Home Novelsஎன் திமிர் தலை சாயா...!!❤️‍🔥 என் திமிர் தலை சாயா…!!

❤️‍🔥 என் திமிர் தலை சாயா…!!

by Shamla Fasly
5
(2)

❤️‍🔥 என் திமிர் தலை சாயா…!!❤️‍🔥

 

திமிர் 01

 

அந்தி சாயும் பொழுதினில் வானம் நாணம் கொண்டு ஒரு ஓரமாய் சிவந்து கொண்டிருந்தது. மாளிகை போன்ற அந்த வீட்டில் கணவன் மனைவிக்கிடையில் பெரும் சம்பாஷணையொன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது‌‌.

 

திரைமறைவில் நின்றிருந்த தாரா, தன் செவிகள் இரண்டையும் கூர் தீட்டிக் கொண்டாள். அவளிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பான பணி அது.

 

தந்தையின் பேச்சும், தாயின் புலம்பலும் அவளை எட்டிடும் சமயம், “இங்க என்ன பண்ணுற?” அதிகாரத் தோரணையுடன் தன் பின்னால் ஒலித்த குரலில் திடுக்கிட்டுப் போனாள், அவள்.

 

இன்று அவளின் அருமை அண்ணன் அழைப்பு விடுத்து வீட்டில் என்ன நடந்தாலும் சொல்ல வேண்டும், அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிரு என்று கூறியதன் விளைவாக இதோ பாட்டியிடம் வசமாக சிக்கிக் கொண்டாள்.

 

கழுத்துடைந்த பொம்மை போல் தலையை மட்டும் திருப்பிப் பார்க்க, இடுப்பில் கை வைத்தவாறு நின்றிருந்தார், ராணியம்மாள்.

 

“நீ தான் அந்த ஸ்பையா? இரு உன்ன அப்பறமா பாத்துக்கிறேன்” என முறைத்தவர், “சிவா” என்று குரல் கொடுத்தார்.

 

“என்னம்மா?” பெட்டிப்பாம்பாக அடங்கி தாயின் முன்பு வந்து நின்றார், சிவநாதன்.

 

“பொண்ணு வீட்டிலிருந்து கால் வந்துச்சு” அவர் அழுத்தமாகக் கூற, “நான் இல்லம்மா. அவன் தான் வேணானு சொல்லிருக்கான்” என்று பவ்யமாக உரைத்தார்.

 

“அவன் உன் பையன். அவனை கன்ட்ரோல்ல வெச்சுக்க வேண்டியது நீ. என்னமோ உனக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லங்கிற மாதிரி பேசுற” எனக் கேட்டவருக்கு பேச்சு மகனிடம் என்றாலும், பார்வை மருமகளிடம் இருந்தது.

 

‘நான் சொன்னதை என் மகன் கேட்டான். நீ சொல்வதை உன் மகன் கேட்காமல் இருக்கிறானே. உன்னை விட என் வளர்ப்பு சிறந்தது பார்த்தாயா?’ என்று ஏளனத்தோடு கேட்பது போல் இருந்தது அவர் பார்வை.

 

யாமினி தலையைக் குனித்துக் கொண்டு நின்றார். தான் சொல்வதைத் தன் மகன் கேட்பான் என்று அத்தையிடம் பெருமையாகக் கூறினோமே. மகனின் செயல் அதனை அடியோடு சிதைத்து விட்டதல்லவா?

 

“அவனுக்கு புவி மேல விருப்பம் இல்லயே. நாம என்னம்மா பண்ணுறது?” சிவநாதன் தன்மையாக வினவ, “அவனுக்கு புவி மேல விருப்பம் இல்லன்னா கூட விட்றலாம். பிரச்சினை அவ மேல விருப்பம் இல்லாம இருக்கிறது இல்ல. அவனுக்கு எந்தப் பொண்ணையும் பிடிக்காம இருக்கிறது”

 

“எனக்கு வேணா புவிய கட்டித் தர்றீங்களா பாட்டி?” துள்ளலுடன் அவர்கள் முன்பு வந்து நின்றான், நிரஞ்சன்.

 

“நிரா” சிவா அவனை கடுமையாக அழைக்க, “உடனே நீங்க தடா போடாதீங்கப்பா” தந்தையிடம் விளையாட்டாக சொன்னவன், யாமினியின் கண்டிப்பான பார்வையைக் கண்டதும் உதடுகளை அழுத்தி மூடிக் கொண்டான்.

