யுகித்தின் முகத்தைப் பார்த்து ஓடியதெல்லாம் ஒரு காலத்தில் நடந்ததாகத் தோன்ற, இப்போதெல்லாம் அவனைப் பார்க்கவில்லை என்றால் தான் வெண்ணிலாவுக்கு ஏதோ செய்தது.
அவள் பார்வை அவனை சுற்றியே அலைபாய.
அதைக் கண்டு கொண்ட அவளது நண்பர்களோ, அவளை கேலி செய்ய ஆரம்பித்தனர்.
“சும்மா கிண்டல் பண்ணாதீங்க எருமைங்களா. நான் யாரையும் பார்க்கவில்லை.” என்று அவள் மறுப்பாள்.
“அப்படியா நம்பிட்டோம். நம்பிட்டோம்.” என்று அதையும் கேலி செய்தது அந்த பஞ்ச பாண்டவ அணி.
பிறகு முகம் சிவக்க, வெண்ணிலா தான் வாயை மூடிக்கொள்வாள்.
ஆனால் ஒரு நாளில் ஒரு முறையாவது அவனை கண்டுவிட்டால் தான் அவளது அன்றைய பொழுது நல்லபடியாக முடியும்
அவனோடு மணி கணக்கில் பேசி பழகவில்லை என்றாலும், அவளது பார்வைகள் அவனுடன் பேசிக் கொண்டே தான் இருந்தன.
கல்லூரியிலும் ஏதாவது ஒரு விழா வந்து கொண்டு தான் இருக்கும்.
இருவரும் சேர்ந்து பாடும் சூழ்நிலை அமைய, அவர்கள் இருவரும் பேசும் சூழ்நிலையும் அமைந்தது.
அவ்வப்போது யுகித் இவளிடம் கோபப்படுவதும், அவனை இவள் சமாதானம் படுத்துவதும் வாடிக்கையானது.
அதுவும் மதன் சார் வெண்ணிலாவை புகழ்ந்தால் போதும், அதை யுகித்தால் ஏற்றுக்கொள்ளவே முடியாது..
அந்த நேரத்தில் அவளை முறைத்துப் பார்ப்பான்.
“என்ன யுகா? நான் என்ன பண்ணேன்?” என்று கண்கலங்க அவள் வினவ.
அவனது கோபம் அப்படியே கரைந்துப் போகும்.
தன் மேல் அளவில்லா அன்பை செலுத்தும் வெண்ணிலாவை அவனுக்கு மிகவும் பிடித்தது.
காதலை முதலில் அவள் சொல்ல வேண்டும் என்று யுகித் காத்திருக்க.
அவளோ வாய் வார்த்தையாக எதுவும் கூறவில்லை. ஆனால் அவளது கண்கள் ஆயிரம் முறை காதலைச் சொன்னது.
அவனைப் பார்த்தால் அவளது முகம் பூவாய் மலர்வதும், அவன் கோபப்பட்டால் இவள் வாடுவதுமாக இருக்க, அவர்கள்இருவரும் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள் என்று அவர்களது நண்பர்கள் அனைவருக்கும் புரிந்தது.
இப்படியே காலம் செல்ல
யுகித் நான்காவது வருடத்திலும் வெண்ணிலா இரண்டாவது வருடத்திலும் அடியெடுத்து வைத்தனர்.
யுகித்திற்கு கேம்பஸ் இன்டர்வியூ நல்ல, நல்ல ஆஃபர்ஸ் வந்தது.
வந்த ஆஃபர்ஸ் எல்லாவற்றையும் யுகித் மறுத்துக் கொண்டிருந்தான்.
அந்த விசயம் ரகுலன் மூலம் நகுலனின் காதுக்கு வர. வெண்ணிலாவிடம் தெரியப்படுத்த நினைத்தவன், வெண்ணிலாவை தேடிச் சென்றான்.
” நிலா! வாட்ஸ் யூவர் ஃப்யூச்சர் பிளான்?” என்று வினவ.
“லூசாடா நீ ! நான் காலேஜ்ல சேர்ந்ததிலிருந்து சொல்லிட்டு தானே இருக்கேன். வெளிநாட்டில் செட்டிலாகுறது தான் என் லட்சியம்.”
“அது தெரியும்டி! சீனியர் பத்தி நீ என்ன நினைக்கிற?” என்று வினவ
“உண்மையாகவே நான் என்ன சொல்ல வரேன்னு இன்னும் உனக்கு புரியலையா நிலா?
அவளோ ஒன்றும் கூறாமல் தலை குனிந்து இருக்க.
“நேராவே கேட்கிறேன். நீ சீனியர லவ் பண்றதானே?” என்று வினவ
“ ச்சே! ச்சே! அதெல்லாம் இல்லையே” என்று மனது வலிக்க உடனடியாக மறுத்தாள் வெண்ணிலா
“அப்படியா! ஆனா சீனியர் உன்ன லவ் பண்றாரு நினைக்கிறேன். உனக்காக வர நல்ல, நல்ல ஜாப் ஆஃபர் எல்லாம் வேணாம்னு சொல்லிட்டு இருக்காரே.”
