Home Novelsஎன் திமிர் தலை சாயா...!!❤️‍🔥 என் திமிர் தலை சாயா…!!

❤️‍🔥 என் திமிர் தலை சாயா…!!

திமிர் - 02

by Shamla Fasly
4.3
(3)

❤️‍🔥 என் திமிர் தலை சாயா…!!❤️‍🔥

 

திமிர் 02

 

திருமணம் என்னும் பந்தத்தில் இணையவிருக்கும் இணைகள் இருவருக்கும் இடையில் பரஸ்பரம் அன்பு, ஆசை, கனவு என்று எத்தனை எத்தனை இருக்கும்?

 

ஆனால் அவை எதுவுமே இன்றி, உணர்வுகள் நுண்ணிய அளவில் கூட இல்லாமல் “லெட்ஸ் கெட் மெரீட்” இயந்திரம் போல் மொழிந்தாள், பாவை.

 

அவள் நேத்ரா!

வீறு கொண்ட நடையும், நேர் கொண்ட பார்வையும் உடைய பெண்புலி அவள். கபில நிற கண்மணிகள், மென்மையான இமைகள், இளஞ்சிவப்பு நிற லிப்ஸ்டிக்கின் மெல்லிய தடவலால் மினுமினுக்கும் உதடுகள் என அழகாக இருந்தாள்.

 

அழகைக் காட்டிலும் கம்பீரத்திற்குப் பெயர் போனவள் அவள். நேத்ரா என்றாலே நிமிர்வு தான். அவளின் எடுப்பான தோற்றமும், மிடுக்கான பேச்சும் எதிரில் இருப்போரைத் தடுமாற வைக்கும் இயல்புடையவை.

 

அவள் கண்கள் சடுதியில் மூடிக் கொள்ள, இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் நடந்த நிகழ்வு மனக்கண் முன் விரிந்தது.

 

அவளது அத்தை தாரதியும், அக்கா அனுஷாவும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டிருந்தனர். தங்கை மற்றும் மூத்த மகளைப் பாவமாகப் பார்த்திருந்தார் நேசன்.

 

இந்தியாவிலே பெயர் போன “நேசன் டெக்ஸ்டைல்” உரிமையாளர் தான் நேசன். அவர் மனைவி தேவி. தேவியின் அண்ணன் சுதாகர் நேசனின் தங்கை தாரதியைத் திருமணம் செய்ய, இரு குடும்பத்தினரும் ஒரே வீட்டில் தான் வாழ்கிறார்கள்.

 

கூட்டுக் குடும்பத்தை விரும்புபவர் நேசன். தனது கடும் முயற்சியால் உருவாக்கிய நேசன் டெக்ஸ்டைலில் தங்கையின் கணவனுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கித் தம்முடன் வைத்துக் கொண்டார்.

 

நாட்கள் உருண்டோடிச் சென்றன. தாரதிக்கு அடுத்தடுத்த வருடங்களில் இரு மகன்கள் பிறந்தனர். மூத்தவன் விக்ரம். இளையவன் விஷால்.

 

தேவிக்கு இரு மகள்கள் பிறந்தனர். விக்ரமின் வயதில் அனுஷா. விஷாலின் வயதுடையவள் நேத்ரா.

 

தன் மகன்களுள் ஒருவரையாவது அண்ணன் வீட்டு மருமகனாக்குவதை அவர்கள் பிறந்தது முதல் ஆசையாகக் கொண்டிருந்தார் தாரதி. அதை ஜாடை மாடையாக சொல்லவும் செய்வார்.

 

பிள்ளைகளை பெரிய பாடசாலையில் படிக்க வைப்பது நேசனின் எண்ணம். ஆனால் அனுஷா தன் ஆசைப்படி வீட்டுக்கு அருகில் இருந்த அரசாங்கப் பாடசாலைக்கு சென்றாள்.

 

நேத்ராவையாவது பிரபல பாடசாலை ஒன்றில் சேர்க்க நினைத்தார் நேசன். அவளுக்கும் அப்படிப் படிக்க அதீத ஆர்வம் கொண்டிருந்ததால் தொலைவில் உள்ள பாடசாலையொன்றில் சேர்க்கப்பட்டாள். வீட்டிற்கு வந்து செல்ல முடியாது என்பதால் கொஞ்சம் வளர்ந்ததும் அவளது விருப்பப்படி ஹாஸ்டலில் தங்கிக் கொண்டாள். தேவிக்கு இதில் துளியும் உடன்பாடில்லை. 

