💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 100
காலை ஆட்டியவாறே சாக்லேட் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் ஜனனி. வலிகள் யாவும் அவனது அன்பில் கரைந்து உருகிப் போனது போல் இருந்தது.
வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் பாவையவள். அவளுக்கு பேச்சுக் கொடுத்துக் கொண்டே ஃப்ரைட் ரைஸ் செய்தான் சத்யா.
அவனுக்கு சமைப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் அதற்கு அவன் வெளியூர் சென்ற போதும் நேரமில்லை, இங்கு வந்த பின்னரும் வழியமையவில்லை. இன்று தன்னவளுக்காக சமயலறை வாசம் நுகர்ந்தான்.
“ரொம்ப வலிக்குதா ஜானு?” அவன் அடிக்கடி கேட்க, “இப்போ கொஞ்சம் பரவாயில்லை” என்றவளுக்கு அவனது அதீத அக்கறை அகத்தினுள் இனித்தது.
சமைத்து முடித்தவன், அவளுக்கு உணவை எடுத்துக் கொண்டு வந்தான். அவன் ஊட்டப் போக, “நான் சாப்பிடுறேனே” என்றவள், அவனது முறைப்பில் கப்சிப்பாகி சாப்பிட்டாள்.
“உனக்கு இப்படி சொல்லி தான் ஒரு வேலை வாங்கனும் போல. ரொம்ப கஷ்டம். என்னை மாதிரி சமத்துப் பையனா இருக்க மாட்டேங்குற” என்று அவன் கூற,
“நீங்க சமத்து பையனா? நல்லா இருக்கு இந்தக் கதை” என முறைத்துப் பார்த்தவளுக்கு, போதும் போதும் என்று சொல்லும் உணவு ஊட்டி விட்டான்.
“நல்லா சாப்பிடனும். அப்போ தான் உடம்பில் தெம்பு இருக்கும். என்னத்த சாப்பிடுறியோ இப்படி மெலிஞ்சு இருக்க” என்று சொல்லிக் கொண்டே ஊட்டினான்.
அவளுக்கு அவனது அளவற்ற அன்பில் மூச்சுத் திணறியது. இப்படிப்பட்ட அன்பை அவள் வாழ்நாளில் அனுபவித்ததே இல்லை. தாயன்புக்கு நிகரில்லை எனினும் அதை இப்படி வாய்வழி கேட்டு அறிந்ததில்லையே.
வீட்டில் இந்த நேரங்களில் அப்படி ஒன்றும் அவளுக்கு ராஜமரியாதை கிடைப்பதில்லை. வழக்கம் போல் தான் தூங்குவாள், வயிறு வந்தால் சாய்ந்து கொண்டிருப்பாள், கொஞ்சமாக சாப்பிடுவாள். அவளது வேலைகளை அவள் தான் செய்து கொள்வாள்.
ஆனால் இங்கு சத்யாவின் முன் குழந்தையாக மாறி விட்ட உணர்வு. தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் அவனது அன்பின் அவளுள்ளம் அவன்பால் சாய்ந்தது.
அவளுக்கு ஊட்டி முடித்தவன் தானும் சாப்பிட ஆரம்பிக்க “குடுங்க. நான் ஊட்டுறேன்” என்று தட்டை வாங்க முயன்றாள்.
“வேண்டாம் நானே சாப்பிடுறேன். எனக்கான எந்த வேலையையும் இனிமே உனக்கு தர மாட்டேன்” என்று சாப்பிட்டான்.
“ஏன்? நீங்க மட்டும் எனக்காக பண்றீங்க?” என்று அவள் கேட்க, “அதெல்லாம் நான் பண்ணுவேன். ஆனா நீ பண்ணக் கூடாது. என்னை நீ ஒதுக்கி தானே வச்சிருக்க. அதனால உனக்கு இனிமே இந்த வேலை எல்லாம் கிடையாது. நானே சாப்பிடுவேன்” என்று விட அவளுக்கு முகம் சுருங்கிற்று.
