முகவரி அறியா முகிலினமே – 7

5
(3)

முகில் 7

செந்தாழினி கூறியதைக் கேட்ட வரதராஜன் தீர்க்கமான முடிவெடுத்தவராக செந்தாழினியைப் பார்த்து,

“இங்க பாரு புள்ள நீ செஞ்சது தப்புதான் என்ன இருந்தாலும் ஊர் கட்டுப்பாடு என்று ஒன்று இருக்கு அத இங்க இருக்கிற மக்களே கடைப்பிடிக்காட்டி அப்போ எதுக்கு ஊர்ல பஞ்சாயத்து நீதி நியாயமெல்லாம்

அதனால நான் ஒரு முடிவெடுத்து இருக்கேன் அந்தப் பையன் பஞ்சாயத்துக்கு குறுக்க வந்து பேசினது பெரிய தப்பு அதோட ஊர் பெயர் தெரியாதவன் பஞ்சாயத்துக்கு உரிய மரியாதை கொடுக்கல இங்க இருக்குற பெரியவங்களையும், பஞ்சாயத்தையும், தீர்ப்பையும் அவமதித்ததால இந்த பஞ்சாயத்து அவனுக்கு ஐயாயிரம் ரூபாய் அபராதம் வழங்குது

அதோட என்ன இருந்தாலும் இந்த ஊரை நம்பி வந்தவனை இந்த ஊரை விட்டு போங்க என்று சொல்றது முறை இல்ல வந்தவங்கள வாங்க என்று உபசரிக்கிறது தான் எங்க ஊரு மரியாதை

அந்த மரியாதைக்கு கேடு வர பஞ்சாயத்து தலைவரா நான் விடமாட்டேன் ஆனா வந்தவரு வந்த வேலையை பார்த்துக்கிட்டு பத்து நாள்ல இந்த ஊரை விட்டு கிளம்பி போயிடனும்

ஏன் பத்து நாளுன்னு சொல்றேன்னா நாளையில் இருந்து நம்ம மாரியம்மன் கோயில் திருவிழா ஆரம்பமாகுது

திருவிழா ஆரம்பிச்சதிலிருந்து திருவிழா முடியிற பத்து நாள் வரைக்கும் யாரும் ஊருக்கு வந்தவங்க வெளியே கிளம்பக்கூடாது.

அதனாலதான் அந்த பத்து நாளைக்குள்ள அவர் வந்த வேலையை பார்த்துக்கிட்டு போயிடனும் அம்புட்டு தான் நான் சொல்றது இதுக்கு மக்களாகிய நீங்க என்ன சொல்றீங்க சொல்லுங்கப்பா நான் சொல்றது சரிதானே..!” என்று கூறியதும் மாடு தலையாட்டுவது போல அனைவரும் தலையாட்டி ஆமென அதனை ஆமோதித்தனர்.

செந்தாழினிக்கு அப்போதுதான் உயிரே வந்தது போல இருந்தது. வரதராஜன் பெரிய அளவில் தண்டனை கொடுத்து விடுவாரோ என்று பயந்து கொண்டு இருந்த செந்தாழினி அவரின் இந்த தீர்ப்பு மிகவும் கவலையாக இருந்தாலும் இத்துடனே இதனை முடித்து விட்டார் என்று மனதில் ஓரளவு நிம்மதி நிறைந்து கொண்டது.

அதோடு 5000 ரூபா அபராதம் எல்லாம் பெரிய தொகை தான் ஆனால் லட்சக்கணக்கில் உழைக்கும் ஆதிரனுக்கு இதெல்லாம் ஒரு பெரிய விடயம் அல்ல என்று சிந்தித்த செந்தாழினி பஞ்சாயத்து கலைந்த சிறிது நேரத்திலேயே ஓடிச் சென்று ஆதிரனை அடைத்து வைத்திருந்த வீட்டில் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.

அவளுக்கு பின்னே அவளது தோழி சந்திராவும், அவளது தந்தை சிவராசாவும் செந்தாழினியை பின்தொடர்ந்து வந்தனர்.