“ நீ என்ன சொல்ற நகுல் “ என அதிர்ந்தாள் நிலா
“நான் சொல்றது இருக்கட்டும் நீ முதல்ல யுகா அண்ணா கிட்ட தெளிவா பேசிடு நிலா. இல்லனா. அவரோட லைப்பே ஸ்பாயிலாயிடும்.”
“ அப்படியெல்லாம் சொல்லாதே நகுல்.யுகி நல்லா இருக்கணும். நான் யுகி கிட்ட பேசுறேன்” என்றவள் வழக்கம் போல் யுகியும், அவரது நண்பர்களும் அரட்டை அடிக்கும் இடம் ஆன ஸ்போர்ட்ஸ் ரூம் இருக்கும் இடத்திற்கு அருகே உள்ள மரத்தடிக்கு சென்றாள்.
இன்னும் அந்த இடத்தில் சிசிடிவி கேமரா வைக்காமல் இருக்க அவர்கள் அரட்டை அடிப்பதற்கு அந்த இடம் வசதியாக இருந்தது.
இவள் சென்றதும் அகமும் முகமும் மலர்ந்த யுகித், முதல் முறையாக அவளாகத் தேடி வரவும், ‘காதல் சொல்லத் தான் வந்திருக்கிறாள்’ என்று எண்ணி மகிழ்ந்தான்.
தன்னருகே இருந்த நண்பர்களை பார்க்க. அவர்களோ அங்கிருந்து எழுந்து சென்றனர்.
“சொல்லு நிலா. ஃபர்ஸ்ட் டைம் நீயா என்ன தேடி வந்திருக்க. என்ன விஷயம்.” என்று வினவியவன் ஒருவித எதிர்பார்ப்புடன் அவளை ஆர்வமாக பார்க்க.
அவனது பார்வை அவளைத் தவிக்க வைத்தது.
முயன்று தன் மனதை கட்டுப்படுத்தியவள் முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு, “என்னாச்சு யுகி? ஏன் கேம்பஸ் இன்டர்வியூல வர ஜாப் ஆஃபரை எல்லாம் வேணாம்னு சொல்றீங்க? லூசா நீங்க?” என்று கேட்க.
அவள் காதல் சொல்லுவாள் என்று நினைத்திருந்த யுகித்,அவள் தன்னை லூசா என்று கேட்டதும் சுறுசுறுவென உள்ளுக்குள் கோபம் வர, ”இத சொல்ல தான் வந்தியா நீ? நான் ஏன் வேலையை வேணான்னு சொன்னேன். உனக்கு புரியலையாடி?” என யுகி கர்ஜிக்க,
“புரியல” என்பது போல் தலையாட்ட,
மேலும் அவனுக்குள் கோபம் பெருக, “உன்னை விட்டு பிரிய முடியாம தான்டி நான் எந்த வேலையையும் சேரல.” என்றான்.
“என்ன சொல்றீங்க யுகா?” என்று நிலா தயங்க,
”ம்…நான் உன்னை ரொம்ப லவ் பண்றேன்டி! போதுமா… நீயா வந்து காதலை சொல்லணும்னு தான் நினைச்சேன். ஆனா நீ சொல்ற மாதிரி தெரியலை. எஸ் ஐ ஸ்டில் லவ் யூ “ என்று அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே தன் காதலைக் கூறினான்.
எந்த வார்த்தையை அவன் வாயிலிருந்து கேட்கக்கூடாது என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தாலோ அதை அவன் கூறியே விட்டிருந்தான்.
அவளுக்கும், அவனை பிடிக்கும். ஆனால் இந்த ஜென்மத்தில் அவர்கள் சேர்வதற்கான வாய்ப்பு இல்லை. அதை நன்கறிந்தும், அவன் மனதை கலைத்ததை எண்ணி தன்னையே நொந்தவள், அதை வெளிக்காட்டாமல்,
“என்ன சொல்றீங்க யுகா? நான் அந்த மாதிரி எல்லாம் எதுவும் நினைக்கல. அப்படிப்பட்ட எண்ணத்தோட உங்களோட நான் பழகல. நான் என்னைக்காவது உங்களை விரும்புறேன்னு சொல்லியிருக்கேனா? நான் உங்கள ஒரு பெஸ்ட் பிரண்டா தான் நினைக்கிறேன். நீங்க என்னோட பெஸ்டி அவ்வளவு தான்.
இதுக்காகவா வந்த வேலையை விட்டீங்க.
சுத்த பைத்தியக்காரத்தனமா இருக்கு.”என்று சொல்ல.
அந்த வார்த்தையில் காயப்பட்ட யுகித்தோ,” என் காதல் உனக்கு பைத்தியக்காரத்தனமா இருக்கா?” என்று கோபப்பட.