“ஏன் இப்படி பண்ணுறீங்க? நல்லா தானே இருந்தீங்க. இப்போ என்னாச்சு?” என்று அவள் வினவ, “இன்னிக்கு நீ பண்ண வேலைக்கு கோபம் எக்கச்சக்கமா இருக்கு. ஆனா நீ பெயின்ல இருக்கியேன்னு அதைக் காட்டிக்காம இருக்கேன். நான் இதையெல்லாம் பண்ணிக்கிறேன். ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்காம உன் பாட்டில் இரு. இல்லனா இப்படித் தான் ஏதாவது பேசுவேன். அப்புறம் கண்ண கசக்கக் கூடாது” என்று அவனே கையால் சாப்பிட்டான்.
அவள் தானே எப்பொழுதும் ஊட்டுவாள்? இப்பொழுது அவனாக சாப்பிடுவது அவளுக்கு ஏதோ போல் இருந்தது. அவனுக்கு ஊட்டிவிட அவள் கைகள் பரபரத்தன. அவனைப் பாவமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் அறைக்கு சென்றதும் இவளும் சற்று நேரத்தில் செல்ல, அவன் குளித்து விட்டு வந்து அமர்ந்தான். சாய்ந்து கொண்டிருந்தவள் அவனைக் கண்டதும் எழுந்து அமர, “என்ன?” எனக் கேட்டான்.
“தலை துடைச்சி விடனும்” என்று சொல்லவே, “ஒன்னும் வேணாம்னு சொன்னேன் இல்ல?” என்றவன் டவலை எடுக்க அவளால் அதை ஏற்க முடியவில்லை. அவனுக்காக செய்யும் விடயங்களை இப்படி விட்டுக் கொடுக்க மனம் மறுத்தது. தானே அதனைச் செய்ய வேண்டும் என்று நினைத்தாள்.
“ப்ளீஸ்ங்க! என்னைப் பண்ண விடுங்க” என்று அவள் கெஞ்ச, “இல்ல ஜானு. நானும் பழகிக்கனும்ல? காதல் இல்லனு நீ சொல்லிட்ட. அத்தனை வலியில கூட நான் அப்படி நினைக்கக் கூடாதுன்னு சொல்லுற. அப்படினா நீ எந்தளவுக்கு காதல் வரக் கூடாதுன்னு கவனமா இருக்கேனு புரியுது. அதனால நான் இனிமே எதுவும் கேட்க மாட்டேன். உனக்கு எதுவும் வேலை தர மாட்டேன்” என்று விட்டான்.
அவள் முகம் வாடிய மலராகக் கூம்பியதை உணர்ந்தும் அவன் அப்படியே தான் இருந்தான். கட்டிலில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள் அவள்.
அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியில் சென்றவன் திரும்பி வரும் போது, வயிற்றைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஜனனி.
“ஜானூஊஊ” அவன் படபடப்புடன் அவளை அழைக்க, “ஜீவா” என்றவாறு அவனைத் தாவி அணைத்துக் கொண்டாள் மனைவி.
அவளது திடீர் அணைப்பில் உறைந்து நின்றவனோ, “என்னன்னு கூப்பிட்ட?” ஆச்சரியமாகப் பார்த்தான்.
“ஒன்னும் இல்லையே” என்றவளோ, “நான் வேணானு சொன்னா போயிடுவீங்களா? நான் தள்ளி நின்னா விலகி போயிடுவீங்களா? என் பக்கத்தில் வர மாட்டீங்களா? நான் காதல் வேண்டாம்னா நீங்க காதலைத் தர மாட்டீங்களா?” என்று கேட்டாள், சற்றே ஆக்ரோஷமாக.
“ஜானு! உனக்குத் தான் காதல் பிடிக்காதுன்னு சொல்லிட்டியே” என்று சொன்னான் அவன்.
“சொன்னேன். காதல் பிடிக்காதுன்னு சொன்னேன். ஆனால் உங்களை ரொம்பவே பிடிக்கும். நீங்க எனக்காக பண்ணுற ஒவ்வொரு விஷயமும் பிடிக்கும். நீங்க என் மேல காட்டுற அக்கறை பிடிக்கும். என்னைக் குழந்தையா பார்த்துக்கிற விதம் பிடிக்கும்.
எனக்காக எல்லாம் பண்ணுறதுக்காக உரிமை வேண்டி போராடுற குணம் பிடிக்கும். என்னை நல்லா பார்த்துக்க எனக்கே திட்டுற உங்க பேச்சு பிடிக்கும். என்னை உசுரோட ஊடுறுவித் தாக்குற அந்தப் பார்வை பிடிக்கும். பண்ணுற எல்லாத்தையும் எனக்காகனு நெனச்சுக்கிற உங்க மனசைப் பிடிக்கும்.
