கரம் விரித்தாய் என் வரமே – 10
அன்று ஏலகிரியை ஜாலியாக ரௌண்ட் வந்தார்கள் நண்பர்கள். அஸ்வினியும் ராஜேஷும் ஒரு தெளிவுக்கு வந்து இருந்ததால், சந்தோசமாகவே இருந்தார்கள். அதனால் அனைவருக்கும் பொழுது உற்சாகமாகவே போனது.
தெய்வாவும் ஷிவாவும் சிறுவயதில் இருந்து பழகுவதால் அவர்கள் தனியாக ஜோடி போட்டு என்றுமே சுற்றியது இல்லை. அதே சமயம் அவர்கள் மனதளவில் இரட்டையர்கள் போல் நெருக்கமானவர்கள். அது இவர்கள் நண்பர் குழுவிற்கு தெரியும். பார்வதிக்கு தெரியாததால் அவள் தெய்வாவிடம்,
“நீ ஷிவாவை கல்யாணம் பண்ணிக்க போற மாதிரியே தெரியலை…. உனக்கு அவனோடவே இருக்கணும்னு ஆசை இருக்காதா….” என்றாள்.
அவளுக்கு புரியவைக்க முடியாது என்று நினைத்த தெய்வா,
“எனக்கு இந்த ரொமான்ஸ் எல்லாம் வராது, கொஞ்சம் மேனுபேக்ஷர் டிபெக்ட்! ஆனா உனக்கு ராஜேஷை ரொம்ப பிடிக்குதுனு எங்களுக்கு தெரியுது…. நீ போய் அவனை ஒட்டிக்கோ இல்லை கட்டிக்கோ…. நாங்க தப்பா நினைக்க மாட்டோம்….” என்று சிரிப்பாக சொல்வது போல் நேற்றைய கடுப்பை காட்டினாள். எதையும் கண்டும் காணாமல் இருந்தாலும் தெய்வாவிற்கு பார்வதியின் நடத்தை துளி கூட பிடிக்கவில்லை.
பார்வதி எந்த ஒளிவு மறைவும் இல்லாமல், “ஆமா எனக்கு அப்படி தான்! ஆனா உங்க பிரண்ட் அப்படி இல்லை….” என்று சோகமாக கூறினாள்.
அவள் சொல்வதை கண்ட ராஜேஷ், தலையில் அடித்து கொள்ளாத குறையாக நொந்து போனான். ஷிவாவும் மதனும் அவனை ஒட்டி எடுத்தார்கள். பாருடா ஒரு பொண்ணு வாய் விட்டு உன் மேல் இருக்க ஆசையை சொல்லுது…. நீ இப்படி ஏங்க வைக்கிறியே… என்று கலாய்த்தார்கள்.
மாலை நேரத்தில், போட்டிங் சென்று விட்டு பூங்கா ஒன்றில் அமர்ந்து வளவளத்து கொண்டு இருந்தார்கள் அனைவரும். அப்போது ஷிவாவிற்கு கொஞ்சம் தலைவலியாக இருக்க, அவன் தெய்வாவின் மடியில் படுத்தான். தெய்வா அவன் தலையை மெதுவாக அமுக்கி விட்டபடியே அனைவருடன் பேசி கொண்டு இருந்தாள். பார்வதி ராஜேஷின் தோளில் சாய்ந்து இருந்தாள். அவர்களை கண்ட மதன்,
“ரெண்டு பேர் ஜோடி போட்டு வந்து எங்களை வெறுப்பேத்துறீங்க டா…. என்று விளையாட்டாக சொல்லி, அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி, வடிவேலு சொல்வது போல்,
“வா சுருதி, நாம வேற இடம் போவோம்….” என்று அஸ்வினியின் கையை பிடித்து அமர்ந்து இருந்தவளை எழுப்பிக் கொண்டு வேகமாக நடந்தான்.
ராஜேஷை தவிர அனைவரும் சிரித்தனர். அஸ்வினியும் சிரித்துக் கொண்டே மதன் இழுத்த இழுப்பிற்கு சென்றாள். அவர்கள் போவதை கண்ட ராஜேஷ், வாய் விட்டு மதனை திட்டினான்.
“நன்றாக தானே இருந்தோம் அனைவரும், இவன் ஏன் இப்போது தேவை இல்லாம அவளை தனியா இழுத்துட்டு போறான்….?”
“அவ போனா என்ன ராஜேஷ்?” தெய்வா அவனை மேலும் பேச தூண்டினாள்.
“இப்போ தான் கொஞ்சம் மாறி வர்றா, நம்மளோடவே இருந்தா தானா நல்லது….?”
“நம்மளோடவேனா….? எனக்கு புரியலை…. மதனும் நம்ம பிரண்ட் தானே ராஜேஷ்….?”
