முகவரி அறியா முகிலினமே -12

5
(5)

முகில் 12

இந்த எட்டு பேர்களில் ஒருவன் தடியால் ஆதிரனை தாக்க அந்த எதிர்பாராத தாக்குதலினால் இரண்டடி தள்ளி போய் விழுந்தான் ஆதிரன்.

விழுந்து உடனே எழுந்தவன்,
“பேசிக் கொண்டிருக்கும் போது யாருடா அது மேல கை வச்சது உண்மையான ஆம்பளையா இருந்தா இப்போ வாங்கடா..” என்று பெட்டியை கீழே இறக்கி வைத்து, கையில் இருந்த தனது நவீனரக கைக்கடிகாரத்தை கழட்டி, சட்டை காலர் பட்டனை திறந்து இரு கைகளிலும் சேட்டை மடித்து விட்டான்.

கையில் எந்த ஆயுதமும் இல்லாமல் நிராயுதபாணியாக அவர்கள் முன் நின்றாலும் மனதில் தன்னம்பிக்கையுடன் போரிட தயாராகினான் ஆதிரன்.

அவனது துணிச்சலை பார்த்து அங்கிருந்தவர்கள் சற்று அசந்து தான் போயினர். மிரட்டி இரண்டு அடி அடித்தால் ஓடி விடுவான் என்று எண்ணியிருந்தவர்கள் அவன் எதிர்த்து சண்டைக்கு நிப்பான் என்று நம்பவே இல்லை.

எட்டு பேர்களில் இருவர் முன் வந்து அவனோடு சண்டையிட அவர்களின் தாக்குதலில் இருந்து லாவகமாக தன்னை காப்பாற்றிக் கொள்ள ஆதிரன் முயற்சி செய்தான்.

அங்கிருக்கும் மண்வெட்டி ஒன்றை பார்த்தவன் அதில் அந்த பிடியை கழற்றி ஒவ்வொருவரையும் அந்தக் கட்டையால் பதம் பார்த்தான்.

அவனது அடி ஒவ்வொன்றும் அந்த இருவர் மீதும் இடியாக விழுந்தது.

தனது நண்பர்கள் அடிவாங்கி துவண்டு போவதை பார்த்ததும் மீதி ஆறு பேரும் ஒன்றாக களமிறங்கி ஆதிரனை தாக்கத் தொடங்கினர்.

முதலில் அந்த ஆறு பேரின் தாக்குதலை ஒன்றாக சமாளிக்க முடியாமல் திணறிப் போன ஆதிரன் பின்பு நிலைமையை தனது கட்டுக்குள் கொண்டு வர கொஞ்சம் திண்டாடித்தான் போனான்.

ஓரிரு அடிகள் அவன் மீது பட்டாலும் அதனை பொருட்படுத்தாமல் எதிரிகளை துவம்சம் செய்வதில் குறியாக இருந்தான்.

அந்தக் கட்டையால் சுழற்றி சுழற்றி அடிக்க இருவரின் தடி எங்கோ பறந்து போனது. கையில் கத்தியுடனும் அருவாலுடனும் நின்றவர்களை எட்டி உதைத்து வீழ்த்தினான்.

தலையில் பலமாக அந்தக் கட்டையால் அடித்தான். அதில் ஒருவன் பின்புறமாக ஆதிரனுக்கு தெரியாமல் பெரிய அருவாளுடன் அவனை வெட்ட வர அந்த எதிர்பாராத சம்பவம் கண்முன்னே நடந்தேறியது.

அந்த ஆபத்தான நிலைமையில் எங்கிருந்துதான் செந்தாழினி வந்தாளோ தெரியவில்லை ஆதிரனை அந்த ரவுடி வெட்ட அருவாளை ஓங்கிய நேரம் “ஆதிரன் சார்..” என்று பெருங்குரலெடுத்து கத்தியபடி ஓடி வந்தாள் செந்தாழினி.

அந்நேரம் சுதாரித்துக் கொண்டு ஆதிரன் விலக பின்னிருந்து இருவர் வந்து ஆதிரனின் இரு கைகளையும் பிடித்து அவனை எங்கும் நகர விடாமல் பிடித்திருந்தனர்.

