முகில் 13
திடீரென ஆதிரன் சரிந்து விழுந்ததும் செந்தாழினியும், மருத்துவர் ஐயாவும் ஒரு கணம் அனைத்தும் மறந்து அதிர்ச்சியில் திகைத்திருந்தனர்.
முதலில் நிதானத்திற்கு வந்த வைத்தியரோ,
“செந்தாழினி ஒரு கை பிடிச்சு இந்த பையன தூக்கு உள்ள கொண்டு போய் என்னென்ன பாப்போம்..”
“ஐயா இவரைத்தான் சண்டையில எட்டு பேர் அடிக்க வந்தாங்க அவருக்காக நான் போய் தான் எனக்கு காயம் வந்துடுச்சு அப்படி ஏதும் இவருக்கு அடிபட்டு இருக்கா என்று முதல் பரிசோதிச்சு பாருங்க..” என்று கைகள் நடுங்க பதற்றத்துடன் கூறினாள் செந்தாழினி.
“சரிமா முதல் உள்ள கொண்டு போவோம்..” என்று வைத்தியர் ஐயாவோ கைகளைப் பிடித்து இழுக்க செந்தாழினி அவனது காலை பிடித்துக் கொண்டு மெதுவாக தூக்கி உள்ளே இருந்த கயிற்றுக் கட்டிலில் அவனை படுக்க வைத்தனர்.
செந்தாழினி மெதுவாக அவனது சட்டை பட்டன்களை கழற்றி விட உடனே வைத்தியர் அருகிலுள்ள விளக்குகளை பற்ற வைத்து அவனது உடலை தடவி ஏதும் காயம் தென்படுகின்றதா என்று ஆராய்த்தார்.
மேல்புறம் எந்த காயமும் இல்லாமல் தழும்புகள் மட்டும் சில காணப்பட பின்புறம் திருப்பிப் போடும்படி செந்தாழினிடம் கூறினார்.
அதன்படி ஆதிரனை மெதுவாக புரட்டி போட முதுகின் பின்புறம் கத்தியின் கீறல் ஒன்று இருந்தது.
ஆனால் அது பெரிய அளவான காயம் அல்ல. சிறிய கீறல் மட்டும்தான் அதற்கு ஏன் ஆதிரன் மயங்கி விழ வேண்டும் என்று இருவருக்குள்ளும் சந்தேகம் துளிர்த்தது.
செந்தாழினி அதனை வாய் விட்டு வைத்தியரிடம் கேட்டே விட்டாள்.
“என்னய்யா சின்ன கீறலுக்கு போய் மயங்கி விழுவாங்களா..?”
“அதுதான் பிள்ளை எனக்கும் புரியல கொஞ்சம் பொறு அந்த விளக்க கொஞ்சம் பக்கத்துல கொண்டு வா..” என்று பணிக்க,
செந்தாழினி உடனே விளக்கினை அருகில் எடுத்து வந்து வெளிச்சத்தில் அந்த காயத்தைக் காட்டினாள்.
காயத்தை தடவி அதிலிருந்து கசிந்த ரத்தத்தை எடுத்து முகர்ந்து பார்த்த வைத்தியரின் கண்களோ ஆச்சரியத்தில் விரிந்தன.
அவரின் முகமாற்றத்தை சடுதியில் கண்டுகொண்ட செந்தாழினி,
“எதுவும் பிரச்சனையா..?” என்று மனதில் சிறு பயத்துடன் கேட்டாள்.
“ஆமா செந்தாழினி இதை பாக்க எனக்கு ஏதோ நல்ல பாம்பு விஷம் தடவி குத்தின மாதிரி சந்தேகமா இருக்கு அந்த மரப்பெட்டிய தூக்கிட்டு வா..” என்று கூறியதும் மின்னலென ஓடிச் சென்று மரப்பெட்டியை தூக்கி வந்து வைத்தியர் ஐயாவின் அருகில் வைத்தாள்.