“ஆமா….” என்றவன் மேலே யோசிக்கும் முன், பேச்சு திசை மாறி போகிறது என்று புரிந்துக் கொண்ட பார்வதி, சூழ்நிலையை சட்டென்று கையில் எடுத்து கொண்டு,
“நம்மளை தனியே விட்டுட்டு போன உங்க பிரண்ட்காகவாவது
கொஞ்சம் நேரம் நடந்துட்டு வரலாம்….” என்று அவனை மேற்கொண்டு யோசிக்க விடாமல் இழுத்தாள். அதில் அவர்கள் பேச்சு தடை பெற, தெய்வா விரும்பியது நடக்கவில்லை. ராஜேஷின் மனதில் இருப்பது அன்பும் அக்கறையுமா? இல்லை காதலா….? என்று புரிந்து கொள்ள நினைத்தாள் அவள். கடந்த இரண்டு நாட்களாக அவள் ராஜேஷை கவனித்து கொண்டு தான் இருக்கிறாள். அவன் அஸ்வினியிடம் காட்டும், எடுக்கும் உரிமை, பார்வதியை விட அஸ்வினியிடம் நேரம் செலவழிக்க விரும்புவது எல்லாம் அவளுக்கு கொஞ்சம் குழப்பத்தை கொடுத்தது.
அவர்கள் நகர்ந்ததும், “பார்வதி ரொம்ப கிளவர்….!” என்றான் ஷிவா அர்த்தமுடன். வழக்கம் போல் அவனின் புரிதலில் மகிழ்ந்தவள், ராஜேஷ் கொஞ்சம் சீக்கிரம் தெளிவான பரவாயில்லை என்றாள் யோசனையுடன்.
அனைவருடனும் சேர்ந்து இருந்த போது அடக்கி வாசித்த பார்வதி, ராஜேஷை தூண்டும் விதமாக அவனுடன் நெருக்கமாக இழைந்தாள். அவளின் நெருக்கத்தில் வழக்கம் அவன் கவனத்தை பார்வதியிடம் வைத்தான் ராஜேஷ். வைக்க வைத்தாள் பார்வதி.
**********
அன்று இரவு அவர்கள் தங்கி இருந்த வீட்டின் ஹாலில் அமர்ந்து பேசிகொண்டு இருந்தார்கள் அனைவரும். அவர்கள் ஆறு பேர் மட்டுமே அங்கு தங்கி இருந்தார்கள். அவர்களின் ஜாலி பேச்சில் கலந்து கொள்ள பிடிக்காமல், பார்வதி தூக்கம் வருகிறது என்று சென்று விட ஷிவாவிற்கு கண்ணை காட்டினாள் தெய்வா. அவன் மதனுக்கு கண் காட்ட, ஆண்கள் இருவரும் கிளம்பினார்கள். மதன் ஒன்றும் தவறாக நினைக்கவில்லை. ராஜேஷும் அஸ்வினியும் நெருக்கம், இப்போது சரியாக பேசுவதில்லை என்று அவனுக்கு தெரியுமே…. அதனால் ஒன்றும் நினைக்காமல் அவனுடன் கிளம்பினான். அவர்கள் கிளம்பிய சற்று நேரத்திற்கு எல்லாம் தெய்வா,
“நான் இதோ வரேன்டி, போயிடாதே….” என்றபடி எழுந்து சென்றாள். எஞ்சி இருந்தது அஸ்வினியும் ராஜேஷும் மட்டும் தான். அவர்கள் சென்றதும், அஸ்வினிக்கு எதிர் சோபாவில் அமர்ந்து இருந்த ராஜேஷ், என்ன நினைத்தானோ எழுந்து வந்து அஸ்வினியின் மடியில் தலை வைத்து படுத்து கொண்டான்.
அவனின் அந்த செய்கையை துளி கூட எதிர்பாராதவள், திகைத்து தடுமாறினாள்.
“என்ன டா? என்னாச்சு….?” சங்கடமாக நெளிந்து கொண்டே கேட்டாள் அஸ்வினி.
“தெரியலை…. இப்படி படுத்துக்கணும்னு தோணுச்சு….” நன்றாக சௌகரியமாக தலையை அவள் மடியில் வைத்து கொண்டான் ராஜேஷ்.
இரு பார்வதியை வர சொல்றேன்…. அவ மடியில் படுத்தாலும் சரி, அவ மேலேயே படுத்தாலும் சரி என்றாள் கிண்டலாக. சொன்னதோடு மட்டுமில்லாமல் அவனை நகர்த்தவும் முயற்சிக்க, கோபமாக எழுந்து அமர்ந்தான் ராஜேஷ். அவள் கண்களுக்குள் பார்த்து,
“நான் உன் மடியில் படுக்க கூடாதா?” என்றான் கோபம் கொஞ்சமும் குறையாமல்.