எல்லாமே பிடிக்கும். இது அத்தனையையும் நீங்க காதல் என்ற ஒரு உணர்வால பண்ணுறப்போ எனக்கு அது எப்படி பிடிக்காம போகும்? உங்களைப் பிடிக்கும். இப்போ காதலைப் பிடிக்குது. அதனால உங்களை காதலிக்கவும் ரொம்ப பிடிச்சிருக்கு. வாங்க காதலிக்கலாம்” அவன் மார்பில் சாய்ந்து கொண்டு கூறினாள் மலர்க் கொடியாள்.
அந்த வார்த்தைகளைக் கேட்டு, “ஹேய் ஜானு மா” என அவள் முகத்தை நிமிர்த்திப் பார்த்தான்.
அவன் குரலில் அத்தனை பரவசம். அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும், ஆனந்த அலைகளை அள்ளி வீசின.
“ஆமாங்க. நான் உங்களைக் காதலிக்கிறேன். இன்னிக்கு என் மனசு உங்களைத் தேடும் போது புரிஞ்சுக்கிட்டேன் எனக்கு எந்த நிலையிலும் நீங்க வேணும்னு. உங்களப் பார்த்த நிமிஷம் தோணுன நிம்மதி சொல்லுச்சு, எனக்கு நீங்க மட்டுமே போதும்னு. என் தேடல் நீங்கன்னா, என் காத்திருப்பு நீங்கன்னா, என் ஏக்கம் நீங்கன்னா, அதுக்கு எல்லாமே காரணமான என் காதலும் நீங்க தான். ஐ லவ் யூ ஜீவா” அவனது மார்பில் முத்தமொன்று வைத்தாள்.
“ஜானு! நீ லவ் யூ சொல்லிட்டல்ல. அச்சோ எனக்கு எதுவுமே புரியல” அவளைத் தூக்கி சுற்ற ஆரம்பித்தான் சத்ய ஜீவா.
“என்னங்க. இறக்கி விடுங்க” என்றவளுக்கோ அவனது சந்தோஷத்தைப் பார்த்து மனம் நிறைந்தது.
“விடுறதா? நீ பர்மிஷன் தந்தாச்சு. இனிமே உன்னை விடுறதாவே இல்ல. இப்படியே எனக்குள்ள பொத்திப் பாதுகாத்து பக்கத்துலயே வெச்சுக்கப் போறேன்” அவளது நெற்றியில் ஆழமாக இதழ் பதித்தான்.
நெற்றி முத்தத்திற்கு ஒரு அழகிய உணர்வு உண்டல்லவா? அன்பின் உச்சத்தை அடையாளம் காட்டும் முத்தம் அது. அத்தகைய முத்தத்தை ஒரு ஆணிடம், எதுவும் தன் உயிரில் கலந்த கண்ணாளனிடம் பெற்ற போது சிலிர்த்து அடங்கியது அவள் தேகம்.
“சத்தியமா ஒன்னும் விளங்க மாட்டேங்குது. ரெண்டு நாள் பசியில் இருந்தவனுக்கு முன்னால மொத்த ஹோட்டல் சாப்பாட்டையும் பரப்பி வெச்சா எப்படி இருக்கும்? எதை சாப்பிடுறதுனு புரியாம திண்டாடிப் போவானே. அப்படி இருக்கு எனக்கு.
உன் கிட்ட காதலை எதிர்பார்த்தேன் தான். ஆனால் இப்போ இந்த நிமிஷம் அது கிடைக்கும்னு நெனச்சி கூட பார்க்கல. சோ ஹேப்பி. லவ் யூ சோ மச் மை ஏஞ்சல்” அவளின் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டான்.
அவளுக்கும் கூட அதே நிலை தான். அவனது முத்தங்களை வாங்கி நின்றவளும், அவனுக்குத் திருப்பிப் பரிசளித்தாள். அவனை மேலும் நெருங்கினாள். அவளையும் அன்பால் கொண்டாடித் தீர்க்க ஒருவன் என்பதே அவளது மனதில் கொள்ளை இன்பத்தைக் கொத்துக் கொத்தாகப் பூக்க வைத்தது.