அதை திறந்து அதிலிருந்து ஒரு வெண்ணிற எண்ணெய் ஒன்றை எடுத்தவர் அவனது ரத்தத்தை ஒரு சிறு துணியால் துடைத்து அந்த எண்ணெயை அந்தத் துணியின் மீது இரண்டு சொட்டு விட்டார்.
உடனே ஆதிரனின் இரத்தம் நீல நிறமாக மாறியது. அதனை அவதானித்த செந்தாழினிக்கு இதயம் இடறி விழுந்தது போல இருந்தது.
‘அய்யய்யோ நம்மள நம்பி வந்தவருக்கு இப்படி ஆகிவிட்டதே எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அதுவே நடந்து போயிருச்சு இப்ப இவங்களோட அம்மா, அப்பாவுக்கு யாரு பதில் சொல்றது பிரகாஷ் அண்ணா என்ன நம்பி ஒப்படைச்ச பொறுப்பை நான் கைவிட்டுட்டேனே..’ என்று மனதளவில் நொந்து போனாள் செந்தாழினி.
“வைத்தியர் ஐயா தயவுசெய்து இவரோட உயிரை நீங்க தான் காப்பாத்தி தரணும் இவர் பட்டணத்தில் இருந்து இங்கு ஊரை சுத்தி பார்க்க வந்தாரு பிரகாஷ் அண்ணா தான் என்னை பொறுப்பா பார்த்துக்க சொன்னாரு ஆனா இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கல்ல ஐயோ எந்த தப்பும் செய்யாத ஒரு நல்ல மனுஷனுக்கு இப்படி ஒரு தீங்கு வந்து சேர்ந்துட்டே..” என்று அழுது அவள் புலம்ப,
வைத்தியர் ஒரே ஒரு வார்த்தை மட்டும் தான் கேட்டார். “வரதராஜனா..?” என்றதும் செந்தாழியின் நெஞ்சம் அடைத்து விட்டது.
நெஞ்சில் கை வைத்தபடி “ஆம்..” என்று தலையாட்டினாள்.
“அதுதானே இந்த ஊருல இப்படி கேவலமான வேலை செய்றதுக்கு அவனத் தவிர வேற யாரு இருக்கா பொட்ட பையன் இப்படித்தான் ஊருல எதிர்த்து கேட்கிறவனெல்லாம் இல்லாம ஆக்கிர்றது அதுக்குப் பிறகு இந்த ஊர்ல என்ன கேள்வி கேட்க ஆளே இல்லைன்னு சொல்லிக்கிறது இவன மாதிரி ஆட்கள் இருக்கிற வரைக்கும் இந்த ஊரு உருப்படவே உருப்படாது..”
“அவனுக்கு எல்லாம் நல்ல சாவே வராது ஐயா இப்ப இவரோட உயிரை முதல் காப்பாத்துங்க..”
“செந்தாழினி நான் சொல்றேன்னு கோபித்துக் கொள்ளாத இந்த நல்ல பாம்பு விஷம் உடம்பில் ஏறி பத்து பதினைந்து நிமிஷத்துல ரத்தத்தில் கலந்து இருக்கும் அப்படி கலந்ததுன்னா தான் மயக்கம் வரும் இவர பெரிய ஆஸ்பத்திரியில சேர்க்கிறது தான் நல்லம் இப்ப என் கையில ஒண்ணுமே இல்ல காப்பாற்றுவது ரொம்ப கஷ்டம்..” என்றதும்,
அவளால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை ஆதிரன் சார இனி உயிரோட பார்க்க முடியாதா என்று மனதில் எண்ணிக் கொண்டவள் தலையில் அக்கணமே இடி விழுந்தது போல உணர்ந்தாள்.
அசைவற்ற பொம்மை போல அவள் சிலையானாள். சிறிது நேரத்தின் பின் நிலைமை கை மீறிப் போனதை உணர்ந்தவள் வேறு வழி இல்லாமல் வைத்தியரின் காலைப் பிடித்து அழத் தொடங்கி விட்டாள்.