அவனை விரும்பும் அவள் மனது அவனின் நெருக்கத்தில் தவிப்பது இவனுக்கு என்ன தெரியும்? மடியில் படுத்த அவனின் தலை கோதவும், நெற்றியில் முத்தமிடவும் அவள் துடித்தது இவனுக்கு தெரியுமா? இது எதுவும் தெரியாமல் கோபம் மட்டும் காட்டினான் ராஜேஷ்.
அவனுக்கு என்ன பதில் சொல்வாள் அஸ்வினி? தவிப்பாக அவனை பார்த்தவள் கொஞ்சம் யோசித்து, “நீ இப்போ என் பிரண்ட் மட்டுமில்லை டா, இன்னொரு பொண்ணோட லவ்வர்…. அதனால் தான் வேண்டாம் சொல்றேன்….” என்றாள் மெதுவாக.
“நான் லவ் பண்ணினா என் பிரண்ட் கிட்ட இப்படி பழக கூடாதா?” எரிச்சலாக கேட்டான் ராஜேஷ்.
“பார்வதி முன்னாடி நீ என்கிட்ட இப்படி பண்ணுவியா?” அவன் புரியாமல் பேச இவளுக்கும் எரிச்சல் வந்தது.
“ஏன்? இது என்ன தப்பான செயலா? இப்படி படுத்தா நாம ரெண்டு பேரும் தப்பு பண்றோமா….? இதுக்கெல்லாம் அவ சந்தேகப்பட்டு, கோபப்பட்டா நான் ஒன்னும் பண்ண முடியாது…. எனக்கு கவலையும் இல்லை” என்றான் கடுப்பாக.
அவன் இந்த ஜென்மத்தில் புரிந்து கொள்ளப் போவதில்லை என்று உணர்ந்த அஸ்வினி,
“உனக்கு வேணா கவலை இல்லாமல் இருக்கலாம். ஆனா எனக்கு இருக்கு…. எனக்கு தேவை இல்லாத எந்த பிரச்சனையும் வேண்டாம்…. என்னால் யாருக்கிட்டயும் பேச்சு வாங்க முடியாது….” என்றாள் சற்றே பட்டும் படாமலும்.
அவள் சொன்னதில் அவனுக்கு மனதில் சுருக்கென்று ஆகி விட,
“என்னை சொல்றியா? நான் அப்போ நடந்துகிட்டதை சொல்றியா….?” என்றான் ஒரு மாதிரியாக.
“டேய்…. இப்போ என்ன…. என்கூட வம்பு பண்ற மூடில் இருக்கியா….? நான் உன்னை எங்கே சொன்னேன்? பார்வதி வந்து கேட்டா…. அதை பத்தி தான் சொன்னேன்….” அலுப்பாக சொன்னாள் அஸ்வினி.
“அவ வந்து பேசினா உன்னால பதில் சொல்ல முடியாதா….?”
“ம்ப்ச்…. சும்மா இரு டா….” சொல்லும் போதே பழைய நினைவில் துக்கம் தொண்டையை அடைத்தது அஸ்வினிக்கு.
“ஹேய், உன்னை பத்தி என்கிட்ட யாரும் கேள்வி கேட்க முடியாது…. தெரியுமா?” என்றான். பல சமயங்களில் பார்வதியிடம் இவர்கள் நட்புக்காக பேசியதை நினைத்துக் கொண்டு அப்படி சொன்னான்.
அவன் சொன்னதில் அவளின் அத்தனை நாள் கோபம் சட்டென்று தலை தூக்க, “ஆமா நீயே என்னை மோசமா பேசவே…. மத்தவங்க எதுக்கு அதுக்கு…. உனக்கு கோபம் வந்தா என்னை தள்ளி வைப்பே…. சந்தோஷம் வந்த க்ளோஸா வருவே…. நான் எல்லாத்தையும் ஏத்துக்கணும்…. உனக்காக நான் எவ்ளோ அட்ஜெஸ்ட் பண்ணி இருக்கேன் தெரியுமா? உனக்கெங்க தெரிய போகுது….? எப்போதும் உன் பீலிங்ஸ் மட்டும் தானே நீ பார்பே….” என்று பொரிந்து தள்ளி விட்டாள் அஸ்வினி.
திகைத்துப் போய் விட்டான் ராஜேஷ். கடந்த மூன்று வருடங்களில் ஒரு முறை கூட அஸ்வினி இப்படி கோபப்பட்டதில்லை. திகைத்த அவன் முகத்தை பார்த்த அஸ்வினிக்கு அப்போது தான் அவள் பேசியது உறைத்தது. அய்யோ கடவுளே, ஏதோ ஏதோ உளறிட்டேனே…. தன்னையே நொந்து கொண்டாள் அஸ்வினி.