எதிரில் ஒருவன் கையில் கத்தியுடன் ஆதிரனை குத்துவதற்காக நெருங்கி வர செந்தாழினி ஓடி வந்து அந்தக் கத்தியை கையினால் பிடித்து இழுத்தாள்.

அவள் பிடித்து இழுக்க ஆதிரனை பிடித்திருந்தவனில் ஒருவன் செந்தாழினிக்கு நெருங்கியவன் போல உடனே செந்தழினியை ஓடி வந்து பிடிக்க அந்த நேரம் பார்த்து ஆதிரன் மற்றவனை தூக்கி கீழே போட்டு பந்தாடினான்.

செந்தாழினியோ கத்தியை விடாமல் இறுக பற்றி நிற்க அந்தக் கத்தியை அந்த ரவுடி உறுவி எடுக்க அது கையை கிழித்துக்கொண்டு குருதிப்புனலுடன் வெளிவந்தது.

கையில் இருந்து பெருக்கெடுத்த இரத்த வெள்ளத்தைப் பார்த்ததும் செந்தாழினி பயந்து மயங்கி சரிந்து விழுந்தாள்.

அவள் குருதி ஆறாக வலிய விழுந்து கிடப்பதைப் பார்த்ததும் ஆதிரனுக்கு எப்படித்தான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை அங்கிருக்கும் அனைவரையும் புரட்டிப்போட்டு துவைத்தெடுத்தான்.

அவனது அதிரடியான தாக்குதலை தாங்க முடியாத அந்த எட்டு பேரும் “ஐயோ.. அம்மா..” என்று தலை தெரிக்க ஓடினர்.

அவர்களை விரட்டி விரட்டி அடித்தவன் அவர்கள் தொலைதூரம் ஓடிய பின்பு மீண்டும் செந்தாழினி விழுந்து கிடந்த இடத்திற்கு வந்து அவளை தூக்கிக்கொண்டு நதி அருகே கிடத்திவிட்டு அதிலிருந்து நீரை கையால் அள்ளி அவளது அழகிய வதனத்தில் தெளித்தான்.

மயக்கம் தெளிந்து விழித்த செந்தாழினி முதலில் தன்னை கூட கவனிக்காமல்,
“ஆதரன் சார் உங்களுக்கு ஒன்றும் ஆகலையே..!” என்று அவனது கை கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதா எனத் தொட்டுப் பார்த்தாள்.

ஆதிரனோ அவளது அளவில்லாத அன்பை கண்டு கண்களில் நீர் கசிய இல்லை என்று மறுப்பாகத் தலையாட்டினான்.

அவனால் அவளது பாசத்தை நன்கு உணர முடிந்தது. இருந்தும் ஏன் இப்படி, இவ்வாறு எதற்காக எனக்காக தானா இவ்வளவும் என்று அவனது மனது அவனை ஆயிரம் கேள்விகளைத் தொடுத்தது.

ஆனால் அந்நேரம் அதனை அவளிடம் கேட்கும் தைரியம் அவனுக்கு வரவில்லை. அவளது கையில் இருந்து ஆறாகப் பெருகும் இரத்தத்தை பார்த்ததும்,

“செந்தாழினி எனக்கு ஒன்னும் இல்ல வா கைக்கு மருந்து போடணும் இங்க பாரு எவ்வளவு ரத்தம் போகுதுன்னு..”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல சார் சின்ன காயம் தான் நீங்க ஊருக்கு கிளம்புங்க நான் பாத்துக்குறேன்..”

“இல்ல செந்தாழினி இந்த நிலைமையில உன்ன தனியா விட்டுட்டு நான் ஊருக்கு போகல முதல் வா உன்னோட காயத்துக்கு மருந்து போடணும்..”

“சார் சார்  உங்க அக்காவ சரியான டைமுக்கு ஹாஸ்பிடல் சேர்க்கணும் இப்போ அவங்க தான் உங்களுக்கு ரொம்ப முக்கியம் நீங்க உடனே புறப்படுங்க..”