“வைத்தியர் ஐயா உங்களால் முடியாதது எதுவுமே இல்லை இப்படி நீங்க சொன்னா எப்படி இவரை இந்த நேரம் எங்க போய் யார கூப்பிட்டு பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறது
அதுக்குள்ளே ஏதும் நடந்திருச்சுன்னா என்ன பண்றது உங்கள நம்பித்தான் நான் வந்து இருக்கேன் இப்படி கைவிட்டாதிங்க உசுரு சம்பந்தப்பட்ட விஷயம் நீங்க தான் கடவுளாக இருந்து காப்பாற்ற வேண்டும்..” என்று அவள் அழ,
அந்த அழுகை சத்தம் ஆதிரனின் காதிற்கு கேட்டதோ என்னவோ தெரியவில்லை ஆதிரன் சிறு முனகலுடன், “செந்தாழினி..” என்று அழைத்தான்.
உடனே பாய்ந்து அவன் அருகே சென்ற செந்தாழினி,
“சொ..சொல்லுங்க… சொல்லுங்க.. சார்..” என்றதும் மீண்டும் மயக்கத்திற்கு சென்றான்.
“பாருங்க வைத்தியர் ஐயா அவருக்கு நினைவு இருக்கு எப்படியும் காப்பாற்றலாம் நீங்க செய்ற வைத்தியத்தை செய்ங்க நான் கும்பிடுற தெய்வம் என்னை கைவிடாது..”
“சரி செந்தாழினி ஆனா அதுக்கு அப்புறம் இந்த பையனோட உயிருக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டாலோ இல்லான்னா என்னோட வைத்தியம் பலிக்கலன்னா நீ அதுக்கு அப்புறம் என் மேல பழி போடக்கூடாது..”
“அப்படியெல்லாம் நடக்காது எனக்கு உங்க மேல முழு நம்பிக்கை இருக்கு அவருக்கு ஒன்னும் ஆகாது உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் கேளுங்க நான் செய்றேன் அவரு எப்படியும் கண் முழிச்சா எனக்கு அது போதும்..” என்று அவள் திக்கித் திணறி கூற,
வைத்தியர் செந்தாழினி அளித்த தைரியத்தில் முழுமையாக தனது மருத்துவத்தை நம்பி ஆதிரனை காப்பாற்றும் பணியில் இறங்கினார்.
வைத்தியர் கேட்கும் பொருட்களை எல்லாம் அருகில் எடுத்து வைக்க என்னை காய்த்து அதில் சில மூலிகைகளை போட்டு அதில் இருந்து சாரை பிழிந்து எடுத்து காயத்தின் மீது வைத்து பத்து போட்டு கட்டினார்.
பின்பு ஏதோ கசாயம் ஒன்றை தயாரித்து அவனுக்கு மெதுமெதுவாக வாயினுள் புகட்டினார்.
அந்த கசாயம் குடித்து ஒரு அரை மணி நேரத்துக்கு பின்பு ஆதிரனின் உடல் நடுங்கத் தொடங்கியது.
அவனது உடல் நடுக்கத்தை கண்டு பதறிய செந்தாழினி வைத்தியரின் முகத்தை பார்க்க,
அவரோ “இந்த மருந்து மிகவும் வீரியமானது அதனால் இப்படி உடலில் சில மாற்றங்கள் ஏற்படும்.
இது சாதாரண விசம் அல்ல இதை முறிப்பதற்கு மிகவும் சக்தி வாய்ந்த மூலிகைகளையே நான் பயன்படுத்தி இருக்கிறேன் அதனால் கொஞ்சம் பொறுத்து இரு எல்லாம் அந்தக் கடவுள் அருளால் சரியாகிவிடும்
முடிந்தளவு என்னிடம் இருக்கும் அற்புத மூலிகைகளை நான் பயன்படுத்தி இருக்கிறேன் ஒரு மூன்று மணி நேரத்திற்கு அப்புறம் அவன் கண்விழித்தால் வெற்றி தான் ஆனாலும் அருகில் இருந்து கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்…” என்று கூறிவிட்டு வைத்தியர் வெளியே சென்று விட்டார்.