 

நிரஞ்சன் விளையாட்டுப் பையன். எப்பொழுதும் மற்றவரை சீண்டிக் கொண்டிருப்பான். அவன் கட்டுப்படும் ஒரே நபர் யாமினி மட்டுமே. அவர் மீது பயம் என்றெல்லாம் இல்லை. தாய் என்றால் அவனுக்கு உயிர். அவர் சொன்னால் கண்ணை மூடிக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்வான்.

 

“அவன் வேண்டாம் வேண்டாம்னு சொல்லும் போது கூட நம்ம பேச்சுக்கு ஒரு மதிப்பு இருக்கும்னு நெனச்சு என் ஃப்ரெண்டு கிட்ட பேசினேன். ஆனா இவன் அந்த வீட்டுக்கே போய் வேண்டாம்னு சொல்லி இருக்கான். அந்த வீட்டுல எனக்குனு இருந்த மரியாதையும் போச்சு” ராணியம்மாள் தாம் தூம் என்று குதிக்க ஆரம்பிக்க,

 

“உன் அண்ணனுக்கு என்ன தான் பிரச்சினையாம்?” மெல்லிய குரலில் நிரஞ்சன் கேட்க, “உனக்கும் அண்ணன் தான். நீ என்னமோ அடுத்த வீட்டு பையன் மாதிரி கேட்கிற?” தாரா அவனை முறைத்தாள்.

 

“அண்ணன்னு பெயருக்கு மட்டும் தான். அவரோட பீ.ஏ மதன் கூட பேசுற மாதிரி சரி என்னோட பேச மாட்டேங்கிறார். கொஞ்சம் சிரிச்சா கொறஞ்சா போயிடும்? அங்க பாரு அந்த ஃபோட்டோல கூட இஞ்சி தின்ன மங்கி மாதிரி தான் இருக்கார்” சுவரில் தொங்கிய குடும்பப் புகைப்படத்தைக் காட்டினான், நிரஞ்சன்.

 

விரியாத உதடுகளோடும், வசீகரிக்கும் எழிலோடும், நிரஞ்சன் மற்றும் தாராவிற்கு நடுவில் வாட்டசாட்டமாக நின்றிருந்தான் அந்த ஆடவன்.

 

அவன் சாணக்கியன்!

அவனுக்கு ஏற்ற பெயர் தான். தொழிலில் அவனை வீழ்த்த எவருமே இல்லை எனுமளவு சிம்ம சொப்பனமாக விளங்குபவன். சின்னச் சிரிப்புக்கும் அவனிடம் பஞ்சம் தான். ஆனால் அழகிற்கும், கம்பீரத்திற்கும் குறைவே இல்லை.

 

கணவர் ராஜதுரை நோய்வாய்ப்பட்டு இறந்து போனதும், தனியாக நின்று மகனை வளர்த்த ராணியம்மாள், தன் சொந்தக்காரப் பெண்ணான  யாமினிக்கு சிவநாதனை தனது இஷ்டப்படி திருமணம் செய்து வைத்தார்‌.

 

ராணியம்மாள் கறாரான மாமியாராய் உருமாறி யாமினியின் அமைதியைப் பயன்படுத்தி அடக்கி ஆளத் துவங்கினார். மாமியார் எனும் மரியாதை கருதி பொறுமை காத்துப் போகவே அவரும் பழகி விட்டிருந்தார்.

 

யாமினி மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். மூத்தவன் சாணக்கியன் சிறு வயது முதலே கோபக்காரனாக இருந்தான். அவன் வீட்டாருடன் அத்தனை இணக்கமாகப் பழகுவதில்லை. அவன் யார் சொல்லையும் கேட்க மாட்டான்.

 

படிப்பை முடித்ததும், “அவனை உன் தொழில்ல சேர்த்துக்க சிவா. அப்போவாவது ஒரு கட்டுக்குள்ள கொண்டு வரலாம்” என்று ராணியம்மாள் கூற, “என்னால முடியாது. பழசுலயே இருக்க எனக்கு விருப்பம் இல்ல. நான் புதுசா ஒரு கம்பனி ஸ்டார்ட் பண்ணனும். நானே அத ஆரம்பிச்சவனா இருக்கனும்” என்றான், தீர்க்கமாக.

