தன் கிராமத்தில் இருந்து யாரை நம்பி வந்தாளோ அவனே தற்போது ஏமாற்றி விட்டான் என அறிந்த பெண்ணோ அதிர்ந்து துடித்துப் போனாள்.
தன் பெண்மையின் காவலனாக எண்ணியவனே தன் பெண்மையை சூறையாடி விட அவளுடைய காதல் கொண்ட மனமோ வலி தாங்க முடியாது மரிக்கத் தொடங்கியது.
எந்தவித துன்பமுமின்றி சுதந்திரமாக பறந்து கொண்டிருந்த கிராமத்து பறவையோ தீரன் எனும் வேட்டைக்காரனால் வேட்டையாடப்பட்டு சிறகுடைந்து நிற்கும் நிலை ஏற்பட்டது.
மைவிழியை நாயகியாக நடிப்பதற்காக கொண்டு வந்த தீரன் தன் தேவைகளுக்காக அவளுக்கு தெரியாமலே பயன்படுத்தி கொண்டான்.
அவளிடமிருந்து இயற்கையான நடிப்பை பெற வேண்டும் எனும் காரணத்திற்காக காதல் எனும் ஆயுதத்தை கையில் கொண்டு ஏமாற்றிய விடயம் அறிந்த மாது கலங்கிப் போய் அவனிடம் நியாயம் கேட்க நினைத்து அவமானத்தை வாங்கிக் கொள்ளும் நிலையும் வந்தது.
தன்னுடன் அவன் கணவன் போல வாழ்ந்த வாழ்க்கைக்கான காரணத்தை கேட்டு அவனுக்கு புரிய வைக்க வேண்டும் என எண்ணி கேள்வி கேட்ட மாதுவுக்கோ அவனிடம் இருந்து வந்த பதில் நாயகியின் காதலை கேவலப்படுத்துவதாகவும் அவமானப்படுத்துவதுமாகத் தான் இருந்தது.
“நீங்க என்னை உண்மையா விரும்பலன்னு தெரிஞ்சிருந்தா உங்களை எனக்கு பக்கத்துலேயே வர விட்டிருக்க மாட்டேன்” என மைவிழி கூற,
“ஸ்டாப் திஸ், இடியட் திரும்பத் திரும்ப நெருங்கி பழகினேன் பழகினேன்னு சொல்லிட்டே இருக்குறியே நான் உன்னை படத்துக்காக தான் பழக்கினேன்.
அதுக்கும் மேலே நான் உன்னோட க்ளோஸ் ஆக காரணம் நீதான், சும்மா இருந்த என்னை மனம் மாற வைக்கிற மாதிரி எனக்கு முன்னாடி நீ ட்ரெஸ் இல்லாம வந்த சோ நான் கொஞ்சம் அன்வான்டேஜ் எடுத்தேன்.
உனக்கு பிடிக்கலைன்னா அப்பவே நிறுத்தி இருக்கலாமே நீ அப்படி பண்ணலை சோ உனக்கும் என்னோட இருக்குறதுல ஆசைதான்னு புரிஞ்சுகிட்டேன். அன்ட் அதுக்கு அப்புறம் நானும் சந்தோஷமா இருந்தேன் நீயும் சந்தோஷமா இருந்த. அவ்வளவும் தான் அதோட அந்த சாப்டர் க்ளோஸ்” என தன் தாம்பத்திய உறவை ஒரே வார்த்தையில் கேவலப்படுத்தினான் தீரன்.
“இல்ல நான் உங்களை எனக்கு பக்கத்துல நெருங்கவே விடல நீங்க தான் என்னை லவ் பண்றேன் படம் முடிய வெடிங் பண்ணுவோம்ன்னு சொன்னீங்க,
நான் வேணாம்னு சொல்லியும் நீங்க தான் என்னை கட்டாயப்படுத்துனீங்க இப்போ என்மேலே பழி சொல்றீங்க, ஒரு பொண்ணு அவ்வளவு சீக்கிரமா யாரையும் தொட விட மாட்டாள்னு உங்களுக்கு தெரியாதா சார்.? அதைப் போலதானே நானும் இருந்தேன். நீங்க தான் என்னை மாத்தினீங்க” என்று கண்ணீர் சிந்தினாள்.
“ப்ச் ஆமா ஏமாத்திட்டேன்தான் இப்போ என்ன.? உன்கூட படுத்ததுக்கு இன்னும் பத்து லட்சம் கூடப் போட்டுக் கொடுக்கட்டுமா.?” என அழுத்தமாக கேட்டான் அவன்.
