“அதுக்கு அப்புறம் தான் நான் அடுத்த நாள் இந்தியா வந்து இறங்கியதும், அம்மா இறந்துட்டாங்கன்னு ராமையா கால் பண்ணினதும் அவ்வளவு தான் நடந்தது..” என்று விடயங்கள் ஒவ்வொன்றையும் ஸ்ரீநிஷாவிற்கு இளஞ்செழியன் கூறிக் முடித்தான்.
ஸ்ரீ நிஷா எழுந்து தனது ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு,
“சரி முடிஞ்சுதா நான் போயிட்டு வரேன்..” என்று கூறிக்கொண்டு நடக்க ஆரம்பிக்க,
“இரு ஸ்ரீநிஷா நான் இப்போ சொன்னதுல உனக்கு ஏதாவது புரிஞ்சுதா..?” என்று இளஞ்செழியன் கேட்க புருவத்தை சுருக்கியபடி,
“என்ன.. என்ன புரியணும்..?” என்று ஸ்ரீ நிஷா கொஞ்சம் குரலை உயர்த்திப் பேசினாள்.
“என்னோட தப்பான புரிதலால தான் இவ்வளவு பிரச்சனையும் வந்தது அம்மா உன்னோட பிரண்டு ஶ்ரீநிதியைத்தான் புடிச்சிருக்குன்னு என்கிட்ட காட்டினாங்க
ஆனால் எனக்கு அந்த போட்டோல பிடிச்சிருந்தது உன்னைத்தான் என்ன ஒரு கோஇன்சிடென்ஸ் ரெண்டு பேருக்கும் ஒரே ஒரு எழுத்து தான் பெயரிலே வித்தியாசம் அதனால தான் இவ்வளவு பிரச்சனையும், அதோட ரெண்டு பேரும் அந்த போட்டோல ஒரே டிரஸ் தான் சேம் கலர்ல போட்டு இருக்கீங்க…”
“அப்படியா..?” என்று ஸ்ரீ நிஷா கிண்டலாகக் கேட்க,
“அப்படித்தான் நீ நம்புறியோ இல்லையோ இந்த போட்டோவை பாரு இதுல ரெண்டு பேரும் ஜெலோ சுடிதார் தான் போட்டு இருக்கீங்க..” என்றவுடன் தான் அன்று ஸ்ரீநிதி தனக்கு வாங்கி வந்து பரிசாக தந்த மஞ்சள் நிற சுடிதாரை அப்போதுதான் அந்த போட்டோவில் பார்த்தாள்.
இருவரும் ஒரே மாதிரியே கோயிலுக்கு செல்வோம் என்று இருவரும் ஒன்றாக ஒரே நிற சுடிதாரை போட்டுக்கொண்டு புறப்பட்டுச் சென்றது அப்போது தான் அந்த புகைப்படத்தை பார்க்க ஞாபகம் வந்தது.
“நீங்க போட்டிருந்த ஒரே நிற உடையும் உங்களுடைய பெயரும் தான் இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கக் காரணம்..
என்னோட அம்மாவின் சாவுக்கு நீ தான் காரணம் என்று நினைத்து நான் உன்னை இப்படி சித்திரவதை பண்ணிட்டேன்.. தப்புதான்..”
“சரி உங்க அம்மா பொண்ணு கேட்க வந்து கேட்டாங்க… ஸ்ரீநிதி பிடிக்கலைன்னு சொல்லிட்டா இதுல என்ன இருக்கு அவளுக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு தானே சொல்லுவா அதுக்கும் உங்க அம்மா சாகுற வரைக்கும் ஏன் போகணும் அதுக்கு உங்க அம்மாவோட சாவுக்கும் என்ன சம்பந்தம்..”
“குட் கொஸ்டின் இதுல தான் டுவிஸ்டே இருக்கு இந்த உன்னோட பிரண்டு இருக்கா இல்ல அவ செய்த காரியம் என்ன தெரியுமா எங்க அம்மா பொண்ணு கேக்க போன நேரம் எங்க அம்மாவ அவமானப்படுத்தி அனுப்பி இருக்காள்..” என்று முகத்தில் கோபக்கனல் பொங்க இளஞ்செழியன் கூறினான்.
“சீச்சீ அப்படி செய்ய சான்சே இல்ல ஸ்ரீநிதி ரொம்ப நல்ல பொண்ணு..”
