102. ஜீவனின் ஜனனம் நீ…!!

4.4
(7)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம்‌ 102

 

மாரிமுத்துவின் கண்கள் நிறைவான மகிழ்வுடன் இருந்த தன் குடும்பத்தைப் பார்த்தன. ஒரு புறம் நந்திதாவும் எழிலும் ஜோடியாக அமர்ந்திருந்தனர். மற்றைய பக்கம் சத்யா, ஜனனி மற்றும் குழந்தைகள்.

 

சத்யாவின் குடும்பத்தினர் மற்றும் எழிலின் தாயுடன் கதையளந்து கொண்டிருந்த ஜெயந்தியிற்கும் உள்ளத்தில் உவகை பூத்தது.

 

நந்து மற்றும் மகியுடன் உரையாடிக் கொண்டிருந்தாள் ஜனனி. மகியின் கண்கள் அடிக்கடி ரூபனைச் சுற்றி வந்தன. அவள் பார்க்காத நேரம் அவளைப் பார்ப்பதும் மற்றைய நேரம் தேவனுடன் கதைப்பதுமாக இருந்தான் ரூபன்.

 

“டேய் டேய் போதும் டா. அந்தப் பிள்ளை பார்க்குறப்போ பாரேன். பாவமா இருக்கு” என்று தேவன் கூற, “இருக்கட்டுமே. நான் பாவம் இல்லையா? எனக்கு எவ்ளோ பண்ணுனா அவ. இருக்கட்டும் கொஞ்சம்” சிலுப்பிக் கொண்டாலும், கடைக்கண்ணால் அவளை நோக்கத் தவறவில்லை.

 

“எல்லாரும் சாப்பிட வாங்க” என்று ஜெயந்தி அழைக்க, “அத்தை நீங்களும் உட்காருங்க” அவரின் கையைப் பிடித்து அமர வைத்தான் சத்யா.

 

“என்ன மாப்பிள்ளை?” என்றவருக்கோ அவனது செயலில் சங்கடமாக, “உட்கார் ஜெயா. சத்யா நம்மளுக்கு பையன் மாதிரி தானே” மனைவியிடம் மென்மையாக சொன்னார் மாரிமுத்து.

 

“ஏன்கா நம்ம அப்பாவா இது? வாய்ஸ் மாறிடுச்சா? இப்ளோ சாஃப்ட்டா இருக்கு” ஜனனியின் காதில் கிசுகிசுத்தாள் மகி.

 

“ஏய் சும்மா இரு டி” ஜனனி அவளை அதட்ட, “இவளுக்கு அப்பாவை எதுவும் சொல்லலனா பொழுது போகாதே” என முறைத்தாள் நந்து.

 

“ரொம்பத் தான் பொங்கிட்டு வரீங்க ரெண்டு பேரும்” சிலுப்பிக் கொண்டாள் தங்கை.

 

“இன்னிக்கு நீங்க குடும்பமா உட்காரனும். நாங்க பரிமாறுறோம்” என்ற சத்யா, ஜனனியையும் மாரிமுத்து அருகில் அமர வைத்தான்.

 

நந்திதாவையும் எழிலுடன் அமர வைக்க, “நானும் அப்பறமா சாப்பிடுறேன்” என்று எழில் கூற, “இன்னிக்கு நீங்க தான் புது மாப்பிள்ளை. சோ உட்காருங்க” அவனை இருக்க வைத்தான் ரூபன்.

 

அனைவரும் அமர்ந்திருக்க, மேகலையின் புதல்வர்கள் பரிமாறினர். 

 

“நீங்களும் சாப்பிடுங்க மாப்பிள்ளை” என்று மாரிமுத்து சொல்ல, “டாடிக்கு ஜானு ஊட்டி விடுவா” என்றான் அகி.

 

“அகிக்கு மைக் கொடுத்தா ஊருக்கே சொல்லிடுவான் போல” எனும் தேவனின் பேச்சில், அங்கே மெல்லிய சிரிப்பலை.

 

“அப்படியே நீங்களும் சாப்பிடுங்க” என்று விட்டார் மாரிமுத்து.

 

அவர்களும் அவர் சொற்படி அமர்ந்து கொள்ள, ஜனனி சத்யாவுக்கு ஊட்டினாள். மேகலை மகன்களுக்கு ஊட்டி விட, மகிழ்வுடனே சாப்பிட்டு முடித்தனர்.

