முகில் 9
சமைத்து முடித்து ஆதிரனுக்கு மதிய உணவை கொடுத்துவிட்டு வந்து அருகில் பண்ணையிலும், வயலிலும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் உணவை கொடுத்துவிட்டு தனது தந்தையின் வரவிற்காக காத்திருந்த செந்தாழினி அப்படியே திண்ணையில் இருந்தபடி வீசும் தென்றலின் துணையால் கண்ணயர்ந்து தூங்கிவிட்டாள்.
சிறிது நேரத்திலேயே அருகில் அரவம் எழ சட்டென்று கண்விழித்துப் பார்க்க அவளது தோழி சந்திரா அவள் அருகே வந்து மேதுவாக அமர்ந்தாள்.
“நீயா நான் திடீரென்று சத்தம் கேட்க பயந்துட்டேன் வரும்போது சத்தம் வச்சுக்கிட்டு வர மாட்டியா..?” என்று நித்திரை மயக்கத்தில் சந்திராவின் மீது எரிந்து விழுந்தாள் செந்தாழினி.
உடனே சந்திராவை முகம் மாற,
“சரி என்ன சந்திரா இந்த நேரம் என்ன தேடி வந்திருக்க..” என்று பேச்சை மாற்ற,
“சிறு தயக்கத்துடன் கை விரல்களை பிசைந்தபடி,
“அது ஒன்னும் இல்ல செந்தாழினி இன்னைக்கு நீ வெளியே போகல்லையா..?”
“இது என்னடி கேள்வி இவ்வளவு நேரமும் அப்படியே ஊர் சுத்திட்டு இப்பதான் வீட்டுக்கு வந்து அவசர அவசரமா சமைச்சு ஆதிரன் சாருக்கும் வளமையா நான் சாப்பாடு கொடுக்கிறவங்களுக்கும் கொடுத்துட்டு வந்தேன் என்ன திடீர்னு கேட்கிற எங்கேயாவது போகணுமா தனியா போக பயமா இருக்கா நானும் வரவா..?” என்று செந்தாழினி கேட்டதும் சிறு தயக்கத்துடன் தலையை சொரிந்த படி,
“இல்லை இல்லை நீ அவர் கூட இன்னைக்கு வெளியே போகலையான்னு கேட்டேன்..” என்று வெட்கத்துடன் புன்னகைத்தபடி வார்த்தைகளை மென்று விழுங்கினாள்.
அவளது வார்த்தைகளின் தடுமாற்றத்திலேயே எதனையோ உணர்ந்த செந்தாழினி வேண்டுமென்றே அவளை வம்பு இழுப்பதற்காக,
“எவர் கூட..?” என்று துருவிக் கேட்டாள்.
“அதுதான் பட்டணத்தில இருந்து வந்திருக்காரே அவரைத்தான்..”
“ஓஹ் அவரா..? ஆமா நம்ம ஆதிரன் சார பத்தியா கேக்குற..”
“ஆமா அவர பத்தி தான் சொல்லு இன்னைக்கு நீ போகலையா..”
“போயிட்டு வந்துட்டேன் ஏன்டி..”
“இல்ல நானும் கூட வரத்தான்..” என்று தலையை குனிந்த படி காலால் கோலமிட்டுக் கொண்டு கூறினாள் சந்திரா.
சந்திரா எதுவென்றாலும் நேரடியாக செந்தாழியிடம் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசி விடுபவள். இன்று மிகவும் தயக்கத்துடனும் வெட்கமும் சூழ்ந்து கொள்ள வார்த்தைகள் தடுமாற பேசுவதைப் பார்க்க செந்தாழனிக்கு நகைச்சுவையாக இருந்தது.