“எங்க அம்மாவோட ஃப்ரெண்டு கிருஷ்ணவேணி ஆண்டியும் போய் இருக்காங்க அவங்க இரண்டு பேரும் சேர்ந்து தான் சம்பந்தம் பேச போனாங்க.. போன இடத்துல ஸ்ரீ நிதியும் அவங்களோட அப்பாவும் தேவை இல்லாம பேசி இருக்காங்க..”
“இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்..”
“நீ எனக்கு சாப்பாட்டுல விஷம் வச்ச அன்னைக்குத் தான் எனக்கு எல்லா விஷயமும் தெரியும். கிருஷ்ணவேணி ஆன்ட்டி ஹோட்டலுக்கு வந்து இருந்தாங்க
அப்போது நடந்த எல்லா விஷயத்தையும் என்கிட்ட சொன்னாங்க
என்கிட்ட தெரிய கூடாதுன்னு அம்மா கிருஷ்ணவேணி ஆன்ட்டி கிட்ட சொல்லி இருக்காங்க அதனால தான் அம்மா இறந்த நேரம் வீட்ட வந்த கிருஷ்ணவேணி ஆன்ட்டி எதுவும் என்கிட்ட சொல்லல..
நீயும் ஸ்ரீநிதியும் இருக்கிற போட்டோவ போன்ல பார்த்த பிறகு தான் இவள எப்படி உனக்குத் தெரியும் என்று கோபமாக கேட்டு அனைத்து விடயத்தையும் சொன்னாங்க..
அதை உன்கிட்ட சொல்லத்தான் நான் வந்தேன் ஆனால் நீ விஷம் வச்சதால…” என்று கூறியதை நிறுத்திவிட்டு கைகளை விரித்து எல்லாம் நடந்து முடிந்து விட்டது என்பதை செய்கையில் காட்டினான்.
“ஓகே கிருஷ்ணவேணி ஆன்ட்டி உங்க கிட்ட என்ன சொன்னாங்க..” என்று நடந்த விடையங்களை அறிய ஆவல் கொண்டு கேட்டாள் ஸ்ரீ நிஷா.
அங்கு நடந்த விடயங்களை ஒவ்வொன்றாக மனதில் கனத்துடன் கூறத் தொடங்கினான் இளஞ்செழியன்.
பார்வதி தேவியின் கிருஷ்ணவேணியும், ஸ்ரீநிதியின் வீட்டை விசாரித்து அங்கு செல்ல ஹாலில் அமர்ந்திருந்த ஸ்ரீ நிதியின் தந்தை ராஜகோபால்,
“யார் நீங்க..?” என்று கேட்டார்.
‘வந்தவர்களை வாங்க.. இருங்க என்று உட்கார வைக்காமல் யார் நீங்க என்று விசாரிக்கின்றார்கள் என்ன கலாச்சாரமோ தெரியாது..’என்று மனதிற்குள் பார்வதி தேவி நினைத்துக் கொண்டவர்,
“நாங்க சென்னையில இருந்து வாரோம்.. நேரா விஷயத்த சொல்லிடுறேன்.. எனக்கு சுத்தி வளைத்து எல்லாம் பேசத் தெரியாது..
உங்க பொண்ணு கோயில் திருவிழாவுல பார்த்தேன்.. ரொம்ப பிடிச்சுருந்துச்சி அதுதான் பொண்ணு கேட்க வந்திருக்கோம்..” என்று நின்று கொண்டே வந்த விடயத்தை கூறியவர் அதன் பின்பு என்றாலும் உட்கார சொல்லுவார்களா என்று பார்த்தால் அவரோ கேள்வி கேட்பதிலேயே முன்முரமாக இருந்தார்.
“உங்களோட ஸ்டேட்டஸ் என்ன..? நீங்க எப்படிப்பட்ட குடும்பம்..?” என்று கேட்க,
அவர் அதைக் கேள்வியிலேயே பணத்தின் திமிர் அதீதமாய் காணப்பட்டது.
“நாங்களும் ஓரளவு பணக்காரர் தான் என்னோட மகன் இளஞ்செழியன் கனடாவில் பெரிய ஹோட்டல் நடத்துகின்றான்..
அதோட எங்களுக்கு இங்க சென்னையில ரெண்டு ஹோட்டல் இருக்கு.. இன்னும் ரெண்டு ஹோட்டல் கட்டி கொண்டு இருக்கிறோம்.. அடுத்த வருடம் அதையும் சிறப்பா தொடங்கிடுவோம்..” இன்று சந்தோஷமாக பார்வதி தேவி கூறினார்.