 

அவனை எதிர்த்துப் பேசும் திறன் எவருக்கும் இருக்கவில்லை. சிவநாதன் ஒரு தடவை சொல்வார். அவன் கேட்கவில்லை என்றால் விட்டு விடுவார். ராணியம்மாளுக்குத் தான் பெருத்த ஏமாற்றம்.

 

“என்னடா இவன் இப்படி இருக்கான். உன் பேச்ச கூட கேட்கல” என்று ஆத்திரத்தோடு கூற, “விடுங்கம்மா. அவன் ஒன்னும் தப்பான விஷயம் பண்ணலயே. அவனுக்கு தனியா பிசினஸ் பண்ணனும்னு ஆச. பண்ணட்டுமே. நம்ம குடும்ப பிசினஸ நான் பார்த்துக்கிறேன். எனக்குப் பிறகு நிரா பாத்துக்க போறான்” சாதாரணமாக உரைத்தார், அவர்.

 

“அவன் போக்குல விடுறது கொஞ்சம் கூட நல்லா இல்ல. கல்யாண விஷயம்னு வரும் போதும் தன் இஷ்டத்துக்கு முடிவெடுக்கப் போறான்” என்று பேச ஆரம்பிக்க, “விடுங்க அத்த. அந்த விஷயத்துல எல்லாம் அப்படி நடக்காது. நான் சொன்னா கேப்பான்” மகனைப் பற்றி அவர் சொல்வது பொறுக்காமல் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு கூறினார், யாமினி.

 

“பாப்போமே” தெனாவெட்டாகச் சொன்ன ராணியம்மாள் அப்போதைக்கு அமைதியைத் தழுவிக் கொண்டார்.

 

சாணக்கியன் புதிதாக தொழில் ஒன்றைத் துவங்கி அதை சிறப்பாய் கொண்டு நடாத்தினான். அந்த ஊரில் பிரசித்தி பெற்ற கம்பனியாக எஸ்.என் க்ரூப் ஆஃப் கம்பனீஸ் உச்சம் தொட்டது. இளம் தொழிலதிபருக்கான விருதைப் பல முறை வென்றான்.

 

இதோ இருபத்தி ஏழு வயதை அடைந்து விட்டான். நெடு நெடுவென்று உயர்ந்தவன். ட்ரிம் செய்த தாடியும், உதட்டின் மேல் அரும்பிய மீசையும் அவனின் படிக்கட்டுத் தேகமும் ஆண்களையே பொறாமை கொள்ள வைக்கும்.

 

அவன் விழிகள் ஒருவித கூர்மையோடு பிரகாசிக்கும். அளவோடு தான் பேசுவான். திமிர் அவனிடத்தில் கொட்டிக் கிடக்கும். எவருக்கும் எதற்காகவும் அடிபணியாத அஞ்சாத காளையவன்.

 

அவனை ரசிப்பதோடு நின்று கொள்வர், பெண்கள். அவனிடம் சென்று காதலைக் கூறி சேதாரமடைந்த ஓரிருவரின் கதையைக் கேட்டு தள்ளியே நிற்பார்கள்.

 

ராணியம்மாள் தன் சிநேகிதி ரேவதியின் பேத்தி புவனாவை இவனுக்கு திருமணம் பேச, அவர்கள் வாயெல்லாம் பல்லாக ஒப்புக் கொண்டனர். சாணக்கியனின் பேரும் புகழும் தெரிந்திருந்தும் அதனை மறுக்க நினைப்பார்களா என்ன?

 

அது பற்றி ராணியம்மாள் தெரிவிக்க, அவனோ சாவகாசமாக எழுந்து கொண்டு “எனக்கு இதுல கொஞ்சமும் விருப்பம் இல்ல. வேண்டாம்னு சொல்லிடுங்க” என்று விட்டான்.

 

“அவங்க கிட்ட ஓகே சொல்லிட்டேன் நான்” என்று பாட்டி கூற, “அப்போ நீங்களே கட்டிக்கங்க” என்றதும், “அது தப்பு இல்லயா?” என நிரஞ்சன் இடையிட்டான்.

 

‘வாய சும்மா வெச்சுக்காம ஏதாவது வாங்கிக் கட்டிக்க போறான்’ தாரா மானசீகமாக தலையில் கை வைத்தாள்.

 

“எது தப்பு?” சாணக்கியன் ஒற்றைப் புருவம் உயர்த்த, “பாட்டிய கட்டிக்க சொல்றீங்க. தாத்தாவுக்கு துரோகம் பண்ணுற மாதிரி ஆயிடும்ல?” பவ்யமாக பதிலுரைத்தான், நிரஞ்சன்.

 

“அப்போ நீ கட்டிக்கிறியா?” அண்ணனின் வினாவில் வாயைப் பிளந்தவன், “நெஜமாவா கேட்கிறீங்க?” என்று கேட்க, “நிரா! அவங்க சீரியஸா பேசுறாங்க. விளையாட்டுத்தனத்த விட்டுட்டு இரு” யாமினி அவனிடம் சொல்லவும் அமைதியாகிப் போனான்.

 

“எனக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்ல. சோ இனி என் கிட்ட இது பத்தி பேச வேணாம்” அத்தோடு பேச்சு முடிந்தது என்பது போல் சென்று விட்டான்.

 

“பிரம்மச்சாரியா போறவன் மாதிரி பேசுறான். அவன் வயசு பசங்க கல்யாணம் பண்ணி குழந்தை குட்டியோட எவ்ளோ சந்தோஷமா வாழுறாங்க” என்று ராணியம்மாள் சொல்ல, “கொஞ்சம் நாள் போகட்டுமே. என்ன அவசரம்?” சிவநாதன் சற்றே கடுப்பாக வினவினார்.

 

“நீ எதுக்குடா என் கிட்ட சீறுற? அவன் நல்லா இருக்கனும்னு தானே பேசுறேன். கொள்ளுப் பேரனையோ பேத்தியையோ பாக்குற ஆச கூட இந்த கிழவிக்கு வரக் கூடாதா?” அவர் மூக்கை உறிஞ்ச, “நீங்க அவங்க கிட்ட வேணாம்னு சொல்லாதீங்க. நான் இவனை சமாதானப்படுத்தி சம்மதிக்க வெக்கிறேன்” தாயின் புலம்பல் தாங்காமல் சொல்லி விட்டார் சிவநாதன்.

 

ஆனால் அவனோ பிடி கொடுப்பதாக இல்லை. சிவநாதன் அவனிடம் சொல்ல, இது சரிப்பட்டு வராது என்று நினைத்தவன் புவனாவின் வீட்டிற்கே சென்று திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று முகத்திற்கு நேரே சொன்னான்‌.

 

“இப்போ அவனோட முடிவு என்னவாம்? கல்யாணமே பண்ணிக்க மாட்டானா?” ராணியம்மாள் சோர்ந்து போய்க் கேட்க, “நீங்க எவ்ளோ கேட்டாலும் பதில் கிடைக்காது பாட்டி. சோ எனக்கு பொண்ணு தேடுற வழியப் பாருங்க” நிரஞ்சன் கண் சிமிட்ட,

 

“போடா படவா. உனக்கு கல்யாணம் பண்ணலன்னு யார் அழுதா?” என முறைக்க, “நான் அழுறேனே” உதட்டைப் பிதுக்கியவன், “மிஸ்டர் சாணக்கியன் கம்பனியத் தான் கல்யாணம் பண்ணிப்பாரே தவிர, பொண்ணு முகத்த ஒரு நாளும் பாக்க மாட்டார்” என்றான்.

 

அந்த சாணக்கியனோ தன் நிறுவனத்திற்கு முன்னால் வீற்றிருக்கும் ரெஸ்டாரன்டில், மேசை மீது இருந்த மெனு கார்டை சுழற்றியவாறு தனக்கு முன்னால் அமர்ந்திருந்த பெண்ணை வெகு தீவிரத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். 

 

அப்பெண்ணின் பார்வை அங்குமிங்கும் சுழன்று மீண்டும் அவன் முகத்தில் நிலைக்க, “என்ன டிசிஷன் எடுத்திருக்க?” எனும் வினாவை எழுப்பினான், வேங்கை.

 

அவள் விழிகள் அவனது லேசர் விழிகளை நேர் கோட்டில் சந்தித்தன‌.

 

அழுந்த மூடியிருந்த இதழ்களை மெல்லத் திறந்து “லெட்ஸ் கெட் மெரீட்!” என்று மொழிந்தாள், மாது.

 

சாயும்…..!!

 

ஷம்லா பஸ்லி 

2025-10-08

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!