அதனைப் பார்த்து ரசித்தபடி வாய்க்குள் நமட்டுச் சிரிப்புடன்,
“ஏன்? எதுக்கு? உன்னை எல்லாம் என்னால கூட்டி போக முடியாது அவருக்கு ஊரு தெரியாதுன்னு சொன்னாரு அவரை நான் சுத்திக் காட்டுறேன்
நீ தான் சின்ன வயசுல இருந்து இந்த ஊர்ல பிறந்து வளர்ந்த உனக்கு இந்த இடமே அத்துபடி ஆகிருக்கும் பிறகு நான் ஏன் உன்ன சுத்தி காட்ட..” என்று செந்தாழினி வாதிட,
“நான் இப்போ ஊரை சுத்தி பாக்க தான் உன் கூட வர்றேன்னு உன் கிட்ட யார் சொன்னா..?”
“அப்போ எதுக்குடி சீக்கிரமா சொல்லு நிம்மதியா தூங்கிட்டு இருந்த என் தூக்கத்தை கலைச்சிட்டு இப்படி வம்பு பேசிக்கிட்டு இருக்க உனக்கு வேற வேலையே இல்லையா..?”
“என்னோட செல்ல செந்தாழினிக் குட்டி என்னோட உயிர் தோழி நான் சொல்றத நீ யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு சொல்லு நான் உன்கிட்ட சொல்றேன்..”
“அது என்ன பெரிய பரம்பரை இரகசியம் சொல்லு சொல்லு யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் எனக்கு வேற வேற வேலை இல்ல பாரு..” என்று அதீத ஆர்வம் மனதினுள் எழ செந்தாழினி சந்திராவிற்கு அருகில் வந்து ஒட்டி அமர்ந்தாள்.
“அது வந்து ஊருக்கு புதுசா வந்திருக்காரு அவர எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அதை அவர்கிட்ட நான் சொல்லணும் அதுக்காகத்தான் நீ அவர் கூட போகும்போது என்னையும் கூட்டிட்டு போன்னு கேட்டேன்..” என்று மனதில் ஆதிரன் மீது பூத்த காதலை படபடவென செந்தாழினியிடம் சந்திரா கொட்டி விட்டாள்.
“ஆஹ் அப்புறம்…” என்று மேலும் சந்திராவை தூண்ட,
“அப்போ தானே அவர் கூட பழக முடியும் அவரும் இன்னும் பத்து நாள்ல இந்த ஊரை விட்டு கிளம்பிடுவாரு அதுக்குள்ள என்னோட விருப்பத்தை நான் அவர்கிட்ட சொல்லிடனுமில்ல
உடனே பார்த்ததும் உங்களை எனக்கு பிடிச்சிருக்கு என்று சொன்னா என்னை புரிஞ்சுப்பாரோ தெரியல அதனால இந்த பத்து நாளும் அவர் கூட பழகிட்டு அப்புறமா அவருக்கு என்னை பிடிச்சதும் நான் சொல்லிடுறேன் நீ தான் எனக்கு உதவி செய்யணும்…” என்று வந்தால் நீ பார்த்து கருணையுடன் கேட்டாள் சந்திரா.
“என்னடி காலைல தான் அவரை நீ பார்த்த ஒரு தடவை தான் பார்த்திருப்பே அதுவும் முழுசா கூட பார்த்து இருக்க மாட்ட பார்த்ததும் உனக்கு காதல் வந்திருச்சா இதைத்தான் கண்டதும் காதல்ன்னு சொல்லுவாங்களா..?”
“ஆமாண்டி அவர பார்த்ததும் எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு மனசுக்குள்ள ஒரு இனம் புரியாத சந்தோஷமா என்னன்னு புரியல ரொம்ப அவஸ்தையா இருக்குடி ஆனா அவர பார்த்ததும் தான் என்னோட மனசு இப்படி கிடந்து தவிக்குது…”
“சரி சரி நான் உதவி பண்ணுறேன் ஆனா இது உங்க அப்பாவுக்கு தெரியுமா..?”
“அச்சச்சோ அவருக்கு தெரியாது அத எப்படி நான் சொல்லுவேன் சொன்னா என் உயிரே போயிடும்..”
“புரியுதுல்ல அந்த மனிதனுக்கு போய் துரோகம் பண்ண பார்க்கிறா விட்டுட்டு போய் பொழப்ப பாரு..”