 

அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, பேச்சு மகிஷாவின் கல்யாண விடயம் நோக்கித் திரும்பியது.

 

“மகி! இங்கே வா” என்று மகளை அழைத்தவர், “நாளை உன்னைப் பொண்ணு பார்க்க வரதா இருக்காங்க. நீ என்ன சொல்லுறேன்னும் கேட்டுட்டா வர சொல்லிடலாம்” என்றார் மாரிமுத்து.

 

அவளுக்கோ இதயம் தடதடத்தது. கண்கள் ரூபனை நோக்கின. அவனோ அவளைப் பார்க்கவேயில்லை. அலைபேசியில் கவனம் பதித்திருந்தான்.

 

“சொல்லு மகி! பொண்ணு பார்க்க அவங்களை வர சொல்ல நீ சம்மதிக்கிறியா?” என்று கேட்டார்.

 

முன்பு இந்த நிதானம், பொறுமை எல்லாம் மாரிமுத்துவிடம் இருந்ததே இல்லை. எனினும், மூத்த மகளின் வாழ்வில் தான் விட்ட பிழையை இங்கு விடக் கூடாது என்பதில் இன்று அவற்றைக் கைத்கொண்டு உறுதியாக இருந்தார்.

 

“இதோ பார் மகி. உனக்கு ஓகேனா சொல்லு. இல்லனாலும் சொல்லு. காரணத்தையும் சொல்லு. இதுக்கு மேல உனக்கு யோசிக்க டைம் இல்ல. இந்த ஒத்தை வார்த்தையில் உன் வாழ்க்கை அடங்கி இருக்கு” என்று அழுத்தமாகச் சொன்னாள் ஜனனி.

 

“ஏன்ப்பா இப்படி கேட்கிறீங்க?” என்று மகி கேட்க, “கேட்கனும். இல்லனா பெரிய தப்பாயிடும். இந்த விஷயத்தில் இன்னொரு தடவை தோற்றுப் போக நான் விரும்பல. உனக்கு இதில் சம்மதமா இல்லையா?” என்று நேரடியாகக் கேட்டார்.

 

நந்துவுக்கு சுருக்கென்றது. எனினும் அவர் சொல்லிலும் நியாயம் உள்ளதே. தன்னிடம் விருப்பம் கேட்கவில்லை அவர். கேட்டாலும் அவள் தந்தை மீதுள்ள பயத்தில் சொல்லி இருக்க மாட்டாள் தான்.

 

ரூபன் தலை தாழ்த்தித் தான் இருந்தான். அவளை நோக்கவே இல்லை. என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிய காதுகளைக் கூர் தீட்டிக் கொண்டான்.

 

“சொல்லு மகி. அப்பாவோட ஆதங்கத்தைப் புரிஞ்சுக்க. உன் மனசுல காதல் எதுவும் இருந்தா வாய் திறந்து சொல்லிடு” என்று ஜெயந்தி சொல்லவும், அவள் தலை குனிந்து தான் இருந்தாள்.

 

உள்ளமோ எரிமலைப் பிளம்பாகக் குமுறி வெடித்தது. இத்தனை பேர் முன்னிலையில் கேட்கிறார். தன் காதலைச் சொன்னால் என்னவாகும்? ஒரு வேளை அவர் கோபப்பட்டு விட்டால் என்று நினைக்கையில் அச்சம் துளிர் விட்டது.

 

“உன் கிட்ட என்ன சொன்னா ஜானு?” ஜனனியிடம் பார்வையைத் திருப்பினார் மாரிமுத்து.

 

“யாரையும் காதலிக்க மாட்டேன்னு எனக்கு வாக்கு கொடுத்தா. அதைக் காப்பாற்றுவேன்னு தான் சொன்னா. ஆனால் அவ கிட்டவே கேளுங்கப்பா” என்றவள் தங்கையைத் தான் பார்த்தாள்.

 

“நாங்க தான் கூட இருக்கோமே மகி. ஏதாச்சும் இருந்தா சொல்லு” என்று சத்யா தைரியமூட்ட, “அவ எதுவும் பேசல. உன் மௌனத்தை சம்மதமா ஏற்கலாமா மகி?” என்று அவர் கேட்ட கணம் விலுக்கென நிமிர்ந்தாள்.