அடுத்த நொடியே மைவிழி அவனது சட்டையை பிடித்து,
“நான் உனக்கு என்ன பாவம்டா செய்தேன். எதுக்காக என்னோட வாழ்க்கையை இப்படி நாசமாக்கின, எதுக்காக என்னை ஏமாத்தின..? ஏன்…? ஏன்.? ஏன் என்னை ஏமாத்தின.?” என அவ்வளவு நேரம் பொறுமையாக இருந்தவளோ கோபத்தில் சீறத் தொடங்கினாள்.
சட்டென்று தன் சர்ட்டை பிடித்து மரியாதை இல்லாமல் மைவிழி பேச அதிர்ந்து போன ருத்ரதீரன்,
“என்ன அம்மு இப்படிலாம் மரியாதை இல்லாம பண்ற, நான் உனக்கு நல்லதுதான் செய்தேன். நான் மட்டும் இப்படி பண்ணலன்னா நீ இன்னைக்கு இந்தளவுக்கு பெரிய ஆளா வளர்ந்திருக்க முடியுமா..?” என தான் செய்தது சரியென்றே கூறிக் கொண்டிருந்தான் தீரன்.
அவனது சர்ட்டில் இருந்து கைகளை எடுத்த மைவிழி “நான் உன்கிட்ட கேட்டனா என்னை பெரிய ஆள் ஆக்குன்னு உன்கிட்ட கேட்டேனா.? யாருக்கு சார் வேணும் இந்த பணமும் பகட்டும்? எனக்கு இது எல்லாம் தேவையே இல்ல. எங்க அப்பாவோட கட்டாயத்துக்காகதான் வேலைன்னு சொல்லி உங்க கூட வந்தேன். ஆனா இந்த வேலை என் கற்பையே சீரழிச்சிரும் நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கலை.
நுனி நாக்கு இங்க்லீஷ் பேசுறதும் மாடர்னா ட்ரெஸ் பண்றதும்தான் வாழ்க்கையா.? இதுலதான் சந்தோஷம் இருக்கா.? கிடையவே கிடையாது. நீங்க எல்லாரும் பணத்துக்கும் பகட்டுக்கும் அடிமையா மாறிட்டீங்க.
ஆடம்பர வாழ்க்கை உங்களுக்கு மரியாதையான வாழ்க்கை மாதிரி தெரியுதுன்னா நீங்க எல்லாருமே முட்டாள்தான்.
நான் ஊர்ல ஆட்டுக்குட்டி பின்னாலதான் திரிஞ்சேன். ஆனா ரொம்ப ரொம்ப சந்தோஷமாதான் இருந்தேன். இத்தனை வருஷத்துல நான் எதுக்குமே மனசு உடைஞ்சு போய் அழுததே இல்ல. ஆனா இங்கே வந்து நரக வேதனையை அனுபவிச்சிட்டேன் சார்.
எங்க அம்மாச்சி அப்பவே சொன்னாங்க. எந்த சூழ் நிலையிலையும் யாரையும் நம்பாதேன்னு. பட் நான் உங்களை நம்பினேன். என்னை விட நான் உங்களை நம்பினேன். எனக்கு எல்லாமே நீங்கதான்னு நம்பினேன். என்னைப் போய் இப்படி நீங்க ஏமாத்திட்டீங்கல்ல.?” என்றவள் கதறிக் கதறி அழத் தொடங்கினாள்.
“ப்ச் அம்மு உனக்கு வேற ஏதாவது வேணும்னா கேளு தர்றேன். இன்னும் பணம் வேணும்னா சொல்லு தர்றேன். அதை எடுத்துகிட்டு இங்க இருந்து கிளம்பு.” என இறுகிய குரலில் கூறினான் அவன்.
அவளோ சீற்றத்தில் அந்த பெட்டியைத் திறந்து உள்ளே இருந்த பணத்தை அள்ளி அவன் முகத்தில் விசிறி அடித்தவள்,
“இந்த வெத்து நாட்டை வெச்சு போன என்னோட கற்பை உங்களால திருப்பிக் கொடுக்க முடியுமா.?” சீறினாள் அவள்
அவளுடைய கேள்வியில் இறுகிப் போய் நின்றான் அவன்.