“ஏன்டி நான் லவ் பண்ணக் கூடாதா எனக்கு தான் காதல் வரக்கூடாது அவரைப் பார்த்ததும் பிடிச்சுப் போயிட்டுன்னு நீ என்னோட உயிர் தோழின்னு தானே உன் கிட்ட சொன்னேன் இதுக்கு போய் இப்படி பேசுற எனக்குன்னு இந்த உலகத்துல யாருமே இல்லை..” என்று கண் கலங்கினாள் சந்திரா.
“சரி சரி அழாத என்னோட அழுமூஞ்சி சந்திரா நீ ஆசைப்பட்ட ஆதிரன் சார் கூட நான் உன்னை சேர்த்து வைக்கிறேன் சரியா..?”
“சரி இன்னைக்கு எங்க போறீங்க எத்தனை மணிக்கு நான் வரட்டும்..”
“இன்னைக்கு எங்கேயும் வெளியே போகல காலையிலேயே ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்குற அருவிக்கு போயிட்டு வந்துட்டோம் அவர் ரொம்ப டயர்டா இருக்குன்னு சொன்னார் அதனால நாளைக்கு காலைல திருவிழாக்கு போறதுன்னு சொல்லி இருக்காரு
இப்போதான் சாப்பாடு செஞ்சு கொடுத்துட்டு வந்தேன் சாப்பிட்டு தூங்கிருப்பாரு இது போதுமா இதுக்கு மேல ஏதும் தகவல் தேவையா..?” என்று கிண்டலாக செந்தாழினி கேட்க,
“இல்ல இல்ல போதும் சரி நாளைக்கு திருவிழாவில சந்திப்போம்..”
“சரிங்க மகாராணி..” என்று செந்தாழினி கூற,
“சந்திரா வந்த வேலை முடிந்த சந்தோஷத்தில் புறப்பட தூரத்தில் சரவண முத்து போதையில் ஆடி அசைந்து பாட்டுப் பாடி கொண்டு வந்தார்.
“சரிடி நான் கிளம்புறேன் உங்க அப்பா வராரு அவர் கிட்ட ஒன்னும் சொல்லிடாத போதையில் எங்க அப்பா கிட்ட உளறிடுவாரு…”
“எங்க அப்பா பத்தி எனக்கு நல்லாவே தெரியும் நான் சொல்ல மாட்டேன் நீ போ இந்த செந்தாழி இருக்கப் பயமேன்..” என்று செந்தாழினி கூற சந்திராவும் சிரித்தபடியே சிட்டாகப் பறந்து விட்டாள்.
“பாடி பறந்த கிளி… பாதை மறந்ததடி… பூமானே..” என்று பாடிக் கொண்டே தள்ளாடியபடி செந்தாழினி அருகில் வந்தார் சரவணமுத்து.
“என்னப்பா சாப்பாடு போடவா..?” என்று செந்தாழினி பரிவுடன் தனது தந்தையைப் பார்த்துக் கேட்டாள்.
“எனக்கு பசி இல்லை கொஞ்சமா போடு புள்ள அது நம்ம சிவராசா மக சந்திரா தானே..”
தட்டில் சோற்றை போட்டுக் கொண்டிருந்தவள்,
“ஆமாப்பா அவள் தான்..”
“என்ன ரொம்ப நாளா இந்த பக்கம் வராதவ இன்னைக்கு உன்னை தேடி வந்திருக்கா..?”
“அதுவா ஆதிர…” என்று கூற வந்தவள் வாய்தவறி உண்மையை உளறி விட்டோமே என்று சட்டென்று நாக்கைக் கடித்தாள்.
கையில் வைத்திருந்த தட்டும் கை தவறி கீழே விழுந்தது.
சரவணமுத்து தனது பெண்ணின் தடுமாற்றத்தையும் பேச்சையும் கேட்டு சிறு புன்முறுவலுடன்,
“என்ன புள்ள என்கிட்ட எதுவும் சொல்லனுமா..?”