“ நான் உங்கள லவ் பண்ணல. ஜஸ்ட் ஃப்ரெண்டா தான் நினைச்சேன்” என்று வெண்ணிலா மீண்டும் கூறினாள்.
“ஃப்ரெண்டு, பெஸ்டினு சொன்னதையே திரும்ப சொல்லாத நிலா. அந்த வார்த்தையை கேட்டாலே பத்திகிட்டு வருது.”
“ என்ன யுகா! இப்படி சொல்றீங்க… நீங்கதான முதல்ல ஃப்ரெண்டா இருக்கலாம்னு சொன்னீங்க. இப்ப என்னன்னா அந்த வார்த்தையை கேட்டா பத்திகிட்டு வருதுன்னு சொல்றீங்க. இப்படி மாத்தி மாத்தி பேசாதீங்க”
“நிலா உண்மையிலேயே என்னோட லவ் உனக்கு புரியலையா ? இல்ல என்கிட்ட நீ விளையாடுறியா?”
அவளோ ஒன்றும் கூறாமல் அமைதியாக இருக்க.
“ப்ளீஸ்மா! விளையாடதே! நான் உன்னை ரெண்டு வருஷமா சின்சியரா லவ் பண்றேன்”. என்று அவளை இறுக்கிக் அணைத்தான் யுகித்.
அவளோ மனதை கல்லாக்கிக் கொண்டு, அவனிடமிருந்து விடுபட முயன்றாள்.
“நான் உங்களை அப்படி எல்லாம் நினைக்கல சீனியர்” என்று அவளது மறுப்பை தெரிவிக்க,
அதை சற்றும் எதிர்பார்க்காத யுகித், அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.
“நிலா பொய் சொல்லாதடி! உனக்கு என்ன ரொம்ப பிடிக்கும்னு தெரியும்.”
”அதெல்லாம் இல்லை சீனியர். “என நிலா மறுக்க,
”சீனியர் என்று சொல்லாதேடி” என யுகித் அலற,
“ஃப்ரெண்டா நினைச்சு தான் யுகான்னு கூப்பிட்டேன். நீங்க தான் ப்ரெண்டுன்னு சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டீங்க. அப்புறம் சீனியர்னு தானே கூப்பிட முடியும்.” என்று அலட்சியமாக சொல்ல.
“என்னை வெறியேத்தாதடி!” என்றவாறு அவளது கழுத்தை நெறிக்க போக.
அதே நேரம் அவளைத் தேடிக் கொண்டு நகுலன் அங்கு வந்து சேர்ந்தான்.
யுகித், வெண்ணிலாவின் கழுத்தை நெறிப்பதை பார்த்து பதறியவன், வெண்ணிலாவை அவளிடம் இருந்து பிரித்து தன் பக்கம் இழுத்தவன்,”என்ன காரியம் பண்றீங்க யுகிண்ணா?” என.
“அவ என்னை லவ் பண்ணலையாம்.” கலங்கிய கண்களுடன் கூற.
“அவளுக்குப் பிடிக்கவில்லைன்னா விட்டுடுங்கணா.”
“அவ பொய் சொல்றாடா!”
“பொய்யோ, உண்மலயோ, அவ வேண்டாம்னு சொல்லிட்டா, தொந்தரவு பண்ணக் கூடாது.” என்று தோழிக்கு ஆதரவாக நகுலன் கூற.
“அப்படியெல்லாம் விட முடியாது.” ஆக்ரோஷமாக கத்த.
“அதுக்காக அவளை கொலை பண்ணுவீங்களா?” என்று நகுலனும் எகிற.
“ஆமாம் அப்படித் தான் பண்ணுவேன். சும்மா எல்லாம் விட முடியாது. உன்னால என்ன என்ன பண்ண முடியும் “என்றவன் மீண்டும் வெண்ணிலாவிடம் வர.
அவனை தள்ளி விட்டான் நகுலன்.
நகுலனை அடிப்பதற்கு கையை ஓங்கினான் யுகித்.
இருவருக்கும் நடுவில் வந்து கண்ணீர் வழிய நின்றாள் வெண்ணிலா.
“ச்சே!” என்று கையை இறக்கிய யுகித், “என் ஃப்ரெண்டோட தம்பின்னு பார்க்கிறேன். இல்லையென்றால் நடப்பதே வேறு .” என்று மிரட்டினான்.
“நா என் அண்ணனோட ஃப்ரெண்டுன்னு எல்லாம் பார்க்க மாட்டேன். எனக்கு என் ப்ரெண்டு வெண்ணிலா முக்கியம். அவக் கிட்ட ஏதாவது வம்பு பண்ண நான் சும்மா இருக்க மாட்டேன்.” என்று அவனை மிரட்டி விட்டு, வெண்ணிலாவை அங்கிருந்து அழைத்துச் சென்றான் நகுலன்.