“சொல்லுங்க உங்க பணத்தால நான் கேட்டதை தர முடியுமா.? இல்லைல்ல பிறகு எதுக்கு இது.?” என்றவள் அவன் கொடுத்த தன்னுடைய சம்பளப் பணத்தை நோக்கி கை காட்டியவள்,
“என்னை படிக்க வெச்சேன்னு சொன்னீங்கள்ல அதுக்காக இதை வெச்சுக்கோங்க. நான் யார்கிட்டேயும் கடமை பட்டு கூனிக் குறுகி நிற்க விரும்பலை.” என்றாள் அவள்.
“இப்போ நீ என்ன சொல்லுங்க வர்ற.? இப்போ என்னதான் செய்யப் போற அம்மு.? நீ ஊருக்குப் போக கார் ரெடி பண்ணட்டுமா.?” எனக் கேட்டான் அவன்.
“தேவலை… இதுவே முதல் இருந்த மைவிழியா இருந்திருந்தா நீங்க இப்படி பண்ணதுக்கு தற்கொலை பண்ணிருப்பா. ஆனா நீங்க வளர்த்துவிட்ட உங்களோட அம்முக்கு இந்த உலகத்துல எப்படி எதிர் நீச்சல் அடிக்கணும்னு தெரியும். கிட்டத்தட்ட ஏழு மாசமா உங்ககூடவே இருக்கேன்ல யாரை எப்படி எங்க வைக்கணும்னு நல்லாவே புரிஞ்சுகிட்டேன். டோன்ட் வர்றி சார். எனக்கு என்னைப் பார்த்துக்கத் தெரியும். குட் பை.” என்றவள் அவனுடைய வீட்டை விட்டு வெளியே இறங்கி நடக்கத் தொடங்க, ருத்ரதீரனின் விழிகளோ மூடிக் கொண்டன.
அவள் இப்படி எல்லாம் பேசுவாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.
“ஹேய் இங்கே உனக்கு பாதுகாப்பு இல்ல அம்மு. நீ உன் வீட்டுக்கே போயிரு.”
“எனக்கு உங்ககிட்டதான் பாதுகாப்பு இல்லைன்னு தோணுது மிஸ்டர் ருத்ரதீரன்.” என்றவள் அடுத்த கணமே வீட்டை விட்டு வெளியேறி நடக்கத் தொடங்கினாள்.
விழிகள் கண்ணீரை சுரந்து கொண்டே இருக்க, தன்னை நினைத்தே வெறுப்பாகிப் போனது அவளுக்கு.
அவனிடம் தைரியமாக கூறிவிட்டு வெளியே வந்தவளுக்கு இனி என்ன செய்வதென்றே புரியவில்லை.
தன் வீட்டுக்கே சென்று விடலாமா என எண்ணியவள் தன் கையில் இருந்த ஃபோனை வெறித்துப் பார்த்தாள்.
அவளுடைய காதல் கொண்ட மனமோ அளவில்லாத வலியை அவளுக்குக் கொடுக்க, தலை சுற்றுவதைப் போல இருந்தது அவளுக்கு.
‘காதல் என நம்பி இப்படி படு கேவலமாக ஏமாந்து போனாளே… அவனுடைய படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக என் உடலோடும் மனதோடும் அல்லவா விளையாடி விட்டான்.? இறுதி வரை அவன் செய்தது தவறு என அவனுக்குப் புரியவே இல்லையே. இப்படிப்பட்ட சுயநல மிருகத்திடம் காதல் கொண்ட தன் மடமையை எண்ணி நொந்து கொண்டு நடந்து சென்றவளை நோக்கி சட்டென வீதியில் கூட்டம் கூடியது.
“வாவ் விழி மேம் நீங்களா..? நான் உங்களோட பிக் ஃபேன்…”
“மேம் ப்ளீஸ் ஒரே ஒரு செல்பி எடுத்துக்கலாமா.?”
“விழி மேடம் நீங்கதான் எங்களோட கனவுக் கன்னி..”
“உங்களை பார்த்ததுல ரொம்ப ரொம்ப சந்தோஷம் மேடம்.”
“மேடம் எங்களுக்காக இன்னொரு படத்துல நடிங்க மேடம்.”
“ஆமா மேடம் ப்ளீஸ்… உங்க ரசிகர்களுக்காக இன்னும் ஒரே ஒரு படம் நடிங்க.” என அவளை பலர் சூழ்ந்து கொள்ள, அவளோ திகைத்துப் போனாள்.
அவர்கள் அனைவருக்கும் இன் முகமாக பதில் கூறி சலித்துப் போனவளின் அருகே வந்து நின்றது ஒரு கார்.
அதில் இருந்து இறங்கினான் ருத்ர தீரனைப் போல புகழ் பெற்ற நடிகனான அருண்.