ராஜகோபால் இதெல்லாம் என்னுடைய வருமானத்திற்கு தூசி என்பது போல தோளில் உள்ள தூசியை கையால் தட்டி ஊதிக் காட்டியவர்,
“ஓ அப்படியா..? சரி நீங்க வந்து இருக்கீங்க.. இது யாரு உங்களோட ஃப்ரண்டா..? இருக்கட்டும்.. உங்களோட ஹஸ்பண்ட் எங்க..? அதாவது உங்களோட மகனுடைய அப்பா எங்க..?
பொண்ணு பாக்க வரும்போது அவரையும் கூட்டி வந்திருக்கலாமே..!” என்ற அவர் கிண்டலாக கேட்க,
சிறு தடுமாற்றத்துடன்,
“ இ..ல்ல்…ல.. அவர்..” என்று திக்கித் திணறி எதுவும் பேசாமல் தலை குனிந்தார் பார்வதி.
“என்னம்மா பேச வந்தத பேசாம அப்படியே நிக்கிறீங்க.. இல்லன்னா என்ன அர்த்தம் உயிரோடு இல்லையா இல்லன்னா உங்களுடன் இல்லையா..?” என அவர் கூற,
உடனே பார்வதி தேவியின் தலை நிமிர்ந்தது. கோபம் பொங்கிட,
“இதோ பாருங்க அவர் என்னோட இல்ல ஆனா என்னோட மகனை நான் ஒழுங்கா தான் வளர்த்து இருக்கேன்.. உங்களுக்கு விருப்பம் இருந்தா சம்பந்தம் பேசுவோம் இல்லனா வேணாம் நாங்க இப்பவே இங்கிருந்து போய்விடுகின்றோம்..” என்று அவர் கிருஷ்ணவேணியை பார்த்து,
“வா போகலாம்..” எனக் கிருஷ்ணவேணியின் கையைப் பிடிக்க,
ஆனா குடும்பத்தைப் பத்தியும் விசாரிக்க தானே வேணும் பொண்ண சும்மா கொடுக்க முடியுமா..? இருங்க என் பொண்ண கூப்பிடுறேன் அவ சம்மதிச்சா எனக்கும் சம்பந்தம் தான்…” என்று ராஜகோபால் கூற,
‘அப்பா எப்படி இருந்தா என்ன பொண்ணு நல்லா இருந்தா போதும் உன்னோட அப்பாவையா கட்டிக்கிட்டு என் பையன் கூட்டி போக போறான் பொண்ண தானே அவள் வரட்டும் கல்யாணத்துக்கு பிறகு இவருக்கு இருக்கு பூசை…’ என்று மனதிற்குள் கருவிக்கொண்டாள் பார்வதி தேவி.
ராஜகோபால் அழைத்ததும் உள்ளே இருந்து ஸ்ரீநிதி வெளியே வர, ராஜகோபால் கேலிப் புன்னகையுடன்,
“அம்மாடி இவங்க உன்ன பொண்ணு கேட்டு வந்திருக்காங்க ஏதோ நாலு ஹோட்டல் நடத்துறாங்களாம் உனக்கு விருப்பம்ன்னா சொல்லு அதோட.. பையனுக்கு அப்பா இல்லையாம் அதையும் சொல்லத்தானே வேணும்..” என்று கூறிவிட்டு பார்வதி தேவியை பார்த்து சிரித்தார்.
பார்வதி தேவியின் கிருஷ்ணவேணியும் நின்று கொண்டிருக்க அவர்களுக்கு முன் சோபாவில் காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு,
“என்னப்பா..? போயும் போயும் அப்பன் பேரு தெரியாதவனுக்காப்பா என்னைய கட்டி கொடுக்க போறீங்க அதுவும் ரெண்டு ஹோட்டல் சாரி.. சாரி.. நாலு ஹோட்டல் நடத்துறவனை எல்லாம் என்னால கல்யாணம் கட்டிக்க முடியாது… தயவுசெய்து வீட்டை விட்டு வெளியே போகலாம்..
எங்க வந்து யாரை பொண்ணு கேக்குறீங்க.. எங்க அப்பாட ஸ்டேட்டஸ் க்கு கால் தூசிக்கு வருவீங்களா.. கெட் லாஸ்ட்..” என்று ஸ்ரீநிதி கூறியவுடன் பார்வதி தேவியின் நெஞ்சில் நெருஞ்சி முள்ளு குத்தியது போல பெரும் வழி ஏற்பட்டது.
நெஞ்சை பிடித்துக் கொண்டு கிருஷ்ணவேணியின் பக்கம் சரியத் தொடங்கினார்.