“இ..இல்..இல்லப்பா…”
“இல்ல ஏதோ ஆதின்னு சொன்னியேமா..” என்று வினவ,
‘அய்யய்யோ தெரியாம உளறிட்டனே இவருக்கு சாதாரணமாய் இருக்கிறதை விட குடிச்சா தான் காது நல்லா கேட்கும் என்றத மறந்துட்டேனே இப்போ எப்படி சமாளிக்கிறது..’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டிருக்க,
“என்ன புள்ள இவ்வளவு தீவிரமா யோசிக்கிற..?”
“ஒன்னும் இல்லப்பா அது வந்து ஊருக்கு புதுசா வந்த ஆதிரன் சார்..” என்றதும்,
“ஓஹ் அந்தப் பையனா..? அந்தப் பையன் ரொம்ப நல்ல பையன் என்று ஊருக்குள்ள பேசிக்கிறாங்களே..! இன்னைக்கு பஞ்சாயத்துல பையன் பெரிய கலவரமே பண்ணிட்டானாமே..! அவனைப் பத்தி எவ்வளவு பேர் என்கிட்ட பேசினாங்க தெரியுமா..?
நல்ல துணிச்சலான பையனாம் இல்லன்னா பட்டணத்தில இருந்து இந்த கிராமத்துல யாரு உதவியும் இல்லாம இந்த வரதராஜனை எதிர்த்து நிற்க இங்கு இருக்கிற ஒரு ஆம்பளைக்கு துணிவிருக்கா
ஆனா அவன் தட்ட தனியா அந்த பஞ்சாயத்துல எதிர்த்து கேள்வி கேட்டத இந்த ஊரே பேசுதும்மா எனக்கு கவலையா இருந்தது அதை நேர்ல பாக்கலையேன்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான புகழ்ந்து பேச எனக்கு அந்தப் பையன பாக்கணும் போலவே இருந்துச்சு அவன் கைய புடிச்சு நான் அவன பாராட்டணும்
இப்படி இங்க நடக்கிற அநியாயங்களை தட்டி கேட்காம தான் இந்த ஊர்ல வரதராஜன் ஓட அக்கிரமம் கொடிகட்டி பறக்குது இன்னைக்கு அவன் யோசிச்சு இருப்பான் நம்மளை எதிர்த்து கேள்வி கேட்க ஒரு ஆம்பள இருக்கான்னு ரொம்ப சந்தோஷமா இருக்குமா அதுதான் இன்னைக்கு ஒரு பெக் கூட குடிச்சிட்டேன்..” என்று மனதார பெருமிதத்துடனும், சந்தோஷத்துடனும் சரவணமுத்து கூறினார்.
அப்படியே உணவை இருவரும் உண்டு விட்டு சரவண முத்து திண்ணையில் படுத்து உறங்கியவர் நித்திரையில்,
“ரொம்ப நல்ல பை…பையன்…” என்று வாய் புலம்பினார்.
அவரது புலம்பலை கேட்டு இன்று ஆதிரனை அருவியில் இருந்து காப்பாற்றியது செந்தாழினிக்கு ஞாபகம் வந்தது.
அதில் அவள் அவனது உதட்டோடு உதடு பொருத்தி செயற்கை சுவாசம் கொடுத்தது இப்போது ஞாபகத்தில் வந்து இம்சித்தது.
தந்தை கூறிய விடையங்களை மனதிற்குள் அசை போட்டவள் ஆதிரன் மீது இனம்புரியாத ஒரு நம்பிக்கையும், அன்பும் அவள் அறியாமலேயே அவளது மனதிற்குள் மொட்டாக அரும்பியது.
அது அவளுக்கு புரியவில்லை. புரியும் நேரத்தில் ஆதிரன் அருகில் இருக்க மாட்டான் என்பது பாவையவளுக்கு அந்நேரம் தெரியவில்லை. காலம் கடந்து காதல் அரும்ப பாவையவளின் நிலைதான் என்னவோ..?