உள்ளே வந்து பார்த்தால் பெரும் கோபக் கனல் பொங்க தனது கோபத்தை அடக்க முடியாமல் ஆதிரன் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்த செந்தாழினிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

கதவு திறந்த கையுடன்,

“விடுங்க நான் போறேன் ரெண்டுல ஒன்னு இன்னைக்கு கேட்டே ஆகணும் இவங்க உங்களை எல்லாம் படிக்காதவங்க என்று இப்படி ஏமாத்துறாங்க உண்மையான சட்டம் என்னன்னு இங்க இருக்கிற மக்களுக்கு தெரியாது

இங்க இருக்கிறவங்க எல்லாம் கிணத்து தவளைகளாக தான் இருக்கிறாங்க

என்னால இந்த அக்கிரமங்களை எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்க முடியல செந்தாழினி விடு நான் இப்பவே போலீஸ் கிட்ட போறேன்

எனக்கு என்னவோ அவங்க தான் அந்த பொண்ண ஏதோ பண்ணியிருக்கணும் என்று தோணுது அந்தப் பொண்ணு வேற வாயை திறக்க மாட்டேங்குது..” என்று ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டு வெளியேறியவனை சிவராசாவும், செந்தாழியும், சந்திராவும் இழுத்துப் பிடித்தனர்.

செந்தாழினி ஓடிச் சென்று கதவை உள்ளே தாழிட்டு ஆதிரனின் அருகில் வந்து,

“ஐயோ சார் கொஞ்சம் பொறுமையா இருங்க நான் சொல்றதை முதலில் கேளுங்க..” என்று ஆதிரனின் கையைப் பிடித்துக் கெஞ்ச அருகில் இருந்த சிவாவும்,

“தம்பி கொஞ்சம் பொறுமையாக இருப்பா நீ கோபப்பட்டு ஒன்னும் ஆகப் போறதில்லை..” என்று கூறி அவனது கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்ய,

ஆதிரனோ ஜல்லிக்கட்டு காளை போல அடங்க மாட்டேன் என்று திமிறி கொண்டு நின்றான். உடனே சிவா ஓங்கி கன்னத்தில் ஒரு அரை விட்டான்.

அப்படியே அதிர்ந்து போய் நின்றது ஆதிரன் மட்டுமல்ல சந்திராவும் செந்தாழினியும் தான்.

இதுவரைக்கும் சந்திரா தந்தை யாருக்கும் அடித்து பார்த்ததே இல்லை. ஏன் சந்திராவிற்கு கூட தனது தந்தை அரைந்ததில்லை அப்படி இருக்கையில் வேறொருவனுக்கு கை நீட்டி அரைந்திருக்கின்றார் என்றால் அவளுக்கு அது ஆச்சரியம் தானே.

“என்ன தம்பி நானும் பாவம் போனா போகுதுன்னு சமாதானம் படுத்தலாம் என்று பார்த்தால் நீங்க கொஞ்சம் கூட சொல்றத கேட்கவே மாட்டேங்கிறீங்க இங்கே இப்படித்தான்..” என்று இறுதியில் கூறிய வார்த்தைகளை மிகவும் அழுத்திக் கூறினார்.

“இப்படித்தான்னா..” என்று புரியாமல் புருவங்கள் முடிச்சிட புரியாமல் அந்த வயதானவரைப் பார்த்து வினவினான்.

“இப்படித்தான்னா இப்படித்தான் இதுதான் இங்க நடைமுறை. இந்த நடைமுறையை பார்த்து தான் நாங்க அந்த காலத்தில் இருந்து வாழ்ந்து வருகிறோம்

இப்போ வரதராஜன் இதற்கு முதல் அவனோட அப்பா ஆளவந்தான் அதுக்கு முன்னுக்கு அவங்க அப்பா என்று காலாகாலத்துக்கு அவங்க தான் இந்த ஊரை ஆட்சி செஞ்சு வந்தாங்க

ஆனா வரதராஜன் இவ்வளவு காசு பணத்தோட இருக்கல பஞ்சாயத்து தலைவரா இருந்தாலும் அவனோட அப்பனே பொம்பள சோக்குல எல்லாத்தையும் அழிச்சிட்டான்

ஆனால் சில வருடங்களுக்கு முன்பு என்று செந்தாழினியைப் அவர் பார்த்து கண்கலங்க செந்தாழினி சிவா சொல்ல வரும் விடயத்தை வேண்டாம் என்று கண்களால் சைகை காட்ட, சில நிமிடங்களில் சிவராசாவின் வார்த்தைகள் தந்தி அடித்தன.

“சில வருடங்களுக்கு முன்பு என்ன..?” என்று ஆதிரன் கூற வந்த விடயத்தை கூறாமல் சிவராசா தவிப்பதை பார்த்து அவரின் பேச்சைத் தூண்டினான்.

