பால்கனியில் வந்து நின்ற ருத்ரதீரனின் விழிகளோ சிவந்து போய் இருந்தன. தான் உயிருக்கு உயிராக நேசித்த தேவதைப் பெண்ணை இப்படி வருத்துகின்றோமே என எண்ணி கலங்கித் தவித்தான் அவன்.
“சாரி அம்மு… சாரிடி.. எனக்கு வேற வழி தெரியல அம்மு.” என்றவனின் விழிகள் கலங்கின.
‘இன்னும் கொஞ்ச மாசத்துல சாகப் போற நான் உனக்கு வேணாம் அம்மு.’ என்றவன் அன்று நடந்த சம்பவத்தை எண்ணிப் பார்த்தான்.
படம் முடிவடைவதற்கு சில நாட்களுக்கு முன் ஷூட்டிங்கில் இருந்தவன் சற்றே உயரமான இடத்தில் இருந்து தவறி கீழே விழுந்து விட, அவனுடைய தலையும் காலும் அடிபட்டது.
பெரிய உயரம் இல்லாததால் பெரிதாக அடிபட்டிருக்கவில்லை ஆயினும் வைத்தியசாலை சென்றவன் முன் எச்சரிக்கையாக கால்களுக்கு மருந்திட்டு தன் தலையையும் பரிசோதித்தான்.
கீழே விழுந்ததில் அவனுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற வைத்தியர் அவனுடைய தலையில் புதிதாக ஒரு இடியை இறக்கினார்.
ருத்ரதீரனுக்கோ தலையில் ஓர் கட்டி இருப்பதாகவும் அது கேன்சர் கட்டி எனவும் இன்னும் சில மாதங்களே அவனால் உயிரோடு இருக்க முடியும் என்பதையும் வைத்தியர் கூற துடித்துப் போனான் ருத்ர தீரன்.
அவனோடு மருத்துவமனைக்கு சென்ற அருணும் வைத்தியர் கூறியதைக் கேட்டு அதிர்ந்து போய் விட,
தீரனோ அந்த ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு சட்டென வெளியே வந்தான்.
தன் காரினுள் ஏறி அமர்தவனின் விழிகளில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.
அதே நேரம் காரினுள் வந்து அமர்ந்த அருணோ அவனை இறுக அணைத்துக் கொண்டான்.
“டேய் தீரா ச.. சரி பண்ணிடலாம்டா. நீ கவலைப் படாத.” என்றான் அருண்.
“இனி எப்படிடா சரி பண்றது.? இன்னும் கொஞ்ச மாசம்தான் என்னால உயிரோட இருக்க முடியும்ல.? அவ்வளவுதானா அருண்.?’ என உடைந்து போனவனின் காதுகளில் ஒலித்தது தன்னவளின் குரல்.
“சார் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலாமா.?” என ஆசையாக அவனுடைய மார்பில் படுத்தவாறு அன்று கேட்ட தன் அம்முவின் குரலில் மொத்தமாக உடைந்தான் அவன்.
“டேய் தீரா ப்ளீஸ் மனசை தளர விடாத.” என கலங்கிய குரலில் கூறினான் அருண்.
“நான் சாகப் போறதை நினைச்சு எனக்கு கவலை இல்லடா. என்னோட அம்மு இதை தாங்க மாட்டாளே. அவளுக்கு எதுவுமே தெரியாதுடா சின்னப் பொண்ணுடா. நான் இனி அவகூட இருக்க மாட்டேன்னு தெரிஞ்சா துடிச்சுப் போயிருவாளே.. ஊர்ல சந்தோஷமா இருந்த அவள இங்கே கூட்டி வந்து காதலிச்சு தப்பு பண்ணிட்டேன்டா.” எனக் கதறினான் அவன்.
அருணுடைய விழிகளில் இருந்தும் கண்ணீர் வழிந்தது.
“விழிகிட்ட சொல்லி உண்மையை புரிய வைக்கலாம்டா.” என்றான் அருண்.
“நோஓஓ நோ… இது அவளுக்கு தெரியக் கூடாதுடா. அவ என்னை உண்மையா காதலிக்குறாடா. நான் செத்திருவேன்னு தெரிஞ்சா அவளும் இருக்க மாட்டா. அவ அந்த வலியை அனுபவிக்க கூடாதுடா. இன்னும் ரெண்டு நாள்ல ஷூட்டிங் முடிஞ்சிரும். அதுக்கப்புறம் அவளை எப்படியாவது அவளோட ஊருக்கு அனுப்பி வெச்சிடுறேன்.” என்றான் தீரன்.
“உன்ன விட்டு போக விழி சம்மதிப்பாளா.?”
“அவ போக மாட்டாடா பட் அவளே என்னை வேணாம்னு வெறுத்துட்டு போற மாதிரி பண்ணப் போறேன். அவளோட மனசு என்னால உடையும் போது என் மேல தானா வெறுப்பும் வந்திரும். அவ நல்லா இருக்கணும் அருண். என்னை மறந்துட்டு அவ நல்லா இருக்கணும்.” என்றான் தீரன்.
தீரனுடைய காதலை எண்ணி அருணுக்கோ சிலிர்த்துப் போனது.
அன்று நடந்தவற்றை நினைத்துப் பார்த்த தீரனின் விழிகளில் கண்ணீர் கசிந்தது.
‘நீ என்னை வெறுத்துட்டுப் போகணும்னுதான் நான் அன்னைக்கு அப்படி பொய் சொன்னேன் அம்மு. என்னோட காதல் பொய் இல்ல. நான் படத்துக்காக மட்டும் உன்னோட பழகவும் இல்ல. நான் உன்ன உண்மையா நேசிக்கிறேன் அம்மு. நான் சாகப் போறேன்னு உனக்குத் தெரிஞ்சா உன்னால அதை தாங்கிக்க முடியாதுன்னுதான் உன்னை வீட்ட விட்டு போக சொன்னேன்..