“ஏன் செந்தாழினி அடம் பிடிக்கிற எனக்கு அவங்களும் முக்கியம்தான் ஆனா உன்னோட உயர விட என்னோட உயிர் தான் முக்கியம் என்று எனக்காக எதையும் செய்ய துணிஞ்ச உனக்காக இத கூட நான் செய்ய மாட்டேனா..?”

“அய்யய்யோ இப்படி எல்லாம் பேசி என்ன பெரிய மனசி ஆக்கிடாதீங்க சார் சரி நான் மருந்து போட்டா நீங்க போயிடுவீங்க தானே வாங்க பக்கத்துல தான் மருத்துவரோட வீடு இருக்கு பத்து நிமிஷத்துல போயிடலாம்..” என்று ஆதிரனுக்கு மருத்துவரிடம் செல்வதற்கு வழி காட்ட அவள் காட்டிய திசையில் அவளுடன் மருத்துவரின் வீட்டுக்கு விரைந்தான் ஆதிரன்.

கையில் இருந்து ரத்தம் அதிக அளவு வெளியேறாமல் இருக்க தனது கைக்குட்டையை அவளது இரு கைகளிலும் இணைத்து கட்டியதும் அவனது கரிசனையையும், அன்பையும் பார்த்து செந்தாழினி மனதளவில் நெகிழ்ந்து தான் போனாள்.

மருத்துவரின் வீடு வந்ததும் வாசலில் இருந்து சிகண்டி ஐயா சிகண்டி ஐயா..” என்று சத்தம் வைத்தாள் செந்தாழினி.

உள்ளிருந்து 80 வயது மதிக்கத்தக்க ஒரு வயோதிபர் மெதுவாக நடந்து வெளியே வந்தார். அந்த குடிசையை சுற்றி அங்கங்கே பச்சை பசேல் என மூலிகைகளும், மரங்களும் அழகாக நடப்பட்டு இருந்தன.

“யாரு நம்ம செந்தாழினி புள்ளையா..?”

“பரவாயில்லையே இத்தனை வயசாகியும் என்னோட குரலை மதிச்சுட்டீங்களே..! நான்தான்..”

“வயசுல என்ன இருக்குமா? என்ன புள்ள உங்க அப்பனுக்கு ஏதும் உடம்புக்கு முடியலையா..? நீ அவ்வளவு சீக்கிரம் என்ன தேடி வர மாட்டியே..!”

“இல்ல ஐயா ஒரு சின்ன அடிதடி ஆகிப்போச்சு அதுக்கு நடுவுல நான் குறுக்க வந்துட்டேன் அதனால கையில சின்ன காயம் மருந்து போட்டு விடுங்க நான் சீக்கிரம் கிளம்பனும்..”

“எங்க புள்ள காட்டு பாப்போம்..”

இதோ என்று ஆதிரனின் கை குட்டையை கழட்டிக் காயத்தை மருத்துவரிடம் காட்டினாள்.

“என்ன பிள்ளை இது இவ்வளவு பெருசா காயம் வந்திருக்கு சின்ன காயம்ன்னு சொல்ற கொஞ்சம் பொறு முதல் இரத்தம் வெளியேறத கட்டுப்படுத்தனும்..” என்று அருகில் இருக்கும் செடிகளில் எதையோ தேடினார்.

அதில் ஒரு செடியின் இலைகளைப் பறித்து கையினால் கசக்கி அதன் சாறை காயங்கள் மீது பிழிந்தார்.

அதன் சாறு பட்டதும் செந்தாழினி வலியில் துடித்தாள். “கொஞ்சம் வேதனையா தான் இருக்கும் பொறுத்துக்கோமா..” என்று மருத்துவர் கூற,

ஆதிரன் மனதளவில் அவளது வலியை உணர்ந்தவன் பெரிதும் கவலை கொண்டான். வலியை அடக்கிக் கொண்டு ஆதிரனுக்காக அவனைப் பார்த்து புன்னகைத்தபடி,

“அய்யா மருந்து கட்டினா ரெண்டு நாள்ல சுகமாயிடும் நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க சார்..” என்று வலியை விழுங்கியபடி பற்களால் உதட்டை கடித்த வண்ணம் கூறினாள் செந்தாழினி.