வைத்தியர் சென்றதும் வெளியே வந்து பார்த்தால் மிகவும் இருளாக இருந்தது. மணி இரவு 10 இருக்கும். தந்தையின் எண்ணம் அவள் கண் முன்னே அப்போது வந்து சென்றது.
‘ஒன்றுமே சொல்லாம வந்துட்டேன் குடிச்சிட்டு அப்பா என்னை இந்நேரம் தேடிக்கிட்டு இருப்பார் சாப்பாட்டுக்கு என்ன செய்தாரோ தெரியல காலையில சமைச்ச சாப்பாடு அப்படியே கிடக்கு ஆனாலும் நான் பரிமாறாமல் அவர் சாப்பிட மாட்டாரே..” என்று தந்தையின் நினைவில் சிறிது நேரம் மருகியவள் திரும்பி ஓடி சென்று ஆதரனின் அருகில் அவனைப் பார்த்த வண்ணம் அப்படியே இருந்தாள்.
மூன்று மணி நேரம் கடந்து நான்காவது மணித்துளிகள் சென்று கொண்டிருக்க செந்தாழினிக்கோ இதயம் மிக வேகமாக துடிக்க தொடங்கியது.
செந்தாழியின் மனதிலோ எதிர்மறையான எண்ணங்கள் தோன்ற அவளால் அவ்விடத்தில் இதற்கு மேல் இருக்க முடியவில்லை.
வெளியே சென்று வைத்தியர் ஐயாவை தேடி அழைத்து வந்தவள், உடல் பதற,
“வைத்தியர் ஐயா நீங்க சொன்ன நேரம் முடிஞ்சிருச்சு ஆனா இன்னமும் காதலன் சார் எழுந்திருக்கவே இல்லை என்னன்னு கொஞ்சம் பாருங்களேன்..” என்று தவிப்புடன் கூற,
ஆதிரனின் நாடித்துடிப்பை பரிசோதித்துப் பார்த்தவர்,
“நீ பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல இல்ல நாடித்துடிப்பு சீராக தான் இருக்கிறது. பையன் குடிச்ச மருந்துட வீரியத்தினால் மயக்கத்துல இருக்கான்னு நினைக்கிறேன் காலைல எப்படியும் எழுந்திருச்சுருவான் நீ கொஞ்சம் கண் மூடி தூங்கு..” என்று வைத்தியர் கூறியும் செந்தாழினிக்கு மனதில் பயம் கொஞ்சமும் குறையவில்லை.
ஆதிரன் கண் விழிக்கும் வரை அவனுக்காக சிறுபொழுதும் கண்ணுறங்காமல் காத்திருந்தாள் பேதையவள்.
இருளை விரட்டியபடி தன் ஒளிக்கீற்றை பரப்ப கதிரவன் கிழக்கு வானில் தோன்றினான். ஆனால் செந்தாழினியின் மனமோ பயம் என்னும் இருளிலேயே சிக்குண்டு தவித்தது.
மெதுவாக ஆதிரனின் அருகில் சென்று அவனது கரத்தினை நடுங்கும் தன் பிஞ்சு விரல்களால் தொட்டவள், கண்களில் நீர் குளம் கட்ட,
“ஆதிரன் சார்..” என்று மனம் உருகி அழைத்தாள் செந்தாழினி. ஆதிரனின் உடலில் எந்தவித அசைவும் இல்லை.
அவனது கரத்தினை தனது கைகளாலே ஏந்தி அதில் கண்ணம் புதைத்து அழத் தொடங்கினாள்.
அவளது கண்ணீர் அவனது கரத்தினை நனைத்தது. கண்ணீரில் தீண்டலில் உயிர் பெற்றவனாய் ஆதிரன் மெதுவாக கண் விழித்து,
“அம்மா.. அம்மா..” என்று சிறு முனகலுடன் சுற்றும் முற்றும் கண்களால் சுழற்றிப் பார்த்தான்.
Post Views: 227