ஆனா நீ போகலை. என்னை வெறுத்துட்டு போன நீ தீனா கூட சேர்ந்து படம் பண்ணுவேன்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கலைடி. அவன் உன்னோட நெருக்கமா இருக்கிறதைப் பார்க்குற சக்தி எனக்கு இல்ல. உன்னை அனுப்பிட்டு தனியா இருக்கணும்னு நினைச்சேன். பட் என்னால முடியலடி. அதனாலதான் உன்னை மறுபடியும் என்கூடவே இங்கே கூட்டிட்டு வந்துட்டேன். இன்னும் ஒரு வாரம் நீ என்கூடவே இரு அம்மு. உன்கூட இந்த ஏழு நாட்களையும் திகட்ட திகட்ட அனுபவிச்சுட்டு யாருக்கும் தெரியாத கண் காணாத இடமா பார்த்து போயிர்றேன்.
அதுவரைக்கும் என்னை நீ அரக்கனா மிருகமாதான் பார்ப்பேன்னு தெரியும். பட் பரவால்ல. நீ என்கூட இருந்தாலே போதும்.’ என எண்ணிக் கொண்டவன் பால்கனிக் கம்பியை இறுகப் பற்றிக் கொண்டான்.
அவளோடு எப்படியெல்லாம் வாழ வேண்டுமென கனவு கண்டிருந்தான் அவை அத்தனையும் கானல் நீராக அல்லவா போய் விட்டது.
அவனுடைய எதிர்பார்ப்புகள் கனவுகள் எதிர்காலத் திட்டங்கள் யாவும் சீட்டுக் கட்டு மாளிகை போல அல்லவா சிதறிப் போயின.
அவனால் தன்னுடைய முடிவை சற்றும் ஜீரணிக்கவே முடியவில்லை.
மருத்துவரிடம் சென்று தனக்கான சிகிச்சையில் ஈடுபடக் கூட அவனுக்கு சற்றும் விருப்பம் இல்லாது போனது.
ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து தனக்கு இப்படிப்பட்ட கொடூர நோய் இல்லை என்றால் எப்படி இருக்கும்.? கடவுள் இறங்கி வந்து இரக்கம் காட்ட மாட்டாரோ.?
என் அம்முவுடன் இனி மகிழ்ச்சியாக வாழவே முடியாதோ என்றெல்லாம் எண்ணிக் கலங்கியவன் விழிகளை மூடிக் கொண்டான்.
************
தீரனுடைய வீட்டுக்கு வந்தது முதல் ஒவ்வொரு நிமிடமும் மனதாலும் உடலாலும் வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தாள் மைவிழி.
ஆம் பிடிக்காத ஒருவரின் சிறு தொடுகையோ ஆயிரம் ஆணிகளை கொண்டு உடலை துளைப்பது போல வலியை தரக்கூடியது ஆனால் இங்கே தீரனோ அவளுக்கு அதைவிட அதிகமான வேதனைகளைக் கொடுத்தான்.
தன் உறவுகளை காப்பற்ற வழியின்றி அவனது மிரட்டலில் உயிர் இழந்த உடல் போல அவனது தொடுகையை சகித்து வந்தாள் மைவிழி.
இவ்வாறு ஒருவனை தன் வாழ்வில் பார்த்தது கிடையாது என நினைத்துக் கொண்டு வெறுப்போடு ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்திருந்தாள் மைவிழி.
அப்போது வீட்டின் வெளியே ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க எட்டிப் பார்த்தாள் மைவிழி.
வெண்நிற நீள் சர்ட் ஒன்று அணிந்து ஒருவர் உள்ளே வந்து அங்கிருந்த மைவிழியை பார்த்து,
“மேடம் தீரன் சார் இல்லையா..?” எனக் கேட்டார்.
மைவிழியோ வந்திருப்பது யார் என அறியாமல் “எஸ் அவர் உள்ளேதான் இருக்கார் நீங்க யார்..?” என்று கேட்டாள்.
“சாரி மேடம் நான் என்னை பத்தி சொல்லவே இல்லை, என்னோட பேர் அஷ்வின் நான் மதன் லாயரோட ஜூனியர்” என்று தன்னை அறிமுகப்படுத்த அப்போதுதான் மைவிழிக்கு புரிந்தது வந்திருப்பது ஒர் சட்டத்தரணியென்று,
“ஓகே சார் உக்காருங்க” என அவனை ஓர் இருக்கையில் அமர்த்திய மைவிழி,
“வெயிட் அ மினிட் நான் தீரனை வர சொல்றேன்” என்று அவனை அழைக்க சென்றவளை தடுத்து நிறுத்திய அஷ்வின்,
“மேடம் அவர் வர்றதுக்கு முன்னாடி நீங்க டாக்குமென்ட்டை ஒருவாட்டி செக் பண்ணிப் பாருங்க” என தன் கையில் இருந்த சில பேப்பர்களை கொடுத்தான் அவன்.
அஷ்வின் எதற்காக தன் கையில் இதைக் கொடுத்தான் என அறியாமலே அதை எடுத்து வாசிக்கத் தொடங்கினாள் மைவிழி.
அதைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கோ என்ன நடக்கின்றது என்பதே அறியாமல் இருந்தது. ஏனெனில் அதில் குறிப்பிட்டிருந்த விடயம் தீரனின் சொத்துக்கள் மற்றும் அனைத்து பங்குகளும் மைவிழிக்கு மாற்றிக் கொடுப்பதாக இருந்தது.
அவளோ அந்தப் பத்திரத்தை பார்த்த கணம் ஸ்தம்பித்துப் போனாள்.