 

தந்தையை நெருங்கியவள், “உங்க ஆசைப்படி இந்தக் கல்யாணம் நடக்கனும்னு நெனக்கிறேன்பா. உங்க பேச்சுக்கு மறுபேச்சு சொல்லக் கூடாதுன்னு இருந்தேன். இப்போ உங்க கேள்விக்கு நான் வாய் திறந்தே பதில் சொல்லுறேன். என் மனசுல ஒருத்தர் இருக்காருப்பா. நான் ரூபனைக் காதலிக்கிறேன்” விடயத்தைப் போட்டு உடைத்து விட்டாள் மகிஷா.

 

“என்ன காதலிக்கிறியா? ரூபன் தம்பியையா?” அதிர்ச்சியில் வாயைப் பிளந்தது ஜெயந்தி தான்.

 

“சோ! உனக்கு ரூபன் வேணுமா?” இந்தக் கேள்வியைத் தொடுத்தது ஜனனியே.

 

“அக்கா..” என்றவள் தந்தையை நோக்க, “உன் ஆசையை நிறைவேற்றாத அளவுக்கு என் மனசு கடினம் இல்ல மகி. இப்போவாவது சொன்னியே. அதுவே பெரிய விஷயம்” என்றார் மாரிமுத்து.

 

“நேற்று காலையில் ரூபன் என் கிட்ட விஷயத்தைச் சொன்னார். எனக்கு அவ்ளோ பெரிய அதிர்ச்சியா இருக்கல. இங்கே வந்ததும் அப்பா கிட்ட சொன்னேன்” என்று நிறுத்தினாள் ஜனனி.

 

“ரூபன் எனக்கு தெரிஞ்ச பையன். அவனைக் குறை சொல்ல எதுவும் இல்ல. நல்ல குணம், ஜானு வாழுற குடும்பம்.. இதை விட நல்ல சம்பந்தம் எங்களுக்கு அமையாது” என்றவரோ, “இதில் உங்களுக்கு சம்மதமாம்மா?” மேகலையிடம் கேட்டார்.

 

அவரோ மகனைக் கடுமையாக முறைத்துக் கொண்டிருந்தார், சத்யாவும் கூடவே.

 

“லவ்வர் லவ்வர்னு சொன்னது மகியைத் தானா? அதை எங்க கிட்ட சொல்ல என்னடா தயக்கம்? மறைச்சு வெச்சுட்டல்ல?” என்று மேகலை முகத்தைத் திருப்ப, “என் செல்ல அம்மால்ல. சாரிம்மா. நான் சொன்னா நீங்க மனசு தாங்காம மகி கிட்டயே போய் பேசிடுவீங்க. அவ இருந்த மனநிலையில் நீங்க இதைப் பேசினா உங்க ரெண்டு பேருக்குமே சங்கடம் தான். அதான்மா சொல்லல” என்றும் அவரால் அதை ஏற்க முடியவில்லை.

 

“சாரி டார்லிங்! என் கூட லவ் தானே? இந்த ஒரு வாட்டி மன்னிக்க மாட்டீங்களா?” காதைப் பிடித்துக் கெஞ்ச, “சரி டா சரி. ரொம்ப கெஞ்சாத” அவன் கன்னத்தில் தட்டினார் மேகலை.

 

மகிஷாவுக்கோ நடந்தது அத்தனையும் கனவு போல் இருந்தது. இவ்வளவு இலகுவாக அவளது விடயம் வீட்டினரால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று நினைக்கவில்லை.

 

“அக்கா! தாங்க் யூ” ஜனனியை அணைத்துக் கொண்டாள் மகிஷா.

 

“நந்துவுக்கும் சேர்த்து தாங்க் யூ சொல்லு. இன்னிக்கு அப்பா உன் கிட்ட சம்மதம் கேட்க இவளும் ஒரு காரணம்” என்று ஜனனி சொல்ல, நந்துவையும் கட்டிக் கொண்டாள்.

 

“நான் அப்பாவுக்கு கஷ்டத்தைக் கொடுத்துட்டேன். அதனால ரொம்ப கஷ்டத்தையும் அனுபவிச்சேன். ஆனா நீங்க பெஸ்ட்! அவரை சந்தோஷப்படுத்துறீங்க. எப்போவும் சந்தோஷமா இருக்கனும்” என்று நெகிழ்ந்தாள் நந்திதா.

 

“எங்க சந்தோஷம் உன்னிலும் இருக்கு. நீ வேற நாங்க வேற இல்ல நந்து. எல்லாரும் ஒன்னு தான்” என்ற ஜனனி இரு சகோதரிகளையும் தழுவிக் கொண்டாள்.