“அது பெரிய கதை தம்பி அவனுங்கட அராஜகம் கொஞ்சம் நெஞ்சம் இல்லை இங்க ஊரில இருக்கிற எல்லாருக்கும் அது நல்லாவே தெரியும் அவன் அநியாயம், அக்கிரமம் பண்றான்

தீர்ப்பு என்ற போர்வையை சுத்தி வச்சு பொண்ணுங்க நம்ம சாதி சனங்கள துஷ்பிரயோகம் பண்றான்.

ஆனா எங்களுக்கு வேற வழி இல்லை பிறந்த மண்ணுல வாழனும் என்ற ஆசையில இங்கே கிடந்து சீரழிந்து கொண்டிருக்கிறோம்

அதோட இவன் என்றாலும் பரவாயில்லை

இவனுக்கு பிறந்திருக்கானே ஒரு மகன் அவன் எல்லாம் எந்த ரகத்திலும் சேர்க்கவே முடியாது

அவனுக்கு என்று புதுசா ஒரு பெயர் உருவாக்கனும் அப்படி ஒரு கேடு கெட்டவன் அந்த பொண்ணுக்கு நடந்தது காரணம் அவனுக தான்

அது அந்த பொண்ணோட அம்மா அப்பா தொடக்கம் அந்த பஞ்சாயத்தில இருக்க எல்லாருக்குமே தெரியும் ஆனா ஒருத்தரும் முன் வந்து சொல்ல மாட்டாங்க ஏன் மூச்சே விடமாட்டாங்க ஏன்னா அன்னையோட அவங்கட மூச்சு நின்னுரும்

அவனை எதிர்த்து பேசுறவங்கள சில நாட்களிலேயே கொன்னுடுவான் இல்லன்னா கால், கை இல்லாம முடம் ஆக்கிடுவான் நீங்க இந்த ஊருல கால், கை ஒன்னு இல்லாம முடமா திரிகிறவன் எல்லாம் வரதராஜனையும், செந்தூரனையும் எதிர்த்து பேசினவங்க தான்

ஊருக்குள்ள இன்னும் அப்படிப்பட்டவங்கள நீங்க இன்னும் கண்ணுல காணலன்னு தான் நினைக்கிறேன்

தம்பி இங்க பாருங்க உங்கள பார்த்தா என்னோட மகள ஒத்த வயசுல இருக்கீங்க உங்கள பெத்த பிள்ளையா நினைச்சு சொல்லிக்கிறேன் கேளுங்க

நீங்க வந்தீங்களா சுத்தி பார்த்தீங்களா எல்லாரையும் படம் பிடிச்சீங்களா அதோட போயிடுங்க இந்த ஊரு வம்பு தும்பெல்லாம் உங்களுக்கு தேவை இல்லாத விஷயம் ஏதோ நல்ல காலம் அவங்க மன்னிச்சு விட்டுட்டாங்க இல்லன்னா இன்னைக்கு பஞ்சாயத்துல உங்கள உண்டு இல்லைன்னு பண்ணி இருப்பாங்க

ஆனா அதுவும் சந்தேகமா தான் இருக்கு உங்கள விட்டு வச்சிருக்காங்க ஏதோ ஒரு பிரச்சனைய உண்டு பண்ண போறாங்கன்னு தோணுது ஏன்னா அவ்வளவு சீக்கிரமா அவங்கள எதிர்த்து கேள்வி கேட்டாவங்கள அவங்க ஒருபோதும் சும்மா விட்டதில்லை

எதுக்கும் கவனமா இருங்க இந்தா புள்ள செந்தாழினி தம்பியை கவனமா கூட்டிட்டு போ இன்னும் பத்து நாள் இருக்க சொல்லி இருக்காங்க ஆனா எனக்கு ஒன்னும் நல்லதா படலம்மா அவரை நாளைக்கு ஊருக்கு கிளம்ப சொல்லு..” என்று கனிவோடு கூற,

“ஏன் சிவப்பா இவங்களை எல்லாம் பார்த்து பயப்படுறீங்க இவனுகள எல்லாம்…” என்று செந்தாழினி பற்களை கடிக்க,

“என்ன புள்ள நீயும் இப்படி பேசுற அந்த பையன் ஒரு சூதுவாது தெரியாம பேசுறான்னா நீ வேற

இங்க இருக்கிற உனக்கு வருடக்கணக்கா அவங்கள பத்தி நல்லா தெரியும் தானே அந்த பிள்ளை பட்டணத்துல படிச்சிட்டு வந்து இங்கு வந்து உயிரை விடணுமா சொல்லு…” என்று கூறவும் ஒரு நிமிடம் அவளது கடந்த கால வாழ்க்கை கண் முன்னே வந்து நின்றது.