 

“வீட்டுல இளவரசி மாதிரி வாழ வேண்டியவ. எதுக்காக ஹாஸ்டல் போய் தன்னந்தனியா இருக்கனும்?” என புலம்பித் தள்ளுவார்.

 

“அவ படிக்கணும்னு ஆசப்படுறா. டெய்லி ட்ரெவல் பண்ணுறது அவளுக்கும் டயர்டா இருக்கும். அங்க இருக்கட்டுமே. நாம அடிக்கடி போய் பாத்துக்கலாம்” என மனைவியை சமாதானம் செய்வார் நேசன்.

 

காலேஜும் ஹாஸ்டலில் இருந்து தான் சென்றாள். விடுமுறையில் வீட்டுக்கு வந்து செல்வாள். அப்படி வளர்ந்ததினாலோ என்னவோ அவள் தன் குடும்பத்தில் இருந்து சற்றுத் தள்ளியே நிற்பாள். அன்பு, உணர்வு என்று எதனையும் அவ்வளவு இலகுவாக வெளியில் காட்டிக் கொள்ள மாட்டாள்.

 

தன் உள்ளத்து உணர்வுகளை தனக்குள்ளே பூட்டி வைத்திருப்பாள். யாரிடமும் அதிகம் வாய் திறந்து கதைக்க மாட்டாள். தான் உண்டு தன் படிப்புண்டு என இருப்பாள்.

 

படிப்பு முடியும் தருவாயில், நேசன் தன் கம்பனி பொறுப்பை இரு மகள்களுக்கும் பிரித்துக் கொடுக்க விரும்பினார்.

 

அனுஷாவுக்கு அதில் விருப்பம் இல்லை என்று விலகிக் கொள்ள, அதை நேத்ராவே முழுவதுமாக ஏற்க வேண்டிய சூழல் உருவானது. அவளுக்கு பிசினஸில் ஈடுபாடும், பிடித்தமும் இருக்க, அப்பொறுப்பை ஏற்று வெற்றிகராக செயல்படலானாள்.

 

நேசனின் பிசினஸ் பார்ட்னர் அனுஷாவை அவரது மகனுக்கு பெண் கேட்டார்.

 

“என் பையன் இருக்கும் போது அது எப்படி அனுவை வேறு வீட்டுக்கு கொடுப்பீங்க?” முதல் முறையாக தாரதி தன் எண்ணத்தைப் பகிரங்கமாக முன்வைத்தார்.

 

“ம்மா! எனக்கு இப்போ கல்யாணமே வேண்டாம்மா” விக்ரம் மறுப்புத் தெரிவித்து விட்டான்.

 

“அவங்க கேக்கும் போது நான் சரிங்குற மாதிரி பேசிட்டேன். இப்போ மறுக்க முடியாது தாரு. நேத்ரா இருக்கா தானே? அவளை வேணா உனக்கு மருமகளாக்குறத யோசிப்போம்” என்று நேசன் சொல்லி விட, அவரும் அதை ஏற்று மௌனம் காத்தார்.

 

அன்றிரவு பிசினஸ் மீட்டிங் சென்று வந்த நேத்ராவிடம், விஷால் தாரதியின் விருப்பம் பற்றியும், நேசனின் வார்த்தை பற்றியும் கூறினான்.

 

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா நேத்ரா? அம்மா அனு விஷயம் கை விட்டுப் போனதும் நம்ம ரெண்டு பேரையும் ஜோடியாக்க ப்ளான் போடுறாங்க” விஷால் சொன்னதைக் கேட்டு, “வாட் தி ஹெல்?” என்றாள் அவள்.

 

“நானே ஒரு செக்கன் ஷாக் ஆயிட்டேன்” அவள் உதட்டைப் பிதுக்க, “அதெல்லாம் நடக்காது. நான் சம்மதிக்காம அவங்களால எதுவும் பண்ண முடியாது” அலட்சியமாக தோளைக் குலுக்கிக் கொண்டு சென்றாள்.

 

நேத்ரா  அப்படித் தான். பெற்றோர் மீது அன்பிருக்கும். காட்டிக் கொள்ள மாட்டாள். மரியாதை இருக்கும். இருப்பினும், அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டு நடக்கவும் மாட்டாள். தனக்கு விருப்பம் இல்லாத எதையும் யார் சொன்னாலும் செய்ய மாட்டாள்.

 

அந்த இயல்பு அவளது பெற்றோருக்கும் தெரியும். எனவே அவளை எதிலும் நிர்ப்பந்திப்பதில்லை.

 

அனுஷாவுக்கு வெகுவிமரிசையாக திருமணம் நடந்தது‌. அடுத்த பத்து மாதங்களில் அவளுக்கு பெண் குழந்தையொன்று பிறந்தது.

 

இதற்கிடையில் விக்ரம் ஒரு பெண்ணைக் காதலிக்கத் துவங்கினான். வீட்டில் சம்மதமும் வாங்கி விட்டான்.

 

ஒரு வருடம் கடந்த நிலையில் பிறந்த வீட்டுக்கு வந்த சமயம் “அப்பா! அவரோட தம்பிக்கு பொண்ணு பாத்துட்டு இருக்காங்க. நாம ஏன் நம்ம நேத்ராவை பேசக் கூடாது? அவளும் நானும் ஒரே வீட்டுல வாழலாமே” என்றாள் அனுஷா.

 

“இது என்ன கூத்தா இருக்கு? விஷாலுக்கு அவளைக் கட்டித் தர்றதா முடிவு பண்ணியாச்சு நிரா” தாரதி கோபம் கொண்டார்.

 

நேசன் யார் பக்கம் பேசுவது என்று தெரியாமல் நிற்க, “நீங்க சொல்லுங்க அண்ணி. என் கேள்விக்கு பதில் என்ன?” அண்ணன் மனைவியிடம் வினவினார் தாரதி‌.

 

“அவ கல்யாணம் பண்ணிக்குவாளான்னே டவுட்டா இருக்கு. இதுல யாரை கல்யாணம் பண்ணிக்க போறானு உங்களுக்குள்ள வாக்குவாதம்” பெருமூச்சு விட்டார் தேவி.

 

“அது கரெக்ட் அத்த! பிசினஸ், மீட்டிங், கம்பெனி என்று ஓடுறாளே தவிர அவ உறவு கொண்டாடுற மாதிரியா இருக்கா?” விக்ரம் சாப்பிட்டுக் கொண்டே சொன்னவன் அங்கு வரும் நேத்ராவைக் கண்டு வாயை மூடிக் கொண்டான்.

 

“கல்யாணம் பண்ணி வெச்சா எல்லாம் மாறிடும். விஷால் சரி பண்ணிடுவான்” என்று தாரதி கூற, “ஒரே வீட்டுல வளர்ந்தவங்க அவங்க. கல்யாணம் எல்லாம் செட் ஆகுமா? நேத்ரா அவனை ஃப்ரெண்டா தான் பாக்குறா” என்றாள் அனு.

 

“ஃப்ரெண்ட்னு சொல்லிட்டு திரியுற எத்தன பேர் லவ்வர்ஸா மாறுறாங்க? அப்படிப்பட்ட ஆளுங்க நல்ல புரிதலோட வாழுவாங்க” 

 

“எல்லாரும் அப்படி இல்லத்த. அவ இதுக்கு ஒத்துக்க மாட்டா”

 

“நீ சொன்னதையும் ஏத்துக்க மாட்டா” 

 

இப்படியாக இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டிருக்க, அவளோ அமைதியே உருவாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

 

சாப்பிட்டு முடித்து கை கழுவியவள் எழுந்து கொள்ள, “என்ன நேத்ரா ஒன்னுமே பேசாம போற?” எனக் கேட்டாள் அனுஷா.

 

“என்ன பேசனும்?” தமக்கை முகம் பார்த்தாள்.

 

“உன் கல்யாணம் பத்தி பேசிட்டிருக்கோம். நீ என்னன்னா யாருக்கு வந்த விருந்தோங்கிற மாதிரி இருக்க?” எனக் கேட்டாள்.

 

“எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்ல. அப்படி தோணுச்சுன்னா கண்டிப்பா சொல்லுவேன்” டிஸ்யூவால் கைகளைத் துடைத்துக் கொண்டு நகர்ந்தாள்.

 

“நில்லு நேத்ரா” அத்தையின் குரலுக்கு மதிப்பளித்து நின்றவள், “என் முடிவ நான் கட் அன்ட் ரைட்டா சொல்லிட்டேன். இதுக்கு மேல என்ன கேக்க போறீங்க?” என்று கேட்டாள்.

 

“இப்படி இருந்தா உனக்குன்னு எப்போ ஒரு வாழ்க்கய தேர்ந்தெடுக்க போற? இப்படி தனியாவே வாழ்ந்துடலாம்னு நெனக்கிறியா?” தாயின் கேள்வியில் அவர் புறம் தலை திருப்பி,

 

“எனக்கு கல்யாணம் பண்ணி வெக்கனும்னு நீங்க நெனக்கிறீங்களா? இல்லன்னா அத்த பேச்ச கேட்டு ஆசப்படுறீங்களா?” என்று வினாத் தொடுத்தாள்.