 

“ஆர் யூ ஹேப்பி?” என்று தேவன் கேட்க, “எஸ் டா” என்று சொன்னான் ரூபன்.

 

“ரெண்டு பேரு லவ் ரூட்டும் க்ளியர் ஆயிடுச்சு. இனி கூடிய சீக்கிரமே டும் டும் தான். வாங்க டா” என்ற சத்யாவைக் கட்டிக் கொண்டனர் இரட்டைச் சகோதரர்கள்.

 

“எல்லாரும் இங்கே பாருங்க” என்று அகி சொல்ல, அனைவரது பார்வையும் சிறுவர்கள் மீது திரும்பின.

 

“என்ன பண்ணப் போறீங்க?” என்று மகி கேட்க, “ஹக் பண்ணிக்கப் போறோம்” என்றான் யுகி.

 

“ஏன் திடீர்னு?” ஜனனி புருவம் சுருக்கிக் கேட்டாள்.

 

“நீங்க எல்லாரும் ஹக் பண்ணிக்கிறீங்க. அதனால நானும் அகியும் ஹக் பண்ணப் போறோம். எல்லாரும் பார்க்கனும்” என்றவாறு யுகி கையை விரிக்க, அவனைக் கட்டிக் கொண்டான் அகிலன்.

 

“காட்டிக் காட்டி ஹக் பண்ணுறீங்களா? நல்லா வருவீங்கடா” இருவரையும் ஒருசேர அணைத்தான் ரூபன்.

 

மகியின் விழிகள் அவனையன்றி வேறெங்கும் நகரவில்லை. அவன் தனக்கெனக் கிடைத்து விட்டான் அல்லவா? மனதில் ஆனந்தம் நிரம்பி வழிந்தது.

 

“மகி உன்னைப் பார்க்கிறா” என்று தேவன் சொல்ல, “உனக்கு என்ன பிரச்சினை? அவ கண்ணு. எங்க வேணா பார்க்கட்டும்” என்று முறைத்தான் ரூபன்.

 

“எனக்குத் தேவை தான். நீயே என்னமோ பண்ணிக்க” அவன் முதுகில் ஒன்று போட்டான் தேவன்.

 

ஜனனியிடம் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டனர் சிறுவர்கள். அவளும் மகி திருமண விடயம் பற்றி சலிக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருக்க, “நீங்களும் எங்க வீட்டுக்கு வந்துடுவீங்களா மகி சித்தி?” ஆவலுடன் கேட்டான் அகி.

 

“ஆமா பாப்பா. கொஞ்ச நாள்ல வருவேன்” அவனைப் பார்த்துப் பதில் சொன்னவளைத் தான் காதலுற நோக்கினான் ரூபன்.

 

“அய்ய் ஜாலி சித்தி” யுகன் அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு துள்ளிக் குதித்தான்.

 

“இன்னும் அஞ்சு மாசத்தில் தேவன் கல்யாணத்தை நடத்த நெனச்சிருக்கோம். அப்போவே இதையும் சேர்த்து வெச்சுக்கலாமா? அவங்க ஒன்னாப் பிறந்தவங்க. கல்யாணமும் ஒன்னா நடக்கனும்கிறது அவங்க அப்பா ஆசை” என்று மேகலை கூற,

 

“அதுக்கென்ன அப்படியே பண்ணிடலாம்” சம்மதம் வழங்கினார் மாரிமுத்து.

 

“அப்பா! தாங்க் யூப்பா” தந்தையை அணைத்துக் கொண்டாள் மகிஷா.

 

“நல்லா இரு மகி. எல்லாம் ஜானுவால தான். அவ ரூபனோட விஷயத்தை நேரத்தோட பேசினதால தான் இப்போவே நான் ஓகே சொன்னேன். இல்லனா கொஞ்சம் நாள் எடுத்திருக்கும்” என்று சொல்லவே, ஜனனியை மற்றைய கையால் அணைத்தாள் மகி.

 

ஓரமாக நின்ற நந்துவைப் பார்த்த மாரிமுத்து, “நீ ஏன் அங்கே நிற்கிற? இப்படி வா” அருகில் வந்தவளைத் தன் கை வளைவுக்குள் நிறுத்திக் கொள்ள,

 

“அத்தையும் போய் நந்து பக்கத்தில் நில்லுங்க” ஜெயந்தியையும் நிற்க வைத்து அழகாகப் புகைப்படம் எடுத்தான் எழிலழகன்.

 

தொடரும்…..!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!