ஆதிரன் தன்னால்தான் இவ்வாறு ஏற்பட்டது என்று குற்ற உணர்ச்சி அவனது மனதில் தோன்றி விடக்கூடாது என எண்ணி தனக்காக செந்தாழினி இவ்வளவும் செய்கிறாள் என்று எண்ணியவன் வியந்தே  போனான்.

அய்யா செந்தாழனியை அருகில் இருக்கும் திண்ணையில் இருக்க வைத்துவிட்டு,

“கொஞ்சம் பொறுமா நான் மருந்து தயாரிச்சுட்டு வாரேன் ரெண்டு நாள் தொடர்ந்து பத்து போட்டா சரியாகிவிடும் ஆனால் தண்ணியில காயம் நனையாமல் பார்த்துக் கொள்ளணும்..” என்று கூறிவிட்டு அருகில் உள்ள மூலிகை தோட்டத்திற்குள் சில இலைகளை பறித்து விட்டு உள்ளே சென்றார் மருத்துவர்.

செந்தாழினியின் காயத்தை வாயினால் ஊதி ஊதி அதன் வலியை குறைக்க ஆதிரன் முயற்சி செய்ய, அவன் வாயினால் ஊத செந்தாழினிக்கு காயத்தின் மேல் இட்ட மருந்தின் வலியோ குறைந்து இதமாக இருந்தது.

உள்ளிருந்து மருந்தை தயாரித்து வந்த மருத்துவர் இரு கைகளுக்கு மருந்து இட்டு துணியால் கட்டி நாளை இதே நேரத்துக்கு மருந்த மாற்றிக் கட்டணும் இங்கே மறக்காமல் வந்துடு..” என்று கூற,

“சரி சிகண்டி அய்யா அப்போ நான் கிளம்பவா..?” என்று செந்தாழினி கேட்க,

“நல்லதுமா போயிட்டு வா..” என்று விடை கொடுத்தார் மருத்துவர்.

ஆதிரனோ அவர்கள் இருவரின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவன்,

“கொஞ்சம் இரு செந்தாழினி ஐயாவுக்கு காசு எதுவும் கொடுக்க வேண்டாமா..?” என்று கேட்டதும் வைத்தியருக்கு கோபம் தலைக்கேறியது.

“என்ன தம்பி இப்படி சொல்றீங்க அது என்னோட பேத்தி மாதிரி அதுக்கிட்ட போய் நான் காசு வாங்குவானா இந்த தொழிலை நான் தெய்வமாக மதித்து செய்கிறேன் இப்படி எல்லாம் சொல்லி என்னோட மனச காயப்படுத்தாதீங்க அந்தப் புள்ள எனக்கு எவ்வளவு உதவி செய்திருக்கு

நான் இப்போ உயிரோட வாழ்றதுக்கே இந்தப் பொண்ணுதான் காரணம் அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது நீங்க பட்டணத்துக்காரர் தானே முதல் இங்க இருந்து போயிருங்க..” என்று கூறியதும் பாக்கெட்டில் இருந்து எடுத்த பர்சினை மீண்டும் பாக்கெட்டுக்குள் வைத்தவன் அப்படியே கண்கள் சொருக சரிந்து விழுந்தான்.

மருத்துவருக்கும், செந்தாழினிக்கும் பெரும் அதிர்ச்சியாகிப் போனது. இப்பொழுதுதான் நட்ட மரம் போல் நன்றாக நின்ற மனிதன் எப்படி புயலில் சிக்குண்டது போல சரிந்து விழுந்தான்.

“சிகண்டி ஐயா சீக்கிரமா என்னென்னு பாருங்களேன் ஆதிரன் சார் ஆதிரன் சார்..” என்று ஆதிரனது கன்னம் தட்டி அவனை எழுப்புவதற்கு செந்தாழினி முயற்சி செய்தாள்.

ஆனால் ஆதிரனோ அசைவற்று அப்படியே துவண்டு போய் கிடந்தான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!