம் அயர்ன் பண்ணுங்க அப்பா… நான் சீக்கிரமா வரேன்…”
“சரிமா…” என்றவர் அங்கிருந்து சென்றதும் சுதர்ஷினி குளிக்கச் சென்றார். அவள் குளித்து விட்டு வர, சுமதி ஒரு கையில் காப்பியோடும் மறு கையில் அவள் புடவையையும் எடுத்து வந்திருந்தார்.
“ஏன்டி நான் காலையில அந்த கத்து கத்துறன் எழும்பாம நல்லா தூங்கிட்டு உன் அப்பா வந்த உடனே எப்படிடி சீக்கிரமா எந்திரிக்கிற…?”
“அது சீக்ரெட் ம்மா… சொல்ல முடியாது…”
“சரிதான் போடி…” என்று சொல்லி அவள் கொழு கொழு கன்னத்தை கிள்ளி விட்டுச் சென்றார் சுமதி.
சிறிது நேரத்தில் சுதர்ஷினி ரெடியாகி வர, அவளின் ஸ்கூட்டி சாவியை அவளிடம் கொடுத்த சரவணன், “இங்க பாருடா பாத்து பத்திரமா போகணும்… ஸ்ஸ்பீடா எல்லாம் போகக் கூடாது…” என்றார்.
அவளும், “சரிப்பா நீங்க சொல்ற மாதிரியே பண்றேன்… வேகமா எல்லாம் போக மாட்டேன்…” என்றவள் தாயிடமும் தந்தையிடமும் சொல்லிவிட்டு ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு காலேஜிற்குச் சென்றாள்.
…………………………………………………
ஸ்டேஷனில் இருந்து வீட்டிற்கு வந்த வீரேந்திர ப்ரசாத் வேகமாக குளித்து ரெடியாகி சாப்பிடாமல் மறுபடியும் ஸ்டேஷனுக்கு சென்று விட்டான். வீரா ஸ்டேஷனுக்கு செல்லும் முன்னரே அங்கே பரத் வந்திருந்தான். அவன் அன்றைய தினம் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்பவர்களைப் பார்த்து வண்டியில் ஏற்றினான். சர்வேஷை மாத்திரம் ஏற்றவில்லை. அதைக் கேட்ட கான்ஸ்டபிளிடம் வீரா வந்து பார்க்கட்டும் என்று சொல்லிவிட்டான்.
வீரா ஸ்டேஷனுக்கு வந்து, அனைத்தையும் பார்த்தான்.
“வீரா சின்னச் சின்ன கேஸ்ல இருக்கிறவங்களை வண்டியில ஏத்திட்டேன்… அந்த சர்வேஷ் மட்டும் லாக்கப்ல இருக்கான்… நீவந்ததும் அவனை எப்படி கோர்ட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்னு கேட்க வெயிட் பண்றன்…”
“எங்கிட்ட கேட்க என்னடா இருக்கு…? அவன் என்ன தியாகியா அவனை மட்டும் மரியாதையோடயா கூட்டிட்டுப் போகப்போறோம்… பேசாம மற்ற அக்கியூஸ்ட் போற வண்டியிலேயே அவனை ஏத்துடா….”
“சரிடா…” என்று பரத் சொல்லும் போதே ஸ்டேஷன் உள்ளே இருந்து கான்ஸ்டபிள் ஒருவர், “சார்…. சார்….” என்று ஓடி வந்தார்.
“லாக்கப்ல என்னனு சொல்லுயா…” என்று பரத் சொல்ல, அந்த கான்ஸ்டபிளோ, “சார் அமைச்சர் ஐயாவோட மகன் லாக்கப்ல மயங்கி கிடக்கிறாரு….” என்றார்.
இதைக் கேட்ட வீராவும் பரத்தும் உள்ளே சென்றார்கள். அங்கே சர்வேஷ் கீழே விழுந்து கிடப்பது தெரிந்தது. உடனே சாவியை எடுத்து வந்து, அவனது லாக்கப்பை திறந்து உள்ளே சென்றனர்.
மயங்கிக் கிடந்த சர்வேஷ் முகத்தில் தண்ணீரைத் தெளித்தான் வீரா. ஆனால் சர்வேஷ் கண் விழிக்கவில்லை. பின்னர் அவனை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்குச் சென்றனர். சர்வேஷை கொண்டு செல்லும் போது வீராவிற்கு டவுட்டு இருந்து.
இந்த எபிக்கு 20 ratings வந்தா அடுத்த எபி வரும் பட்டூஸ்
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