 

“என் மக குழந்தை குட்டின்னு வாழறத பாக்க ஆச இல்லாமலா இருக்கும்?”

 

“நான் கல்யாணமே வேண்டாம்னு சொல்லல. கொஞ்ச நாள் போகட்டுமே” சற்று கெஞ்சலுடன் கேட்டதும், தலையசைத்து விட்டார் அவர்.

 

மகள் இப்படியெல்லாம் பேசுவதே அரிது தான்.  அவளின் கெஞ்சலில் தாயுள்ளம் பாகாக உருகியது.

 

அவளும் இதற்கு மேல் பேச்சில்லை என்பதாக வெளியேறி விட்டாள். திருமணமே வேண்டாம் என்றவள் இரு நாட்களிலேயே ஒருவனின் முன்பு நின்று திருமணத்திற்கு சம்மதிப்போம் என்று கனவிலும் நினைக்கவில்லை.

 

இதோ நினைக்க வைத்து விட்டானே. அவனைத் தலை தூக்கிப் பார்த்தாள் நேத்ரா.

 

சாணக்கியனின் பார்வையும் அவளைத் தான் தழுவிக் கொண்டிருந்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்து விட்டு, “இந்த முடிவுல இருந்து மாற மாட்டியே?” என்று ஏக காலத்தில் கேட்டிருந்தனர்.

 

அவளை முறைத்தவன், “சொன்ன சொல் தவறுற பழக்கம் என் கிட்ட கெடயாது” என்றான்.

 

“ஹலோ மிஸ்டர்! எனக்கும் அந்த பழக்கம் இல்ல” என்றாள் அழுத்தமாக.

 

“அப்போ உன் வீட்டுல சம்மதம் வாங்கிடு” என்றவனைப் பார்த்து, “டன்” என தலையசைத்தாள்.

 

“இந்த கல்யாணத்த நாம ஏன் பண்ணுறோம்னு மறந்துடாத”

 

“எக்ஸ்கியூஸ்மீ! நான் அம்னீஷியா பேஷன்ட் இல்ல‌‌. ஸ்டுடன்ட வெச்சு கேள்வி கேட்டு புரிஞ்சுதான்னு கேக்குற மாதிரி விளக்கம் சொல்லிட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்ல. எனக்கு எல்லாம் தெரியும்” என்று கடுப்போடு சொல்ல,

 

‘திமிரு திமிரு’ என உள்ளுக்குள் பல்லைக் கடித்தவன், “அப்போ நல்லதாப் போச்சு. இனி என் கிட்ட எந்த விளக்கமும் கேக்கக் கூடாது. மைண்ட் இட்” 

 

“எந்த விளக்குமாறும் தேவயில்ல” கபில நிற கண்மணிகளை உருட்டியவளின் முகத்தில் அத்தனை அலட்சியம்.

 

“ரைட்! உன் வீட்டுல ஓகேன்னா எனக்கு இன்போர்ம் பண்ணு. நம்பர் இருக்குல்ல?”

 

“பிசினஸ் எனிமியோட நம்பர் முதற்கொண்டு பரம்பரை நிலம் வரை இந்த நேத்ரா விரல் நுனில வெச்சிருப்பா”

 

“பிசினஸ்” என்ற வார்த்தையைக் கேட்டதும் அவன் விழிகளில் பிரகாசம். அதற்காக அல்லவா இந்த திருமணம்?

 

“எனிமி? கூடிய சீக்கிரமே நீ என் வைஃப்” என்று சொன்னவனின் முகம் அவன் சொன்ன வார்த்தைகளின் உண்மைத் தன்மை உணர்ந்து அஷ்டகோணலாக மாறியது.

 

‘இவனுக்கு நான் வைஃப்? பிசினஸ்காக என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு?’ என உதட்டை வளைத்தாள்.

 

“இதோ பாரு! பேருக்கு மட்டும் தான் கல்யாணம். மத்தபடி நமக்குள்ள இந்த வைஃப் வெண்டைக்கா ஒன்னுமே இல்ல” என அவன் கூற,

 

“எனக்கு மட்டும் ஆச பாரு சாத்தானுக்கு ரூம் மேட்டா மாறனும்னு” என்றவள் எழுந்து செல்ல, அவனுக்கு ஏகத்துக்கும் எகிறியது.

 

சாயும்………..!!

 

ஷம்லா பஸ்லி 

2025-10-09

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!