காத்திருப்பு : 01
வானத்தில் ஓட்டை விழுந்து விட்டது என்று எண்ணுமளவுக்கு மழை பெய்துகொண்டிருந்தது. அதற்கு சுருதி சேர்க்கும் வகையிலே இடியிடித்தது. அவ் ஓசையினால் பதறியபடி எழுந்தாள் நம் கதையின் நாயகி சந்திரவதனா.நாம் நாயகியை வதனா என்றே அழைப்போம்.
பதறி எழுந்த வதனா கண்டது தன்னருகில் வாயினுள்ளே விரலினை வைத்தபடி உறங்கும் மகனையே. மகன் இடிச் சத்தத்திற்கு எழுந்திடுவான் என்றே வதனா எழுந்தாள்.ஆனால் மகனோ அசையாது படுத்திருந்தான். சிறிது நேரம் மகனையே ரசித்திருந்தாள். அவள் ரசித்தது மகனையா? இல்லை மகன் வடிவிலிருக்கும் தன்னவனையா? என்பது அவளுக்கே தெரிந்த உண்மை.நித்திரையிலே புன்னகைப் பூவினை சிந்திய மகனை அணைத்தவாறே நித்திராதேவியிடம் சரணடைந்தாள்.
வதனா நித்திரையிலிருக்கும் போதே அவளைப் பற்றிப் பார்ப்போம்.
எங்கு பார்த்தாலும் பச்சைக் கம்பளம் விரித்தாற் போன்றிருக்கும் வயல்வெளிகள். இயற்கையை மட்டுமே பேணி வந்தாலும் கால மாற்றத்தினால் ஆங்காங்கே சிறு நகரமயமாக்கலும் காணப்படும் கிராமம் சோலையூர். சுந்தரப்பிள்ளை தங்கம்மா தம்பதியினர் பெற்றெடுத்த ரத்தினமே நம் நாயகி வதனா.சோலையூரிலே சுந்தரப்பிள்ளை குடும்பமும் மரகதம்மாள் குடும்பமுமே மிக வசதியான குடும்பங்கள். இதுவே நம் நாயகி பிறந்து வளர்ந்து பின் பிரிந்து சென்ற ஊர். ஆனால் இப்போது அவள் இருப்பதோ இயந்திரத் தன்மையை மட்டுமே கொண்டிருக்கும் கொழும்புத் தலைநகரத்திலே.
சந்திரவதனா. பெயருக்கு ஏற்றாற் போல் சந்திரனைப் போலே முகமுடையவள். முகம் மட்டுமல்ல சந்திரனைப் போலே குளிர்ச்சியானவள். நீண்ட கூந்தல் இடை தாண்டி இருக்கும். விழிகளிலே எப்போதும் ஒரு சோகம் இழையோடிக்கொண்டிருக்கும். 25 வயதுடையவள். V.K கம்பனியில் பணிபுரிகிறாள். 21 வயது வரை அதிர்ந்து பேசாத பேதை. கோபம் என்றால் என்ன என்று கேட்டவள் இன்று கோபத்தின் முழு உருவானாள். இவள் இப்போது உயிருடன் இருப்பதற்கு காரணம் தனது நான்கு வயது நிரம்பிய மகன் ஆதவன் மட்டுமே.
வதனா நித்திரையிலிருக்கும் போது அவளவன் நித்திரையை தொலைத்தவனாக விழித்திருந்தான். சூர்யகுமார். நம் கதையின் நாயகன்.நாயகனை சூர்யா என்றே அழைப்போம். பஞ்சு மெத்தை , ஏசிக் காற்று இருந்தும் என்ன பயன் தூங்க முடியவில்லையே அவனால். பால்கனியில் நின்று மழையினை பார்த்தபடி இருந்தான். பார்க்க மட்டுமே முடிந்த அவனால் ரசிக்க முடியவில்லை. எப்படி அவனால் ரசிக்க முடியும் கோபம் என்ற ஒன்றைத் தவிர வேறு உணர்வற்றவனாக மாறி நான்கு வருடங்களாயிற்றே. கால்கள் வலிக்கும் வரை காத்திருந்தவன் அதன் பின்பே வந்து கட்டிலில் படுத்து கண்ணயர்ந்தான்.
நாயகனைப் பற்றிப் பார்ப்போம். பெரும் பணம் படைத்தோர் வாழும் புறக்கோட்டைப் பகுதியிலே அரண்மனை போன்று காட்சியளிக்கும் மதுரா இல்லம். நித்யகுமார் மற்றும் பாணுமதி தம்பதியினரின் தலைமகன் சூர்யா.சூர்யாவின் தங்கை ரதிதேவி. சூர்யாவின் ஆருயிர்த் தோழன் கமலேஷ்வரன். தாய் தந்தை இருவரையும் ஒரு விபத்தில் இழந்தவன். கமலேஷ் பிரபல்யமான இதய சத்திரசிகிச்சை நிபுணன். இவன் சூர்யாவின் தோழன் மட்டுமல்ல ரதிதேவியின் காதல்கணவன். கமலேஷ்வரனை கமலேஷ் என்றும் ரதிதேவியை தேவி என்றும் அழைப்போம். தேவி 25 வயதுடையவள். கமலேஷ் மற்றும் தேவி தம்பதியினரின் நான்கு வயது புதல்வி நட்சத்திரா. நித்யகுமாரின் தாய் மரகதம்மாள். மகன் எவ்வளவு அழைத்தும் புறக்கோட்டை வர மறுத்துவிட தேவி மட்டுமே பல்கலைக்கழக லீவின் போது சென்று பாட்டியுடன் இருந்து விட்டு வருவாள்.
28 வயது நிரம்பிய ஆறடி உயரமானவன். உணர்ச்சி துடைத்து கடுமையை மட்டுமே காட்டும் முகம். சிரிக்க மறந்த உதடுகள். பிறரை பார்த்த மாத்திரமே எடைபோடும் இரு விழிகள். மொத்தத்தில் ஆண்மையின் இலக்கணமாக திகழ்ந்தான். தங்கையின் மகளுடன் மிகப் பிரியமானவன். இலங்கையின் முதல் கம்பனி என பெயர் பெற்ற S.R கம்பனியின் உரிமையாளனே சூர்யா.
பிறப்பிலிருந்தே அமைதியானவள் கோபம் எனும் ஆடையை அணியக் காரணம் என்ன?
நாயகனின் சிரிக்க மறந்த உதடுகள் என்று சிரிக்கும்?
காத்திருப்புக்கள் தொடரும்……….
சூப்பர் டா ❤️❤️❤️❤️❤️
Thank you iniya akka ❤️❤️❤️