“ராஜேஷ்….” தயக்கமாக அவள் அழைக்க,
“இத்தனை வருஷம் எனக்காக அட்ஜெஸ்ட் பண்ணிட்டு என்கூட கஷ்டப்பட்டு தான் பழகுனியா?” தவிப்பாக கேட்டான் ராஜேஷ்.
“நான் உன்கிட்ட கஷ்டப்பட்டு பழகின மாதிரியா இருந்தது உனக்கு….? அப்படி எல்லாம் இல்லை டா…. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் டா….”
“அப்போ அட்ஜெஸ்ட் பண்ணிட்டு தான் பழகி இருக்கே….” அவளை துளைத்தது அவன் பார்வையும் குரலும்.
“நான் அப்படி சொல்லலை டா….” தடுமாறினாள் அஸ்வினி.
“நீதானே இப்போ சொன்னே…. எனக்காக நிறைய அட்ஜெஸ்ட் பண்ணேனு…. என் பிரண்ட் நீ அப்படி நினைச்சு தான் நான் நிறைய உரிமையெடுத்தேன்…. ஆனா உனக்கு கஷ்டமா இருந்து இருக்கும்னு எனக்கு தெரியாது…. ஸாரி….” என்றான் ராஜேஷ் முகம் கசங்க.
“டேய்…. ரொம்ப பண்ணாதே…. நீ என்னை அவ்ளோ கோபமா பேசி என்கூட பேசாம இருந்தப்போ கூட நான் உன்கிட்ட இவ்ளோ ரியாக்ட் பண்ணலை….ஓவரா ரியாக்ட் பண்ணாதே டா….” அவனின் முகம் பார்த்து டென்ஷன் ஆனவளாக பேசினாள் அஸ்வினி.
“மறுபடி மறுபடி நான் உன்னை ஹர்ட் பண்ணி இருக்கேன்னு சொல்லி காமிக்கிறே அஸ்வினி….” என்று சொல்லியவன் சற்று யோசித்து, “அதனால் தான் என்கிட்ட இருந்து விலகி விலகி போனியா….? தயவு செய்து நான் லவ் பன்றேன்னு அதனால்னு மட்டும் சொல்லாதே…. அது உண்மை இல்லைனு எனக்கு தெரியும்….” என்றான் மிகவும் மெதுவாக.
என் காதலன் நீ இன்னொரு பெண்ணை விரும்புவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் என்ற உண்மையை சொல்ல முடியாமல்,
“உன்னை ஹர்ட் பண்ணனும்னோ இல்லை நீ தெரிஞ்சுக்கணும்னோ நான் விலகி போகலை டா, என்னோட இடம் என்னனு நான் கத்துகிட்ட பாடம்னால தான் நான் விலகி போனேன்…. என்னோட மனநிம்மதிகாக தான் இப்படி இருந்தேன்….” என்றாள் அவளும் மெதுவாக.
“அப்போ என்கூட இருந்தா உன் நிம்மதி போகுதா அஸ்வினி….?”
“இப்போ உன் கூட இருக்கிறது உன் மண்டையிலே ஏறலையா டா? ஏண்டா இப்படி இம்சை பண்றே….?”
“நாம பழைய மாதிரி ஏன் இல்லை…. எனக்கு உன்கிட்ட இருக்க இந்த வித்தியாசம் பிடிக்கலை….” என்றவனை பார்த்து சிரித்தவள்,
“ரெண்டு பேரும் அடுத்த ஸ்டேஜ் போகும் போது இப்படி தான் இருக்கும் ராஜேஷ்…. கல்யாணம், குழந்தை, அவங்க அவங்க லைப்னு போயிட்டே இருக்க வேண்டியது தான்” நண்பனின் தன் மீதான அன்பில் நெகிழ்ந்தவளாக ஆறுதல் சொன்னாள் அஸ்வினி.
“தெரியலைடி…. உன்கிட்ட இருந்து என்னவோ எதிர்பார்க்கிறேன்…. ஆனா என்னன்னு எனக்கு புரியலைடி….” உண்மையாகவே புலம்புவது போல் சொன்னான் ராஜேஷ். பின், “தூங்கலாம் வா….” என்று சொல்லி அவளையும் எழுப்பி கொண்டு நடந்தான்.
அவள் ஏதோ பேச வர, பேசாதே என்று சைகை செய்தவன், “எனக்கு கொஞ்சம் யோசிக்கணும்…. நீ எதுவும் சொல்ல வேண்டாம்….ப்ளீஸ்….” என்றவனை குழப்பமாக பார்த்தாள் அஸ்வினி. இவனுக்கு என்ன பிரச்சனை இப்போ? உண்மையிலேயே அவளுக்கு புரியவில்லை. அவனுக்கே தெரியாத போது இவளுக்கு எப்படி புரிய வைப்பான்?