அதைக் கணக்கிலும் எடுக்காத ராஜகோபால்,
“கல்யாணம் கட்டி பொண்ண மயக்கி சொத்தை வளைத்து போட்டுவிடலாம்ன்னு பாக்குறீங்களா..?”
ராஜகோபால் பேசும் வார்த்தைகளை கேட்ட கிருஷ்ணவேணிக்கு ஆரம்பத்திலேயே கோபம் எல்லை தாண்டி வரத் தொடங்கியது.
இருந்தும் பார்வதி தேவிக்காக அனைத்தையும் கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்தவர். பார்வதி தேவி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரியவும், இந்த வார்த்தைக்கு பிறகும் அமைதியாக இருந்தும் பிரயோஜனம் இல்லை என்று தெரிந்துவிட பார்வதி தேவியை தோளில் சாய்த்துக் கொண்டு,
“மிஸ்டர் என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க வந்தவங்களை வாங்க இருங்க என்று சொல்ற கலாச்சாரம் கூட இங்கே இல்லை..
அதுவும் உன்னோட மகள் அதுக்கும் மேல பெரியவங்களுக்கு முன்னுக்கு கால் மேல கால் போட்டு இருக்கிறா.. இப்படி ஒரு சம்பந்தம் எங்களுக்கு தேவையில்லை..
வந்தவங்களுக்கு ஒரு மரியாதை கொடுக்காத நீங்க எல்லாம் பணக்காரர்.. என்ன பணக்காரர் பணம் இருந்து என்ன பிரயோசனம் முதல்ல மனுஷங்களை மதிக்க பழகிக் கொள்ளுங்கள்.. இப்படி பட்ட குடும்பத்தில் பொண்ணு எடுக்க எங்களுக்கும் விருப்பமில்லை ஒன்ன நினைத்துக் கொள்ளுங்கள் பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும் பழக்கவழக்கம் பண்பாடும் தான் முக்கியம்…
என்னோட தோழியை நீங்க ரொம்ப ஹர்ட் பண்ணிட்டீங்க இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லித்தான் ஆகணும்..” என்று அந்த வீடு அதிரும் வண்ணம் கிருஷ்ணவேணி கத்தினாள்.
பார்வதி தேவியோ எதுவும் பேச முடியாமல் கிருஷ்ணவேணியின் கையை பிடித்து அமர்த்தி அவளது பேச்சை நிறுத்த முயற்சி செய்தாள்.
“ஏய் என்னம்மா நானும் பாத்துகிட்டு இருக்கேன் ரொம்ப ஓவரா தான் துள்ளுற அது தான் கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லை என்று சொல்லியாச்சில்ல இப்பவே வீட்டை விட்டு வெளியே போகலாம் இல்லன்னா வாட்ச் மேனைக் கூப்பிட்டு உங்கள மரியாதையோடு வெளியில அனுப்பி வைக்கவா உங்களுக்கு தான் எங்களோட மரியாதை ரொம்ப குறைச்சல இருக்கே..” என ஸ்ரீநிதி ஏளனமாகக் கூற,
பார்வதி தேவியோ பேச முடியாமல் கிருஷ்ணவேணியை வாயில் கைவைத்து எதுவும் பேச வேண்டாம் என்று தலையை ஆட்டி கூறிவிட்டு நாங்கள் செல்கின்றோம் என்று செய்கையில் கூறிவிட்டு கிருஷ்ணவேணியுடன் கை தாங்கலாக பார்வதி வெளியே சென்றார்.
காரில் ஏறியதில் இருந்து பார்வதிக்கு சொல்ல முடியாத வலி, வேதனை அனைத்தையும் அடக்கிக் கொண்டு கிருஷ்ணவேணியிடம் இது இளஞ்செழியனுக்கு தெரியக்கூடாது என்று மட்டும் கூறிவிட்டு வீட்டு வாயிலில் காரிலிருந்து இறங்கி சென்று விட்டார்.
பார்வதியோ அவர்கள் நடந்து கொண்ட விதத்தில் மிகவும் மன வருத்தப்பட்டார்.
அதோடு தனது வாழ்க்கையை அவதூறாகப் பேசியது அவருக்கு மேலும் துன்பத்தை வாரி இறைத்தது.
“இரவு முழுவதும் அதை எண்ணி எண்ணி உறங்காமல் அழுது கொண்டிருந்ததால் அதன் வேதனையில் தான் அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டார்..” என அனைத்தையும் கூறி முடித்த இளஞ்செழியனின் கண்களில் கண்ணீர் குளம் கட்டிப் போயிருந்தது.