உடனே நெஞ்சில் கை வைத்தபடி ஆதிரனைப் பார்த்து,

 “சார் நீங்க நாளைக்கே ஊருக்கு கிளம்புங்க இங்க இருக்க வேணாம் நான் பிரகாஷ் அண்ணாவோட பேசுறன்..” என்று கண்களில் பயத்துடன் கூறினாள் செந்தாழினி.

“அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை அவங்க தான் பத்து நாள் வரைக்கும் டைம் தந்திருக்காங்கல்ல நான் பத்து நாள் வரைக்கும் இருந்து எல்லாத்தையும் சுத்தி பாத்துட்டு போறேன்

அதோடு உங்க திருவிழா நாளைக்கு தொடங்குது திருவிழா தொடங்கின பிறகு நான் எப்படி வெளியே போக முடியும் பத்து நாள் வரைக்கும் நான் கவனமாய் இருக்கிறேன்

பத்து நாளுக்குள்ள எனக்கு இந்த ஊரை சுத்தி காட்டுனீங்கன்னா எனக்கு அது போதும் நான் இனிமே எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டேன்..” என்று சிவராசாவை பார்த்து ஆதிரன் கூற,

“சரிப்பா அதுதான் ஒரு வம்பு தும்புக்கும் போக மாட்டேன்னு சொல்லிட்டல்ல தம்பி எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க..” என்று கூறிவிட்டு சந்திராவும் அவளது தந்தை சிவாவும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர்.

அவர்களுடன் சேர்ந்து அதிரடிம் செந்தாழியும் வீட்டில் இருந்து வெளியே வர,

“செந்தாழினி எனக்கு கொஞ்சம் மனசு சரியில்ல எங்கேயாவது மனசுக்கு அமைதி கிடைக்கிற மாதிரி ஒரு இடமிருந்தா சொல்லு..” என்று வினவ,

செந்தாழினி கன்னத்தில் ஆட்காட்டி விரலை வைத்து தட்டியபடி வானை நோக்கி பார்வையை செலுத்தி யோசித்துக் கொண்டிருந்தாள்.

“நீ மனசு கஷ்டமா இருக்கும்போது மன அமைதியைத் தேடி எங்க போவ அங்க என்ன கூட்டிட்டு போ..” என்று கூறியதும் அவளது முகம் செந்தாமரை போல மலர்ந்தது.

“சரி சார் வாங்க போவோம்..” என்று கிராமத்துக்கு கிழக்காக நெடுந்தூரம் கூட்டி சென்றாள். ஆதிரனுக்கு நடந்து கால்கள் வலிக்கத் தொடங்கி விட்டன.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடந்தாயிற்று ஆனால் செந்தாழினி எதிர்பார்த்த இடம் இன்னும் வரவில்லை போல ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் ஆதரனே கேட்டு விட்டான்.

“செந்தாழினி தெரியாம உன்கிட்ட கேட்டுட்டேன் என் காலெல்லாம் ரொம்ப வலிக்குது உன்னோட இடம் வந்துட்டா இல்லைன்னா சொல்லு திரும்பிடுவோம் என்னால இதுக்கு மேல முடியாது..” என்று அருகில் இருந்த பாறையில் அமர்ந்தான் ஆதிரன்.

“இல்ல சார் இதோ வந்துருச்சு..” என்று ஆதிரன் அமர்ந்திருக்கும் பாறைக்கு பின்னால் படர்ந்திருக்கும் அடர்ந்த முற்புதர்களை விரித்து காட்டினாள்.

அங்கு மேகங்களுக்கு கீழே பாதை அமைத்தது போல நீர் மேலிருந்து கீழே மிகவும் அழகான வீழ்ந்து ஓடிக் கொண்டிருந்தது.

அந்த நீர் துகள்கள் எல்லாம் பணிச்சாரல்கள் போல பறந்து அந்த இடத்தையே மறைத்து நின்றன.

அவனாலேயே அவனது கண்களை நம்ப முடியவில்லை புதர்களுக்கு நடுவில் இவ்வளவு பெரிய நீர்வீழ்ச்சியா அதுவும் அந்த கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் அமைந்திருக்கும் என்று ஆதிரன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அந்த இடத்தில் வீசும் காற்றுகள் நீர் துளிகளின் குளிர்மையை சுமந்து வந்து ஆதிரனின் மீது மோதிச் சென்றது.

அந்த வீசும் காற்றின் ஸ்பரிசத்தினால் அவனது மனதிலும் உடலிலும் உள்ள வலிகள், சுமைகள் அனைத்தும் அந்நேரம் மெதுமெதுவாக மறக்கச் செய்தன.

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!