“இப்போ வயிறு வலி ஓகேவா ஜானு?” என்று கேட்க, “இருக்கு. நீங்க கொஞ்சம் உட்காருங்களேன்” என்று அவள் சொல்லவும், அவன் அவ்வாறே செய்தான்.
அவனது மடியில் தலை வைத்துக் கொண்டாள் ஜனனி. அவனது மடியில் சாய்ந்து கொள்ளத் தானே காலை முதல் அவளது மனம் தவியாய்த் தவித்தது. அவன் கையைப் பிடித்துக் கன்னத்தில் வைத்துக் கொள்ள, “என் செல்லம்” அவள் நெற்றியில் முத்தமிட்டு தலையைக் கோதிக் கொடுத்தான்.
“உங்களுக்கு நான் தலையைத் தடவி விட்டா பிடிக்கும்ல? வர்றீங்களா?” என அவள் எழும்பப் போக, அவளைப் பிடித்து சாய வைத்தவனோ, “உன் மடி எங்கேயும் போகாதுல்ல. உன் கூடவே எப்போவும் இருக்கும். நான் அப்பறமா ஆற அமர இருந்து சாஞ்சுக்கிறேன். இன்னிக்கு நீ இரு” என்றிட, அவனது அன்பில் உருகிப் போனாள்.
“அப்பறம் உனக்கு வெட்கம் வரலனு வேற சொன்ன. காதலுக்கே உரிய நாணம் வந்துச்சா?” கிண்டலாகக் கேட்டான் சத்யா.
“அதெல்லாம் வந்துச்சு. நேற்று நைட் நீங்க தூங்கினப்போ நான் உங்களைப் பக்கத்தில் வந்து பார்த்தேன். அப்போ எனக்கு வெட்கமா வந்தது. நீங்க தூக்கத்தில் இருந்தாலும் என்னைப் பார்க்குற மாதிரி தோணுச்சு. உங்க நெற்றியில் ஒரு முத்தமும் கொடுத்தேன்” மெல்லிய வெட்கம் அவள் வதனத்தில் கோலம் போட்டது.
“அப்படினா மேடமுக்கு எப்போவோ லவ் ஸ்டார்ட் ஆயிடுச்சு. ஆனா மூடி மறைச்சுட்டு இருந்து இருக்கீங்க. அப்படித் தானே?” என்று கேட்க, “இன்னிக்கு தான் ஃபீல் பண்ணேன்” என்றாள் மென் குரலில்.
“ஹய்யோ! என் குட்டி பட்டாசு” அவளின் கன்னங்கள் இரண்டையும் பிடித்து ஆட்டினான்.
“வெட்கம் வருதுங்க” அவளது குரலில் நாணம் இழையோட, “வரனுமே. உன் அகராதியில் வெட்கம் தானே காதலுக்கு அறிகுறி?” என்று அவன் சொல்ல, இதழ் பிரித்துச் சிரித்தாள் மனையாள்.
“நாம பாட்டு பாடுவோமா?” என்று அவன் கேட்க, “பாடலாமே” என்றவளுக்கும் பாட வேண்டும் போல் இருந்தது.
சற்று யோசித்தவனின் கண்கள் அவளின் மை தீட்டிய விழிகளைத் தீண்ட சட்டெனப் பிறந்தது பாடல்.
“உன் கருவிழியில் விழுந்தேன்…
மறுமுறை பிறந்தேன்…
உன்னால் எனையே மறக்கிறேன்…”
அவனைப் பார்த்தவள் மற்றைய வரிகளைப் பாடத் துவங்கினாள்.
“எனது கனவில் தினம் தினம்…
உனை நான் ரசித்தேன்…
விழித்திட அன்பே மறுக்கிறேன்…”
சத்யா “உன் அருகினில் வாழ்வது சுகம் சுகம்…
என் இருதயம் உருகுதே அனுதினம்…”
“இந்த பெண்ணின் வெட்கம் அனைத்தையும்…
நீ திருடிக் கொண்டாயோ…” என்று பாடும் போது அவளுள் நாணம் திரையிட்டது.
“உலகின் அல்லி பூக்களின் அரசியோ…
உன்னை தாங்கும் நிலம் நானோ”
“தினமும் என்னை ஆளும் அரசனோ…
உன் மகுடம் நான் தானோ…” என்று பாடியவளை ஆரத் தழுவிக் கொண்டான் ஆடவன்.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி